• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கவிதையில் யாப்பு

Status
Not open for further replies.
4.7.4.10. எதுகை மோனை அடிநிலைக் குறிப்புகள்
மோனை எதுகை முரண்தொடை போன்ற
தொடையின் வகைகள் விளக்கம் பிறிதோர்
இயலில் விரிவாய் வரும். ... [5.1.]

முதலெழுத்து ஒன்றிட மோனை அடுத்தது
ஒன்ற எதுகை வரும்.

அடிகளில் அல்லது சீர்களில் ஒன்றும்
எதுகையும் மோனையு மே.

எதுகை பயில அடியினில் சீரில்
முதலெழுத்து ஒத்திட வேண்டும் அளவில்
குறில்நெடில் ஓசையி லே.

அடிகளின் எண்ணிக்கை நோக்க உதவும்
அடியெதுகை உத்தியா கும்.

4.7.4.11. எதுகையால் வரும் வெண்பா விகற்பம்
விகற்பம் எனும்பதம் வெண்பாவில் காட்டும்
அடியெதுகை எண்ணிக்கை யை.

அடியெதுகை எண்ணிக்கை யொட்டியே வெண்பா
விகற்பப் பெயர்பெற் றிடும்.

ஒருவிகற்ப வெண்பாவில் ஓரெதுகை யேவரும்
ஒவ்வோர் அடியி லுமே.

பலவிகற்ப வெண்பாவில் ஒன்றுக்கு மேலே
அடியெதுகை வந்திடு மே.

ஒருவிகற்ப மற்றும் இருவிகற்ப ஏனைப்
பலவிகற்ப வெண்பாக்கள் சான்று முறையே
அடுத்து வரும்பாக் களில்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
---திருக்குறள் 1:1

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் -- தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
---ஔவையார், மூதுரை 12

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே -- ஏற்றம்
உழுதுண்டு வாழ்வார்க்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
---ஔவையார், நல்வழி 12


அடுத்த பலவிகற்ப வெண்பா நமதாகும்:
ஓரடி முக்கால் குறள்வெண்பா எல்லையாம்
ஈரடி முக்காலே சிந்தியல் எல்லையாம்
மூவடி முக்கால் அளவடி எல்லை
பலவடி முக்காலே பஃறொடை எல்லை
எனவும் வகுப்பது உண்டு.
---ரமணி
 
4.7.4.12. வெண்பாவில் எதுகை மோனை அமைப்பு
அடிதோறும் அல்லது ஈரடிக்கு ஓரெதுகை
வெண்பாவில் வந்தால் சிறப்பு.

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் -- தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
---ஔவையார், மூதுரை 12

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே -- ஏற்றம்
உழுதுண்டு வாழ்வார்க்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
---ஔவையார், நல்வழி 12

மேல்வந்த பாக்களில் சொல்லும் ஒலியும்
எதுகையில் ஒன்றியது காண்.

வெண்பாவில் மோனை முதற்சீரில் மூன்றில்
அமைந்தால் சிறக்கும் ஒலி.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
---திருக்குறள் 010:10

மேற்படி மோனை முடியாது போனாலோ
ஒன்றுநான்கு சீரில் சிறப்பு.

வித்தும் இடவேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
---திருக்குறள் 009:05

ஒன்றிலும் மூன்றிலும் நான்கிலும் வந்தாலோ
மேலும் உயரும் சிறப்பு.

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
---திருக்குறள் 06:10

4.7.4.13. வெண்பாவின் வகைகள்
வெண்பாவில் ஐந்து வகைகள் உளது.
இரண்டு அடியில் வருமே குறள்வெண்பா.
மூன்று அடியில் வருவது சிந்தியல்.
நான்கு அடியில் வருமே அளவியல்.
ஐந்துமுதல் பன்னிரண்டு பஃறொடை வெண்பா.
அதனையும் விஞ்சும் அடிகள் கலிவெண்பா
இவ்வாறு வெண்பாவில் ஐந்து.

வெண்பா எனும்சொல் பொதுவில் குறிக்கும்
அளவடி வெண்பாவை யே.

குறள்வெண்பா நீக்கி இதர வகைகள்
இரண்டு விதத்தில் இயற்றப் படுவது
நேரிசை இன்னிசை யென்று.

4.7.4.14. பழந்தமிழ் வெண்பா நூல்கள்
வெண்பாவால் முற்றிலும் ஆன பழந்தமிழ்
வெண்பாத் தொகுப்புகள் உண்டு.

திருக்குறள் முற்றும் குறள்வெண்பா வாலான
தெய்வப் புலவர் படைப்பு.

ஔவையின் மூதுரை நல்வழி என்பன
நேரிசை வெண்பாக் களில்.

நாலடியார் நீதிவெண்பா நன்னெறி போன்ற
அறநூல் அனைத்தும் அளவியல் வெண்பாவால்
ஆனது ஏனென்று பார்த்தால் தெரிவது
செப்பலில் சான்றோரின் சொல்.
 
4.7.4.15. குறள் வெண்பா
வெண்பா இலக்கணம் பெற்றுக் குறள்வெண்பா
வந்திடும் ஈரடி யில்.

ஒருவிகற்பத் தாலோ இருவிகற்பத் தாலோ
குறள்வெண்பா வந்திடு மே.

இனக்குறள் வெண்பா விகற்பக் குறள்வெண்பா
என்று இருவகை யுண்டு.

மோனை எதுகை முரண்போல் தொடைகள்
இனக்குறள் வெண்பா விலே.

பொருளின் செறிவால் அடிகள் இரண்டால்
தொடைகள் அமைவ தரிது.

எனவே விகற்பமும் செந்தொடையும் பெற்று
விகற்பக் குறட்பா வரும்.

விகற்பம் எனும்சொல் அடியெதுகை எண்காட்டும்
செந்தொடையில் எத்தொடையும் இல்.

அடியெதுகை ஒன்றே வரும்குறள் வெண்பா
ஒருவிகற்பம் பெற்ற குறள்.

அடியெதுகை ஒன்றாக மோனை முதற்சீரில்
மூன்றில் சிறக்கும் ஒலி.

4.7.4.15.1. இனக்குறள் சான்றுகள்: திருக்குறள்
எதுகை முரணில் இனக்குறள் சான்றுக்குக்
கீழ்வரும் பாக்கள் இரண்டு.


சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோக்கிற் பவர்க்கு.
---திருக்குறள் 027:07

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.
---திருக்குறள் 062:05

இயைபுத் தொடையும் அளபெடையும் காணும்
குறட்பாக்கள் கீழே இரண்டு.


எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.
---திருக்குறள் 043:04

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
---திருக்குறள் 002:05

4.7.4.15.2. விகற்பக்குறள் சான்றுகள்: திருக்குறள்
ஒருவிகற்பம் சீர்முழுதும் முற்றுமோனை கொண்ட
குறள்சான்று கீழுள் ளது.


கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
---திருக்குறள் 040:01

ஒன்றும் இரண்டும் விகற்பம் பெறவரும்
பாக்களில் ஏந்திசை காண்.


துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
---திருக்குறள் 010:04

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
---திருக்குறள் 040:07

ஒன்றும் இரண்டும் விகற்பம் பெறவரும்
பாக்களில் தூங்கிசை காண்.


நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
---திருக்குறள் 003:08

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
---திருக்குறள் 014:01

ஒன்றும் இரண்டும் விகற்பம் பெறவரும்
பாக்கள் ஒழுகிசை காண்.


கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
---திருக்குறள் 002:05

மனத்துக்கண் மாசிலன் னாதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
---திருக்குறள் 004:04
 
4.7.4.15.3. திருக்குறளில் பொருள்சிறக்க வரும் முரண்தொடை
முரண்படச் சொல்லோ பொருளோ தொடுத்தால்
முரண்தொடை வந்திடும் காண்.


அறத்தினைக் கற்பிக்கும் நூல்கள் அதோடு
மறத்தையும் சொல்வது உண்டு.

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
---திருக்குறள் 008:06

நல்லது சொல்கிற செய்யுளில் கூடவே
அல்லதும் சொன்னால் அழகு.

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
---திருக்குறள் 010:06

நல்லதும் அல்லதும் பக்கத்தில் நின்றிட
நல்லதின் தன்மை மிகும்.

முரண்படும் செய்திகள் சொல்கிற போது
முரண்படும் சொற்கள் வரும்.

அறநூல் களிலே இதுபோல மிக்க
முரண்தொடை வந்திடு மே.

முரண்தொடை சீர்த்து வருகிற ஓர்நூல்
திருக்குறள் என்றிட லாம்.

முரண்தொடை யால்பொருள் சீர்த்து விளங்கிடும்
வள்ளுவர் பாக்கள் சில.

பொருளை விளக்க வருவது சொல்முரண்:
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
---திருக்குறள் 009:06 ... [செல்விருந்து வருவிருந்து]

மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்.
---திருக்குறள் 007:10 ... [மகன் தந்தை]

தந்தை மகன்மற்றும் செல்-வரு என்றது
சொல்லினில் மட்டும் முரண்.


