• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கவிதையில் யாப்பு

Status
Not open for further replies.
4.7.4.17.4. நேரிசை, இன்னிசைச் சிந்தியல் வெண்பாப் பயிற்சி விடைகள்
பயிற்சி 1. விடை
முதல் வெண்பாவில் தனிச்சொல் ஓசையில் நிறுத்தம் வந்து, முன்வரும் செய்திக்கு மெருகூட்டுகிறது.

இரண்டாவது வெண்பாவில் தனிச்சொல் ஓசையில் நிறுத்தம் அவ்வளவாகச் சிறக்கவில்லை.
தவிர, ’அணியில்’ என்ற சொல்லின் ’ஒழுங்கில்’ என்ற பொருள் சட்டென்று தெரியவில்லை.

இக்காரணங்களால் முதல் வெண்பாவே சிறந்த நேரிசைச் சிந்தியல் வெண்பாவாகிறது.

பயிற்சி 2. விடை
முதல் வெண்பாவில் ’பாங்குடன்’ என்ற தனிச்சொல் நேரிசை எதுகை பெறாததால் இவ்வெண்பா ஒரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா.

இரண்டாவது வெண்பாவின் தனிச்சொல் நேரிசை எதுகை பெற்றுவர, அது ஒருவிகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா.

இன்னிசையோ நேரிசையோ, இரண்டு வகையிலும் தனிச்சொல் வேறு அடிகளிலும் வரலாம் என்பது காண்க. ஆயினும், அடியிரண்டில் வரும் தனிச்சொல்லே வெண்பாவின் இசை இலக்கணத்தை நிர்ணயிக்கும்.
 
பயிற்சி 3.
கீழ்வரும் வெண்பாக்கள் மூன்றின் இசையும்
விகற்பமும் என்னென்று கூறி அவற்றின்
எதிரிசை வெண்பா எழுது.

கணினியைப் போற்று கணினியைப் போற்று!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்து
மணித்துளியில் வேலையாவ தால். ... 1.

கணினி வகைகள் குடும்பம் முழுதும்!
கணினி மடிமேலே மேசைக் கணினி!
கணினி அனைவரின் நட்பு. ... 2.

குடும்பம் முழுதும் கணினி வகைகள்!
மடிமேல் கணிணியும் மேஜைக் கணினியும்
வீட்டில் அனைவரின் நட்பு. ... 3.

பயிற்சி 4.
கீழ்வரும் வெண்பா இரண்டின் தனிச்சொல்
எதுகைகள் நோக்கியவை நேரிசையா அல்லது
இன்னிசையா என்பது கூறு.

மனிதன் உலகை அழிப்பது திண்ணம்
இயற்கை அழிக்கும் அவன்கோள் -- மயன்போல்
செயற்கை உலகு இயற்று.

இயற்கை அழித்து உலகை மனிதன்
அழிப்பது திண்ணம் அவன்கோள் -- மயன்போல்
செயற்கை உலகு இயற்று.

பயிற்சி 5.
வருவன கீழே திரைப்பா வரிகள்.
வரிகளின் சொற்களை வைத்தொரு இன்னிசைச்
சிந்தியல் வெண்பா எழுது.

உன் சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை மயங்குதடி!
முத்துச் சரங்களைப்போல் மோஹனப் புன்னகை மின்னுதடி!
 
Last edited:
பயிற்சி 3. விடை
1. முதல் வெண்பா ஒருவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா. இதன் நேரிசை வடிவம் இப்படி அமையலாம்:

கணினியைப் போற்று கணினியைப் போற்று!
பணியெல்லாம் பாங்குறவே செய்யும் -- அணியாம்
மணித்துளியில் வேலையாவ தால். ... 1.

2. இரண்டாம் வெண்பா ஒருவிகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா: அடியிரண்டில் ’கணினி’ என்ற தனிச்சொல் வருவதால். [தனிச்சொல்லை முன்னால் ஒரு கோடிட்டு எழுதுவது வழக்கம் என்றாலும் அது கட்டாயமில்லை.] இதன் இன்னிசை வடிவம் இப்படி அமையலாம்:

கணினி வகைகள் குடும்பம் முழுதும்!
கணினி மடிமேலே மேசையிலே ஒன்று!
கணினி அனைவரின் நட்பு. ... 2.

3. மூன்றாவது வெண்பா பலவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா. (பல விகற்பத்தில் நேரிசை வராது என்பது அறிக.)
இதன் நேரிசை வடிவம் ஏற்கனவே மேலே இரண்டவது வெண்பாவாக வந்ததே.

பயிற்சி 4. விடை
முதல் வெண்பாவின் தனிச்சொல் எதுகையில் அவ்வடி முதற்சீருடன் மட்டும் ஒன்றுகிறது. இரண்டாவதில் முதலடி முதற்சீருடன் மட்டும் ஒன்றுகிறது. இந்த வெண்பாக்களை ’அவலோகம்’ மென்பொருளில் பரிசீலித்தால், முதல் வெண்பா ’இருவிகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா’ என்றும், இரண்டாவது ’பல விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா’ என்றும் குறிக்கிறது. இது சரியா தவறா என்று விளக்கித் தெரிந்தவர்களும் ஆர்வலர்களும் முனைந்து இங்குப் பதியலாம்.

இந்த வெண்பாக்கள் குறித்து பேராசிரியர் பசுபதி அவர்கள் தரும் தகவல்:

நேரிசை என்றால்.... மூன்று எதுகைகளும் (முதலடி+2-ஆம் அடி + தனிச்சொல்) ஒன்றாய் வருவதே என்பது என் கருத்து. மற்றவை எல்லாம் ’இன்னிசை’யைச் சாரும் என்பபும் என்கருத்து.

யாப்பருங்கல விருத்தியுரை போன்ற நூலில் வேறு தகவல்கள் கிடைக்கலாம்.

உங்கள் பாடல்களில் ‘உலகு +இயற்று = உலகியற்று’ என்று வருவதால் வெண்டளை பிறழும்.

பசுபதி அவர்கள் குறித்த தவறைச் சரிசெய்து வெண்பாக்களை இப்படி எழுதலாம்.

மனிதன் உலகை அழிப்பது திண்ணம்
இயற்கை அழிக்கும் அவன்கோள் -- மயன்போல்
செயற்கை உலகம் இயற்று.

இயற்கை அழித்து உலகை மனிதன்
அழிப்பது திண்ணம் அவன்கோள் -- மயன்போல்
செயற்கை உலகம் இயற்று.

பயிற்சி 5. விடை
சித்திரமுன் பேசுதடி சிந்தை மயங்குதடி!
முத்துச் சரங்களைப் போலுனது மோஹனப்
புன்னகை மின்னு தடி!
 
பயிற்சி 6.
கீழ்வரும் வெண்பாவேன் நேரிசை ஆகாது
என்றுரைத்து வெண்பாவை நேரிசை யாக்கப்
பதங்களை மாற்றி எழுது.

ஆனை குதிரையும் ஒட்டகம் ராணியும்
சேனை அணிவகுத்துக் காக்க -- மனைவியின்
ஆற்றலோ மன்னனின் மிக்கு. ... 1.

கீழ்வரும் வெண்பாவில் ஈற்றுச்சீர் இல்லை.
மரணம் எனும்பொருளில் ஈற்றில் பிறப்பில்
வரும்சொல்லை இட்டு நிரப்பு.

ஆனை குதிரையை வெட்டும் குதிரையோ
சேனையின் வீரனை வீரனோ யாரையும்
மன்னனுக்கு இல்லை ----------. ... 2.

பயிற்சி 7.
கீழுள்ள சொற்களைச் சொல்லுறுப்பு சேர்த்துப்
பயன்படுத்தி நேரிசை அல்லது இன்னிசைச்
சிந்தியல் வெண்பா எழுது.

