• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

என் கவிதை முயற்சிகள்

Status
Not open for further replies.
வணக்கம் நண்பர் ராஜு.

என் கவிதையில் நான் படிக்குறிகள் பயன்படுத்துவதைக் குறைகூறவில்லை. கவிதையில் எழுப்பப்படும் கேள்வியே, ’இன்றைய உலகம் வாழ்க்கையில் படிக்குறி வழிப்படும் போது, ஹிந்து மதம் வழிபடப் பயன்படுத்தும் படிமங்களை, அவற்றை வழிபடும் ஹிந்துக்களை மட்டும் த்வேஷிப்பது மூர்க்கத்தனம், ஹிபாக்ரஸி ஆகாதா?’ என்பதுதான்.

நான் எதையும் எதிர்பார்த்து இந்தக் கேள்வியை எழுப்பவில்லை. ஏனெனில் படிக்குறிகள் இருக்கும்வரை இறைப்படிமங்களும் இருக்கும் என்பது என் நம்பிக்கை. தவர, இதுபோன்ற கேள்விகளை இன்றைய ஹிந்துக்கள் தமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும் என்ற என் அவாவினைக் கவிதையில் ஒரு செய்தியாகச் சொல்ல முயற்சி செய்துள்ளேன்.

*****
 
Last edited:
பார்த்ததும் புரிந்திடும் யாவரும் அறிந்திடும்
புகழ்மிகு படிக்குறி எதுவெனக் கேட்டால்
கழிப்பறைச் சுவர்களில் பளிச்செனத் தென்படும்
ஆண்-பெண் படிக்குறி தானெனச் சொல்வேன்!

நீங்கள் முதலில் பதிந்திருந்த “ஆண்-பெண் குறி தானெனச்சொல்வேன்” என்பதைப்படித்தபோது என் மனம் தங்களைப்பாராட்டியது. எப்படி சிவலிங்கம் என்பது சிவனின் குறியீடோ, எப்படி நபும்ஸ லிங்கம் என்பது neuter gender இன் ஒரு குறியீடோ, அது போல அந்தப்படங்களும் ஆணின் குறியீடு/பெண்ணின் குறியீடு. எனவே ஆண் குறி/பெண் குறி. அவ்வளவே. சிவலிங்கத்தை phallous symbol என்று கூறிடும் Victorian mores கூட்டத்தின் நடுவே விவரமறிந்து நீங்கள் செய்திருந்த அந்த பதிவு எனக்கு மகிழ்வு தந்தது. ஆனால் எதோ காரணத்தால் அதை திருத்தம் செய்து மாற்றி விட்டீர்கள். அப்படியே முதலிலிருந்தவாறே விட்டிருந்திருக்கலாம்.

Cheers.
 
வணக்கம் நண்பர் ராஜு.

ஹஹ்ஹா! நான் கழிப்பறை (வெளிப்புறச்) சுவர்களில் உள்ள படிக்குறிகள் பற்றி எழுதும்போது எப்படி ’ஆண்-பெண் குறிகள் தானெனச் சொல்வேன்!’ என்று எழுதமுடியும்? மற்றபடி எனக்கு அந்த Victorian mores கூட்டத்துடன் கருத்தில் உடன்பாடு இல்லை. தவிர சொவதில் முடிந்தவரை ambiguity-யைக் குறைக்க விரும்புபவன் நான், இதனால் சொற்கள் அதிகமானாலும்கூட.

*****
 
17. ஆ வெல்லாம் உம் ஆனால்...
ரமணி, 04/09/2012

அறம்வழிப் பட்டால் நிறமது வெளுக்குமா?
பொருளினைத் கொடுத்தால் அருளது கிடைக்குமா?
இன்பம் குறைத்தால் துன்பம் விலகுமா?
வீடுதனை விரும்பினால் காடுகள் மறையுமா?

பற்றினை விட்டால் இற்றுப் போகுமா?
பட்டுப் போனால் விட்டுப் போகுமா?
பக்தி செய்தால் சக்தி வளருமா?
பலன்களை விட்டால் மலங்கள் அகலுமா?

மோனம் காத்தால் ஞானம் கூடுமா?
இரண்டினை நீக்கினால் திரண்டு வருமா?
இறையென நினைத்தால் திரையது விலகுமா?
நற்கதி கிட்டிட சற்குரு சொல்வீர்!

ஆவெனக் கேட்டால் கேள்விகள் தங்கும்.
ஆலென நினைத்தால் ஐயங்கள் வளரும்.
ஆவினை நீக்கி உம்மினைச் சேர்த்தால்
கேள்விகள் மறைந்து நம்பிக்கை பிறக்கும்.