சொல்லில் பொருளில் முரண்வரும் பாக்கள்:
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
---திருக்குறள் 010:10 ... [இனிய இன்னாத, கனி காய்]

இனிய பதத்தின் பொருள்முரண் இன்னாத
காய்-கனி சொல்முரண் காண்.


தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
---திருக்குறள் 012:04 ... [தக்கார் தகவிலர்]

தக்கார் தகவிலர் என்று பொருளொடு
சொல்லும் முரண்வது காண்.
 
4.7.4.15.4. திருக்குறளில் நிரோட்ட/இதழகல் குறட்பாக்கள்
ஓஷ்டம் எனும்சொல் உதட்டுக்கு சம்ஸ்க்ருதத்தில்.
ஓட்டம் இதன்தமிழ்ச் சொல்.

உதடுகள் ஒட்டினால் ஓஷ்டம் நிரோஷ்டம்
உதடுகள் ஒட்டா தது.

நிரோஷ்டம் தமிழினில் ஆகும் நிரோட்டம்
இதழகல் இன்னோர் பெயர்.


யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
---திருக்குறள் 035:01

இதழகல் என்ற நிரோட்டப்பா உத்திக்கு
இக்குறள் சீர்மிகு சான்று.

இளங்கோவன் மின்வலையில் வேறுபல காண்க
அவற்றி லிருந்து சில.


அவர்தரும் முற்றும் இதழகல் பாக்கள்
இனிவரும் மூன்று குறள்.

இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.
---திருக்குறள் 031:10

எய்தற் கரிய தியைந்தகாண் அந்னிலையே
செய்தற் கரிய செயல்.
---திருக்குறள் 049:09

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குநல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.
---திருக்குறள் 109:02

முற்றும் இதழகலா வேறுசில பாக்களில்
சிற்சில காண்போம் இனி.


கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.
---திருக்குறள் 067:08

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயா தடியுறைத் தற்று.
---திருக்குறள் 021:08

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
---திருக்குறள் 068:09

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது.
---திருக்குறள் 042:09

மீதமுள்ள பாக்குறள்கள் அன்னாரின் கீழுள்ள
மின்தளத்தில் உள்ளன வே.
முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: இதழகல் வெண்பா

நிரோட்டம் இதழகலுக் காகா எழுத்துகள்
கீழ்வரு மாறு கணக்கு.

உ,ஊ,ஒ,ஓ,ஔ உயிர்களுடன்,
ப், ம், வ் மெய்களும் சேர்ந்து ௮
ப்,ம்,வ் ௧௨ உயிர்கள் உறழ்ந்து ௩௬
உ,ஊ,ஒ,ஓ,ஔ ௧௫மெய்யுடன்
உறழ்ந்து,(ப்,ம்,வ் நீங்கலாக) ௭௫
ஆக ௧௧௯.


பார்க்க:
முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: இதழகல் வெண்பா

4.7.4.15.5. திருக்குறளில் ஓட்டம்/இதழுறல் குறட்பாக்கள்
நிரோட்டம் இதழகல் ஒட்டாமை ஒட்டுவது
ஓட்டம் இதழுற லால்.

ஓட்டம் இதழுறல் காணும் குறட்பாக்கள்
பின்வரும் சான்றுகள் போல்.


பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
---திருக்குறள் 035:10

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
---திருக்குறள் 002:02
 
4.7.4.15.6. ஔவையின் குறள்மூலம்
ஔவை அருளிய ஞானக் குறளாம்
குறள்மூலம் பாக்கள் சில.

மாசற்றக் கொள்கை மனத்தி லடைந்தக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு. 016

எழுபத் தீராய நாடி யவற்றுள்
முழுபத்து நாடி முதல். 031

முன்னைப் பிறப்பின் முயன்ற தவத்தினால்
பின்னைப் பெறுமுணர்வு தான். 084

பத்துத் திசையும் பரந்த கடலுலகும்
ஒத்தெங்கும் நிற்குஞ் சிவம். 191

பற்றிலா தொன்றினைப் பற்றினா லல்லது
கற்றதனா லென்ன பயன். 214

சாகா திருந்த தலமே மவுனமது
ஏகாந்த மாக விரு. 272
 
4.7.4.15.7. வெண்பா நுணுக்கங்கள்: ஓசைகுறைக்கும் விளங்காய்ச் சீர்கள்
வெண்பா இலக்கணம் காய்ச்சீர்கள் நான்கும்
அனுமதிக்கும் ஆயினும் அஃது,

செப்பலொலி முக்கியம் என்றும் குறிக்க
விளங்காய்கள் வந்தால் இடர்.

கருவிளங்காய் கூவிளங்காய் சீர்கள் நடுவில்
வரும்நான்கு கூட்டில் நிரை,

தனியே குறிலிணை அல்லது ஒற்றுடன்
வந்தால் குறையா ஒலி,

தனியே குறில்நெடில் அல்லது ஒற்றுடன்
வந்தால் குறையும் என,

அறிந்தோர் மொழிவதால் இவ்வகைச் சீர்கள்
தவிர்ப்பது வெண்பாவில் நன்று.

’மூவரேகாண் வேர்ப்பலாக்கண்’ போல குறில்நெடில்,
ஒற்றுடன் கூவிளங்காய் கள்,

’வருவரேகாண்’ என்றோ ’கிளைப்பலாக்கண்’ என்றோ
கருவிளங் காய்ச்சீர் களும்,

இதுபோல் விளங்காய்கள் ஓசை குறைப்பதால்
வெண்பாவில் கூடாது காண்.


’நல்வரவில் நால்வரும்பெண்’ போலக் குறிலிணை,
ஒற்றுடன் கூவிளங்காய் கள்,

’பலர்நடுவில்’ என்றோ ’இனிவரும்பெண்’ என்றோ
கருவிளங் காய்ச்சீர் களும்,

இதுபோல் விளங்காய்கள் ஓசை குறைப்பதில்லை
வெண்பாவில் கூடுமே காண்.


குறில்நெடில் மத்தியில் வந்த விளங்காய்ச்சீர்
சான்றுகள் இன்னும் சில.

’வட்டமாக வந்திடாதோ பாதமூலம் ரங்கராஜன்
கண்ணதாசன்’ கூவிளங்காய் கள்,

’வகைகளாக’ என்றோ ’பரந்திடாதோ’ என்றோ
கருவிளங் காய்ச்சீர்க ளாம்.

வெண்பாவில் வேண்டுமானால் இத்தகைய சொற்கள்
வகையுளி ஒன்றே வழி.


’வேண்டுமானால் இத்தகைய’ மேல்வந்த பாவில்
வகையுளி வேண்டு வன.

’வெண்பாவில் வேண்டுமா னாலித் தகுசொற்கள்’
என்ற வகையுளி வீண்.

’வெண்பாவில் வேணுமெனில் இத்தகு சொற்கள்’
இதுபோல் எழுதுதல் மேல்.


கீழ்வரும் பாக்களை வாய்விட்டுப் பாடியே
ஓசையின் வேற்றுமை காண்.

கற்பனையோ கற்சிலையோ என்துணையே ஆகிடாயோ
என்கனாவே கந்தனே நீ.

[கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் கூவிளம் நாள்.]

கற்பிதமோ கல்லுருவோ என்காவல் ஆவாயோ
என்கனவே கந்தனே நீ.

[கூவிளங்காய் கூவிளங்காய் தேமாங்காய் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளம் நாள்.]


’கற்பனையோ’ பாடலினும் ’கற்பிதமோ’ ஓசைமேல்
கூவிளங்காய் ஈர்க்குறில்கள் தொட்டு.

செப்பலோசை குன்றாமல் வெண்பா புனைந்திட
மாங்காய் இயற்சீர்கள் மேல்.

புளிமாங்காய் தேமாங்காய் என்பன மாங்காய்
இயற்சீர்கள் ஈரசை யில்.

மாமுன் நிரையும் விளம்முன்னே நேரசையும்
மாங்காய்முன் நேரும் உயர்வு.

விளங்காய்ச்சீர் வேண்டின் குறிலிணை மத்தியில்
வந்திடும் காய்களைத் தேர்.
 
4.7.4.15.8. வெண்பா நுணுக்கங்கள்: அடிகளின் இயற்சீர் நிரல்கள்
இயற்சீர்கள் ஈரசையில் வெண்பா அடிகளில்
எந்த நிரலில் வரும்?

தேமா புளிமா கருவிளம் கூவிளம்
ஈரசை வெண்டளை இங்கு.

புளிமா கருவிளம் கூவிளம் தேமா
இதுவுமே வெண்டளை தான்.

இதேநிரலில் வெண்பா இயற்சீர் தளைக்கும்
அடியில் அடிகள் இடை.

இயற்சீர் உறழ்வுகள் நான்கு வழிகளின் ... [உறழ்வு=சேர்க்கை, மாறுபாடு; combination]
சான்றுகள் கீழே உள.

நீயோ அவளோ இருவரும் வந்திட
நானும் வருவேன் முகேஷ்.


