• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

#1701 to #1703

#1701. சன்மார்க்க உபதேசம்

இறைஅடி தாழ்ந்து, ஐ வணக்கமும் எய்தி
குறை அது கூறிக் குணங் கொண்டு போற்றச்
சிறை உடல் நீ அறக் காட்டிச் சிவத்தோடு
அறிவுக்கு அறிவிப்போன் சன்மார்க்கி ஆமே

குருவுக்கு ஐந்து விதமான வணக்கத்தையும் செய்ய வேண்டும். அவர் திருவடிகளில் விழுந்து வணங்க வேண்டும். மாணவன் ஆன்மாவின் குற்றம் குறைகளைக் கூறிக் குணம் நல்குமாறு அவரிடம் வேண்டும் போது அவர், “சிறைப் பட்டுள்ள உடலையே நீ என்று நம்பி இருக்கும் மாணவனே! நீ எல்லையற்ற சிவமாக ஆவாய்!” என்று அவனுக்கு உணர்த்துவார். ஒரு நல்ல சன்மார்க்க குரு சிவ அறிவையும் ஆன்ம அறிவையும் ஒன்றாக ஆக்கிவிடுவார்.

#1702. தாழுந் தலையோன் சற் சீடன்

வேட்கை விடுநெறி வேதாந்தம் ஆதலால்
வாழ்க்கைப் புலன்வழி மாற்றிச்சித் தாந்தத்து
வேட்கை விடுமிக்க வேதாந்தி பாதமே
தாழ்க்குந் தலையினோன் சற் சீடனாமே.


வேதாந்தம் கூறும் உலக வேட்கைகளை அழிக்கவேண்டும் என்று! உலக வாழ்வு என்பது
புலன்களை நாடிச் செல்கின்ற பொறிகளின் வழியே நடப்பது. அதை மாற்றிச் சித்தாந்த நெறியினில் சாதகன் செல்ல வேண்டும். விருப்பங்களை விட்டு விட்ட வேதாந்தியாகிய தன் சற்குருவின் பாதங்களில் தன் தலையைத் தாழ்த்தி வணங்குபவன் ஒரு நல்ல மாணவன் ஆவான்.

#1703. அற்புதம் தோன்றும்

சற்குணம் வாய்மை தயாவிவேகந் தண்மை
சற்குரு பாதமே சாயைபோல் நீங்காமே
சிற்பர ஞானந் தெளியத் தெளிவோர்தல்
அற்புத மேதோன்ற லாகுஞ் சற்சீடனே.


பக்குவம் உடைய மாணவனின் இலக்கணம் : சத்துவ குணம், வாய்மை, தயை, விவேகம், எளிமை, குருவின் திருவடிகளை விட்டு நீங்காமை, சிற்பர ஞானத்தைத் தெளிந்து அறிதல், அற்புதத்தை உணருதல் என்பவை ஆகும்.

இத்துடன் திருமந்திரத்தின் ஆறாம் தந்திரம் முற்றுப் பெற்றது.
 
ஏழாம் தந்திரம்​

1. ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.


(திருமந்திரம் – திருமூலர்)

ஐங்கரன், ஆனைமுகன், இளம் பிறை போன்ற தந்தங்களை உடையவன்;
சிவன் மகன், ஞான வடிவானவன், அவன் திருவடிகளை வணங்குகின்றேன்

2. ஒன்று அவன்தானே; இரண்டு அவன் இன்னருள்;
நின்றனன் மூன்றினுள்; நான்கு உணர்ந்தான்; ஐந்து
வென்றனன், ஆறு விரிந்தனன் ஏழு உம்பர்ச்
சென்றனன்; தான் இருந்தான் ; உணர்ந்து எட்டே.

(திருமந்திரம் – திருமூலர்)

ஒரே மெய்ப் பொருளானவன்,
சிவ சக்தியராக இரண்டானவன்,
பிரமன், திருமால் ருத்திரன்என்ற மும் மூர்த்திகளுமானவன்,
நான்கு புருஷார்த்தங்களை (அறம் பொருள் இன்பம் வீடு) உணர்ந்தவன்,
ஐம் பொறிகளை ( மெய், கண், மூக்கு, வாய், செவி ) வென்றவன்,
ஆறு சக்கரங்களில் (மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம்,
அநாஹாதம், விசுத்தி, ஆக்ஞைகளில் ) விரிந்தவன்,
ஏழாவது சக்கரமான ஸஹஸ்ர தளத்தில் இருப்பவன்,
எட்டுப் பொருட்களில் ( நிலம், ஜலம், தீ, வளி, வெளி,
கதிரவன், நிலவு, ஆன்மா ) கலந்து விளங்குபவன்.

3. கூற்றுதைத்தான் போற்றி!

போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நால் திசைக்கும் நல்ல மாதுக்கும் நாதனை
மேல்திசைக்குள் தென் திசைக்குஒரு வேந்தனாம்
கூற்று உதைத்தானை யான் கூறுகின்றேனே.

(திருமந்திரம் – திருமூலர்)

தூயவனாக இனிய உயிரில் பொருந்தி உள்ளான்,
நான்கு திசைகளுக்கும், சக்திக்கும் அவனே நாயகன்,
தென்திசை மன்னனாகிய யமனை உதைத்தவன்,
அந்த இறைவனை நான் புகழ்ந்து போற்றுகின்றேன்.
 
1. ஆறு ஆதாரங்கள்

உடலில் மைந்துள்ள ஆறு அதைச் சக்கரங்கள்
மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாஹதம், விசுத்தி , ஆக்ஞை என்பவை.


#1704 to #1706

#1704. ஈசன் திருவடியை நேசன் காணலாம்

நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும்
கோலி து கொண்ட மேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலம் கண்டு ஆங்கே முடிந்த முதல் இரண்டும்
காலம் கண்டான் அடி காணலும் ஆமே.


நான்கு இதழ்த் தாமரை வடிவம் கொண்ட மூலாதாரம்; ஆறு இதழ்த் தாமரை வடிவம் கொண்ட சுவாதிட்டானம் , பத்து இதழ்கள் கொண்ட மணி பூரகம், பன்னிரண்டு இதழ்கள் கொண்ட அநாகதம், பதினாறு இதழ்கள் கொண்ட விசுத்தி என்னும் ஐந்து ஆதாரச் சக்கரங்களையும் தரிசித்து விட்டால் ஆக்ஞை சக்கரத்தில் ஈசன் திருவடிகளை அவன் நேசன் காணலாம்.

#1705. பரமசிவன் விளங்குவான்

ஈராறு நாதத்தில், ஈரெட்டாம் அந்தத்தில்
மேதாதி நாதாந்தம் மீது ஆம் பராசக்தி
போதா ஆலயத்து அவிகாரம் தனில், போத
மேதாதி ஆதாரம் மீதானம் உண்மையே

கதிரவன் மண்டலம் பன்னிரண்டு கலைகள் கொண்டது. இதுவே தலையைச் சுற்றியுள்ள வானவீதி ஆகும். மேதை முதலான பதினாறு கலைகள் கொண்டது சந்திர மண்டலம். இதன் வீதி மூலாதாரத்தில் இருந்து செங்குத் தாக மேல் நோக்கிச் செல்லும். நாதாந்தம் எனப்படுவது உடல் முடியும் இடம். இதுவே பிரமரந்திரம் என்னும் உச்சித் தொளை. இங்கு நிராதாரத்தில் விளங்குவாள் பராசக்தி. பிரசாத நெறியில் விகாரம் அற்ற அறிவுடன் மேல் நோக்கிச் செல்லும் போது எல்லா ஆதாரங் களையும் கடந்த நிலையில் பரம சிவன் விளங்குவான்.

#1706. கார் ஒன்றிய கற்பகம் ஆவான்

மேல் என்றும் கீழ் என்று, இரண்டு அறக் காணுங் கால்
தான் என்றும் நான் என்றும் தன்மைகள் ஓர் ஆறும்
பாரெங்கும் ஆகிப் பரந்த பராபரம்
கார் ஒன்று கற்பகம் ஆகி நின்றானே.

பிரசாத நெறியில் நின்று மேற்பக்கம் கீழ்பக்கம் என்ற வேறுபாடுகளைக் கடந்து சென்றால், இறைவன் ஒரே பேரொளியாகக் காட்சி தருவான். அவன் இறைத் தன்மையின் ஆறு சீரிய குணங்களும் பெற்று இருப்பான். பார் எங்கும் பரந்து நிற்பான் அந்தப் பராபரம். கற்பகத் தருவைப் போல வேண்டியவருக்கு வேண்டியதைத் தருவான். கார் மேகம் போல் அன்பர்களின் மீது தன் அருள் மழையைப் பொழிவான்.

விளக்கம்:
இறைவனின் ஆறு சீரிய குணங்கள்
அவா இன்மை, இறைத் தன்மை, கீர்த்தி, செல்வம், ஞானம், வீரியம்
 
1707 to #1709

#1707. சகமார்க்கம் யாது ?

ஆதார சோதனையால் நாடி சுத்திகள்
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண்ஒளி
போதாலயத்துப் புலன் கரணம் புந்தி
சாதாரணங் கெட்டான் றான்சக மார்க்கமே.

ஆறு ஆதாரங்களையும் அவற்றுக்கு உரிய மந்திரங்களைச் சொல்லித் தூய்மை ஆக்க வேண்டும். இதனால் நாடி சுத்தி ஏற்பட்டு, இடைகலை ,பிங்கலை நாடிகளும் தூய்மை அடையும். மேதை முதலான பதினாறு கலைகளின் முடிவில் வானத்தில் ஒளி தோன்றும் . சாதகனின் அறிவாலயம் எனப்படும் ஆன்மாவை வெளி உலகை நோக்கிச் செலுத்துகின்ற ஐந்து பொறிகள், நான்கு அந்தக் கரணங்கள், புத்தி என்பவை தம் இயல்பிலிருந்து மாறுபட்டு ஆன்மாவைக் கீழ் நோக்கி இழுப்பதை நிறுத்தி விடும். இதுவே சக மார்க்கம் எனப்படும் தோழமை நெறி ஆகும்.

#1708. இன்ப மயமானது பிரணவ உபாசனை

மேதாதி யாலே விடாதுஓம் எனத் தூண்டி
ஆதார சோதனை அத்துவ சோதனை
தாது ஆதாரமாகவே தான் எழச் சாதித்தால்
ஆதாரம் செய்போகம் ஆவது காயமே.

பிரணவத் தியானம் செய்து மேதை முதலிய பதினாறு கலைகளையும் நன்றாகத் தூண்ட வேண்டும் . வீரியத்தைத் தன் இடமாகக் கொண்டுள்ள, கீழ் நோக்கிப் பாய்கின்ற தன்மை உள்ள, குண்டலினி சக்தியை உடலின் ஐந்து மற்ற ஆதாரங்களின் வழியே மேல் நோக்கிச் செலுத்த வேண்டும். அது அப்போது அத்துவா என்னும் ஒரு தூயவழியை உண்டு பண்ணும். இதனால் உடலின் ஆறு ஆதாரங்களிலும் ஒளி உண்டாகும். அங்கு இன்பம் விளையும். பிரணவ உபாசனை இன்ப மயமானது.

