கடல் கடந்த நான்காம் அனுபவம் - 41
ஒரு டிக்கட் எடுத்தால், ஒரு வாரம் செல்லுபடியாகும்;
ஒரு நாள் போதாது, முழுத் தோட்டத்தையும் பார்த்திட!
பின் என்னவாம்? Brookgreen Gardens என்ற அதன் அளவு,
ஒன்பதாயிரத்து நூறு ஏக்கர் ஆகும்! மிக பிரம்மாண்டம்.
நூறு ஆண்டுகள் பழமையான மிகப் பெரிய மரங்கள்; பல்-
வேறு வகைகளில், அழகிய வண்ணங்களில் மலர்கள்.
ஆமைகளின் முதுகில், தன் பொருட்களைக் கடத்தும்,
ஆச்சரியமான இளம் பெண்ணின் சிலை கண்டவுடன்,
அவளிடம் நின்று, புகைப்படம் க்ளிக்கிக்கொண்டேன்;
அவளின் ஐடியாவை நினைத்து, நினைத்து, ரசித்தேன்!
கால் ஓய நடந்த பின், ஜடாக்னி வேலையைத் துவங்க,
காத்திருந்தோம் ஓர் உணவக வாயிலிலே, எங்களுக்கு
வேண்டிய சிற்றுண்டிகளை ஆர்டர் செய்த பின்; வெயில்,
வேறுபாடின்றி அனைவரையும் சமமாகச் சுட்டெரித்தது!
சிங்காரச் சென்னையில் சூடு இருந்தாலும், என்னவோ
இங்கு வறுப்பது போன்று வறுத்து எடுப்பது கிடையாது!
ஓஸோன் படலத்தில், இங்கு, நம் தேசத்தை விட, அதிக
ஓட்டைகள் இருக்குமோ என, சந்தேகம் எழுந்தது நிஜமே!
பசியாறியதும், இனிய இல்லம் அடைந்து, ஓய்வெடுத்து,
ருசியான காஃபி குடிக்க, Golf Cart ல் ஏறிப் பயணித்தோம்!
தொடரும் ..........................