நேர் வா நிறை அதேமனம்
சீர் அசைவு விகற்பம் அடி படு
வெண்பா மாறு வேண்டு ... 1.

அழுக்கு சுமைகள் கால்கள் நான்கு தாங்கு
பழு நட மௌனம் விழுப்பு
கழுதை கவிதை தா ... 2.
 
பயிற்சி 6. விடை
வெண்பா 1.
’மனைவியின்’ என்ற தனிச்சொல்லின் முதலெழுத்து குறிலாவதால் அதன் எதுகை ’ஆனை, சேனை’ என்று நெடில்முன்வந்த எதுகைகளுடன் ஒன்றாது. எனவே இது இருவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா. இதன் சரியான நேரிசை வடிவம் இப்படி வரலாம்:

ராணியடன் ஆனை குதிரை ஒட்டகம்
ஆணியுடன் சேனை காத்தாலும் -- ராணியின்
ஆற்றலோ ராஜாவின் மிக்கு.
[ஆணி = மேன்மை, ஆசை]

வெண்பா 2.
ஆனை குதிரையை வெட்டும் குதிரையோ
சேனையின் வீரனை வீரனோ யாரையும்
மன்னனுக்கு இல்லை மிருத்யு.

பயிற்சி 7. விடை

நேராக வந்தால் நிறையும் அதேமனம்
சீரில் அசைவில் விகற்பம் அடிபட்டு
வெண்பாவாய் மாறிட வேண்டு. ... 1.
[சீரில் = சீர் இல்லாத]

அழுக்குச் சுமைகளைத் தாங்கிநான்கு கால்கள்
பழுக்க நடந்து மவுன விழுப்பில்
கழுதை கவிதை தரும். ... 2.
[விழுப்பு = விழுப்பம் = மேன்மை]
 
Last edited:
பயிற்சி 8.
கீழ்வரும் சொற்கள் வருமாறு உள்ளத்தைக்
கற்பனையில் ஓட்டி உவகையில் நேரிசைச்
சிந்தியல் வெண்பா எழுது.

ஆக்கம் தூக்கம் ஊக்கம் சீக்கிரம் இது விழை மனது தா விடு ... 1.

உதை பணி மென்சுமை சிதைக்காது தோய் திரை கதை கணினி கழுதை ... 2.

பயிற்சி 9.
கீழ்வரும் வெண்பாவில் அச்சுப் பிழைகள்.
தளைகளை நோக்கித் தவறுகள் நீக்கித்
திருத்திய வெண்பா எழுது.

மாமழை போற்றும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலியுல கிற்கவ னளிபோல்
மேநின்றுதாஞ் சுரத்த லான். ... 1.

இருகையால் தண்ணீர் பருகா ரொருகையாற்
கொள்ளார் கொடா*அர் குரவர்க் கிருகை
சொறியா ருடம்புமடுத் து. ... 2.

கலியாணந் தேவர்பிதிர் விழாவேள் வியென்
றைவகை நாளுமி கழாதறஞ் செய்க
பெய்கவிருந் திற்குங் கூழ். ... 3.

பயிற்சி 10. பழமொழி நியாயம்!
பழமொழிகள் சேர்த்து எழுதிய பாக்களில்
தட்டும் தளைகள் பதங்கள் சரிசெய்து
கிட்டும் நியாயங்கள் காண்!

வரவர மாமியார் கழுதை ஆனாள்
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது
ஆகையால் மாமியார் எறும்பு?

அடிமேல் அடிவைக்க நகரும் அம்மி
ஆடிக் காற்றில் பறப்பதால் ஆகுமோ
அம்மி அரைப்பவள் மிடுக்கு?

காக்கை தன்குஞ்சு பொன்குஞ்சு ஆயினும்
காக்கைக்கு அஞ்சு குணம் சொல்வதால்
குஞ்சுக்கும் குணம் அஞ்சு.

*****
 
பயிற்சி 8. விடை

ஊக்கம் தருகிற ஏக்கம் இதுவென்றால்
தூக்கம் விடுத்துச் செயல்படலாம் -- சீக்கிரமே
ஆக்கம் விழையும் மனது. ... 1.

உதைத்தால் பணிதொடங்கும் மென்சுமைகள் தாங்கும்
சிதைக்காது தோய்த்துத் திரையில் -- கதைக்கும்
கணினி கழுதையா சொல்? ... 2.
[உதைத்தால் = boot செய்தால்]

பயிற்சி 9. விடை

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி யுலகிற் கவனளிபோல்
மேநின்று தாஞ்சுரத்த லான். ... 1.

இருகையால் தண்ணீர் பருகா ரொருகையாற்
கொள்ளார் கொடா*அர் குரவர்க் கிருகை
சொறியா ருடம்பு மடுத்து. ... 2.

கலியாணந் தேவர் பிதிர்விழா வேள்வியென்
றைவகை நாளும் இகழா தறஞ்செய்க
பெய்க விருந்திற்குங் கூழ். ... 3.

பயிற்சி 10. விடை

வரவர மாமியார் ஆனாள் கழுதை
கழுதையும் தேய்ந்தது கட்டெறும்பு ஆனது
ஆகையால் மாமி எறும்பு?

அடிமேல் அடிக்க நகர்கிற அம்மியும்
ஆடிமாதக் காற்றில் பறப்பதால் ஆவாளோ
அம்மி அரைப்பாள் மிடுக்கு?

காக்கைக்குத் தன்குஞ்சு பொன்குஞ்சு ஆயினும்
காக்கைக்கு அஞ்சு குணமென்று சொல்வதால்
குஞ்சுக்கு மாம்குணம் அஞ்சு.
 
4.7.4.18. நேரிசை அளவியல் வெண்பா

அளவடி ஆள்வதால் நேரிசை வெண்பா
அளவியல் நேரிசை வெண்பா எனவரும்
மற்றோர் பெயருடன் வெண்பா இலக்கணம்
முற்றும் இயல வரும்.

நேரிசை வெண்பா அளவடி நான்கிலே
சீரெட்டில் சொல்தனி வந்திடப் -- பூரணமாய்
சொற்பொருள் ஓசையில் அந்தத் தனிச்சொல்லும்
நிற்கச் சிறந்து வரும்.


ஒன்றே எதுகை அடிதோறும் சீரொன்றில்
நின்று தனிச்சொல் எதுகையும் -- ஒன்றும்பா
ஓர்விகற்ப நேரிசை வெண்பா எனும்பேர்
பெறுமே எதுகை பொறுத்து.

முதலில் இரண்டு அடிகள் தனிச்சொல்
எதுகை அதேபெற்று வேறோர் எதுகை
இரண்டு அடுத்த அடியில் வரும்பா
இருவிகற்ப நேரிசை யாம்.

இவைதவிர நேரிசை வெண்பாவில் மேலும்
இருவகை உண்டு, இருகுறள், ஆசிடை
என்று பெயர்பெறும் இவ்வகைகள் பின்னோர்
இயலில் விளக்கப் படும்.

*****

4.7.4.18.1. ஒருவிகற்ப நேரிசை அளவியல் வெண்பாச் சான்றுகள்

நல்வழி:
கல்லானே யானாலுங் கைப்பொருளொன் றுண்டாயின்
எல்லாருஞ் சென்றங் கெதிர்கொள்வார் -- இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற் றீன்டெடுத்த தாய்வேண்டாள்
செல்லா தவன்வாயிற் சொல்.
---ஔவையார், நல்வழி 34


தேமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய்
தேமாங்காய் தேமா புளிமாங்காய் தேமாங்காய்
தேமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய்
தேமா புளிமாங்காய் நாள்.

பாடலைச் சந்திகள் நீக்கிப் பொருளினைத்
தேட எளிதாக்கி இப்படிப் -- போட
கலித்தளை வந்துபூச் சீர்கள் அமைந்து
ஒலியில் கெடுவது காண்.