#1709. எழுத்துக்கள் ஒடுங்கி நாதமாகும்

ஆறு அந்தமும் கூடி ஆகும் உடம்பினில்
கூறிய ஆதாரம் ஆறும் குறிக் கொண்மின்
ஆறிய அக்கரம் ஐம்பதின், மேலாக
ஊறிய ஆதாரத்து ஓர் எழுத்தாமே.

ஆறு ஆதாரங்கள் உடலில் உள்ளன. அவற்றை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அவற்றின் மீது தியானம் செய்து அவைகளின் வழியே படிப் படியாக மேலே ஏற வேண்டும். அந்த ஆறு ஆதாரங்களில் ஐம்பது எழுத்துக்கள் பொருந்தி உள்ளன. அவற்றைக் கடந்து செல்லும் போது அவை அனைத்தும் ‘ஓம்’ என்ற ஓரெழுத்தாகிய பிரணவத்தில் அடங்கி விடும்.
 
#1709 to #1711

#1709. எழுத்துக்கள் ஒடுங்கி நாதமாகும்

ஆறு அந்தமும் கூடி ஆகும் உடம்பினில்
கூறிய ஆதாரம் ஆறும் குறிக் கொண்மின்
ஆறிய அக்கரம் ஐம்பதின், மேலாக
ஊறிய ஆதாரத்து ஓர் எழுத்தாமே.


ஆறு ஆதாரங்கள் உடலில் உள்ளன. அவற்றை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அவற்றின் மீது தியானம் செய்து அவைகளின் வழியே படிப் படியாக மேலே ஏற வேண்டும். அந்த ஆறு ஆதாரங்களில் ஐம்பது எழுத்துக்கள் பொருந்தி உள்ளன. அவற்றைக் கடந்து செல்லும் போது அவை அனைத்தும் ‘ஓம்’ என்ற ஓரெழுத்தாகிய பிரணவத்தில் அடங்கி விடும்.

#1710. நுண்ணுடல் பருவுடல் பொருந்தும்

ஆகும் உடம்பும் அழிகின்ற அவ் உடல்
போகும் உடம்பும் பொருந்திய வாறுதான்
ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம்
ஆகும் உடம்புக்கும் ஆறு அந்தமாமே

பருவுடல் நுண்ணுடலின் இயல்புக்கு ஏற்ப அமையும். ஆகின்ற நுண்ணுடலும் போகின்ற பருவுடலும் நன்றாக ஒன்றாகப் பொருந்துவது எங்கனம்? நுண்மையாக நாதத்தில் ஒடுங்கிவிடுகின்ற, ஆனால் ஆதாரங்களில் ஐம்பதாக விரிகின்ற, எழுத்துக்களும், தத்துவங்களும் அந்த இரு உடல்களையும் நன்கு பொருந்தச் செய்கின்றன.

#1711. தூய அறிவு சிவானந்தம் ஆகும்

ஆயும் மலரின் அணிமலர் மேலது
ஆய இதழ் பதினாறும் அங்கு உள,
தூய அறிவு சிவானந்த மாகிப் போய்
மேய அறிவாய் விளைந்தது தானே.

ஆராயத் தகுந்த இதயத் தாமரைக்கு மேல் பதினாறு இதழ்த் தாமரை ஒன்று கழுத்தில் விசுத்திச் சக்கரத்தில் உள்ளது. அங்கு ஆன்மா தூய சிவானந்தமே தன்வடிவாகக் கொள்ளும். செறிந்த அறிவாக நீக்கமற நிறைந்து எங்கும் சென்று பொருந்தும்.
 
[h=1]2. அண்ட லிங்கம்[/h] அண்டம் = உலகம்
லிங்கம் = குறி / அடையாளம்
உலகம் முழுவதுமே சிவனது அடையாளம் ஆகும்.


#1712 to #1715


#1712. உலகம் சிவன் வடிவம்

இலிங்கம் அது ஆகுவது ஆரும் அறியார்
இலிங்கம் அது ஆகுவது எண்டிசை எல்லாம்
இலிங்கம் அது ஆவது எண்ணெண் கலையும்
இலிங்கம் அது ஆக எடுத்தது உலகே.

உலகத்துக்குக் காரணம் ஆனது இலிங்கம் எனப்படும் சிவம் என்ற உண்மையை யாரும் அறியார். எட்டுத் திசைகளிலும் நிறைந்திருப்பது உலகலிங்கம் என்று அறிவீர். அறுபத்து நான்கு கலைகள் உடைய பிரணவமும் சிவலிங்கம் ஆகும். உலகம் முழுவதும் காரண வடிவில் ஒடுங்கி இருப்பது சிவலிங்கத்திடமே.

#1713. உலகம் எடுத்த சதாசிவம்

உலகு இல் எடுத்தது சக்தி முதலா
உலகு இல் எடுத்தது சத்தி வடிவாய்
உலகு இல் எடுத்தது சத்தி குணமாய்
உலகம் எடுத்த சதாசிவம் தானே.

உலகைப் படைக்க விரும்பிய சதாசிவன், தன்னை விட்டு இணை பிரியாத சக்தியின் துணையுடன் அதைத் தோற்றுவித்தான். குண்டலினி சக்தி உலகுக்கும் உயிர்களுக்கும் வடிவத்தைத் தந்தது. சிவ சக்தியரின் சிற்சக்தி சீவர்களுக்கு அறிவைத் தந்தது.

#1714. அனைத்தையும் அளிப்பவன் சிவன்

போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும்
ஆகமும் ஆறாறு தத்துவத்து அப்பாலாம்
ஏகமும் நல்கி இருக்கும் சதாசிவம்
ஆகம் அது அத்துவாவறும் சிவமே


உலக வாழ்வில் இன்பம், முக்தி, சித்தி, புத்தி, அனைத்தையும் நமக்குத் தருபவன் சிவன். பெற்றுள்ள உடலையும் மற்றும் முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து ஒன்றாக விளங்கச் செய்பவனும் சிவன். ஆகமங்கள் உணர்த்துகின்ற ஆறு அத்துவாக்களின் வழியே சென்று அடையப்படுகின்றவனும் சிவன் .

# 1715. அண்டங் கடந்து காப்பவன் சிவன்

ஏத்தின ரெண்ணிலி தேவரெம் ஈசனை
வாழ்த்தினர் வாசப் பசுந்தென்றல் வள்ள லென்று
ஆர்த்தன ரண்டம் கடந்தப் புறநின்று
காத்தன னென்னும் கருத்தறி யாரே.

எண்ணற்ற தேவர்கள் எம் ஈசனாம் சிவனைப் போற்றித் தொழுதனர். அவர்கள் நறுமணம் பரப்பும் குளிர் தென்றல் போன்ற வள்ளல் என்று சிவனைப் போற்றிப் புகழ்ந்தனர். ஆரவாரம் செய்து கொண்டாடினர். எனினும் சிவன் அண்டங்களைக் கடந்து நின்று கொண்டு அவற்றைக் காப்பதை அவர்களும் அறியார்.
 
#1716 to #1720

#1716. தண்சுடராகிய தற்பரம்

ஒண்சுட ரோனயன் மால்பிர சாபதி
ஒண்சுட ரான இரவியோ டிந்திரன்
கண்சுட ராகிக் கலந்தெங்கும் தேவர்கள்
தண்சுட ராயெங்கும் தற்பரமாமே


ஒளிவீசும் சுடராகிய அக்கினி, பிரமன், திருமால், பிரசாபதி, காயும் கதிரவன், இந்திரன் இவர்களுடன் கண்ணில் ஒளி போலக் கலந்து நிற்பவன் சிவன். பிற தேவர்களிடம் குளிர்ந்த நிலவைப் போலக் கலந்து நிற்பவன் சிவன். இங்ஙனம் பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்து இருப்பவன் சிவன்.

#1717. மா பரத்தில் உள்ளான் சிவன்

தாபரத்துள் நின்று அருள வல்லான் சிவன்
மாபரத்து உண்மை வழிபடுவார் இல்லை;
மாபரத்து உண்மை வழிபடு வாளர்க்கும்
பூவகத்துள் நின்ற பொற்கொடி ஆகுமே.


அசையாப் பொருட்களில் லிங்கமாக உறைந்து சீவர்களுக்கு அருளுபவன் சிவன். அவனே ஞான ஆகாயமான பரமாகாயத்தில் மறைந்து உறைவதை அறிந்து கொண்டு அவனை வழிபடுபவர்கள் இல்லை. அவன் பரமாகாயத்தில் மறைந்து உறைந்து அருள் புரிவதை அறிந்து கொண்டவர்களுக்குச் சிவன் உடலின் ஆறு ஆதாரங்களிலும், சகசிரதளத்திலும், பொற்கொடி போன்ற குண்டலினி சக்தியாக விளங்குவான்.

#1718. ஆலயத்தில் அமையும் இலிங்கங்கள்

தூய விமானமும் தூலம தாகுமால்
ஆய சதாசிவ மாகுநற் சூக்குமம்
ஆய பலி பீடம் பத்திர லிங்கமாம்
ஆய வரனிலை யாய்ந்து கொள்வார் கட்கே.


அரன் ஆலயத்தைப் பற்றி அறிந்து கொள்பவருக்கு கருவறையின் மேல் அமைந்த விமானமே பருலிங்கம் ஆகும். கருவறையில் உள்ள லிங்கம் நுண் இலிங்கம் ஆகும். பலி பீடத்தில் இருப்பது இதழ் வடிவில் அமைந்துள்ள பத்திரலிங்கம்.

#1719. இலிங்கம் அமைக்க உகந்தவை எவை?

முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும்
கொத்துமக் கொம்பு சிலை நீறு கோமளம்
அத்தன்ற னாகம மன்ன மரிசியாம்
உய்த்ததின் சாதனம் பூமண லிங்கமே.


இலிங்கம் அமைக்க உகந்த பொருட்கள் இவை: முத்து, மாணிக்கம், பவளம், மரக் கொம்பு, கல், திருநீறு, மரகதம், சிவாகமம், சாதம், அரிசி, பூ, மணல்.

#1720. சிவலிங்கம் அமைக்கலாம்

துன்றுந் தயிர்நெய் பால் துய்ய மெழுகுடன்
கன்றிய செம்பு கனலிர தம்சலம்
வன்திறல் செங்கல் வடிவுடைவில்வம் பொன்
தென்றியங் கொன்றைத் தெளி சிவலிங்கமே

இறுகிய கட்டித் தயிர், தூய்மையான நெய், பால், பசுஞ் சாணம், செம்பு, அக்கினி, பாதரசம், சலம், நன்கு வேகவாய்த்த செங்கல், வில்வம், பொன் இவற்றாலும் சிவலிங்கம் செய்யலாம். திரவங்களை கலசத்தில் பெய்து அதை லிங்கமாக வழிபட வேண்டும்.
 
