• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

10. திதி

10. திதி

உலகைக் காக்கும் இயல்பு

#411 to #414

#411. அறிவுக்கு அறிவானவன் சிவன்

புகுந்து நின்றான் வெளியாய், இருள் ஆகிப்

புகுந்து நின்றான் புகழ் வாய், இகழ்வு ஆகிப்
புகுந்து நின்றான் உடலாய், உயிர் ஆகிப்
புகுந்து நின்றான் புந்தி மன்னி நின்றானே.

வெளியாகவும், இருளாகவும் எல்லாவற்றிலும் கலந்து நிற்பவன் சதாசிவன். ஞானியர்க்குப் புகழத் தக்க பொருளும் அவனே. அஞ்ஞானியருக்கு இகழத்தக்க பொருளும் அவனே. உடலும் அவனே. உயிரும் அவனே. அவ்வுயிர்களின் அறிவும் அவனே. அறிவுக்கு அறிவாகி அதனை விளகுபவனும் அவனே.

#412.சதாசிவன் இயல்பு.


தானே திசையோடு தேவருமாய் நிற்கும்

தானே உடல், உயிர், தத்துவமாய் நிற்கும்
தானே கடல், மலை ஆதியுமாய் நிற்கும்
தானே உலகின் தலைவனும் ஆமே.

சதாசிவமே எல்லா திக்குகளிலும் பரவித் தேவர்களாக இருப்பான். அவனே உடலாகவும், உயிராகவும், எல்லாத் தத்துவங்களாகவும் இருப்பான். அவனே கடலாகவும், மலையாகவும், அசைவில்லாத பிற அனைத்துமாகவும் இருப்பான். அவனே உலகின் தலைவனாகவும் இருப்பான்.

413. எங்கும் நிறைந்து இருப்பவன்

உடலாய் உயிராய் உலகம்அது ஆகி
கடலாய்க் கார்முகில் நீர் பொழிவான் ஆய்
இடையாய் , உலப்புஇலி, எங்கும் தான் ஆகி
அடையார் பெருவழி அண்ணல் நின்றானே.

தலையின் உச்சியில் இருக்கும் ஒளிமயமாகிய வானத்தில் (பிரமரந்திரத்தில்) இருப்பவன் சதாசிவன். உடலாக, உயிராக, உலகமாக, கடலாக, கார் மேகமாக, மழை பொழிபவனாக, இவற்றின் நடுவில் இருப்பவனாக, என்றும் அழியதவனாக, எங்கும் நிறைந்திருப்பவன்.

#414. ஊடல், தேடல், கூடல்

தேடும் திசை எட்டும் சீவன் உடல் உயிர்
கூடும் மரபிற் குணம் செய்த மாநந்தி
ஊடும் அவர் தம் உள்ளத்துளே நின்று
நாடும் வழக்கமும் நான் அறிந்தேனே.

#406 ஆம் பாடல் இதுவே.


எண் திசைகளிலும் தேடித் திரிபவன் சீவன். அவனை உடலுடன் உயிர் கூடிப் பிறக்கும்படிச் செய்பவன் சிவன். அவனே ஊடுகின்ற மங்கையர், ஆடவர் உள்ளத்தில் இருந்து கொண்டு, அவர்களின் இன்பத்தை நாடலையும் பின் அவர்களின் கூடலையும் ஏற்படுத்துகின்றான்.
 
#415 to #417

#415. முத்தொழில் வல்லுனன்

தான் ஒரு காலம் தனிச் சுடராய் நிற்கும்
தான் ஒருகால் சண்ட மாருதமாய் நிற்கும்
தான் ஒரு காலம் தண்மழையாய் நிற்கும்
தான் ஒருகாலம் தண் மாயனும் ஆமே.


உலகை அழிக்க வேண்டிய சமயத்தில் சதாசிவன் ஒப்பற்ற ஒரு சூரியன் ஆவான். மழையே இல்லாமல் செய்து பெரும் அழிவை ஏற்படுத்துவான். அப்பிரானே ஒரு சமயம் புயல் காற்றாக மாறி அழிவை ஏற்படுத்துவான். அப் பெருமானே ஒரு சமயம் பெரு மழையாகப் பெய்து பெரும் வெள்ளத்தைத் தோற்றுவிப்பான். அவனே ஒரு சமயம் திருமாலாகி உலகத்தைக் காப்பான்.


#416. சதாசிவத்தின் பெருமை

அன்பும் அறிவும் அடக்கமுமாய் நிற்கும்

இன்பமும் இன்பக் கலவியுமாய் நிற்கும்
முன்பு உறு காலமும் ஊழியுமாய் நிற்கும்
அன்பு உற ஐந்தில் அமர்ந்து நின்றானே.

உயிர் ஆற்றலில் விளங்கும் அன்பு, அறிவு, அடக்கம் ஆகிய நற் பண்புகள் சிவபெருமான் ஆவான். இன்பத்துக்கும் இன்பக் கூட்டுறவுக்கும் காரணம் அந்தப் பெருமானே ஆவான். காலத்தின் எல்லையை வகுத்தவன் அவனே. அதை முடிப்பவனும் அவனே. அவன் நன்மைகள் செய்வதற்காக சுத்த மாயா தத்துவங்கள் ஆகிய நாதம், விந்து, சாதாக்கியம், மகேசுரம், சுத்த வித்தை என்ற ஐந்தினில் பொருந்தி ஐந்து செயல்களைச் செய்வான்

#417. சிவன் உலகை வனைவான்

உற்று வனைவன் அவனே உலகினைப்

பெற்று வனைவான் அவனே பிறவியைச்
சுற்றிய சாலும் குடமும் சிறுதூதை
மற்றும் அவனே வனைய வல்லானே.

சதாசிவனே மாயைலிருந்து உலகங்களைப் படைக்கின்றான். அந்தப் பெருமானே ஜீவர்களுக்குப் பிறவியை அளிகின்றான். பெரிய குடம் பேரண்டம் என்றால் சிறிய குடம் ஜீவனின் உடல்.ஆகும். குயவன் மண்ணிலிருந்து வேறு வேறு குடங்களை வனைவது போல இறைவன் மாயையிலிருந்து உலகங்களைப் படைக்கின்றான்.


 
International Men's Day - Nov 19 focuses on raising awareness for discrimination & male health. But for us, It's the time to recollect their contributions, sacrifices, support and progress. Such Push instills that of MEN nurturing their women to make power in Society. So the topic is ' Behind every successful woman there is a man.' Who/How has influenced you most in life?
Give a detailed account
 




November 16th to November 19th were devoted to my spiritual recharging by attending The MahA Rudhram arranged by my cousins sister and her husband.

November 20th to 25th were devoted to my physical recharging with gadgets using electricity and magnetism.

There is a week long trip from 28th November to 5th December. That will be followed by a week/fortnight long treatment and resting period for my advanced ankle/knee/ leg problem.

May be I can resume posting from 21st December. However you are welcome to use this link to read more
http://visalakshiramani.weebly.com/
 
#418 to #420

#418. படைத்தும் காத்தும் அருள்வான்!

ள் உயிர்ப்பு ஆய், உடலாகி நின்றான் நந்தி
வெள்ளுயிர் ஆகும் வெளியான் இலங்கு ஒளி
உள் உயிர்க்கும் உணர்வே உடலுள் பரம்
தள் உயிரா வண்ணம் தாங்கி நின்றானே.

உடலின் மூச்சுக் காற்றாக இருப்பவன் நந்திப் பிரான். உடலில் உணர்வாகப் பரவி உயிர்களை வெளியேற விடாமல் காப்பவன் அவனே. தத்துவங்களுடன் கூடாததனால் பிறவிக்காக் காத்திருக்கும் உயிர்கள். அவற்றையும் காப்பவன் சிவனே. உடலைப் படைப்பதற்கு முன்பும் பின்பும் அவனே காலஎல்லை வரையில் காத்து அருள்வான்.