நம்பிக்கை எல்லாம் செயல்வழிப் பட்டிட
ஆலென்பது நீங்கி அதுவென்பது பொருந்திட
உம்மெனும் எதிர்காலம் அதுவென நிகழ
ஞானம் கூடி விடுதலை கிடைக்கும்.

சற்குரு சொற்களில் சிஷ்யன் மகிழ்ந்து
ஆவும் ஆலும் குறையச் செய்து
அதுவினை மனதில் செயலில் வளர்த்து
ஞானம் கூடும் வழிவகை அறிந்தான்.

*****
 
18. மரபின் வலிமை
ரமணி, 05/09/2012

தமிழைக் காதலித்தால் எழுவது மரபுக் கவிதை.
தன்னைக் காதலித்தால் எழுவது புதுமைக் கவிதை.

தமிழைக் காதலிக்க வந்து சேரும் யாப்பு.
தன்னைக் காதலிக்க வந்து சேரும் மூப்பு.

மலரைக் காதலித்தால் மனதில் சேரும் அழகு.
தன்னைக் காதலித்தால் மனதில் சேரும் அழுக்கு.

விரைவு உணவில் வயிறாரும், வலிமை மாளும்.
விகிதம் சரியாக உண்டால் வாழ்வு நீளும்.

வலிப்பு நடனக் கவர்ச்சி உடலுக்கு நன்றல்ல.
மரபு நாட்டிய அழகு நேற்றல்ல இன்றல்ல.

கூழைக் கவிதை கூனிக் குறுகி இளைக்கும்.
வாழைக் கவிதை அடியடியாய் வளர்ந்து தழைக்கும்.

ஆதலினால் கவிதை செய்வீர் மரபின் யாப்பில்!
சாதலில்லை மூப்புமில்லை அந்த மரணக் காப்பில்!

*****
 
19. திறமும் திரமும்
ரமணி, 06/09/2012

தன்திறம் என்பது தந்திரம் இல்லை.
என்திறம் என்பது எந்திரம் இல்லை.
மன்திறம் என்பது மந்திரம் இல்லை. ... [மன்=அரசன், காவலன், கணவன்]
கேள்திறம் என்பது கேந்திரம் இல்லை. ... [கேள்=உறவு, நட்பு, கணவன், நண்பன்]
சுயம்திறம் எல்லாம் சுதந்திரம் இல்லை.
முகத்திறத் திற்கு முகாந்திரம் இல்லை.
இன்திறம் இருந்தால் இந்திரம் வருமா? ... [இந்திரம்=இந்திர பதவி]

ஆள்திறம் என்பது ஆத்திரம் இல்லை.
சூழ்திறம் என்பது சூத்திரம் இல்லை. ... [சூழ்=ஆலோசனை, ஆராய்ச்சி; சூத்திரம்=ரகசியம்]
பாத்திறம் என்பது பாத்திரம் இல்லை.
சித்-திறம் என்பது சித்திரம் இல்லை.
உருத்திறம் என்பது உருத்திரம் இல்லை.
தொழும்திறம் எல்லாம் தோத்திரம் ஆகா.
நாத்திறம் என்பது நாத்திரம் இல்லை. ... [நாத்திரம்=அதிசயம், புகழ்]

நம்திறம் நோக்கி நயம்பட வாழ்ந்திட
நன்மை உண்டிறைத் தன்மை நிறைந்திட.

*****
 
Last edited:
நண்பர் சாய்தேவுக்கு,

தமிழின், கவிதையின் நன்மையும், கவிதை எழுதும் உங்களுடைய ஆர்வமும் திறமையும் இன்னும் வளர வேண்டும் என்ற ஆசையும் மட்டுமே நான் கீழே எழுதியிருப்பதற்கு காரணங்கள். வலைத்தளத்தில் கிட்டிய முகமறியாத நட்பு என்பதால் இந்த முன்னுரை. இனி என் கருத்து இதோ:


திறம், திரம் என்ற இரு வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு அவற்றை மையமாக வைத்து ஒரு கவிதை புனைய வேண்டும் என்பதே குறிக்கோளாகக் கொண்டு எழுதப்பட்ட கவிதை. கவிஞரின் உள்ளத்திலுள்ளது சரியாக வெளிப்படவில்லை. செருப்புக்குத்தக்கவாறு உறுப்பினை வெட்டுதல் நடந்துள்ளதோ என்ற ஐயம் கூட வருகிறது சில இடங்களில். “எந்திறம் என்பது எந்திரம் இல்லை, கேள்திறமென்பது கேந்திரம் இல்லை, முகத்திறத்துக்கு முகாந்திரமில்லை,” என்பன விளங்கிக்கொள்ள முடியாத கருத்துத்துணுக்குக்களாக நிற்கின்றன.