கல்லானே ஆனாலும் கைப்பொருளொன்று உண்டாயின்
எல்லாரும் சென்றங்கு எதிர்கொள்வார் -- இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற்று ஈன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல்.

[கைப்பொருளொன்று=கூவிளந்தண்பூ; வேண்டாள்மற்று=தேமாந்தண்பூ; இதனால், சொல்=மா;
சென்றங்கு | எதிர்கொள்வார் = கலித்தளை; செல்லாது | அவன்வாயிற் = கலித்தளை]

செய்யுள் அலகிடும் போது பதங்களின்
சந்திகள் சேர்த்தபின் வேண்டும் அலகிட.
செய்யுளின் ஓசை கெடாமல் பிரிக்கலாம்
சந்தி பொருள்தெளி வுக்கு.

ஔவையின் நேரிசை வெண்பாச் சிறப்புகள்
நோக்க, தனிச்சொல், அடியெதுகை ஒற்றினம்
சீரொன்று மூன்றுவரும் மோனையுடன் காய்ச்சீர்
விரித்த பொருளிவை காண்.

காலம் கடந்துநிற்கும் ஔவையின் நல்வழிச்சொல்
ஞாலம் முழுதுறையும் மானிடர் உள்ளத்தைத்
தெள்ளிதின் காட்டுமனக் கண்ணாடி போலிருத்தல்
உள்ளி உணர வியப்பு.


ஔவையின் மற்றொரு நேரிசைப் பாவிதில்
வௌவிடும் சொற்கள் ஒலி.

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் -- தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
---ஔவையார், மூதுரை 12


*****
 
திருத்தாண்டகம்
பின்வரும் வெண்பாவில் சொற்கள் வகையுளி
இன்றி வருவதும் காய்ச்சீரும் கூவிளமும்
நன்கு பயின்று இயைபாகப் பாம்பெனும்சொல்
பின்னி வருவதும் நோக்கு.

இன்னுமந்த பாம்பெனும்சொல் ஈற்றடியில் நேர்பு-காசு
என்கிற வாய்பாடில் வேறடியில் தேமாச்சீர்
என்றும் பயின்று பொருளுடன் சொல்லினைப்
பின்னி வருவதும் நோக்கு.

திருமுடியில் கண்ணியும் மாலையும் பாம்பு
திருமார்பில் ஆரமும் பாம்பு -- பெருமான்
திருவரையில் கட்டிய கச்சையும் பாம்பு
பொருபுயத்தில் கங்கணமும் பாம்பு.
---திருத்தாண்டகம்


*****

ஐந்திணை எழுபது
என்னைகொல் தோழி அவர்கண்ணும் நன்கில்லை
அன்னை முகனும் அதுவாகும் - பொன்னலர்
புன்னையம் பூங்கானல் சேர்ப்பனைத் தக்கதோ
நின்னல்ல தில்லென் றுரை.

பாட்டில் பயிலும் இடையின மெல்லினச்
சொற்கள் விரிக்கும் தலைவியின் சோகம்
தலவனின் மௌனம் இயற்கை எழிலிவற்றில்
பாடல் சிறப்புகள் காண்.

என்னைகொ றோழி அவர்கண்ணு நன்கில்லை
யன்னை முகனு மதுவாகும் - பொன்னலர்
புன்னையும் பூங்கானற் சேர்ப்பனைத் தக்கதோ
நின்னல்ல தில்லென் றுரை.
---மூவாதியார், ஐந்திணை எழுபது, 58


சந்தி பிரிக்குமுன் வெண்பா வருவது
மேலுள்ள வாறுகாண். பாடற் பொருளினை
இற்றை வழக்கில் எழுதலாம் இப்படி
ஓரெளிய வெண்பா விலே.

காரணமென் தோழியவர் தாமதித்தல் தப்பு.
செவிலியும் இக்கட்டு. பொன்மலர்ப் புன்னைசூழ்
கானல் தலவனிடம் சொல்லிது நன்றோ?
அவரின்றி வேறார் எனக்கு.

*****

கி.வா.ஜ
முந்தையோர் பாடிவைத்த முத்தமிழ்நூல் தம்மையெல்லாம்
அந்துமுதற் பூச்சி அழிக்காமல் -- வந்தெடுத்துத்
தந்தபெரு வள்ளல் தமிழ்ச்சாமி நாதகுரு
செந்தமிழ்த்தாய் பெற்றமணிச் சேய்.
---கி.வா.ஜ., ’கவி பாடலாம்’


குருவுக்குப் பாமாலை சூட்டும் கி.வா.ஜ.
உருநீண்ட காய்ச்சீர் விரிக்கும் பொருளும்
குருவின் பெயரில் வகையுளியும் ஈற்றில்
தருகிற முத்தாய்ப்பும் நோக்கு.

*****
 
4.7.4.18.2. இருவிகற்ப நேரிசை அளவியல் வெண்பாச் சான்றுகள்
இருவிகற்பம் பெற்றுவரும் நேரிசைவெண் பாவே
பெரும்பாலும் யாத்தனர் அன்று -- பொருளைப்
பதங்களில் நன்கு விளக்க இதுவே
இதமென்று கண்டனர் முன்பு.

மூதுரை, ஔவையார்:
நல்லா ரொருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மே லெழுத்துப்போற் காணுமே -- அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர்மே லெழுத்திற்கு நேர். ... 8


வருக்க எதுகை அடியிரண்டு ஈற்றில்
வருவதால் இஃது எதுகை குறையப்
பலவிகற்ப இன்னிசை வெண்பாபோல் தோன்றும்
இருவிகற்ப நேரிசை யே.

இற்றை வழக்கினில் ஔவையார் சொன்னதை
இப்படிச் சொல்லலா மோ?

நல்லார்க்குச் செய்த உதவி அவர்மனதில்
கல்மேல் எழுத்துப்போல் காணுவர் -- அல்லாது
ஈரமில் நெஞ்சினர்க்கு ஈந்தால் மறந்திடுவார்
நீர்மேல் எழுதியது போல்.

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொற் கேட்பதுவும் நன்றே*எ -- நல்லார்
குணங்க ளுரைப்பதுவும் நன்றே அவரோ
டிணங்கி யிருப்பதுவும் நன்று.
---ஔவையார், மூதுரை 8


மாசில் இலக்கணம் பெற்றுவரும் வெண்பாவின்
வாசகத்தில் ஔவை அறிவுரை சொன்னபடி
தேடியே நல்லோர்கள் நாடி அவர்களைக்
கூடி இருப்போமே இன்று.

*****

இடர்தீர்த்த லெள்ளாமை கீழினஞ்சே ராமை
படர்தீர்த்தல் யார்க்கும் பழிப்பின் -- நடைதீர்த்தல்
கண்டவர் காமுறுஞ்சொற் காணிற் கலவியின்கண்
விண்டவர்நூல் வேண்டா விடும்.
---கணிமேதையார், ஏலாதி 4


துயர்தீர்ப்போன் கேலிசெய்யான் கீழோரைச் சேரான்
வயிற்றுப் பசிகளைவோன் தீமை -- பயிலான்
பிறரிடம் பேச்சினியான் கண்டால் துறந்தார்
அறநூல்கள் தேவையில்லை யாம்.

*****
 
4.7.4.18.3. இருகுறள் நேரிசை அளவியல் வெண்பாச் சான்றுகள்

நேரிசை வெண்பாவை வேறோர் முறையில்
இரண்டு வகையில் பிரிப்பது உண்டு.
இருகுறள் நேரிசை, ஆசிடை நேரிசை
என்றவை சொல்லப் படும்.

நேரிசை வெண்பா அமைப்பினை நோக்கின்
குறட்பா விரண்டு அடுக்கி அவற்றைத்
தனிச்சொல் இணைப்பது போலிருக்கும், சீரேழு
ஈற்றசைபோல் வந்தால் அமைந்து.

கீழ்வரும் வெண்பாத் தனிச்சொல் குறட்பா
இரண்டை இணைப்பது காண்.