[தேமா புளிமா கருவிளம் கூவிளம்
தேமா புளிமா மலர்]

அவர்கள் இருவரும் வந்திட நானும்
வருவேன் தெரியுமா நோக்கு?


[புளிமா கருவிளம் கூவிளம் தேமா
புளிமா கருவிளம் காசு]

இருவரும் வந்திட நானும் வருவேன்
இருவரின் நண்பனே நான்.


[கருவிளம் கூவிளம் தேமா புளிமா
கருவிளம் கூவிளம் நாள்]

நீயெனில் வாயேன் எனக்கு எதுவுமே
யோசனை இல்லை மகேஷ்.


[கூவிளம் தேமா புளிமா கருவிளம்
கூவிளம் தேமா மலர்]
 
4.7.4.15.9. வெண்பா நுணுக்கங்கள்: அடிகளின் காய்ச்சீர் நிரல்கள்
காய்ச்சீர்கள் மூவசையில் வெண்பா அடிகளில்
எந்த நிரலில் வரும்?

புளிமாங்காய் மற்றும் கருவிளங்காய் மீதியிரு
காய்களிடை வந்திடாது காண்.


காய்முன் நிரைவரக் கூடாத தாலே
விளங்காய் இடையில் வராது.

தேமாங்காய் கூவிளங்காய் சங்கிலிபோல் வந்திடலாம்
வெண்பா முழுவது மே.

புளிமாங்காய் மற்றும் கருவிளங்காய் சேர்ந்தால்
முதற்சீரில் மட்டும் இவை.


காய்ச்சீர்கள் மட்டுமே வெண்பாவில் வந்த
நிரல்களில் கீழே சில.

புளிமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய்
கூவிளங்காய் தேமாங்காய் நாள்

முடியாதா? கேட்காது. வேண்டுமென்றே வாயாடும்.
இப்படியோர் பிள்ளையைக் காண்.


கருவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய்
கூவிளங்காய் தேமாங்காய் நாள்

வராதெனிலும் கேட்காது. வேண்டுமென்றே வாயாடும்.
இப்படியோர் பிள்ளையைக் காண்.


தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
தேமாங்காய் கூவிளங்காய் நேர்பு

கீரையில் காய்வருமே வாழையில் மாங்கனியே
எல்லாமே என்மனத்தில் பாரு.


கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய்
கூவிளங்காய் தேமாங்காய் நாள்

என்மனத்தில் எல்லாமே நான்நினைத்த வாறேயாம்
உன்மனத்தில் எல்லாமே நீ.


விளங்காய்ச்சீர் வேண்டின் குறிலிணை மத்தியில்
வந்திடும் காய்களைத் தேர்.
 
4.7.4.15.10. வெண்பா நுணுக்கங்கள்: இயற்சீர் ஒன்று காய்ச்சீர் மூன்று நிரல்கள்
இயற்சீரும் காய்ச்சீரும் வெண்பா அடிகளில்
எந்த நிரலில் வரும்?

புளிமா கருவிளச் சீர்கள் முதலசை
யாகும் நிரையால் இவை...

காய்ச்சீர்கள் பின்வரா, காய்ச்சீர் முடிவதால்
காயென்று நேரசையில் காண்.

கருவிளம் கூவிளச் சீர்கள் நிரையில்
முடிய இவைபின் வராது...

நிரையில் தொடங்கும் புளிமாங்காய் மற்றும்
கருவிளங்காய்
ச் சீர்களென்று காண்.

வெண்டளையில் வெண்பா முதலடிச் சீர்கள்
நிரல்சில கீழ்வரு மாறு.

தேமாபின் காய்ச்சீர்கள் மூன்று வரும்நிரல்
தேமா புளிமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
தேமா புளிமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய்
தேமா கருவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
தேமா கருவிளங்காய் கூவிளங்காய் தேமாங்காய்
என்று சுழற்சிகள் நான்கு.


புளிமா கருவிளம் கூவிளத் தின்நிரை
சீரிடை மற்றும் அடியிடைத் தட்டும்
தளையினால், மூன்றுவேறு காய்ச்சீர் இவைபின்
அமையாது மேலுள்ள வாறு.

புளிமா கருவிளம் கூவிளம் பின்மூன்று
காய்ச்சீர் சுழலில் வராது.


இவ்வாறு, வேறுபட்ட காய்ச்சீர்கள் மூன்றுவரும்
தேமாபின் மட்டும் சுழன்று.
 
4.7.4.15.11. இயற்சீர் ஒன்று காய்ச்சீர் மூன்று நிரல் சான்றுகள்
கீழ்வரும் செய்யுள் அடிகளின் வெவ்வேறு
ஓசைகள் உள்ளத்தில் சேர்.

அடிகளின் சீர்கள் சுழலில் படித்து
ஓசைகள் உள்ளத்தில் வாங்கு.

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
தேமாங்காய் தேமா புளிமாங்காய் கூவிளங்காய் ... [ஔவை: மூதுரை 1]

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நல்ல மனமுண்டாம் மாமலராள் வாக்குண்டாம்
மனமுண்டாம் மாமலராள் வாக்குண்டாம் நல்ல
மாமலராள் வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
என்று சுழலில் படித்திட ஓசை
வகைகளை வாங்கும் மனது.

தேமா முதற்சீராய் வந்த இலக்கியச்
சான்றுகள் கீழ்வரு மாறு.

தேமா புளிமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
ஓடும் சுழிசுத்த முண்டாகும், துன்னலரைச் ... [காளமேகம்]
சாய்ந்தான் எறிந்தான்பின் சாப்பிட்டான் -- ஆய்ந்துசொலும் ... [காளமேகம்]
வண்ணம் கரியென்றும் வாய்வேத நாரியென்றும் ... [காளமேகம்]
பொன்னின் மடப்பாவை போய்ப்புக்காள் -- மின்னிறத்துச் ... [புகழேந்தி: நளவெண்பா]
ஓசையின் ஒற்றுமை நோக்கு.

தேமா புளிமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய்
அம்மி துணையாக ஆறிழிந்த வாரொக்கும் ... [ஔவையார்: நல்வழி]
பாதித் துகிலோடு பாய்ந்திழியுங் கண்ணீரும் ... [புகழேந்தி: நளவெண்பா]
ஓசை இயைவது நோக்கு.

தேமா கருவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
பொன்னஞ் சடையறுகம் புல்லுக்கும் பூம்புனற்கும் ... [காளமேகம்]
மங்கை சுயம்வரநாள் ஏழென்று வார்முரசம் ... [புகழேந்தி: நளவெண்பா]
புள்ளின் மொழியினொடு பூவாளி தன்னுடைய ... [புகழேந்தி: நளவெண்பா]
மன்னன் மனத்தெழுந்த மையல்நோய் அத்தனையும் ... [புகழேந்தி: நளவெண்பா]
முன்னிரண்டு பின்னிரண்டு செய்யுள் அடிகள்
ஒலியினில் ஒன்றுதல் கேள்.


தேமா கருவிளங்காய் கூவிளங்காய் தேமாங்காய்
நண்ணு புகழ்நளனும் நன்குரைத்த -- பெண்ணங்கின் ... [புகழேந்தி: நளவெண்பா]
கையால் வயிறலைத்துக் காரிருள்வாய் -- வெய்யோனை ... [புகழேந்தி: நளவெண்பா]
நீல நிறமயிர்க்கால் நின்றெறிப்ப -- நூலென்னத் ... [புகழேந்தி: நளவெண்பா]
மூன்றன் ஒலியும் நிகர்.
 
தேமா இரண்டாம்சீர் வந்த இலக்கியச்
சான்றுகள் கீழ்வரு மாறு.

தேமாங்காய் தேமா புளிமாங்காய் கூவிளங்காய்
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் ... [ஔவையார்: மூதுரை]
காந்தாரம் பாடிக் களிவண்டு நின்றரற்றும் ... [காளமேகம்]
கொள்ளைபோ கின்ற துயிரென்னும் கோளரவின் ... [புகழேந்தி: நளவெண்பா]
மூன்றும் ஒலியில் நிகரென ஆயினும்
மூன்றில் வகையுளி காண்.


தேமாங்காய் தேமா கருவிளங்காய் கூவிளங்காய்
அன்னம்போய்க் கன்னி யருகணைய - நன்னுதலும் ... [புகழேந்தி: நளவெண்பா]
தன்னாடல் விட்டுத் தனியிடஞ்சேர்ந் தாங்கதனை ... [புகழேந்தி: நளவெண்பா]
செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில் ... [காளமேகம்]
மூன்றும் ஒலியில் நிகரென ஆயினும்
மூன்றில் வகையுளி காண்.


கருவிளங்காய் தேமா புளிமாங்காய் தேமாங்காய்
காளமேகம் பாட்டினில் கீழ்.

குரங்கனலில் வீழ்ந்து வெறிகொண்டு தேள்கொட்ட...
எத்தனைபார் சேட்டைக் கிடம். ... [காளமேகம்]

கருவிளங்காய் தேமா புளிமாங்காய் தேமாங்காய்
நாம்புனைந்த பாக்குறள் சான்று.

