[h=1]தினம் ஒரு திருப்பாவை
பாசுரம் - 26
கிருஷ்ணனிடம் ஆண்டாள் கேட்பது என்ன#MargazhiSpecial
ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் கேட்டுக்கொண்டபடி ஆஸ்தான மண்டபத்துக்கு வந்து சிங்காசனத்தில் அமர்ந்துகொண்ட கிருஷ்ணன் அவர்களிடம், ''நீங்கள் வேண்டுவது என்ன?'' என்று கேட்கிறான். ஆண்டாள் தானும் தன்னுடைய தோழிகளும் மார்கழி நீராடி நோன்பு இருக்கவேண்டும் என்றும் அதற்குத் தேவையான சாதனங்களை கிருஷ்ணன் அருளவேண்டும் என்றும் கேட்கிறாள்.
மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்,
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்,
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன,
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே,
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையவனே,
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே,
கோல விளக்கே கொடியே விதானமே,
ஆலி னிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்.
'
கிருஷ்ணனாக அவதரித்த திருமாலே, நீலநிற மணியைப் போன்ற மேனி நிறம் கொண்டவனே, கிருஷ்ணா! நீ எங்களிடம் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாய் என்பதை இன்று நாங்கள் அறிந்துகொண்டோம். ஒன்றும் அறியாத பெண்களாகிய எங்களிடம் நீ வைத்திருக்கும் அன்பு எங்களை பூரிப்பு அடையச் செய்கிறது. நாங்கள் மார்கழி நீராட வந்திருக்கிறோம். எங்களுக்கு
மார்கழி நீராட்டத்துக்குத் தேவையான சாதனங்களை நீ தந்தருளவேண்டும்' என்று வேண்டுகிறாள்.
அகில உலகத்தையும் நடுங்கச் செய்வதுபோல் முழங்கக்கூடியதும் கிருஷ்ணனின் கையில் இருந்து நீங்காமல் இருப்பதுமான பாஞ்சசன்னியம் போன்ற சங்குகள் வேண்டும் என்று கேட்கிறாள்.
இந்த இடத்தில் அகோபில மடம் 44-வது பட்டம் ஜீயர் சுவாமிகள் ஒரு விளக்கத்தை தம்முடைய
திருப்பாவைவிளக்கவுரையில் கிருஷ்ணனுக்கும் ஆண்டாளுக்கும் இடையில் நடப்பதாக ஓர் உரையாடலைக் குறிப்பிடுகிறார்.
'பூஜாகாலத்தில் ஊதுகிற சங்கொலி சந்தோஷகரமாகத்தான் இருக்கவேண்டும். அப்படி ஆனந்தகரமாக சப்திக்கிற சங்கங்கள் என்று கேட்காமல் நடுங்கும்படி சப்திக்கிற சங்கங்கள் வேண்டும் என்கிறீர்களே. அதிலும் ஞாலத்தை எல்லாம் நடுங்கும்படி சப்திக்கிற சங்கங்கள் என்கிறீர்களே. எதற்காக அம்மாதிரியான சங்கங்கள்?'
''கிருஷ்ணா! உனக்குத் தெரியாத விஷயம் ஒன்றுமில்லை எதற்காக அப்படிப்பட்ட சங்கங்களைக் கேட்கிறோம் என்றால், ஸத்யம் சதேந விக்நாநாம் ஸஹஸ்ரேண ததா தப: விக்நாயுதேந கோவிந்தே ந்ருணாம் பக்திர் நிவார்யதே ஒருவன் எந்த சமயத்திலும் எதற்காகவும் பொய் சொல்லுகிறதில்லை என்று சங்கல்பம் செய்துகொண்டு அப்படியே பொய் சொல்லாமல் நடந்துகொண்டு வந்தானேயானால் அவனுக்கு நூறு விதமான இடைஞ்சல்களை உண்டு பண்ணி அந்த விரதத்தை மாற்றிப் பொய் சொல்லும்படி செய்துவிடுகிறார்கள் தேவர்கள்'' என்று சொல்கிறாளாம் ஆண்டாள்.
மேலும் பறை முதலான வாத்தியங்களையும் ஆண்டாள் கேட்கிறாள். கோல விளக்குகளும், கொடிகளும் தேவை என்று கேட்கிறாள்.
கிருஷ்ணன் தான் சிறு பிள்ளை என்று சொல்லி, கேட்டதை எல்லாம் தர மறுத்துவிட்டால் என்ன செய்வது? எனவேதான் ஆண்டாள், 'ஆலினிலையாய்' என்று அழைத்து கிருஷ்ணனுடைய தெய்விகத் தன்மையை உணர்த்துகிறாள்.
பிரளயத்தின்போது உலகமெல்லாம் வெள்ளத்தில் மூழ்கியபோது, அனைத்து தேவர்களையும், உயிர்களையும், அகில அண்ட சராசரங்களையும் வயிற்றில் சுமந்துகொண்டு, ஆலிலையின் மேல் கிருஷ்ணன் படுத்திருக்கும் கோலமே ஆலிலை கிருஷ்ணனின் அழகு திருக்கோலம். இந்த அற்புதக் காட்சியை மார்க்கண்டேயருக்கு திருவில்லிபுத்தூரில் திருமால் காண்பித்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியை
கிருஷ்ணனுக்குச் சொல்லும் ஆண்டாள், 'கிருஷ்ணா! பிரளய காலத்தில் அகிலம் அனைத்தையும் உன்னுள் அடக்கி பாதுகாக்கும் வல்லமை படைத்தவன் நீ. எனவே நாங்கள் கேட்பதை எல்லாம் கண்டிப்பாக உன்னால் தரமுடியும் என்று ஆண்டாள் கேட்கிறாள்.
-க.புவனேஸ்வரி
நன்றி : சக்தி விகடன்
Source:
http://www.vikatan.com/news/spiritua...ional-hymn.art[/h]