• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

#1630 to #1632

#1630. தவத்தைக் கைவிடார்

அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும்
பகைத்து எழும் பூசளுள் பட்டார் நடுவே
அமைத்தது ஓர் ஞானமும் ஆக்கமும் நோக்கி
இமைத்து அழியாது இருப்பார் தவத்தோரே.


அமைச்சர்கள், யானைகள், அரசர்கள் போன்றோர் பகைத்து எழுந்து புரியும் போர் களத்தின் நடுவில் இருந்தாலும், ஞானமும் ஈசன் மீது மாறாத அன்பும் கொண்டவர் தம் கொண்ட தவத்திலிருந்து சிறிதும் மாறுபடார்.

#1631. ஆர்த்த பிறவி அகன்று விடும்

சாத்திர மோதும் சதுர்களை விட்டு நீர்
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்
பார்தவப் பார்வை பசுமரத் தாணிபோல்
ஆர்த்த பிறவி யகல விட்டோடுமே


சாத்திரங்களை ஓதி அதனால் மிகுந்த பெருமை அடைபவர்களே! ஒரு கணமாவது வெளியே பாய்ந்து செல்லும் உங்கள் உள்ளதைத் தடுத்து அதை உள்முகமாகத் திருப்புங்கள். இத்தகைய உள் நோக்கிய பார்வை பசுமரத்தில் அடித்த ஆணி போலப் பதிந்திருக்கும் பிறவிப் பிணியை இனி இல்லாமல் விரட்டி ஓடச் செய்துவிடும்.

#1632. தவப் பயன் பெற்றபின் தவம் தேவையில்லை

தவம் வேண்டு ஞானந் தலைப்பட வேண்டில்
தவம்வேண்டா ஞான சமாதி கை கூடில்
தவம் வேண்டா மச்சக சமார்க்கத் தோர்க்குத்
தவம் வேண்டா மாற்றம் தனையறி யாரே


ஞானம் பெறுவதற்குத் தவம் தேவை.
ஞான சமாதி கைவந்த பின்னர் அதற்குரிய தவம் தேவை இல்லை.
சகச மார்க்கத்தைப் பின்பற்றும் இல்லறதோருக்கு ஞான சமாதிக்கு தேவை இல்லை.
தவத்தால் பெறுகின்ற ஞானத்தைப் பெற்ற பின்பு தவம் தேவை இல்லை.
 
6. தவ தூடணம்

6. தவ தூடணம்
தவ தூடணம் = தவம் + தூடணம்
தூடணம் = நிந்தை
புற நோக்கை நீக்கி அக நோக்கைக் கொண்டவருக்குப் புறச் செயல்கள் தேவை இல்லை.


#1633 to #1635

#1633. புலன் வழி போகாதவர்

ஓதலும் வேண்டாம் உயிர்க்குயி ருள்ளுற்றாற்
காதலும் வேண்டா மெய்க் காயமிடங் கண்டால்
சாதலும் வேண்டா சமாதியைக் கை கூடினால்
போதலும் வேண்டா புலன் வழி போகார்க்கே.


உயிரில் உயிராக உள்ள உண்மைப் பொருளைக் கண்டு கொண்ட பின்னர் ஒருவர் கற்று அறிந்து வேண்டியது எதுவும் இல்லை. உடலில் உறைந்துள்ள சிவத்தைக் கண்டு கொண்ட பின்னர், அவன் மேல் காதல் கொள்ளத் தேவை இல்லை.சமாதி நிலை கை வந்த பின்னர், இறக்க வேண்டிய தேவை இல்லை. மனம் புலன்களின் வழியே புறவுலகு செல்வதைத் தடுத்து நிறுத்தக் கற்றவர் வேறு ஓர் இடத்துக்குச் சென்று தவம் புரியத் தேவை இல்லை.

விளக்கம்

காதல் செய்ய இருவர் தேவை. சிவனும் சீவனும் ஒன்றான பிறகு காதல் செய்வது எப்படி?

சாதல் எனபது உடலிலிருந்து உயிர் பிரிந்து நிற்பது. சமாதியில் உயிர் உடலை விட்டுத் தனியே நிற்கும். எனவே சமாதியில் சாதல் தேவை இல்லை

புலன்களின் வழியே பொறிகள் செல்லாமல் தடுக்கக் காடு அல்லது மலைக்குச் சென்று தவம் புரிவது வழக்கம். மனம் புலன் வழிப் போகாமல் தடுக்கக் கற்றவர்களுக்கு தனியிடம் செல்லத் தேவை இல்லை.

#1634. சமாதி கூடிய பின்பு

கத்தவும் வேண்டா கருத்தறிந் தாறினால்
சத்தமும் வேண்டா சமாதிகை கூடினால்
சுத்தமும் வேண்டாம் துடக்கற்று நிற்றலால்
சித்தமும் வேண்டாம் செயலற் றிருக்கிலே.


மெய்ப் பொருளை உணர்ந்து, ஐம் பொறிகளையும் அடக்கிய ஒருவருக்கு இறைவனை உணர்த்தும் நூல்களை உரக்கப் படிக்க வேண்டிய தேவை இல்லை. சமாதியில் சீவன் சிவனுடன் கூடிய பின்பு மந்திரங்களும் ஆரவாரமான பூசைகளும் அவசியம் இல்லை. உலகத் தொடர்பை விட்டு விட்ட பின்பு ஒருவர் தன்னைத் தூய்மைப் படுத்திக் கொள்ளும் செயல் செய்யத் தேவை இல்லை.

#1635. வானவரிலும் உயர்ந்தவர்

விளைவறி வார்பண்டை மெய்த்தவம் செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்யுரை செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்யுறஞ் செய்வார்
விளைவறி வார் விண்ணின் மண்ணின் மிக்காரே


தான் செய்யும் தவத்தின் உண்மைப் பயனை அறிந்து கொண்டவரே உண்மையான தவம் செய்பவர் ஆவார். இத்தன்மை கொண்டவரே மாணவனுக்கு உண்மையை உணர்த்தும் நல்ல குரு ஆவார் . இவரே ஒளியுடல் பெற்று வானவரிலும் சிறந்தவர் ஆவார்.
 
#1636 to #1638

#1636. கண்டேன் சிவகதி

கூடித் தவம் செய்து கண்டேன் குரைகழல்
தேடித் தவம் செய்து கண்டேன் சிவகதி
வாடித் தவம் செய்வதே தவம் இவை களைந்து
ஊடில் பல உலகோர் ஒத்தவரே
.

இறை அருளுடன் கூடி நிற்கும் தவம் செய்து ஒலி வடிவான சிவனைக் கண்டு கொண்டேன். இங்கனம் நீண்ட காலம் தவம் செய்து சிவகதி அடைந்தேன். ஐம் பொறிகளையும் அடக்கிச் செய்யும் அருந் தவமே மெய்த் தவம். இதை விட்டு விட்டு மாறுபட்ட வழிகளில் தவம் செய்பவர்கள் எத்தகைய தவத்தைச் செய்தவர் ஆவார்?

#1637. தவத்தவரைச் சார்ந்தால் சிவத்தைக் காணலாம்

மனத்து உறை மாகடல் ஏழும் கைநீந்தித்
தவத்திடை யாளர் தம் சார்வத்து வந்தார்
பவத்திடையாகார் அவர் பணி கேட்கின்
முகத்து இடை நந்தியை முந்தலும் ஆமே.


மனத்தில் ஆணவத்தின் செயலான ஏழு குற்றங்கள் உள்ளன. அந்த ஏழையும் நீந்திக் கடந்த பின்பு ஒருவர் நல்ல தவம் செய்தவரைச் சார வேண்டும். அவரோடு இணங்கி இருப்பவருக்கு மீண்டும் பிறவி என்பது இராது. தவத்தவரின் இவள படி நடப்பவருக்குச் சிவனைத் தன் முகத்தின் முன்னே காணும் நற்பேறும் கிடைக்கும்.

#1638. சிவ ஒளி சீவ ஒளி யாகும்.

மனத்திடை நின்ற மதிவாள் உருவி
இனத்திடை நீக்கி இரண்டு அற ஈர்த்துப்
புனத்திடை அஞ்சும் போகாமல் மறித்தால்
தவத்திடை ஆறு ஒளி தன்ஒளி ஆமே.


உள்ளம் என்னும் உறைக்குள் ஒளிந்திருக்கும் ஞான வாளை உருவ வேண்டும். உலகத் தொடர்பையும், மன மலங்களையும் அறுக்க வேண்டும். சீவன் வேறுபாடுகள் இன்றிச் சிவத்துடன் ஒன்றாகிப் பொருந்த வேண்டும். பொறிகளைப் புலன்களின் வழியே போகாமல் தடுத்து நிறுத்த வேண்டும். இத்தகைய தவத்தில் வெளிப்படும் சிவ ஒளியே சீவ ஒளியாகும்.
 