சூத்திரமாகக் கூறிவிட்டு உடனே விளக்கமும் கொடுத்துவிடும் உத்தியைக்கையாண்டிருந்தால் கவிதை இன்னும் நன்றாக, தெளிவாக, இயல்பாக அமைந்திருக்கும். உதாரணமாக:

சுயம்திறம் எல்லாம் சுதந்திரம் இல்லை
சுதந்திரம் கிட்டிட சுயம்திறம் வேண்டும்.
.......................................................................................

சித்-திறம் என்பது சித்திரம் இல்லை
சித்திநம் கைவர குருவருள் வேண்டும். Etc. etc.,

நன்றி. வாழ்த்துக்கள்.
 
Manadhinai adakki mounam Koodida DHYANM kattrukollungal iyya.
 
வணக்கம் திரு. ராமநாதன்.

"மனதினை அடக்கி மௌனம் கூடிட என்று கற்பேன்?"
"மனதினை அடக்கி மௌனம் கூடிட தியானம் கற்றுக் கொள்ளுங்கள் ஐயா."

தியானம் என்பது அறிவில் உதித்துநான் செயலில் முயன்றபோது
சித்தக் கட்டும் சுகாசனமும் சரிவக் கைகூடாமல் போகவே
புத்தகப் புழுவான நமக்கது ஒத்து வராதென ஒதுங்கினேன்.
என்கதை கவிதைத் தொகுப்பு முயற்சிகள் சலிக்கத் தொடங்கினால்
என்சொற்ப நித்ய கர்மாவோடு தியானம் மீண்டும் முயல்வேன்.
உங்கள் பரிந்துரை மனதில் வைக்கிறேன், மிகவும் நன்றி.
 
நண்பர் ராஜுவுக்கு,

நீங்கள் அஞ்சல் 32-இல் சொன்னதில் உண்மை உள்ளது. ’திறம்/திரம்’ என்று முடியும் வார்த்தைகளை வேறு ஒரு தேவைக்காக எடுத்து நான் சிந்தித்தபோது உதித்த வரிகள்தான் அந்தக் கவிதை. நீங்கள் சொல்லும் சூத்திரம்-விளக்கம் உத்தி எனக்குப் பிடித்திருக்கிறது. செருப்புக்காகக் காலை (’உறுப்பை’ என்று சொல்லுவதுகூட ஒரு செயற்கையான நுழைப்புதான்) வெட்டியதுபோல் தோன்றும் சில வரிகள் பற்றி நான் சொல்ல வந்தது என்ன என்று விளக்குகிறேன்.

என்திறம் என்பது எந்திரம் இல்லை.

எந்திரப் புலவனே தன்திறம் காட்டுவன்
என்றாகி விட்ட இன்றைய நிலையில்
என்திறம் என்பது எந்திரம் இல்லை.
ஏனெனில் எந்திரம் தாண்டிய கலைகள்
தங்கும் மனது எனக்கு உளது.

கேள்திறம் என்பது கேந்திரம் இல்லை

கேந்திரம் என்பது வட்ட மையம்
அதுவும் தன்னைக் குறித்த மையம்.
கேளென்பது சுற்றம், நட்பு, கணவன்.
இவர்களின் திறமை தன்மையம் ஆனால்
இவர்கள் எனக்குக் கேளிர் இல்லை.

முகத்திறத் திற்கு முகாந்திரம் இல்லை.

முகஸ்துதி செய்ய மயங்காதவர் உண்டோ?
முகஸ்துதி காரணம் முகத்திறம் அல்லவோ?
முகமெனச் சொன்னால் நாவும் அடங்காதோ?
முகஸ்துதி பெற்றிடும் முகத்தின் திறமே
முகத்திற இலக்கணம் என்பது சரியோ?
எனவேதான் இதற்கு முகாந்திரம் இல்லை.

சுயம்திறம் எல்லாம் சுதந்திரம் இல்லை.

சுதந்திரம் என்பது மற்றவர்க்கும் உண்டு.
நீயும் நானும் நடக்கும் போது
என்குடை உன்மூக்கில் படாத வரைதான்
என்சுதந் திரத்தின் வரையென ஆகும்.
சுயத்தில் ஆளும் திறமை யெல்லாம்
அடுத்தவர் உரிமை பறித்திடும் போது
சுயம்திறம் எப்படி சுதந்திறம் ஆகும்?

