• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அனுபவத் துளிகள்

Status
Not open for further replies.
42. வற்றல் குழம்பு விருந்து!
(அளவியல் இன்னிசை வெண்பா)

சுடச்சுடச் சாதம் சுவாசிக்கும் தட்டு
கடுகுமணத் தக்காளி சுண்டைக்காய்க் காரம்சேர்
வற்றல் குழம்பு வழிந்தே சரிந்திடக்
குற்றும் விரல்கள் சுடும். ... 1

இருப்புக் கரண்டியில் எண்ணைசூ டாக்கி
வரிசையாய் உட்கார்ந்த வாண்டுகள் தட்டில்
படபட வென்றொலிக்கப் பாட்டி விசிறத்
துடையில் தெறிக்கும் துளி. ... 2

முதலில்யார் உண்டு முடிப்பதெனும் போட்டி!
மெதுவே தொடங்கி வெகுவாய்ப் பிசைந்தே
பருப்புத் தொகையல் பறங்கிக்காய் கூட்டு
விரைந்துண் டெழுந்தேன்நான் வென்று. ... 3

இருவர் முடித்து எனைப்பின் தொடர
ஒருவனே இன்னமும் உட்கார்ந் திருக்கப்பின்
கட்டில் கரம்கழுவிக் கைமழை தூறினேன்
கட்டைக் கடைசிநீ தான்! ... 4

--ரமணி, 12/11/2015

*****
 
Dear Mr. Ramani, Pranams. Each & every one of your " Anubava thuligal", are nice & superb. 42. Vatral Kulambu Virunthu.....

really took me back to my olden days of my childhood life in my village, with all my cousins, bros & sisrs sitting with me in a

circle, in a open Thalvaram, near our kitchen, right below the sky, with full moon shining ( Neela Sappadu ) & Being served with

love & affection by any one of our elderly ladies.....so nice. Thanks a lot.

cheenuvs.

just
 
56. இங்கிதம் இயற்கையில் வருக!
(பன்னிரு சீர் விருத்தம்: கூவிளம் விளம் விளம் மா
. கூவிளம் மா மா மா
. கூவிளம் விளம் விளம் மா)


இத்தனை நீலமாய் நீளமாய் நெடுக
. எல்லையில் லாமல் பரந்த வானை
. எப்படி மறைத்தது கார்முகிற் காட்டம்!
இத்தனை நாட்களாய் நாணியே பரிதி
. எப்படிக் மூட்டப் போர்வை யுள்ளே
. எத்தனம் குறையுறக் கழித்ததோ பொழுதை!
இத்தனை நாட்களும் கலையென வளர்ந்த
. இந்துவும் தனது முகத்தை மறைத்தே
. எப்படிக் கார்முகிற் கோட்டையிற் சிறையோ?
இத்தனை நாட்களும் இல்லமே சிறையாய்
. எண்ணுதல் எதுவும் இயலா மடிமை
. என்னுளம் ஏறவே தூங்கிய விழிப்பே!

இன்றைய நாள்முதல் வானிலை மாற்றம்
. எத்தனை வண்ணம் என்ன அழகு!
. எத்தனை பறவைகள் எத்தனை ஒலிகள்!
இன்றைய கதிரவன் எழுச்சியில் செம்மை
. இன்முக ஒளியில் கிரணம் வெம்மை
. என்னுளே உணர்வினில் சிந்தையில் விரவும்!
இன்றைய தேய்மதி நேற்றைய இரவில்
. எத்தனை அழகாய் விண்மீன் பலவும்
. எங்கணும் மினுக்கவே ஒளிர்ந்தது நிறைவாய்!
இன்றுபோல் இனிவரும் தினங்களில் இயற்கை
. இங்கிதம் எளிதாய் மிதமாய் விளங்கும்
. இந்திரம் இறைவனை வேண்டிடு வேனே!

