• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

என் கவிதை முயற்சிகள்

Status
Not open for further replies.
இன்றைய வல்லமை இதழில்:
http://www.vallamai.com/?p=63404

தெய்வ தரிசனம்
04. பிரமனுக்கேன் ஆலயமில்லை?
(தரவு கொச்சகக் கலிப்பா)

[காஞ்சி மகாபெரியவர் உரையிலிருந்து திரட்டிய செய்திகள்]

நான்முகனாய் நாரணனின் நாபியிலே தோன்றியுமே
நான்முகமும் எப்போதும் நான்மறையை ஓதியுமே
வான்முதலாய் வைத்துலகும் மானிடரும் ஆக்கியுமே
ஏனோநான் முகனுக்கே எங்கணுமே கோவிலிலை! ... 1

படைப்பின்றேல் காப்பில்லை பண்ணியதை அழிப்பதில்லை
உடைத்தழிக்கும் பித்தனவன் உன்னதமாய் ஆலயத்தில்
நடைமுறையைக் காத்தருளும் நாரணனும் ஆலயத்தில்
படைப்புதரும் பிரமனுக்கோ பண்ணில்லை கோவிலிலை! ... 2

வீட்டினிலே வழிபாட்டில் விடையவனும் விட்டுணுவும்
பாட்டினிலே புகழ்ந்தேத்தப் பலதெய்வம் படமாக
நாட்டினிலே எல்லோரும் நாடுதெய்வ வழிபாட்டில்
ஏட்டினிலே செய்கையிலே இடமில்லை பிரமனுக்கே! ... 3

மூன்றுதேவர் பத்தினியும் முறையாக வழிபாட்டில்
ஊன்றிநிற்க உமையன்னை உள்ளத்தில் திருமகளாம்
தோன்றுஞானம் தந்திடவே தொழுதிடுவோம் நாமகளை
ஆன்றவனாம் அந்தணனாம் ஆரணனுக் கேதுமிலை! ... 4

பிரும்மமெனப் பரம்பொருளே பேர்பெற்றி ருந்தாலும்
பிரும்மவித்தை பேரெனவே பிரும்மஞானம் ஆனாலும்
பிரும்மானந் தம்நிலையாய் பிரும்மவித்தை யானாலும்
பிரமனுக்கோ கோவிலிலை பேர்சொல்லிப் போற்றவிலை! ... 5

ஆரணத்தின் ஒலியாலே அனைத்துலகும் உருவாக்கும்
ஆரணனாய்த் தந்தையென அனைத்துயிர்க்கும் வேராகிச்
சீரணவும் பிரமனுக்கோ சிறப்புவழி பாட்டிலையே!
காரணத்தைத் விளக்குவரே கருணைமிகு காஞ்சிமுனி. ... 6

[சீரணவும் = சீர் பொருந்திநிற்கும்]

பிறவியிதைத் தருகின்ற பிரமனுக்கா வழிபாடு?
பிறவியிதே ஈனமெனப் பேரின்ப நிலையிருக்க
பிறவியிதன் போக்கினையே பிரம்மலிபி தலையெழுத
பிறவியிதைத் தருகின்ற பிரமனெவண் வழிபடவே! ... 7

நம்பிறவிக் காரணமாய் நான்முகனெங் ஙனமாவான்?
நம்பிறவி அமைவதெலாம் நம்வினைகள் துய்ப்பதற்கே
நம்பிறவிப் போக்கொன்றே நம்தலையில் எழுதிவைக்கும்
அம்பாவான் பிரமனவன் அம்பெய்த வர்நாமே! ... 8

பாலனத்தைச் செய்பவராய்ப் பரந்தாமன் ஆனாலும்
சூலத்தாற் கொல்பவராய்ச் சொக்கனவர் ஆனாலும்
ஏலுவரே இருவருமே எதுவுமருள் தெய்வமென
கோலமிகு இந்தநிலை குரவனுக்கோ என்றுமிலை! ... 9

[பாலனம் = பாதுகாப்பு; ஏலுவரே = தகுதியாவரே; குரவன் = பிரமன்]