அடிப்படையில் எல்லாம் உனதென்றோ சோமேசா
ஏனிந்த சோதனைகள் சொல்.

விழியசைப்பில் பெண்ணே மனதைநீ சொல்வாயோ
உன்தந்தை உன்பின்னா லே.

தெருவிளக்கின் கீழே அரட்டையில் பங்கேற்க
என்னுடனே நீகூட வா.

கருவிளங்காய் தேமா புளிமாங்காய் கூவிளங்காய்
அடிப்படையில் எல்லாம் உனதென்றோ அச்சுதனே
விழியசைப்பில் பெண்ணே மனதைநீ சொல்லிடுவாய்
தெருவிளக்கின் கீழே அரட்டையில் பங்குகொள்ள
மேல்வந்த சான்றுகள் தொட்டு.

கூவிளங்காய் தேமா புளிமாங்காய் தேமாங்காய்
புக்கெடுத்து வீரப் புயத்தணையா -- மக்காள்நீர் ... [காளமேகம்]
சோர்துயிலின் நீத்தல் துணிவென்றோ - தேர்வேந்தற் ... [புகழேந்தி: நளவெண்பா]
பைந்தலைய நாக பணமென்று பூகத்தின் ... [புகழேந்தி: நளவெண்பா]
எல்லாமே ஓசை நிகர்.

கூவிளங்காய் தேமா கருவிளங்காய் தேமாங்காய்
கண்ணபுரங் கோயில் கதவடைத்துத் தாழ்போட்டார் ... [காளமேகம்]
பொன்னொழியப் போதும் புறம்பணைசூழ் நன்னாடு ... [புகழேந்தி: நளவெண்பா]
பேரரசு மெங்கள் பெருந்திருவுங் கைவிட்டுச் ... [புகழேந்தி: நளவெண்பா]
ஒற்றுகளில் ஒங்குமொலி கேள்.
 
சீர்மூன்றில் தேமாவின் சான்றுகள் கீழே
இலக்கியம் மற்றும் நமது.

தேமாங்காய் கூவிளங்காய் தேமா புளிமாங்காய்
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க ... [ஔவையார்: மூதுரை]
தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற ... [ஔவையார்: மூதுரை]
உள்ளங்கால் வெள்ளெலும்பு தோன்ற ஒருகோடி ... [காளமேகம்]
ஓசைகள் மூன்றும் நிகர்.

தேமாங்காய் கூவிளங்காய் தேமா கருவிளங்காய்
வான்தோய நீண்டுயர்ந்த மாடக் கொடிநுடங்கத் ... [புகழேந்தி: நளவெண்பா]
கால்தேய நான்நடந்தும் காசு பெயரவில்லை
கண்கூர்ந்து பார்த்திடவே விண்மீன் தெரிந்திடாதோ?
ஓசைகள் மூன்றும் நிகர்.

புளிமாங்காய் தேமாங்காய் தேமா கருவிளங்காய்
கடல்தானை முன்னாகக் கண்டான் -- அடற்கமைந்த ... [புகழேந்தி: நளவெண்பா]
உணவுண்ட பின்னாலே வந்தான் கதையடிக்க
கனவொன்று கண்டாலே நெஞ்சம் கலக்கமுறும்
ஓசைகள் மூன்றும் அதே.

புளிமாங்காய் கூவிளங்காய் தேமா கருவிளங்காய்
விழிமுன்னே நானிருக்க பின்னால் அவள்தகப்பன்
பழியெல்லாம் நான்பொறுத்தேன் உன்பேர் நிலைத்திடவே
தனியாகச் செல்வதெனில் அச்சம் அவர்களுக்கு
மூன்றில் சுருங்கும் ஒலி.

கருவிளங்காய் தேமாங்காய் தேமா புளிமாங்காய்
கதிரொளியில் தென்னையின் கீற்றில் அணிலொன்று
படித்துவிட்டுத் தாவென்றேன் தந்தான் உடனேயே
திரைமறைவில் கோவிந்தன் தீபம் இனிமேல்தான்
ஓசைகள் எல்லாம் அதே.

கருவிளங்காய் கூவிளங்காய் தேமா புளிமாங்காய்
அகம்குளிரும் நீலவானின் தோற்றம் விடிகாலை
பகல்முழுதும் நானலைந்தும் ஒன்றும் பயனில்லை
ஓசைகள் ஒன்றுதல் காண்.

கூவிளங்காய் தேமாங்காய் தேமா புளிமாங்காய்
வெந்தறுகண் வேழத்தை வேரிக் கமலத்தின் ... [புகழேந்தி: நளவெண்பா]
செந்நெறியாற் பார்காத்த செங்கோல் நிலவேந்தன் ... [புகழேந்தி: நளவெண்பா]
வல்லினம் மெல்லினம் மற்றும் இடையின
ஓசைகள் வேறுபாடு நோக்கு.


கூவிளங்காய் தேமாங்காய் தேமா கருவிளங்காய்
கொற்றவன்பாற் செல்வாரைக் கொல்வான் முரசறைந்து ... [புகழேந்தி: நளவெண்பா]
விண்ணரச ரெல்லாரும் வெள்கி மனஞ்சுளிக்கக் ... [புகழேந்தி: நளவெண்பா]
பட்டதெல்லாம் போதாதோ இன்னும் குடிப்பதேனோ?
ஆவலுடன் பார்க்காதே இன்று எதுவுமில்லை.
வல்லினம் மெல்லினம் மற்றும் இடையின
ஓசைகள் வேறுபாடு நோக்கு.


*****
 
சீர்நான்கில் தேமாவின் சான்றுகள் கீழே
இலக்கியம் மற்றும் நமது.

புளிமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய் தேமா
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் ... [ஔவையார்: நல்வழி]
அடைவென்றான் மற்றந்த அன்னமதை முன்னே ... [புகழேந்தி: நளவெண்பா]
கருவானம் கொட்டாதோ வானம்பார்த்த பூமி
கவிதையில் ஓசையில் ஒங்குமதன் அர்த்தம்
ஒலியோங்கும் சீர்மூன்றில் காண்.

புளிமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் தேமா
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர் ... [ஔவையார்: நல்வழி]
கடித்துத்தான் முத்துமிழுங் கங்கைநீர் நாடன் ... [புகழேந்தி: நளவெண்பா]
மழைத்தாரை வல்லிருட்கும் வாடைக்கும் நாங்கள் ... [புகழேந்தி: நளவெண்பா]
அமுதுண்டு புன்னகையில் அன்னையை நோக்கும்
குறிப்புவேறு சீர்மூன்றில் காண்.

கருவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் தேமா
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா ... [ஔவையார்: நல்வழி]
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும் ... [ஔவையார்: நல்வழி]
மறைமுதல்வ நீயிங்கே வந்தருளப் பெற்றேன் ... [புகழேந்தி: நளவெண்பா]
மதியிருந்த தாமென்ன வாய்ந்திருந்தாள் வண்டின் ... [காளமேகம்]
ஒலியில் அனைத்தும் அதே.

கருவிளங்காய் கூவிளங்காய் தேமாங்காய் தேமா
உடுத்ததுவும் மேய்த்ததுவும் உம்பர்கோன் தன்னால் ... [காளமேகம்]
தொடிபடைத்த தோடுடித்த தோகைகூத் தாடக் ... [காளமேகம்]
திசைமுகந்த வெண்கவிதைத் தேர்வேந்தே உன்றன் ... [புகழேந்தி: நளவெண்பா]
படித்ததுவும் வாழ்ந்ததுவும் தாய்மாமன் வீட்டில்
குறிப்புவேறு சீர்மூன்றில் காண்.

*****
 
4.7.4.15.12. வெண்பா நுணுக்கங்கள்: மாச்சீர் விளச்சீர் இணையுடன் காய்ச்சீர்கள்
வெண்பாவின் ஓசைகள் நம்பாவில் சீர்க்க
அளவடியில் காய்ச்சீர்கள் மட்டுமோ அன்றி
இயற்சீர் உடன்சேர்ந்தோ அன்றி இயர்சீர்கள்
மட்டுமோ வந்த நிரல்களின் சான்றுகள்
நோக்கிட வேண்டுமே நன்கு.

இயற்சீர்கள் மட்டுமே வந்த நிரல்களும் ... [பார்க்க 4.7.4.15.8.]
காய்ச்சீர்கள் மட்டுமே வந்த நிரல்களும்... [பார்க்க 4.7.4.15.9.]
காய்ச்சீர்கள் மூன்றுடன் ஓரியற்சீர் சேர்ந்தும் ... [பார்க்க: 4.7.4.15.10,11.]
விரிவாகப் பார்த்து முடித்தபின் மீதமுள்ள
காய்ச்சீர் இணையும் இயற்சீர் இணையும்
இணையும் நிரல்கள் இனி.