#1721 to #1725

#1721. இலிங்கங்களின் வகைகள்

மறையவர் அர்ச்சனை வண்படிகம் தான்
இறையவ ரர்ச்சனை ஏயபொன் னாகும்
குறைவிலா வசியர்க்குக் கோமளமாகும்
துறையுடைச் சூத்திதிரர் தொல்வாண லிங்கமே.

வளமிக்க படிக இலிங்கம் வேதியர்கள் பூசை செய்வதற்கு உரியது.
பொன்னால் ஆன இலிங்கம் மன்னர்கள் பூசை செய்வதற்கு உகந்தது.
செல்வ வளமிகுந்த வைசியர்கள் மரகத இலிங்கதைப் பூசிக்கலாம்.
தொண்டு செய்வதில் சிறந்த சூத்திரரகள் வாண லிங்கத்தை வழிபடலாம்.

#1722. சீவனின் உடலே ஓர் ஆலயம்

அது வுணர்ந் தோனொரு தன்மையை நாடி
ஏதுவுண ராவகை நின்றனன் ஈசன்
புதுவுணர் வான புவனங்கள் எட்டும்
இது உணர்ந் தென்னுடல் கோயில் கொண்டானே.


இலிங்கத்தில் மட்டும் சிவனைக் காணும் இயல்பினை உடைய ஒருவன் சிவபெருமான் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களிலும் கலந்து உறைவதை உணர முடியாது. மண், நீர், நெருப்பு, வளி, வெளி , கதிரவன், சந்திரன், ஆன்மா என்னும் இந்த எட்டிலும் இறைவன் கலந்து இருப்பதைத் தெரிந்து கொண்டபோது அவன் என் உடலையும் தன் கோவிலாகக் கொண்டு விளங்கினான்.

#1723. உள்ளமே ஓர் ஆலயம்

அகலிடமாய், அறியாமல் அடங்கும்
உகல்இடமாய், நின்ற ஊன் அதனுள்ளே
பகல்இடமாம் முனம் பாவ வினாசன்
புகலிடமாய் நின்ற புண்ணியன் தானே.

சிவன் அகன்று விரிந்த பிரபஞ்சம் ஆவான். அதனுடன் அவன் யாரும் அறியாத வண்ணம் கலந்து உறைகின்றான். உயிர்கள் அனைத்தும் சென்று ஒடுங்கும் உகளிடமும் ஆவான் சிவன். சீவன் முன்பு வினைகள் புரிந்து ஈட்டிய பாவங்களை நாசனம் செய்பவன் சிவன். அவனிடம் புகல் அடைந்தவர்களின் உடலுள் ஒளியை ஏற்படுத்துபவன் சிவபெருமான்.

#1724. அண்டமே அவன் திருமேனி

போது புனை கழல் பூமிய தாவது
மாது புனைமுடி வானக மாவது
நீதியுள் ஈசன் உடல் விசும்பாய் நிற்கும்
ஆதியுற நின்ற தப்பரி சாமே.


ஆதாரங்களை மாலையாக அணிந்துள்ள ஈசனின் திருவடி நிலம் ஆகும். ஒளியுடைய கங்கை திகழும் திருமுடி வானம் ஆகும். ஆதி பகவானான ஈசனின் உடல் விசும்பாக நிற்கும் தன்மை இதுவே. இந்த அண்டமே அவன் அரிய திருமேனி.

#1725. அண்ட இலிங்கம்

தரையுற்ற சத்தி தனி லிங்கம் விண்ணாம்
திரை பொரு நீரது வரை மஞ்சன சாலை
வரைதவழ் மஞ்சுநீர் வானுடு மாலை
கரையற்ற நந்திக் கலையும் திக்காமே.

நிலம் என்னும் சத்தி பீடத்தின் மேல் விளங்கும் அண்ட இலிங்கம் விண்ணளாவ நிற்கும். அலை கடலே இதன் திரு மஞ்சன சாலை! மலை முகிலே இதன் திரு மஞ்சன நீர். விண்ணில் மின்னும் விண் மீன்களே அண்ட இலிங்கம் அணிந்துள்ள மாலை. எட்டுத் திசைகளே அண்ட இலிங்கம் அணிந்துள்ள ஆடை.
 
3. பிண்ட இலிங்கம்

பிண்டம் = உடல்
சீவனின் உடலே ஒரு சிவலிங்கம்


#1726 to #1729

#1726. மானுடராக்கை ஒரு சிவலிங்கம்

மானுட ராக்கை வடிவு சிவலிங்கம்
மானுட ராக்கை வடிவு சிதம்பரம்
மானுட ராக்கை வடிவு சதாசிவம்
மானுட ராக்கை வடிவு திருக் கூத்தே.

மனித உடலின் வடிவமே ஒரு சிவலிங்கம்.
மனிதனின் உடலே ஆகும் ஓர் அறிவாலயம்.
மனிதனின் உடல் சதாசிவனின் திருவடிவம்.
மனிதனின் அசைவுகள் சிவனின் திருக்கூத்து!

மனித உடலில் இடை வரை அமைவது பிரம்ம பீடம். அதற்கு மேலுள்ள உடற்பகுதி ஆகும் சக்தி பீடம். மனிதனின் தலை ஆகும் சிவலிங்கம். தலையின் மேலே விளங்குவது ஞான ஆகாசம் ஆகிய சிம்பரம். எல்லா அசைவுகள் நிகழுகின்ற உடல் சிவனின் திருக் கூத்து நடக்குமிடம்.

#1727. வந்தனை செய்வீர்!

‘உலந்திலர், பின்னும் உளர்’ என நிற்பர்
நிலம் தரு நீர், தெளி யூனவை செய்யப்
புலம் தரு பூதங்கள் ஐந்தும் ஒன்றாக
வளம் தரு தேவரை வந்தி செய்யீரே.


‘அழியவில்லை இவர். நுண்ணுடலில் ஒடுங்கி உள்ளார்’ என்று கூறும்படி ஒருவரால் வாழ இயலும். ஐம் பெரும் பூதங்களில் நிலம் நீரில் ஒடுங்கும்; நீர் நெருப்பில் ஒடுங்கும்; நெருப்பு காற்றில் ஒடுங்கும்; காற்று வானத்தில் ஒடுங்கும். இங்ஙனமே ஐம்பெரும் பூதங்களுக்குக் காரணமான சுவை, ஒளி, ஓசை, ஊறு, நாற்றம் என்னும் ஐந்து தன் மாத்திரைகளும் ஒடுங்கிவிடும். இந்த விந்தையைச் செய்யவல்ல ஈசனைச் சிந்தையில் கொள்ளுங்கள். அப்போது பருவுடல் அழிந்தாலும் நுண்ணுடல் அழியாமல் நிலை பெற்று விளங்கும்.

#1728. ஈசன் ஆளவந்தான்

கோவில் கொண்ட அன்றே குடிகொண்ட ஐவரும்;
வாயில் கொண்டு ஆங்கே வழி நின்று அருளுவர்;
தாய் இல் கொண்டாற்போல் தலைவன் என்னுள் புக,
வாயில் கொண்டு ஈசனும் ஆள வந்தானே.


உடல் உண்டான போதே ஐந்து பூதங்களின் தலைவர்களும் அதில் குடியேறினார்கள். அவரவர் தொழிலை, அதன் அதன் நுழைவாயிலில் நின்று கொண்டு நன்கு செய்து, ஆன்மாவுக்குத் தேவையான அறிவை அளித்து உதவினார்கள். அன்னை வீட்டுக்குப் போவது போல விருப்பத்துடன் ஈசன் என் உள்ளத்தில் குடி புகுந்தான். அந்த நுழை வாயில்களைத் தனதாக்கிக் கொண்டு என்னை ஆள வந்தான்.

#1728. விளக்கம்

1. நான்முகன்…..மண் …. ..மூக்கு…..மணம்
2. திருமால் ………நீர்…………நாக்கு….சுவை
3. உருத்திரன்……நெருப்பு…கண்……..ஒளி
4. மகேசுரன்……..காற்று……தோல்….ஊறு
5. சதாசிவன்……..வான் …….செவி….ஓசை

#1729. நாடிகளை இயக்குபவன்

கோயில் கொண்டான் அடி கொல்லைப் பெருமறை
வாயில் கொண்டான் அடி நாடிகள் பத்து உள
பூசை கொண்டான் புலன் ஐந்தும் பிறகிட்டு
வாயில் கொண்டான் எங்கள் மாநந்தி தானே.


எங்கள் நந்திப் பிரான் இந்த உடலையே அவன் உறையும் அழகிய ஆலயமாக ஏற்றுக் கொண்டான். மூலாதாரத்தில் உள்ள நான்கு இதழ்த் தாமரையைத் தன் இருப்பிடமாகக் கொண்டான். உடலின் பத்து முக்கிய நாடிகளின் செயலை அவன் செய்விக்கின்றான். ஐம்புலன்கள் தறி கேட்டுத் திரியாத வண்ணம் அவன் காவல் செய்கின்றான்.

பத்து முக்கிய நாடிகள்:

இடைகலை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, அத்தி, அலம்புடை, சிங்குவை, புடை, சங்கினி, குரு.
 
4. சதாசிவ லிங்கம்

4. சதாசிவ லிங்கம்


#1730 to#1733

#1730. சதாசிவனின் வடிவம்

கூடிய பாதம் இரண்டும் படிமிசை;
பாடிய கை இரண்டு எட்டுப் பரந்து எழும்
தேடும் முகம் ஐந்து; செங்கையின் மூவைந்து
நாடும் சதாசிவ நல்லொளி முத்தே.

திருவருள் மிகுந்த இரு திருவடிகள் பூமியின் மேலே அமைந்து இருக்கும். பாடிப் பரவும் பத்துக் கரங்கள் எல்லாத் திசைகளிலும் பரவி நிற்கும். அன்பர்கள் காண விழைந்து தேடும் முகங்கள் ஐந்தாக அமையும். செம்மை நிற விழிகள் மூவைந்தாக அந்த ஐந்து முகங்களில் விளங்கும். முத்துக்களின் நிறத்துடனும் ஒளியுடனும் மிளிரும் சதாசிவனின் அழகிய வடிவம் இதுவே என்று அறிவீர்.

#1731. யாவரும் சதாசிவமே!

வேதா நெடுமால் உருத்திரன் மேலீசன்
மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும்
ஆதார சக்தியும் அந்தச் சிவனொடும்
சாதா ரணமாம் சதாசிவந் தானே.


நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன், விந்து, நாதம், குண்டலினி சக்தி என்னும் இவை யாவும் சதாசிவமே!

#1732. ஒளிமயமானவன் சதாசிவன்

ஆகின்ற சத்தியி னுள்ளே கலைநிலை
ஆகின்ற சக்தியி னுள்ளே கதிரெழ
ஆகின்ற சத்தியி னுள்ளே யமர்ந்தபின்
ஆகின்ற சத்தியு ளத்திசை பத்தே.

சதாசிவம் என்னும் அனைத்துமாய் ஆகின்ற சக்தியில் நிலை பெரும் ஐந்து கலைகள்
1. நிவிருத்தி, 2. பிரதிட்டை, 3. வித்தை, 4. சாந்தி, 5. சாந்தியாதீதை என்பவை.