சித்-திறம் என்பது சித்திரம் இல்லை.

உங்கள் விளக்கம் நன்றாக உள்ளது. இங்கு சித்திரம் என்பது எழுத்தில் படித்து மனதில் வரைவதைக் குறிக்கும்.

மொத்தத்தில் நீங்கள் சொன்னதுபோல் கவிஞனின் உள்ளத்தில் உள்ளதை சரிவர விளக்கவில்லை இந்தக் கவிதை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இதுபோன்ற நியாயமான ’சுப்புடு வேலை’களை நாவ் வரவேற்கிறேன், உங்களிடமிருந்தும் மற்ற வாசகர்களிடம் இருந்தும்.

*****
 
இதுபோன்ற நியாயமான ’சுப்புடு வேலை’களை நாவ் வரவேற்கிறேன்,

சுப்புடு இந்தவரியை வாசித்தவுடனேயே சுறு சுறு வென்று இதைப்பற்றி ஒரு பாரா எழுதலாமே எனத்தொடங்கினார். அரைமணி நேரம் மின்சாரம் போய்விட்டு வந்தது. அதற்குள் மனதை மாற்றிக்கொண்டு விட்டார். விட்டதை என்று எழுதுவாரோ தெரியவில்லை.
 
Dear Saiddevo sir,

Meditation helps you to improve your energy. Dhyanam for atleast 15 to 20 mts. per day keeps you charged for the entire day.
 
pamaranukkum vilangum vagail arumayana varthaigalil kavidhai puayum ungalai paaratti maghizgiren. ungal kavigal menmelum valarattum kalameappulavare.
 
20. கழுதையும் ஞானமும்!
ரமணி, 18/09/2012

சிறந்த ஞானம் என்பது என்ன?
அறிந்த ஞானியிடம் கேட்டான் மனிதன்.

இன்பத்தில் களித்தலும் துன்பத்தில் நோதலும்
இல்லாத நிலையே ஞானம் என்றார்.

அந்தச் சொற்கள் மனிதனுக்குப் புரியவில்லை.
அங்கு மேய்ந்தவோர் கழுதையைக் காட்டினார்.

காலையும் மாலையும் கவனியிக் கழுதையை
புரியும் அப்போது என்றார் ஞானி.

கழுதையோடு ஒருநாள் கழித்த மனிதன்
மீண்டும் வந்தான் ஒன்றும் புரியாமல்.

காலையில் அழுக்கு கனத்த மூட்டைகள்
சுமந்த கழுதை வருத்தம் கொண்டதா?
மாலையில் வெளுத்து இலேசான மூட்டைகள்
சுமந்த கழுதை மகிழ்வு கொண்டதா?
இதுதான் ஞானமென முடித்தார் ஞானி!

*****
 
நண்பரே, தங்களுடைய கவிதை நன்றாக இருக்கிறது. அதைப்படித்தபோது என்மனதில் தோன்றியதை பதிகிறேன். இது கவிதை அல்ல. கவிதை முயற்சிகூட அல்ல.


கேட்டிருந்த கழுதை சிரித்துக்கொண்டது
அழுக்கைச்சுமக்கவும் வருத்தமுண்டு
வெளுப்பைச்சுமக்கவும் வருத்தமுண்டு
அளவோடு இருந்தால் வருத்தம் இல்லை
அளவுக்கு மிஞ்சினால் பிடிப்பேன் முரண்டு.
மனிதா! மனிதா! இன்பமும் துன்பமும்
அளவுடன் துய்ப்பது இயற்கையின் நியதி
வெயிலின் கொடுமை நிழலில் தெரியும்
நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
வெயிலும் வேண்டும் நிழலும் வேண்டும்
இரட்டைகளின்றி வாழ்க்கையே இல்லை.

காலையும் மாலையும், அழுக்கும் வெளுப்பும்,
களித்தலும் நோதலும், இன்பமும் துன்பமும்,
வருத்தமும் மகிழ்வும் எல்லாம் இரட்டைகள், இரட்டைகளே.
 
Last edited:
நண்பரே, உங்கள் மொழிக்கு இப்படி மறுமொழியலாம்.

கழுதையும் ஞானியும் பேசிக்கொண்டது:

வாழ்வின் உலகின் இரட்டை பேசிய
கழுதை மீண்டும் வந்தது மேய.