419. எப்போதும் காப்பவன் சிவன்

தாங்க அருந்தன்மையும் தான் அவை பல்உயிர்
வாங்கிய காலத்தும் மற்றோர் பிறிது இல்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்தம் அவ்வழி
தாங்கி நின்றால்னும் அத்தரணி தானே.

உயிர் உடலை விட்டு நீங்காத வண்ணம் தாங்குபவன் சிவன். கால எல்லையில் உடம்பிலிருந்து உயிர் பிரிந்த நிலையிலும் அதைக் காப்பவன் அவனே. ஏழு பிறவிகளிலும், அவற்றின் இடைப்பட்ட துரியாதீத நிலையிலும் உயிர்களைக் காத்து அருள்பவன் அவனே.

#420. ஞானமும் உடலும் தருவான்


அணுகினும் சேயவன் அங்கியின் கூடி

நணுகினும் ஞானக் கொழுந்து ஒன்று நல்கும்
பணிகினும் பார்மிசைப் பல்லுயிர் ஆகித்
தணிகினும் மண் உடல் அண்ணல் செய்வானே.

சிவன் உயிர்களுடன் கலந்து கூடி இருக்கும் போது அவனை வெளியில் தேடினால் அவன் மிகத் தொலைவாகவே இருப்பான். மூலதாரத்தில் உள்ள அக்கினியை ஏழுப்பி பிரமரந்திரத்தை அடைந்தால் அருள் புரிவான். பல உடல்களை எடுத்துப் பாரில் அவனைப் பணிந்தால் அவன் நமக்கு மேன்மையான உடல்களைத் தந்தருள்வான்.
 
11. சங்காரம்

11. சங்காரம்
சங்காரம் = அழித்தல்.
இதுவும் இறைவனின் அருட் செயல்களில் ஒன்று.
சிவனே உருத்திரனாகச் சங்காரம் செய்கின்றான்.

#421 to #424

#421. அழிக்கும் அருட்செயல்

அங்கி செய்து ஈசன் அகல் இடம் சுட்டது

அங்கி செய்து ஈசன் அலைகடல் சுட்டது
அங்கி செய்து ஈசன் அசுரரைச் சுட்டது
அங்கி அவ்ஈசற்குக் கை அம்பு தானே.

இறைவன் தீயினால் பரந்த உலகத்தை அழித்தான். இறைவன் தீயினால் கடலை வற்றும்படிச் செய்தான் இறைவன் தீயினால் அசுரர்களை அழித்தான். அந்தத் தீயே இறைவன் கையில் இருக்கும் அம்பு ஆகும்.

#422. மூன்று சங்காரம்

இலயங்கள் மூன்றிலும் ஒன்று கற்பாந்தம்;

நிலை அன்று இழிந்தமை நின்று உணர்ந்தேனால்
உலை தந்தமெல்அரி போலும் உலகம்
மலை தந்த மானிலம் தான் வெந்ததுவே.

மூன்று வகைப் பிரளயங்கள் உள்ளன. தினப்பிரளயம் தினந்தோறும் நாம் உறங்கும்போது நிகழ்வது. நடுப்பிரளயம் உயிர் உடம்பிலிருந்து நீங்கும் பொழுது நிகழ்வது. மகாபிரளயம் கற்பத்தின் முடிவில் நிகழ்வது. இந்த உலகங்கள் அழிவதை அன்று நான் ஞானக் கண்ணால் கண்டேன். கற்பத்தின் முடியில் நிகழும் பிரளயத்தின் போது இந்த உலகம் உலையில் இட்ட அரிசியைப் போலச் சுற்றிச் சுழலும். குறிஞ்சி போன்ற பிரதேசங்களும் எரிந்து அழிந்து விடும்.

#423. கற்ப முடிவு

பதம் செய்யும் பாரும் பனிவரை எட்டும்

உதம் செய்யும் ஏழ் கடல் ஓதம் முதலாம்
குதம் செய்யும் அங்கி கொழுவி ஆகாசம்
விதம் செய்யும்; நெஞ்சில் வியப்பு இல்லை தானே.

ஜீவர்களுக்குப் பக்குவம் தரும் பூமி, பனி மூடிய மலைகள், மகிழ்ச்சியைத் தரும் ஏழு கடல்கள் இவற்றைக் கொதிக்கச் செய்யும் தீயை மூட்டி, அதை வெட்ட வெளியில் கொண்டு சேர்ப்பவர்களுக்குக் கற்ப முடிவில் வியப்பதற்கு ஏதும் இராது.

மூலாதாரத்தில் உள்ள அக்கினியை ஏற்றிச் சிரசில் நிலை பெறச் செய்ய வேண்டும் என்பது பொருள்.

#424. மீண்டும் ஒடுக்குதல்


கொண்டல் வரை நின்று இழிந்த குலக்கொடி

அண்டத்துள் ஊறி இருந்து எண் திசை ஆதி
ஒன்றிண் பதம் செய்த ஓம் என்ற அப்புறக்
குண்டத்தின் மேல் அங்கி கோலிக் கொண்டானே.

தலையின் மேல் இருக்கும் ஒளி மண்டலத்தில் இருந்து கீழே இறங்குவாள் ஆதி சக்தி. அவள் உடலைச் சுற்றியுள்ள ஒளி மாயமான அண்டகோசத்தில் சிவன் பொருந்துவான். திரோதன சக்தியுடன் கூடி ஜீவர்களுக்கு பக்குவம் தருவான். அதன் பின்னர் மூலாதாரத்தில் உள்ள தீயைத் தன்னுள் மீண்டும் ஓடுக்கிக் கொண்டு விளங்குவான்.


 
#425 to #427

#425. மூன்று சங்காரங்கள்

நித்த சங்காரம் உறக்கத்து நீள் மூடம்

வைத்த சங்காரமும் சாக்கிரதாதீதம் ஆம்
சுத்த சங்காரம் தொழில் அற்ற கேவலம்;
உய்த்த சங்காரம் பரன்அருள் உண்மையே.

உறக்கத்தின் போது எதையுமே அறிந்து கொள்ளாமல் இருப்பது நித்த சங்காரம் என்னும் தினப் பிரளயம். வைத்த சங்காரம் என்பது (சாக்கிரத்தை, சொப்பனம், சுஷுப்தி, துரியம், துரியாதீதம் என்ற) ஜீவனின் ஐந்து அவஸ்தைகளுடன் தொடர்பு இன்றி இருக்கும் நிலை. சுத்த சங்காரம் என்பது சகஜ நிலையிலேயே செயல் ஒன்றும் இல்லாமல் இருக்கும் யோகநிலை. சிவன் அருளுடன் பொருத்துவதே உய்த்த சங்காரம் ஆகும்.

#426. மெய்யான சங்காரம்


நித்த சங்காரம் இரண்டு உடல் நீவுதல்

வைத்த சங்காரமும் மாயாள் சங்காரமாம்
சுத்த சங்காரம் மனாதீதம் தோய்வித்தல்;
உய்த்த சங்காரம் சிவன் அருள் உண்மையே.

நாள் ஒடுக்கம் என்ற நித்த சங்காரத்தில் ஜீவன் ஸ்தூல சூக்ஷ்ம சரீரங்களுடன் தொடர்பு கொண்டிருக்கும். இது மாயையுடன் பொருந்திய சங்காரம். (கனவு நிலயில் ஜீவன் ஸ்தூல உடலை விட்டு விலகி சூக்ஷ்ம உடலுடன் தொடர்பு கொள்ளும்). மனம் அதீதத்தில் நிலைத்து செயல் ஒன்றும் இல்லாது இருப்பது சுத்த சங்காரம். அப்போது ஜீவன் சிவன் அருளில் தோய்வதே உண்மையான சங்காரம் ஆகும்.