[இந்திரம் = மேன்மையானது]

--ரமணி, 28/11/2015

*****
 
43. விரல் நுனியில் நட்சத்திரம்!
(அளவியல் இன்னிசை வெண்பா)

மாடித் தரைபடுத்தே வான்பார்த்தேன் தந்தையுடன்
நாடும் விரல்நுனியில் நட்சத் திரம்வர
ஓடும் வினாக்களை உற்சாக மாய்க்கேட்டே
தேடும் விடையறிந் தேன். ... 1

எவ்வளவு தூரம்நாம் இந்தவான் போகலாம்
இவ்வளவு தானென்று எட்டாதோ நம்தலை?
வானமோர் போர்வையென வஸ்துகளை மூடவில்லை
வானம் அகண்ட வெளி. ... 2

விண்வெளி திக்கில்லா வெற்றுப் பெருவெளி
அண்டங்கள் தொங்கும் அகண்டமிது - உண்டுநம்
சூரியக்கு டும்பம்போல் சுற்றும் பலகுடும்பம்
வேரென ஈர்ப்பு விசை. ... 3

இந்தவுல கங்கள் இடைதூரம் கோடிமைல்
சந்திரன் ரெண்டரை லட்சம்-அதன் - முந்தானை
பற்றிய விண்மீன் பலகோடி மைலாகும்
கற்றறிய நான்தருவேன் நூல். ... 4

தந்தைநூல் தந்தநனி தாக்கத்தில் தேடியதில்
வந்ததே பற்பல வான்கதை ஆர்வியின்
காலக்கப் பல்வெல்ஸின் காலயந்தி ரம்மற்றும்
கோலமாய்ப்ப றக்கும்பாச் சா! ... 5

[ஆர்வியின் ’காலக்கபல்’ மற்றும் ’பறக்கும் பாச்சா’ போன்ற குழந்தைகளுக்கான
விஞ்ஞானக் கதைகள் அறுபதுகளில் ’கண்ணன்’ போன்ற தமிழ்ப் பத்திரிகைகளில்
வெளிவந்தன.]

விண்வெளி விஞ்ஞானி யாகும் கனவுகள்
மண்வெளிக் கட்டில் மடிந்தன - விஞ்ஞானக்
காதை மரபுக் கவிதை கதைபண்ணும்
பாதையில்நான் என்று பவிசு. ... 6

--ரமணி, 13/11/2015

*****
 
44. தைலதாரை!
(அளவியல் இன்னிசை வெண்பா)

குழாய்வரும் நீரைக் குறைத்தால் கலத்தில்
குமிழிகள் இன்றிக் குறித்தவோர் புள்ளியில்
எண்ணெய்ப் பெருக்காய் இழிவதைக் காணுவாய்
எண்ணம் அறுந்த இருப்பு. ... 1

இவ்வாறே உள்ளத்தில் எண்தொடர் வெட்டியே
செவ்வனே சொற்குறைத்துத் தேயென்றார் ஆசான்
நடந்த முரணிலின்று நானோர்சொற் செல்வன்
உடந்தையாய் நிற்கும் உலகு!... 2

--ரமணி, 14/11/2015

*****
 
47. உத்தியோக பருவம்: தினவாழ்வு
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஒருரூ பாய்க்கு முழுச்சாப் பாடு
திருச்சி மற்றும் சேலம் நகரில்
வரமென் றெழுபதில் வாய்த்த விருந்தை
வரித்தே கொள்ள வயிறெனை வாழ்த்துமே! ... 1

அறுபதுபை சாவில் அறுசுவைச்சிற் றுண்டி
இறுதியில் காப்பியும் இத்துடன் சேரும்!
மாசமிரு நூறாய் வாய்த்தசம் பளத்தினில்
ஆசைகள் யாவும் அடங்கும் நூறிலே. ... 2

அலுவல் முடிந்த அஞ்சுமணிக் கெல்லாம்
பலவிளை யாட்டில் பகிர்வோம் பொழுதை
கேரம் பலகையில் கேவும் காய்கள்
ஓரம் ஓடியே ஒருகுழி விழுமே. ... 3