காலை வாரி விட்டாயே கழுதையே!
வேலைப் பளுவில் உளறி விட்டாயே!
ஆழ்மனம் உனக்கேது மனிதன் போல
வாழ்வே இரட்டை என்பதை அறிய?

உன்வலி உடல்வலி என்றுநீ உணர்ந்தும்
உடனே நீயதை மறப்பது தெரிந்தும்
மனிதன் போலப் பேசியது ஏனோ?

நீங்கள் அவனிடம் சொன்னது கேட்டு
உனக்கோ வலிதான் இல்லையே என்று
மேலும் பொதிகள் ஏற்றினான் சுவாமி!
எனவே தான்நான் அப்படிச் சொன்னேன்.

இரட்டை கடந்த நிலையே ஞானம்
என்பது அவனுக்குப் புரிவது கடினம்
எனக்கது புரிந்தது உங்கள் அருளால்.

நன்று கழுதாய் ஒன்றில் உறுதிகொள்!
நானும் நீயும் என்றும் ஒன்றே!
நமக்கு என்றும் இறையருள் உண்டே!

மனிதனே வாழ்வில் இரட்டை காண்பான்
மனம்மொழி மெய்யெனப் பிரித்துப் பார்த்து!

இரட்டையில் உழன்று அளவுகள் கற்று
அளவும் அலுத்துப் போக ஒருநாள்
ஆவான் மனிதன் கழுதையாய் ஞானியாய்!

*****
 
கழுதையும் கழுதையும் பேசிக்கொண்டது:

ஆழ்மனம் உனக்கேது கழுதாய் என்றும்
உளறிவிட்டனயே கழுதையே என்றும்
மனுவின் மைந்தன் மனிதன் கேட்டான்.
“நும்முன் பிறந்தது நுவ்வையாகும்” என்ற
அன்னை வழி வந்த மனிதன் கேட்டான்.

ஆணும் பெண்ணும்,விழிப்பும் உறக்கமும்
பசியும் நிறைவும், பகலும் இரவும்
நாமறியாத இரட்டைகளாம்
நமக்கவை புதிராம் பேரிருளாம்.

பாம்பின் கால் பாம்பறியும் என்றால்
கழுதையின் மனம் கழுதையே அறியும்.
நம் வலி உடல் வலிமட்டுமேயாம்
நாமதை மறப்பதை அவர் அறிவராம்.

நன்று, நன்று நாமதை மன்னிப்போம்.

இரட்டை கடந்த நிலை என்பதென்ன
வாழ்ந்தால் வலி இறந்தால் தீரும்
இறந்தபின் என்ன யாரும் அறிந்திலர்.
பிணியும் நோவும் மறக்கவேமுடியும்
பிணியையும் நோவையும் மறுக்கவா முடியும்?
இரட்டை கடந்த நிலை என்பதொன்று
குதிரையின் கழுதையின் கொம்பேயன்றோ

இரட்டையுடன்(மனம், மெய்) பிறந்து
இரட்டையால்(தாய் தந்தை) வளர்ந்து
இரட்டையுடன்(இன்பம் துன்பம்) வாழ்ந்து,
இரட்டையை ச்சேமித்து(பாவம் புண்ணியம்),
இரட்டையைத்தேடாமல்(பகவத் சரணாரவிந்தங்கள்)
இரட்டைக்கப்பால் தேடும் இவர்கள்
அலுத்துப்போனால் அன்றே வருவர்
இரட்டையைத்தேடி இறைவனிடம்.

மனிதனும் மதமும் இரட்டையும் அரட்டையும்
மனிதனுக்கு வெறும் களியாட்டம் வம்பு
நமக்கிருக்குது நாள் தீர வேலை
மனிதனின் அழுக்கும் நாற்றமும் சுமந்து
நடையாய் நடந்து நல்லது செய்ய.

குறிப்பு: "நும் முன் பிறந்தது நுவ்வையாகும்" என்ற வரிகள் சங்கத்தமிழ்ப்பாடல் வரிகள். தலைவி தலைவனிடம் புன்னை மரத்தை தன் தாய் தான் பிறக்குமுன்னரே வித்திட்டு வளர்த்தனள் என்பதால் அது தன் தமக்கை என்று கூறி அதனடியில் தலைவனைக்காண நாணியதாக வரும் கருத்தை உள் அடக்கியது.
 
கழுதைகள் மூலம் நண்பர் ராஜு
கவிதைகள் எழுத முனந்தது மகிழ்ச்சி.

ஆறறி மனிதர் புரியும் வாதங்கள்
ஐந்தறி கழுதை மூலம் செய்வானேன்?
நேருக்கு நேரே புரிவோம் வாதம்
யாருக்கும் வெற்றி தோல்வி யின்றி.