இந்த ஐந்து கலைகளால் அங்கே சிவ சூரியன் உதிப்பான். அதன் ஒளி அண்டகோசத்தை உள்ளும் புறமும் முழுதாக நிறைத்து விடும். அந்த பேரொளியில் எண்திசைகளுடன், மேலும் கீழுமாகப் பத்து திசைகளும் ஒளி மயமாகி விடும்.

#1733. அறிவின் இருப்பிடம் அண்டகோசம்

அத்திசைக் குள்ளே அமர்ந்தன ஆறங்கம்
அத்திசைக் குள்ளே அமர்ந்தன நால்வேதம்
அத்திசைக் குள்ளே அமர்ந்தன சரியையோடு
அத்திசைக் குள்ளே அமைந்த சமயமே.


பத்துத் திசைகள் கொண்டது அண்டகோசம். அதில் ஆறு பெரிய சாத்திரங்களின் அறிவும் நிறைந்து இருக்கும். அங்கே நான்கு வேதங்களின் அறிவும் நிரம்பி இருக்கும். சரியை முதலிய நன்நெறிகளின் சமய அறிவும் அங்கே அமைந்திருக்கும்.
 
#1734 to 1737

#1734. உருவ அருவ இடைநிலை

சமயத் தெழுந்த அவத்தையீ ரைந்துள
சமயத் தெழுந்த இராசி யீராருள
சமயத் தெழுந்த சதிரீரா றெட்டுள
சமயத் தெழுந்த சதாசிவம் தானே.


சமயத்தில் ஐந்து கீழ் அவத்தைகளும், ஐந்து மேல் அவத்தைகளும் உள்ளன. சமயத்தில் கதிரவனின் ஈராறு பன்னிரண்டு ராசிகள் உள்ளன. சமயத்தில் ஈரெட்டுப் பதினாறு சந்திர கலைகளும் உள்ளன. காணும் உருவத்துக்கும் காண இயலாத அருவதுக்கும் இடைநிலையில் உள்ளது சதாசிவம்.

கீழ் அவத்தைகள் ஐந்து:-

சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்பவை மேலிருந்து மூலாதாரம் வரையில் கீழே இறங்கும் முறையில் அமைவது.

மேல் அவத்தைகள் ஐந்து:​-
சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்பவை மூலாதாரம் முதலாக ஏறுமுகமாக அமைவது.


#1735. முகங்களின் நிறங்கள்

நடுவு, கிழக்குத் தெற்குத்தரம், மேற்கு
நடுவு படிகம் நற்குங்கும வன்னம்
அடைவு உள அஞ்சனம், செவ்வரத்தம், பால்
அடியாற்கு அருளிய முகம்இவை அஞ்சே.

திசை……………………முகம்…………………..நிறம்

உச்சி…………………….ஈசானம்……………….படிகம்

கிழக்கு…………………தத்புருடம்…………….மஞ்சள் குங்குமம்

தெற்கு………………….அகோரம்……………..அஞ்சனம்

வடக்கு ………………..வாமதேவம்……….. சிவப்பு


மேற்கு………………….சத்தியோசாதம் .. ..பால்
நிறம்

இந்த ஐந்து முகங்களும் அடியவர்களுக்கு அருள் செய்யும் முகங்கள் ஆகும்.

#1736. சதாசிவன் தோற்றத்தின் ஏற்றம்

அஞ்சு முகமுள ஐம்மூன்றும் கண்ணுள
அஞ்சினொ டஞ்சு கரதலம் தானுள
அஞ்சுடன் அஞ்சா யுதமுள நம்பி என்
நெஞ்சு புகுந்து நிறைந்து நின்றானே.

சதாசிவனுக்கு ஐந்து அழகிய முகங்கள் உள்ளன; பதினைந்து சிவந்த கண்கள் உள்ளன; காக்கும் கரங்கள் பத்து உள்ளன, அவற்றில் பத்து அரிய படைக்கலன்கள் உள்ளன. இத்தகைய ஏற்றம் வாய்ந்த தோற்றத்துடன் சதாசிவன் என் நெஞ்சம் புகுந்து நிறைந்து நிற்கின்றான்.

#1737. முப்பத்தாறு தத்துவங்கள்

சத்தி தராதலம் அண்டம் சதாசிவம்
சத்தி சிவமிக்க தாபர சங்கமம்
சத்தி யுருவம் அருவம் சதாசிவம்
சத்தி சிவதத்துவ முப்பத் தாறே.


சக்தி பூமி என்றால் சதாசிவம் அண்டம் ஆவான். அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் என்னும் அனைத்தும் சிவ சக்தியரே. உருவம் படைத்த அனைத்தும் சக்தியின் வடிவம். அருவமாவது சதாசிவன். சக்தியும் சதாசிவனும் பொருந்திய தத்துவங்கள் முப்பத்தாறு ஆகும்.

முப்பத்தாறு தத்துவங்கள்:-

ஆன்ம தத்துவங்கள்………….24

வித்தியா தத்துவங்கள் … …. ..7

சிவ தத்துவ
ங்கள்…………………5
 
#1738 to #1742

#1738. சுகோதயம் சதாசிவம்
தத்துவ மாவ தருவம் சராசரம்
தத்துவ மாவ துருவம் சுகோதயம்
தத்துவ மெல்லாம் சகலமு மாய்நிற்கும்
தத்துவ மாகும் சதாசிவன் தானே
.

தத்துவமாக இருக்கும் போது அருவமாக இருக்கும். அதுவே உருவெடுத்துக் கொண்டால் சரம், அசரமாக மாறிவிடும். உருவெடுத்து விரியும் போது தத்துவம் சுகோதயம் ஆகிச் சுகத்தை விளக்கும். இங்ஙனம் அனைத்துமாக விளங்கும் தத்துவம் சதாசிவமே ஆகும்.

#1739. ஊறு சதாசிவனைக் கூறுமின்!
கூறுமின், ஊறு சதாசிவன், எம் இறை
வேறு உரை செய்து மிகைப் பொருளாய் நிற்கும்
ஏறுரை செய்தொழில் வானவர் தம்மொடும்
மாறு செய்வான் என் மனம் புகுந்தானே.

உள்ளத்தில் உறையும் சதாசிவனைப் போற்றிப் புகழுங்கள்! அவன் வேறு வகையான பிற நூல்களால் சிறிதும் அறியப்படாதவன். அவன் அவற்றைக் கடந்து நிற்பவன். தம் மேன்மைக்காகத் தன்னைப் புகழும் வானவருடன் இவன் மாறுபட்டு நிற்பான். இத்தகைய சிறப்பு வாய்ந்தவன் உவந்து வந்து என் மனம் புகுந்தான்.

#1740. உள்ளம் தெளிந்தேன்
இருளார்ந்த கண்டமும் ஏந்து மழுவும்
சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையும்
அருளார்ந்த சிந்தைஎம் ஆதிப் பிரானைத்
தெருளார்ந்தென் னுள்ளே தெளிந்திருந் தேனே


கரிய நிறம் கொண்ட கண்டமும், வலக் கரத்தில் ஏந்திய மழுவும், சுருண்ட செஞ்சடையில் ஒளிரும் பிஞ்சு மதியும், அருள் சிந்தையும் கொண்ட ஆதிப் பிரானாகிய சதாசிவனைத் தெளிந்திருக்கும் என் சிந்தையில் இருத்தி நானும் தெளிவடைந்திருந்தேன்.

#1741. முடி முதல் அடி வரை தொழுமின்!
சத்திதான் நிற்கின்ற ஐம்முகஞ் சாற்றிடில்
உத்தமம் வாம முரையத் திருந்திடும்
தத்துவம் பூருவம் தர்புரு டன்சிர
மத்த குகோரம் மகுடத்தீ சானனே.


சீவர்களுக்கு அருள் செய்திட இருக்கும் சதாசிவனின் ஐந்து முகங்கள் பற்றிக் கூறினால், மெளனமாக வடக்கு திசையில் விளங்கும் வாமதேவம் அனைத்திலும் உத்தமமானது. கிழக்கில் உள்ள தத்புருடம் உடலில் உள்ள தத்துவங்களை இயக்குவது. தெற்கு நோக்கிய அகோரம் சிரசை நிகர்த்தது. மகுடத்தில் உள்ள வடகிழக்கு திசையை நோக்கியுள்ள முகம் ஈசானம்.

#1742. வணங்கும் விதிகள்
நாணுநல் லீசான நடுவுச்சி தானாகும்
தாணுவின் தன்முகம் தற்புருட மாகும்
காணும் அகோர மிருதயம் குய்யமாம்
மாணுற வாமமாம் சத்தி நற்பாதமே.


ஈசான முகத்தைத் தொழும்போது தலையைத் தொட்டு வணங்க வேண்டும்.
தத்புருட முகத்தைத் தொழும்போது முகத்தைத் தொட்டு வணங்க வேண்டும்.
அகோர முகத்தை வணங்கும் போது இதயத்தைத் தொட்டு வணங்க வேண்டும் .
வாமதேவ முகத்தை வணங்கும் போது குறியைத் தொட்டு வணங்க வேண்டும்.
சத்தியோ சாதத்தை வணங்கும் போது பாதத்தை தொட்டு வணங்க வேண்டும்
 
#1743 to #1747

#1743. குண்டலினி சக்தி

நெஞ்சு சிரம்சிகை நீள் கவசங் கண்ணாம்
வஞ்சமில் விந்து வளர்நிறம் பச்சை யாம்
செஞ்சுறு செஞ்சுடர் சேகரி மின்னாகும்
செஞ்சுடர் போலுந் தெசாயுதம் தானே.


ஆறு சைவ மந்திரங்கள் உடலின் ஆறு அங்கங்களைப் பற்றி அமைந்தவை. அவை முறையே இதயம், தலை, சிகை , கவசம், நேத்திரம், அத்திரம் என்பவை. வஞ்சனை இன்றி சீவனுக்கு அறிவு விளக்கம் தரும் சக்தியின் நிறம் வளர் பச்சை. இவள் உடல் எல்லாம் ஒளி மயமாகி இருக்கும் போது மின்னல் போல விளங்குவாள். கரங்களில் பற்றி இருக்கும் பத்து ஆயுதங்களும் உதிக்கும் சூரியனின் ஒளியுடன் மிளிரும்.

சைவமந்திரங்கள் ஆறு :-
1. இருதயாய நம: 2. சிரசாய நம: 3. சிகாய நம: 4. கவசாய நம: 5. நேத்திராய நம: 6. அத்திராய நம:


#1744. ஐந்து சக்திகள்

எண்ணில் இதயம் இறைஞான சக்தியாம்
விண்ணிற் பரைசிர மிக்க சிகையாதி
வண்ணக் கவசம் வனப்புடை இச்சையாம்
பண்ணுங் கிரியை பரநேத் திரத்திலே.


