• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

6. வயிரவி மந்திரம்
வயிரவி என்னும் சக்தியை நினைவு கொள்வது வயிரவி மந்திரம்

#1075. மேதா கலை

பன்னிரண்டாம் கலை ஆதி பயிரவி

தன்னில் அகாரமும் மாயையும் கற்பித்துப்
பன்னிரண்டு ஆதியோடு, அந்தம் பதினாலும்
சொல் நிலை சோடசம் அந்தம் என்று ஓதிடே.


பன்னிரண்டாவது உயிர் எழுத்தாகிய ‘ஐ’ என்ற எழுத்தால் உணர்த்தப் படுபவள் பயிரவி. அதனுடன் மாயையாகிய ‘ம்’ என்பதை இணைத்தால் ‘ஐம்’ என்னும் வாக்கு தேவியின் பீஜ மந்திரம் கிடைக்கும். பிரணவத்துடன் ‘ம்’ பொருந்தினால் ‘ஓம்’ என்ற மந்திரம் கிடைக்கும். இவற்றை செபித்தால் தேவி வாக்கு வடிவமான தன் பதினான்கு வித்தைகளையும் அளிப்பாள், அத்துடன் தன்னையும் வெளிப் படுத்திக் கொள்வாள்.


#1076.ஆதியும் அவளே அந்தமும் அவளே


அந்தம் பதினாலு அதுவே வயிரவி

முந்தும் நடுவும் முடிவு முதலாகச்
சிந்தைக் கமலத்து எழுகின்ற மாசத்தி
அந்தமும் ஆதியும் ஆகி நின்றாளே.


பதினான்கு வித்தைகளாக விளங்கும் வயிரவியே ஐந்து கர்மேந்த்ரியங்கள், ஐந்து ஞானேந்திரியங்கள், நான்கு அந்தக்கரணங்கள் என்னும் பதினான்கினையும் சீவர்களுடன் பொருத்து கின்றாள். அவளே படைத்தல், காத்தல், அழித்தல் முதலிய செயல்களைச் செய்கின்றாள். சிந்தையில் உள்ள பெரிய தாமரையில் விளங்குகின்ற தேவியும் அவளே. அவளே ஆதியும், அந்தமுமாக விளங்குகின்றவள் ஆவாள்.


#1077. வயிரவியை வழிபடுமின்


ஆகின்ற மூவரும் அங்கே யடங்குவர்

போகின்ற பூதம் பொருந்து புராதரர்
சார்கின்ற சார்வுழிச் சாரார் சதிர்பெறப்
போகுந் திரிபுரை புண்ணியத் தோர்க்கே!


சீவர்களைச் செலுத்துகின்ற நான்முகன், திருமால், உருத்திரன் என்ற மூவரும் வயிரவியை வழிபட்டால் செயல்திறன் அடங்கி விடுவர். அழிகின்ற இயல்பு உடையது சீவனின் உடல். அது ஐம் பூதங்களால் ஆனது. உடலில் பொருந்திய சீவனை அநாதியான ஆத்மாக்கள் உள்ள இடத்தை அடையச் செய்பவர் யார்? ஆற்றல் மிகுந்த திரிபுரையை வழிபட்ட புண்ணியர்களே அவர்கள் ஆவர்.


#1078. சிவம் ஆவார்.


புண்ணிய நந்தி புனிதன் திருவாகும்

எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ்பதி
பண்ணிய வன்னி பகலோன் மதி ஈறு
திண்ணிய சிந்தை தன் தென்னனும் ஆமே.


சிவன் புண்ணியன் ஆவான்; சிவன் நந்தி ஆவான்; சிவன் தூயவன் ஆவான். வான ராசி மண்டலத்தைச் சந்திரன் சுற்றி வருவது வட்டம் ஆகும். இந்த வட்டத்தில் சூரியனும் சுற்றி வருவான். அந்த வட்டம் முழுமையடையும் போது, தலையின் வடகிழக்குப் பகுதியில் சூரியனும் சந்திரனும் ஒன்றாகப் பொருந்துவதால் அக்கினிக் கலை தோன்றும் . அந்தக் அக்கினிக் கலையை அறிந்து கொண்டு அதன் மீது தியானிப்பவர் நிறைந்த சிந்தை உடையவராகிச் சிவமாகவே ஆகி விடுவார்.


#1079. திரிரையின் அருள்


தென்னன் திருநந்தி சேவகன் தன்னோடும்

பொன்னங் கிரியில் பூதலம் போற்றிடும்
பண்ணும் பரிபிடி அந்தம் பகவனோடு
உன்னும் திரிபுரை ஓதி நின்றானுக்கே.


சிவபெருமான் நம்மைக் காக்கும் அழகிய வீரன். கயிலை மலையில் அவனுடன் பெண்யானை போல வீற்றிருக்கும் அம்மையும் நம்மைக் காக்கின்றாள். இடையறாது அவர்கள் இருவரின் திருவடிகளை எண்ணுபவர்களுக்கு இறைவனும் அவனுடன் உறையும் திருபுரையும் அருள் புரிவர்.
 

#1080 to #1084

#1080. ஞானம் தருவாள்

ஓதிய நந்தி உணரும் திருவருள்

நீதியில் வேத நெறிவந்து உரைசெய்யும்
போதம் இருபத் தெழுநாள் புணர்மதி
சோதி வயிரவி சூலம் வந்து ஆளுமே.


குருமண்டலத்தில் யோகி தியானித்து இருப்பதன் உண்மை நிலையினை பராசக்தி அறிவாள். நீதியை, நேர்மையான வழியில் உயிர்களுக்கு உபதேசித்து உணர்த்துவாள். இங்ஙனம் பராசக்தியிடம் உபதேசம் பெற்றவரிடம் சந்திரனின் வட்டமான பதினாறு கலைகளும் வந்து பொருந்தும். கதிரவன், திங்கள், அக்கினி என்ற மூன்று ஒளிரும் பொருட்களை முத்தலையாகக் கொண்ட சூலம் வந்து அவர் உடலில் பொருந்தி சோதியாக மாறி விடும்.


#1081. சூலினி சூலியின் அங்கம் ஆவாள்


சூலம் கபாலம் கை ஏந்திய சூலிக்கு

நாலாம் கரம் உள; நாக பாச அங்குசம்
மால் அங்கு அயன் அறியாத வடிவுக்கு
மேல் அங்கமாக நின்ற மெல்லிய லாளே.


துர்க்கா தேவிக்கு நான்கு கரங்கள் உள்ளன. கபாலம், சூலம் இரு கரங்களில் ஏந்தியவள் அங்குசம், பாசம் இவற்றையும் பிற கரங்களில் ஏந்தியுள்ளாள். நான்முகனும் திருமாலும் கண்டு அறியாத வடிவினை உடைய சூலியான சிவனுக்குச் சூலினியாகிய இவள் ஒரு மேலான அங்கமாக மிக மென்மையுடன் திகழ்பவள்.

அங்கியாகிய சிவனின் அங்கமாகத் தேவி திகழ்வதன் பெயர் ‘அங்காங்கி பாவம்’.

#1082. வயிரவியின் வடிவழகு


மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி

சொல்லிய கிஞ்சுக நிறம் மன்னு சேயிழை
கல்இயல் ஒப்பது காணும் திருமேனி
பல்இயல் ஆடையும் பன்மணி தானே.


வயிரவி மெல்லியலாள்; வஞ்சிக்கொடி போன்றவள்; நெறி தவறுகின்றவர்களைத் தண்டிப்பதில் நஞ்சைப் போன்றவள்; எல்லாக் கலைகளிலும் சிறந்த கலை ஞானம் கொண்டவள்; முள் முருங்கைப் பூவைப் போன்று சிவந்த நிறம் கொண்டவள்; மணியைப் போல ஒளிரும் உடலைக் கொண்டவள்; பல வித மணிகளால் ஆன ஆடைகளை உடுப்பவள்.


#1083. வயிரவியின் வனப்பு


பன்மணி சந்திர கோடி திருமுடி

சொன்மணி குண்டலக் காதி உழைக்கண்ணி
நன்மணி சூரிய சோம நயனத்தள்
பொன்மணி வன்னியும் பூரிக்கின்றாளே.


பல கலைகளைக் கொண்ட சந்திர மண்டலம், பல மணிகள் பதிக்கப்பட்டத் தேவியின் அழகிய திருமுடியாகும். வானத்தையே தன் காதுகளாகக் கொண்டவள் தேவி. அருகில் உள்ள ஒரு நல்ல தோழியைப் போன்றவள். ஒளி வீசும் சூரிய சந்திரர்களைத் தன் இரு விழிகளாகக் கொண்டவள். தேவி பொன் போன்ற ஒளியை எங்கும் பரப்புகின்றாள்.