வெண்பாவின் வெண்டளை சீரிடை மற்றும்
அடியிடைத் தோன்றுவதால் நேரசை முன்வரும்
காய்ச்சீர் இயற்சீர் உறழ்வுகள் மட்டும்
சுழலில
் வருவது காண்.

*****

மாச்சீர் விளச்சீர் இணைமுதல் வந்துபின்
காய்ச்சீர்கள் வந்த நிரல்:


தேமா புளிமா கருவிளங்காய் தேமாங்காய்
தேமா புளிமா புளிமாங்காய் தேமாங்காய்
தேமா புளிமா கருவிளங்காய் கூவிளங்காய்
தேமா புளிமா புளிமாங்காய் கூவிளங்காய்
தேமா கருவிளம் தேமாங்காய் கூவிளங்காய்
தேமா கருவிளம் கூவிளங்காய் தேமாங்காய்
என்று சுழலில் வரும்.

இந்தச் சுழல்களின் சான்றுகள் இப்படி:
ஆர்வம் இருந்தால் நினைப்பதெல்லாம் கைகூடும்.
ஆர்வம் இருந்தால் கனவெல்லாம் கண்முன்னே.
ஆர்வம் இருந்தால் நினைப்பதெல்லாம் கூடிடுமே.
ஆர்வம் இருந்தால் கனவெல்லாம் கண்வழியே.
காலைக் கதிரவன் தோட்டத்தில் பொன்னிறமாய்.
காலைக் கதிரவன் பொன்னிறமாய்த் தோட்டத்தில்.
செய்யுள் ஒலிக்கும் மனது.

கூவிளம் தேமா கருவிளங்காய் தேமாங்காய்
கூவிளம் தேமா கருவிளங்காய் கூவிளங்காய்
கூவிளம் தேமா புளிமாங்காய் தேமாங்காய்
கூவிளம் தேமா புளிமாங்காய் கூவிளங்காய்
என்றும் சுழலில் வரும்.

துன்புறும் நெஞ்சம் இறையுணர்வில் சீராகும்.
துன்புறும் நெஞ்சம் இறையுணர்வில் சாந்திபெறும்.
துன்புறும் நெஞ்சம் இறைபக்தி சீராக்கும்.
துன்புறும் நெஞ்சம் இறைபக்தி சாந்திதரும்.
என்று எழுதலாம் சான்று.

*****
 
இந்த நிரல்கள் சுழலில் வராது:
புளிமா கருவிளம் தேமாங்காய் கூவிளங்காய்
புளிமா கருவிளம் கூவிளங்காய் தேமாங்காய்
சீரொன்றில் வந்தநிரை யால்.

கரங்கள் குலுக்கிடும் கல்நெஞ்சில் வஞ்சனைகள்
கரங்கள் குலுக்கிடும் ஈரமில்லா நெஞ்சங்கள்
எண்ணங்கள் சொல்லும் ஒலி.

இந்த நிரல்கள் சுழலில் வராது:
கருவிளம் தேமா புளிமாங்காய் தேமாங்காய்
கருவிளம் தேமா புளிமாங்காய் கூவிளங்காய்
கருவிளம் தேமா கருவிளங்காய் தேமாங்காய்
கருவிளம் தேமா கருவிளங்காய் கூவிளங்காய்
கருவிளம் கூவிளம் தேமாங்காய் கூவிளங்காய்
கருவிளம் கூவிளம் கூவிளங்காய் தேமாங்காய்
சீரொன்றில் வந்தநிரை யால்.

கரங்களின் ஓசை தொலைதூரம் கேட்காது.
கரங்களின் ஓசை தொலைதூரம் கேட்குமாசொல்?
கரங்களின் ஓசை செவிமடுக்க மாட்டானா?
கரங்களின் ஓசை அவன்செவியில் கேட்கவில்லை.
கரங்களைத் தட்டியும் உன்காதில் கேட்கவில்லை?
கரங்களைத் தட்டியும் கேட்கவில்லை உன்காதில்?
சொல்லும் வழிகள் பல.

*****

மாச்சீர் விளச்சீர் இரண்டு இறுதியில்
முன்னிரு காய்ச்சீர்கள் வந்த நிரல்கள்
அமைவது கீழுள்ள வாறு.

நிரையில் தொடங்கும் புளிமா கருவிளம்முன்
காய்ச்சீர்கள் வாராது
காண்.

நேரசை முன்வரும் தேமா புளிமாவோ
தேமா கருவிளமோ கூவிளம் தேமாவோ
ஈற்றில் இணையாய் வரலாம், இணைமுன்னே
காய்ச்சீர் இரண்டு வர.

தேமாங்காய் கூவிளங்காய் தேமா கருவிளம்
கூவிளங்காய் தேமாங்காய் தேமா கருவிளம்
இந்நிரல்கள் ஆகும் சுழல்.

கார்மேகம் ஆதவனைக் காலை மறைத்தது.
ஆதவனைக் கார்மேகம் காலை மறைத்தது.
மோனைகள் மாறிடும் காண்.

புளிமாங்காய் தேமாங்காய் தேமா புளிமா
புளிமாங்காய் கூவிளங்காய் தேமா புளிமா
புளிமாங்காய் தேமாங்காய் கூவிளம் தேமா
புளிமாங்காய் கூவிளங்காய் கூவிளம் தேமா
சுழல்நிரல்கள் ஆகும் இவை.

புரியாத ஆச்சர்யம் பெண்ணின் மனது!
புரியாத வீண்குழப்பம் பெண்ணின் மனது!
புரியாத ஆச்சர்யம் பெண்களின் உள்ளம்!
புரியாத வீண்குழப்பம் பெண்களின் உள்ளம்!
புரியாது பெண்ணின் மனது.

மேல்வந்த வெண்பாவில் ’ஆச்சர்யம்’ என்பதை
’விந்தையே’ என்று எழுதினால் தேமாங்காய்
ஆகாது;
ஏனென்றால் குற்றுகரம் வந்ததால்
அப்பதம் ’விந்தயே’ என்றாகும் என்று
தெரிந்திட வேண்டும் நமக்கு.

கருவிளங்காய் தேமாங்காய் தேமா புளிமா
கருவிளங்காய் கூவிளங்காய் தேமா புளிமா
கருவிளங்காய் தேமாங்காய் கூவிளம் தேமா
கருவிளங்காய் கூவிளங்காய் கூவிளம் தேமா
சுழல்நிரல்கள் ஆகும் இவை.

பரிவுடனே கேட்டாளே பாவை அவனை
பரிவுடனே கேட்டுவிட்டாள் பாவை அவனை
பரிவுடனே கேட்டுப்பின் பெண்ணவள் சொன்னாள்
பரிவுடனே கேட்டுவிட்ட பெண்ணவள் சொன்னாள்
பரிவு மகளிர் அணி.

*****

தேமாங்காய் கூவிளங்காய் தேமா புளிமா
கூவிளங்காய் தேமாங்காய் தேமா புளிமா
தேமாங்காய் கூவிளங்காய் கூவிளம் தேமா
கூவிளங்காய் தேமாங்காய் கூவிளம் தேமா
சுழல்நிரல்கள் ஆகா இவை.

தேடாதே இங்கிருக்கேன் என்றாள் உரக்க.
இங்கிருக்கேன் தேடாதே என்றாள் உரக்க.
தேடாதே இங்கிருக்கேன் கூவினாள் ஓங்கி.
இங்கிருக்கேன் தேடாதே கூவினாள் ஓங்கி.
பலவழிகள் செய்தி அதே.

*****
 
மாச்சீர் விளச்சீர் இரண்டு நடுவில்
இருபுறமும் காய்ச்சீர்கள்
வந்த நிரல்கள்
அமைவது கீழுள்ள வாறு.

இயற்சீர் இணையும் விதங்களைப் பார்த்திட
தேமா புளிமா, புளிமா கருவிளம்,
தேமா கருவிளம், கூவிளம் தேமா,
கருவிளம் தேமா, கருவிளம் கூவிளம்
என்று இணைவகை ஆறு.

இவற்றுள் புளிமா கருவிளம், மற்றும்
கருவிளம் தேமா, கருவிளம் கூவிளம்,
யாவும் அடிநடுவில் வாராத காரணம்
இந்த இணைகள் நிரையில் தொடங்குவதால்
காய்ச்சீர்பின் வாரா இவை.

இவைபோக எஞ்சிய தேமா புளிமாவும்,
தேமா கருவிளமும், கூவிளம் தேமாவும்,

ஆகிய மூன்று இணைகள் தனியே
இருபுறமும் காய்ச்சீர் உவந்து அடிநடுவில்
சேர்ந்து வருமென்று காண்.

இம்மூ விணைகள் இருபுறமும் காய்ச்சீர்
வருநிரல்கள் கீழுள்ள வாறு.

தேமாங்காய் தேமா புளிமா புளிமாங்காய்
தேமாங்காய் தேமா புளிமா கருவிளங்காய்
கூவிளங்காய் தேமா புளிமா புளிமாங்காய்
கூவிளங்காய் தேமா புளிமா கருவிளங்காய்
எல்லாம் சுழலில் வரும்.

