கருணைக் கொலை!
தளர்ந்த நடையுடன் தீவிர சிகிச்சிப் பிரிவின் வாசலில் வந்து நின்றாள் பொன்னம்மா. கண்ணடிக் கதவின் வழியே
அவளது பண்ணாடியைப் பார்த்தாள். அவரது உடலின் மூன்று துவாரங்களில் குழாய்ச் செருகல் - மூச்சு, உணவு,
நீர்க் கழிவு இன்னவற்றுக்காக. இடது கரத்தில் ஊசி வழியாக குளுகோஸ் சொட்டுச் சொட்டாக உடலுக்குள் சென்றது.
கட்டம் போட்ட கண்டாங்கிச் சேலையைச் சரி செய்தபடி, அறையின் வெளியில் அமர்ந்தாள்! கண்களை மூடியதும்,
எண்ண அலைகள் பின் நோக்கிப் பாய்ந்தன.
'பொட்டப் புள்ளைக்கு என்ன படிப்பு வேண்டிக் கிடக்கு!' எனும் சமூகத்தில் பிறந்ததால், நான்காம் வகுப்புடன் பள்ளிக்கு
முழுக்கு! பணக்காரக் குடும்பம் என்பதால், கடின வேலைகளே கிடையாது. அவள் பூப்பு அடைந்ததும், அன்னப் பட்சி
வாகனத்தில் அமர்த்தி, ஊரை அழைத்து அமர்க்களம் செய்த கையோடு, பக்கத்து கிராமத்துப் பண்ணையாரின் மகனுக்குப்
பெண் கேட்டு ஆள் வந்துவிட்டது. அவளைவிடப் பதிமூன்று வயதுப் பெரிய, ஒரே மகனுக்கு வாக்குப்பட்டு, பண்ணாடிச்சி
ஆகிவிட்டாள்.
அடுத்தடுத்து ஆணும் பெண்ணுமாக மாற்றி மாற்றி, நாலு குழந்தைகளையும் பெற்றாள். பண்ணாடிச்சி சொல்லுக்கு மறு
பேச்சே கிடையாது. அவளது சமூகத்தின் பழக்க வழக்கங்களுக்கு மிகவும் கட்டுப்பட்டவள். ஆனால், அவளுக்குச் சில
சடங்குகள் அறவே பிடிக்காது. அவளின் அத்தை மகளின் கணவன் இறந்தவுடன், மாமியார்க்காரி முன் நின்று நடத்திய
கோர சம்பவங்கள் அவள் மனதை நிலைகுலைய வைத்தது நிஜம்தான். 'பொஞ்சாதி போன பொறகு ஆம்பளைங்க எப்பவும்
போலவே இருக்கறாங்க. பொட்டச்சிக்குதான் எல்லா அலங்கோலமும். வெள்ளைச் சேலயக் கட்டச் சொல்லி, ஊட்டுக்குள்ள
மொடக்கிப் போடுவாங்க! என்ன கெரகண்டா சாமி!', என்று அடிக்கடி எண்ணி வருந்துவாள். கூடவே, 'எண்ட்ற பண்ணாடி
நூறாயுசு நல்லா இருக்கோணு! நான் அவருக்கு முந்தியே போகோணு!' என்று பல முறை அம்மனை மனசாற வேண்டுவதும்
உண்டு!
மருத்துவரின் காலடி ஓசையால் திடுமென விழிப்பு வர, நிகழ் காலத்திற்கு வந்தாள். அவளின் பண்ணாடிக்கு நினைவு போய்
பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டன. வெறும் கட்டையாய்க் கிடக்கும் இவருக்குத்தான் போன மாதம் எண்பதுவயதுக்
கொண்டாட்டம் நடந்ததா? நம்ப முடியவில்லையே! அவர் போய்விட்டால் தனக்கு என்னென்ன சடங்குகள் செய்வார்கள்
என்று அவள் நன்றாக அறிவாள். கிராமத்துத் திருவிழாக்கள் அனைத்திலும், அவள் ஜோடியாகச் சென்றால்தான் முதல்
மரியாதை கிடைக்கும் என்பதையும் அறிவாள்.
தன் பரிசோதனையை முடித்த மருத்துவர், பண்ணாடி மூச்சு விடுவது கடினமாகும் சமயம் 'வென்டிலேடரில்' வைக்குமாறு
நர்ஸிடம் கூறுவது அவளுக்கு நன்றாகக் கேட்டது. இன்னும் பல நாட்கள் இதே நிலையில் பண்ணாடி கிடந்து, படுக்கைப்
புண்கள் உடலில் தோன்றி, சீரழிந்து போகவேண்டுமா?
தள்ளாடி அறையின் உள்ளே சென்றாள்; நர்ஸ் வெளியேறும்வரை காத்திருந்தாள்; மனதைக் கல்லாக்கிக் கொண்டாள்;
ஆக்ஸிஜன் குழாயை மெதுவாக அகற்றிவிட்டு, பண்ணாடியின் வலது கரத்தைப் பற்றினாள்!