இழுக்குடைய பாட்டிற் கிசைநன்று சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று -- வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சா
தாரத்தின் நன்று தனி. ... [நன்று, தனி]
---ஔவையார், நல்வழி 31


இருகுறள் நேரிசை வெண்பாவில் ஒன்றோ
இரண்டோ விகற்பம் வரும்.

சீரேழு ஈற்றசைபோல் இல்லையெனில் இப்படி
வாராது என்பதும் காண்.

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் -- தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. [பொசியுமாம், மழை]
---ஔவையார், மூதுரை 12


குறட்பா விரண்டு அடுக்கி தனிச்சொல்லால்
சேர்த்தால் இறுதிச்சீர் போலவே சீரேழு
ஈற்றடி வாய்பாடில் வந்து இருகுறள்
நேரிசை வெண்பா வரும்.

நகைகொள் முகமுடைய நல்லோனாம் காந்தி
பகைவனையும் அன்பிற் பரிந்து -- மிகநலஞ்செய்
பாங்கதனைக் காட்டியிந்தப் பாருலக முள்ளளவும்
ஓங்கிநின்றான் நல்லோர் உளத்து.
---கி.வா.ஜ., ’கவி பாடலாம்’


*****
 
4.7.4.18.4. ஆசிடை நேரிசை அளவியல் வெண்பாச் சான்றுகள்

உலோகங்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்
பயன்படும் வஸ்துவுக்கு ஆசு எனப்பெயர்.
சீரேழின் வாய்பாடில் ஓரசையோ ஈரசையோ
ஆசிடுதல் ஆசிடைவெண் பா.

கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்
பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் -- மணங்கொண்டீண்
டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே
டொண்டொண்டொண் டென்னும் பறை.
---நாலடியார் 25


மேல்வரும் வெண்பா அடியிரண்டின் சீர்மூன்றில்
’கண்டும்’ எனும்பதம் ’காசு’ எனப்பட்ட
வாய்பா டுதருகிற ’கண்டு’ எனும்சொல்லில்
’உம்’என்று சேர்ந்தது ஆசு.

வெண்பாவின் ஈற்றுச்சொல் ஓரசையால் ஆசிட்டு
வந்ததால் இவ்வெண்பா ஓரா சிடையிட்ட
நேரிசை வெண்பா எனப்படும். ஈரா
சிடையிட்டும் இஃது வரும்.

கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல்
எல்லாருங் காணப் பொறுத்துய்ப்பர் - ஒல்லை
இடுநீற்றால் பை*அவிந்த நாகம்போல் தத்தம்
குடிமையான் வாதிக்கப் பட்டு.
---நாலடியார் 66


மேலுள்ள வெண்பாவின் சீரேழில் உள்ள
’பொறுத்துய்ப்பர்’ என்பதில் ’உய்ப்பர்’ எனவரும்
ஈரசை ஆசிடையால் இவ்வெண்பா ஈரா
சிடையிட்ட நேரிசை காண்.

*****
 
4.7.4.18.5. ஒருவிகற்ப இன்னிசை அளவியல் வெண்பாச் சான்றுகள்

வருகிற வெண்பா இயைபுகள் நோக்கு.
அறம்பொருள் இன்பத்தில் வாழ்பவன் சீலன்
அறிந்தவன் ஞானி அமல்செய்வான் மன்னன்
இறைகளன் என்று பொருள்.

முப்பொருள் உண்மை தெளிவா னருஞ்சீலன்
முப்பொருள் உண்மை யுடையா னருமுனிவன்
முப்பொருள் உண்மை மடுப்பா னிறையாங்கு
முப்பொருள் உண்மைக் கிறை.
---பொய்கையார், இன்னிலை 16


அறங்கூறும் சேந்தனார் இன்னிசை வெண்பா:
பிறர்பொருள் நாடாது பாவங்கள் நீக்கி
அறம்வழி நின்றுதீயோர் சேர்க்கை தவிர்க்கும்
திறன்தெரிந்து வாழ்தல் இனிது.

பிறன்கைப் பொருள்வௌவான் வாழ்தல் இனிதே
அறம்புரிந் தல்லவை நீக்கல் இனிதே
மறந்தேயும் மாணா மயரிகள் சேராத்
திறந்தெரிந்து வாழ்தல் இனிது.
---பூதஞ்சேந்தனார், இனியவை நாற்பது 21


கற்றவர் மேன்மை உரைக்கும் பழமொழி:
ஆற்றவும் என்றால் மிகுதியாக; கட்டமுது
ஆற்றுணா என்றது; சென்றவிடம் போற்றிடக்
கற்றோர்க்குக் கிட்டும் இவை.

ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்.

---முன்றுரையரையனார், பழமொழி நானூறு 4

*****
 
4.7.4.18.6. இருவிகற்ப இன்னிசை அளவியல் வெண்பாச் சான்றுகள்

அருளினை நெஞ்சத் தடைகொடா தானும்
பொருளினைத் துவ்வான் புதைத்துவைப் பானும்
இறந்தின்னா சொல்லகிற் பானுமிம் மூவர்
பிறந்தும் பிறந்திலா தார்.
---நல்லாதனார், திரிகடுகம் 89


அகத்தில் இரக்கமின்றி வாழ்பவன், செல்வம்
நுகராமல் சேர்ப்பவன், மற்றோர் மனம்நோகப்
பேசுபவன், மூவர் பிறந்தது வீணென்று
ஏசுகிறார் நல்லா தனார்.

இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்றாது,
பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி,
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையான்
மருவுமின் மாண்டார் அறம்.
---நாலடியார் 36


என்றோ வருவான் எமனென்று எண்ணாமல்
பின்னாலே நிற்பதாக எண்ணிச் சடுதியில்
அல்லவை நீக்கிவிட்டு நல்லவை ஆற்றென்று
சொல்வது நாலடியார் பாட்டு.

*****
 
4.7.4.18.7. பலவிகற்ப இன்னிசை அளவியல் வெண்பாச் சான்றுகள்
கற்றார்முன் கல்வி உரைத்தல் மிகவினிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்னினிதே
எள்துணை யானும் இரவாது தானீதல்
எத்துணையும் ஆற்ற இனிது.
---பூதஞ்சேந்தனார், இனியவை நாற்பது 16


வெண்பாவின் ’மாணமிக’ ஒப்புகள் நோக்கிப்
பொருளறியக் கீழ்வரும் பா.

கற்றார்நம் கல்வியைச் சோதித்தல் நல்லது.
கற்றாரைச் சேர்தல் அதனினும் நல்லது.
எள்ளளவும் கேட்காது தான்கொடுத்தல் நன்றிவற்றை
எவ்வளவும் செய்வது நன்று.

கடற்குட்டம் போழ்வர் கலவர் படைக்குட்டம்
பாய்மா உடையான் உடைக்கிற்குந் - தோமில்
தவக்குட்டந் தன்னுடையான் நீந்தும் அவைக்குட்டம்
கற்றான் கடந்து விடும்.
--விளம்பி நாகனார், நான்மணிக்கடிகை 11


குட்டம் எனும்பதம் ஆழமும் போழ்வர்
பிளப்பதும் பாய்மா விரைகுதிரை தோமில்
குறையற்ற தன்னுடையான் உள்ளம் அடக்கியோன்
என்றும் பொருள்பெறும் காண்.

மாலுமி ஆழ்கடல் வீரன் படைக்கடல்
தன்மனம் கட்டத் தவக்கடல் கற்றான்
அவைக்கடல் என்று எளிதில் கடப்பார்கள்
என்பது பாடல் பொருள்.

*****
 
4.7.4.18.8. தனிச்சொல் பெற்ற இன்னிசை அளவியல் வெண்பாச் சான்றுகள்
கீழ்வரும் வெண்பா தனிச்சொல் முதலடியில்
பெற்று வருவது நோக்கு.