பாடாதே என்றாள், கழுதை உடன்பாடும்!
பாடாதே என்றாள், கழுதை உடன்படுமே!
பாடிடாதே என்றாள், கழுதை உடன்பாடும்!
பாடிடாதே என்றாள், கழுதை உடன்படுமே!
நீயும் கழுதையும் ஒன்று.

தேமாங்காய் தேமா கருவிளம் கூவிளங்காய்
கூவிளங்காய் தேமா கருவிளம் தேமாங்காய்
எல்லாம் சுழலில் வரும்.

கண்ணாநீ என்னில் கலந்திடு என்னுயிராய்!
என்னுயிராய் என்னில் கலந்திடு கண்ணாநீ!
சொல்ல இரண்டு வழி.

தேமாங்காய் கூவிளம் தேமா புளிமாங்காய்
தேமாங்காய் கூவிளம் தேமா கருவிளங்காய்
கூவிளங்காய் கூவிளம் தேமா புளிமாங்காய்
கூவிளங்காய் கூவிளம் தேமா கருவிளங்காய்
எல்லாம் சுழலில் வரும்.

உள்ளத்தில் உள்ளது என்ன உரையப்பா!
உள்ளத்தில் உள்ளது என்ன உரைமகனே!
உன்னுளத்தில் உள்ளது என்ன உரையப்பா!
உன்னுளத்தில் உள்ளது என்ன உரைமகனே!
அப்பாவும் பிள்ளையும் ஒன்று.

புளிமாங்காய் தேமா புளிமா கருவிளங்காய்
கருவிளங்காய் தேமா புளிமா புளிமாங்காய்
இப்படி ஆமோ சுழல்?

பலவாறு செல்லும் மனமே பகையெனக்காண்.
பலவகையில் செல்லும் மனமே பகைவன்காண்.
உள்ளம் பகையென உள்ளு.

*****
 
Last edited:
மாச்சீர் விளச்சீர் முதலிலும் மூன்றிலும்
வந்துபின் காய்ச்சீர்கள் வந்த நிரல்கள்

அமைவது கீழுள்ள வாறு.

தேமா புளிமாங்காய் கூவிளம் தேமாங்காய்
தேமா புளிமாங்காய் கூவிளம் கூவிளங்காய்
தேமா கருவிளங்காய் கூவிளம் தேமாங்காய்
தேமா கருவிளங்காய் கூவிளம் கூவிளங்காய்
ஆகும் சுழலிவை? [ஆம்]

கண்ணன் திருநாமம் எண்ணுவோம் உள்ளத்தில்
கண்ணன் திருநாமம் எண்ணுவோம் உள்ளமதில்
கண்ணன் திருப்பெயரை எண்ணுவோம் உள்ளத்தில்
கண்ணன் திருப்பெயரை எண்ணுவோம் உள்ளமதில்
கண்ணன் கழலிணை எண்ணு.

கூவிளம் தேமாங்காய் தேமா புளிமாங்காய்.
கூவிளம் தேமாங்காய் தேமா கருவிளங்காய்.
கூவிளம் கூவிளங்காய் தேமா புளிமாங்காய்.
கூவிளம் கூவிளங்காய் தேமா கருவிளங்காய்.
ஆகும் சுழலிவை? [ஆம்]

கண்டது பொய்யில்லை கண்ணா உரைநீயே.
கண்டது பொய்யில்லை கண்ணா உரைத்திடுநீ.
கண்டது உண்மைதானா கண்ணா உரைநீயே.
கண்டது உண்மைதானா கண்ணா உரைத்திடுநீ.
கண்ணனிடம் விட்டு விடு.

’உண்மையா’ என்பதன் ஐகாரம் குன்றிட
’உண்மயா’ ஆவதால் ’பொய்யில்லை’ என்று
எழுதினோம் காய்ச்சீர் வர.

*****

புளிமா புளிமாங்காய் தேமா கருவிளங்காய்
புளிமா புளிமாங்காய் கூவிளம் தேமாங்காய்
புளிமா புளிமாங்காய் கூவிளம் கூவிளங்காய்
புளிமா கருவிளங்காய் தேமா புளிமாங்காய்
புளிமா கருவிளங்காய் கூவிளம் தேமாங்காய்
புளிமா கருவிளங்காய் கூவிளம் கூவிளங்காய்
ஆகா சுழலிவை. [ஏன்?]

உணர்ந்து தெளிந்தாயா கேட்டு அறிந்தனையா?
உணர்ந்து தெளிந்தாயா கேள்வியில் கண்டாயா?
உணர்ந்து தெளிந்தாயா கேள்வியில் தோன்றியதா?
உணர்ந்து தெளிந்தனையா கேட்டு அறிந்தாயா?
உணர்ந்து தெளிந்தனையா கேள்வியில் கண்டாயா?
உணர்ந்து தெளிந்தனையா கேள்வியில் தோன்றியதா?
கேட்டது கண்டு அறி.

கருவிளம் தேமாங்காய் தேமா புளிமாங்காய்
கருவிளம் தேமாங்காய் தேமா கருவிளங்காய்
கருவிளம் தேமாங்காய் கூவிளம் கூவிளங்காய்
கருவிளம் கூவிளங்காய் தேமா புளிமாங்காய்
கருவிளம் கூவிளங்காய் தேமா கருவிளங்காய்
கருவிளம் கூவிளங்காய் கூவிளம் தேமாங்காய்
ஆகா சுழலிவை. [ஏன்?]

தொடுவது பொன்னானால் கையே மனமாகும்.
தொடுவது பொன்னானால் கையே மனமெனலாம்.
தொடுவது பொன்னானால் கைகளே உள்ளமாகும்.
தொடுவது தங்கமானால் கையே மனமாகும்.
தொடுவது தங்கமானால் கையே மனமெனலாம்.
தொடுவது தங்கமானால் கைகளே உன்னுள்ளம்.
கையா மனமா தவறு?

*****
 
மாச்சீர் விளச்சீர் முதலிலும் நான்கிலும்
வந்திடையே காய்ச்சீர்கள்
வந்த நிரல்கள்
அமைவது கீழுள்ள வாறு.

தேமா புளிமாங்காய் தேமாங்காய் கூவிளம்
தேமா புளிமாங்காய் கூவிளங்காய் கூவிளம்
தேமா கருவிளங்காய் தேமாங்காய் கூவிளம்
தேமா கருவிளங்காய் கூவிளங்காய் கூவிளம்
ஆகும் சுழலிவை? [ஆம்]

வேறு வழியில்லை என்றேன்நீ கேளடா!
வேறு வழியில்லை சொன்னதைநீ கேளடா!
வேறு வழிகளில்லை என்றேன்நீ கேளடா!
வேறு வழிகளில்லை சொன்னதைநீ கேளடா!
சொன்னது கேட்பாய் அடா!


புளிமா புளிமாங்காய் தேமாங்காய் தேமா
புளிமா புளிமாங்காய் கூவிளங்காய் தேமா
புளிமா கருவிளங்காய் தேமாங்காய் தேமா
புளிமா கருவிளங்காய் கூவிளங்காய் தேமா
சுழலில் வருவன. [ஏன்?]

உணர்ந்து தெளிந்தாயா கண்டாயா கேட்டு?
உணர்ந்து தெளிந்தாயா தோன்றியதா கேட்டு?
உணர்ந்து தெளிந்தனையா கண்டாயா கேட்டு?
உணர்ந்து தெளிந்தனையா தோன்றியதா கேட்டு?
அறிவோம் தெரிந்தது கேட்டு.


கருவிளம் தேமாங்காய் கூவிளங்காய் தேமா
கருவிளம் கூவிளங்காய் தேமாங்காய் தேமா
தொடுவது பொன்னானால் உள்ளமாகும் கையே.
தொடுவது தங்கமானால் உள்ளத்தில் கையே.
சுழலில் வருவன. [ஏன்?]


*****

புளிமா புளிமாங்காய் தேமாங்காய் கூவிளம்
புளிமா புளிமாங்காய் கூவிளங்காய் கூவிளம்
புளிமா கருவிளங்காய் தேமாங்காய் கூவிளம்
புளிமா கருவிளங்காய் கூவிளங்காய் கூவிளம்
ஆகா சுழலிவை. [ஏன்?]

உணர்ந்து தெளிந்தாயா கண்டாயா கேள்வியில்?
உணர்ந்து தெளிந்தாயா தோன்றியதா கேள்வியில்?
உணர்ந்து தெளிந்தனையா கண்டாயா கேள்வியில்?
உணர்ந்து தெளிந்தனையா தோன்றியதா கேள்வியில்?
கண்டது கேட்டு அறி.


கூவிளம் தேமாங்காய் கூவிளங்காய் தேமா
கூவிளம் கூவிளங்காய் தேமாங்காய் தேமா
சுழலில் வராதிவை. [ஏன்?]

என்னவர் ஏமாளி உன்கணவர் சாது.
என்னவர் உன்கணவர், ஏமாளி சாது.
நிறைவேது நம்வாழ் விலே?