சதுரங் கந்தனில் சாதுவென் றாகி
மெதுவாய் விரோதம் விளைத்திடு வோமே
மேசை டென்னிஸ் மேவும் பந்தை
வீசியே வெட்ட விளையும் புள்ளியே! ... 4

மோதிரத் திகிரி மோகன மாய்ப்பல
சோதனை செய்வதில் சுருளாய் எழுந்தே
வலைமேல் செல்லப் பிடிவிரல் வலிக்க
நிலைகொள் ளாதே நிலத்தில் விழுமே. ... 5

[மோதிரத் திரிகை = tennikoit, ring tennis]

அறையில் வெளியில் ஆடுவிளை யாட்டில்
இறைசந் தோஷம் இழையும் நேசம்
நேற்றோ இன்றோ நேர்ந்தது போல
ஏற்றிப் பார்த்தே இன்புறும் மனமே! ... 6

--ரமணி, 19/11/2015

*****
 
48. உத்தியோக பருவம்: முதல் நண்பர்கள்
(அளவியல் நேரிசை வெண்பா)

முதல்வேலை யாண்டில் முகம்பல நட்பில்
மெதுவாக முன்வந்து மேவ - இதமான
நண்பர் பலராகி நாளும் அரட்டையாய்ப்
பண்ணியகச் சேரி பல. ... 1

எத்தனை நண்பர்கள் என்ன தனிப்போக்கே!
அத்தனையும் எண்ணவே ஆனந்தம் - பத்துமயிர்
மீசை முளைக்க விழிக்கோல் கருப்பாக்கும்
ஆசைகொள் தோழன் அழகு! ... 2

[தனிப்போக்கு = personal manner, idiosyncracy;
விழிக்கோல் = eyebrow pencil]

பச்சையாய் முட்டையைப் பற்றி நுனிசுண்டி
இச்சையாய் வாயில் இடுவானே - மெச்சும்
மகளிர் விழியில் வடிவும் உடலும்
வகையாய் வளர்த்திடு வான். ... 3

நீச்சல் நிபுணனாய் நின்றவோர் தோழனோ
கூச்சலாய்ப் பேசாத குள்ளனாம் - ஆச்சரிய
நீளநகம் வெள்ளையாய் நின்றவன் வாழ்குறிக்
கோளாம்: முடிவதெலாம் கொள். ... 4

இந்திய சேனை இருந்தவர் தம்வாயை
எந்திரமாய் மெல்லுவார் எப்போதும் - வந்தகுளிர்
ஆடவைத்த சூழல் அலுவலில் பாசறையில்
தாடைப் பயிற்சிக்காம் கோந்து. ... 5

[கோந்து = chewing gum]

இன்னும் பலதோழர் எண்ணும் மனத்திலே
மின்னுவர் காட்சிகள் மேல்வரும் - இன்றவர்
எல்லோரும் எங்குள்ளார் எப்படி என்றறியும்
எல்லை கடந்த இசைவு. ... 6

--ரமணி, 20/11/2015

*****
 
67. இந்நாள் மறைந்த என் தம்பியின் நினைவாக...
(அளவியல் நேரிசை வெண்பா)

இந்நிலை யில்நீர் இருப்பதே விந்தையென்று
முன்னின்ற வைத்திய மூத்தோர்கள் - சொன்னதெலாம்
தன்னுளம் கொள்ளாது சாதனையாய் நீநின்றாய்
உன்னுயிர் நீங்கும் வரை.

விரல்நுனி நீலம் விளையப் பிறந்தும்
அரியதோர் ஆற்றல் அறிவோ(டு) - உரம்கொண்டே
உன்னிதயம் உள்ளடக்கி வாழ்ந்ததை உள்ளுகையில்
என்னிதயம் விம்முதே இன்று!

[விரல்நுனி நீலம் = clubbed finger tips with blue tinge,
typical of congenital heart patients]

பள்ளி முதலாய்ப் பதினொன்றில் நின்றுசிராப்
பள்ளியில் கல்லூரிப் பாடத்தில் - அள்ளி
மதிப்பெண் குவித்தே மதிப்புடன் தேறி
இதழியலும் கற்றாய் இனிது.