#1639 to #1641

#1639. சிவத்தை சிந்தையில் வைப்பதே தவம்

ஒத்து மிகவுநின் றானை உரைப்பது
பக்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுக்கும் முனிவன் எனும்பதம்
சத்தான செய்வதுந் தான்தவந் தானே.


சிவனுடன் பொருந்தி நிற்கும் சிவனை உணர்வது அவன் மீது பக்தியைத் தரும். சிவனடியார்களைத் தொழுவது உயர்ந்த முக்தியைத் தரும். “உலகை வெறுப்பவன் ஒரு முனிவன்!” என்ற சொல்லை மெய்யாக்கும் வண்ணம் செய்வதே உயர்ந்த தவம் ஆகும்.

#1640. தவம் சந்திரகலையைத் தோற்றுவிக்கும்

இல்லை தொட்டு, பூப் பறித்து, எந்தைக்கு என்று எண்ணி
மலர் தொட்டுக் கண்டேன், வரும் புலன் காணேன்
தலை தொட்ட நூல் கண்டு தாழ்ந்தது என் உள்ளம்
தலை தொட்டுக் கண்டேன் தவம் கண்ட வாறே.


இலைகளைப் பறித்தும் , மலர்களைக் கொய்தும் இறைவனுக்கு மாலைகள் தொடுத்தேன். ஆனால் தலையில் வான் கங்கையாகிய சந்திர கலையின் ஒளியைக் காண முடியவில்லை .மூலாதாரத்திலிருந்து தலை வரை செல்லும் சுழுமுனை நாடியைக் கண்டேன் அதனால் என் உள்ளம் அடங்கி ஒடுங்கியது. அந்தத் தவம் தலையில் சந்திர கலையை விகசிக்கச் செய்தது.

#1641. இடர் வராது ஈசன் காப்பான்

படர்சடை மாதவம் பற்றிய பக்தருக்கு
இடர்அடையா வண்ணம் ஈசன் அருளும்
இடர்அடை செய்தவர் மெய்த்தவம் நோக்கில்
உடர்அடை செய்வதுஒரு மனத் தாமே.


படர் சடையானை மாதவத்தில் பற்றிக் கொண்ட உண்மை அன்பர்களுக்குத் துன்பம் நேராத வண்ணம் ஈசன் காப்பான். இங்கனம் துன்பம் நேராத வண்ணம் ஈசன் காக்கும்படித் தவம் செய்தவர் செய்த தவத்தை ஆராய்ந்தால், அவருக்குக் கிடைத்த பெருமை எல்லாம் அவர் மனத்தின் ஒருமைப் பாட்டினால் என்ற உண்மை விளங்கும்.
 
#1642 to #1644

#1642. சோற்றுக்கு நின்று சுழல்வர்

ஆற்றிற் கிடந்த முதலை கண்டஞ்சிப் போய்
ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட தன்னொக்கும்
நோற்றுத் தவம் செய்யார் நூலறியாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே.

நூலைக் கற்று அறியாது , சிறந்த தவம் செய்யாமல், எப்போதும் வயிற்ருக்கு உணவு தேடி அலைவது ஆற்றில் உள்ள முதலைக்கு அஞ்சி, அண்மையில் குட்டியை ஈன்ற தாய்க் கரடியிடம் சென்று வருந்துவதைப் போன்றது ஆகும்.

#1643. மூச்சின் இயக்கம்

பழுக்கின்ற வாறும் பழம் உண்ணு மாறும்
குழக்கன்று துள்ளி அக்கோணியைப் பல்கால்
குழக்கன்று கொட்டிலில் கட்ட வல்லார்க்கு உள்
இழுக்காது நெஞ்சத்து இட, ஒன்று மாமே.

உயிர் மூச்சு சீவனின் உடலில் உலவுகின்ற போது, அது சிவக்கனியைப் பழுக்கச் செய்யும். சீவன் அதனை உண்ணச் செய்யும். ஆனால் உயிர் மூச்சைச் சுழு முனையில் அடக்கும் பொழுது மூச்சு இயங்குவது நின்று நின்று விடும். மேல் நோக்கியுள்ள சகசிர தளத்தில் மனம் அடங்கும் பொழுது மூச்சின் இயக்கமும் நின்றுவிடும்.

#1644. சித்தம் சிவமாவது தவம்

சித்தம் சிவமாகச் செய்தவம் வேண்டாவால்
சித்தம் சிவானந்தம் சேர் ந்தோர் அற உண்டால்,
சித்தம் சிவமாக வேசித்தி முத்தியாம்
சித்தம் சிவமாதல் செய்தவப் பேறே.

இடையறாது சிவனை நினைந்து நினைந்து தன் சித்தத்தையே சிவமயம் ஆக்கி விட்ட ஒருவருக்குச் செய்ய வேண்டிய தவம் என்று எதுவும் இல்லை. சித்தம் சிவமயமான ஒருவரைச் சார்ந்த மற்றவர்களுக்கும் சித்தம் சிவ மயமாகி விடும். அத்துடன் அவர்களுக்குச் சித்தியும் முத்தியும் உண்டாகும். இங்ஙனம் சித்தம் சிவமயமாவது ஒருவர் முன்பு செய்த தவப் பயனால் மட்டுமே விளையும்.
 
7. அருளுடைமையின் ஞானம் பெறுதல்

7. அருளுடைமையின் ஞானம் பெறுதல்
அருள் = நாதம் விந்து ஆகிய திருவடி.
நாத விந்துவான திருவடி பொருந்தியபோது ஞானம் பெறுவது.


#1645 to #1647

#1645. பிரானிடம் அனைத்தும் அமையும்

பிரானருள் உண்டெனில் உண்டு நற் செல்வம்
பிரானருள் உண்டெனில் உண்டு நன் ஞானம்
பிரானருளிற் பெருந் தன்மையும் உண்டு
பிரானரு ளில்பெருந் தெய்வமு மாமே.


சிவன் அருள் உண்டானால் ஒருவருக்குக் கிடைப்பவை எவை எவை?
நல்ல செல்வம், நல்ல ஞானம், பெருந்தன்மை என்பவை அவரிடம் பொருந்தி அவர் ஒரு பெருந் தெய்வம் போல ஆகிவிடுவார்.

#1646. தமிழ் மண்டலம் ஐந்து

தமிழ் மண்டலம் ஐந்தும் தாவிய ஞானம்
உமிழ்வது போல உலகம் திரிவர்
அவிழும் மனமும் எம் ஆதி அறிவும்
தமிழ் மண்டலம் ஐந்தும் தத்துவமே

தமிழ் மண்டலம் ஐந்து என்பது தமிழ், மலையாளம், கன்னம், தெலுங்கு, துளுவு என்னும் ஐந்து மொழிகள் பேசப்படும் நாடுகளின் தொகுப்பு. தமிழ் மண்டலத்தில் உள்ள புண்ணிய தலங்களுக்குச் சென்று வணங்கினால் தமக்குள் மறைந்துள்ள ஞானம் வெளிப்படும் என்று எண்ணி பலர் அங்கெல்லாம் சுற்றித் திரிவர். ஒப்பற்ற இறைவனாகிய ஒரு சிவமே பல சக்திகளாக விளங்கும் உண்மையை ஞானியர் அறிவார். அதனால் அவர்கள் தல யாத்திரைகள் செல்லாமலேயே தாம் இருக்கும் இடத்தில் இருந்து வழிபட்டுப் பெரும் பயனைப் பெறுவார்.

#1647. வினைகளை வேரோடு அறுக்க வேண்டும்

புண்ணிய பாவம் இரண்டு உள பூமியில்
நண்ணும் பொழுது அறிவார் சில ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேர் அறுத்துப் அப்புறுத்து
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்ளீரே

புண்ணியம் பாவம் என்று இரண்டு செயல்கள் உள்ளன. அவை நாம் செய்யும் வினைகளுக்கு ஏற்ப இன்பம் துன்பம் என்று உருவெடுத்து மீண்டும் நம்மிடம் வந்து பொருந்து கின்றன. இந்த இரண்டையுமே விலக்கிவிட உள்ள ஒரே வழி வினைகளை வேருடன் அறுத்துத் தள்ளுவதே ஆகும். இதைச் செய்த பின்பு அண்ணல் ஆகிய சிவனை நன்கு ஆராய்ந்து அறிந்து கொள்வீர்!
 