#1084. சக்தியின் பல சகிகள்


பூரித்த பூ இதழ் எட்டினுக்குள்ளே ஓர்

ஆரியத்தாள் உண்டு, அங்கு எண்மர் கன்னியர்
பாரித்த பெண்கள் அறுபது நால்வரும்
சாரித்துச் சக்தியைத் தாங்கள் கண்டாரே.


தலையின் மீது விரிந்துள்ள எட்டு இதழ்க் கமலத்தின் நடுவில் ஒப்பற்ற தேவி திகழ்வாள். அவளைச் சுற்றிக் எட்டுக் கன்னியர் இருப்பர். அந்த எட்டுக் கன்னியர் ஒவ்வொருவருக்கும் எட்டு எட்டுக் கன்னியர் உடன் இருப்பர். இவர்கள் அனைவரும் தேவியைத் தரிசித்து அமைவர்.


வாமை, சேட்டை, ரௌத்ரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பல பிரதமனி , சர்வபூத தமனி என்பவர்கள் அந்த எட்டு கன்னியர் ஆவர். இவர்களின் ஆளுகையில் பிரணவத்தின் அறுபத்து நான்கு கலைகளும் செயல்படுபவை.



 
#1085 to #1089

#1085. பூசிக்கத் தகுந்தவள் தேவி

கண்ட சிலம்பு, வளை, சங்கு, சக்கரம்,
எண் திசை யோகி இறைவி பராசக்தி
அண்டமொடு எண்திசை தாங்கும் அருட்செல்வி
புண்டரி கத்துள்ளும் பூசனை யாளே.


பராசக்தி தேர்ந்து எடுக்கப்பட்ட சிலம்பு, வளை, சங்கு, சக்கரம் இவற்றை அணிந்தவள். அவள் எட்டு திசைகளிலும் நிறைந்து நிற்பவள். அவள் அனைத்து அண்டங்களையும் தாங்கி நிற்பவள். அவள் தலையின் மீதுள்ள ஆயிரம் இதழ்த் தாமரையில் இருத்திப் பூசிக்கத் தகுந்தவள்.

#1086. பூசை செய்யும் விதிகள்


பூசனை கெந்தம் புனை மலர் மாகோடி,
யோசனை பஞ்சத்து ஒலிவந்து உரைசெய்யும்
வாசம் இலாத மணிமந்திர யோகம்
தேசம் திகழும் திரிபுரை காணே.

பூசைக்கு உகந்த நறுமணப் பொருட்கள், மணம் வீசும் நறு மலர்கள், புதிய ஆடைகள், நெடுந்தொலைவு கேட்கும் ஐந்து வாத்தியங்களின் முழக்கம், சொல்வதற்கு அரியதாகிய திரு ஐந்தெழுத்தால் ஆன அரிய மந்திரம் இவற்றுடன் செய்யும் பூசையை திரிபுரை மிகவும் விருப்பத்துடன் ஏற்பாள்.

ஐந்து இசைக் கருவிகள்:
தோற்கருவி, தொளைக் கருவி, நரம்புக் கருவி, தாளக் கருவி, மிடற்றுக் கருவி.

#1087. அனைத்துத் தெய்வங்களும் அவளே

காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு
பூணும் பல பொன்போலத் தோற்றிடும்
பேணும் சிவனும் பிரமனு மாயனும்
காணும் தலைவிநற் காரணி தானே.

ஒரே பொன் வெவ்வேறு அணிகலன்களாகத் தோன்றுவது போலவே, ஒரே அன்னை வெவ்வேறு தெய்வங்களாகத் தோன்றுகின்றாள். உலகம் புகழும் சிவனும், நான்முகனும், திருமாலும் மற்ற தெய்வங்களும் விளங்குவது அகில உலகின் ஆதி காரணியாகிய தேவியினால் என்று அறிவீர்!

#1088. வேதங்களின் அந்தமும் அவளே


காரணி, மந்திரம், ஓதும் கமலத்துப்
பூரண கும்ப விரேசம் பொருந்திய
நாரண நந்தி நடு, அங்கு உரை செய்த
ஆரண வேதம் நூல் அந்தமும் ஆமே.

ஆதி காரணி, மந்திரங்களுக்குக் காரணமானவள். ஆயிரம் இதழ்த் தாமரையில் அவளைத் தியானிக்கும் போது, வாயுவை வெளிப்படுத்தும் பூரண கும்பகத்தில் அவள் விளங்குவாள். அவளே வேதங்களின் அந்தமாகிய உபநிடதங்களிலும் உள்ளாள்.

#1089. மந்திரம் கூறும் முறை


அந்தம் நடுவிரல், ஆதி சிறுவிரல்
வந்த வழி முறை மாறி உரை செய்யும்
செந்தமிழ் ஆதி தெளிந்து வழிபடு
நந்தி இதனை நலம் உரைத்தானே.

இதனைக் குருமுகமாகக் கற்கவும்.
 
#1090 to #1094

#1090. நியமம் செய்தான்

உரைத்த நவசத்தி ஒன்று முடிய
நிரைத்த ராசி நெறிமுறை எண்ணிப்
பிரைச் சதம் எட்டும் முன் பேசிய நந்தி
நிரைத்து நியதி நியமம் செய்தானே.

நவ சக்திகளில் ஒருவளான மனோன்மணியைச் சிரசின் மேலும் மற்ற எட்டு சக்தியரைச் சிரசைச் சுற்றியும் பொருந்தும்படி எண்ண வேண்டும். பிரசாத கலைகள் பதினாறில் எட்டு கலைகள் உடலிலும், எட்டுக் கலைகள் உயிரிலும் விளங்கிடும்படி நந்தி நியமம் செய்துள்ளான்.


#1091. ஒளி மண்டலத்தை உண்டாக்குவாள்


தாமக் குழலியைக் கண்ணி உள்நின்ற
ஏமத்து இருள் அற வீசும் இளங்கொடி
ஓமப் பெருஞ்சுடர் உள் எழு நுண்புகை
மேவித்து அமுதொடு மீண்டது காணே.


மலர் மாலைகள் சூடிய குழலி தேவி; கருணை பொழியும் கண்களை உடையவள்; அவள் உயிருக்கு மயக்கத்தைத் தரும் அறியாமையின் இருளைப் போக்கும் குண்டலினி சக்தியாக ஒளி வீசுகின்ற இளங்கொடி ஆவாள். மூலாதாரத்தில் எழுகின்ற மூலக் கனல் எழுப்பும் மூல வாயுவுடன் சேர்ந்து ஒளிமணடலத்தை உருவாக்குவாள். அவளை இனம் கண்டு கொள்வீர்!


#1092. மூன்று கிரியை மந்திரங்கள்


காணும் இருதய மந்திரமும் கண்டு
பேணும் நமஎன்று பேசும் தலைமேலே
வேணு நடுவு மிக நின்ற ஆகுதி
பூணும் நடுஎன்ற அந்தம் சிகையே.

இருதய மந்திரத்தின் பொருள் உணர்ந்து கொண்டு, தலையுச்சியில் வீற்றுள்ள சக்திக்கு நாம் வணக்கம் செய்ய வேண்டும். மூங்கில் குழல் போன்ற நடுநாடியின் வழியே மேலே சென்று, உச்சியில் பொருந்தியுள்ள அவள், நாம் அளிக்கும் ஆகுதியைப் பெற்றுக் கொள்வாள். உச்சியின் நடுவே விளங்குவது ‘சிகா’ மந்திரம் என்பதை அறிந்து கொள்வீர்.


#1093. உடல் முழுவதும் வியபித்திடுவாள்


சிகை நின்ற அந்தக் கவசம் கொண்டு ஆதிப்
பகை நின்ற அங்கத்தைப் பார் என்று மாறித்
தொகை நின்ற நேத்திரம் முத்திரை சூலம்
வகை நின்ற யோனி வருத்தலும் ஆமே.


தேவி சிகையால் உணர்த்தப்படும் ஆயிரம் இதழ்த் தாமரையில் ஒளியாகத் திகழ்வாள். காமம் முதலிய குற்றங்கள் பொருந்தி உயிருக்குப் பகைவர்களாக இருந்த அங்கங்களை அவள் மாற்றிவிடுவாள். மூன்று கண்களை உடைய தேவி உடலில் யோனி முதல் கபாலம் வரையில் ஒளிமயமாக விரவி விளங்குவாள்.