#427. சிவமாகும் தன்மை


நித்த சங்காரங் கருவிடர் நீக்கினால்

ஒத்த சங்காரமுடலுயிர் நீவுதல்
வைத்த சங்காரம் கேவலமான்மவுக்
குய்த்த சங்காரஞ் சிவமாகு முண்மையே.

நாள் ஒடுக்கம் என்பது பிறவித் துயரை நீக்கும். மனம் கருவிகள் இவ்விரண்டின் ஒத்த ஒடுக்கத்தில் உயிரும் உடலும் பிரிந்திருக்கும் நிலை உண்டாகும். இந்தகைய ஒடுக்கம் ஆன்மாவின் தூய நிலை (சுத்த கேவல நிலை) எனப்படும். சிவத் தன்மையை அளிக்கும் ஒடுக்கமே உண்மையான ஒடுக்கம்.
 
#428 to #430

#428. நான்கு வகை ஒடுக்கங்கள்

நித்த சங்காரமும் நீடு இளைப்பு ஆற்றுதல்

வைத்த சங்காரமும் மன்னும் அனாதியில்
சுத்த சங்காரமும் தோயாப் பரன் அருள்
வைத்த சங்காரமும் நாலாம் மதிக்கிலே.

நாள் ஒடுக்கம் என்னும் நித்த சங்காரம் ஜீவன் நீண்ட உறக்கத்தில் இருப்பது ஆகும். அமைத்து வைத்த சங்காரம் என்பது மனம் முதலிய கரணங்களை அடக்கி ஒடுக்குவது ஆகும். சுத்த ஒடுக்கம் கருவிகளின்றும் நீங்கி இருந்த போதிலும் பரன் அருளில் தோயாமல் இருக்கக் கூடும். கரணம் கருவிகளில் இருந்து நீங்கிப் பரமன் அருளில் தோய்ந்து நிற்பதே நான்காவது வகையான சங்காரம்.

#429. சுத்த சங்காரம்

பாழே முதலா எழும் பயிர் அப்பயிர்

பாழாய் அடங்கினும் பண்டைப் பாழாகா
வாழாச் சங்காரத்தின் மால் அயன் செய்தியாம்
பாழாம் பயிராய் அடங்கும் அப்பாழிலே.

குணம், குறி இரண்டும் இல்லாதது சிவம். அந்தச் சிவத்தை முதலாகக் கொண்டு தோன்றும் ஆன்மா என்னும் பயிர். உடல், கரணம் இவற்றுடன் கூடிய பின்னர் அவற்றை விடுத்தாலும் ஆன்மா தன் முந்தைய நிலையை அடையாது. எனவே இந்த சங்காரம் முடிவைத் தராத ஒடுக்கம் ஆகும். இத்தகைய ஆன்மாக்கள் நான்முகன் திருமால் செயல்களுக்கு உட்படுவர். மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பார். பிறப்பு, இறப்பு என்று உழல்வர். ஆனால் ஆணவ மலம், வறுக்கப்பட்ட விதையின் முளைக்கும் திறனைப் போல அழிந்த பின்னர் அந்த ஆன்மப் பயிர் சிவத்தில் அடங்கி விடும்.

#430. ஒளி மண்டலம்


தீய வைத்து ஆர்மின்கள் சேரும் வினைதனை

மாயவைத்தான் வைத்த வன்பதி ஒன்றுண்டு
காயம் வைத்தான் கலந்து எங்கும் நினைப்பது ஓர்
ஆயம் வைத்தான் உணர்வு ஆர வைத்தானே.

உம்மிடம் சேருகின்ற வினைகளைச் சுட்டெரிக்கச் சிவனிடம் ஆர்வத்தைப் பெருக்குங்கள் உலகீரே! வினைகளை அழிக்கும் சிவன் வாழும் இடம் என்று ஒன்று உண்டு. அதுவே சஹஸ்ரதளம் ஆகும். சஹஸ்ர தளத்தை உடலில் வைத்தான் சிவன் . அத்துடன் கலந்து சிந்திக்க ஒளிக் கற்றைகளையும் அமைத்துள்ள சிவனின் கருணை தான் என்னே!
 
12. திரோபவம்

12. திரோபவம்

திரோபவம் என்பது மறைப்பது. ஜீவர்கள் தங்கள் வினைப் பயன்களை நுகரும்படிச் செய்வதற்காக அவர்கள் அறிவை மறைப்பது. வினைகளை அழிக்கும் இதுவும் ஓர் அருட் செயலே ஆகும்.

#431 to #434

#431. மன மல மறைப்பு

உள்ளத்து ஒருவனை உள்உறு சோதியை

உள்ளம் விட்டு ஓரடி நீங்கா ஒருவனை
உள்ளமும் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உரு அறியாதே.


உயிருக்கு உயிராக இருப்பவன் சிவன். மனத்தில் பேரொளியாக விளங்குபவன். மனத்தை விட்டுச் சிறிதும் அகலாதவன். மனத்துடனேயே அவன் ஒன்றி இருந்த போதிலும் ஆன்மா அவனை மனமலம் என்னும் திரையினால் அறிய முடியாமல் போகின்றது.

#432. முக்தியை அளித்தான்


இன்பப் பிறவி படைத்த இறைவனும்

துன்பஞ் செய் பாசத்துயருள் அடைத்தனன்
என்பில் கொளுவி இசைந்து உறு தோல் தசை
முன்பின் கொளுவி முடிகுவது ஆக்குமே.

இன்பம் பெறுவதற்காகப் பிறவியைத் தந்தான் ஈசன். துன்பம் தரும் பாசங்களையும் அவற்றுடனேயே அமைத்தான். அவன் எலும்பு, தசை, தோல் என்று வலிமை வாய்ந்த உடலைத் தந்தது சீவர்களைத் தூய்மைப்படுத்தி அவர்களுக்கு முக்தி அருள்வதற்காகவே.

#433. யார் அறிவார் ?


இறையவன் மாதவன் இன்பம் படைத்த

மறையவன் மூவரும் வந்துடன் கூடி
இறையவன் செய்த இரும்பொறி யாக்கை
மறையவன் வாய்த்த பரிசு அறியாரே.

உருத்திரன், திருமால் , இனத்தைத் தரும் நான்முகன் என்னும் மூவரும் ஒன்றாக வந்து ஈசன் அளித்த உடலில் மறைவாக இருப்பார்கள். இருத்த போதிலும் அவர்களும் அவன் அருட்செயல்களை அறிய மாட்டார்கள்.

#434. வான் மண்டலம்


காண்கின்ற கண்ஒளி காதல் செய் ஈசனை

ஆண் பெண் அலி உருவாய் நின்ற ஆதியை
ஊண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
சேண்படு பொய்கைச் செயல் அணையரே.

கண்களின் ஒளியாக இருப்பவன் ஈசன். ஆணாகப் பெண்ணாக அலியாக விளங்குபவன். ஆதியாகிய சிவன் அவனை அறிய வழி ஒன்று உண்டு. உணவு உண்ணப் பயன் படும் நாவின் வழியே மனத்தைச் செலுத்த வேண்டும். தலை உச்சியில் உள்ள வான் மண்டலத்தில் உள்ள தடாகத்தில் அதைக் கொண்டு சென்று பொருத்த வேண்டும்.
 
#435 to #437

#435. அண்டகோசம்

தெருளும் உலகிற்கும் தேவர்க்கும் இன்பம்

அருளும் வகை செய்யும் ஆதிப் பிரானும்
சுருளும் சுடர் உறு தூவெண் சுடரும்
இருளும் அற நின்று இருட்டறையாமே.