குன்றம் கவினும் குறிஞ்சியிலே -- நின்றபிரான்
வென்றி வடிவேற்கை வீரன் மயிலேறும்
அண்ணல் முருகன் அவனடியே தஞ்சமென
நண்ணுவார்க் கெய்தும் நலம்.
---கி.வா.ஜ., கவி பாடலாம், பக்.88


கீழ்வரும் வெண்பா தனிச்சொல் அடியிரண்டில்
பெற்று வருவது நோக்கு.

அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்குந்
திங்களுஞ் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள்
மறுவாற்றும், சான்றோரஃ தாற்றார் தெருமந்து
தேய்வர் ஒருமா சுறின்.
---நாலடியார் 151


அலகிலா வானத்தில் தண்ணொளி வீசும்
நிலவும் பெரியோரும் ஒன்று -- நிலவு
களங்கம் பொறுக்கும் பெரியோர் மனம்கலங்கித்
தேய்வர் வரப்பெற்றால் மாசு.

தனிச்சொல் அடியிரண்டில் மூன்று விகற்பம்
வரும்வெண்பா கீழே உளது.

காவிரிசூழ் மோகைநகர்க் காந்தமலை மேயபிரான்
பூவிரிதாழ் போற்றுகின்ற புண்ணியர்க்கு -- நாவிரியும்
பல்புகழும் நீளும் பரந்த பொருளடையும்
ஏற்றமன்றித் துன்பம் இலை.
---கி.வா.ஜ., கவி பாடலாம், பக்.89


தனிச்சொல் அடிமூன்றில் வந்து விகற்பம்
இரண்டுவரும் வெண்பா இது.

கொல்லிமலை வேளுக் குறிச்சியிலே கோழியினை
மெல்லத் துடையிடுக்கி வேட்டுவக்கோ லங்கொண்டு
வல்ல முருகன் வருமெழிலை -- நல்லபடி
பார்த்தார் உளம்போம் பறி.
---கி.வா.ஜ., கவி பாடலாம், பக்.88


தனிச்சொல் அடிதோறும் வந்து பலவிகற்பம்
பெற்றிடும் வெண்பா இது.

மழையின்றி மாநிலத்தார்க் கில்லை -- மழையும்
தவமிலா ரில்வழி யில்லைத் -- தவமும்
அரசிலா ரில்வழி யில்லை -- அரசனும்
இல்வாழ்வி ரில்வழி இல்.
---கி.வா.ஜ., கவி பாடலாம், பக்.88


மேல்வந்த சான்றுகளில் எல்லாம் தனிச்சொல்
எதுகை அதனடியின் சீரொன் றுடனும்
பெரும்பாலும் முன்பின் அடியெது கையுடனும்
ஒன்றி வருவது காண்.

*****
 
4.7.4.19. முடுகு வெண்பா

கீழுள்ள செய்யுளினை வாய்விட்டு வாசித்துச்
ஓசையிலே மூவசைச்சீர் நோக்கப் பயின்றிடும்
உத்தி எதுவென் றுணர்.

அத்தனத்தன் தத்தனத்தன் நர்த்தனத்தை எத்தனிக்க
மத்தளத்தை மொத்தெனத்தன் சத்தனைத்தும் - ஒத்திசைக்க
எத்திறத்தும் இத்தரத்தை ஒத்திருக்க மத்தொருத்தன்
இத்தலத்தும் எத்தலத்தும் இல்.
---இலந்தை ராமசாமி

https://groups.google.com/forum/#!msg/santhavasantham/01QgwhYFNg4/dysRJZeSfxIJ

[அத்தனத்தன் - சிவன், தத்தெனத்தன் - தத்தன எனத் தன்
மத்தளத்தை - நந்தி தனது திறமையெலாம் கூட்டி மத்தளத்தை ஹ்மொத்து மொத்து என்று
மொத்தி வாசிக்க
இந்த நடனத்துக்கு ஈடாக ஆட மற்றொருவர் எந்த உலகிலும் இல்லை]

முடுகுவது என்றால் விரைவது ஆகும்.
முடுகிவரும் ஓசை இருகுறில் சேர்ந்துவர.
வெண்பாவில் மூவசைச்சீர் மையம் பெரும்பாலும்
வண்ணம் முடுக்கி வரும். ... [வண்ணம் = இனிய ஓசை]

காய்ச்சீர் நடுவண் குறிலிணை வந்துநிரை
யாகிடக் கேட்கும் முடுகு.

அடிகள் இறுதியும் ஈற்றயலும் ஓசை
முடுகி வருவது பின்முடுகு; முற்றும்
முடுக முழுமுடுகு; முன்னால் இரண்டு
முடுகிட முன்முடுகு காண்.

முடுகுவரும் வெண்பாவில் ஓசை விரைய
இறுதியடிச் சொற்கள் வகையுளி இன்றி
இயல்பாய் முடிதல் முறை.

மேல்வந்த வெண்பாவில் சீர்கள் அனைத்திலும்
ஓசை முடுகிவர அஃது முழுமுடுகு
வெண்பா எனும்பேர் பெறும்.

பின்முடுகு முன்முடுகுச் சான்று முறையேகாண்
கீழ்வரும் வெண்பாக் களில்.

தேரோடும் வீதியெலாஞ் செங்கயலும் சங்கினமும்
நீரோடு லாவிவரும் நெல்லையே! - காரோடும்
கந்தரத்த ரந்தரத்தர் கந்தரத்த ரந்தரத்தர்
கந்தரத்த ரந்தரத்தர் காப்பு!
---வேம்பத்தூர் பெருமாளையர், ’நெல்லை வருக்கக் கோவை’


[காரோடும் = கருமையான
கந்தரத்தர் = கழுத்து உடையவர்
அந்தரத்தர் = ஆகாயத்தில் உள்ளவர்
கந்து அரத்தர் = முடியில் நீர் அணிந்தவர்
அம் தரத்தர் = உயர்வான தரத்தையுடையவர்
கந்தர் அத்தர் = முருகனுக்குத் தந்தை
அந்தரத்தர் = ஆகாயத்தை மேனியாகக் கொண்டவர்]
https://groups.google.com/forum/#!msg/santhavasantham/01QgwhYFNg4/dysRJZeSfxIJ

ஞானவயில் வேலிறைவ நாகமயி லேறிறைவ
வானவர்பி ரானிறைவ மாலிறைவ -- கோலிறைவ
என்றுதுதித் திப்பா ரிருமையு மேல்வாழ்க்கை
ஒன்றுவ ருள்ளே வுணர்.
---பாம்பன் சுவாமிகள்


*****
 
4.7.4.20. பஃறொடை வெண்பா

வெண்பா இலக்கணம் பெற்று அடிகளில்
ஒன்றோ பலவோ விகற்பம் வருமாறு
கீழெல்லை ஐந்தடி மேல்லெல்லை பன்னிரண்டு
கொண்டுவரும் நேரிசை அல்லது இன்னிசை
வெண்பாவே பஃறொடை யாம்.

இரண்டடிக் கோர்தனிச்சொல் பெற்றவ் வடிகள்
இரண்டிலும் வந்த எதுகை தனிச்சொல்லும்
பெற்று வருவது நேரிசை. இஃதல்லாப்
பஃறொடை வெண்பாக்கள் யாவுமே இன்னிசைப்
பஃறொடை பேர்பெறும் என்று.

*****

4.7.4.21. இன்னிசைப் பஃறொடை வெண்பாச் சான்றுகள்
(ஐந்தடி ஒருவிகற்ப இன்னிசைப் பஃறொடை)
சேற்றுக்கால் நீலம் செருவென்ற வேந்தன்வேல்,
கூற்றுறழ் மொய்ம்பிற் பகழி, பொருகயல்,
தோற்றம் தொழில்வடிவு தம்முள் தடுமாற்றம்
வேற்றுமை இன்றியே ஒத்தன மாவடர
ஆற்றுக்கா லாட்டியர் கண்.
---யா.கா.25 மே.