[இதழியல் = journalism]

தொலைத்தொடர்பு சேவைத் துறையின் பணியில்
நிலைத்தே உயர்பதவி பெற்றாய் - தலையில்
வணிகமே லாண்மையின் பட்டமும் சூடித்
துணிந்தாய்நீ ஆசான் பணி.

[வணிக மேலாண்மைப் பட்டம் = MBA]

கலையாய்க் கதைகள் கவிதை எழுதப்
பலவிதழ்கள் உன்பேர் பரப்ப - மலைத்தேன்
நிலையாத வாழ்விலே நின்ற(து) அலுத்தோ
சிலையானாய் உன்னாயுள் தீர்ந்து.

ஐம்பதே ஆயுளென் றாயினும் உன்வாழ்வில்
மொய்ம்புடன் வாழ்ந்துநீ முன்னின்றாய் - சம்புவின்
பக்தனாய் வாழ்வில் பரிமளித்தாய் நற்கதியில்
சக்தனாய் ஆக்குமவன் தாள்.

[மொய்ம்பு = வலிமை]

--ரமணி, 18/12/2015

*****
 
Last edited:
49. பேனாவும் கைவிளக்கும்
(அளவியல் இன்னிசை வெண்பா)

ஒருபொத்தான் தள்ள ஒளிசெந் நிறம்-இன்
னொருபொத்தான் தள்ள ஒளிபச்சை யாய்-மற்
றொருபொத்தான் தள்ள ஒளிமஞ்சள் என்றே
விரிந்ததே அப்பா விளக்கு!

இதுபோல் இருந்த இளுகுமைப் பேனா
அதுவுமென் சட்டை அணியென - இந்நாளில்
பேனாவில் மின்தகவல் பேழையாம் - கைவிளக்கில்
நானா விதமின் நலம்.

[இளகுமைப் பேனா = ballpoint pen
மின்தகவல் பேழை = pen drive
நானாவித நலம் = smaller batteries, chargeable, digital, solar]

--ரமணி, 20/11/2015

*****
 
50. எழுத்தாளரின் வெறுமை (writer's block)
(அளவியல் இன்னிசை வெண்பா)

மழைவெள்ளம் மாடி துரத்தவே - இன்னும்
இழையாத வாழ்தினம் இத்தளத்தில் - மின்னும்
மழைநீரில் ஆதவன் வண்ணம் - எதுவும்
நுழையாத உள்ளத்தில் நொப்பு.

[நொப்பு = வெள்ளப் பெருக்கில் வரும் செத்தை, அழுக்கு முதலியன]

உணவு உறங்கல் உழைப்பிலே - உள்ளம்
சுணங்கவே றேதும் சுமையாய் - வெறுமை
கவிந்திடச் செல்லுமே காலம் - இதனைத்
தவிர்த்திட ஏலாத் தவிப்பு.

[ஏலா = இயலா]

கருத்தேறும் ஆயின் கனியா - கனிந்தும்
உருவற்று மீண்டும் உருவாம் - எதையும்
பழுதென்று தள்ளாதே பாழ்மனமே - என்றும்
எழுத்தில் வெறுமை இயல்பு.

--ரமணி, 21/11/2015

*****
 
51. விழிமுன்னே ஓர் விபத்து!
(நிலைமண்டில ஆசிரியப்பா)

வெளியூர்ச் சுற்றில் விடுமுறைப் பயணம்
வளமாய் வயல்கள் மாலை நேரம்
இருப்புப் பாதை இணைசந் திப்பில்
வரிசையாய் நின்ற வாகன அணிபின்
நின்றோம் வலப்புறம் நிழல்கள் நீள
பொன்னிற வெய்யில் பூச்சொரிந் திடவே.

இரும்புக் கிராதி யின்கீழ் குனிந்தே
இருப்புப் பாதை இணைகடந் தேசிலர்
இருசக் கரத்தாம் இயந்திர வண்டியை
இருகரம் பற்றியே தள்ளிச் சென்றனர்
இவரைத் தவிர நடந்தே சிலரும்
தவறினர் முறைமை தனைமுன் நிறுத்தியே.