தெளிவு பொருந்திய உயிர்களுக்கும் தேவர்களுக்கும் இன்பம் தருபவன் சதாசிவன். அவனே ஜீவர்களின் அண்ட கோசத்தில் இருந்து கொண்டு வல்லிருளாக உண்மையை மறைக்கவும் செய்வான்.

#436. மறைக்கும் சக்தி

அரைக்கின்ற அருள் தரும் அங்கங்கள் ஓசை

உரைக்கின்ற ஆசையும் ஒன்றோடு ஒன்று ஒவ்வாப்
பரக்கும் உருவமும் பாரகந் தானாய்க்
கரக்கின்றவை செய்த காண் தகையானே.

உலகில் பல தத்துவங்கள், தன்மாத்திரைகள், வேறுபட்ட ஆசைகள், மாறுபட்டு விளங்கும் பல வடிவங்கள் என்று நிறைந்துள்ளன. உலகம் முழுவதையும் தானாக மறைக்கின்ற ஈசனே மறைக்கின்ற சக்தியை அருள்பவன் ஆவான்.

#437. அக வழிபாடு

ஒளித்துவைத் தேன்உள் ஊற உணர்ந்து ஈசனை

வெளிப்பட்டு நின்று அருள் செய்திடும் ஈண்டே;
களிப்பொடும் காதன்மை என்னும் பெருமை
வெளிப்பட்டு இரைஞ்சினும் வேட்சியும் ஆமே.

உள்ளத்தில் உணர்ந்து நாம் சிவனை வழிபட்டாலும், அவன் காட்சியில் வெளிப்படுவான். தன் அருளைப் பொழிவான். உள்ளத்து அன்பு என்பது வெளிப்படும் வண்ணம் நாம் வெளிப்படையாக அவனை வழிபட்டால் அதுவும் அவனுக்கு உவப்பையே அளிக்கும்.

 
#438 to #440

#438. மகேசுவரன் மறைப்பான்

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்

சென்றங்கு இயங்கி அரன் திருமாலவன்
நன்றது செய்யும் மலர்மிசை அயன்
என்றிவராகி இசைந்திருந்தானே.

அனைத்தையும் மறைத்து நிற்கின்றவன் மகேசுவரன். அவன் கீழ் முகமாகச் செயல் புரிவான். அவன் உருத்திரன், திருமால், கமல மலரில் அமர்ந்து நன்மைகள் செய்யும் பிரமன் என்னும் மூவர்களுடனும் கலந்து விளங்குகின்றான்.

#439. மனமாசு நீங்க வேண்டும்

ஒருங்கிய பாசத்துள் உத்தம சித்தின்

இருங்கரை மேல் இருந்து இன்புறநாடி
வரும் கரை ஓரா வகையினில் கங்கை
அருங்கரை பேணில் அழுக்கு அறலாமே.

மன மாசு நீங்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? பாசத்தை ஒடுக்க வேண்டும்; சிவன் என்னும் பெருங்கரையின் மீது அமர வேண்டும்; ஆன்ம அனுபவத்தை நாட வேண்டும்; பிறவியை நாடாமல் இருக்க வேண்டும்; தூய வான் கங்கையுடன் பொருந்த வேண்டும்.

#440. உயிர்கள் அறிய இயலாது

மண் ஒன்று தான் பல நற்கலம் ஆயிடும்
உள் நின்ற யோனிகட்கு எல்லாம் ஒருவனே;
கண் ஒண்டு தான் பல காணும் , தனைக் காணா
அண்ணலும் அவ்வண்ணம் ஆகி நின்றானே.


ஒரே மண் பலவிதக் கலங்களாக மாறிவிடும். உடல்களில் காணப் படும் பேதங்களுக்கும் காரணம் ஆனவன் ஈசன் ஒருவனே. கண்களால் வெளியே உள்ள எல்லாவற்றையும் காண இயலும் ஆயினும் தன்னைத் தானே காண இயலாது. அது போன்றே உயிர்களின் வேறுபாடுகளுக்குக் காரணமான அந்த ஒருவனை உயிர்களால் காண முடியாது.
 
13. அனுக்கிரகம்

13. அனுக்கிரகம்

உயிர்களைப் பிறக்கச் செய்து
அவை மல நீக்கம் பெறுவதற்கு
சதாசிவன் அருள்வது அனுக்கிரகம்.


#441 to #444


#441. உடலும், உயிரும்

எட்டுத் திசையும் எறிகின்ற காற்றோடு

வட்டத் திரை அனல், மாநிலம், ஆகாயம்,
ஒட்டி உயிர்நிலை என்னும் இக்காயப்பை
கட்டி அவிழ்ப்பான் கண்ணுதல் காணுமே.

எட்டுத் திசைகளிலும் வீசும் காற்று. வட்டமாக உலகைச் சூழ்ந்துள்ளது கடல். இவேற்றோடு தீ, பூமி, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களைக் கலப்பது சதாசிவன். உடலுடன் உயிரைச் சேர்ப்பதும் பின்னர் உடலிலிருந்து உயிரைப் பிரிப்பதும் அவனே ஆவான்.

#442. உயிர்களை உய்விப்பான்

உச்சியில் ஓங்கி ஒளி திகழ் நாதத்தை
நச்சியே இன்பம் கொள்வார்க்கு நமன் இல்லை
விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத்
தச்சும் அவனே சமைக்க வல்லானே.

தலை உச்சியில் பிரமரந்திரத்தில் விளங்கும் நாதத்தை விரும்புபவர்கள் உயர்ந்த இன்பத்தை அனுபவிப்பார்கள். அவர்களுக்கு இறப்பு என்பதே இல்லை. சூரியன், சந்திரன் அக்கினி என்று விரியும் மூன்று சுடர்களையும் ஒரே சுடர் ஆக்குபவன் சதாசிவன். உயிர்களை உய்விப்பவனும் அவனே.

#443. அசையாதன அசையும்!


குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்

குசவன் மனத்து உற்றது எல்லாம் வனைவன்
குசவனைப் போல் எங்கள் கோன் நந்தி வேண்டில்
அசைவில் உலகம் அது இது ஆமே.

சக்கரத்தில் வைத்த மண்ணைக் குயவன் தன் விருப்பம் போல வடிப்பான். சதாசிவனும் அது போன்றே. அவன் விரும்பினால் அசையாத பொருளும் அசையும் பொருள் ஆகிய ஆத்மாவாக மாறிவிடும்.

#444. உள்ளக் கோவில்

விடையுடையான் விகிர்தன் மிகு பூதப்

படையுடையான் பரிசே உலகு ஆக்கும்
கொடையுடையான் குணம் எண் குணம் ஆகும்
சடையுடையான் சிந்தை சார்ந்து நின்றானே.

காளையை ஊர்தியாகக் கொண்டவன் சதாசிவன். அவன் பிறப்பற்றவன். பூதங்களின் படையை உடையவன். தன் விருப்பம் போல உலகினை உருவாக்குவான். தன்னைப் பணிவோர் வேண்டுகின்ற வற்றை அவர்கள் வேண்டியவாறே அளிக்கும் கொடை வள்ளல். எண் குணம் உடையவன் சதாசிவன். சிந்தையில் குடி கொண்ட அவன் ஒளி வீசுகின்ற சடையை உடையவன்.


 
#445 to # 447

#445. இறைவன் படைத்தவை

உகந்து நின்று படைத்தான் உலகு ஏழும்

உகந்து நின்றே படைத்தான் பல ஊழி
உகந்து நின்றே படைத்தான் ஐந்துபூதம்
உகந்து நின்றே உயிர் ஊன் படைத்தானே.