எண்ணிப் பார்த்தால் இது விளங்கும். இருதய மந்திரம் என்பது இறைவனின் ஞான சக்தி; சிரசு மந்திரம் என்பது விண்ணில் விளங்கும் உயர்ந்த பராசக்தி; சிகை மந்திரம் என்பது ஆதி சக்தி; கவச மந்திரம் என்பது இச்சா சக்தி; நேத்திரம் என்பது கிரியா சக்தியாகும்.

#1745. சத்தி உருவாம் சதாசிவம் தானே

சத்தி நாற்கோணம் சலம் உற்று இருந்திடும்
சத்தி அறுகோணம் சயனத்தை உற்றிடும்
சத்தி நல் வட்டம் சலம் உற்று இருந்திடும்
சத்தி உருவாம் சதாசிவம் தானே.


குண்டலினி சக்தி சீவனின் உடலில் தான் இருக்கும் இடத்துக்கு ஏற்ப மாறுபட்டு விளங்கும். நாற்கோண வடிவமாகிய மூலாதாரத்தில் இருக்கும் போது இது ஜலதாரையை நோக்கிய வண்ணம் இருக்கும். குண்டலினி மேலே நகர்ந்து அறுகோண வடிவம் கொண்ட கழுத்தை அடையும் போது உறக்க நிலை
ஏற்படும். குண்டலினி வட்ட வடிவம் கொண்ட நெற்றியை அடையும் போது நீரோட்டம் போன்ற ஒரு உணர்வைத் தோற்றுவிக்கும். இத்தகைய ஒளிமயமான சக்தியின் வடிவமே சதாசிவன் வடிவம் ஆகும்.

#1746. பஞ்சப் பிரமத்தின் ஒன்பது நிலைகள்

மானந்தி எத்தனை காலம் அழைக்கினும்
தான்நந்தி அஞ்சின் தனிச்சுடராய் நிற்கும்
கால்நந்தி, உந்தி கடந்து கமலத்தின்
மேல், நந்தி ஒன்பதின் மேவிநின் றானே.


எத்தனை காலம் தொழுத போதிலும் சதாசிவன் பஞ்சப் பிரமமாகவே விளங்குவான். மூலாதாரத்தில் இருந்து எழுந்து, உடலின் எல்லா ஆதாரங்களையும் கடந்து சென்று, ஊர்த்துவ சகசிர தளத்தை அடையும் போது சதாசிவன் ஒன்பது நிலைகளிலும் ஒன்றி நிற்பான்.

#1747. உடலிலும் உயிரிலும் கலந்து நிற்பான்

ஒன்றியவாறும், உடலினுடன் கிடந்து
என்றும் எம் ஈசன், நடக்கும் இயல்பு அது;
தென்தலைக்கு ஏறத் திருந்து சிவனடி
நின்று தொழுதேன் என் நெஞ்சத்தின் உள்ளே.

சீவனின் உடலிலும் உயிரிலும் கலந்து உறைவது சிவபெருமானின் இயல்பு ஆகும். சிவன் திருவடிகள் சூரிய கலை, சந்திர கலைகளைக் கடந்து மேலே நிராதாரத்துக்குச் சென்ற போது நான் அவனை என் நெஞ்சத்தில் உள்ளே நினைந்து தொழுதேன்.
 
#1748 to #1752

#1748. பகலவன் பாட்டு ஒலியே!

உணர்ந்தேன் உலகினில் ஒண்பொரு ளானைக்
கொணர்ந்தேன் குவலயம் கோயில் என் நெஞ்சம்
புணர்ந்தேன், புனிதனும் பொய் அல்ல மெய்யே
பணிந்தேன் பகலவன் பாட்டும் ஒலியே.


உலகம் முழுவதும் ஒளிப் பொருளாக மிளிரும் பரமசிவனை அவன் அருளால் நான் உணர்ந்து கொண்டேன். சீவர்கள் உய்யும் வண்ணம் அவனைப் பூமித் தத்துவதிற்குக் கொண்டு வந்தேன். என் உள்ளக் கோவிலில் புனிதனாகிய சிவபெருமானுடன் நான் கூடினேன். தூய இறைவன் எனக்கு நாத வடிவமாகத் தோன்றினான். சிவசூரியனை நான் பாடிப் பணிந்தேன். அவனோ தன் நாதத்தால் என்னுடன் கூடி இருந்தான்.

#1749. ஆதியும், அந்தமும், இந்துவும் ஆகும்

ஆங்கு அவை மூன்றினும் ஆரழல் வீசிடத்
தாங்கிடும் ஈரேழும் தான் நடுவான் அதில்
ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆம் என
ஈங்குஇவை தம் உடல் இந்துவும் ஆமே.


அக்கினி மண்டலம், கதிரவன் மண்டலம், சந்திர மண்டலம் என்னும் மூன்றும் ஆரழல் வீசிடும். ஒன்பது நிலைகளிலும் தானே பொருந்தியுள்ள சதாசிவன், ஈரேழு பதினான்கு உலகங்களையும் தாங்கி நிற்பான். ஆதியும் அவனே, அந்தமும் அவனே, உடலில் சந்திர மண்டலத்தை விளங்கச் செய்பவனும் அவனே.
ஒன்பது நிலைகளில் உள்ள முதல் நால்வரும் ( நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன் ) உருவம் கொண்டவர்கள். நடுவில் உள்ள சதாசிவம் அருவுருவம் கொண்டவன். மற்ற நான்கும் ( நாதம், விந்து, சக்தி, சிவம்) அருவம் ஆனவை.

#1750. ஞானி தானே சிவம் ஆகிவிடுவான்

தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும்
தன்மேனி தானும் சதாசிவ மாய்நிற்கும்
தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாம்
தன் மேனி தானாகும் தரற்பரந் தானே.


மேலே கூறிய வண்ணம் மாறிய உடல் ஒரு சிவலிங்கம் ஆகிவிடும். அதுவே சதாசிவம் ஆகிவிடும். அந்த உடல் அடைவது கிடைப்பதற்கரிய சிவானந்தம் ஆகும். அந்த உடலே உயரிய சிவமாகி விடும்.

#1751. சதாசிவ நிலை இதுவே

ஆரும் அறியார் அகாரம் அவன் என்று;
பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி;
தாரம் இரண்டும் தரணி முழுதுமாய்
மாறி எழுந்திடும் ஓசையது ஆமே.


அகாரமே சிவன் என்பதை யாரும் அறியார். உகாரம் ஆகிய சக்தி உலகப் பொருட்கள் அனைத்திலும் கலந்து நிற்பாள். சிவனும் சக்தியும் பொருந்தி இந்த உலகத்தை உண்டாக்கினர். இந்த சிவசக்தியர் தலையைத் தாண்டும் போது நாத ஒலியை ஏற்படுத்துவர்.

#1752. பிரணவம்

இலிங்க நற்பீடம் இசையும் ஓங்காரம்
இலிங்கம் நற்கண்டம் நிறையும் மகாரம்
இலிங்கத்து உள்வட்டம் நிறையும் உகாரம்
இலிங்க அகாரம் நிறைவிந்து நாதமே.


சதாசிவ லிங்கத்தின் பீடம் ஆகும் ஓங்காரம்.
லிங்கத்தின் கண்டப் பிரதேசம் ஆகும் மகாரம்.
சதாசிவ லிங்கத்தின் உள்வட்டம் ஆகும் உகாரம்.
லிங்கத்தின் மேற்பகுதி அகாரம், நாதம் விந்து ஆகும்.
 
5. ஆத்தும லிங்கம்

ஆத்தும லிங்கம் = ஆத்துமாவே ஒரு சிவலிங்கம் ஆகுதல்

#1753 to #1757

#1753. சிவசக்தியரின் வடிவம்

அகார முதலா அனைத்துமாய் நிற்கும்
உகார முதலா யுயிர்ப் பெய்து நிற்கும்
அகர வுகார மிரண்டு மறியில்
அகார உகார மிலிங்கம் தாமே.

அகரம் ஆகிய சிவம் அனைத்துப் பொருட்க்களுடன் கலந்து இருக்கும். உகரமாகிய சக்தி அப்பொருட்கள் உயிர்பெற உதவும். அகரம் சிவம் என்றும், உகரம் சக்தி என்றும் அறிந்து கொண்டால் அகர உகரம் பொருந்தியதே சிவலிங்கம் என்று புரிந்து விடும்.

#1754. ஆன்மலிங்கம்

ஆதாரம், ஆதேயம் ஆகின்ற விந்துவும்
மேதாதி நாதமும் மீதே விரிந்தன;
ஆதார விந்து அதி பீட நாதமே
போதா இலிங்கப் புணர்ச்சி அது ஆமே.


விந்துவை ஆதாரம் ஆகக் கொண்டு மேதாதி நாதம் அதன் மேல் ஆதேயமாக விரிந்தது. ஆதார விந்துவே ஆதி பீடம் ஆகும். மேதாதி நாதம் அதனுடன் இணைந்து சிவலிங்கம் ஆனது.

#1755. சக்தி சிவம்

சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம்
சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம்
சத்தி சிவமாம் இலிங்கஞ் சதாசிவம்
சத்தி சிவமாகும் தாபரம் தானே.


இடம் பெயர்ந்து செல்ல முடியாத பொருட்கள் அனைத்துமே சக்தி சிவனின் சேர்க்கையில் உருவானவை. அசைந்து இடம் பெயரும் உயிரினங்களும் சக்தி சிவனின் சேர்க்கையில் உருவானவை. சதாசிவனும் சக்தி சிவனின் சேர்க்கையில் தோன்றியவன். ஆனால் சக்தியும் சிவமும் பிறப்பற்றவர்கள்!

#1756. பூ நேர் எழும் பொற்கொடி

தான்நேர் எழுகின்ற சோதியைக் காணலாம்
வான்நேர் எழுகின்ற ஐம்பது அமர்ந்திடம்
பூநேர் எழுகின்ற பொற்கொடி தன்னுடன்
தானேர் எழுகின்ற அகாரம் அது ஆமே.


சிவசக்தியரின் வடிவமாகிய ஆத்தும லிங்கத்தில் ஒரு பேரொளியைக் காணலாம். வான் கூற்றில் ஐம்பது அக்கரங்கள் தோன்றும் இடமும் அதுவே ஆகும். உடலின் ஆதாரச் சக்கரங்களில் எழுகின்ற பொற்கொடியாகிய குண்டலினி சக்தியுடன் அகரமாகிய சிவனும் பொருந்திக் கலந்து விளங்குவான்.

#1757. நாதமும் விந்துவும்

விந்துவும் நாதமும் மேவு மிலிங்கமாம்
விந்துவ தேபீட நாத இலிங்கமாம்
அந்தவிரண்டும் ஆதார தெய்வமாய்
வந்த கருஐந்துஞ் செய்யு மவை ஐந்தே.


