எருமை யன்ன கருங்கல் லிடைதோ
றானிற் பரக்கும் யானைய முன்பிற்
கானக நாடனை நீயோ பெரும
நீயோ ராகலி னின்னொன்று மொழிவல்
அருளு மன்பு நீக்கி நீங்கா 5
நிரயங் கொள்பவரொ டொன்றாது காவல்
குழவி கொள்பவரி னோம்புமதி
அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே.
=====
எருமைகளுடன் சேர்ந்து மேயும்
பசுக்கூட்டம் போலக்
கருங்கற்களிடையில் தென்படும்
யானைகள் நிறைந்த
பழமை வாய்ந்த காடுசூழ்ந்த
நாட்டினை உடையவனே, நீ பெரியவன்!
இப்படிப் பகைவர் அணுகாத பெரும்வளம்கொண்ட
உனக்கு நான் ஒன்று சொல்வேன்:
அருளும் அன்பும் தவிர்த்து அதனால்
என்றும் நரகத்தில் உழல்பவர்களுடன்
நீ சேராது, நீ காக்கும் உன் தேசத்தை
குழந்தை வளர்ப்போரைப்போல் பாதுகாப்பாயாக.
அத்தகைய காவல் பிறருக்குக் கொடுக்கக்கூடியதோ
பிறரிடம் இருந்து பெறுவதோ அல்ல.
*** *** ***
033. சிற்றிலக்கியம்: குறவஞ்சி
புறநானூற்றுக் கவிதைகளுக்கு இடையிடையே, இருநூறு ஆண்டுகளுக்குமுன் இயற்றப்பட்ட சிற்றிலக்கியங்களில் உள்ள புதுக்கவிதை உத்தியின் எளிமையையும் காண்போம்.
திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சி
தமிழில் உள்ள 96 வகை சிற்றிலக்கியங்களில் குறவஞ்சி, இரட்டை மணிமாலை, மும்மணிக்கோவை, நான்மணிமாலை, கலம்பகம், அந்தாதி, பள்ளு முதலியன பிரபலமானவை. (96 வகைகளின் பெயர் தெரிந்தவர்கள் விவரங்களை இங்கு பகிர்ந்துகொள்ளலாம்).
குறவஞ்சி வகையில் ஒரு பாட்டுடைத் தலவனின் அழகையும் சிறப்பையும் அவன் உலா வரும்போது கண்டு, ஏழுவகைப் பருவ மகளிரும் (பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்) அவனைக் காதலித்து, அவன் தன் கரம் பற்ற விழையும் ஆசையில் மயங்கியிருக்க, குறமகள் ஒருத்தி வந்து பாட்டுடைத்தலைவியைக் கண்டு அவள் கனவுகள் நனவாகக் குறி சொல்லுவாள். அப்போது அவள் தான் இருக்கும் மலைவளம் பற்றியும், அதன் தலவர் பற்றியும், தம் வாழ்க்கை நெறிகள், முறைகள் பற்றியும் கவிதை அழகும், செய்யுள் அழகும் ஒன்றுசேர, ராக தாளமுடன் பல்லவி, அநுபல்லவி, விருத்தங்கள், கண்ணிகள் சேர்ந்த கீர்த்தனைகளில் பாடுவாள். இதுபோன்ற கவிதைகளின் தொகுப்பே குறவஞ்சி.
குறிசொல்லும் குறவஞ்சி வீறாப்பான நடைபயின்று தளுக்கிக் குலுக்கி வரும்போது அவள் நடை, உடை, பாவனைகளைக் கவிஞர் சந்தத் தமிழின் ஒழுங்குடன் புதுக்கவிதையின் எளிமையும் சேர்த்து வர்ணிப்பதைப் பாருங்கள்:
தேவர்கள் தம்பிரான் திருவருள் பாடி
இலகுநீ றணிந்து திலகமும் எழுதிக் [இலகுநீறு=நெற்றியில் திகழும் திருநீறு]
குலமணிப் பாசியும் குன்றியும் புனைந்து 20 [குன்றி=குன்றிமணி]
சலவைசேர் மருங்கிற் சாத்திய கூடையும் [மருங்கு=இடுப்பு]
வலதுகைப் பிடித்த மாத்திரைக் கோலும்
மொழிக்கொரு பசப்பும் முலைக்கொரு குலுக்கும்
விழிக்கொரு சிமிட்டும் வெளிக்கொரு பகட்டுமாய்
உருவசி அரம்பை கருவமும் அடங்க 25
முறுவலின் குறும்பால் முனிவரும் அடங்கச்
சமனிக்கும் உரையால் சபையெலாம் அடங்கக்
கமனிக்கு மவரும் கடைக்கண்ணால் அடங்க [கமனிக்குமவர்=வான்வழிச் சித்தர்கள்]
கொட்டிய உடுக்குகோ டாங்கிக் குறிமுதல்
மட்டிலாக் குறிகளும் கட்டினால் அடக்கிக் 30
கொங்கணம் ஆரியங் குச்சலர் தேசமும்
செங்கைமாத் திரைக்கோற் செங்கோல் நடாத்திக்
கன்னடம் தெலுங்கு கலிங்காரச் சியமும்
தென்னவர் தமிழாற் செயத்தம்பம் நாட்டி
மன்னவர் தமக்கு வலதுகை நோக்கி 35
இன்னகை மடவார்க் கிடதுகை பார்த்துக்
காலமுன் போங்குறி கைப்பல னாங்குறி
மேல்இனி வருங்குறி வேண்டுவோர் மனக்குறி
மெய்க்குறி கைக்குறி விழிக்குறி மொழிக்குறி
எக்குறி யாயினும் இமைப்பினில் உரைக்கும் 40
மைக்குறி விழிக்குற வஞ்சிவந் தனளே.
(இன்னும் வரும்)
*****