பாலனத்தைச் செய்பவளாய்ப் பாற்கடலாள் ஆனாலும்
சூலத்தாற் கொல்பவளாய்த் துர்க்கையவள் ஆனாலும்
ஏலுவரே இருவருமே எதுவுமருள் தெய்வமென
கோலமிகு இந்தநிலை குரவனுக்கோ என்றுமிலை! ... 10

பரம்பொருளால் ஆனாலும் பரம்பொருளய்த் தோன்றாத
பிரமனைமற் றிருவருடன் பேசுமுறை இல்லையென
உருவமேதும் ஆலயத்தின் உள்ளறையில் வைக்காமல்
கருவறைவி மானத்தில் காணவைத்த உருவெனவே! ... 11

மூவரிலே ஒருவரென முன்னிற்கும் பிரமன்பேர்
ஆவதெவண் என்பதனை ஆன்றமுனி சொன்னசெய்தி:
பூவுலகம் அண்டமெலாம் பொருந்திநிற்கும் பரம்பொருளே
மேவிவரும் லீலையென வேதாவைச் செய்ததுவே. ... 12

[வேதா = பிரமன்]

ஆடவர்பெண் சேர்க்கையிலே அவனியெலாம் செய்பிரம்மம்
தோடணியான் நாமகளைச் சோதரராய்ச் செய்ததுடன்
நீடுமாலும் அம்பாளும் நிலையினிலே சோதரராய்
நாடுகின்ற போகநிலை ஞானநிலை தருவதற்கே. ... 13

[தோடணியான் = காதில் தோடணிந்த சிவன்; நீடுமால் = நிலைத்திருக்கும் திருமால்]

உலகியலும் ஞானமுமே ஒன்றாகக் கலப்பதெனத்
தலைப்பட்ட பிரம்மமது தம்பதியாய்ச் சோதரர்க்கு
விலையொன்றைத் தருவதற்கே வேதாவை இலக்குமியை
நிலைபேற்றில் சோதரராய் நிற்பதெனச் செய்ததுவே. ... 14

அரன்-உமையாள் அரி-கமலை அயன்-வாணி எனமூன்றாய்
உருவான தம்பதியில் முதலிருவர் முழுமுதலாய்
இருந்திடவே பின்னிருவர் எழுஞானம் ஒன்றுமட்டும்
அருள்வதற்கே தெய்வமாக ஆலயத்தில் நின்றிலையே. ... 15

பிரமனவர் குருவாகப் பாற்கடலோன் பின்னின்றே
பிரம்மவித்தை ஞானமெனும் பேற்றினையே அருளுவதால்
உருவமென ஆலயத்தின் உள்ளில்லா பிரம்மதேவன்
குருவாக நாம்போற்றிக் கூடுதரும் பிறப்பறுப்போம். ... 16

--ரமணி, 29/10/2015, கலி.12/07/5116

குறிப்பு:
மேல்விவரம்:
தெய்வத்தின் குரல், பாகம் 5, பக். 187-230

*****
 
தெய்வ தரிசனம்
05. கேடுநீக்கும் கேசவன்
(குறும்பா)

கேசியெனும் தானவனைக் கொன்றேநீர்
கேசவனாம் பேர்தன்னைக் கொண்டீரோ?
. குழலழகர் கூந்தலதே
. அழகெல்லாம் ஏந்துவதே
நேசமுடன் போற்றுவமே இன்றேநாம்!... 1

[தானவன் = அசுரன்]

சடைமுடியே ராகவனின் தலையினிலே
பிடரிமயிர் நரசிம்மம் கலையெனவே
. சிக்கமெலாம் மும்மூர்த்தி
. சக்தியென இம்மூர்த்தி
இடையூறு நீக்கும்தாள் தலையிதுவே!... 2

[சிக்கம் = உச்சி மயிர்]

கண்ணனுக்கோ வண்ணமயில் கேசந்தான்
எண்ணமெலாம் மாயவனின் நேசந்தான்
. காதலிப்பர் கோபியரே
. ஆதுரத்தில் பாபியரே
கண்ணன்மேல் நம்நெஞ்சில் பாசந்தான்!... 3

[ஆதுரம் = பரபரப்பு, வியாதி]

ககரமெனில் பிரமனவன் பேராமே
அகரமதோ விட்டுணுவின் பேராமே
. ஈசனுரு கொண்டவரும்
. நேசமுடன் ஒன்றுவரே
பகவனிவர் பரம்பொருளாம் சீராமே!... 4