ஆன்மாவிடம் பொருந்தியுள்ள விந்து நாதங்களின் சேர்க்கையே ஆன்ம லிங்கம் ஆகும், விந்துவே இதன் ஆதாரம். நாதமே இதில் ஆதேயம். இவற்றில் சேர்க்கையில் உருவான ஆன்ம லிங்கத்தை ஆதாரமாகக் கொண்டு மற்ற ஐந்து தெய்வங்கள் தத்தம் தொழில்களை சரிவர இயற்றுகின்றார்கள்
 
#1758 to #1762

#1758. தத்துவங்கள் ஆன்மலிங்கம்

சத்தி நற்பீடம் தகு நல்ல வான்மா
சத்தி நற்கண்டம் தகு வித்தை தானாகும்
சத்தி நல் லிங்கம் தகுஞ்சிவ தத்துவம்
சத்திநல் லான்மாச் சதாசிவம் தானே.


சக்தியின் பீடமாக அமைவது ஆன்ம தத்துவங்கள்.
சக்தியின் கண்டமாக அமைவது வித்தியா தத்துவம்.
சக்தியின் இலிங்கமாவது சிவதத்துவம்.
சக்தியின் ஆத்மாவாக ஆவது எப்போதும் சதாசிவம்.

#1759. இலம் புகுவான்

மனம் புகுந்து என் உயிர் மன்னிய வாழ்க்கை
மனம் புகுந்து இன்பம் பொழிகின்ற போது
நலம் புகுந்து என்னொடு நாதனை நாடும்
இலம் புகுந்து ஆதியும் மேற்கொண்ட வாறே.

சிவபிரான் என் மனத்தில் புகுந்து கொண்டான். என் உயிரில் கலந்து என் வாழ்வில் பேரின்பம் சுரக்கச் செய்தான். நலம் தருகின்ற அந்த நாதனை நீங்களும் நாடுவீர். அப்போது அவன் நம் தலை உச்சியில் விளங்கி நம்மை ஆட்கொள்ளுவான்.

#1760. மனத்து உறைவான்

பராபரன், எந்தை, பனிமதி சூடி,
தராபரன், தன்அடி யார்மனக் கோயில்
சிராபரன், தேவர்கள் சென்னியில் மன்னும்
அராபரன் மன்னி மனத்துள் உறைந்தானே.


பராபரன் சிவன் மேலானவற்றுக்கு எல்லாம் மேலானவன். அவன் நம் அனைவரின் தந்தை ஆவான். பனி மதியைச் சூடிய அவன் அடியவர்களின் மனக் கோவிலில் குடியிருப்பான். தேவர்களின் சிரசின் மீது ஒளிமயமாக விளங்குவான். மண்டலமிட்ட குண்டலினி சக்தியின் தலைவனாகிய அவன் நீங்காமல் என் உள்ளத்தில் உறைந்து விட்டான்.

#1761. உள்ளமே ஆலயம்

‘பிரான் அல்லன் , நாம்’ எனின், பேதை உலகம்
குரால் என்னும் என்மனம் கோவில் கொள்ஈசன்
அராநின்ற செஞ்சடை, அங்கியும் நீரும்
பெரா நின்றவர் செய் அப்புண்ணியன் தானே.


“சிவன் பிரான் அல்லன். நானே பிரான்!” என்று கூறுபவன் அறியாமையில் முழுவதுமாக அமிழ்ந்துள்ளவன். கட்டப்பட்ட பசுவின் தன்மையை உடைய என் மனத்தில் அவன் கோவில் கொண்டுள்ளான். அவன் செஞ்சடையில் நீரும், மேனியில் பாம்பும், கரத்தில் நெருப்பும் உடையவன். நாம் செய்யும் புண்ணியச் செயல்களின் பலன் அவனே ஆவான்.

#1762. என்றும் நின்று ஏத்துவன்

அன்று நின்றான் , கிடந்தான் அவன் என்று
சென்று நின்று எண்டிசை ஏத்துவர் தேவர்கள்;
என்றும் நின்று ஏத்துவன் எம்பெருமான் தன்னை
ஒன்றி என்உள்ளத்தின் உள்இருந் தானே.

‘அன்று இறைவன் அங்கு நின்றான்’, ‘அன்று இறைவன் இங்கு கிடந்தான்’ என்று
கூறித் தேவர்கள் அவனை எண்திசைகளிலும் சென்று வணங்குவர். என் உயிருக்கு உயிராக என் மனதில் பொருந்தி நிற்கும் அவனை நான் என்றும் ஏத்திப் புகழ்ந்து தொழுவேன்.
 
6. ஞான லிங்கம்

ஞான லிங்கம் = உணர்வே சிவமாவது



#1763 to #1767

#1763. “தருக!” என நல்குவான்!

உருவும் அருவும் உருவோடு அருவும்
மருவும் பரசிவன் மன்பல் லுயிர்க்கும்
குருவும் என நிற்கும் கொள்கையன் ஆகும்
தருஎன நல்கும் சதாசிவன் தானே.


சதாசிவன் உருவம், அருவம், அருவுருவம் என்னும் மூன்று வகைப்பட்ட திரு மேனிகளையும் தனதாக உடையவன். பல உயிர்களுக்கும் குருவாகும் உயர்ந்த கொள்கை உடையவன். கற்பகத் தருவினைப் போலச் சதாசிவனும் வேண்டுபவர்களுக்கு அவர்கள் வேண்டியவற்றை அளிக்கும் அருள் படைத்தவன்.

#1764. ஒன்பது நிலைகளும் பரசிவனே!

நாலான கீழ துருவ நடுநிற்க
மேலான நான்கு மருவு மிகநாப்பண்
நாலான வொன்று மறுவுரு நண்ணலால்
பாலா மிவையாம் பரசிவன் தானே.


சதாசிவனுக்குக் கீழே உள்ள நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன் என்னும் நான்கு தெய்வங்களும் உருவம் உடையவர்கள். சதாசிவனுக்கு மேலே உள்ள நாதம், விந்து, சக்தி, சிவன் என்னும் நான்கும் அருவமானவை. இவற்றின் நடுவே அமைந்த சதாசிவன் அருவுருவமாக இருப்பான். உண்மையில் இவை ஓன்பதும் பரசிவனின் ஒன்பது வேறுபட்ட நிலைகள் ஆகும்.

#1765. அண்ணலின் அடிகளை அண்ணலும் ஆமே!

தேவர் பிரானைத் திசைமுக நாதனை
நால்வர் பிரானை, நடுவுற்ற நந்தியை
ஏவர் பிரான் என்று இறைஞ்சுவர்? அவ்வழி
ஆவர்; பிரான் அடி அண்ணலும் ஆமே.


தேவர்களின் தெய்வத்தை; நான்கு திசைகளில் நான்கு முகங்கள் உடைய நாதனை; உருவம் படைத்த நான்கு தெய்வங்களையும் இயக்குபவனை; உருவங்களுக்கும், அருவங்களுக்கும் இடைப்பட்ட அருவுருவான சதாசிவவனை; வணங்கு பவர்களுக்கு அவன் தோற்றம் தருவான். அவர்களால் அண்ணலின் அடிகளின் அண்மையை அடையவும் முடியும்.

#1766. வினைகள் அறும்!

வேண்டி நின்றே தொழுதேன் வினை போய் அற;
ஆண்டு, ஒரு திங்களும் நாளும் அளக்கின்ற
காண்தகை யானொடும் கன்னி உணரினும்
மூண்டகை மாறினும் ஒன்றது ஆமே.


வினைகளும், வினைப் பயன்களும் கெடும் வண்ணம் சதாசிவனையும், சக்தியையும் வழிபடுவர் அன்பர்கள். கால ஓட்டத்தை ஆண்டு, திங்கள், நாள் என்று வேறுபடுத்தும் சிவசூரியனாகிய சதாசிவனையும், சக்தி தேவியையும் தனித்தனியாக வழிபடுவதன் பயனும்; அவர்களை ஒன்றாக சிவலிங்க ரூபத்தில் சிவசக்தியராக வழிபடுவதன் பயனும் ஒன்றே அன்றோ!

#1767. பரனுள் பாதி பராசக்தி!

ஆதி பரம்தெய்வம் அண்டத்து நல்தெய்வம்
சோதி யடியார் தொடரும் பெருந்தெய்வம்
நீதியுள் மாதெய்வம் நின்மல னெம்மிறை
பாதியுள் மன்னும் பராசக்தி யாமே.


சதாசிவம் ஆதிப் பரம் பொருள்; அவன் அண்டத்தின் நல்ல தெய்வம்; அடியார் சோதி வடிவில் வணங்கும் பெருந் தெய்வம்; நீதி வடிவான தெய்வம்; நிர்மலமான தெய்வம்; இத்தகைய பராபரனான சதாசிவத்தின் உடலில் சரிபாதியாக இருப்பவள் பராசக்தி.
 
#1768 to #1772

#1768. அப்பாலுக்கு அப்பாலாம்!

சத்திக்கு மேலே பராசத்தி தன்னுள்ளே
சுத்த சிவபதம் , தோயாத தூவொளி
அத்தன் திருவடிக்கு அப்பாலைக்கு அப்பாலாம்;
ஒத்தவும் ஆம் ஈசன் தானான உண்மையே.


சக்திக்கு மேலே விளங்குவது பராசக்தி. அதன் உள்ளே விளங்குவது சுத்தமான சிவபதம். குறையாது நிறைந்து விளங்கும் அந்தத தூய ஒளியில் சிவபதம் அப்பலுக்கு அப்பாலாகும். இதுவே சதாசிவ நிலைக் கடந்து ஈசன் விளங்கும் உண்மை நிலை.

#1769. ஞானலிங்கம் தோன்றும்

கொழுந்தினைக் காணின் குவலயம் தோன்றும்
எழும்திடம் காணில் இருக்கலும் ஆகும்
பரந்திடம் காணின் பார்ப்பதி மேலே
திரண்டு எழக் கண்டவன் சிந்தை உளானே.

ஞானலிங்கம் என்னும் ஒளிவடிவான சுடரைக் கண்டால் அங்கு நுண்மையான வடிவில் உலகம் தோன்றும். திடமான முயற்சியால் ஒருவர் இந்த உலகினில் அழியாமல் இருக்கவும் கூடும். தத்துவங்களைத் துறந்து விட்ட ஆன்மா திடமாக முயன்றால், சக்திக்கு மேலே நிராதாரக் கலைகளில் ஞான லிங்கத்தை அருவமாக உணர முடியும்.

#1770. ஞானம் என்பது என்ன?

எந்தை பரமனும் என் அம்மைக் கூட்டமும்
முந்த உரைத்து , முறை சொல்லின் ஞானமாம்;
சந்தித் திருந்த இடம்பெருங் கண்ணியை
உந்தியின் மேல் வைத்து உகந்திருந் தானே.


என் தந்தையாகிய சதாசிவனையும், அறுபது நான்கு பிரணவ சக்திகளின் கூட்டமாகிய என் அன்னையையும் நன்றாக ஓதி உணர்ந்து கொள்வதே ஞானம் ஆகும். ஞானம் உதிக்கும் நமது புருவ மத்தியில். விசாலமான கண்களை உடைய சக்தியுடன் சிவன் உந்தியின் மேல் உள்ள இதயத்தில் மிகுந்த அன்பு கொண்டு உறைகின்றான்.

#1771. சித்தம் புகுந்து சிவம் அகம் ஆக்கும்!