எங்களைக் கடந்திரு சக்கர வண்டி
இங்ஙனம் சென்றதை இயல்பெனக் கொண்டோம்
தொலைவில் நீளொலி துணையாய் இரும்பில்
அலைசக் கரங்கள் ஆர்த்தபே ரொலியில்
தெறித்து விழுந்தது தெரிந்தது தலையாய்
வெறித்து பார்க்கும் விழியிணை உறைந்தே!

--ரமணி, 22/11/2015

*****
 
52. ஆவினத்தின் அவதி!
(அளவியல் இன்னிசை வெண்பா)

அனுதினமும் மாலையில் ஆவினம் மூன்று
கனமாக வாசலில் காட்சிதர வல்லவி
காய்கனித்தோல் தந்தே கனிவோ டவைமூன்றும்
ஆய்ந்துண்ணல் காணும் அழகு. ... 1

[வல்லவி = மனைவி]

நானுமென் பங்கிற்கு நாலைந்து மாங்கொப்பு
கூனியே கம்பிவழிக் கொட்டுவேன் - காவிநுதல்
மெல்லத் தடவியவை மேனி சிலிர்ப்பதில்
சொல்லத் தெரியாச் சுகம். ... 2

போக்கிடம் இன்றிப் பொழிந்தநீர் வெள்ளத்தில்
சாக்கடை மூடிவழிச் சாய்ந்தவை சென்றே
பழைய கருவோலைப் பந்தல் பிரிப்பைத்
தழையெனக் கொள்ளும் தவிப்பு. ... 3

--ரமணி, 23/11/2015

*****
 
53. சின்ன வயதில் சேமிப்பு!
(அளவியல் இன்னிசை வெண்பா)

ஓட்டையாய்க் காலணா ஒவ்வோர் விரலிலும்
பாட்டுடன் தாளம் தகரடப் பாவிலே
மெட்டியாய்க் கால்விரல் போட்டேன் - தலையிலே
குட்டுவாங் கிக்கண் குளம். ... 1

நயாபைசாச் சட்டை அணிந்தே நடந்தோம்
தயாராய்க்கை பற்றியே தந்தையார் தந்ததைக்
கண்ணிலே ஒற்றிக் கரத்தால் வருடிமண்
உண்டியலில் சேர்த்தோம் உடன். ... 2

உண்டியல்வாய் முட்ட உடைத்தே தகப்பனார்
கண்படும் காசுகள் கட்டித் தொகுப்பார்
வகைக்கொரு பத்தாய் வளர்ந்துநிற்கும் தூணாய்த்
தகைத்திடுவார் காகிதத் தால். ... 3

தூண்களாய் நாணயம் தூங்குமோர் பெட்டியில்
நீண்டநாள் ஆக நெகிழ்த்தியே தந்தை
பலவகை யான பரிசுகள் ஆக்கக்
குலவும் மனத்திலே கூத்து. ... 4

--ரமணி, 24/11/2015

*****
 
54. வற்றாத உற்சாகம் சிற்றப்பா!
(அளவியல் நேரிசை/இன்னிசை வெண்பா)

ஒவ்வொரு நாளும் ஒருரூபாய் என்றவர்
செவ்விதின் சேர்த்தேயென் சிற்றப்பா - அவ்விதம்
பார்த்த பணத்தில் பலவூர்ப் பயணமாம்
சேர்ந்தே குடும்பத் துடன். ... 1

கோடையில் கானலோ கூனூரோ ஊட்டியோ
வாடையில் சென்னைபோல் வாரிக் கரையூர்
வருடம் ஒருமுறை வாகாய் அமைத்தார்
திருத்தல யாத்திரை யோடு. ... 2

உலகியல் ஆன்ம ஒழுக்கம் இரண்டின்
கலவையாய் வாழ்ந்தார் கனிவுடன் வாழ்ந்தார்
இனியவர் பார்க்கப் பழகவென வாழ்ந்தார்
இனியவர் நெஞ்சில் என. ... 3

