திருப்பம் தரும் திருமலை தெய்வம்
திருப்பம் தரும் திருமலை தெய்வம்
திருப்பதி பெருமாள் விக்கிரகத்தின் வயது 250 கோடி ஆண்டுகள்
திருப்பதி பெருமாள் தோன்றி 250கோடி ஆண்டுகள் மேல் இருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எப்படி இதை கண்டறிந்தார்கள் என்றால், திருப்பதி ஸ்தலத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் ஒரு பாறை இருக்கிறது. அந்த பாறைக்கு “சிலாதோரணம்” என்று பெயர். இந்த பாறையை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த பாறை வயது 250 கோடி ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்று கண்டறிந்தார்கள். இதில் என்ன விசேஷம் என்றால், அந்த பாறையும் பெருமாளின் விக்கிரகமும் ஒரே கல்தான். அதனால் திருப்பதி பெருமாளின் சிலை தோன்றி 250 கோடி ஆண்டுகள் ஆகிறது. அத்துடன் இன்னொரு விசேஷம் என்னவென்றால், இந்த பாறை போல உலகத்தில் வேறு எங்கும் கிடையாது. காரணம் இது ஆகாயத்தில் இருந்து விழுந்து இருக்கலாம் என்ற தகவலும் இருக்கிறது.
சாதாரணமாக பச்சை கற்பூரத்தை பாறை மீது தடவினால் அந்த பாறையில் விரிசல் உண்டாகும். ஆனால் திருப்பதி பெருமாளின் திருமேனியில் வருடம் முழுவதும் பச்சை கற்பூரம் தடவப்படுகிறது. ஆனால் “சிலாதோரணம்” என்ற அந்த பாறை மீதும், திருப்பதி பெருமாள் திருமேனியின் மீதும் தடவினாலும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. அதனால் திருப்பதி பெருமாள் சிலை வானில் இருந்து நேரடியாக வந்துள்ளது என்பது அற்புதமான விஷயம்.
ஏழுமலையான்
வெங்கடாத்ரி, சேஷாசலம், வேதாசலம், கருடாசலம், வ்ருஷிபாத்ரி, அஞ்சனாத்ரி, அனந்தாத்ரி என்ற ஏழுமலைக்கு மத்தியில் பெருமாள் வாசம் செய்வதால் பெருமாள், “ஏழுமலையான்” என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார்.
கலியுக தெய்வம்
கலியுகத்தில் மனிதர்கள் பாவங்கள் அதிகம் செய்வார்கள். அதனால் பஞ்சம் தலைவிரித்தாடும். இதற்கு நல்வழி எது? என்று பிருகு முனிவர் யோசித்து, இதற்கான விடையை யாரிடமாவது கேட்டு தெரிந்துக்கொள்ள விரும்பினார்.
அதற்கு அவர் முதலில் சென்ற இடம் பிரம்ம லோகம். ஆனால் அங்கே பிரம்மன் படைக்கும் தொழிலில் மும்முரமாக இருந்ததால் பிருக முனிவரை சரியாக கவனிக்கவில்லை. பிரம்மனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற எண்ணத்தில் அங்கிருந்து கயிலாயம் சென்றார்.
அங்கே சிவபெருமான், பார்வதிதேவியும் ஏதோ விஷயம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
அவர்கள் இருவரும் தனிமையில் பேசிக்கொண்டிருப்பதால் இடையில் நாம் நுழைந்தாள் பார்வதி தேவி – பத்ரகாளியாக மாறிவிடுவாளே என அஞ்சிய பிருகு முனிவர் அங்கிருந்து வைகுண்டம் வந்தார்.
இங்கேயும் ஸ்ரீமகாலஷ்மிதேவியுடன் ஸ்ரீவிஷ்ணுபகவான் பேசிக்கொண்டு இருப்பதை கண்டார் பிருகு முனிவர்.
தனது கேள்விக்கு யாரிடமும் விடை காண முடியவில்லையே என கடுப்பான பிருகு முனிவர், கோபமாக ஸ்ரீமந் நாராயணனின் மார்பில் எட்டி உதைத்தார்.
பிருகு முனிவரின் செயல் ஸ்ரீமகாவிஷ்ணுவுக்கு கோபத்தை உண்டாக்கவில்லை. அதற்கு மாறாக தன்னை எட்டி உதைத்த முனிவரின் பாதங்களுக்கு வலி ஏற்பட்டு இருக்குமோ என்றெண்ணி பிருகமுனிவரின் கால்களை தடவி கொடுத்தார் ஸ்ரீமகாவிஷ்ணு.
இதை கண்ட ஸ்ரீலஷ்மிதேவி கடும் கோபம் கொண்டாள். தாம் வாசம் செய்யும் திருமாலின் மார்பில் ஒருவன் எட்டி உதைக்கிறான் – எட்டி உதைத்த அந்த பாதங்களுக்கு திருமால் மரியாதை செய்கிறாரே என்ற கோபத்தில் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரிந்து பூலோகம் வந்துவிடுகிறார் ஸ்ரீலஷ்மி தேவி.