(ஐந்தடி பலவிகற்ப இன்னிசைப் பஃறொடை)
முளிபுல்லும் கானமுஞ் சேரார்தீக் கூட்டார்
துளிவிழக் கால்பரப்பி யோடார் தெளிவிலாக்
கானந் தமியர் இயங்கார் துளியஃகி
நல்குர வாற்றப் பெருகினுஞ் செய்யாரே
தொல்வரவின் தீர்ந்த தொழில்.
---பெருவாயின் முள்ளியனார், ஆசாரக்கோவை 56

(ஆறடி பலவிகற்ப இன்னிசைப் பஃறொடை)
பன்மாடக் கூடல் மதுரை நெடுந்தெருவில்
என்னோடு நின்றார் இருவர் அவருள்ளும்
பொன்னோடை நன்றென்றாள் நல்லளே - பொன்னோடைக்
கியானைநன் றென்றாளும் அந்நிலையள் - யானை
எருத்தத் திருத்த இலங்கிலைவேற் றென்னன்
திருத்தார்நன் றென்றேன் தியேன்.
---யா.கா.25 மே.

(வெண்பாவின் எளிய பொருள்)
பன்மாடக் கூடல் மதுரைத் தெருக்களில்
பாண்டிய மன்னன் உலாவந்த போதவன்
யானையின் பொற்படாம் நன்றென்றாள் நல்லவள்
யானையே நன்றென்றாள் நல்லவள் ஆனாளே
யானை யிவர்ந்தமன்னன் நல்லான் எனச்சொன்ன
நானானேன் தீயவள் காண்.
 
(ஏழடி பலவிகற்ப இன்னிசைப் பஃறொடை)
வையக மெல்லாம் கழனியாம் - வையகத்துச்
செய்யகமே நாற்றிசையும் தேயங்கள் - செய்யகத்து
வான்கரும்பே தொண்டை வளநாடு - வான்கரும்பின்
சாறேயந் நாட்டுத் தலையூர்கள் - சாறட்ட
கட்டியே கச்சிப் புறமெல்லாம் - கட்டியுள்
தானேற்ற மான சருக்கரை மாமணியே
ஆனேற்றான் கச்சி யகம்.
---யா.கா.25 மே.

(எட்டடி பலவிகற்ப இன்னிசைப் பஃறொடை)
மலைமேல் மரங்கொணர்ந்து மாண்புடைத்தாச் செய்த
நிலையொத்த வீதி நெடுமாடக் கூடல்
விலைத்தயிர் கொள்ளீரோ என்பாள் முலையிரண்டும்
சோழன் உறந்தைக் குரும்பையோ தொண்டைமான்
வேழஞ்சேர் வேங்கடத்துக் கோங்கரும்போ ஈழத்துத்
தச்சன் கடைந்த இணைச்செப்போ அச்சுற்றுள்
அன்னமோ ஆய்மயிலோ ஆரஞர்நோய் செய்தாளை
இன்னந் தெரிகிற் றிலம்.

(பத்தடி பலவிகற்ப இன்னிசைப் பஃறொடை)
தாழ்சடையும் நீள்முடியும் சூழரவும் தாங்கிப்பேய்
ஆழ்வார்முன் அன்றொருநாள் ஈருருவாய்த் தோன்றியவா!
மூவாசைச் சாகரத்தில் மூழ்கும் எனைக்காக்க
மூவா மருந்துன(து) ஓருருவம் முன்வருமோ?
நாமகளைக் கைபிடித்த நான்முகனின் தாதையே!
மாமன் பரிந்துரைப்பின் வாணியருள் கொட்டாதோ?
அஞ்சன வண்ணனே! ஆறறிவு தந்தென்றன்
அஞ்சனம் போன்ற அறியாமை நீக்கிடுவாய்!
ஏழுமலை ஆண்டவனே! எண்ணெழுத்(து) ஈந்தருளாய்!
ஏழைபால் ஈசா! இரங்கு.
---பசுபதி, ’கவிதை இயற்றிக் கலக்கு’ பக்.130

(பன்னிரண்டடி பலவிகற்ப இன்னிசைப் பஃறொடை)
கார்தவழ் நீண்ட கழைவளர் மாமலையின்
சாரல் அருகில் சரிந்த சிறுபாறை
மேலுதிர்ந்த பூக்கள் விலையுயர்ந்த கம்பளத்தை
ஆடரங்கின் மேலே அமைத்ததைப் போலிருக்கும்
உச்சி மலையின் ஒருபுறத்தில் தேனடையில்
நாவற் பழவண்டு நல்யாழ் இசைத்திருக்கும்!
வேரிற் பழுத்த பலாத்தூக்கும் மந்தியெலாம்
சேர முழவோசை சேர்க்க வருவோராம்!
மான்களோ பார்க்க வருவோராய் மாறுமே!
மயிலாடு பாறை மகளிர் கலைமன்றம்!
என்றும் அழியா இயற்கையின் பேரழகு
குன்றாக் குறிஞ்சி நிலம்.
---வாணிதாசன்

[குறிப்பு: இந்த வெண்பாவின் அடிகள் ஒன்பது-பத்துகிடையில் ’மாறுமே / மயிலாடு’ என்று விளம்-முன்-நிரை வந்து தளை தட்டுகிறது.--நன்றி அவலோகிதம் மென்பொருள். இதைச் சரிசெய்ய ’மாறுமே’ என்றதை ’மாறும்’ என்ன மாற்றலாம்.]

*****
 
4.7.4.22. வெண்பா இன்று

புதுக்கவிதைத் தாக்கம் இருப்பினும் இன்று
பொதுவாக யாப்பின் மரபினில் வெண்பா
புனைவதில் குன்றாத ஈடுபாடு கொண்டு
முனைவோர் இணையத்தில் உண்டு.

பலவகைப் பாக்கள் மரபில் முனைவோர்
பலரின்று உள்ளபோதும் வெண்பா வடிவமே
பாவலர் மேற்கொளும் பாவென் றிருந்திட
ஆவலுடன் நாடுவோ(ர்) காண்.

வெண்பா புலவர் புலியெனச் சொன்னதின்று
நண்பர்கள் வீட்டில் உலாவரும் பாரதியின்
வெண்ணிறமும் சாம்பலும் சாந்தும் கலந்தபல
வண்ணத்தில் பூனையாயிற் று.

மரபில் கவிமுனைவோர் பற்பலர் என்று
தெரியும் எளிதிலே கூகிள் வகைத்த
வலைதேடும் மென்பொருள் எந்திரம் மூலம்
வலையில் விளையும் மரபு.

மரபுக் கவிதை யெனத்தமிழில் தட்டி
உருவில் யுனிகோடாய் மாற்றியே தேட
ஒருலட்சம் மேற்பட்ட மின்பக்கம் காண
மரபின் விளங்கும் முனைப்பு.

அறன்பொருள் இன்பம் வழியுரைத்த வெண்பா
மறமோங்கும் இந்நாள் உலகதின் சாதனைகள்
வேதனைகள் போதனைகள் போக்குகள் பூசல்கள்
பேதங்கள் பேசுமே இன்று.

மரபில் எழுதி அனுபவம் பெற்றோர்
பரவிக் கிடக்கும் புதியோர் இயற்றிய
வெண்பாக்கள் பார்ப்போம் சில.

*****
 
Last edited:
1. குறள் வெண்பா இன்று

பலரும் எளிதில் முனையும் குறட்பா
பலவகை உத்தி பெறும்.

எத்தனை செய்திகள் எத்தனை ஈடுபாடு
அத்தனையும் பாக்குறள் காண்.

*****

அகரம் அமுதா
பேணும் பெருங்கற்பே பெண்டிற்(கு) எழிலாகும்
ஆணுக்கும் அஃதே அழகு!

வெம்புகையில் இன்பம் விளையும் எனுங்கருத்தை
நம்புகையில் வீழும் நலம்!