தண்ணுலவும் கேசமெனும் கிரணமிதே
மண்டலத்தில் உள்ளுறையும் அருணமிதே
. கொண்டிடிவார் அவதாரம்
. விண்டிடுவார் பவரோகம்
கொண்டல்வண் ணன்போற்றத் தருணமிதே!... 5

கேசவனே கேடுகளை நீக்குபவர்
கேசவனே கேசரியாய்த் தாக்குபவர்
. பண்ணுறுமே பூவுறுமே
. கண்நிறுத்த நாவறுமே
கேசவனின் கேசம்தாள் நோக்குவமே!... 6

--ரமணி, 05/11/2015, கலி.19/07/5116

*****
 
தெய்வ தரிசனம்
06. நாராயணா என்னும் நாமம்
(குறும்பா)
http://www.vallamai.com/?p=63782


நாராய ணாவென்னும் பேரினிலே
வேராக உள்ளிருக்கும் சீரினிலே
. ஏறிநிற்கும் பொருளெல்லாம்
. ஊறிநிற்கும் அருளெல்லாம்
ஆராயப் புகுவோமிப் பாவினிலே. ... 1

நரவென்னும் சொற்பொருளாய் ஆன்மாவாம்
நரத்தினின்று வருவதெலாம் நாராவாம்
. அயனமெனில் இருப்பிடமாம்
. வியனுலகின் பிறப்பிடமாம்
உருவத்தின் உள்ளீடாய் நாரணனாம். ... 2

நரம்தந்த வெளியீடே வான்வெளியாம்
விரிகாய வெளியீடாய்த் தான்வளியாம்
. காற்றதுவே தீயாகி
. நீராகி நிலமாகும்
நரம்விளைத்த பேரதுவே நாராவாம். ... 3

நாரமதே நாரணனின் உறைபொருளாம்
காரணோத கம்சொல்லும் மறைபொருளாம்
. அஞ்சுபூதம் இயல்தனியே
. அப்புவெனும் பெயரிலினிலே
பேரணவும் படைப்பாகும் இறைபொருளாம். ... 4

[பேர்-அணவும் = பெயர் பொருந்தும்]

உயிருள்ள உருவுள்ளே நாரணனே
உயிரற்ற உருவுள்ளே நாரணனே
. உயிருள்ளதோ இல்லாததோ
. பெயருள்ளதோ இல்லாததோ
பெயரற்ற உள்ளமைதி நாரணனே. ... 5

நீராடும் போதினிலே நாமமென
நாராய ணன்நாமம் சேமமென
. எட்டெழுத்து மந்திரமே
. கட்டுமனம் தந்திடுமே
வேரோடும் செய்கையெலாம் ஏமமென. ... 6

[ஏமம் = களிப்பு, இன்பம்]

நாரணனின் நினைவுவரும் இறுதிமூச்சே
வேரறுக்கும் பிறப்பென்றே உறுதியாச்சே
. கருமமுறும் சோதனையோ
. கருமமறு சாதனையோ
சீரிதுவே உயிரொன்றின் அறுதியாச்சே. ... 7

ஓம்நமோ நாராய ணாயவென்றே
போம்வினைப் பாராய ணமாமென்றே
. எட்டெழுத்து மந்திரமே
. உட்டுளையாய் வந்துறினே
நாம்மேன்மை கொள்வதற்கா தாயமென்றே. ... 8

[உட்டுளை = உள்+துணை]

--ரமணி, 12/11/2015, கலி.26/07/5116

*****
 
பிரதோஷத் துதி
எங்களுக்கேன் அபிஷேகம் ஈசனே?
(முச்சீர் சமநிலைச் சிந்து)

வானதியைத் தாங்குதலைச் செஞ்சடை - கொஞ்சம்
. வாகாகச் சிலிர்த்தாயோ ஈசனே!
ஊனுருக நீராடும் பொழிவிலே - கொஞ்சம்
. உன்பங்காய் எங்களுக்கா ஈசனே!

ஏனிந்தப் பெருவெள்ள லீலையோ - எம்மை
. ஏங்கவைத்துப் பார்ப்பதுமேன் ஈசனே!
வானத்தில் சோதிநிலை யாகுமோ - இந்த
. வான்மீன்கள் மூழ்கினவோ ஈசனே!