--ரமணி, 25/11/2015

*****
 
55. சின்ன வயதுச் சேட்டைகள்!
(அளவியல் இன்னிசை வெண்பா)

ஆதாரப் பள்ளி அறிமுகம்; ஆசிரியர்
தோதாக ஜிப்பாவில் தொங்குகை விட்டே
புகையிலை பிய்த்தவர் பொக்கைவாய் இட்டால்
வகையாய்ப்பா டம்வாய் வரும். ... 1

மூக்குப் பொடியினை மூன்றாம் வகுப்பாசான்
தூக்கி உதறித் துளித்துளியாய் மூக்கில்
நுழைத்தே விரல்கள் நொடித்ததுகண் டேநான்
விழைந்ததில் கண்ணீர் விடை! ... 2

காகித அம்பு களிப்பில் ஒருவன்மேல்
ஏகமாய் எய்ததில் ஒன்று முதல்வர்
அறைசன்னல் உட்புக ஆடிப்போ னேனே
அறைவாங்கா இன்ப அதிர்வு! ... 3

ஐந்தாம் வகுப்பிலே ஆசிரியர் பாடமாய்ப்
பைந்தமிழ்ப் பாவெழுதிப் பக்கம்போய் நின்றவர்
போண்டாவைத் தின்ற பொழுதுகள் இப்போது
தீண்டும் மனத்தில்தித் திப்பு. ... 4

சின்ன வயதிலே செய்தபல சேட்டைகள்
தின்னும் மனத்தில் திகைப்புடன் தித்திப்பும்!
இன்றைய பிள்ளைகள் இத்தகு இன்பமின்றிக்
கன்றிலே ஆவர் கனி. ... 5

--ரமணி, 26/11/2015

*****
 
57. அகத்தில் குடிவந்த பள்ளி!
(பஃறொடை வெண்பா)

தாத்தாவோர் நாள்பார்த்துத் தக்கசகு னம்பாட்டி
பார்த்துத்தம் பேரனைப் பள்ளிக் கனுப்பப்
புதிய சிலேட்டைப் புதுப்பையில் வைத்தே
புதுப்பையைத் தோளிலே தோகை விரித்தே
முகத்திலே புன்னகை முன்னிற்கப் பள்ளி
அகத்தில் குடிவந்த(து) அன்று. ... 1

முதல்வரவர் சேர்க்கைப் பதிவு முடிக்க
மிதக்குமோர் காகிதநா வாய்போல் கதிரொளி
முற்றத்தில் ஊர்ந்திடச் சுற்றி வகுப்பிலே
உற்றவா சானிடம் ஒப்படைத் தார்தாத்தா
கண்ணாடி ஆசான் கனிவில் பலவகைப்
பண்புடன் நண்பர் பலர். ... 2

பாரதி வாழ்த்திய பாரதம் காலையில்
சாரதி யாயொரு காரிகை பாடச்
சிறுவர் சிறுமியர் சேர்ந்தொலித்த கூத்துடன்
ஏறிப் பறக்கும் மணிக்கொடி ஏற்றியே
திங்கட் கிழமையதைச் சிந்தை நிறைத்தோமே!
தங்கத் தமிழுடன் தாய்நாட்டை மாலையில்
மீண்டுமோர் கூடலில் மீசைக் கவிநினைத்த
ஆண்டுகள் நாட்கள் அசையும் மனத்திலே
வண்ண மலர்கள் மணம்வீசும் பற்பலவாய்
எண்ணநெகிழ்ப் பந்தாய் எழும். ... 3

[நெகிழ்ப் பந்து = பலூன்]

[பள்ளிக் கூடலில் பாடிய பாரதி பாடல்கள்:
காலை: பாரத சமுதாயம் வாழ்கவே
மாலை: வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர்
திங்கள் காலை: தாயின் மணிக்கொடி பாரீர்]

--ரமணி, 28/11/2015

*****
 
58. முகிற் கள்வன்!
(அளவியல் இன்னிசை வெண்பா)

முதுகில் முகிலெனும் மூட்டை சுமந்தே
மெதுவாய் நகர்ந்திடும் மேல்வளிக் கள்வனை
எய்த கணையால் இரவி வெருட்டவே
வெய்யிலிற் கொட்டும் விசும்பு.