#1094. ஒளியை உண்டாக்கலாம்!


வருத்தம் இரண்டும் சிறுவிரல் மாறிப்
பொருத்தி அணிவிரல் சுட்டிப் பிடித்து
நெரித்து ஒன்ற வைத்து, நெடிது நடுவே
பெருத்த விரல் இரண்டு உல் புகப் பேசே.

தியானத்தின் மூலம் ஒளியை எழுப்ப இயலாதவருக்கு ஏற்றது இது.
எனினும் மிகுந்த எச்சரிக்கையுடன் செய்ய வேண்டியது செயல் இது.
எனவே குருமுகமாக முறையாகக் கற்க வேண்டிய செயல் இது.




 
#1095 to #1099

#1095. பிராணன் வசப்படும்

பேசிய மந்திரம் இகாரம் பிரித்து உரை
கூசம் இலாத சகாரத்தை முன்கொண்டு
வாசிப் பிராணன் உபதேசம் ஆகைக்குக்
கூசிய விந்துவுடன் கொண்டு கூடவே.


பிராணனை வசப்படுத்தும் மந்திரம் இது.
கூறுவதற்கு அரிய ‘ச’காரத்துடன் ‘இ’ காரத்தைச் சேர்த்து விட்டு
அத்துடன் பிந்துவிடன் கூடிய ‘ம’காரத்தையும் சேர்த்துச் சொல்லவும்.
ச + இ + ம் = சிம்


#1096. நாதத்தின் நடுவே தேவி


கூவிய சீவன் பிராணன் முதலாகப்
பாவிய ‘ச’ உடன் பண்ணும் ‘யகாரத்தை’
மேவிய மாயை விரிசங்கு முத்திரை
தேவி நடுவில் திகழ்ந்து நின்றாளே.


இவ்வாறு கூறும் சீவன் பிராணன் மேல் எழும். ‘ச’என்னும் சிவத்துடன் ‘ய’ என்னும் சீவன் உடன் உறையும். சுத்த மாயை விளங்கும் பொழுது சங்கின் ஒலி தோன்றி விரியும். அந்தச் சங்கொலியின் நடுவே திரிபுரைத் தோன்றுவாள்.


#1097. அடியவருக்கு அருள்வாள்!


நின்ற வயிரவி, நீலி, நிசாசரி,
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச்
சென்று அருள் நாயகி தேவர் பிரானுக்கே
நன்று அருள் ஞானத்து நாடிடும் சாற்றியே.

வயிரவி நீல நிறம் கொண்டவள். இரவில் இயங்குகின்றவள். சத்துவம், இராசதம், தாமசம் என்னும் முக்குணங்களுடன் கூடிய சீவனின் உள்ளத்தில் தானே வலியச் சென்று அருள் புரிகின்ற தேவி. தேவர்களுக்கு எல்லாம் தேவனாகிய சிவபெருமான் ஏவலின் படி நன்மைகளை அளிப்பவள். அவளை நாடிப் புகழ்ந்து போற்றுங்கள்.


#1098. யாவும் அவளே ஆவாள்


சாற்றிய வேதம், சராசரம், ஐம்பூதம்,
நாற்றிசை முக்கண்ணி நாடும் இருள்வெளி,
தோற்றும் உயிர்ப்பன்மை, சோதி, பராபரை,
ஆற்றலோடு ஆய் நிற்கும் ஆதி முதல்வியே.


சிவபெருமான் அருளிய வேதங்கள்; அசையும் பொருட்கள், அசையாப் பொருட்களால் நிறைந்த இந்த உலகம், இவற்றுக்குக் காரணமாகிய ஐந்து பூதங்கள், நான்கு திசைகள் இவை அனைத்துமே மூன்று கண்களை உடைய தேவியின் வடிவங்கள் ஆகும். இருள், வெளி, ஆன்மாக்களின் கூட்டம் இவை அனைத்தும் ஆவாள் ஒளிப் பிழம்பான அந்த தேவி. இவற்றுக்குக் காரணமும் அவளே! இவற்றுக்கு ஆற்றலைத் தருபவளும் அவளே.


#1099. பிறவிகள் நாசமாகும்


ஆதி வயிரவி, கன்னித் துறை மன்னி,
ஓதி உணரில் உடல், உயிர் ஈசன் ஆம்;
பேதை உலகில் பிறவிகள் நாசமாம்
ஓத உலவாத கோலம் ஒன்று ஆகுமே.


மூலாதாரத்தில் மண்டலமிட்டுச் சுருண்டு கிடக்கும் குண்டலினி சக்தியை எழுப்பிச சிரசில் அமைந்துள்ள சகசிர தளத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் அப்போது சாத்திரங்கள் கூறும் உண்மைகளை உண்மை அனுபவமாகப் பெற முடியும். அப்போது உடலும் உயிரும் சிவத் தன்மை அடையும். பேதை உலகினில் பிறவிகள் அழியும். வார்த்தைகளால் கூற முடியாத சிறந்த அழகு வந்து சேரும்.




 
#1100 to #1104

#1100. சிவத்தை வெளிப்படுத்துவாள்

கோலக் குழலி, குலாய புருவத்தள்,
நீலக் குவளை மலரன்ன கண்ணினாள்,
ஆலிக்கும் இன்னமுது, ஆனந்த சுந்தரி
மேலைச் சிவத்தை வெளிப்படுத்தாளே.


அழகிய கூந்தலை உடையவள்; நன்கு விளங்குகின்ற புருவத்தினள்; கருங்குவளைக் கண்ணினாள்; இனிய அமுதினை நிகர்த்தவள்; ஆனந்தம் நிரம்பிய அழகி. இவள் மேலான சிவத்தை நமக்கு வெளிப்படுத்துவாள்.

#1101. அடியவரை ஆட்கொள்ளுவாள்


வெளிப்படு வித்து விளைவு அறிவித்துத்
தெளிப்படு வித்து என் சிந்தையின் உள்ளே
களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதி
ஒளிப்படு வித்து என்னை உய்யக் கொண்டாளே.


தேவி எனக்குச் சிவத்தை வெளிப்படுத்தினாள். அதனால் விளையும் பயனையும் அறிவித்தாள் . உள்ளத் தெளிவைத் தந்தாள் . என் சிந்தையில் களிப்பை ஏற்படுத்தினாள். ஒளிக் கதிர்களுடன் விளங்கும் சிவனை மேலும் ஒளி மிகச் செய்தாள். எளியோனை உய்வித்து ஆட்கொண்டாள்.

#1102. அனைத்தும் தாங்குபவள் அவளே


கொண்டனள் கோலம் கோடி அனேகங்கள்
கண்டனன் என்னென் கலையின் கண் மாலைகள்
விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும்
தண்டலை மேல் நின்ற தையல் நல்லாளே.

சிரசின் உச்சியில் உள்ள குளிர்ந்த சந்திர மண்டலத்தில் விளங்குபவள் தேவி. பல கோடி சீவர்களிடம் பொருந்திப் பல கோடி உயிர்களைத் தாங்குகின்றாள் அந்தத் தேவி. பதினாறு கலைகளையும் வரிசையாகத் தன்னிடம் பொருத்திக் கொண்டுள்ளாள். வானத்தில் விரிந்து ஒளி வீசும் சூரியன், சந்திரன், அக்கினி என்ற மூன்று ஒளிரும் பொருட்களையும் படைத்தவள் அவளே.

#1103. இனிப் பிறவி இராது


தையல் நல்லாளை, தவத்தின் தலைவியை ,
மையலை நோக்கும் மனோன்மணி மங்கையைப்
பைய நின்று ஏத்திப் பணிமின், பணிந்தபின்
வெய்ய பவம் இனி மேவகி லாவே.


தையல் நாயகி ஆகிய தேவி துறவிகளுக்கு அருள் புரிபவள்; உலகத்தோரின் மயக்கத்தைத் தன் அருட் கண்களால் அகற்றுபவள்; அவளை மெல்ல நின்று துதித்துப் பணியுங்கள். அங்கனம் பணிந்தவரைக் கொடிய பிறவிப் பிணி இனிமேல் அண்டாது.

#1104. உள்ளத்தில் உள்ளாள்


வேய் அன தோளி, விரைஉறு மென்மலர்
ஏய குழலி, இளம் பிறை ஏந்திழை,
தூய சடைமுடிச் சூலினி, சுந்தரி,
ஏய்எனது உள்ளத்து இனிது இருந்தாளே.