நீயேந்தும் திருவோட்டை நாங்களும் - ஏந்தி
. நீர்நிலையில் அலைகின்றோம் ஈசனே!
கார்தந்த கொடையினிலே மற்றவை - யாவும்
. கரமேந்த வைத்தனையே ஈசனே!

திருவாடல் போதுமையா இத்துடன் - எங்கள்
. தெருவாடல் தீர்த்தருள்வாய் ஈசனே!
நரியாடல் பரியாடல் போதுமே - எங்கள்
. நலமீண்டும் ஆடவருள் ஈசனே!

--ரமணி, 23/11/2015, கலி.07/08/5116

*****
 
தெய்வ தரிசனம்
07. மாதவன் மகிமை
(குறும்பா)
http://www.vallamai.com/?p=63997

மாதவனின் பேர்சொல்லும் பேறிதே
மாதவத்தின் பலனென்றே ஆவதே
. முற்பிறப்பின் தவமென்றே
. இப்பிறப்பின் நலமென்றே!
வேதனைகள் தீர்த்துவைக்கும் பேரிதே. ... 1

சராசரியாம் மனிதனுமே அறியவே
பராசரராம் பட்டரவர் உரையிலே
. மாதவனின் பேர்விளக்கம்
. யாதெனவே வேர்விளக்கம்
பிரார்த்தனையாம் நாமமெனத் தெரியுமே. ... 2

மாவென்னும் அட்சரத்தின் மௌனமே
தவென்னும் அட்சரத்தின் தியானமே
. மோனத்தில் உருவற்ற
. தியானத்தைத் தருவிக்க
வவென்னும் அட்சரத்தின் யோகமே. ... 3

[பராசர பட்டரின் விஷ்ணு ஸஹஸ்ரநாம உரை]

மதுவித்தை சாதனையில் ஆதவனே
மதுவென்றே சங்கரரின் போதனையே
. உண்ணாத அமுதாகவே
. கண்ணாலே நமதாகவே
அதுவென்னும் பரம்பொருளாம் மாதவனே. ... 4

[ஆதிசங்கரரின் சாந்தோக்ய உபநிடத உரை]

ஹரிவம்சம் சொல்லுகின்ற பொருளாமே
பரமாத்ம ஞானத்தின் அருளாமே
. பேரறிவின் போதனையாய்
. வேரெனவே மாதவனாம்
உரையெல்லாம் இப்பொருளில் உருவாமே. ... 5

அஞ்சுபுலன் நம்சித்தம் ஆட்கொள்ளும்
சஞ்சரிக்கும் மனதையதன் மேற்தள்ளும்
. வெளியுணர்வில் ஈடுபடும்
. நளிவுள்ளம் பாடுபடும்
தஞ்சமெனப் பலநிலைகள் மேற்கொள்ளும். ... 6

[நளிவுள்ளம் = செருக்கினைக் கொள்ளும் உள்ளம்]

புறவுணர்வைக் கட்டுதற்கு மௌனமாம்
அறிவதனில் அமிழ்ந்திருக்க தியானமாம்
. நூலறிவால் ஏற்பட்ட
. வாலறிவின் பாற்பட்டு
பொறியற்று நிலைநிறுத்த யோகமாம். ... 7

[வாலறிவு = பேரறிவு, உண்மை]

மாவென்று திருமகளின் பேரதுவே
மாவென்னும் முதலெழுத்தின் வேரதுவே
. செல்வமெலாம் திரமாக
. செல்வதெலாம் அறமாக
வாவென்றால் வரமருளும் சீராமே. ... 8

--ரமணி, 19/11/2015, கலி.03/08/5116

உதவி:
மாதவன் என்ற சொற்பொருள்
https://ta.wikipedia.org/wiki/மாதவன்_என்ற_சொற்பொருள்
purAnic encyclopedia: vETTam maNi

*****
 
வெண்பா வித்தகம்: கட்டளைக் கலித்துறையில் வெண்பா
அமைத்தவர்: கவிமாமணி இலந்தை இராமசாமி
https://groups.google.com/forum/#!topic/santhavasantham/-mnQvFbRT7w

விழிமனக் கவிதை!
(கட்டளைக் கலித்துறையில் வெண்பா)

(கட்டளைக் கலித்துறை)
விழியின் மணியே விழிக்குறும் சொந்தம் விழுவதெலாம்
இழிதலைக் கொள்மனம் என்று விழிமுன் எழுத்தினிலே
இழைக்கும் கவிதைகள் இன்று மலரும் இனிமையிலே
உழைக்கும் உளத்தின் உவப்பு முழுதும் உணர்வினிலே!