#1648 to #1650

#1648. முன்னும் பின்னும் நின்று உதவுவான்

முன் நின்று அருளும் முடிகின்ற காலத்து
நன் நின்று உலகில் நடுவுயிராய் நிற்கும்
பின் நின்று அருளும் பிறவியை நீக்கிடும்
முன் நின்று எனக்கொரு முத்தி தந்தானே.

வினைகள் முடிகின்ற காலத்தில் சிவன் சீவனின் முன் தோன்றி வீடு பேற்றை அளிப்பான். அந்த நிலை வருவதற்கு முன்பு சிவன் உயிரில் உயிராக இருந்து கொண்டு, சீவனை வினைப் பயன்களை அனுபவிக்கச் செய்வான். சிவன் மறைந்து இருந்து சீவனுக்கு அருள் செய்துப் பிறவியை நீக்குவான். இங்கனம் முன்னும் பின்னும் இருந்து சீவனுக்கு நலம் தருபவன் சிவன்.

#1649. சிவலோகம் கிடைக்கும்

சிவனரு ளாற் சிலர் தேவரு மாவார்
சிவனரு ளாற்சில தெய்வத்தோ டொப்பர்
சிவனரு ளால்வினை சேரகி லாமை
சிவனருள் கூறில் அச்சிவலோக மாமே.

சிவனருள் கிடைப்பதனால் ஒருவருக்கு அதனால் மேலும் கிடைப்பவை எவை எவை? சிவனிடம் அன்பு கொண்டவர்களில் சிவர் தேவ வடிவம் பெறுவார். சிலர் தெய்வத் தன்மை பெறுவார். சிவன் அருளால் அவர்களை வினைகள் வந்து பற்றா. இந்த மூன்று அன்பர்களுமே சிவலோகம் பெறுவார்.

#1650. ஞானியராகலாம் வானவராகலாம்

புண்ணிய னெந்தை புனிதன் இணையடி
நண்ணி விளக்கென ஞானம் விளைந்தது
மண்ணவ ராவதும் வானவ ராவதும்
அண்ணல் இறைவ னருள் பெற்ற போதே.


சிவன் நாம் செய்த புண்ணியத்தின் பயன் ஆவான். அவன் நம் எல்லோருக்கும் ஒரே தந்தை. அந்தப் புனிதனின் இணையடிகள் என் உள்ளத்தில் பொருந்திய போது விளக்கின் ஒளி போன்று ஞானம் தோன்றியது. சிவன் அருள் பெற்றவர்கள் இவ்வுலகில் இருக்கும் போது ஞானியர் ஆவார். விண்ணுலகில் அவர்கள் தேவ வடிவம் பெறுவார்.
 
#1651 to #1654

#1651. இவன் அவனாக ஆகிவிடுவான்!

காயத்தேர் ஏறி மனப்பாகன் கை கூட்ட
மாயத் தேர் ஏறி மயங்கு மவை உணர்
நேயத் தேர் ஏறி நிமலன் அருள் பெற்றால்
ஆயத் தேர் ஏறி அவன் இவனாமே.


சீவன் உடல் என்னும் தேரில் ஏறும். அத்தேரை மனம் என்னும் பாகன் இயக்குவான். உலகில் நிலவும் தத்துவங்கள் என்னும் உணர்வுகளில் ஈடுபட்டு மனம் மயங்கும் அந்த சீவன். அந்த சீவனே நேயத் தேர் சென்று நிர்மலனாகிய சிவன் அருள் பெற்றுவிட்டால் சிவனடியார்களில் ஒருவனாக ஆகிவிடுவான். அவன் சிவ வடிவமும் பெறுவான்.

# 1652. சிவனடி சேர்வர்

அவ்வுல கத்தே பிறக்கி லுடலொடும்
அவ்வுல கத்தே யருந்தவம் நாடுவர்
அவ்வுல கத்தே யரனடி கூடுவர்
அவ்வுல கத்தே யருள் பெறுவாரே.

சிவலோக ஞானத்தோடு ஒருவன் பிறவி எடுத்தால், அவன் மீண்டும் அந்த சிவலோகத்தை நாடி அரிய தவம் புரிவான். சிவலோகத்தில் சிவனைடியைப் பெறுவான். சிவசக்தியின் ஆற்றலை அடைவான்.

#1653. ஈசன் எழில் வடிவானவன்

கதிர் கண்ட காந்தம் கனலின் வடிவாம்
மதி கண்ட காந்தம் மணி நீர் வடிவாம்
சதி கொண்ட சாக்கி ஏரியின் வடிவாம்
ஏரி கொண்ட ஈசன் எழில்வடி வாமே.


சூரிய காந்தக் கல் சூரிய ஒளியில் கனல் போல ஒளிரும். சந்திர காந்தக் கல் நிலவொளியில் முத்துப் போன்ற நீர்மை வடிவம் ஆகும். சக்கி முக்கிக் கற்கள் உரசும் போது தீயின் வடிவம் எடுக்கும். ஆனால் அக்கினி மண்டலத்தைத் தன்னுள் கொண்டுள்ள ஈசன் மிகுந்த எழில் வடிவானவன்.

#1654. சிவனை நாடி அவனைத் தேடுவேன்

நாடும் உறவும் கலந்து எங்கள் நந்தியைத்
தேடுவன் தேடிச் சிவபெருமான் என்று
கூடுவன் கூடிக் குரைக் கழற்கே செல்ல
வீடும் அளவும் விடுகின் றிலேனே


நான் நாடித் தேடும் உறவினன் என் குருவாகிய சிவபெருமான், நான் தேடிக் கூடும் என் உறவினன் சிவ பெருமான். கூடிய அந்தக் குரை கழல்களை நாடி நான் செல்வதற்கு என் உடலிலிருந்து என் உயிரைப் பிரித்து அறிந்து கொள்ளும் வரையில் நான் முயன்று கொண்டே இருப்பேன்.
 
Last edited:
8. அவ வேடம்

8. அவ வேடம் = பயனற்ற சின்னங்களை அணிந்து கொள்வது

#1655 to #1657

#1655. சிவன் தாள் தேடுவீர்!

ஆடம் பரம் கொண்டு அடிசில் உண்பான் பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்!
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் காணீர் சிவனவன் தாள்களே

ஆடம்பரத்துடன் உணவு உண்பதற்காக பலப் பலப் பொய் வேடங்களைத் தரித்து உலகத்தோரை மயக்கியும் அச்சுறுத்தியும் வாழும் அறிவிலிகளே! உங்கள் அவ வேடங்களைக் கை விடுங்கள். சிவனை நினைத்து ஆடுங்கள்; பாடுங்கள்; அழுது அரற்றுங்கள். எப்படியேனும் அவன் தாள்களைக் கண்டறியுங்கள்.

#1656. நலம் கெடும் புவி

ஞான மிலார் வேடம் பூண்டிந்த நாட்டிடை
ஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும்
மான நலங் கேடுமப் புவி யாதலால்
ஈனவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே.

சிவ ஞானம் இல்லாத ஒருவர் தவ வேடம் மேற்கொண்டு பிச்சை எடுத்து உண்டால் வசிக்கின்ற அந்த நாட்டின் பெருமை குன்றி விடும். ஆதலால் அருடைய அவ வேடத்தைக் கலைப்பது இன்பம் தருவதாக ஆகும்.

#1657. வையம் வாழும்

இன்பமும் துன்பமும் நாட்டா ரிடத்து உள
நன் செயல், புன் செயலால் அந்த நாட்டிற்கு ஆம்
என்ப இறைநாடி நாள்தோறும் நாட்டினில்
மன்பதை செப்பம் செயின் வையம் வாழுமே.


ஒரு நாட்டில் நிலவுகின்ற இன்ப துன்பங்கள் அந்த நாட்டு மக்கள் செய்த நல்வினை, தீவினைகளின் பயன் என்று கூறுவார். இதை நன்கு உணர்ந்து கொண்ட கொண்ட ஒரு மன்னன் தன் நாட்டில் பொய்ய்க் கோலம் பூண்டு திரிபவர்களை நல் வழிப்படுத்த வேண்டும். அப்போது அந்த நலம் பெற்று வாழும்.
 
#1658 to #1660

#1658. களையப்பட வேண்டியவர்கள்

இழிகுலத் தோர்வேடம் பூண்பர் மேலெய்த
வழிகுலத் தோர்வேடம் பூண்பர் தேவாகப்
பழிகுலத்து ஆகிய பாழ் சண்ட ரானார்
கழிகுலததோர்கள் களையப் பட் டோரே.

தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்கள் மேன்மை அடைய விரும்பித் தவவேடம் தரிப்பர்.
வழி வழியாகத் தொண்டு செய்பவர், இறை அருளைப் பெற விரும்பித் தவ வேடம் பூணுவர். பழிக்கத் தக்க செயல்களைச் செய்யும் குலத்திற் பிறந்து தவ வேடம் பூண்பவர் பாழ் சண்டாளர்கள் ஆவர். அவர்களின் பொய் வேடம் கழித்துக் களையப்பட வேண்டியதே.

#1659. ஞானம் தாங்கும் தவம்

பொய்த் தவம் செய்வார் புகுவர் நரகத்து
பொய்த் தவம் செய்தவர் புண்ணியர் ஆகார்,
பொய்த் தவம் மெய்த்தவம் போகத்துள் போக்கியம்
சத்தியம் ஞானத்தால் தாங்கும் தவங்களே .


பொய்த் தவக் கோலம் பூணுகின்றவர் நரகம் சென்று புகுவர்! அவர் ஒரு நாளும் புண்ணியம் எய்தார்! மெய்த் தவத்தைப் போன்றே பொய்த் தவமும் இந்த உலக இன்பங்கள் சிலவற்றை ஒருவருக்கு அளிக்கலாம். ஆனால் உண்மையான ஞானத்தினால் மட்டுமே மெய்த் தவம் கைக்கூடும்.

#1660. பொய் வேடமும் உய் வேடமாகும்

பொய் வேடம் பூண்பர் பொசித்தல் பயனாக
மெய்வேடம் பூண்போர் மிகு பிச்சை கைக்கொள்வர்
பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும்
உய் வேடமாகும் உணர்ந்தறிந் தோர்க்கே.


நன்கு புசிப்பதற்காகவே சிலர் பொய்த் தவ வேடம் தரிப்பர். உண்மைத் தவம் செய்பவர் உடலில் உயிர் பொருந்தி இருப்பதற்குப் பிச்சை ஏற்று உண்பர். பொய் வேடம் பூண்டவரும் அதையே உய்வேடமாக ஆக்க முடியும் – அவர் அந்தக் கோலத்துக்கு உரிய மேன்மையாலும், உண்மையான ஞானத்தைப் பெறுவதாலும்.
 
9. தவ வேடம்

தவத்துக்கு உரிய சின்னங்களைத் தரிப்பது.

அவை திருநீறு, உருத்திராக்கம், குண்டலம் போன்றவை.


#1661 to #1664

#1661. தவக் கோலம் சிறக்கும்

தவம்மிக் கவரே தலையான வேடர்
அவம்மிக் கவரே அதி கொலை வேடர்
அவம்மிக் கவர் வேடத்து ஆகார் அவ்வேடம்
தவம்மிக் கவர்க்கு அன்றித் தாங்கஒண் ணாதே

தவத்தில் சிறந்தவர்கள் அணிவது தலையான தவக் கோலம். தாழ்ந்தவர்கள் பொய்யாகத் தவக் கோலம் புனைவது கொடுமையிலும் கொடுமை ஆகும். தாழ்ந்த இழி செயல் புரிபவர்கள் தவக் கோலம் பூணத் தகுதி இல்லாதவர்கள். தக்கோலத்தைத் தவத்தில் சிறந்தவர்களுக்கே தாங்க ஒண்ணும்.

#1662. தவக்கோலச் சின்னங்கள்

பூதி யணிவது சாதன மாதியிற்
காதணி தாம்பிர குண்டலங் கண்டிகை
ஓதிய வர்க்கும் உருத்திர சாதனம்
தீதில் சிவயோகி சாதனந் தேரிலே

தவக் கோலம் பூண ஏற்றவை இவை. நெற்றியில் சிறந்த திருநீறு, காதுகளில் தாமிரக் குண்டலம், கழுத்தில் உருத்திராக்க மாலை. இவை வேத ஆகமங்களை அறிந்த ஒருவருக்கு ஏற்ற சின்னங்கள்.

#1663. மற்ற சிவச் சின்னங்கள்

யோகிக் கிடுமது உட்கட்டுக் கஞ்சுளி
தோகைக்கு பாசத்துச் சுற்றுஞ் சடைய தொன்று
ஆகத்து நீரணி யாங்கக் கபாலம்
சீகத்த மாத்திரை திண்பிரம் பாகுமே.

சிவ யோகிக்கு உரிய பிற சின்னங்கள் இவை :
உள்ளாடை ஆகிய கோவணம், ஒரு கைப் பை, மயில் இறகுக் குல்லாய், சுற்றிக் கட்டிய சடை, உடல் முழுவதும் திருநீறு, கையில் ஒரு திருவோடு, ஒரு அழகிய பிரம்பு என்பவை ஆகும்.

#1664. சிவயோகியின் சீரிய சின்னங்கள்

காதணி குண்டலம் கண்டிகை நாதமும்
ஊதுநற் சங்கும் உயர்கட்டிக் கப்பரை
ஏதம்இல் பாதுகம் யோகாந்தம் ஆதனம்
ஏதம்இல் யோகபட்டம் தண்டம் ஈரைந்தே.

காதணியாகக் குண்டலம், கழுத்தணியாக உருத்திராக்கம், சிவசிவ என்னும் ஒலி, ஊதுகின்ற வெண் சங்கு, ஆறுகட்டி, திருவோடு, பாதக் குறடு, ஆதனம், யோகப் பட்டம், யோக தண்டம் என்னும் பத்துப் பொருட்கள் சிவ யோகிக்கு உரியவை.

[ஆறுகட்டி = சைவர் காதில் அணியும் உருத்திராக்க மணிவடம் ]

[A Pendant of six ruḍrākṣa beads, worn round the ear by Šaivas]
 
10. திரு நீறு

10. திரு நீறு = விபூதி

#1665 to #1667

#1665. ஓங்காரம் ஒன்றாக்கி விடும்

நூலும் சிகையும் உணரார் நின் மூடர்கள்
நூலது வேதாந்தம் , நுண் சிகை ஞானமாம்
பால் ஒன்றும் அந்தணர் பார்ப்பார் பரம் உயிர்
ஓர் ஒன்று இரண்டினில் ஓங்காரம் ஓதிலே


பூணூல், சிகை இவற்றை அணிந்திருக்கும் மூடர்கள் அவற்றின் உண்மை இயல்பை அறிவதில் வேதாந்தத்தை உணர்த்துவது பூணூல் ஆகும். சிகையில் உள்ள குடுமி வேதாந்த ஞானத்தைக் குறிக்கும். சிவனிடத்தில் ஒன்றிவிட்டவர்கள் சிவனும் சீவனும் ஒன்று என்று காண்பர். இன்னமும் சிவனுடன் ஒன்றி விடாதவர்கள் ஓங்காரத்தை ஓதுவதன் மூலம் சிவனுடன் ஒன்றும் தன்மையும், மேன்மையும் அடைவர்.

#1666. திருவடி சேர்வர்

கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வீரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் கதி
சிங்காரமான திருவடி சேர்வரே.

கபால மாலையை அணிந்த சிவன் பூசிக் கொள்ளும் கவசத் திருநீற்றை நீங்களும் மங்காமல் பூசி மகிழுங்கள் அப்போது நீங்கள் செய்துள்ள வினைகள் அழிந்து விடும். உங்களுக்கு அரிய சிவகதி கிடைக்கும். நீங்களும் சிவனின் சிங்காரத் திருவடிகளைச் சென்று சேரலாம்.

#1667. உயர் குலத்தவர் ஆகலாம்

அரசுட னாலத்தி யாகுமக் காரம்
விரவு கனலில் வியனுரு மாறி
நிரவயன் நின்மலன் தாள் பெற்ற நீதர்
உருவம் பிரமன் உயர்குல மாமே.

அரசு, ஆல், அத்தி போன்ற மரங்களின் சமித்துக்கள் வேள்வித் தீக்கு இரையாகும் போது, அவை உருமாறித் திருநீறாக மாறி விடும். அது போன்றே அவயவங்களோ, மலங்களோ இல்லாத சிவனின் அருளைப் பெற்றவர்கள் தம் உருவம் மாறி உயர் குலத்தை அடைவர்.
 
11. ஞானவேடம்

#1668 to #1670

#1668. சிவ ஒளியில் பொருந்தலாம்

ஞானமிலார் வேடம் பூண்டும் நரகத்தர்;
ஞான முள்ளார் வேடம் இன்று எனின் நன் முத்தர்
ஞானம் உளதாக வேண்டுவோர் நக்கன் பால்
ஞானம் உள வேடம் நண்ணி நிற்போரே.