மனம் உவந்த சதாசிவன் உலகத்தோர் வாழ்வதற்கு இறைவன் ஏழு உலகங்களைப் படைத்தான். அது போன்றே பலவேறு கற்பங்களையும் படைத்தான். உகந்து பஞ்ச பூதங்களையும் படைத்தான். உடலையும் உயிரிலும் பொருந்தி ஜீவர்களுக்கு உதவி செய்தான்.

#446. தலைவன் அவனே!

படைத்தது உடையான் பண்டு உலகங்கள் ஏழும்

படைத்து உடையான் பல தேவரை முன்னே
படைத்தது உடையான் பல சீவரை முன்னே
படைத்தது உடையான் பரம் ஆகி நின்றானே.

சிவபெருமான் ஏழு உலகங்களையும் படைத்தான். அவற்றைத் தன் உடமை ஆக்கிக் கொண்டான். பல தேவர்களைப் படைத்தான். அவர்களையும் அவனே ஆண்டான். பல ஜீவர்களைப் படைத்து அவர்களோடு தொடர்பு கொண்டு ஆட்கொண்டான். இங்ஙனம் அனைத்தைம் படைத்தும் ஆண்டும் அவனே தலைவனாக விளங்குகின்றான்.

#447. ஆதாரம் ஆனவன் அவனே.

ஆதி படைத்தனன் ஐம் பெரும் பூதம்

ஆதி படைத்தனன் ஆசில் பல் ஊழி
ஆதி படைத்தனன் எண்இலி தேவரை
ஆதி படைத்தவை தங்கி நின்றானே.

ஆதி தேவனாகிய சிவன் ஐம் பெரும் பூதங்களைப் படைத்தான். குற்றமற்ற பல ஊழிகளைப் படைத்தான். எண்ணற்ற தேவர்களைப் படைத்தான். இவ்வாறு படைத்த அனைத்துக்கும் அவனே ஆதரமாக இருந்து அவற்றைத் தாங்குகின்றான்.


 
#448 to #450

#448. உபதேசம்

அகன்றான் அகல் இடம் ஏழும் ஒன்றாகி

இவன் தான் எனநின்ற எளியனும் அல்ல
சிவன் தான் பலபல சீவனும் ஆகி
நவின்றான் உலகு உறு நம்பனும் ஆமே.

அகன்ற உலகங்கள் ஏழிலும் சதாசிவன் ஒன்றாகப் பொருந்தி உள்ளான். அவனே அவ்வேழு உலகங்களைக் கடந்தும் உள்ளான். இதனால் நம்மோடு அவன் பொருந்தி இருந்த போதிலும் அவன் காட்சிக்கு எளியவன் அல்லன். சிவனே பல உயிர்களில் கலந்து இருப்பான். அவனை விரும்பி வருபவர்களுக்கு அவன் உபதேசம் செய்து அருள்வான்.

#449. பேரொளி

உண்ணின்ற ஜோதி உற நின்ற ஓர் உடல்,

விண் நின்ற அமரர் விரும்பும் விழுப் பொருள்
மண் நின்ற வானோர் புகழ் திருமேனியன்
கண் நின்ற மாமணி மாபோதமாமே.

உயிர் பொருந்தி நிற்கும் உடலாக ஆனது உள்நின்ற ஜோதி. விண்ணோர் விரும்பும் விழுப் பொருள் ஆனது உள்நின்ற ஜோதி. ஞானம் அடைந்தோர் புகழும் திருமேனி ஆனது அதே ஜோதி. கண்ணின் மணியாகவும், உயர்ந்த ஞானமாகவும் விளங்குகின்றது அந்த ஜோதி.

#450. உயிருடன் கலந்து இருப்பான்

ஆரும் அறியாத அண்டத் திருவுருப்

பார் முதலாகப் பயிலும் கடத்திலே
நீரினில் பால் போல நிற்கின்ற நேர்மையைச்
சோராமல் காணும் சுகம் அறிந்தேனே.

யாரும் அறிய முடியாத அண்டத்தில், பால் நீரில் கலப்பது போல ஒன்றாகிக் கலந்துவிடும் சிவன் திருவடிகள். அந்தச் சீரிய தன்மையை நான் சோர்வடையாமல் காணும் இன்பத்தைப் பெற்றேன்.
 
[h=1]#451 to #453[/h]#451. 25 தத்துவங்கள்



ஆக்குகின்றான் முன் பிரிந்த இருபத்தஞ்சு


ஆக்குகின்றான் அவன் ஆதி எம் ஆருயிர்

ஆக்குகின்றான் கர்ப்பக் கோளகையுள் இருந்து

ஆக்குகின்றான் அவன் ஆவது அறிந்தே.


இறைவன் ஒரு ஜீவன் இறக்கும் போது பிரிந்து சென்றுவிட்ட இருபத்து ஐந்து தத்துவங்களையும் மீண்டும் தோற்றுவிக்கின்றான் . அவற்றை மீண்டும் உயிருடன் பொருத்துகின்றான் . கர்பப்பையில் ஜீவன் வளர்வதற்குத் தேவையான எல்லா நன்மைகளையும் செய்கின்றான். அந்த உடல் நன்கு வளருவதற்கு வேண்டியவற்றை அருளுடன் செய்கின்றான்.



#452. கருவைக் காப்பான்


அறிகின்ற மூலத்தின் மேல் அங்கி, அப்புச்

செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறை நின்ற இன்னுயிர் போந்துற நாடிப்
பறிக்கின்ற பத்து எனும் பரம் செய்தானே.


மூலாதாரத்தை யோகிகள் உணர வல்லவர்கள். அதற்கு மேல் தீயும் அதற்கும் மேல் நீரும் உள்ள இடத்தில் உடலில் கரு உருவாகும். தன் திருவடிகளைச் செறிந்துள்ள ஞான பூமியில் பதித்து கருவில் உயிர் புகும்படிச் செய்வான் இறைவன். அது பிறவி எடுக்கும் காலக் கெடுவைப் பத்து மாதங்கள் என்று நிர்ணயித்தான் அந்த ஈசன்.



#453. காலத்தை நியமிக்கின்றான்


இன்புறு காலத்து இருவர் முன்பு ஊறிய

துன்புறு பாச துயர்மனை வான் உளன்
பண்பு உறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்

அன்பு உறு காலத்து அமைந்தொழிந்தானே.


தலைவன் தலைவி இன்பம் அடையும் காலத்திலேயே இறைவன் ஜீவன் விட்டுச் சென்ற வினைகளை துய்ப்பதற்குத் தேவையான உடல், அது பக்குவம் அடையும் காலம், அது உயிர் வாழ வேண்டிய காலம் அனைத்தையும் நியமிக்கின்றான்



 
Last edited:
#454 to #456

#454. கருவை நாடி ஓடும்

கருவை ஒழிந்தவர் கண்ட நால் மூவேழ்

புருடன் உடலில் பொருந்தும் மற்று ஓரார்;
திருவின் கருக்குழி தேடித் புகுந்த
உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே.

இருபத்து ஐந்து தத்துவங்களும் ஆண் உடலில் தங்கி உருவாகும். இந்த உண்மையை ஞானியர் மட்டுமே அறிவர். பிறர் அறிகிலர். அந்தக் கரு ஆண் உடலிலிருந்து பெண்ணின் கருவை நாடிப் பாயும்.

#455. கரு உருவாகும்

விழுந்தது லிங்கம்; விரிந்தது யோனி;
ஒழிந்த முதல் ஐந்தும் ஈரைந்தோடு ஏறிப்
பொழிந்த புனல் பூதம் போற்றும் கரணம்
ஒழிந்த நுதல் உச்சி உள்ளம் ஒளித்ததே.