*****
 
மாச்சீர் விளச்சீர் இரண்டிலும் நான்கிலும்
வந்துவேறு காய்ச்சீர்கள்
வந்த நிரல்கள்
அமைவது கீழுள்ள வாறு.

காய்ச்சீர் நிரைமுன் வராது எனவே
புளிமா கருவிளம் இந்நிரலில் வாரா
அவற்றில் நிரைமுன் வர.

தேமாங்காய் தேமா புளிமாங்காய் கூவிளம்
தேமாங்காய் தேமா கருவிளங்காய் கூவிளம்
ஆகும் சுழலிவை? [ஆம்]

வாராதோ வேளை வெளிநாடு செல்லவே?
வாராதோ வேளை வெளியுலகம் செல்லவே?
நம்பிக்கை உண்டு எனக்கு.


புளிமாங்காய் கூவிளம் தேமாங்காய் தேமா
கருவிளங்காய் கூவிளம் தேமாங்காய் தேமா
புளிமாங்காய் கூவிளம் கூவிளங்காய் தேமா
கருவிளங்காய் கூவிளம் கூவிளங்காய் தேமா
சுழலில் வருவன. [ஏன்?]

கதிர்வீச்சைப் புள்ளினம் தாங்காமல் மாளும்.
கதிரியக்கம் புள்ளினம் தாங்காமல் மாளும்.
கதிர்வீச்சைப் புள்ளினம் தாங்கிடாமல் மாளும்.
கதிரியக்கம் புள்ளினம் தாங்கிடாமல் மாளும்.
பறவைக்கு உள்ளதோ காப்பு?


*****

தேமாங்காய் கூவிளம் கூவிளங்காய் தேமா
கூவிளங்காய் கூவிளம் தேமாங்காய் தேமா
சுழலில் வராதிவை. [ஏன்?]

காய்க்காது மாங்கனி மந்திரத்தில் பிள்ளாய்!
மந்திரத்தில் மாங்கனி காய்க்காது பிள்ளாய்!
முயற்சியில் கிட்டும் பலன்.


புளிமாங்காய் தேமா கருவிளங்காய் கூவிளம்
கருவிளங்காய் தேமா புளிமாங்காய் கூவிளம்
ஆகா சுழலிவை. [ஏன்?]

தெருவோரம் ஓர்நாய் செவிவிறைக்கப் பார்த்தது.
தெருமுனையில் ஓர்நாய் செவிதூக்கிப் பார்த்தது.
நாயின் ஒலிவாங்கி காது.


*****

இதுவரை பார்த்தது ஓர்கலி வெண்பாவில்:
வெண்பாவின் நுட்பங்கள் பார்த்தோம் விரிவாக.
ஓசை குறைக்கும் விளங்காய் தவிர்க்க; ... [4.7.4.15.7.]
அளவடியில் ஈரசைச் சீர்நிரல் வந்தது; ... [4.7.4.15.8.]
எல்லாமே காய்ச்சீர் நிரல்கள் அடுத்து; ... [4.7.4.15.9.]
இயற்சீர்பின் மூவகைக் காய்ச்சீர் தொடர்ச்சி; ... [4.7.4.15.10,11.]
இயற்சீர் இரண்டினில் மூன்றில் நான்கில் ... [4.7.4.15.11.]
இயற்சீர் இணைபின்னே காய்ச்சீர் தொடர்ச்சி; ... [4.7.4.15.12.]
இயற்சீர் இணைஈற்றில் காய்ச்சீர்கள் முன்னே;
இயற்சீர் நடுவிலே காய்ச்சீர் இருபுறம்;
ஒன்றிலும் மூன்றிலும், ஒன்றிலும் நான்கிலும்,
சீரிரண்டு நான்கில் இயற்சீர் வருவது
யாவும் நிரல்கள், சுழல்கள், சுழலின்மை,
சான்று உடன்வரப் பார்த்த இவற்றைப்
படித்துப் பயின்றிடல் நன்று.

வெண்பாவின் சொற்களில் ஓசை வசப்பட,
சொல்லவந்த செய்தியை சொற்கள் எதிரொலிக்க,
சொன்னவை யாவும் பயில, முயற்சிக்க,
வெண்பா இயலும் நமக்கு.

வெண்பா வசப்பட்டால் ஆசிரியம் வஞ்சி
கலிப்பா மருட்பா எளிதில் புனையவரும்
என்பது ஆன்றோர் துணிபு.


*****
 
4.7.4.15.13. குறள்வெண்பாவில் ஹைக்கூ
http://www.tamilbrahmins.com/litera...-2970-3007-2965-2995-3021-a-8.html#post161780

4.7.4.15.14. குறள்வெண்பா பயிற்சிகள்
பயிற்சி 1.
நாமும் முயல்வோம் குறள்வெண்பா இன்றைய
வாழ்வின் வழிகள் குறித்து.

மருத்துவச் சாலையில் பெற்ற குழந்தை
மருத்துவர் சொன்ன பொழுது.

அழகான பேர்வைக்க இன்டர்நெட் சேவை
குழந்தைக்குச் சின்ன பெயர்.

மாலையில் அம்மாப்பா பேணும் குழந்தையைக்
காலையில் தாதி வளர்ப்பு.

ஓய்ந்திட வாரம் குழந்தை உலாவரும்
சாய்ந்தபடி தள்ளுவண்டி யில்.

உடையில் கிழக்கு மனதினில் மேற்கு
தடையில்லா நம்பெண் மகள்.

உடையில் மனதில் விழைவது மேற்கு
கடைதேடும் நம்மாண் மகன்.


இன்றைய வாழ்வு இயல்வகை இஃதுபோல்
நன்றாய்க் குறள்பல தட்டு.

*****

பயிற்சி 2.
கீழ்வரும் பாக்கள் இலக்கணம் செப்பனிட்டு
சீராய்க் குறட்பா எழுது.


கொள்வது குறையாமல் கொடுப்பது கொஞ்சம்
இன்றைய வணிக வாழ்க்கை.

வலியோரை வாழ்த்திடும் எளியோரத் தாழ்த்திடும்
கலிகாலம் சூழ்ந்த இவ்வுலகு

பெற்றோரைப் பேணார் சுற்றத்தை நாடார்
கற்றும் உதவாத கரை.

பொருளையும் பணத்தையும் புகழையும் உவந்து
அருளுளையும் விலைபேசும் உலகு.
[உலகு என்பதற்கு நிலம் என்ற பொருளில் ஒரசைச்சொல் தேட இறுதிச்சீர் சரியாகும்.]

*****

பயிற்சி 3.
கீழ்வரும் சொற்களில் சீர்கள் அமைத்து
குறட்பா எழுத முயல்.

சொற்கள் அவையோ பிறவோ அமையலாம்
சீர்கள் தளைத்து வர.


உலகியல் பொருட்கள் சேர்க்கை வாழ்வு
வீழ்ச்சி உறுதல் பலவகையில்

கற்றார் காமுறுதல் அன்று
கற்றார் வீழ்ச்சி இன்று

காதல் காமம் ஒன்று வாழ்வு
பாதை தெரிதல் என்றைக்கு

****
 
Last edited:
பயிற்சி 2. விடை
குன்றாமல் கொள்வது கொஞ்சம் கொடுப்பது
இன்றைய வர்த்தக வாழ்வு.

வலியோரை வாழ்த்தி எளியோரத் தாழ்த்தும்
கலிசூழ்ந்த தீய உலகு

பெற்றோரைப் பேணிடார் சுற்றத்தை நாடிடார்
கற்றும் உதவாக் கரை.

பொருளும் பணமும் புகழும் உவந்து
அருளும் விலைபேசும் மா.

*****

பயிற்சி 3. விடை

உலகியல் வாழ்க்கை பொருட்களின் சேர்க்கை
பலவகையில் வீழ்ச்சி யுறும்.

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் அந்நாளில்;
கற்றாரை வீழ்த்துவர் இன்று.

காதலும் காமமும் ஒன்றாகும் வாழ்க்கையில்
பாதை தெரிவது என்று?

*****
 
4.7.4.16. நேரிசை இன்னிசை வெண்பாக்கள்
குறள்வெண்பா நீக்கி இதர வகைகள்
இரண்டு விதத்தில் இயற்றப் படுவது
நேரிசை இன்னிசை யென்று. ... [4.7.4.13]

சிந்தியல் வெண்பா இலக்கணம் பார்க்குமுன்
நேரிசை இன்னிசை என்பது என்னென்று
நோக்குவோம் ஆரம்பத் தில்.

நேரிசை இன்னிசை வெண்பா வகைகள்
பெரிதும் அளவியல் வெண்பாவை வைத்தே
இலக்கணம் பெற்று வரும்.

4.7.4.16.1. நேரிசை வெண்பா என்பது
வெண்பா இலக்கணம் பெற்று அடியிரண்டின்
ஈற்றில் தனிச்சொல் முதற்சீர் எதுகையில்
நேரிசை வெண்பா வரும்.