தேவி மூங்கில் போன்ற அழகிய தோளை உடையவள். சந்திர மண்டலத்தில் விளங்குபவள். பொருந்திய குழலைப் போன்ற சித்திரணி நாடியில் விளங்குபவள். இளம் பிறையை முடிமேல் அணிந்தவள். தூய கதிர்களைச் சடைமுடியாகக் கொண்டவள். அவள் சூலினி. அவள் சுந்தரி. அவள் என் உள்ளதைத் தன் இருப்பிடமாகக் கொண்டு அமர்ந்திருப்பாள்.
 
#1105 to #1109

#1105. சார்பினை மாற்றி அமைப்பாள்

இனிய தென் மூலை இருக்கும் குமரி
தனி ஒரு நாயகி, தானே தலைவி,
தனிப்பட்டு வித்தனள் சார்வு படுத்து
நனிபடு வித்து உள்ளாம் நாடி நின்றாளே.


இனிய மூலாதாரத்தில் இருக்கு குமரிப் பெண் அவள்; ஒப்பற்றவள் தேவி அவள்; தானே தனக்குத் தலைவி ஆனவள்; அவள் என் மனத்தின் மலச் சார்புகளை அகற்றினாள். என்னை அவற்றிலிருந்து பிரித்த பின்னர் அந்த உள்ளம் அவள் திருவடிகளைச் சார்பாகக் கொள்ளச் செய்தாள். அவள் என்னை விரும்பி நின்றாள்.

#1106. பொற்சிலம்பின் ஒலி


நாடிகள் மூன்று நடுஎழு ஞாளத்துக்
கூடி யிருந்த குமரி, குலக்கன்னி
பாடகச் சீறடிப் பைம் பொன் சிலம்பு ஒலி
ஊடகம் மேவி உறங்குகின்றாளே.


மூன்று நாடிகளில் நடுவில் உள்ள நாளம் போன்ற நாடியில் பொருந்தி தேவி இருப்பவள். அந்தக் கன்னித் தன் காலில் அணிந்துள்ள பொற் சிலம்பு எழும் ஒலியுடன் என் உள்ளத்தில் பொருந்தி அமைதியாக இருகின்றாள்.

#1107. “உறங்க வேண்டாம்” என உபாயம் சொன்னாள்


உறங்கும் அளவில் மனோன்மணி வந்து
கறங்கு வளைக் கை கழுத்து ஆரப் புல்லி
பிறங்கு ஒளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட்டு
“உறங்கல் ஐயா” என்று உபாயம் செய்தாளே.


நான் உறங்கிய போது மனோன்மணி என்னிடம் வந்தாள். வளைகள் ஒலிக்கும் கரங்களால் ( சுழுமுனை நாடியால்) என் கழுத்தை இறுகத் தழுவினாள்.(இது தலையில் ஒலியும், ஒளியும் பரவும் போது மூச்சுக் கீழே செல்லாத வண்ணம் தொண்டை இறுக்கம் அடைவது).
அவள் சக்தியை என் வாயில் தந்தாள். ( இது தலையில் அடங்கி இருந்த சக்தியைத் தேவி வெளிப்படுத்துதல்)
“ஐயா உறங்க வேண்டாம்!” என்று கூறி ( இறைவனைச் சென்று அடைவதற்கான ) உபாயத்தையும் சொன்னாள்.

#1108. உபாயமும், அபயமும் தந்தாள்


உபாயம் அளிக்கும் ஒருத்தி என் உள்ளத்து
அபாயம் அறக் கெடுத்து, அன்பு விளைவித்துச்
சுவாவை விளைக்கும் சுழியகத்துள்ளே
அவாவை அடக்கி வைத்தி “அஞ்சல்” என்றாளே.


இறைவனை அடையும் நல்ல உபாயத்தை எனக்கு அளித்தாள் தேவி. அவளே என் உள்ளத்தில் காமக் குரோதங்கள் முதலிய கொடிய பகைவர்களால் ஏற்படும் அபாயங்களையும் போக்கினாள். என்னுள் இறைவனிடம் நீங்காத அன்பை விளைவித்தாள். நாயைப் போலத் தறிகெட்டு அலைகின்ற உள்ளத்தில் எழுகின்ற ஆசைகளை அடக்கி வைத்தாள். “அஞ்சேல் ” என்று எனக்கு அபயமும் தந்தாள்.

#1109. சேவடி சேர்பவர் இன்பம் பெறுவர்


அஞ்சொல் மொழியா ளருந்தவப் பெண்பிள்ளை
செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை
தஞ்சமென் றெண்ணித்தன் சேவடி போற்றுவார்க்கு
இன்சொ லளிக்கும் இறைவியென் றாரே.

அழகிய பிரணவ ஒலியை எழுப்புபவள்; அரிய தவத்தால் அடையக் கூடிய பெண் தெய்வம்; சீரிய சொற்களையே சொல்பவள்; சிவந்த ஒளியில் திகழ்பவள்; சேயிழை; தஞ்சம் என்று அவள் திருவடிகளை அடைந்தவருக்கு “அஞ்சேல்” என்ற இனிய சொல்லைக் கூறும் தேவி. மனோன்மணியைக் குறித்து இவ்வண்ணம் சிறப்பாக உரைப்பர்.
 
#1110 to #1114

#1110. உள்ளம் குலாவி நிற்பாள்

ஆருயிர் ஆயும் அருந்தவப் பெண்பிள்ளை

காரிய கோதையள் காரணி, நாரணி,
ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும்
கோரிஎன் உள்ளம் குலாவி நின்றாளே.

நல்வினை ஆற்றியதன் பயனாகவே ஒருவரால் அந்த தேவியை ஆராய முடியும். செய்யும் அருந்தவமே அவளிடம் கொண்டு சேர்க்கும். அவள் கரிய நிறம் உடையவள்; அனைத்துக்கும் காரணமானவள்; நாரணனின் அன்புத் தங்கை; உடல், உயிர், உலகம் என்று அனைத்தையும் ஒடுக்கும் வல்லமை கொண்ட கோரமானவள். அவள் என் உள்ளத்துள்ளே மகிழ்வுடன் வீற்றிருந்தாள்.


அஞ்ஞானத்தில் மூழ்கியுள்ள சீவர்களிடம் கோரமாகவும், ஞான மயமான சீவர்களிடத்தில் இனிமையாகவும் இருப்பவள் தேவி.


#1111. உச்சியில் உலாவுவாள்


குலாவிய கோலக் குமரி, என் உள்ளம்

நிலாவி யிருந்து, நெடு நாள் அனைந்தும்
உலாவி இருந்து உணர்ந்து உச்சியின் உள்ளே
கலாவி இருந்த கலைத்தலை யாளே.


உள்ளத்தில் குலாவிய கோலக் குமரி நீண்ட காலம் என் உள்ளத்தில் நிலாவி இருந்தாள். அவள் சீவனின் உடலில் நாதத்தை வெளிப்படுத்துவாள். உணர்வுடன் கலந்து மேலே சென்று, சந்திர மண்டலத்தை அடைவாள். அங்கே சந்திர கலைகள் தன் தலையில் நன்கு பொருந்திட தலை உச்சியில் உலாவுவாள்.


#1112. படர்கின்ற சுடர்க்கொடி


கலைத்தலை நெற்றிஓர் கண்உடை கண்ணுள்

முலைத்தலை மங்கை முயங்கி இருக்கும்
சிலைத்தலை ஆறு தெரிவினை நோக்கி
அலைத்தபூங் கொம்பினள் அங்கு இருந்தாளே.


நெற்றியிலிருந்து தலை உச்சி வரையில் அமைந்துள்ளது சந்திர மண்டலம். சந்திரனின் ஒளியால் சிறப்புற்றது இந்த மதி மண்டலம். இங்கு மேருமலையின் உச்சியில் சக்தி சிவத்துடன் கூடிப் படரும் கொடி போல அசைந்து ஆடிக் கொண்டிருப்பாள். ஏனெனில் அசையும் ஒளிஅணுக்களால் ஆனவள் தேவி.


#1113. சிவத்துடன் ஒன்றி இருப்பாள்


இருந்தனள் ஏந்திழை என் உள்ளம் மேவிப்

பொருந்திய நால்விரல் புக்கனள் புல்லித்
திருந்திய தாணுவில் சேர்ந்து, உடன் ஒன்றி
அருந்தவம் எய்தினள் ஆதியி னாளே.


சக்தி என் மனதில் மெல்லிய இழை போன்ற வடிவத்துடன் விளங்கினாள். உள் நாக்குக்கு மேலே நான்கு விரற்கடையளவு உள்ள பாதையில் புகுந்தவுடன் திருந்திய சிறந்த அறிவு வடிவாகிய சிவத்துடன் சக்தி ஒன்றாகி விட்டாள். அதன் மூலம் அவள் அருந்தவக் கூத்தினை அடைந்தாள்.