சிவஞானம் பெறாத ஒருவன் சிவ ஞானியைப் போல வேடம் தரித்தால் அவன் நரகத்தை அடைவான். சிவஞானம் அடைந்த ஒருவர், சிவ ஞானி வேடம் தரிக்காவிடினும் அவர் நல்ல முக்தர் ஆவார். சிவஞானம் பெற விரும்புகின்ற ஒருவர் அவன் அண்மையிலேயே எப்போதும் தன்னை இருத்திக் கொள்வார்.

#1669. பயனற்ற வாதம் புரிய மாட்டார்.

புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை
நன்ஞானத் தோர் வேடம் பூணார் அருள் நண்ணித்
துன்ஞானத் தோர் சமயத் துரிசுள்ளோர்
பின்ஞானத் தோரோன்றும் பேச கில்லாரே .


தாழ்ந்த ஞானம் உடைய ஒருவர் உயர்ந்த சிவ ஞானியின் கோலத்தைத் தரித்தாலும், அதனால் அவருக்கு எந்தப் பயனும் விளையாது. சிவ ஞானம் பெற்ற ஒருவர் அதில் அமிழ்ந்து விடுவதால் அதற்குரிய கோலத்தைத் தரிப்பதில் கருத்தைச் செலுத்த மாட்டார். மாறுபட்ட ஞானத்தை உடையவர் சமய விரோதப் போக்கு மேற்கொள்வார். நல்ல ஞானம் உடையவர்கள் இது போன்ற சமய விரோதிகளிடம் வீண் வாதம் செய்து தம் பொன்னான காலத்தை வீணாக்க மாட்டார்கள்.

#1670. உவமையற்றவன் சிவன்

சிவ ஞானிகட்குஞ் சிவயோகி கட்கும்
அவமான சாதன மாகாது தேரில்
அவமா மவர்க்கது சாதன நான்கும்
உவமான மில்பொருள் உள்ளுற லாமே

ஆராய்ந்து நோக்கினால் மெய்யான சிவ ஞானிகளுக்கும், சிவயோகிகளுக்கும் புறச் சாதனங்கள் தேவை இல்லை. திருநீறு, சடை முடி, உருத்திராக்கம், ஐந்தெழுத்து என்னும் நான்கு புறச் சாதனங்களும் வீண். இவைகளின் உதவி இன்றியே அவர்கள் உவமையற்ற சிவனுடன் உள்ளூறப் பொருந்தி வாழலாம்.
 
#1671 to #1673

#1671. ஆசைகளை வென்றவனே ஞானி

கத்தித் திரிவர் கழுவடி நாய்போற்
கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள்
ஒத்துப் பொறியு முடலு மிருக்கவே
செத்துத் திரிவர் சிவஞானி யார்களே.


செப்பிடு வித்தைக்காரர்கள் கழு மரத்தின் அடியில் ஊனையும், உதிரத்தையும் சுவைக்க அலைகின்ற நாயைப் போலக் கத்தித் திரிவார்கள். மாய வித்தைகள் செய்பவர் கழுகு போலக் கொத்திப் பறித்துக் கொள்வர் ஏமாந்த மனிதர்களின் செல்வத்தை! உடலும் பொறிகளும் நல்ல நிலையில் இருந்த போதிலும், உலக இன்பங்களை வெறுத்து ஒதுக்கி விட்டு இறந்தவரைப் போலத் திரிவார் ஒரு மெய் ஞானி.

#1672. ‘சிவனே!’ என்று இருப்பவரே அடியார்

அடியா ரவரே யடியார லாதார்
அடியாரு மாகாரவ் வேடமு மாகார்
அடியார் சிவஞான மானது பெற்றோர்
அடியா ரலாதார் ளன்றே


தன் முனைப்பு என்று ஒன்றும் இல்லாமல் சிவன் திருவருளின்படி நடப்பவர் மட்டுமே
உண்மையான சிவனடியார். அந்தத் தகுதியை அடையாத ஒருவர் சிவனடியார் அல்லர். அவர் தரித்துள்ள சிவக் கோலமும் மெய்க் கோலம் அன்று. சிவன் அருள் பெற்றவரே மெய்யடியார். மற்றவர்கள் பொய்யடியார்.

# 1673. ஞான சாதனம் ஆகும்

ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவாம்
தான் உற்ற வேடமும் தற் சிவயோகமே
ஆன அவ்வேடம் அருள் ஞான சாதனம்
ஆனதும் ஆம் ஒன்றும் ஆகாதவனுக்கே

சிவ ஞானிக்கு அழகிய சிவக் கோலம் நல்லதே! அந்தக் கோலத்தின் உண்மையை உணர்ந்து கொண்டு அதன்படி ஒழுகுவது சிவயோகம். அப்போது அந்த சிவக் கோலம் ஒரு ஞான சாதனம் ஆகிவிடும். இந்த உண்மையை அறியாத ஒருவனுக்கு அந்தக் கோலம் வெறும் ஒரு புறத் தோற்றம் மட்டுமே. அது ஞான சாதனம் ஆகாது.
 
#1674 & #1675

#1674. சிவ ஞானி

ஞானத்தில் நாற்பதம் நண்ணும் சிவஞானி
தானத்தில் வைத்தல் தனி ஆலயத் தனாம்
மோனத்தன் ஆதலின் முத்தனாம் சித்தன்;
எனைத் தவசி இவன் என லாகுமே


திருவடி உணர்வினால் ஞானம் பெற்றுச் சிவன் நிலையை ஒரு சிவஞானி அடைந்து விடுவான். அவன் நடமாடும் ஓர் ஒப்பற்ற சிவாலயம் ஆவான். அவன் மோனத்தில் மூழ்கி இருப்பதால் ஒரு சிறந்த சித்தனும் முத்தனும் ஆவான். இவனைப்பற்றிப் பேசுவதற்கு மற்றவர்களுக்குத் தகுதி இல்லை.

#1675. நந்தி பதம் முத்தி தரும்

தானன்றித் தன்மையும், தான் அவ னாதலும்,
ஏனைய அச்சிவ மான இயற்கையும்,
தான் உறு சாதக முத்திரை சாத்தலும்
மோனமும் நந்திபதம் முத்தி பெற்றதே

பிரணவ சித்தியும், சிவபதவியும் பெற்றவர்களின் இயல்பு இது.
தன்னறிவை இழந்து இருப்பது, சிவத்துடன் இரண்டறக் கலந்து விளங்குவது, எந்தப் பொருளுக்கும் உரிய மூன்று காலங்களையும் அறிகின்ற ஆற்றல் பெறுவது, ஞானம் பெறும் தகுதி படைத்தவர்களுக்குத் தன் பார்வையினால் அல்லது பரிசத்தால் சிவ ஞானத்தை வழங்குவது.
 
12. சிவ வேடம்

சிவ வேடம் = சிவபெருமானின் அடிமை என்று தன்னை எண்ணிக் கொள்பவர் ஏற்கும் வேடம்.


#1676 to #1679

#1676. சிவ வேடத்தார்

அருளால் அரனுக்கு அடிமை அது ஆகிப்
பொருளாம் தனது உடல் பொற்பதி நாடி,
இருளானது இன்றி இருஞ் செயல் அற்றோர்
தெருளாம் அடிமைச் சிவ வேடத்தாரே


சிவன் அருளால் அவனுக்கே அடிமை ஆகித் தன் உடலுக்கு மேலே விளங்குகின்ற ஒளி மயமான அண்ட கோசத்தை அறிந்து கொண்டு, அறியாமை இருள் நீங்கித் தன் செயல் என்று எதுவும் இல்லாமல், உடல், பொருள் ஆவி அனைத்தையும் சிவனுக்கே அர்ப்பணித்தவரே தெளிந்த சிவ வேடம் பூண்டவர்.

#1677. கடலில் அகப்பட்ட கட்டை

உடலில் துவக்கிய வேடம் உயிர்க்கு ஆகா,
உடல் கழன்றால் வேடம் உடனே கழலும,
உடல் உயிர் உண்மை என்று ஓர்ந்து கொள்ளாதார்
கடலில் அகப்பட்ட கட்டை ஒத்தாரே.


உடலில் ஏற்றுக் கொண்ட புறக் கோலங்கள் உள்ளே உள்ள ஆன்மாவுக்கு எந்தப் பயனையும் தராது. ஆன்மா உடலில் இருந்து நீங்கும் போதே அந்த வேடமும் கலைந்து விடும். உடல் அசத்து, ஆன்மா சத்து என்ற வேறுபாட்டினை உணராதவர்கள் கடலில் விழுந்த கட்டை கடலுக்கும் கரைக்கும் இடையில் அல்லாடுவதைப் போலவே பிறப்பு, இறப்பு என்ற இரண்டின் இடையே ஊசலாடுவர்.