இரட்டை கடந்த ஞானம் முயல்வோர்
இறைவன் பாதம் தேடுவது இல்லை
என்பது தவறு ஏனெனில் ஞானிகள்
என்றும் அறிவர் இறையருள் பற்றி.

இரட்டை கடந்த நிலையென்ப தென்ன?
இறந்தபின் வருவ(து) (அ)தல்லவந் நிலையே.
மனிதர் யாவரும் ஒற்றை நிலையை
எளிதில் சிந்தித்து அறிய முடியும்.

ஒற்றை என்பது சித்திரத் தின்சுவர்.
இடைவெளி யின்றி இரட்டை இல்லை.
இடைவெளி என்பதே ஒற்றை நிலையாம்.
ஒற்றை அதுவே எளிதில் புரியும்.

உள்மூச்சு வெளிமூச்சு இடைவெளி ஒற்றை.
ஓரெண்ணம் மறுவெண்ணம் இடைவெளி ஒற்றை.
கால அளவுகளின் இடைவெளி ஒற்றை.
கருத்தொரு மித்தால் இடைவெளி காணலாம்.

ஒன்றின் சிந்தனை எளிதில் ஆகும்.
ஒன்றின் அறிவும் எளிதில் வந்திடும்.
ஒன்றைப் பயில்வது என்பதே கடினம்.
ஒன்றைப் பயில இறையருள் வேண்டும்.

அன்னை தந்தை இரட்டை என்றால்
இருவரும் மனிதன் என்பது ஒற்றை.
மனிதன் கழுதை இரட்டை என்றால்
இருவரும் உயிரே என்பது ஒற்றை.

களிப்பும் நோவும் இரட்டை என்றால்
களமது நிகழ்வது மனமெனும் ஒற்றை.
மனமும் உடலும் இரட்டை என்றால்
மனமே உடலாம் பருப்பொருள் ஒற்றை.

உடலும் மனமும் மனிதனில் அடக்கம்.
மனிதன் என்பவன் மனதில் அடக்கம்.
மனமெனும் வஸ்து உயிரில் அடக்கம்.
உயிர்கள் எல்லாம் இறையில் அடக்கம்.

இரவும் பகலும் காலத்தில் அடக்கம்.
காலம் என்பதோ மாயையின் தோற்றம்.
மாயை என்பது இறையில் அடக்கம்.
மூவகை மார்கமும் சொல்வது இதுவே.

பருப்பொருள் உலகம் ஒளியின் இயக்கம்.
ஒளியின் தோற்றமே உலகம் எல்லாம்.
ஒளியெனும் ஒன்றே இருநிலைத் தோற்றம்.
பருப்பொருள் நுண்பொருள் ஒளியின் வகையே.

தண்ணீர் உறைந்து பனிக்கட்டி ஆகி
தண்ணீர் பனியென இருநிலை ஆகும்.
ஒளியே உறைந்து பருப்பொருள் ஆகி
ஒளியின் போக்கைத் தடுப்பது இரட்டை.

ஒளியின் போக்கைத் தடுக்கும் பருவொளி
நிழலெனும் மாயை தந்தது காணீர்!
ஒளியை வெள்ளை நிழலெனச் சொல்வோம்.
நிழலைக் கறுப்பு ஒளியெனச் சொல்வோம்.

இறையை ஐயுறும் அறிவியல் கூட
இரட்டை கடந்த ஒற்றையே தேடுவது.
பொருட்கள் சார்ந்த மென்பொருள் உத்தியில்
மேல்வகை ஒன்றின் வகைகளே யாவும்.

இரட்டை வாழ்க்கை பிறவிகள் நிறைந்தது.
பாவ புண்ணியம் என்னும் இரட்டையில்
புண்ணியம் சேர்க்கப் பிறவிகள் குறைந்து
இரட்டை கடந்திடும் காலம் வருமே.

என்றும் உள்ளது ஒன்றே ஒன்றே
நன்றே அறிந்திட நமக்கது புரியும்.
இறையருள் வேண்டும் ஒன்றைப் பயில.
இறையருள் கூடிட இறையினை இறைஞ்சுவோம்.