ஸ்ரீ பத்மாவதி தாயார்
ஆகாசராஜன் என்றொரு அரசன். அவர் ஒரு சமயம் நகர்வலம் வரும் போது தாமரை குளத்தில் அழகான பெண் குழந்தை ஒன்று, தாமரை மலரில் படுத்தப்படி அரசரை பார்த்தவுடன் சிரித்தது. அக்குழந்தையை கண்டு மகிழ்ந்த அரசர், “இது யாருடைய குழந்தை.? தெய்வீகமான முகம். லஷ்மி கடாச்சமாக குழந்தை திகழ்கிறதே“ என்று கூறினார். ஆகாசராஜாவுக்கு தெரியாது அந்த குழந்தை உண்மையிலேயே ஸ்ரீமகாலஷ்மிதான் என்று.
காவலர்களை அனுப்பி இந்த குழந்தைக்கு உரிய பெற்றோர் யார் என்று தேடும்படி உத்தரவிட்டார். ஆனால் யாரும் குழந்தையை சொந்தம் கொண்டாடி வரவில்லை. “எல்லாம் இறைவன் செயல். இந்த குழந்தையை என் மகளாக ஏற்று நானே வளர்ப்பேன்.“ என்று முடிவெடுத்து அந்த குழந்தைக்கு “பத்மாவதி“ என்று பெயரிட்டார் அரசர்.
குழந்தை பருவத்தில் இருந்து பத்மாவதி மங்கை பருவம் அடைந்தாள். தான் யார் என்பதை உணர்ந்து, பெருமாளுடன் திரும்பவும் ஒன்று சேர தவம் இருந்தாள். வேங்கடேச பெருமாள், திருப்பதி மலை மீது தோன்றி தன் தன் அன்னை வகுளதேவியை ஆகாசராஜனிடம் அனுப்பி பெண் கேட்டு தூது அனுப்பினார். வெங்கடாசலபதியே மருமகனாக வர இருப்பதை தடுப்பாரா அரசர்?. தன் மகளின் விருப்பத்தையும் தெரிந்த மன்னர், பெருமாளுக்கு பெண் தர சம்மதம் தெரிவித்தார். அரசருடைய மகளை திருமணம் செய்வதால் அவருக்கு இணையாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது திருமணத்திற்கு தன் சார்பிலும் கல்யாண செலவு செய்ய வேண்டும் என்று விரும்பி குபேரரிடம் கடன் பெற்றார் பெருமாள்.
திருமணமும் பிரமாண்டமாக நடந்தது. ஒரே மகள் என்பதால் சீர்வரிசையை அள்ளி கொடுத்தார் அரசர். எல்லோரும் ஆச்சரியப்படும் அளவில் சீர் பொருட்கள் இருந்தாலும், சமையல் பொருட்களில் கருவேப்பிலை இல்லாததை கண்டார் பெருமாள்.
“என்ன பத்மாவதி… உன் தந்தைக்கு கருவேப்பிலை வாங்க கூட பணம் இல்லையா.“ என்று கேலியாக நகைந்தார். தன் தந்தையை பற்றி கிண்டலாக பேசி விட்டாரே என்ற கோபத்தில்,
“சரி.. இருங்கள், தந்தையிடம் சென்று கருவேப்பிலை வாங்கி வருகிறேன். பொழுது சாயும் முன்பாகவே வந்து விடுகிறேன்.“ என்று உறுதி தந்து சென்றாள் பத்மாவதி.
ஆனால் தந்தையிடம் கருவேப்பிலை வாங்கி மேல் திருப்பதி செல்வதற்கு முன்னதாகவே கீழ் திருப்பதியிலேயே கதிரவன் மேற்கில் மறைந்துவிட்டான். பொழுது சாய்ந்தும் விளக்கு வைக்கும் நேரத்தில் தன் மனைவி வீடு திரும்பாமல் இருக்கிறாளே என்று கோபப்பட்ட பெருமாள்,
“நீ கீழ் திருப்பதியிலேயே தங்கி விடு.“ என்று சொல்லிவிட்டார். தன் கணவரின் சொல்லுக்கு மறுப்பு சொல்லி வாதாடுவது நல்லதல்ல என்று நினைத்த பத்மாவதி, கீழ் திருப்பதியிலேயே தங்கிவிட்டாள்.
ஒருவருக்கு ஆபத்து என்றால் முதலில் பரிதாபப்பட்டு அதற்கு தீர்வு சொல்வதும் பெண்கள்தான். அதனால் பெருமாளுக்கு முன்னதாகவே பக்தர்களுக்கு அருள் தர பத்மாவதி தாயார் கீழ் திருப்பதியில் தங்கி இருக்கிறார்.
24 நெய்விளக்கு பரிகாரம்
திருப்பதி பெருமாளையும், பத்மாவதி தாயாரையும் வணங்கினால் ஏற்றம் ஏற்படும். இராஜேந்திர சோழர், தாம் அரச பதவி ஏற்றால் திருப்பதி ஸ்தலத்தில் 24 நெய்விளக்கு ஏற்றுவதாக வேண்டினார். அவர் வேண்டுதலுக்கு பலன் கிடைத்தது. பதவி ஏற்ற பிறகு தினமும் 24 நெய்விளக்கு ஏற்றி வேண்டுதலை நிறைவற்றி வந்தார்.
திருப்பதி சென்றால் திருப்பம் என்பது மட்டுமல்ல, திருப்பதி பெருமாளை மனதால் நினைத்தாலே நல்ல திருப்பமும், பெருமாளின் அனுகிரகமும் தேடிவரும்.
ஓம் நமோ நாராயணாய…! ஓம் நமோ வெங்கடேஸ்வராய நம
Source: Hinduism Radha Narayanan