#1114. பிரியாமல் இருப்பாள்


ஆதி அனாதி அகாரண காரணி

சோதி, அசோதி, சுகபர, சுந்தரி
மாது, சமாதி மனோன்மணி, மங்கலை
ஓதிஎன் உள்ளத்து உடன் இயைந் தாளே.


இவள் எல்லாவற்றுக்கும் முன்னே இருந்தவள். இவளுக்கு முற்பட்டது என்று எதுவும் இல்லை. இவள் எல்லாவற்றுக்கும் காரணம் ஆனவள். இவளுக்கு ஒரு காரணம் என்று எதுவும் இல்லை. இவள் சோதியாகவும் இருப்பாள். இவளே சோதியின்றியும் இருப்பாள். சுகம் பொருந்தியவள். எல்லோரையும் விடவும் மிகவும் அழகானவள். இவள் இன்பத்தையும் அளிக்க வல்லவள். தூய சமாதி நிலையையும் அளிக்க வல்லவள்.
இவளே மனோன்மணி; இவளே மங்கலை; இவள் பிரிவின்றி என் உள்ளத்தில் உள்ளாள்.



 
#1115 to #1119

#1115. திரிகால ஞானம் உண்டாகும்

இயைந்தனள் ஏந்திழை என்னுள்ள மேவி

நயந்தனள் அங்கே நமசிவ என்னும்
அயன் தனை யோரும் பதமது பற்றும்
பெயர்ந்தனள் மற்றும் பிதற்றறுத்தாளே.

என்னுள்ளம் மேவிய பராசக்தி என்னிடமிருந்து பிரியாமல் இருந்தாள். அவள் என்னை விரும்பி இருந்தாள். சிவ வடிவமான தேவியை நான் வணங்கினேன். அதுவே நான்முகனின் படைப்பினை ஆராய்ந்து உணர்ந்து கொள்ளும் வல்லமையை நமக்கு அளிக்கும். தேவி என் பற்றுகளை அகற்றி அருளினாள். அவற்றுடன் நூல்களைக் கற்றதன் பயனாக பெற்ற அறிவினால் நான் பிதற்றிய மொழிகளையும் போக்கிவிட்டாள்.

#1116. முத்தி அருளும் முதல்வி


பிதற்றிக் கழிந்தனன்ர் பேதை மனிதர்,

முயற்றியில் முத்தி அருளும் முதல்வி
கயல் திகழ் முக்கண்ணும் கம்பலைச் செவ்வாய்
முகத்து அருள் நோக்கமும் முன்உள்ள தாமே.

பேதை மனிதர்கள் வாதம் செய்வதிலேயே தங்கள் வாழ்நாளைக் கழிகின்றனர். உண்மையை அறிந்து கொள்ள முயல்வதில்லை. அவள் முயற்சியால் வீடுபேற்றை அருளுபவள் அந்த முதல் தலைவி. மீன் போன்ற மூன்று கண்களை உடையவள். ஒலியை எழுப்புகின்ற சிவந்தி ஒளி படைத்தவள். அருள் பொழிகின்ற திருமுகம் கொண்டவள். இவற்றை எல்லாம் அறிந்து கொள்ளாமல் சிலர் விளங்குகின்றனரே.

#1117. கள்ள ஒளி தெள்ளத் தெளிவாகும்


உள்ளத்து, இதயத்து, நெஞ்சத்து ஒரு மூன்றுள்

பிள்ளைத் தடம் உள்ளே பேசப் பிறந்தது
வள்ளல் திருவின் வயிற்றினுள் மாமாயைக்
கள்ள ஒளியின் கருத்து ஆகும் கன்னியே.

மூலாதாரத்தில் விளங்க முடியாத ஓர் ஒளியாக இருப்பாள் தேவி. உள்ளம், இதயம், நெஞ்சு என்று மேலே சென்று அண்ணாக்குப் பகுதியில் தொடங்கி பிரமரந்திரம் வரை உள்ள சிறிய சீரிய பாதையில் நாதத்துடன் விளங்குவாள். வள்ளல் சிவாபெருமானின் கருத்துப் படி தொழில் ஆற்றுகின்ற சுத்த மாயையாகிய தேவி படைத்தலில் கருத்து ஊன்றிய கன்னி ஆவாள்.

#1118. மாயை என்னும் இருள்


கன்னியும் கன்னி அழிந்திளல், காதலி

துன்னி அங்கு ஐவரைப் பெற்றனள் தூய் மொழி
பண்ணிய நன்னூற் பகவரும் அங்குளன்
என்னே இம்மாயை இருள் அது தானே.

சக்தி மூலாதாரத்தில் இருக்கும் போது கன்னித் தன்மை அழியாதவள். அவளே சிவனின் காதலியாகி அவனுடன் பொருந்தி ஐந்து மக்களைப் பெற்றனள். (நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்னும் ஐவர்). அவள் தூய நாத வடிவுடையவள்; மறைகள் புகழும் சிவனும் அங்கே உள்ளான். இதே மாயை அறியாமையின் இருளாகவும் விளங்குகின்றது! என்ன ஆச்சரியம் இது!

#1119. ஆதிப் பிரான் அருள் செய்வான்


இருளது சத்தி, வெளியது எம் அண்ணல்

பொருளது புண்ணியர் போகத்துள் இன்பம்,
தெருளது சிந்தையைத் தெய்வம் என்று எண்ணில்
அருளது செய்யும் எம் ஆதிப் பிரானே.

இருள் மயமாக இருக்கும் சக்தி. சிவன் ஞான வெளியில் விளங்குபவன். சிவனுடன் கலந்து இருக்கும் இன்பமயமான சிவயோகமே புண்ணியர்கள் விரும்புகின்ற சிவபோகம். தேடும் பொருள் சிவனே என்ற தெளிந்த சிந்தையுடன் ஒருவர் நாதத்தை வணங்கினால், சிவன் அந்த நாதத்தை இடமாகக் கொண்டு அவருக்கு அருள் புரிவான்.
 
#1120 to #1124

#1120. விரிந்து பரந்து நிரம்பும் மனம்
ஆதி அனாதியும் ஆய பராசத்தி,
பாதி, பராபரை, மேல்உறை பைந்தொடி,
மாது, சமாதி, மனோன்மணி, மங்கலி
ஓதும் என் உள்ளத்து உடன் முகிழ்ந்தாளே.

பராசக்தி ஆதியானவள்; அனாதியானவள்; சிவனின் பாதித் திருமேனியை தனதாக்கிக் கொண்டவள்; எல்லாத் தெய்வங்களுக்கும் மேலானவள்; எல்லா தெய்வங்களுக்கும் மேலே நாதமயமாக விளங்குபவள்; உயரிய மாது, பெருமைகளை தன்னிடம் நிலைக்கச் செய்பவள்; மனோன்மணி, நித்திய மங்கலி. அவளை எண்ணித் தொழுபவர் மனத்தை அவள் விரிந்து பரந்து நிரப்புவாள்.

#1121. சாதியையும் பேதமும் சக்தியே


ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை
ஆதியில் வேதமேயாம் என்று அறிகிலர்
சாதியையும் பேதமும் தத்துவமாய் நிற்பள்
ஆதி என்று ஓதினள் ஆவின் கிழத்தியே.


“கலைகளில் உயர்வானது பிரணவம். அந்தப் பிரணவமே யாம் என்ற உண்மையை அறியாத மக்கள் உள்ளனர்!” சாதிகள், அவற்றால் விளையும் பேதங்கள், அவற்றின் தத்துவங்கள் அனைத்துமே சக்தியே என்ற உண்மையை ஆதிசக்தியே எனக்கு அறிவித்தாள்.

#1122. வினைகளைக் கடிந்து களைவாள்


ஆவின் கிழத்தி நல் ஆவடு தண்துறை
நாவின் கிழத்தி, நலம் புகழ்ந்து ஏத்திடும்,
தேவின் கிழத்தி, திரு ஆம் சிவ மங்கை,
மேவும் கிழத்தி வினை கடிந்தாளே.

உயிர்களின் தலைவி சக்தி தேவி. உயிர்களை பக்குவம் செய்யும் வீணாத் தண்டில் இவள் வாகீசுவரியாக விளங்குவாள். நன்மைகளைத் தருபவள் என்று அவளைத் தேவர்கள் புகழ்ந்து பேசும் தலைவி. சிவபெருமானின் மங்கை இவள்; விரும்பி வழிபடும் அடியவரின் வினைகளைக் கடிந்து களைபவள்.