*** *** ***
 
Last edited:
மூலம் நண்பர் ராஜு
கவிதைகள் எழுத முனந்தது மகிழ்ச்சி.கழுதைகள்

நண்பரே நான் எழுதியது கவிதை அல்ல. கவிதை முயற்சி கூட அல்ல. நான் கவிஞனும் அல்ல. எனவே என் எண்ண ஓட்டத்துக்குத் தடையாக அசை, சீர், தளை, அடி என்பனவற்றையெல்லாம் கையிலெடுத்துக்கொண்டு திண்டாட வேண்டாம் என்று எதோ எழுதிக்கொண்டு இருக்கிறேன். கவிதை முயற்சி செய்ய விருப்பம் இல்லை.நான் எழுதுவதில் நீங்கள்கவிதையைக்காண்கிறீர்கள் என்றால் அது உங்களுடைய பெருந்தன்மையைக்காட்டுகிறது. அவ்வளவே. ஆனால், கவிதை மீது வெறுப்புமில்லை கவிதை நான் அறியாத விஷயமுமில்லை. உண்மையில் ஆண்டாள், ஆழ்வார்கள், வள்ளலார் போன்ற வரகவிகளின் கவிதைகளைப்படித்து நான் மிகவும் வியந்து போகிறேன்.

ஆறறி மனிதர் புரியும் வாதங்கள்
ஐந்தறி கழுதை மூலம் செய்வானேன்?
நேருக்கு நேரே புரிவோம் வாதம்
யாருக்கும் வெற்றி தோல்வி யின்றி.

ஐந்தறிவு, ஆரறிவு, ஓரறிவு என்பதெல்லாம் மனிதன் தனது சௌகர்யத்துக்கும் தனக்குத்தோன்றியபடிக்கும் வகுத்துக்கொண்ட பாகுபாடுகள் என்று கருதுபவன் நான். மலயாள தேசத்தில் ஒன்று பழமொழியாய் சொல்வதுண்டு. அதன் பொருள் தென்னை தனது தேங்காயை யார் தலையிலும் உதிர்த்து அவர்கள் மரித்ததில்லை என்பது. அடர்ந்த காட்டில் சூரிய வெளிச்சத்துக்குப் போட்டி போடும் தாவரங்களிடையே கூட ஒரு எழுதா உடன்படிக்கைப்படி எந்த தாவரமும் எந்த பிற தாவரத்துக்கும் தீங்கு விளைவிப்பதில்லை என்பது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுத்தீர்ந்த ஒரு விஷயம். எனவே தவரங்களின்,மிருகங்களின், கழுதையின் உலகம் பற்றி நமக்கு தெரிந்தது மிகக்குறைவே என்பது தான் மிஞ்சும் உண்மை.

................................................முயல்வோர்
இறைவன் பாதம் தேடுவது இல்லை
என்பது தவறு ஏனெனில் ஞானிகள்
என்றும் அறிவர் இறையருள் பற்றி.

தாங்கள் எடுத்துக்கொண்ட இந்த ஞானம் என்பதில் “நான்” என்பது கடைசிவரை மிஞ்சித்தான் நிற்கிறது. துக்கமும், சுகமும் மற்றும் எல்லா இரட்டைகளும் வெல்லப்பட்டாலும் கடைசியில் ‘வென்றது’ நின்று விடுகிறது. பரமனின் ஒரு பாகமென்று உணரப்படும்போதுகூட அது எங்கும் போவதில்லை. அந்த மொத்தத்தின் ஒரு பாகமாக நிற்கிறது. While the contents have evaporated, the substrate stays in tact. ஞானிகள் தமக்குக் கிட்டிய ஞானத்துடன் “வெட்டவெளி”யில் (to borrow a term from the sidhdhas) நின்றாலும், நிற்பதென்னவோ ‘நான்’ தான். அதன் பின் இனி என்ன என்ற கேள்வி நிலைத்து நின்று எதிரொலித்தவாறே இருக்கிறது. ஏதோ இருக்கின்ற பல பாதைகளில் ஒன்றைத்தேர்ந்தெடுத்து நெடுந்தூரம் வந்தபின் முட்டி நிற்பதுபோல (dead end) வெட்டவெளியும் சமாதியும் எல்லாமும் பொருளற்றதாகப் போய்விடுகின்றன. கற்றதெல்லாம் காதற்ற ஊசியாயும் பெற்ற ஞானமெல்லாம் பெரும்பாரமாகவும் ஆனதுபோல ஒரு சலிப்பு வந்து ஒட்டிக்கொள்கிறது. வாழ்க்கையை முழுதும் வாழ்ந்து (எல்லா இரட்டைகளையும் அனுபவித்து—மறுத்தோ, வெறுத்தோ மறந்தோ அல்ல) ஆத்துமாவை ரட்சிக்கும் பொறுப்பை கல்யாணகுணார்ணவமான இறைவனிடம் முழுதுமாக ஒப்புவித்துவிட்டு வாழ்ந்து தீர்ப்பது தான் நியாயமும் புத்திசாலித்தனமும் என்ற கருத்துடையவன் நான். என் வழி ஞான வழியல்ல. சரணடைந்து கடைத்தேறும் வழி—பரிபூஊஊஊஊ..........ஊஊஊஊஊரணமான நம்பிக்கையுடன். தங்களுடைய பதிவில் மீதியுள்ளதெல்லாம் ஒற்றை இரட்டை என்ற வர்த்தைகளின் permutation ஆல் விளைந்த ஜாலம். விஷயத்தின் கனம் காரணமாக பதிவு நீண்டு விட்டது. வழக்கம் போல் சிலர் மிகக்கஷ்ட்டப்பட்டு ‘too long not read’ என்று பதிந்து தங்களது கருத்தை வெளியிடலாம். சொல்ல விரும்பியதைச் சொல்லியாயிற்று. உங்கள் கதைகளும் சரி கவிதைகளும் சரி நன்றாக இருக்கின்றன. நன்றி.
 