சத்தி சிவன் விளையாட்டாம் உயிர் ஆகி
ஒத்த இரு மாயா கூட்டத்திடை ஊட்டிச்
சுத்தம் அது ஆகும் துரியம் பிறிவித்துச்
சித்தம் புகுந்து சிவம் அகம் ஆக்குமே.


சிவசக்தியரின் விளை யாட்டு இதுவே. சீவனின் தகுதிக்கு ஏற்ப அதன் உயிர் நிலையை விளங்கச் செய்வர். அதற்கு ஏற்ற வண்ணம் சுத்த மாயை அசுத்த மாயைகளின் கூட்டத்தில் சேர்த்துவிடுவர் . சீவன் பக்குவம் அடைந்துவிட்டால் சுத்த மாயையில் விளங்குகின்ற ஒளி மண்டலத்தை உணர்த்துவர். பின்னர் அதனைக் கடக்க உதவுவர். சீவனின் சித்தத்தில் சிவன் புகுவான். அப்போது சீவன் சிவன் உகந்து உறையும் ஓர் ஆலயம் ஆகிவிடும்.

#1772. சக்தி சிவத்தின் உருவாகும்

சத்தி சிவன்றன் விளையாட்டுத் தாரணி
சத்தி சிவமுமாம் சிவன்சத்தியு மாகும்
சத்தி சிவமன்றி தாபரம் வேறில்லை
சத்தி தானென்றும் சமைந்துரு வாகுமே.


தாரணி முழுவதும் சிவசக்தியரின் அலகிலா விளையாட்டு ஆகும். சக்தி வடிவம் உடையவள் என்றால் சிவம் தூய அறிவு மயமானவன். சக்தி சிவனாக மாறுவாள். சிவன் சக்தியாக மாறுவான். சிவசக்தியரின் கலப்பு இன்றி உயிர்கள் இருக்க முடியாது. சக்தியே தேவைக்கு ஏற்பப் பற்பல வடிவங்களை எடுப்பாள்.
 
7. சிவலிங்கம்

7. சிவலிங்கம்
இதுவே சிவகுரு ஆகும்.

#1773 to #1777

#1773. வரித்து வலம் செய்ய அறியேன்!
குறைக்கின்ற வாரிக் குவலயம் நீரும்
பரக்கின்ற காற்றுப் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற வாறு இவை நீண்டு அகன்றானை
வரைத்து வளம் செய்யு மாறுஅறி யேனே.


ஒலிக்கும் அலைகடல் சூழ்ந்த உலகம், நீர், பரவிச் செல்லும் காற்று, எரிக்கும் நெருப்பு என்னும் நான்கும் தத்தம் நிலையும், முறையும் மாறாமல் ஒழுங்காக நிலை பெற்று விளங்குவதற்கு உதவிடும் வானமும் எவரால் இயங்குகின்றன என்று தெரியுமா? இவை நிகழ்வது நீண்டும் அகன்றும் விளங்கும் சிவபெருமானால் தான். அத்தகைய பெரியவனை நான் ஒரு வரைமுறைக்கு உட்படுத்தி வணங்கும் முறையை அறியேன்.

#1774. புரிசடையான் பிரிந்து செல்லான்!

வரைத்து வலம் செய்யுமாறு இங்கு ஒன்றுண்டு
நிரைத்து வரு கங்கைநீர், மலர் ஏந்தி
உரைத்து அவன் நாமம் உணரவல் லார்க்குப்
புரைத்து எங்கும் போகான் புரிசடை யோனே.

இங்கு அங்கு என்னதபடி எங்கும் பரவி நிற்கும் இறைவனை ஒரு வரைமுறைக்குள் அடக்கி வணங்கும் வழி ஒன்று உண்டு. பொங்கி எழும் உணர்வு நீரோட்டத்தை உடைய சுவாதிட்டான மலரை ஏந்திக் கொள்ள வேண்டும். அவன் திரு நாமத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். அப்போது சிவன் அந்த சீவனின் உடலில் உள்ள நவத் துவாரங்களைத் துளைத்துக் கொண்டு பிரிந்து வெளியே சென்று விடாமல் எப்போதும் சீவனுடனேயே பொருந்தி நிற்பான்.

#1775. ஆதிப் பிரான் அருள் செய்வான்!

ஒன்று எனக் கண்டேன்எம் ஈசன் ஒருவனை
நன்று என்று அடியிணை நான் அவனைத் தொழ
வென்ற ஐம்புலனும் மிகக் கிடந்தது இன்புற
அன்று என்று அருள்செய்யும் ஆதிப் பிரானே.


உலகத்தின் முதல்வன் அவனே என்று எம் ஈசனை அறிந்து கொண்டேன். அவன் திருவடிகள் நன்மை பயக்கும் என்று அவற்றைத் தொழுது நின்றேன். வென்று விட்ட ஐம் புலன்கள் வழிச் செல்லாமல் என் அறிவு சிவனுடன் பொருந்தி இன்பம் அடைந்தது. அப்போது ஆதிப் பிரான் ஆகிய சிவன் தன் தண்ணருளை எனக்கு அள்ளித் தந்தான்.

#1776. ஒன்பது வித இலிங்கங்கள்

மலர்ந்தயன் மாலு முருத்திரன் மகேசன்
பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம்
நலந்தரு சத்தி சிவன்வடி வாகிப்
பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே.


நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன், விந்து, நாதம், சக்தி, சிவன் என்னும் ஒன்பதும், ஒன்பது வித இலிங்கங்கள் ஆகும்.

#1777. பரகதி பெறலாம்!

மேவி எழுகின்ற செஞ்சுட ரூடு சென்று
ஆவி எழும் அளவு அன்றே உடல் உற
மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித்து அடக்கின் பரகதி தானே.


மூலாதாரத்தில் இருந்து மேல் நோக்கி எழுந்து, நாடு நாடி வழியே செல்கின்ற, சிவந்த ஒளிதை உடைய குண்டலினி சக்தியுடன் சேர்ந்து மேலே எழும்பிச் செல்ல வேண்டும். பிராண வாயுவை வசப்படுத்த வேண்டும். உடலில் உள்ள ஆதாரக் கலைகளிலும், உடலை விட்டு நீங்கி இருக்கும் நிராதாரக் கலைகளிலும் பொருந்தியும் நீங்கியும் நிற்பதற்கு உள்ளதைப் பழக்கினால் பரசிவகதியை அடையலாம்.
 
8. சம்பிரதாயம்
மரபு அல்லது தொன்று தொட்டு வழங்கி வரும் முறை

#1778 to #1782

#1778. தீட்சை தரும் முறை

உடல் பொருள் ஆவி உதகத்தால் கொண்டு
படர்வினை பற்றறப் பார்த்துக் கைவைத்து
நொடியினடி வைத்து நுண்ணுணர் வாக்கிக்
கடியப் பிறப்பறக் காட்டினான் நந்தியே.


மாணவன் தன உடல் பொருள் ஆவி அனைத்தையும் நீரால் தத்தம் செய்ய வேண்டும். குரு அவற்றை சுவீகரிக்க வேண்டும். படர்ந்து வரும் வினைகளையும், மாணவனின் பற்றையும் தம் விழிப் பார்வையினால் குரு போக்க வேண்டும். மாணவனின் மீது தன் கரத்தை வைத்து, அவன் சிரத்தின் மேல் தன் அடியை வைத்து, நொடியில் ஞானத்தைத் தர வேண்டும். மாணவனின் பிறவிப் பிணியை நீக்கி அருள வேண்டும்.

#1779. உய்யக் கொள்வான்!

உயிருஞ் சரீரமும் ஒண்பொரு ளான
வியவார் பரமும்பின் மேவும் பிராணன்
செயலார் சிவமும் சிற்சத்தி யாதிக்கே
உயலார் குருபரன் உய்யக் கொண் டானே.


உயிர், உடல், ஒளிரும் பரம் ஆகிவிட்ட ஆன்மா, பிராணன், இவை
அனைத்தையும் இயக்குகின்ற சிவன், சக்தி என்பனவற்றை நான் அறிந்து கொண்டு உய்வடையும்படி என் குருநாதன் என்னை ஆட்கொண்டு உய்வித்தான்.

#1780. மேற்கு திசை ஒளிரும்!

பச்சிம திக்கிலே வைத்த ஆசாரியன்
நிச்சலு மென்னை நினையென்ற அப்பொருள்
உச்சிக்குக் கீழது உண்ணாக்கு மேலது
வைச்ச பதமிது வாய்திற வாதே.


தன்னுடைய வலப் புறத்தில் என்னை அமர்த்திக் கொண்ட குருநாதர், “தினமும் என்னை இங்கே மனனம் செய்” என்று கூறினார். அந்த இடம் என் உச்சிக்குக் கீழேயும், உண்ணாக்குக்கு மேலேயும் உள்ள மேலான பதம் ஆகும். இதைப் பற்றி நாம் வாயினால் பேசி விட முடியாது.

#1781. இருள் அறும்!

பெட்டடித் தெங்கும் பிதற்றித் திரிவேனை
ஒட்டடித் துள்ளமர் மாசெலாம் வாங்கிப்பின்
தட்டொக்க மாறினான் தன்னையும் என்னையும்
வட்டம தொத்தது வாணிபம் வாய்த்ததே.


அனுபவம் எதுவும் இல்லாமல் நான் விரும்பியபடி பிதற்றிக் கொண்டும் திரிந்து கொண்டும் இருந்தேன் நான். குரு நாதர் என்னிடம் உள்ள மாசுகளை எல்லாம் அகற்றி என்னைத் தூயவனாக்கினார். என்னையும் தன்னையும் தராசுத் தட்டுக்களில் உள்ள பொருட்களைப் போல சமம் ஆக்கினார். என்னுடைய முயர்சியும் இறைவனுடைய திருவருளும் கொண்டு பண்டமாற்று முறையில் நல்ல வாணிபம் நடந்தது.

#1782. கண்டு கொண்டேன் அவனை நான்!

தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்;
பிரிக்கின்ற இந்தப் பிணக்கு அறுத்து, எல்லாம்
கருக்கொண்ட ஈசனைக் கண்டு கொண்டேனே.

இருக்கின்ற அனைத்து உயிர்த் தொகைகளுக்கும் அவனே ஒரு தனித் தலைவன். சிவன், சீவன், உலகம் என்று மூன்றாகவும் அவன் ஒருவனே இருப்பதை உலகத்தோர் அறிகிலர். ‘நான்’ என்று என்னை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்தும் பிணக்கினை அறுத்த பின்பு, அனைத்தையும் தன் கருவிலே கொண்டுள்ள அந்த ஈசனை நான் கண்டு கொண்டேன்.
 
#1783 to #1787

#1783. பற்றற நீக்குவான்!

கூடும் உடல்பொருள் ஆவி குறிக்கொண்டு
நாடி யடிவைத் தருள்ஞான சத்தியால்
பாடல் உடலினில் பற்றற நீக்கியே
கூடிய தானவ னாம் குளிக் கொண்டே.