(நேரிசை அளவியல் வெண்பா)
விழியின் மணியே விழிக்குறும் சொந்தம்
இழிதலைக் கொள்மனம் என்று - விழிமுன்
இழைக்கும் கவிதைகள் இன்று மலரும்
உழைக்கும் உளத்தின் உவப்பு

(நேரிசைச் சிந்தியல் வெண்பா)
விழியின் மணியே விழிக்குறும் சொந்தம்
இழிதலைக் கொள்மனம் என்று - விழிமுன்
இழைக்கும் கவிதைகள் இன்று

(குறள் வெண்பாக்கள்)
விழியின் மணியே விழிக்குறும் சொந்தம்
இழிதலைக் கொள்மனம் என்று

இழைக்கும் கவிதைகள் இன்று மலரும்
உழைக்கும் உளத்தின் உவப்பு

--ரமணி, 29/11/2015

*****
 
பிரதோஷத் துதி: வெள்ளம் தலைக்கேறும் வீழல் தீர்ப்பீர்!
(நேரிசை வெண்பா அந்தாதிப் பஞ்சக மாலை)

வெள்ளம் தலையேற்றி வெள்விடை யேறியென்
உள்ளத் தமர்வீர் உமைகோனே - வெள்ளம்
தலைக்கேறி வீட்டிய தாக்கத்தில் என்னுள்
மலைபோல் அழுத்தும் மயல். ... 1

மயலின் முயக்கில் மனமெங்கும் முட்கள்
தயக்கமே என்னைத் தழுவும் - துயரில்
செயலற்றே கற்பனை செவ்விதம் இல்லா(து)
அயலாகிப் போமென் அகம். ... 2

அகமிதே ஆவுடை யாராய்க் கருதி
உகந்தவோர் லிங்கமாய் உள்ளம் - அகழ்வீர்
பொழிகங்கை நீரால் புனிதம் அரும்ப
விழல்தீர்த் தருள்வீர் விழிப்பு. ... 3

விழித்தே உமைநான் விதவிதமாய்ப் போற்ற
வழித்துணை யாக வருவீர் - கழிபொழுதில்
என்சொல்லில் என்செயலில் எந்தை உமையெண்ணும்
தன்மை தருவீரே சம்பு. ... 4

சம்புவின் சம்பந்தம் சாதனை யில்சேர்க்க
சம்புவை அம்பாள் சகிதமாய் - நம்பிநான்
காரிருள் நீங்கிக் களிக்கும்நாள் என்னுளத்து
ளாரும் பரசிவவெள் ளம். ... 5

--ரமணி, 06/02/2016, கலி.23/10/5116
(சனி மஹா பிரதோஷ நன்னாள்)

*****
 
சரக்கொன்றை...
(மடக்கணி அமைந்த அளவியல் நேரிசை வெண்பா)

சரக்கொன்றைக் கைப்பற்றிச் சட்டென் றமர்ந்தார்
சரக்கொன்றைப் பூமரம் கீழே - ஒருவர்
சரக்குந்து ஓட்டுனர் மற்றவர் செல்வர்
சரக்குந்து போதை சமம்.

--ரம்ணி, 13/12/2015

*****
 
மீட்டிடப் போதுமான: மடக்கணி
(நேரிசை வெண்பா)

மீட்டிட வந்தனள் வீணையை! என்னைநீ
மீட்டிட வந்தாயோ வேலவா! - மீட்டிடப்
போதுமான காசில்லாப் பொன்னணி போலவென்
போதுமான தேமூழ்கிப் போய்!

விளக்கம்
மீட்டிட என்ற சொல்லின் பொருள் முறையே:
இசைத்திட, காப்பாற்ற, அடகு வைத்ததைத் திருப்ப.