#1123. சிவனுக்கும் அவள் அனாதி ஆவாள்


வினை கடிந்தார் உள்ளத்து உள்ளொளி மேவித்
தனை அடைந்தோர்க்கு எல்லாம் தத்துவமாய் நிற்பள்
எனை அடிமை கொண்ட ஏந்திழை, ஈசன்
கணவனைக் காண அனாதியும் ஆமே.


வினைப் பயன்களை அழித்து விட்டவர்களின் உள்ளத்தில் இவள் ஒளியாக விளங்குவாள். தன்னையே அடைக்கலம் என்று தஞ்சம் அடைந்தவருக்கு தத்துவம் என்னும் உண்மைப் பொருளாக விளங்குவாள். இவள் என்னை அடிமை கொண்டுவிட்ட ஏந்திழை. இவள் கணவன் ஆகிய சிவனைக் காட்டிலும் இவளே அனாதி ஆனவள் என்று அறிவீர்.

#1124. சக்தியே சிவனின் வடிவம்


ஆதி, அனாதி, அகாரணி, காரணி,
வேதம் அது ஆய்ந்தனள், வேதியர்க்காய் நின்ற
சோதி தனிச் சுடர் சொருபமாய் நிற்கும்
பாதி, பராரை, பன்னிரண்டு ஆதியே.

தேவி அனைத்துக்கும் முதன்மையானவள்; அனைத்துக்கும் பழமையானவதள். தனக்கு என்று காரணம் ஒன்றும் இல்லாதவள்; எல்லாவற்றுக்கும் தானே காரணம் ஆனவள்; வாக்கின் தெய்வமாக இருந்து வேதியர்களுக்கு ஆராயும் திறனைத் தந்தவள்; தனி பெருஞ்சுடரான சிவத்தின் வடிவம் ஆனவள்; அவன் மேனியில் பாதியைத் தனதாக்கிக் கொண்டவள்; பன்னிரண்டு ஆதவர்களைப் போல ஒளி வீசுபவள் ஆதிசக்தி.
 
7. பூரண சக்தி

7. பூரண சக்தி என்றால் முழுமையான சக்தி.

#1125 to #1129

#1125. ஆராய்ச்சியின் முடிவு

அளந்தேன் அகலிடத்துஅந்தமும் ஈறும்,
அளந்தேன் அகலிடத்து ஆதி பிரானை,
அளந்தேன் அகலிடத்து ஆணொடு பெண்ணும்,
அளந்தேன் அவன் அருள் ஆய்ந்து உணர்ந்தேனே.


உலகங்களின் முடிவையும், அவை முடிகின்ற இடத்தையும் நான் ஆராய்ந்தேன். அனைத்துமே ஆதிப் பிரான் ஆகிய சிவனிடம் சென்று லயம அடைவதை அறிந்து கொண்டேன். ஆண் பெண் என்னும் மாறுபட்ட பாலுணர்ச்சி முடிவடையும் இடத்தையும் நான் அறிந்து கொண்டேன். சிவசக்திய எங்கனனம் அருள் புரிகின்றனர் என்பதையும் நான் ஆராய்ந்து அறிந்து கொண்டேன்.

#1126. ஆன்மாவின் லயம்


உணர்ந்திலர்; ஈசனை ஊழி செய் சத்தி
புணர்ந்தது பூரணம்; புண்ணியர் தங்கள்
கணங்களைத் தன் அருள் செய்கின்ற கன்னி
கொணர்ந்த வழிகொண்டு கும்பகம் ஆமே.

ஆன்மாவின் மீது ஈசன் செலுத்தும் ஆட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டு வரும் பராசக்தியை மக்கள் அறிந்து கொள்ளவில்லை. குண்டலினி சக்தி பராசக்தியுடன் கலக்கும் போது முழுமை அடையும். பராசக்தி புண்ணியம் செய்தவர்களைத் தன்னருளில் நிலைத்திருக்கச் செய்பவள்; ஆன்மா உடலின் பொருந்திட உதவியது போலவே பராசக்தி ஆன்மா லயம் அடைவதற்கும் உதவுவாள்.

விளக்கம்


ஆன்மா உடலில் இருந்து பிரிந்த பிறகு, மகேசுவரர் அதன் மீது செலுத்திய ஆட்சி முடிந்து விடும்.

குண்டலினிசக்தி சிற்சக்தியுடன் பொருந்திப் பூரணம் அடையும் போது உடல் நினைவு அழிந்து விடும்.

அப்போது மூச்சின் இயக்கம் முழுமையாகவே நின்று விடும். இயல்பாகவே கும்பகம் அமைந்திடும்.


#1127. அன்பே வடிவம் ஆகும்


கும்பக் களிறு ஐந்தும், கோலொடு பாகனும்
வம்பில் திகழும் மணிமுடி வண்ணனும்
இன்பக் கலவி இனிது உறை தையலும்
அன்பின் கலவியு ளாய்ஒழிந் தாரே.


மதம் கொண்ட ஐந்து யானைகளே நம் ஐம்புலன்கள். அவற்றை செலுத்துவது நம் மனம் என்னும் பாகன். குண்டலினி சக்தி கீழ் முகமாகப் பாயும் பொழுது காமச் செயலில் விருப்பம் ஏறபடுத்தி சீவர்களுக்குச் சிற்றின்பத்தைத் தருவாள். அவளே சிவன் காதல் கொண்டு மேலே சென்று சகசிரதளத்தை அடைபவர்களுக்கு கலவி இன்பதை ஒழித்துப் பேரின்பத்தை அளிப்பாள்.

#1128. இன்பக் கலவியும், துன்பக் குழம்பும்


இன்பக் கலவியில் இட்டு எழு கின்றது ஓர்
அன்பில் புகவல்ல னாம் எங்கள் அப்பனும்,
துன்பக் குழம்பில் துயர் உறும் பாசத்துள்
என்பில் பராசக்தி, என் அம்மை தானே.


சீவர்களை இன்பக் கலவியில் செலுத்தி அங்கே எழும் ஆனந்தத்தில் நுழைய வல்லவன் சிவபெருமான். துன்பக் குழம்பாகிய சுக்கில சுரோணிதச் சேர்க்கையில் சிவன் விருப்பம் கொள்வான். சீவர்களுக்குப் பந்தத்தை விளைவிப்பான். இந்தச் செயலுக்குத் துணையாகப் பராசக்தியும் சீவனின் முதுகுத் தண்டாகிய வீணாத் தண்டில் பொருந்தி உள்ளாள்.

#1129. அப்பனும், அம்மையும் சிவசக்தியர்


“என் அம்மை, என் அப்பன்” – என்னும் செருக்கு அற்று
உன் அம்மை ஊழித் தலைவனும் அங்கு உளன்
மண் அம்மை ஆகி மருவி உரை செய்யும்
பின் அம்மையாய் நின்ற பேர் நந்தி தானே.


உம் உற்பத்திக்குக் காரணம் உடல் உறவு கொண்ட உம் தாயும் தந்தையும் என்ற மயக்கம் தரும் எண்ணத்தை நீக்கி விடுவீர். சுத்த வித்திய மண்டலம் என்னும் சுத்த மாயையில் உள்ள அன்னையும், சிவனும் நம் தாயும் தந்தையும் ஆவர். இந்த அம்மை நிலையாக உம்மைப் பொருந்தி நாதத்தைத் தந்தருள்வாள். அவள் விளங்குகின்ற ஒளி மண்டலம் நந்தி என்னும் குருமண்டலம் ஆகும்.




 
#1130 to #1134

#1130. நாமேல் உறையும் நாயகி

தார் மேல் உறைகின்ற, தண்மலர் நான்முகன்

பார் மேல் இருப்பது, ஒரு நூறு தான் உள,
பூ மேல் உறைகின்ற போதகம், வந்தனள்
நா மேல் உறைகின்ற நாயகி ஆணையே.


உடலில் உள்ள ஆறு ஆதாரங்கள் ஒரு மாலையைப் போல விளங்குபவை. அவற்றில் ஒன்றான சுவாதிட்டானத்தில் வீற்றிருக்கும் நான்முகன் படைக்கும் சீவர்களின் ஆயுள் நூறு ஆண்டுகள் ஆகும். சுவாதிட்டானத்தில் இருந்து கொண்டு படைப்புக்கு உதவுபவள் நாமகள். அவளே ஞானவாணியாக சிரசின் மேலே எழுந்தருளுவாள். சீவனைத் தாழ்ந்த காமத்தை விட்டுவிட்டு உயரிய ஞானத்தை நாடச் செய்கின்றாள்.