#1678. செயல் அற்று இருப்பர்

மயல் அற்று, இருள் அற்று, மாமனம் அற்றுக்
கயல் உற்ற கண்ணியர் கை இணக்கு அற்றுத்
துயல் அற்றவரோடும் தாமே தாமாகிச்
செயல் அற்று இருப்பார் சிவ வேடத்தாரே

சிவ வேடத்தார் ஆணவ மலம் தரும் மயக்கத்தை நீக்குவர். அதன் விளைவாகிய அறியாமை இருளை அகற்றுவர். மனத்தால் எண்ணும் செயலைத துறப்பர். மீன் விழியாரின் தழுவலையும் துறப்பர். தெளிந்த ஞானிகளுடன் கூடித் தமக்கு என்று ஒரு செயலும் இல்லாமல் இருப்பர்.

#1679. இன்பப் பொருளை எய்தலாம்

ஓடுங் குதிரைக் குசை திண்ணம் பற்றுமின்
வேடங் கொண்டென் செய்வீர் வேண்டா மனிதரே
நடுமின் நந்தியை நம்பெருமான் தன்னைத்
தேடுமின் பப்பொருள் சென்றெய் தலாமே.

மனிதர்களே! புறக் கோலம் தரித்துக் கொள்வதால் மட்டும் என்ன பயன்? பிராண வடிவமாக இருந்து கொண்டு உங்களுக்கு உள்ளே ஓடும் அந்தக் குதிரையின் கடிவாளத்தைக் கைப் பற்றுங்கள் !அதை உங்கள் வசப்படுத்துங்கள்! வீணான புறக் கோலத்தைக் கைவிட்டுவிட்டுச் சிவபெருமானை நாடுங்கள்! நீங்காமல் அவனிடத்தில் மனத்தை வைத்தால் இன்பப் பொருளான அவனைச் சென்று அடைந்திட இயலும்.
 
13. அபக்குவன்

13. அபக்குவன் = பக்குவம் இல்லாதவன்

#1680 to #1683

#1680. இரு குருடர்கள்

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழி விழுமாறே.

தன் அறிவால் மாணவனின் அறியாமையைப் போக்கும் நல்ல குருவை ஏற்றுக் கொள்ள மாட்டார். தானே அறியாமையில் அழுந்தியுள்ள ஒரு குருவை ஏற்பார். இது ஒரு குருடனுக்கு இன்னொரு குருடன் வழி காட்டி அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு குழியில் விழுவதைப் போன்றது.

#1681. புறக்கடை இச்சிப்பர்

மனத்தில் எழுந்தது ஓர் மாயக் கண்ணாடி
நினைப்பின் அதனில் நிழலையும் காணார்
வினைப் பயன் போக விளக்கியும் கொள்ளார்
புறக்கடை இச்சித்துப் போகின்றவாறே.

மனத்தில் இருந்தே பிரதிபலிக்கின்றன நாம் காண்கின்ற, உணர்கின்ற, எண்ணுகின்ற அனைத்துமே. ஆன்மாவை மறைக்கும் அந்தத் திரையின் நிழலைக் கூட இவர்கள் காண்பதில்லை. தம் வினைப் பயன்கள் வீணாகிவிடுவதற்கு சிறிதும் முயற்சி செய்வதும் இல்லை. மீண்டும் மீண்டும் அறியாமையின் விளைவாக உலக இன்பங்களையே நாடுகின்றார்கள்

#1682. ஊன் நிலை செய்யும் உருவிலி

‘ஏய் ‘ எனில் ‘என்’ என மாட்டார்கள் பிரசைகள்
வாய் முலை பெய்ய மதுரம் நின்று ஊறிடும்,
தாய் முலை யாவது அறியார் தமர் உளோர்
ஊன் நிலை செய்யும் உருவிலி தானே

‘ஏய்!’ என்று அழைத்தாலும் மறுமொழி கூறார் வெறும் மனிதர்கள்! ஆனால் நம் கண்ணுக்குத் தெரியாத உருவிலியாகிய சிவபெருமான் செய்வது என்ன தெரியுமா ? பிறந்த குழந்தையின் உடலில் உயிர் நிலைத்திருப்பதற்கு அதன் தாயின் மார்பில் இனிமையான பாலைச் சுரக்கச் செய்கின்றான். இந்த மாயம் நிகழ்வது எங்கனம் என்று வேறு எவரும் அறியார்!
 
மரமும், நீரும்.



கானகத்தில் உள்ள ஆசிரமத்திலிருந்து
கன்னி முயற்சியாக பிக்ஷை வாங்கிவரச்
சென்றான் கிராமத்துக்கு, இள வயதுப்
பெண்களைக் கண்டறியாத பிரம்மச்சாரி.

முதலில் சென்ற சில வீடுகளில், பிக்ஷை
முதியவர்களும், ஆண்களும் இட்டனர்.
ஒரு வீட்டில் ஒரு அழகிய இளம் சிறுமி
அருளோடு பிக்ஷை அளிக்க வருகையில்,

அவள் முன்னழகைக் கண்டு கேட்டான்,
“அவளுக்கு ஏன் சிரங்குகள் உள்ளன?”
அருகிலிருந்த ஒரு மூதாட்டி கூறினாள்,
“மருவுமல்ல, சிரங்குமல்ல அவைகள்;

மணமாகிய பின் பிறக்கும் குழந்தைக்கு
உணவளிக்கவே அமைக்கப்பட்டன இவை.”
மின்னல் தாக்கியது போல உணர்ந்தவன்,
சொன்னான் அனைவரையும் நோக்கி.

“என்றோ பிறக்கப் போகும் குழந்தைக்கும்
இன்றே உணவுக்கு ஏற்பாடு செய்துள்ள
அன்னை பராசக்தி என்னையும் காப்பாள்;
இன்று முதல் நான் பிக்ஷைக்கு செல்லேன்!”

மரத்தை நட்டவன் தண்ணீர் ஊற்றுவான்.
தரமாட்டான் என ஏன் எண்ண வேண்டும்?
கல்லினுள் தேரைக்கும், கருவினுள் குழவிக்கும்
சொல்லுமுன் தருபவன் நம்மையும் காப்பான்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.


WHO WATERS THE TRESS?

A young brahmachAri goes for bikshA from a remote area in a forest to a village for the very first time in his life. He has never seen any young women so far.

He receives bikshA from boys and menfolk till he reaches a house where a pretty girl offers him bikshA. He sees a young woman for the very first time in his life.

He learns that her breasts are given by God to feed her babies – which she will bear some time in the future, after getting married to a man. He jumps as though he has received an electric shock.

He vows that the same Goddess ParAshakthi, who makes arrangements for food for even the unborn babies, will also feed him and that he will never again beg for food.


https://visalramani.wordpress.com/about/2491-2/9-மரமும்-நீரும்/
 
#1683 to #1685

#1683. முக்கரணங்களின் தூய்மை

வாய் ஒன்று சொல்லி, மனம் ஒன்று சிந்தித்து
நீ ஒன்று செய்யல், உறுதி நெடுந்தகாய்!
தீ என்று இங்கு உன்னைத் தெளிவன் தெளிந்த பின்
பேய் என்று இங்கு என்னைப் பிறர் தெளியாரே.

உறுதி படைத்த நெடுந்தகையோனே! நீ வாயால் ஒன்றைக் கூறி, மனத்தால் வேறு ஒன்றை எண்ணி, செயலால் பிறிதொன்றைச் செய்யாதே! மனம், மொழி, மெய் என்னும் மூன்று கரணங்களும் தூய்மையாக இருந்தால் மட்டுமே நீ சிவாக்கினி பெற்றவன் என்று நான் உன்னைக் கூறுவேன். அப்போது தான் என் சொல்லைப் பித்தனின் பேச்சு என்று எவரும் கூற மாட்டார்கள்.

# 1684. பஞ்ச மா பாதகங்கள்

பஞ்சத் துரோகத்திப் பா தகர் தம்மை
அஞ்சச் சமயத்தோர் வேந்த னருந் தண்டம்
விஞ்சச்செய் திப்புவி வேறு விடாவிடில்
பஞ்சத்து ளாய் புவிமுற்றும் பாழாகுமே.


பஞ்ச மா பாதகங்கள் செய்பவரை மன்னன் அஞ்சும் வண்ணம் தண்டித்து அவர்களை நாடு கடத்த வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அந்த நாடு பஞ்சம், வறுமை இவற்றால் பாழாகிவிடும்.