போதுமான என்ற சொல்லின் பொருள் முறையே:
தேவையான அளவு; பொழுதும் ஆனதே!

குறிப்பு:
போதுமான என்ற சீர் விளாங்காய்ச் சீராகி ஓசை குறைப்பினும்,
மடக்குப் பொருளாக வருவதால் அதை அங்ஙனம் அமைத்தேன்.

--ரமணி, 29/01/2016

*****
 
மடக்கணி வெண்பா: ஆமையா?!
(இன்னிசை வெண்பா)

ஆமையா? என்றாரென் ஆசான் கடற்கரையில்
ஆமையா! என்றேன் அவர்சட்டைப் பைநோக்கி
ஆ?மையா? என்றார் அவரதனைக் கைப்பற்றி
ஆமையா உச்சியும் மை!

ஆமையாவின் பொருள் முறையே:
ஆமை-யா, ஆம்-ஐயா, ஆ-மையா, ஆம்-ஐயா

--ரமணி, 03/02/2016

*****
 
மடக்கணி வெண்பா: முடங்கல்
(இன்னிசை வெண்பா)

முடங்கல் பிணியில் முனகிடும் மன்னன்
முடங்கல் குழலில் முதியவர் வாழ்த்து
முடங்கல் சுருள்தனைத் தூதுவன் தந்தான்
முடங்கல் கொளும்மன் முகம்.

(முடங்கல் பொருள் முறையே:
முடக்குவாதம், மூங்கில், சுருளோலைக் கடிதம், மடங்குகை;
மன் = அரசன்)

--ரமணி, 04/02/2016

*****
சொற்பின்வரு நிலையணி வெண்பா: அலங்கல்
(பஃறொடை வெண்பா)

அலங்கல் அகம்மோத அல்லலுற் றேனுன்
அலங்கல் தலைமேல் அகற்றியது வாழ்வில்
அலங்கல்; கழுத்தினில் ஆடும் அலங்கல்
அகத்தினில் பக்தி அலங்கல் எழுப்பும்
இகத்தில் அலங்கல் அமைதியை ஈசா
உகந்தேன் அருள்வாய் உவந்து.

[அலங்கல் பொருள் முறையே:
அலம்+கல் (மடக்கு) = துன்பமாகிய கல்; மனக்கலக்கம்;
தலையில் அணியும் மாலை; கழுத்தில் அணியும் மாலை;
துளிர்; ஒழுங்குமுறை, ஒளி]

--ரமணி, 04/02/2016

*****
 
அங்கணனின் மங்கை யெங்கே?
(முற்று முடுகு நேரிசை வெண்பா: தந்ததன)

இங்குமுள வங்குமுள வெங்குமுள வங்கணனி
னங்கமதி லெங்குமுள வங்கதம டங்கிவர
மங்கையிட மிங்குசிவ மங்கலமி லங்குமவ
ளிங்குமன வங்குவினி லெங்கு?

பதம் பிரித்து:
இங்குமுள அங்குமுள எங்குமுள அங்கணனின்
அங்கமதில் எங்குமுள அங்கதம் அடங்கிவர
மங்கையிடம் இங்குசிவ மங்கலம் இலங்குமவள்
இங்குமன வங்குவினில் எங்கு?

[குறிப்பு: வெண்பாவின் முடுகியலில் ஙகர ஒற்று மட்டும் பயில்வது காண்க.]

--ரமணி, 05/02/2016

*****
 
பிரதோஷத் துதி: தாண்டவன் தாண்டகம் தங்கவே...
(இன்னிசை வெண்பா)

பாற்கடல் தோன்றிப் பரவிய நஞ்சினை
ஏற்றருள் செய்தார் இமையவர் மானிடர்
போற்றியே வாழ்ந்திடப் பொன்னம் பலத்தவர்!
கூற்றினை வென்றிடக் கூடு. ... 1

உருவும் நிழலும் ஒருமித் ததுபோல்
இரவும் பகலும் இணையும் பொழுது
விரிசடை வேதன் விடைமேல் நடனம்!
தெரிசனம் உள்வரத் தேடு. ... 2

கோவிற் கருவறை கொள்ளும் பொழிவினில்
மேவும் திரவியம் மேனி வழிந்திட
நாவைந் தெழுத்தினில் நர்த்தன மாடிடும்!
பாவம் தொலையவே பாடு. ... 3