நகைபூக்கும் வாயில் புகைபூக்கக் காண்டல்
தகையில்லை வேண்டும் தடை!

*****

செல்லப்பா யு.
கணிணி யெனும்கருவி கைவச மின்றேல்
பணிநீ புரிவ தரிது.

பட்டம் பயின்றும் விழியில ரேகணிணி ... [வழியில என்பது மேலோ?]
நுட்பம் பயிலா தவர்.

*****

சுந்தரராஜ் தயாளன்
காலச் சுழற்சியில் காட்சிகள் மாறியதே
ஞாலத்தின் நாடகமாம் இஃது.

[கோவில் இறைதரிசனத்தில் பணக்காரர் முன்னுரிமை பெறுவது குறித்து]
காசுள்ளோர் கண்டிடலாம் கண்ணிமைக்கும் காலத்தில்
ஓசியில்பார் கால்கடுக்க நின்று.

*****

சுப்பிரமணி சேகர்
மாலைமாற்றுக் குறள்வெண்பா (பொருள் தெரிந்தால் ரசிக்கலாம்)

யாதிநல மாவள மாவா யுரையுவா
மாளவ மாலநதி யா

நாதடவு தேதமிழ வாசிரிய ராயரிசி
வாழமித தேவுடத நா

*****

குறளினுக் குக்குறள் மூலமே அர்த்தம்
குறிக்க முனைவார் இவர்.

துரை ந.உ.
வானின்(று) உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று ... 002:01

மண்ணுயிரின் வாழ்வுயர வானிருந்து மண்புகும்
நல்லமுதம் என்றும் மழை.

மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. ... 004:04

அகத்தூய்மை நல்லறமாம்; மற்றவை எல்லாம்
பகட்டும் புரட்டுமா கும்.

*****
 
2. கேளிக்கைக் குறள்வெண்பா

மனமகிழ் வெண்பாக்கள் யாப்பதும் உண்டு
பலவகை உத்தி களில்.

முதற்சொல்லை வைத்து முடிவு அமைப்பர்
அதற்குவேறு அர்த்தம் வர.

இலந்தை ராமசாமி
உடைந்துள்ள கண்ணாடி உட்கதவின் பின்னாடி
உள்ளதே என்றன் உடை.

கடைசியில் தேடிநான் கண்டு பிடித்துவிட்டேன்
கண்ணாடி விற்கும் கடை.

ஓட்டுக்கள் போட்டும் உதவாத பேர்வழியை
ஊருக்குள் வாராமல் ஓட்டு.

*****

தங்கமணி
நாடுன் தவமன்றோ நாளுமதன் மேன்மையை
நாடும் தகவினை நாடு.

கொடுப்பினை என்றால் கொடுத்தின்பம் கொள்ளல்
கொடுப்பதை அன்பாய்க் கொடு.

*****

வி.சுப்பிரமணியன்
கல்லென்றும் கல்லார் சில(ர்)அவர் வாழ்வினில்
செல்லும் வழியெங்கும் கல்.

கடனென்று வாங்கியதைக் காலம் தவறா(து)
அடைத்தல் ஒருவர் கடன்.

*****

3. பக்திக் குறள்வெண்பா

வி.சுப்பிரமணியன்
இலையோ மலரோ இறைவனுக்(கு) இட்டால்
நலம்பெறலாம்; துன்பம் இலை.

இருகரம் கூப்பி இறைவனைப் போற்றி
ஒருகுறை இன்றி இரு. ... [’ஒருகுறையும்’ என்றிருந்தால் இன்னும் சிறக்குமே?]

நச்(சு)அரவை நல்ல அரைநாணாக் கட்டிய
பிச்சனை நெஞ்சேநீ நச்சு.

கூடுவிட்டுப் போம்முன்னே கூன்பிறையைச் சூடிநடம்
ஆடும் இறைவனைக் கூடு.

விடையேறும் ஈசனை வேண்டினால் ஈவான்
அடைந்தார்க்கு நல்ல விடை.

கழலா வினையும் கழலும் மனமே
விழைவாய் இறைவன் கழல்.

ஓடுநதி ஆடுமர வோடுபிறை சென்னிமிசை
சூடுமிறை கையினிலோர் ஓடு.

ஆற்றுச் சடையான் அணிமதி சூடியைப்
போற்றி நிதம்திருத்தொண்(டு) ஆற்று.

பரவும் சடைமேல் பனிநிலாச் சூடும்
பரமனைப் பாடிப் பரவு.

*****
 
2. சிந்தியல் வெண்பா இன்று
நேரிசைத் சிந்தியல் வெண்பா

அகரம் அமுதா.
நல்லார் உறவால் நலம்பெருகும் நாடோறும்
அல்லார் உறவால் அறந்தேயும் - பொல்லார்
இணைவிடுதல் மேலாந் துணை!

அன்புற் றெவர்க்கும் அறனல்ல செய்யாது
தென்புற்று நன்குஞற்றுஞ் செம்மைத் திருவுடையார்
இன்புற்று வாழ்வ ரினது!

விசய பாரதி ந.வீ.
தெள்ளுதமிழ்ச் சொத்தெமக்கு; சிந்தனைக்கு நல்லறிவை
அள்ளியள்ளி ஊட்டும் அமுதமழை- வெள்ளமது
வள்ளுவமோர் முப்பால் மது.

3. நேரிசை அளவியல் வெண்பா இன்று

இக்பால்
அருளிருந்தால் சொர்க்கம் அடையலாம் என்பார்
பொருளின்றி வாழ்க்கையுண்டோ பூமேல்? - திருவே
வருமானம் தேவைக்கு வந்துவிட்டால் எல்லா
இருளும் வெளிச்சம் எனக்கு.

துன்பத்தைக் கண்டு துவண்டு மருளாதே
இன்னல் விலகலாம் எக்கணமும் - அன்புள்ளாய்
தோயும் இருள்விலக்கித் தோன்றுவான் சூரியன்
காயில் இருக்கும் கனி.

குறிப்பிட்ட வேளையில் கூட்டம் தொடங்கி
வெறுஞ்சடங்கு எல்லாம் விலக்கி - நறுந்தமிழில்
கற்றார் உரையாற்றுங் காலத்தில் அல்லவோ
வெற்றி பெறும்நம் விழா!

ஜெயபாரதன் சி.
ஈழத்தில் இட்டதீ சீதைக்(கு)! எழில்மதுரை
சூழத்தீ இட்டது கண்ணகிக்கு! - வாழாது
மீண்டும் நகைச்சண்டை! மேனியில்தீ தங்கைக்கு!
வேண்டாம் வரதட் சணை!
 
4. இன்னிசை அளவியல் வெண்பா இன்று

இக்பால்
தன்னை மறைக்கும் தவஞானி வேராவார்
புன்னகை செய்பவர் பூக்களாம் - இன்புறவே
அள்ளிக் கொடுப்பார் அருங்கனி; கைவிரித்து
இல்லையெனச் சொல்வார் இலை.

உழைப்புக்குத் தக்கபடி ஊதியம்நல் காமல்
பிழைக்கும் பணந்தேடிப் பேய்கள் - கிளியேகேள்
ஆறாமல் ஏழை அழுது வடித்தகண்
நீரும் நெருப்புக்கு நேர்.

தந்தை,தாய் நல்லுயிர்; தாரம் சுடர்விழி
கந்தம் கமழ்பிள்ளை கைநமக்கு - சொந்தபந்தம்
கால்கள்; துயரம் களையப் பறந்துவரும்
தோழன் சுமைதாங்கும் தோள்.

ஜெயபாரதன் சி.
பிறப்பும், இறப்பும், பெருமையும், தாழ்வும்
துறப்பும், பிணைப்பும் தொடரும் - எரியும்
நெருப்பும், பனியும் நிலையாது மாறும்
இருளும், வெளிச்சம் எனக்கு.