#1685. பவத்திடை நின்று பரிதவிப்பர்

தவத்திடை நின்றவர் தாம் உண்ணும் கன்மம்
சிவத்திடை நின்றது தேவர் அறியார்
தவத்திடை நின்றறியாதவர் எல்லாம்
பவத்திடை நின்றதோர் பாடு அது ஆமே.


தவத்தை மேற் கொள்பவருக்குப் பல துன்பங்கள் நேரலாம். அவை அனைத்தும் சாதகனின் கன்மம் கழிவதற்காகச் சிவத்தினால் ஏற்படுத்தப் பட்டவை என்று அறிந்து கொள்ள வேண்டும். இந்த உண்மையைத் தேவரும் அறிகிலர். தவத்திடை நிலையாக நிற்க இயலாதவர்கள் பவம் என்னும் பிறவித் துன்பத்தில் சிக்கிக் கொண்டு வருந்துவர்.
 
நேர்மை, வாய்மை




நேர்மை என்பது நம் மனம், மொழி,
செயல்களை ஒருமைப்படுத்துவதே.
நேரில் ஒன்றும், மறைவில் ஒன்றும்,
செய்யாதிருப்பதே நேர்மை ஆகும்.

பேச வேண்டும், நாம் எண்ணியதையே;
பேச்சும், எண்ணமும் வேறுபடக் கூடாது!
பேசியதையே நாம் செய்ய வேண்டும்;
பேச்சும், செயலும் மாறுபடக் கூடாது!

ஒன்றை நினைத்து, மற்றதைப் பேசினால்;
அழிந்து போகும் நம் வாக்கின் நேர்மை!
ஒன்றைப் பேசி, மற்றதைச் செய்தால்;
அழிந்து போகும் நம் உடலின் நேர்மை!

தன் நெஞ்சு அறிந்து பொய் சொன்னால்,
தன் நெஞ்சே தன்னைச் சுடும் என்றாலும்;
பொய்மையும் உயிர்களுக்கு நன்மை செய்தால்,
வாய்மையே ஆகும், இது வள்ளுவன் வாக்கு!

வாய்மை என்பது எந்த உயிர்களுக்கும்,
தீமை பயக்காததைச் சொல்வதே ஆம்.
வாய்மையை விடவும் சிறந்தது ஒன்று
வலை விரித்துத் தேடினாலும் கிட்டாது.

மனம், மொழி, செயல்கள் மாறுபடும்போது,
மனோ வியாதிகள் உற்பத்தி ஆகின்றன.
ஒருமைப்பாட்டையும், வாய்மையையும்
ஒருங்கிணைத்து நாம் வாழ்ந்திடுவோம்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

STRAIGHT-FORWARDNESS AND TRUTHFULNESS.

Straight – forwardness implies the uniformity of our thoughts, words and actions. Our actions and words in front of a person and behind his back should not differ in any way.

We must speak our genuine thoughts and we must act according to our genuine words. The thoughts and words must not contradict so also our words and actions must not disagree. If we think and speak differently our words get defiled. If we talk and act differently, our actions get defiled.

One should always be true to himself. If it is certain that a truth revealed is sure to hurt some one, then we are allowed to speak a harmless ‘white-lie’ to defuse the situation.

When a person’s thoughts, words and actions differ he will tend to become a split personality – truthful neither to himself nor to the others around him.

https://visalramani.wordpress.com/about/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/
 
#1686 to #1689

# 1686. இறைபால் இயற்கை அல்லாதவை

கன்றலுங் கருதலுங் கருமம் செய்தலும்
தின்றலும் சுவைத்தலும் தீமை செய்தலும்
பின்றலும் பிறங்கலும் பெருமை கூறலும்
என்றிவை இறை பால் இயற்கை அல்லவே


இந்த ஒன்பது குற்றங்கள் இறை மீது அன்பு கொண்டவருக்கு ஏற்றவை அல்ல.

1. பிறரிடம் சினம் கொள்ளுவது,

2. எதையாவது சிந்தித்துக் கொண்டே இருப்பது,

3. எப்போதும் ஏதோ செயல்கள் புரிந்து கொண்டே இருப்பது,

4. ஓயாமல் தின்பது,

5. எதையாவது சுவைப்பது,

6. பிறருக்குத் தீங்கிழைப்பது,

7. குறைவாக எண்ணுவது,

8. நிறைவாக எண்ணுவது,

9. தற்பெருமை பேசுவது.

#1687. சிவ ஒளி இடரை நீக்கும்

விடிவது அறியார், வெளி காண மாட்டார்,
விடியில் வெளியில் விழிக்கவும் மாட்டார்
கடியது ஓர் உள், இமை கட்டுமின் காண்மின்
விடியாமை காக்கும் விளக்கு அது ஆமே.

பக்குவம் அற்றவர்கள் தமக்கு நன்மை தருவதை அறியமாட்டார். பரமாகாயத்தைக் காண
மாட்டார். பரவெளியில் பார்வையைச் செலுத்த மாட்டார் . பக்குவம் அடையாதவர்களே ! கண் இமைகளைக் காவலாக்கி விடுங்கள். கண்பார்வை வெளியே செல்லாது தடுத்து நிறுத்துங்கள். அதை உள்முகமாகத் திருப்புங்கள். அப்போது இடர்களை நீக்கும் சிவபெருமானின் ஒளி உங்களுக்குப் புலப்படும்.

#1688. பித்தான சீடனுக்கு ஈயாதீர்!

வைத்த பசுபாசம் மாற்றும் நெறி வைகிப்
பெத்தம் அற முத்தன் ஆகி, பிறழ்வுற்றுத்
தத்துவம் உன்னித் தலைப்படா தவாறு
பித்தான சீடனுக்கு ஈயப்பெறா தானே.

ஆணவ மலம் அனாதி காலமாக ஆன்மாவுடன் இணைந்துள்ளது. சாதகன் அதை மாற்றும் வழியில் செல்லவேண்டும். தன் மலங்கள் நீங்கி முத்தன் ஆகிவிட விழைய வேண்டும். உலகத்தோரின் இயல்பிலிருந்து மாறுபட்டு இருக்க வேண்டும். உண்மைப் பொருளை நாட வேண்டும். இவற்றைச் செய்யாதவனும் மனவுறுதி இல்லாதவனும் ஆன ஒரு சீடனுக்கு ஞானத்தை ஒருபோதும் ஈயாதீர்கள்.

#1689. விலக்கப்பட வேண்டிய மாணவன்

மன்னும் மலம் ஐந்தும் மாற்றும் வகை ஓரான்
துன்னிய காமாதி தோயும் தொழில் நீங்கான்
பின்னிய பொய்யன் , பிறப்பு இறப்பு அஞ்சாதான்
அன்னிய னாவான் அசற் சீடனாமே.

ஆணவம், கன்மம், மாயை, மாயேயம் , திரோதாயி ஐந்து மலங்களை நீக்குகின்ற வழிகளை ஆராயாதவன் ; காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் இவற்றில் தோய்ந்த செயல்களை விலக்காதவன்; பொய் கலந்து பேசுபவன்; பிறவிப் பிணியைக் கண்டு அஞ்சாதவன் குருவால் விலக்கப் பட வேண்டிய மாணவன் ஆவான்.
 
14. பக்குவன்

14. பக்குவன் = தகுதி உடையவனும், குருவின் சொற்படி நடப்பவனும் ஆன நல்ல மாணவன்.

#1690 to #1693

#1690. நல்வழி அறிவாளர்

தொழுது அறிவாளர் சுருதி கண்ணாகப்
பழுது அறியாத பரம குருவை
வழி அறிவார் நல் வழி அறிவாளர்
அழிவு அறிவார் மற்றை அல்லாதவரே.


வழி பட்டுத் தொழும் இயல்புடைய மாணவன் வேதாகமத்தின் இன்றியமையாமையை உணர்ந்து கொண்டு, குற்றமற்ற ஒரு பரம குருவை நாடிச் செல்வான். இவன் முக்தியை விரும்பும் நல்லறிவு படைத்தவன். உலகியலில் ஆர்வம் கொண்டு முக்தியை விரும்பாத மாணவனோ எனில் அழியும் வழியையே அறிவான்.

#1691. உகந்து ஆண்டருளாயே

பதைத்து ஒழிந்தேன் பரமா உனை நாடி
அதைத்து ஒழிந்தேன் , இனி யாரோடும் கூடேன்,
சிதைத்து அடியேன் வினை சிந்தனை தீர
உதைத்து, உடையாய் உகந்து ஆண்டருளாயே.