#1131. பரத்தை அறிந்த பிறகு…


ஆணைய மாய், வருந் தாதுஇருந்தவர்

மாண் ஐயம் ஆய மனத்தை ஒருக்கிப் பின்
பாணையம் ஆய பரத்தை அறிந்தபின்,
தாண் நயம் ஆய தனா தனன்தானே.


உண்மையாகவே இறைவனிடம் நம்பிக்கை வைப்பவர் “எல்லாம் அவன் செயல்” என்று கவலை இன்றி இருப்பார்கள். மனத்தில் இருந்த நுட்பமான ஐயங்கள் தெளிவடைந்த பிறகு, மனத்தை அடக்கி நாதமயமான பரத்தை அறிந்து கொள்வார்கள். அதன் பிறகு இறைவன் தன்னை விட்டு அகலாதபடி அவன் இருப்பிடம் ஆகிவிடுவார்கள்.


#1132. மதி மண்டலம் அமையும்


தானே எழுந்த இத்தத்துவ நாயகி

வான்நேர் எழுந்து, மதியை விளக்கினள்,
தேன்நேர் எழுகின்ற தீபத்து ஒளியுடன்
மானே நடம் உடை மன்று அறியீரே.


தத்துவ நாயகி சீவனின் மீது தன் அருள் மிகுந்தால் மூலாதாரத்தில்
இருந்து தானே மேலே எழுவாள். மதி மண்டலத்தில் ஒளி வீசச் செய்வாள். வான மண்டலத்தை நன்கு புலப்படச் செய்வாள். தேன் தாரையை போன்று இடைவிடாத விருப்பத்தால் எழும் ஒளியில் பராசக்தி நடனம் செய்யும் இடம் பொன்னம்பலம் ஆகும். இதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.


#1133. விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும்


அறிவான மாயையும் ஐம்புலக் கூட்டத்து

அறிவான மங்கை அருள் அது சேரின்,
பிரியா அறிவு அறிவார்; உளம் பேணும்
நெறியாய சித்தம் நினைத்து இருந்தாளே.


ஐந்து தன்மாத்திரைகளை (சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்பவற்றை) அறிய உதவுபவை ஐந்து ஞானேந்திரியங்கள் (செவி, த்வக்கு, கண், நாக்கு, மூக்கு). இவை அனைத்தும் ஐம்பொறிகளின் உதவி இல்லாமல் அறியக் கூடிய பராசக்தியைச் சேர வேண்டும். அப்போது நீங்காத ஆறிவு பிறக்கும். அங்ஙனம் அவளைப் பொருந்தி நிற்பவரின் விருப்பங்கள் எல்லாம் அவள் அருளால் நிறைவேறும்.


#1134. நாத சக்தி


இரவும் பகலும் இலாத இடத்தே

குரவம் செய்கின்ற குழலியை நாடி,
அரவம் செய்யாமல் அருளுடன் தூங்கப்
பருவம் செய்யாததோர் பாலனும் ஆமே.


சந்திரன், சூரியன் இயங்காத இடத்தில், மகிழ்ச்சியைத்தரும் நாதசக்தியுடன், ஆரவாரம் செய்யாமல், அருளுடன் அமைந்திருந்தால், பருவம் மாறாத பாலகனாகவே எப்போதும் இருக்கலாம். நாதசக்தியாகிய தேவியுடன் பொருந்தி இருப்பவர் என்றும் இளமையோடு இருப்பார்.




 
#1135 to #1139

#1135. சக்தி விளங்கும் இடம் எது?

பாலனும் ஆகும் பராசக்தி தன்னோடு,
மேல் அணுகா, விந்து நாதங்கள் விட்டிட,
மூலம் அது ஆம் எனு முத்திக்கு நேர்படச்
சாலவு மாய்நின்ற தற்பரத் தாளே.

தேவியாகிய நாதசக்தியோடு பொருந்தியிருந்தால் என்றும் இளமையோடு இருக்கலாம். ஆனால் விந்து நாதங்களைக் கடந்து விட்டால் வீடுபேற்றினை அளிக்கும் பாதையில் பராசக்தி விளங்குவதைக் காணலாம். மூலத்தை அடைவதே முத்தி எனில் விந்து நாதங்களைக் கடக்கும்போது அங்கு பராசக்தியைக் காணலாம்.


#1136. முத்தி நிலை என்பது என்ன?


நின்ற பராசத்தி நீள் பரன் தன்னொடும்
நின்று அறி ஞானமும் இச்சையுமாய் நிற்கும்,
நன்று அறியும் கிரியா சக்தி நண்ணவே
மன்றன அவற்றுள் மருவிடும் தானே.


சக்தி இச்சா சக்தி, கிரியா சக்தி , ஞான சக்தி என மூவகைப் படும். சீவன் கீழ் நோக்குடன் இருக்கும் போது இச்சா சக்தியாகவும், கிரியா சக்தியாகவும் விளங்குவாள் பராசக்தி. சீவன் மேல் நோக்குடன் ஞானத்தைத் தேடிச் செல்கையில் அவளே ஞான சக்தியாக விளங்குவாள். நாதாந்ததில் நிலை பெற்ற பராசக்தி சிவத்துடன் ஒன்றி விடுவாள். சீவனின் சித்தம் சிவம் ஆகும் போது சீவனும், சிவனும், சக்தியுள் அடங்கிவிடுவர். மூவகைச் சக்திகளும் பராசக்தியில் அடங்கி விடும். பரன், பராபரை, பரம் ஆகிவிட்ட சீவன் மூன்றும் ஒன்றிவிடும் நிலை முத்தி நிலை எனப்படும்.


#1137. மலரும் மணமும் போலச் சிவசக்தியர்


மரு ஒத்த மங்கையும் தானும் உடனே
உரு ஒத்து நின்றமை ஒன்றும் உணரார்,
கரு ஒத்து நின்று கலக்கின போது,
திரு ஒத்த சிந்தை வைத்து எந்தை நின்றானே.

மணமும் மலரும் போலச் சிவசக்தியர் பிரிக்க முடியாத படி இணைந்துள்ளனர். அவர்கள் இவ்வாறே ஆன்மாக்களிலும் பிற தத்துவங்கள் அனைத்திலும் பொருந்தியுள்ளனர். ஆயினும் இதை உலகத்தோர் சிறிதும் உணர்வதில்லை. இங்ஙனம் சிவசக்தியர் சமமாகக் கலந்த நிலையில் சிவன் சக்தியின் மேல் வைத்த சிந்தையை என் மேலும் வைத்து அருளினான். அவன் எனக்கு நன்கு விளங்கினான்.


#1138. ‘அ’ முதல் ‘க்ஷ’ வரை


சிந்தையின் உள்ளே திரியும் சிவசக்தி
விந்துவும் நாதமும் ஆயே விரிந்தனள்,
சந்திர பூமி, சடாதரி, சாத்தவி,
அந்தமொடு ஆதியது ஆம் வண்ணத்தாளே.

சிந்தைக்குள் உலவிடும் சக்திதேவி நாதம், விந்துக்களாக விரிவடைந்தாள். அவள் சந்திர மண்டலத்தைத் தன் இருப்பிடமாகக் கொண்டவள். அவள் உடலின் ஆறு ஆதாரங்களிலும் விளங்குபவள். அவள் சத்துவ குணம் நிரம்பியவள். அவள் ‘அ ‘ முதல் ‘க்ஷ ‘ ஈறாக ஐம்பத்தொன்று எழுத்துக்களிலும் உறைபவள்.


#1139. சிந்தையில் ஊறும் சுந்தரி


ஆறி இருந்த அமுத பயோதரி
மாறி இருந்த வழி அறிவார் இல்லை,
தேறி இருந்து நல் தீபத்து ஒளியுடன்
ஊறி இருந்தனள் உள் உடையார்க்கே.

சந்திர மண்டலத்தைத் தன்னிடமாகக் கொண்டவள் சக்தி தேவி. அவள் தன் ஆற்றலைக் குறைத்துக் கொண்டு அமுது ஊறும் அழகிய கொங்கைகளுக்குக் கீழேயும் விளங்குவாள். இவ்வாறு மேலும் கீழுமாக இரண்டு மாறுபட்ட நிலைகளில் சக்தி தேவி அமைவதை அறிந்தவர் எவரும் இல்லை. மனம் தெளிவடைந்து, புருவ மத்தியில் விளங்கும் ஒளியைக் காணும் அன்பர்களின் சிந்தையில் அந்த சுந்தரி ஒரு வற்றாத ஊற்றாக விளங்குவாள்.