சீவனுடன் கூடித் தொடர்ந்து வரு உடல், பொருள், ஆவி இவற்றிலிருந்து சீவனை விடுவிக்க எண்ணம் கொண்டான் சிவகுருநாதன். தன் திருவடியை என் சென்னி மேல் பதித்தான். எனக்கு ஞானம் தந்தான். பெருமை இல்லாத இந்த உடலின் மீதுள்ள பற்றை நீக்கினான். தானும் நானும் ஒன்றாகும்படி சிவனையும் சீவனையும் ஒன்றாகப் பொருத்தினான்.

#1784. கொண்டான் உடல், பொருள், காயம்!

கொண்டான் அடியேன் அடிமை குறிக் கொள்ளக்
கொண்டான் உயிர், பொருள், காயக் குழாத்தினை
கொண்டான் பலமுற்றும் தந்தவன் கோடலால்
கொண்டான் என ஒன்றும் கூறகி லேனே.


நான் பக்குவம் அடைந்தவுடன் என்னைத் தன் அடிமையாக ஏற்றுக் கொள்ள அவன் முடிவு செய்தான். அவன் என் ஆவி , பொருள், சரீரக் கூட்டம், கருவிகளின் கூட்டத்தைத் தனதாக்கிக் கொண்டு விட்டான். என்னிடம் இருந்த எல்லாவற்றையும் தந்த அவனே அவற்றை எடுத்துக் கொண்டு விட்டதால், “என்னுடையவற்றை அவன் எடுத்துக் கொண்டு விட்டான்!” என்று நான் சொல்ல முடியாது அல்லவா?

#1785. பேயுடன் ஒப்பர்!

குறிக்கின்ற தேகமும் தேகியுங் கூடி
நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன்
பிரிக்கின்ற காயத்தைப் பற்றிய நேர்மை
பிறக்க அறியாதார் பேயுட னொப்பரே .

சீவன் தன் குறியாகக் கொள்வது உடல். அந்த உடலை இயக்குவது உயிர். இவற்றை நெறியுடன் இணக்குவது பிராணனுடன் நிலைபெற்றுள்ள ஆன்மா. இந்த உண்மைகளை யமன் சீவனின் உடலை பறிக்கும் முன்பே, சீவன் உடலுடன் கூடி இருக்கும் போதே, அறிந்து கொள்ள முடியாதவர்கள் பேய்க்கு ஒப்பானவர்கள்.

#1786. உணர்வுடையார் உணர்வர்!

உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும்
உணர்வுடை யார்கட் குறுதுய ரில்லை
உணர்வுடை யார்க ளுணர்ந்தவக் காலம்
உணர்வுடை யார்கள் உணர்ந்து கண்டாரே
.

“நான் உடல் அல்ல! நான் ஆன்மா” என்ற உண்மை உணர்வினை உடையவர்களால் எல்லா நுண்ணிய உலகங்களையும் காண இயலும். இவர்கள் உலக நிகழ்வுகளை தம் அனுபவ நிகழ்வுகளாக உணராமல் வெறும் சாட்சியாக இருந்து நோக்குவதால் அவர்களுக்கு எந்த துன்பமும் விளையாது. இவர்கள் தன்னையும் உணர்ந்து கொள்வர். தம் தலைவனையும் உணந்து கொள்வர்.

#1787. என்ன சொல்லி வழுத்துவேன்?

காயப் பரப்பில் அலைந்து துரியத்துச்
சாயல் விரிந்து, குவிந்து சகலத்தில்
ஆய அவ்வாறே அடைந்து திரிந்தோர்க்குத்
தூய அருள் தந்த நந்திக்கு என் சொல்வதே!

சகல நிலையில் முப்பத்தாறு தத்துவங்களுடன் கூடி இருந்தும்; உடலின் பரப்பில் இருக்கும் போது அலைந்து திரிந்தும்; துரிய நிலையில் ஒளி மண்டலத்தில் மிகவும் விரிந்தும், சிவத்துடன் பொருந்திக் குவிந்தும் இருக்கும் அன்பருக்குத் தூய அருள் தந்த நந்தியின் பெருமையை நான் என்ன சொல்லி வழுத்துவேன்?
 
#1788 to #1791

#1788. தேன் என இன்பம் விளையும்!

நான்என நீஎன வேறு இல்லை நண்ணுதல்
ஊன்என ஊன்உயிர் என்ன உடன் நின்று
வான்என வானவர் நின்று மனிதர்கள்
தேன்என இன்பம் திளைக்கின்ற வாறே.


“நான் வேறு என்றும் நீ வேறு என்றும் பிரித்து உணருகின்ற நிலையில் நாம் உண்மையில் இல்லை!”. உடலும், உடலில் உள்ள உயிரும் போலச் சீவன், சிவன் இருவரும் பொருந்தி இருக்கின்றனர். வானும் வானவரும் போலவும், தேனும் தேனின் இன்சுவையைப் போலவும், சீவனும் சிவனும் இரண்டறக் கலந்து உள்ளனர்.

#1789. அவன் இவன் ஆவான்

அவனும் அவனும் அவனை அறியார்
அவனை அறியில் அறிவானும் இல்லை
அவனை அவனும் அவனை அறியில்
அவனும் அவனும் அவன் இவன் ஆமே.


சிவனைத் தன்னிலும் வேறாகக் கருதி வழிபடும் சரியை, கிரியை நெறிகளில் நிற்பவர் அந்த இறைவனை அறிந்து கொள்ளார். இவன் அவனை அறிந்து கொண்டு விட்டால் அறிபவனும் அறியும் பொருளும் ஒன்றாகிவிடும். சரியை, கிரியை நெறிகளில் நிற்பவர் சீவனையும் சிவனையும் ஒன்றாகக் கருதினால்; அறியும் பொருளான சிவமும், அறிகின்ற அவனும், பொருந்தி ஒன்றாகி விடுவார்கள்.

#1790. அம்பர நாதன் ஆகலாம் !

“நான்இது தான்” என நின்றவன், நாடொறும்
ஊன்இது தான் உயிர் போல் உணர்வான் உளன்
வான்இரு மாமுகில் போல் பொழி வான்உளன்
நான் இது அம்பர நாதனும் ஆமே.


“நான் இந்த உடல் ” என்று ஒவ்வொரு உயிரும் எண்ணும். அது போன்றே “நான் இந்த சீவன் ” என்று சிவன் எண்ணுவான். கன மழை பொழியும் வான் மேகத்தைக் காட்டிலும் அவன் அதிக அருள் மழை பொழிவான். அவன் அருள் மழையால் நானும் அவனாகவே மாறி அம்பர நாதன் ஆகி விட்டேன்.

#1791. உடலில் உயிர் போலப் பொருந்துவான்!

பெருந்தன்மை தானென யானென வேராய்
இருந்தது மில்லையது ஈச னறியும்
பொருந்து முடலுயிர் போலுமை மெய்யே
திருந்தமுன் செய்கின்ற தேவர் பிரானே.


பெருந்தன்மை உடைய சிவனும், ‘நான்’ என்று தன்னை வேறாக எண்ணும் சீவனும் ஒருபோதும் வேறு வேறாக இருந்தது இல்லை. இந்த உண்மையை ஈசன் இயல்பாகவே அறிவான். ஆனால் சீவன் அறியான். சீவனைச் செம்மைப் படுத்துகின்ற சிவன் எப்போதும் உடலில் உயிர் போலச் சீவனுடன் தானும் பொருந்தி இருப்பான்
 
9. திருவருள் வைப்பு

9. திருவருள் வைப்பு
திருவருள் வைப்பு = திருவடிகளைப் பதிதல்.
சூரிய சந்திர கலைகளே இறைவனின் திருவடிகள்.



#1792 to #1795

#1792. அருளாவது அறமும் தவமும்
இருபத மாவது இரவும் பகலும்
உருவது ஆவ துயிரும் உடலும்
அருளது வாவது அறமும் தவமும்
பொருளது வுள்நின்ற போகம தாமே.


அறிய வேண்டிய நெறிகள் இரண்டு. அவை கதிரவ நெறியும், திங்கள் நெறியும் ஆகும். உயிர் உடலுடன் இணைந்து இருப்பதன் பயன் இதுவே. அருள் என்னும் தெய்வ சக்தியை அடைவதற்கு உள்ள வழிகள் இரண்டு. அவை திங்கள் நெறியைப் பற்றியவர்களுக்கு அறம்; கதிரவ நெறியைப் பற்றியவருக்கு தவம்.
இந்த இரு நெறிகளுமே மனத்தின் பண்புக்கு ஏற்பப் பயனைத் தரும்.

#1793. இருள் அறும் !

காண்டற்கு அரியன் கருதிலன் நந்தியும்
தீண்டற்கும் சார்தற்கும் சேயனாத் தோன்றிடும்
வேண்டிக் கிடந்து விளக்கொளியான் நெஞ்சம்
ஈண்டிக் கிடந்தது அங்கு இருள் அறுமே.


இறைவன் கண்களால் காண்பதற்கு அரியவன்; கருத்தினால் அறிவதற்கும் அரியவன்; தீண்டுவதற்கும் சார்வதற்கும் வெகு தொலைவில் இருப்பவன் என்று தோன்றும். ஆனால் அவனையே நினைந்து இருப்பவருக்கு அவன் அகத்தில் விளக்கொளி ஆவான். அவனையே சார்ந்திருந்தால் ஒருவன் மனத்தின் இருள் அறும்.

#1794. விகிர்தன் நிற்பான்

குறிப்பினுள் உள்ளே குவயலாம் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கில் விகிர்தனும்வம் நிற்கும்
செறிப்புறு சிந்தையைச் சிக்கென நாடில்
அறிப்புறு காட்சி அமரரு மாமே.


சிவ ஒளியை நோக்கி நிற்கும் போது அகக் கண்களில் உலகத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் கருவாகக் காட்சி தரும். வெறுக்கத் தக்க ஆணவ இருள் நீங்கி விட்டால். உயிரில் உயிராகக் கலந்து நிற்கும் விகிர்தனைக் காண முடியும். அவனிடம் சிந்தையைச் செலுத்தி அதை ஆராய்ந்தால் ஞான ஒளி பிறக்கும். தேவ வடிவும் கிடைக்கும்.

#1795. அறிவார் அறிவே துணையாகும்!

தேர்ந்து அறியாமையின் சென்றன காலங்கள்
பேர்ந்து அறிவான் எங்கள் பிஞ்ஞகன் எம்இறை
ஆர்ந்து அறிவார் அறிவே துணையாம் எனச்
சார்ந்து அறிவான் பெருந்தன்மை வல்லானே.


ஆராய்ந்து தெளிவு பெறாததால் அறியாமையில் என் காலம் வீணாகக் கழிந்தது. எம் இறைவன் தன் நிலையிலிருந்து பெயர்ந்து ஒரு குருவாக வந்து தன்னை வெளிப்படுத்தினான். அறிவைத் துணையாகக் கொண்டு தன்னை உணர்பவரிடம் பொருந்தி விளங்கும் தன்மை உடையவன் சிவன்.
 

Latest posts

Latest ads

Back
Top