பரமா! உன்னை நாடி நான் வீணே பதை பதைப்பதைக் கை விட்டேன். உலகத்தில் உழன்று களைத்துப் போனேன். இனி யாருடனும் நான் சேர மாட்டேன். என் வினைகளைச் சிதைத்து அழித்து விடு! என் சிந்தாகுலம் தீரும் வண்ணம் என்னை உவந்து ஏற்றுக்கொள்வாய்!

#1692. இசைக்கின்ற அன்பருக்கு ஈயலாம்

பதைக்கின்ற போதே பரம் என்னும் வித்தை
விதைக்கின்ற வித்தினை மேல்நின்று நோக்கிச்
சிதைக்கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தி
இசைக்கின்ற அன்பருக்கு ஈயலும் ஆமே.


ஞானம் பெறவேண்டும் என்னும் பதைபதைப்பு இருக்கும் போதே மாணவனிடம் பரம் என்னும் விதையை விதைப்பான் நல்ல ஆசிரியன். சிந்தையைச் சிதறாமல் ஒருமுகப் படுத்தி மேலே சகசிர தளத்தில் நிலை நிறுத்தி இசைவாக இருக்கும் அன்பனுக்கு மெய் ஞானம் உறுதியாக ஈயப்படும்.

#1693. நல்ல குருவை நாடுவீர்

கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்க
உள்ள பொருளுடல் ஆவி யுடனீக
எள்ளத் தனையு மிடைவிடாதே நின்று
தெள்ளி யறியச் சிவ பதந் தானே.


நாடுவதாயின் நல்ல குருவை நாடுவீர்! அவருக்கு உம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் காணிக்கை ஆக்குவீர் ! அவர் காட்டும் நல்ல வழியில் எள்ளளவும் தடங்கல் தொடர்ந்து நடந்தால் உமக்குச் சிவபதம் தானே தெளிவாகும்.#1693. நல்ல குருவை நாடுவீர்
 
#1694 to #1696

#1694. உபதேசம் பெற உகந்த நாட்கள்
சோதி விசாகந் தொடர்ந்திரு தேள் நண்டு
ஓதிய நாளே யுணர்வது தானென்று
நீதியுள் நீர்மை நினைந்தவர்க் கல்லது
ஆதியு மேது மறிய கிலானே.


உபதேசம் பெறுவதற்கு உகந்த நட்சத்திரங்கள் சுவாதியும் விசாகமும். உபதேசம் பெற உகந்த ஓரைகள் விருச்சிகமும் , கடகமும். இதன் காரணம் யான் அறியேன். எனினும் குருமுகமாக உபதேசம் பெறுவதற்கு ஆதி முதல் இவையே உகந்தவையாக இருந்து வருகின்றன.

#1695. திருவடி கண்டு அருள் பெறலாம்

தொழில் ஆர, மாமணித் தூய்து ஆன சிந்தை
எழிலால் இறைவன் இடம் கொண்ட போதே
அழல் ஆர் விறலாம் வினைஅதுபோகக்
கழல் ஆர் திருவடி கண்டு அருள் ஆமே.


நல்ல குருவின் உபதேசம் சாதகனின் சிந்தையைத் தூய்மையாக்கி விடும். பெரிய
மணியைப் போன்ற அவன் சிந்தையில் ஒளிருகின்ற எந்தை எழுந்தருள்வான். அக்கணமே அவனைப் பிணித்திருந்த வல் வினைகள் நீங்கி விடும். அவன் இறைவனின் கழல் ஒலிக்கும் திருவடியைக் கண்டு நாத உணர்வாகிய சிவன் அருளைப் பெறலாம்.

#1696. நல்ல சீடன் யார் ?

சாத்திகனாய்ப், பரதத்துவம் தான் உன்னி
ஆத்திக பேத நெறி தோற்றம் ஆகியே
ஆர்த்த பிறவியின் அஞ்சி அறநெறி
சாத்த வல்லான் அவன் சற் சீடனாமே.
நல்ல சீடனின் இலக்கணம் இது.

சத்துவ குணம் கொண்டிருக்க வேண்டும்; சிவத்தைத் தியானித்து வர வேண்டும்; ஏதாவது ஒரு ஆத்திக நெறியைப் பின் பற்ற வேண்டும். வினைப் பயனாக விளையும் பிறவிப் பிணிக்கு அஞ்ச வேண்டும். மேன்மையான அறநெறிகளைப் பின் பற்ற வேண்டும்.
 
#1697 to #1700

#1697. ஆனந்த சக்தியில் இச்சை

சத்தும் அசத்தும் எவ்வாறு எனத் தான் உன்னிச்
சித்தை உருக்கிச் சிவனருள் கை காட்டப்
பத்தியில் ஞானம் பெறப் பணிந்துஆனந்தச்
சத்தியில் இச்சை தருவோன் சற் சீடனே

இந்த உலகில் உள்ளவற்றில் ‘சத்து’ என்னும் நிலையான, அழியாத பொருள் எது? ‘அசத்து’ என்னும் என்னும் நிலையற்ற, அழிகின்ற பொருள் எது? என்று சிந்தித்துக் கண்டறிய வேண்டும்.சிவனையே சிந்திதது அவனருள் பெற வேண்டும். பத்தி செய்து சிவஞானம் பெற வேண்டும். சிவனைப் பணிந்து ஆனந்த வடிவாகிய சிவ சக்தியின் விருப்பத்துக்கு ஏற்ற வண்ணம் தன்னை பக்குவப் படுத்திக் கொள்ள வேண்டும்.

#1698. ஆசு அற்ற ஞானத்தான்

“அடிவைத்து அருளிதி ஆசான் இன்று” உன்னா
வடிவைத்த மாமுடி மாயப் பிறவி
அடிவைத்த காய அருட் சத்தியாலே
அடி பெற்ற ஞானத்தான் ஆசு அற்றுளானே.

‘குருநாதன் சிவபெருமான் இன்று எனக்கு அருள் புரிவான்” என்று எண்ணித் தன் குருவின் வடிவைத் தன் தலையின் மீது வைத்து தியானிக்க வேண்டும். மாயப் பிறவியைச் சினந்து அழிக்கும் வல்லமை கொண்ட அருள் சக்தியின் அருளைப் பெற்றுத் தூய ஞானம் அடைந்த மாணவனே குற்றமற்ற சிறந்த மாணவன் ஆவான்.

#1699. காதல் குருபரன் பாலாகும்!

சீராரும் ஞானத்தின் இச்சை செலச் செல்ல
வாராத காதல் குருபரன் பாலாகச்
சாராத சாதகம் நான்கும்தன் பால் உற்றோன்
ஆராயும் ஞானத்தனாம் அடி வைக்கவே.


சாதகனுக்குச் சிறந்த அனுபவ ஞானத்தின் மீது இச்சை அதிகரிக்கும் போது, அதுவரையில் அவனுக்கு வாராத காதல் குருபரன் சிவபெருமான் மேல் ஏற்படும். அதுவரையில் அவனிடம் அமைந்திராத ஒழுக்கம்,நோன்பு, செறிவு , அறிவு என்ற நான்கு சாதகங்கள் வந்து அமையும். இத்தகைய மாணவன் திருவடி தீட்சை பெற்ற பின்பு ஞானத்தின் அனுபவத்தை ஆராயத் தொடங்குவான்.

#1700. பக்குவத்துக்கு ஏற்ப உணர்த்துவீர்

உணர்த்தும் அதிபக்குவர்க்கே உணர்த்தி
இணக்கு இல் பராபரத்து எல்லையுள் இட்டுக்
குணக்கொடு தெற்கு உத்தர பச்சிமம் கொண்டு
உணர்த்துமின் ஆவுடையாள் தன்னை உன்னியே
.

பக்குவம் அடைந்த மாணவனுக்கு அவன் அடைந்துள்ள பக்குவத்துக்கு ஏற்ப ஒரு உத்தம குரு உபதேசம் செய்ய வேண்டும். பசுக்கள் ஆகிய சீவர்களுக்கு உதவுபவள் பராசக்தி. அவளை மாறாத நினைவில் கொள்ளுங்கள். சிவன் ஒன்றுடனும் பற்றில்லாத பராபரன். அவன் கிழக்கு எல்லைக்கு மாணவனை அழைத்துச் செல்லுங்கள். ஈசனின் ஐந்து முகங்களையும் அவை அமைந்துள்ள திசைகளையும் உணர்த்துங்கள். குருபரன் சிவபெருமானின் ஐந்து முகங்களும் சாதகனின் மூலாதாரமும் இணையும் போது அவனுக்குச் சதாசிவன் விளங்குவான்.
 

Latest ads

Back
Top