வேதமும் பண்ணொடு மேற்படு மோசையில்
நாத சுரத்தின் நலம்செவி யாடவே
அம்மையும் அப்பனும் ஆலயச் சுற்றினில்!
இம்மையில் வேறென வீடு? ... 4

தாண்டவன் தாண்முளை தாண்டினைத் தாண்டிடத்
தாண்டவன் தாண்முதல் தாண்டகம் தங்கவே
தாண்டா வுமையவள் தன்னிடம் கொண்டாடும்
தாண்டவன் தண்ணெறி தாங்கு. ... 5

பொருள்
தாண்டவனாம் நடராசனின் மக்களாகிய (தாண்முளை) நாம்
. அகங்கரிப்பைத் (தாண்டினைத்) தாண்டிச் செல்லத்
தாண்டவனின் பாதமூலமே (தாண்முதல்) நம் செருக்குடைய
. அகத்தில் (தாண்டகம்) தங்கவே
தலைப்பின்னலில் மலர்மாலை (தாண்டா) அணிந்த உமையாளைத்
. தன் இடப்பக்கம் கொண்டு ஆடும்
தாண்டவனின் குளிர்நெறியைத் தாங்கு.

--ரமணி, 02/06/2016, கலி.20/02/5117

*****
 
#ரமணி_பிரதோஷம்
பிரதோஷத் துதி: தாண்டவனே ஆண்டருளே!
(எழுசீர் விருத்தம்: கூவிளங்காய் மா காய் மா காய் மா காய்)

ஆலெழுந்த வாரி அச்சமுற்ற தேவர்
. அன்றுன்னை நாட அருள்செய்யச்
சேலெழுந்த கண்ணாள் நஞ்சிறங்கும் கண்டம்
. திகிலெழுந்து பற்றக் கொண்டாயே
காலெழுந்து வீட்டும் கருமேக வெள்ளம்
. காலத்தை நிறுத்தும் நாள்வரையில்
காலெழுந்த நடனம் நிற்காதே ஆடும்
. கண்ணுதலே நல்லோர் காத்தருள்வாய். ... 1

ஆவிழிந்த ஐந்தும் ஆலயத்தில் ஆடி
. அடியார்க்கு நன்மை அருள்வோனே
நாவிழிந்த பாட்டாய் நாலுவகைப் பண்ணின்
. நாதமுனைச் சூழும் காட்சியுடன்
காவிழிந்த மலர்கள் காட்டுமலங் காரம்
. கண்ணிழியச் சுற்றில் வரும்போது
நோவிழிந்த வாழ்வின் நுண்மையைநா டாதே
. நுகர்வோரைத் திருத்தும் அருளாளா. ... 2

[ஆவிழிந்த ஐந்து = பஞ்சகவ்யம்;
நாலுவகைப் பண் = வேத, தேவார, நாதஸ்வர, மேளப் பாட்டு;
இவற்றில் மேளம் விரல்களால் எழுந்தாலும் தாளம் முதலில் மனத்தின்
நாவிலேயே எழுகிறது;
காவிழிந்த = சோலையில் இருந்து இறங்கிய]

தேனறியாக் காட்டு மலரானேன் ஆன்மத்
. தினவறியா வெற்று மனம்கொண்டேன்
வானறியாப் பயிராய் வலுவிழ்ந்தே இன்று
. வாடுகிறேன் ஒன்றும் அறிந்திலனாய்
நானறிந்த உலகில் துன்பமிலா இன்பம்
. நாடுகிறேன் இன்னும் தேடுகிறேன்
தானெரிந்த காட்டில் கூளியுடன் ஆடும்
. தாண்டவனே என்னை ஆண்டருளே. ... 3

[தானெரிந்த = தான் என்னும் உடல் நிமித்த அகந்தை]

--ரமணி, 02/07/2016, கலி.18/03/5117

*****
 
கண்ணே, மணியே, கட்டிக் கரும்பே!
(முச்சீர்க் குறள் வெண்செந்துறை)

பெண்
கண்ணே என்றால் கண்ணாடிக்
கண்ணென் றுன்றன் எள்ளுரையோ?
கண்ணில் ஆடும் தோற்றமெலாம்
கண்ணா டிசெயும் மாயமன்றோ?
கண்ணுக் கின்றைய கற்பனையாய்
பெண்ணைச் சொல்லப் பொருளுண்டோ?