ஆண் பெண் கூட்டுறவின் போது ஆண் குறியிலிருந்து சுக்கிலம் வெளிப்படும். விரிந்த பெண் குறியை அது சென்று சேரும். புருடன் என்ற தத்துவத்தில் ஐந்து தன்மாத்திரைகள், ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள் கூடும். தன்மாத்திரையிலிருந்து பஞ்ச பூதங்களும், நான்கு அந்தக் கரணங்கள் என்ற ஒன்பதும் தோன்றிப் புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் பொருந்தும்.

#456. காற்று உதவிடும்

பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும்
தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல்
மேவிய சீவனில் மேல நீள் வாயுவும்
கூவி அவிழும் குறிக்கொண்ட போதே.

மலரின் மணத்தையும் மகரந்தத்தையும் சுமந்து செல்லும் வாயு, அதை உலகெங்கும் பரப்பும். அது போன்றே கருப்பையில் உள்ள தனஞ்சயன் என்ற வாயு ஆண் விந்துவுடன் எழுந்து அதைப் பெண் கருவில் கொண்டு சேர்க்கும்.


 
#457

#457. கருவில் அமைபவை

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்

மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விடானெனிற்ப் பன்றியும் ஆமே.

உருவம் இல்லாத புரியட்டக உடலும், அதில் உள்ளே புகும் பத்து வாயுக்களும்; காமம் முதலிய எட்டு மன விகாரங்களும், இவற்றுடன் கூடிய புருடனும், ஒன்பது துவாரங்களும், குண்டலினி சக்தியும், பன்னிரண்டு விரற்கடை செல்லும் பிராணன் என்னும் குதிரையும்; இறைவன் என்னும் பாகன் வழி நடத்தாவிட்டால் அந்தப் பிறவி பன்றியைப் போன்று இழிந்ததாகி விடும்.

கருவில் அமைய வேண்டியவை இவை:

1. போகின்ற எட்டு : சுவை, நாற்றம், ஒளி, ஓசை, ஊறு, மனம், புத்தி, அகங்காரம்

2. புகுகின்ற பத்தெட்டு = பத்து வாயுக்கள் + எட்டு விகாரங்கள்

3. புகுகின்ற பத்து வாயுக்கள் : பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன்,
நாகன், கூர்மன், கிருகரன்,தேவதத்தன், தனஞ்சயன் என்னும் பத்து வாயுக்கள்

4. புகுகின்ற எட்டு மலங்கள்: காமம், குரோதம், உலோபம், மோஹம், மதம், மாச்சரியம், துக்கம் அஹங்காரம்

5. மூழ்கின்ற முத்தன்: இவற்றுடன் கூடிய புருடன்

6. ஒன்பது துளைகள்: கண்கள், நாசித் துவாரங்கள், செவிகள், வாய், கருவாய், எருவாய்.

7. நாகம் = மண்டலமிட்ட குண்டலினி சக்தி

8. எட்டுடன் நாலு = பன்னிரண்டு விரற்கடை செல்லும் பிராணன்


 
#458 to #460

#458. குழந்தையின் குணநலன்கள்

ஏற எதிர்க்கில் இறையவன் தானாகும்

மாற எதிர்க்கில் அரியவன் தானாகும்
நேர் ஒக்க வக்கின் நிகர் போதத்தான் ஆகும்
பேர் ஒத்த மைந்தனும் பேரரசு ஆளுமே.

ஆணும் பெண்ணும் கூடும்போது சுக்கில சுரோணிதக் கலப்பு ஏற்படும். ஆணின் சுக்கிலம் எதிர்த்துச் சென்றால் ருத்திரனைப் போன்ற குழந்தை பிறக்கும். பெண்ணின் சுரோணிதம் எதிர்த்துச் சென்றால் திருமாலைப் போன்ற குழந்தை பிறக்கும். சுக்கிலம், சுரோணிதம் இரண்டும் சமமாகப் பொருந்தினால் நான்முகனைப் போன்ற குழந்தை பிறக்கும். மூவர்களின் தன்மையையும் கொண்டவன் புவி ஆள்வான்.

459. பெற்றோர் போலக் குழந்தை


ஏயங்கலந்த இருவர் தம் சாயத்துப்

பாயும் கருவும் உருவாம் எனப்பல
காயம் கலந்தது காணப் பதிந்தபின்
மாயம் கலந்த மனோலயம் ஆனதே.

பல பிறவிகளில் பல உலகங்களில் பொருந்தி வருந்தும் சீவன். கூடும் ஆண் பெண் இருவரைப் போலவே அவர்களின் குழந்தை உருவாகும். பல பிறவிகளில் பல உடலில் பொருந்தி இருந்த அந்த சீவன், கருவில் பொருந்திய பின்னர் மயக்கம் அடைந்த இருவர் மனமும் ஒரே தன்மையை அடையும்.

#460. நினைவு, வாக்கு, குணம்.


கர்ப்பத்துக் கேவலம் மாயாள் கிளை கூட்ட

நிற்கும் துரியமும் பேதித்து நினைவு எழ
வற்புறு காமியம் எட்டு ஆதல் மாயேயம்
சொற்புஉறு தூய்மறை வாக்கின் ஆம் சொல்லே.

ஒன்றும் அறியாத நிலையில் கரு கர்ப்பத்தில் இருக்கும். மாயை அதனுடன் தத்துவங்களைச் சேர்ப்பாள். அதனால் அக்கருவின் பேருறக்கம் நீங்கும்.நினைவு உண்டாகும். மாயையின் காரியமான எட்டு குணங்கள் தோன்றும். நான்கு வித வாக்கிலிருந்து சொற்கள் தோன்றும்.

எட்டுக் காம்யங்கள் : தர்மம், ஞானம், வைராக்கியம், ஐஸ்வர்யம்,
அதர்மம், அஞ்ஞானம் அவைராக்கியம், அனைஸ்வர்யம்.

நான்கு வித வாக்குகள்: சூக்ஷ்மை, பச்யந்தி, மத்யமா, வைகரி
 
#461 to # 463

#461. உடல் அமைந்த விதம்

என்பால் மிடைந்து நரம்பு வரிகட்டிச்

செம்பால் இறைச்சி திருத்த மனை செய்து
இன்பால் உயிர்நிலை செய்த இறை ஓங்கும்
நண்பால் ஒருவனை நாடுகின்றேனே.

உடல் எலும்புகளால் பின்னப்பட்டு நரம்புகளால் கட்டப் பட்டுள்ளது. ரத்தம் இறைச்சி இவற்றால் திருத்தமாக அமைக்கப் பட்டுள்ளது. இன்பம் பெறுவதற்காக உயிர் உடலைத் தாங்குகின்றது. இவ்வாறு உடலை அமைத்த இறைவன் மீதுள்ள அன்பால் நான் அவனை வணங்குகின்றேன்.

#462. வேகத்தைத் தணித்தான்

பதம் செய்யும் பால் வண்ணன் மேனிப் பகலோன்

இதம் செய்யும் ஒத்து உடல் எங்கும் புகுந்து,
குதம் செய்யும் அங்கியின் கோபம் தணிப்பான்
விதம் செய்யுமாறே விதித்து ஒழிந்தானே.

பால் போன்ற நிறமும், கதிரவனின் ஒளியும் உடையவன் சதாசிவன். அவன் உயிர்களைப் பக்குவம் செய்கின்றான். உடல் எங்கும் பரவியும் விரவியும் நன்மைகள் புரிவான். மூலாதாரத்தில் இருந்து எழுகின்ற அ க்கினியின் வேகத்தைத் தணிப்பதற்காகவே அவன் உயிர்கள் இன்பம் பெறும் முறையினை அமைத்தான்.

