கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 25
கொஞ்சம் வேக நடைப் பயிற்சி தினமும் செய்வதால்,
கொஞ்சம் கொஞ்சமாய்ப் போகிறது முழங்கால் வலி.
நித்தம் எத்தனை பேர், எம் சுற்றம் நட்பில்,
தத்தம் வலி பற்றிக் கூறிப் புலம்புகின்றார்!
உலகளாவிய பிரச்சனையாய் மூட்டுவலி ஆனது;
பலர் மூட்டு மாற்றம் செய்வதும் அதிகமாகிப் போனது.
பழைய காலம் போல் குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதும்,
நிறைய எண்ணெய் தேய்த்து, வாரம் ஒரு முறை குளிப்பதும்,
எப்போதும் தரையில் அமர்ந்து உண்பதும், நீண்ட நடையும்,
இப்போது அரிதாகிப் போனதால், எண்ணைப் பசை குறைந்து,
மடக்கும் பயிற்சிகள் குறைந்து, உடலில் மூட்டுக்கள்
இடக்கும் செய்கின்றன; உடல் உபாதைகள் பெருகுகின்றன.
விடலைப் பருவம் வரையேனும் அம்மாவின் கண்டிப்பில்,
விடாது எண்ணைக் குளியல் செய்த நம் வயதினரே,
இந்தப் பாடு படும்போது, பிறந்தது முதல் எண்ணை கூடாதென,
இந்தக் கால மருத்துவர்களின் உபதேசம் கேட்டு நடந்தால்,
'அடுத்த தலைமுறை என்ன பாடு படுமோ?', என்று,
தடுத்தாலும் மனதில் பயம் நிறைவது நிஜமே!
தென்னாட்டு உணவுவகை சரிசம உணவு என்பதும்,
இந்நாட்டு ஆராய்ச்சியாளர் சொன்னால்தான் புரிகிறது!
மேல் நாட்டு நாகரிகம் எனச்சொல்லி pizza தின்று,
மேலான நம் உணவு வகைகளை உண்ண மறந்து,
உடல் காட்டும் உடை முதல், எடை கூட்டும் சீஸ் வரை,
கடல் தாண்டி நம் நாட்டிலும் இளைஞர் ஏற்பது வருத்தமே!