5. கேளிக்கை வெண்பாக்கள்

மாதவச் சிவஞான யோகிகள்
சற்றே துவையலரை தம்பியோர் பச்சடிவை
வற்றலே தேனும் வறுத்துவை - குற்றமிலை
காயமிட்டுக் கீரைகடை கம்மென வேமிளகுக்
காயரைத்து வைப்பாய் கறி.

காளமேகப் புலவர் பற்றிய செவிவழிச் செய்தி
புலவர் ’பாக்குத்...நன்நாக’ வரை எழுதிப் பாதியில் விட்ட வெண்பாவை வேறு ஒருவர் முடித்தது:

பாக்குத் தறித்து விளையாடும் பாலகர்க்கு
நாக்கு தமிழுரைக்கும் நன்நாகை - மூக்குமுட்ட
உண்ணும் உணவை உருட்டி விழுங்கிடின்
தொண்டையில் விக்குமே சோறு.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் ராயகோபுரக் கல்வெட்டில் நேரிசை வெண்பா
(காளமேகம் தன்னைப்பற்றி எழ்திக்கொண்ட வெண்பா என்று கருதப் படுகிறது)

மண்ணில் இருவர் மணவாளர் மண்ணளந்த
கண்ணன் அவன்,இவன்பேர் காளமுகில் - கண்ணன்
அவனுக்கூர் எண்ணில் அணியரங்கம் ஒன்றே
இவனுக்கூர் எண்ணா யிரம்.

*****

இக்பால்
சீர்விளங்கும் காதற் செழுமலரைக் கைபிடித்தேன்
பேர்விளங்கும் பிள்ளைகளைப் பெற்றெடுத்தேன் - ஊர்மதிக்கும்
பொன்னும் மணியும் புகழும் மிகப்பெற்றேன்
என்னதான் வேண்டும் இனி?

வேதனை எல்லாம் விதிப்பயன் என்றுசொல்லிப்
பேதலிப்பார் நெஞ்சின் பிழைதிருந்தப் - போதிப்பேன்
வாடும் மனிதர் வளம்பெற்று வாழ்ந்திடவே
பாடுவேன் பைந்தமிழ்ப் பா.

கன்னலும் பாலும் கனிச்சாறும் செந்தேனும்
உண்ணத் தெவிட்டலாம் ஓர்நாளில் - பைந்தமிழ்
அன்றாடம் தேடியே அள்ளியள்ளி உண்டாலும்
தின்னத் தெவிட்டாத தேன்?

சுரேஷ் பாபு
கண்கள் நறுங்குவளை, கன்னங்கள் வெண்ரோசா,
நுண்நாசி எள்ளின்பூ, வெண்பற்கள் மல்லிகை, ...
பூவை விரும்புகிறாள் என்றியற்கை வைத்தானோ!
பூவைமேல் எத்தனைப் பூ!
[நுண்நாசி எள்ளின்பூ, மல்லிகை - வெண்பற்கள், என்று வந்திருந்தால் நேரிசை வெண்பா]

நிரஞ்ஜன் பாரதி எழுதியதை இலந்தை ராமசாமி திருத்தியது
தாயவளின் பொற்கரத்தால் தங்கமாய் வந்துதித்துச்
சேயவனின் நெஞ்சத்தைச் சேகரித்து - வாயதனில்
அக்கறை கொண்டென்றன் அம்மா கனிந்தூட்டும்
சக்கரைப் பொங்கல் தனி.

ஜெயபாரதன் எஸ்.
வயிற்றுக்குச் சோறில்லை, வாங்கிடக் காசே(து)?
அயர்ச்சியில் சோர்வாய் அறிவு - மயங்கிடினும்
நாடுவேன் வெண்பாவை, நாள்தோறும் சிந்தித்துப்
பாடுவேன் பைந்தமிழ்ப் பா.

அரையுடையில் தோற்றம்! அறுபதுபேர் ஆட்டம்!
திரையிலே தேவையற்ற கூத்தா? - அரங்கத்தில்
புல்லரின் எந்திரப் பொம்மைகள் பேயாட்டம்
கல்லாதான் ஆக்கும் கலை.

[Ref:https://groups.google.com/group/anb...42f73a/df7b25420646f165?hl=kaϛa95bbc19f1759&]

*****
 
4.7.4.23 அளவியல் வெண்பாப் பயிற்சி
நினைவிற் கொள்ள:
வெண்பா இயற்றத் தளையாகும் வெண்டளையாம்
வெண்டளையால் தானே வருவது செப்பலோசை
மாமுன் நிரையும் விளம்காய்முன் நேரும்
வருவது வெண்டளை காண்.

இயற்சீரின் வெண்டளையில் மாமுன் நிரையும்
விளம்முன்னே நேருமென மாறியே வந்திடும்
வெண்பா இயற்சீர் என.

வெண்சீரின் வெண்டளையில் காய்முன்னே நேர்வரும்
வெண்பாவின் காய்ச்சீர் என.

வெண்பாவின் ஈற்றசை நாள்,மலர் காசு,
பிறப்பு எனப்பட்ட வாய்பாடில் ஓரசையாய்
நேரோ நிரையோ இவற்றுடன் குற்றுகரம்
சேர்ந்தோ வருமெனக் காண்.

பயிற்சி 1. ஓசை குறைக்கும் விளங்காய்ச் சீர்கள்
நினைவிற் கொள்ள:

குறில்நெடில் ஒற்றடுத்தோ அன்றித் தனித்தோ
விளமாய் நடுவரும் கூவிளங்காய் மற்றும்
கருவிளங்காய்ச் சீர்கள் மிகுவரின் வெண்பாவில்
செப்பலோசை குன்றி வரும்.

’மூவரேகாண், வேர்ப்பலாக்கண்’ போன்றுவரும் கூவிளங்காய்ச்
சீர்கள், ’வருவரேகாண்’ போன்றும் ’கிளைப்பலாக்கண்’
போன்றும் கருவிளங்காய்ச் சீர்கள் தவிர்ப்பதால்
வெண்பாவில் சீர்க்கும் ஒலி.

விளங்காய்ச்சீர் வேண்டின் குறிலிணை மத்தியில்
வந்திடும் ’நல்வரவில், நால்வரும்பெண்’ போன்றுவரும்
கூவிளங்காய் மற்றும் ’பலர்நடுவில்’ போன்றும்
’இனிவரும்பெண்’ போன்றும் கருவிளங்காய்ச் சீர்களால்
செப்பலோசை குன்றா வரும்.

முழுவதும் கூவிளங்காய் வந்திடும் கீழுள்ள
வெண்பாவில் மொத்தம் பதினாலு சீர்களில்
ஓசை குறைப்பன பத்து.

இவையாவும் கண்டறிந்து சொற்களின் முன்பதங்கள்
மாறாமல் வேறுபடும் சீர்கள் அமைத்துப்
பெரும்பாலும் கூவிளங்காய்ச் சீர்கள் பயின்றுவர
வெண்பாவை மாற்றி எழுது.

பாவியேன்நான் பற்றிலேனே பத்மநாபன் பாதமூலம்
ஆவிசோர்ந்து மேனிசோர்ந்து நல்லறங்கள் நாடிடாமல்
காவியாடை நானுடுத்தும் சாதனைகள் போதவில்லை
சாவியாகச் சோகமாக நான்.


பயிற்சி 2. இயற்சீர் நிரல்: தேமா புளிமா கருவிளம் கூவிளம்

கலைந்துள்ள சொற்களை நேர்செய்(து) ஒருவெண்பா
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
என்ற நிரலில் இயற்சீர்கள் நின்று
அடியெதுகை வந்திடக் கட்டு.

தழைக்கும் மனதில் இதை. அறிவோம் உலகென நன்மை தன்மை உலகினில்
தீமைகள் யாவரும் வளர்ந்திட பெறுவார் அன்பால் எண்ணிடும் குன்றும்


*****
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top