#463. சிசுவைக் காத்தல்

ஒழிபல செய்யும் வினை உற்ற நாளே

வழி பல நீராட்டி வைத்து எழு வாங்கிப்
பழிபல செய்கின்ற பாசக் கருவைச்
சுழிபல வாங்கிச் சுடாமல் வைத்தானே.

வினை பொருந்தி வரும் காலத்தில் வினைகளை ஒழிப்பான் இறைவன். பல வழிகளிலும் சிசுவைத் தூய்மை செய்வான். பழிக்கப்படும் பல செயல்களைச் செய்கின்ற பாசத்தில் கட்டப் பட்ட சிசுவை துன்பம் அடையாமல் பலவகைச் சுழிகளில் இருந்தும் அவனே காப்பான்.

 
#464 to #466

#464. எண் சாண் உடல்

சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்

அக்கிரமத்தே தோன்றும் அவ்வியோனியும்
புக்கிடும் எண் விரல் புறப்பட்டு நால்விரல்
அக்கரம் எய்யும் எண் சாண் அது ஆமே.

சுக்கில நாடியில் தோன்றும் வெண்ணிறச் சுக்கிலம் எட்டு விரற்கடை செல்லும். யோனியில் தோன்றும் செந்நிற சுரோணிதம் நான்கு விரற்கடை செல்லும். ஆண் பெண் கூட்டுறவால் இவை இணையும் பொழுது எண் சாண் உடல் ஒன்று உருவாகும். பஞ்ச பூதங்களாகிய ஐந்து அக்ஷரங்களும் பிரணவத்தின் மூன்று அக்ஷரங்களும் அதை உருவாக்கும்.

#465. முப்பத்தொரு தத்துவங்கள்

போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும்
கோசத்துள் ஆகம் கொணர்ந்த கொடைத் தொழில்
ஏகத்துள் ஆங்கே இரண்டு எட்டு மொவைந்து
மோகத்துள் ஆங்கு ஒரு முட்டை செய்தானே.

போகத்தில் ஆணும் பெண்ணும் பொருந்தும் போது இறைவன் தன் கொடைச் செயலைச் செய்தான். அவர்கள் இருவரது மயக்க நிலையில், முப்பதொரு தத்துவங்களைச் சேர்த்து, கருவாகிய ஒரு முட்டையை உருவாக்கினான்.

#466. செயலற்று இருக்கும்

பிண்டத்தி னுள்ளுறு பேதைப் புலனைந்தும்

பிண்டத்தி னூடே பிறந்து மரித்தது
அண்டத்தி னுள்ளுறு சீவனும் அவ்வகை
அண்டத்து நாதத் தமர்ந்திருந்தானே.

அறியாமை வாய்ந்தவை ஐம் புலன்கள். உடல் தோன்றும் போது அவைகளும் தோன்றின. உடல் அழியும் போது அவைகளும் அழிந்தன. கருவில் உருவான உடலும் அது போன்றே ஆண்ட கோசத்தில் கோசத்தில் செயலற்று இருந்து நாதத் தத்துவத்தில் அடங்கும்.


 
#467 to #469

#467. கருவை அமைக்கும் விதம்

இலைப்பொறி ஏற்றி எனது உடல் ஈசன்

துலைப் பொறி யில் கரு ஐந்துடன் நாட்டி
நிலைப் பொறி முப்பது நீர்மை கொளுவி
உலைப்பொறி ஒன்பதில் ஒன்று செய்தானே.

மாயையால் சதாசிவன் கருவின் உடலை உண்டாக்குவான். துலாக் கோலைப் போல் செலுத்த வல்ல சிவ தத்துவமாகிய ஐந்தினால் ( அ, உ , ம, நாதம், விந்து இவற்றால்) அந்தக் கருவை இயக்குவான். ஆன்ம தத்துவம் இருபது நான்கையும் வித்தியா தத்துவம் ஆறையும் அந்த உயிரின் தன்மைக்கு ஏற்றபடி அத்துடன் இணைப்பான். உடல் என்னும் பொறியில் ஒன்பது துளைகளையும் அமைப்பான்.

#468. கருப்பை ஒரு சூளை

இன்புற்று இருவர் இசைவித்து வைத்த மண்
துன்பக் கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே.

சிற்றின்பம் அனுபவிக்கும் தாய் தந்தையர் மனம் ஒன்றுவர். அவர்கள் உருவாக்கிய துன்பக் கலசம் ஆகிய மண் குடத்துக்குள் (உடலுக்குள்) சேர்வான் ஓர் ஆத்மா. அந்தக் கருப்பை என்னும் சூளை யில் ஒன்பது துளைகள் உடைய நீர்ச்சாலும், சூக்கும உடலாகிய எட்டும், ஞான இந்திரியங்கள் கர்ம இந்திரியங்கள் பத்தும் வெந்து பக்குவம் அடையும்.

#469. சித்திகள் தேவையில்லை

அறியீர் உடம்பினில் ஆகிய ஆறும்
பிறியீர் அதனில் பெருகும் குணங்கள்
செறியீர் அவற்றினுள் சித்திகள் இட்டது
அறிய ஈரைந்தினுள் ஆனது பிண்டமே.

உடலில் பொருந்தியுள்ள ஆறு துன்பங்களை நீங்கள் அறியவில்லை. மனதில் பொங்கி வழியும் முக்குணங்களில் இருந்து பிரியாது உள்ளீர். அங்கே சித்திகள் அமைவதை விரும்பாதீர். பத்து மாதங்களின் இந்த உடல் தயாராகி விடும்
 
#470 to #472

#470. உய்யும் வழியை உணர்வீர்

உடல் வைத்த வாறும் உயிர் வைத்தவாறும்

மடை வைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
திடம் வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடை வைத்த ஈசனைக் கைக் கலந்தேனே.

மாயையில் இருந்து உடலைத் தோற்றுவித்தான். உடலுள் உயிரைப் புகுத்தினான். மடையுடன் கூடிய திறந்து மூட வல்ல ஒன்பது துவாரங்களை அமைத்தான். உறுதி வாய்ந்த ஆயிரம் இதழ்த் தாமைரையை சஹஸ்ரதளத்தில் இறுதியாக அமைத்தான். அந்த இறைவனை நான் சுழுமுனை நாடி வழியே சென்று சிரசின் உச்சியில் அடைந்தேன்.

#471. நேர்படல்

கேட்டு நின்றேன் எங்கும் கேடில் பெருஞ்சுடர்
மூட்டுகின்றான் முதல் யோனி மாயன் அவன்
கூட்டுகின்றான் குழம்பின் கருவை உரு
நீட்டி நின்று ஆகத்து நேர்ப்பட்டவாறே.

நூல் அறிந்தவரும் நுட்பமான அறிவுடையவரும் ஓதுகின்ற முறையைக் கேட்டு நின்றேன். அவர்கள் கூறுவது யாது? இறைவன் எக்காலத்தும் எங்கும் விளங்குகின்றான். கேடில்லாத உயிர்களை அவர் அவர்கள் வினைக்கு ஏற்ற உடல்களில் பொருத்துகின்றான். சுக்கிலச் சுரோணிதக் கலப்பில் கருவைக் குழம்பு போல உருவாக்குகின்றான். கருவை உருவாக்கி அதன் உடலை நன்கு வளர்க்கின்றான். அதனுடன் எப்போதும் நேர்படுகின்றான் (அதாவது கலந்து நிற்கின்றான்).

#472. சீவ அணுக்கள்

பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்

காவுடைத் தீபம் கலந்து பிறந்திடும்
நீர் இடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பறந்து எட்டும் பற்றுமே.