[மேல்வளி = மேல் காற்று; இரவி = சூரியன்]

--ரமணி, 29/11/2015

*****
 
59. திரையில் வந்ததால் திரும்பினோம்!
(கலி வெண்பா)

வங்கியில் வேலை வெளிமா நிலத்திலே
அங்கே புதிய சகாக்கள் அறிமுகம்!
ஐதரா பாத்-அது ஆந்திர மாநிலச்
செய்திகள் மிக்க திருத்தலைப் பேரூராம்
நண்பர்கள் மூவருடன் நானாங் கிலப்படம்
கண்தேக்கிப் பார்க்கக் கடுஞ்சினம் கண்மறைக்க
நண்பனின் நானறியா நண்பன் திரையிலே
கண்ணில் நழுவுமோர் கண்ணாடிச் செய்தியிடப்
பாதிப் படத்தில் பதறிவெளி வந்ததிலே
ஏதென்னை விட்டீர்கள் என்றானே பார்க்கலாம்!
நண்பனை நானறியா நண்பனை விட்டின்னோர்
நண்பனுடன் மற்றைநாள் நான்படம் பார்த்தது
கண்களில் இன்றும் களிப்பு.

[பார்த்த ஆங்கிலப்படம்: Close Encounters of the Third Kind;
கண்ணில் நழுவுமோர் கண்ணாடிச் செய்தி = சினிமாத் திரையில்
காட்டும் ஸ்லைட் விளம்பரங்கள், செய்திகள்]

--ரமணி, 29/11/2015

*****
 
61. முதல் தேதி!
(அளவியல் இன்னிசை வெண்பா)

மாதமுதல் தேதி மணக்குமே சம்பளக்கை!
காதலுடன் தந்தை கரன்சி ஒருரூபாய்க்
கட்டினைக் காட்டக் களிப்பில் முகர்ந்தேநான்
கட்டினேன் கோட்டை களை. ... 1

கட்டியல் வாவுடன் காராச்சே வும்கையில்
வெட்டியே உண்டோம் விழிகள் விரிந்திட
சம்பளம் தந்த சலுகை முதல்தேதி
கம்பளத்தில் ரத்தினக் கல்! ... 2

தினமுமொரு ரூபாயில் தீரும் செலவு
மனக்கணக் கில்பூபால் வாங்கும் செலவும்
மளிகைக் கணக்குமுதல் வாரத்தில் தீர்த்தே
தளிகை நடந்த தரம். ... 3

கையிலே சில்லறையாய் மிஞ்சிடும் காசுகள்
செய்யும் சிறப்பு தெரிந்தெம தன்னை
கடுகு மிளகு கடுக்காய்டப் பாவுள்
அடியில்சே மித்தாள் அவள். ... 4

சனிக்கிழமை மாலையில் சாதுவாய் நாங்கள்
பனகல்பூங் காவில் பரவி அமர்ந்து
கொறித்திடுவோம் வேர்க்கடலை கொஞ்சுமொழி பேசி
அறிந்துமறி யாநாள் அவை. ... 5

வீட்டுவா சல்முன்னே வீசிய காற்றிலே
கேட்டறிந்தோம் பேசினோம் கிள்ளையாய்க் காதைபல
பள்ளி அறியாப் பருவத்தின் பாடமின்றும்
பள்ளமும் மேடும் சொலும். ... 6

படுக்கை உதறித் தலையணை தட்டி
வெடிபோலச் சத்தம் விளைவித்தே தந்தை
கனிவுடன் எங்களைக் கண்மூடச் செய்யக்
கனவுலகில் எங்கள் கதி. ... 7

--ரமணி, 09/12/2015

*****
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top