Last edited:
Dear Saidevo/ Suraju sir,
After a long time had this opportunity to read great tamil interaction in such beautiful way. Wanted to shout "Sabash Sariyana Poti" like PS Veerappa, But, this is such healthy one and both showing so much acceptance to others writings. Please keep this up so that people like us hungry for such superb interactions can savor some more ... Thanks for the postings from 41 to 46.

CHEERS!!!
 
Last edited:
வணக்கம் திரு மனோஹர்குமார்.

உங்களது சிறந்த ரசிகத் தன்மை எனக்குக் களிப்பூட்டுகிறது. நன்றிகள் பல. இந்தத் திரைப்பாடல் நினைவுக்கு வருகிறது:

என்னை தெரியுமா என்னை தெரியுமா -
நான் சிரித்துப் பழகி கருத்தைக் கவரும் ரசிகன் என்னை தெரியுமா
...
ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன்
நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்
--படம்: குடியிருந்த கோவில்

ராஜுவின் வரிகள் முழுக்கக் கவிதையே. அந்த ஓரசைச் சீர்களைத் தவிர்த்துக் கொஞ்சம் சீர்களை ஒழுங்கு பண்ணினால் மரபின் முழுமை பெறும். கவிதை தெரிந்தும் எழுத மாட்டேன் என்று அடம் பிடிப்பவரை என்ன செய்வது? இவ்வளவு தூரம் ரசிக்கும் மனோஜ், நீங்களும் கவிதை முயலலாமே?
 
அன்புள்ள சாயிதேவோ நண்பரே..
எல்லோரும் எழுத ஆரம்பித்து விட்டால், யார் தான் ரசிப்பார்கள். எல்லோர் வீட்டிலும் ஸ்னான அறை பாடகர்கள் இருப்பார்கள். நானும் அவர்களில் ஒருவன். நல்ல பாடல்களை ரசிப்பேன், கண்ணீர் விட்டும் ரசிப்பேன்... அவ்வளவு தான்.. பாட்டால் மற்றவர்களை துன்புறுத்த வேண்டாம் என்ற நல்ல எண்ணம் தான்.
ராக ஆலாபனை தெரியாது... ஆனாலும் நல்ல ரசிகன் மட்டும்..
அதுபோல, நல்ல எழுத்தை ரசிப்பேன், சிலாகித்து மகிழ்வேன். புலியைப் பார்த்து சூடு போடுக்கொண்ட பூனை நான் இல்லை. கல்கியின் பொன்னியின் செல்வனில் மனதை பறிகொடுத்து, வந்தியத்தேவனுடனும்
ஆழ்வார்க்ககடியாடுனமும், வானதியுடனும், குந்தவையுடனும், இன்னும் அனேக கதாபத்திரங்களுடனும், தொடர்பு கொண்டு நாட்கள் பல ஓடியிருக்கிறது..... இன்னும் ஓடிக்கொண்டும் இருக்கிறது...அதற்காக............
நானும் எழுத ஆரம்பிக்க முடியுமா சாயிதேவோ நண்பரே!!! உஙகள் பணீ எழதுவது.... எங்களது பங்கு ரசிப்பது..... மிக்க நன்றி உங்கள் ஊக்குவிக்கும் பண்புக்கு!!!
 
Sri. Saidevo and Sri. Raju, Greetings.

I enjoyed the poems and enjoyed the philosophies in the poems. Just an absolute treat! Thank you very much for the treat!

Cheers!
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top