ஆண்
கணினிக் கேமரா கண்போல்
அணியாய்க் காண்பதால் கண்ணென்றேன்
கண்ணே நீயும் கண்ணாடி
கண்ணே நானும் கண்ணாடி
இருவிழிப் பொருத்தம் இப்படியாய்
வருவது நாலாய் வளமன்றோ?

பெண்
மணியே என்றார் மங்கையெனை
மணியே என்சம் பாத்தியமாய்
மணியில் லாமல் உழைமாடாய்
மணிநீ என்னைக் காண்பாயோ?

ஆண்
மணிபோல் வெட்டித் துண்டாக்கி
அணியாய்ப் பேசும் அருமங்கை
மணியே உன்சம் பாத்தியமேல்
மணியாய்க் காய்கறி அரிந்தேதான்
மணியில் உணவும் சமைப்பாயே
பணியில் நானும் உதவிடவே!
மணிநான் மணிமே கலைநீயே
பிணிப்பேர் பொருத்தம் பெருமையன்றோ?

பெண்
கட்டிக் கரும்பே நானென்றே
சுட்டித் தனமாய்ச் சொல்வாயோ?
கரும்பாய் என்னைப் பிழிவாயோ?
வருமுன் காப்பேன் வனமங்கை!

ஆண்
கரும்புச் சாறு இருவரும்நாம்
அரும்பும் மாலைச் சாலையிலே
விரும்பிப் பருகுவோம் பலநாட்கள்
கரும்பின் மறுபெயர் அறிவாயே
கன்னற் சாறாய் உன்னுள்ளம்
கன்னம் இழைத்துநான் கண்டேனே
கன்னல் என்றே இனிநானும்
என்றும் உன்னை அழைப்பேனே!

பெண்
கனியே தேனே என்றாரே
வனிதை எங்களைப் புலவருமே
உவமை சுட்டும் உடலாக
உவந்தே நீயும் காண்பாயோ?

ஆண்
நவநா கரிகப் பெண்மணிநீ
உவமைப் பொருளே வேறன்பேன்
கணினித் தகவற் கனியேநீ ... [கனி=சுரங்கம்]
அணிமலர்த் தேனாய் உன்பேச்சு
கனியும் உள்ளம் தேனாக
வனிதை உன்னைக் காண்பேன்நான்
காலம் காலமாய்ச் சொன்னதெலாம்
ஆலம் விழுதாய் நிற்பதன்றோ?
சொல்லின் பொருள்தான் வேறாகிக்
கல்வியில் கருத்தில் சமமாவோம்.

இருவரும்
(இருசீர்க் குறள் வெண்செந்துறை)

மணிநீமணி மேகலைநான்
கணினித்துறை கம்பெனியின்
பணியேநமைச் சேர்த்ததுவே
மணிநாம்மிகச் சேமித்தே
அணியாயிரு வாரிசுகள்
துணிவோம்நம் வாழ்வினிலே!

--ரமணி, 01/07/2016

*****
 
சென்மாட்டமித் துதி
(நேரிசை வெண்பா)

இலையோ மலரோ இவையின்றேல் புல்லோ
அலையும் மனத்தின் அகந்தை - குலையவே
தந்தால் வருவேன் தயங்காமல் என்றாயே
மொந்தை உளந்தருமே முள்! ... 1

கண்ணன் குழந்தையாய்க் காதலனாய்த் தோழனாய்
எண்ணம் சிதைத்துள்ளே இன்பமாய்ப் - பண்ணும்
குருவாய் எனதகந்தை கொள்ளும் இறையாய்
உருக்கொள உய்யும் உயிர். ... 2

குழலில் மயிற்பீலி கொண்டான்கைப் பற்றும்
குழலூதி உள்ளத்தைக் கொண்டான் - குழல்மூச்சாய்
என்னுள் இறங்கும் எரிவாயுத் தேரோட்டி
தன்னுள்ளே கொள்வானென் தான். ... 3

--ரமணி, 25/08/2016

*****
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top