பெண்ணின் யோனி மலரைப் போன்றது. ஆணின் லிங்கம் மொட்டைப் போன்றது. இவை இரண்டும் பொருந்தும் போது அலரும். அப்போது சுக்கில சுரோணிதங்கள் கலக்கும் . அப்போது ஒளிமயமான சீவ அணுக்கள் தோன்றும். நீரின் குமிழி நீரில் கலப்பது போல சீவ அணுக்கள் கருவின் உடல் முழுவதும் பரவிக் கலந்துவிடும்.
 
#473 to #475

#473. தூலமும், சூக்குமமும்.

எட்டினுள் ஐந்தாகும் இந்திரியங்களும்

கட்டிய மூன்று கரணமுமாய்விடும்
ஒட்டிய பாச உணர்வென்னும் காயப்பை
கட்டி யவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே

நுண் உடலில் ஐம்பொறிகள் (கண், நாசி, செவி, மெய், வாய் ) தோன்றும். மனம், புத்தி, அஹங்காரம் என்னும் அந்தக் கரணங்கள் தோன்றும். இவற்றுடன் விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ப உண்டாக்கிய உடலை இறைவனே முதலில் சேர்ப்பான். பின்பு அவனே அவற்றைப் பிரித்து அவிழ்த்து விடுவான்

#474. பசு பாசம் நீங்கும்

கண்ணுதல் நாமம் கலந்து உடம்பு ஆயிடைப்
பண்ணுதல் செய்து பசுபாசம் நீங்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண்முதலாக வகுத்து வைத்தானே.

இறைவனின் திருப் பெயர் ஆகும் பிரணவம். அதைக் கலந்து அந்த உடலில் நாதம் விளங்கச் செய்வான். மூலாதாரம் ஒரு நான்கு இதழ்த் தாமரை ஆகும். சக்கரங்களால் உணர்த்தப்படும் பரப்பை மண் முதலாகத் தொடங்கும் முறையை இறைவன் வகுத்து அமைத்துள்ளான்.

#475. செவிலித் தாய்கள்

அருள் அல்லது இல்லை; அரனவன் அன்றி

அருள் இல்லை ; ஆதலின் அவ் ஓர் உயிரை
தருகின்ற போது இரு கைத்தாயார் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே

சக்தி இல்லாமல் சிவம் இல்லை. சிவம் இன்றிச் சக்தியும் இல்லை. ஆகவே ஓர் உயிருக்கு உடலைத் தரும் போது அத்துடன் இரண்டு செவிலித் தாய்களையும் அன்புடன் தந்தான்.

 
#476 to #478

#476. உயிருக்கு உயிராவர்

வகுத்த பிறவியின் மாது நல்லாளும்

தொகுத் திருள் நீக்கிய சோதியவனும்
பகுத்துணர்வு ஆகிய பல்லுயிர் எல்லாம்
வகுத்து உள்ளும் நின்றதோர் மாண்பது ஆமே.

சீவனின் வினைகளுக்கு ஏற்ப அதன் பிறவி அமைக்கப் படுகின்றது. அந்தப் பிறவியில் சக்தி தேவியும், இருளை நீக்கும் சோதியாகிய சிவனும் அந்த சீவனின் உயிருக்கு உயிராக இருப்பர். மேலும் பலவகை உயிர்களுக்குப் பலவகை உணர்வுகளை வகுத்து வகை செய்வர்.

#477. உயிர் ஒளி மயமானது!

மாண்பது வாக வளர்கின்ற வன்னியைக்

காண்பது ஆண் பெண் அலி எனும் கற்பனை
பூண்பது மாதா பிதா வழி போலவே
ஆம்பதி செய்தான்; அச்சோதிதன் ஆண்மையே.

பெருமையுடன் வளரும் அந்த உயிர் ஆணுமல்ல; பெண்ணுமல்ல; அலியுமல்ல. அப்படி எண்ணுவது வெறும் கற்பனை ஆகும். அது தன் பெற்றோரின் தன்மைகளுடன் விளங்கும். அத்தகைய உயிருக்கு ஏற்றவாறு உடலைப் படைப்பது சிவபெருமானின் ஆற்றல் ஆகும்

#478. ஆண், பெண் உருவாவது

ஆண் மிகில் ஆண் ஆகும் பெண் மிகில் பெண் ஆகும்
பூண் இரண்டு ஒத்துப் பொருந்தில் அலியாகும்
தாண் மிகும் ஆயின் தரணி முழுது ஆளும்
பாணவம் மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.

ஆண் பெண் கூடும் போது ஆண் பண்பு அதிகமாக இருந்தால் அந்த உயிர் ஆணாகும். பெண் தன்மை மிகுந்திருந்தால் அந்த உயிர் பெண் ஆகும். ஆண் பெண் பண்புகள் சரி சமம் ஆனால் அந்த உயிர் அலியாகும். ஆள்வினை மிகுந்து இருந்தால் சிறந்த சிசு பிறக்கும். அது வளர்ந்து உலகை ஆளும். தாழ்வு மனப்பான்மை இருந்தால் சுக்கிலம் பாயாது.
 
#479 to #481

#479. யோகியின் ஆற்றல்

பாய்ந்த பின் அஞ்சு ஓடில் ஆயுளும் நூறு ஆகும்;

பாய்ந்த பின் நால் ஓடின் பாரினில் எண்பதாம்;
பாய்ந்திடும் வாயுப் பகுத்து அறிந்து இவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலும் ஆமே.

ஆணிடமிருந்து பிரிந்த சுக்கிலம் ஐந்து விரற்கடை தூரம் ஓடினால் பிறக்கும் உயிரின் ஆயுள் நூறு ஆண்டுகள். அந்தச் சுக்கிலம் நான்கு விரற்கடை ஓடினால் அந்த உயிரின் ஆயுள் எண்பது ஆண்டுகள். தான் விரும்பியபடி சுக்கிலத்தைப் பாய்ச்சும் ஆற்றல் யோகிக்கு உண்டு. அதனால் ஒரு யோகியினால் தான் விரும்பிய குழந்தையைப் பெற இயலும்.

#480. குழந்தையின் அங்கங்கள்

பாய்கின்ற வாயு குறையின் குறள் ஆகும்;

பாய்கின்ற வாயு இளைக்கின் முடம் ஆகும்;
பாய்கின்ற வாயு நடுப்படில் கூன் ஆகும்;
பாய்கின்ற வாயு மாதர்க்கு இல்லைப் பார்க்கிலே.

சுக்கிலத்தைச் செலுத்தும் வாயு குறைவாக இருந்தால் குழந்தை குட்டையாகப் பிறக்கும்..பாய்கின்ற வாயு மெலிந்திருந்தால் பிறக்கும் குழந்தை முடம் ஆகும். பாய்கின்ற வாயு தடைப்படில் குழந்தை கூனனாகப் பிறக்கும். பெண்களுக்கு இதைப் போன்று பாய்கின்ற வாயு என்பது இல்லை.

#481. தாயின் வயிறு பாதிக்கும்


மாதா உதரம் மலம் மிகின் மந்தன் ஆம்;

மாதா உதரம் சலம் மிகின் மூங்கை ஆம்;
மாதா உதரம் இரண்டும் ஒக்கின் கண் இல்லை;
மாதா உதரத்திலே வந்த குழவிக்கே.

அன்னையின் வயிறு கருவில் வளரும் குழந்தையைப் பாதிக்கும். அன்னையின் வயிற்றில் மலம் மிகுந்து இருந்தால் குழந்தை மந்த புத்தியுடன் பிறக்கும். அன்னை வயிற்றில் நீர் மிகுந்திருந்தால் குழந்தை ஊமையாகிவிடும். அவள் வயிற்றில் மலம், நீர் இரண்டுமே மிகுதியாக இருந்தால் பிறக்கும் குழந்தை குருடனாகிவிடும்.
 

Latest ads

Back
Top