அடியிரண்டின் ஒன்றாம்சீர் நான்காம்சீர் மற்றும்
முதலடியின் ஒன்றாம்சீர், மூன்றும் ஒரேஎதுகை
நேரிசை வெண்பா மரபு.

அதாவது சீரொன்றும் சீரைந்தும் சீரெட்டும்
பெற்ற எதுகைகள் ஒன்றாய் அமைவது
நேரிசை வெண்பா மரபு.

அளவியல் நேரிசை வெண்பா வரலாம்
அடிதோறும் ஓர்விகற்பத் தாலோ இரண்டடிக்கு
ஓர்விகற்பத் தாலோ என.

4.7.4.16.2. இன்னிசை வெண்பா என்பது
நேரிசை வெண்பா இலக்கணம் இல்லாத
வெண்பாக்கள் யாவும் பொதுவில் பெயர்பெறும்
இன்னிசை வெண்பா என.


இன்னிசை வெண்பா எதுகைகள் ஒன்றிரண்டு
வந்தால் தனிச்சொல் வரலாம் இரண்டு
தவிர அடிகளில் வேறு.

இன்னிசை வெண்பா தனிச்சொல் அடியிரண்டில்
வந்தால் எதுகைகள் நேரிசைபோல் இன்றி
இரண்டுக்கும் மேலாய் வரும்.

இன்னிசை வெண்பா தனிச்சொல் அடிதோறும்
பெற்றோ தனிச்சொல் வராது‍ஒன்றோ மேலோ
எதுகைகள் பெற்று வரும்.

4.7.4.16.3. தனிச்சொல் என்பது
ஓரசையில் அல்ல தனிச்சொல் வருவது
ஈற்றடியின் ஈற்றுச்சீர் போலின்றி -- ஈரசையோ
மூவசையோ அச்சொல் பெறும்.


4.7.4.16.4. நேரிசை அளவியல் வெண்பா சான்றுகள்

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் -- தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
---ஔவையார், மூதுரை 12

உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப -- நரைமுடித்துச்
சொல்லால் முறை செய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்.
---முன்றுரையரையனார், பழமொழி நானூறு 6

4.7.4.16.5. இன்னிசை அளவியல் வெண்பா சான்றுகள்
நடலை இலராகி நன்றுணரார் ஆய
முடலை முழுமக்கள் மொய்கொள் அவையுள்
உடலா ஒருவற் குறுதி உரைத்தல்
கடலுளால் மாவடித் தற்று.
---முன்றுரையரையனார், பழமொழி நானூறு 25

கற்றார்முன் கல்வி உரைத்தல் மிகவினிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்னினிதே
எள்துணை யானும் இரவாது தானீதல்
எத்துணையும் ஆற்ற இனிது.
---பூதஞ்சேந்தனார், இனியவை நாற்பது 16
 
Last edited:
4.7.4.17. சிந்தியல் வெண்பா
யாப்பின் வழக்கினில் சிந்து எனும்சொல்
குறிப்பது எண்மூன்று. மூன்று அடிகள்
இயல்வது சிந்தியல்வெண் பா.

சிந்தடி முச்சீர் அமைந்த அடியாகும்.
சிந்தியல் வெண்பா அளவடியில் வந்தாலும்
சிந்தடியே வெண்பாவின் ஈறு.


4.7.4.17.1. சிந்தியல் வெண்பா இலக்கணம்
வெண்பா இலக்கணம் பெற்று முதலில்
இரண்டு அளவடி ஈற்றிலே சிந்தடியாய்
சிந்தியல் வெண்பா அமைந்து

அடிதோறும் ஓர்விகற்பம் அல்லது மொத்தம்
இருவிகற்பம் அல்லது மூன்றும் தனிவிகற்பம்
என்றுவரும் பல்வகை யில்.

நேரிசை இன்னிசை என்று இரண்டு
விதங்களில் சிந்தியல் வெண்பா இயலும்
அவற்றின் இலக்கணம் பெற்று.


4.7.4.17.2. நேரிசைச் சிந்தியல் வெண்பா
நேரிசைச் சிந்தியல் வெண்பாவில் ஒன்றும்
இரண்டும் விகற்பம் அமைந்து வருகிற
சான்றுகள் பார்ப்போம் இனி.

அறிந்தானை ஏத்தி, அறிவாங் கறிந்து
செறிந்தார்க்குச் செவ்வ னுரைப்பச் -- சிறந்தார்
சிறந்தமை ஆராய்ந்து கொண்டு.
---யா.கா.மே. 26

பாடிப் படித்துப் பயின்று பொருள்தெளிந்து
நாடி யுணர்ந்தொழுகும் நல்லவரைத் -- தேடியே
கூடி வணங்கு முலகு.
---கி.வா.ஜ., கவி பாடலாம், பக்.90

நற்கொற்ற வாயில் நறுங்குவளைத் தார்கொண்டு
சுற்றும்வண் டார்ப்பப் புடைத்தாளே -- பொற்றேரான்
பாலைநல் வாயில் மகள்.
---யா.கா.மே. 26

படைக்கலம் ஏந்தாமற் பாரித்துப் போரை
நடத்தியவன் காந்தியெனும் நல்லான் -- அடற்கெதிரே
ஆரேநின் றாற்றுகிற் பார்.
---கி.வா.ஜ., கவி பாடலாம், பக்.90

4.7.4.17.3. இன்னிசைச் சிந்தியல் வெண்பா
இன்னிசைச் சிந்தியல் வெண்பாவில் ஒன்றும்
இரண்டும் பலவும் விகற்பம் வருகிற
சான்றுகள் பார்ப்போம் இனி.

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலத்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்கண் உலகளித்த லான்.
---இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், புகார்க் காண்டம், மங்கல வாழ்த்துப் பாடல்

நறுநீல நெய்தலும் கொட்டியும் தீண்டிப்
பிறநாட்டுப் பெண்டிர் முடிநாறும் பாரி
பறநாட்டுப் பெண்ட்ட்ர் அடி.
--- யா.கா.மே. 26

கண்ணன் அடியே கருதி வணங்குபவர்
எண்ணமெலாம் எண்ணியவா றீடேறும் என்பதனைத்
திண்ணமாய் நெஞ்சே அறி.
---கி.வா.ஜ., கவி பாடலாம், பக்.90

சொல்லிற்குள் ளேபொருளில் தோய்ந்துணர்வி லேயூறி
நல்லசுவை கண்டுவகை நாட்டமுடை யோர்பாவின்
இன்பமெலாம் காண்பர் இனிது.
---கி.வா.ஜ., கவி பாடலாம், பக்.90

சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
கானக நாடன் சுனை.
---யா.கா.மே. 26

முல்லை முறுவலித்துக் காட்டின மெல்லவே
சேயிதழ்க் காந்தள் துடுப்பீன்ற போயினார்
திண்டேர் வரவுரைக்கும் கார்.
---யா.கா.மே. 26

தெய்வந் தெளிந்தோர் சிறிதும் பிறர்க்கின்னல்
சூழாது நன்மைசெய்யும் தூயோர் அறமொன்றே
ஆற்றுவோர் நல்லோர் அறி.
---கி.வா.ஜ., கவி பாடலாம், பக்.91
 
4.7.4.17.4. நேரிசை, இன்னிசைச் சிந்தியல் வெண்பாப் பயிற்சி
பயிற்சி 1.
நேரிசை வெண்பா இலக்கணம் மட்டும்
வருவது போதாது. வெண்பா தனிச்சொல்
சரியாய் அமைதல் சிறப்பு.

சரியாய் அமையும் தனிச்சொல் ஒலியை
நிறுத்தியதன் முன்வரும் செய்தியை வெட்டியோ
ஒட்டியோ சொல்லிடும் நன்கு.


கீழே இரண்டுமே நேரிசை வெண்பா.
தனிச்சொல்லின் ஓசை செயல்வகை நோக்கிச்
சிறப்பது யாதென்று சொல்.

உரைப்பீர் கணினிக்கு ஈடேதும் உண்டோ!
விரைவில் பணியெல்லாம் செய்யும் -- வரையில்லா
ஆற்றல் அளிக்கும் அணி. ... 1.

கணினிக்கு ஈடேதும் உண்டோ உரைப்பீர்
பணியெல்லாம் பாங்குறவே செய்யும் -- அணியில்
மணித்துளியில் வேலையாவ தால். ... 2.

பயிற்சி 2.
கீழ்வரும் வெண்பா இரண்டின் தனிச்சொல்
செயல்வகையில் ஒன்றுதல் கண்டு இரண்டின்
இசைவகை என்னென்று கூறு.

மாற்றும் உளதோ கணினிக்கு -- ஆற்றலின்
ஊற்றது வாகி அனைத்தையும் -- பாங்குடன்
போற்றிடத் தான்செய் தலால். ... 1.

மாற்றும் உளதோ கணினிக்கு -- ஆற்றலின்
ஊற்றது வாகி அனைத்தையும் -- ஏற்றமுடன்
போற்றிடத் தான்செய் தலால். ... 2.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top