ருதத்தின் நாயகன்
ஒவ்வொரு இயற்கைச் சக்திக்கும் ஒரு தனி நியதி உண்டு. இது ருதம் என்றும் விரதம் என்றும் வேதத்தில் கூறப்படும். அக்னி இந்த ருதத்தை மீறாமல் தன் தனித் தன்மையோடு விளங்குவதை ருதத்தில் தோன்றியவன், ருதத்தின் மடியில் கிடக்கிறான், அதிலிருந்து என்றும் தவறுவதில்லைஎன்கிறார் ரிஷி. “ருதத்தின் காந்தர்வப் பாதையில் நெய்யில் நிலைபெற்றிருப்பது அக்னியின் மேய்ச்சல் நிலம்” என்பது அவரது கவித்துவம். ருதத்தின் கண்ணாகவும் காப்பானாகவும் விளங்குகிறான். தனது தீர்க்க திருஷ்டியால் ருதம் மீறப்படாமல் காக்கிறான். ருதப்படி ருதுக்களைக்(பருவகாலங்களை) காப்பான். ருதத்தைக் காக்க வரும்போது அவனே வருணனாகிறான். முனிவர் போல் தேவர்களின்மனிதர்களின் விரதங்களைப் பூர்த்தி செய்பவன். அவனது விரதத்தால் மருத்துகள் தோன்றினர். தேவர்கள் ஏற்படுத்திய எல்லா நிலையான விரதங்களும் அவனிடத்தில் பொருந்துகின்றன. இயற்கை நியதியை அழிக்கும் அரக்கனை அக்னி அழிக்கிறான். அவன் ஸ்வதாவான், அதாவது இயற்கை நியதியின் சமநிலைப்படுத்தும் தன்மை.
எல்லாத் தேவர்களும் அவனே.
அக்னியின் தேவத் தன்மையில் ஆழ்ந்த ரிஷிகள் அவனை மேலும் உயர்த்தி மற்ற தேவர்களாக விளங்குவதும் அவனே என்கின்றனர்.
அவனே பிரம்மா, விஷ்ணு, இந்திரன், பிரம்மணஸ்பதி, ரயிவித்பிரம்மா, விதாதா, வருணன், மித்ரன், அர்யமான், அம்சன், ருத்ரன், மருத்துகள், பூஷன், ஸவிதா, பகன், ரிபு, அதிதி, ஹோத்ரி, பாரதி, இளா, விருத்திரஹன், ஸரஸ்வதி. எல்லாத் தேவர்களும் அவனிடம் உள்ளனர்.
அக்னியே பரம்பொருள்
அக்னியை இயக்கும் சக்தி எது என்று வியந்த ரிஷிகள் அவனே தான் மூல சக்தி என்பதை அறிகின்றனர். அக்னியின் மேல் அவர்கள் கொண்ட பக்தி மேலும் வளர்கிறது. அக்னியே பரம் பொருள் என்ற கருத்தில் அதிதி, ஸத்யம் என்ற அடைமொழிகளால் அவனைப் போற்றுகின்றனர்.
பிரபஞ்சத்தின் எல்லையற்ற தன்மை அதிதி என்ற தாயாக வேதத்தில் உருவகிக்கப்படுகிறது. அக்னிஅதிதியின் மகனாகவும்நம்மை அதிதியிடம் மீட்டும் சேர்ப்பிப்பவனாகவும் கூறப்படுகிறான். அவனும் எல்லையற்றவனாக வர்ணிக்கப்படுகிறான்.
பரம்பொருளின் எக்காலத்திலும் நிலைபெற்றிருக்கும தன்மை ஸத்யம் என்று போற்றப்படுகிறது. ஸத்யத்தை தருமமாகக் கொண்டவன் என்றும் அவனே ஸத்யம் என்றும் துதிகள் பிறக்கின்றன.
இவ்வாறு நம் பார்வைக்குச் சாதாரணமாகத் தோன்றும் தீ முனிவர்களின் அருள் மன நிலையில்படிப்படியாக உயர்ந்து பரம்பொருளின் பலவேறு தோற்றங்களில் இதுவும் ஒன்று என்றுஉணரப்படுகிறது.
இதே போல வாயு முதலான பிற தெய்வங்களைப் போற்றும் போதும் அவர்களது சிந்தனை படிப்படியாக வளர்ந்து நீயே பரம்பொருள் என்று பேச வைக்கிறது.
இத்துடன் இத்தொடர் முடிவடைகிறது. வாசகர்களின் விமரிசனங்கள் வரவேற்கப்படுகின்றன.