 
#1140 to #1144

#1140. அங்கி வடிவான உருத்திரன்

உடையவன் அங்கி , உருத்திர சோதி,
விடையவன் ஏறி விளங்கி இருக்கும்,
கடையவர் போயிடும், கண்டவர் நெஞ்சத்
தடை; அது ஆகிய சாதகர் தாமே.


தீ வடிவான உருத்திரனின் அடிமை நான். மூலாதாரத்தில் இவன் சோதியாக விளங்குவான். இவனே விந்து மண்டலத்தை அடைந்து அங்கு சிறப்புடன் அமர்வான். இந்த உண்மையினை அறியாதவர்கள் சென்று விடுங்கள்! இதனை அறிந்தவர் சிறந்த யோகசாதகர் ஆவார்.


#1141. சகசிர தளத்தில் சக்தி தேவி


தாம் மேல் உறைவிடம் ஆறு இதழ் ஆனது;
பார்மேல் இதழ் பதினெட்டு இருநூறு உள,
பூமேல் உறைகின்ற புண்ணியம் வந்தனள்
பார்மேல் உறைகின்ற பைங்கொடியாளே
.


ஆறு இதழ்த் தாமரையான சுவாதிட்டானம் தேவி உறையும் இடம். பூமித் தத்துவமாகிய இதற்கும் மேலே இன்னும் 218 உலகங்கள் உள்ளன. பூமித் தத்துவத்தில் விளங்கிய நாதசக்தியே மேலே சென்று சகசிரதளத்துக்குப் புண்ணிய வசத்தினால் வந்து சேர்ந்தாள்.


அண்டகாயத்தில் 224 உலகங்கள் உள்ளன. பூமித் தத்துவமாகிய ஆறு இதழ்த் தாமரையாகிய சுவாதிட்டானத்துக்கு மேலே இன்னும் 218 உலகங்கள் உள்ளன. இவை அனைத்துக்கும் மேலே அமைந்துள்ளது சகசிரதளம்.


#1142. இயக்குபவள் சக்தி தேவி


பைன்தொடியாளும் பரமன் இருந்த இடம்
திண்கொடியாகத் திகழ் தரு சோதியாம்,
விண்கொடி யாகி விளங்கி வருதலால்
பெண்கொடி யாக நடந்தது உலகே.


சிவபெருமான் இருந்தபடி இருப்பான். சக்தியே செயலாற்றுவாள். வல்லமை மிகுந்த சோதி வடிவான சிற்சக்தி இவளே. வான் கூற்றில் விளங்கும் தேவியும் இவளே. உலகம் இயங்குவது பெண்கொடியாகிய சக்தியின் அருளால் மட்டுமே.


#1143. குண்டலினியே நவசக்தியானது


நடந்தது அம்மலர் நாலுடன் அஞ்சாய்,
இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய்,
படர்ந்தது தன் வழி பங்கயத்துள்ளே,
தொடர்ந்து உள்வழி சோதி அடுத்தே.


நான்கு இதழ்த் தாமரையாகிய மூலாதாரத்தைத் தன் இருப்பிடம் ஆகக் கொண்டது குண்டலினி சக்தி. அதற்கு மேல் உள்ள சுவாதிட்டானம், மணிபூரகம் , அனாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஐந்து ஆதாரங்களிலும் அது பொருந்தியது. சகசிரதளத்தை அடைந்து அங்கே நவசக்தியராக மாறியது. அதுவே உள்வழியாகிய வீணா தண்டின் ஊடே போரொளியாகப் புகுந்து சென்றது.


#1144. சகசிரதளத்தில் குண்டலினி சக்தி


அடுக்குந் தாமரை ஆதியின் இருப்பிடம்
எடுக்குந் தாமரை இல்லகத் துள்ளது
மடுக்குந் தாமரை மத்த கத்தேசெல
முடுக்குந் தாமரை முச்சது ரத்தே.


சகசிரதளம் ஆதிசக்தியின் இருப்பிடம். இதன் ஆற்றல் உடலில் உள்ள மற்ற சக்கரங்களிலும் உள்ளது. இது உடலையும் சிதாகாசத்தையும் இணைப்பது. குண்டலினி சக்தியை மேல் நோக்கிச் செலுத்தி சகசிரதளத்தை அடையச் செய்வது முக்கோணமும் நாற்கோணமும் பொருந்திய மூலதாரமே ஆகும்.




 
#1145 to #1149

#1145. குண்டலினி பரவிச் செல்வாள்

முச்சது ரத்தி லெழுந்த முளைச்சுடர்
எச்சது ரத்து மிடம் பெற ஓடிடக்
கைச்சது ரத்துக் கடந்துள்லொளி பெற
எச்சது ரத்து மிருன்தனள் தானே.

முச்சதுர வடிவான மூலாதாரத்தில் முளை போல விளங்குவாள் குண்டலினி சக்தி. அவளே எல்லா ஆதாரச் சக்கரங்கள் வழியே பரவிச் செல்வாள். சுழுமுனையின் உச்சியில் விளங்கும் சகசிரதளத்தில் அமைந்துள்ள பிரமரந்திரதைக் கடந்து உள்ளம் ஒளி பெற உதவுவாள்.


#1146. பத்து திசைகளிலும் பரவுவாள்


இருந்தனள் தன்முகம் ஆறொடு நாலாய்,
பரந்தனள் வாயு திசை திசை தோறும்,
குவிந்தன முத்தின் முகஒளி நோக்கி
நடந்தது தேறல்; அதோ முகம் அம்பே.


பத்துத் திசைகளிலும் பத்து முகங்களைக் கொண்டவள் தேவி. அதனால் அவள் பத்துத் திசைகளிலும் பரவி இருப்பாள். சிரசை நோக்கிக் குவிந்துள்ள சகசிரதளம் முத்தைப் போல ஒளி வீசும். அதைக் கண்டு இனிமை தரும் காம வாயு அதோ முகத்திலிருந்து திசை மாறி நீரோட்டம் போல மேலே சென்று சகசிரதளத்தை அடையும்.


#1147. நம்பனை நோக்கி நவில்வது என்ன?


அம்பு அன்ன கண்ணி, அரிவை, மனோன்மணி,
கொம்பு அன்ன நுண் இடைக் கோதை, குலவிய
செம்பொன் செய் யாக்கை செறிகமழ், நாள்தொறும்
நம்பனை நோக்கி நவிலுகின் றாளே.


அம்பைப் போன்ற கண்களையும், கொம்பைப் போன்ற மெலிந்த இடையையும் கொண்டவள் மனோன்மணி.அவள் செம்பொன் நிற மேனிச் சிவனிடம் அரிய உயிர்களுக்கு இன்பம் தரும் அரிய மறையை நாள்தோறும் நவிலுகின்றாள்.


#1148. அண்டம் முழுதும் நிற்பாள்


நவிலும் பெருந்தெய்வம் நான்மறைச் சக்தி
துகில்உடை ஆடை, நிலம்பொதி பாதம்,
அகிலமும் அண்ட முழுதும் செம்மாந்தும்
புகலும் சோதி புனைய நிற்பாளே.


புகழ்ந்து பேசப்படும் சக்தி பெருந்தெய்வம் ஆவாள். பிரணவத்தில் விளங்கும் இன்பத்தைத் தருவாள். அவள் உடுக்கும் ஆடை பவளம் போன்ற செவ்வொளி. அவள் பாதங்கள் பாதாளம் வரை பதியும். அண்டங்களைக் கடந்து ஒளி வீசுகின்ற கதிரவன், சந்திரன், அக்கினி என்னும் முச்சுடர்களை அவள் புனைந்து நிற்பாள்.


#1149. போற்றுவீர் இறையொரு பாகத்தினளை!


புனைய வல்லாள் புவனத்தி திறை எங்கள்
வனைய வல்லாள் அண்ட கோடிகள் உள்ளே
புனைய வல்லாள் மண்டலத்து ஒளி தன்னைப்
புனைய வல்லாளையும் போற்றி என்பேனே.

தன் மேனியின் ஒரு பாதியில் புவனத்து இறைவனைப் புனைய வல்லவள் அவள்.
அண்டங்களின் உள்ளே தன் சங்கற்ப சக்தியினால் மாற்றங்களைச் செய்ய வல்லவள் அவள்.
தன்னிடம் அண்டங்களின் அனைத்து ஒளியையும் ஒருசேரப் பெற்றுள்ளாள் அவள்.
அனைத்தையும் புனையும் ஆற்றல் படைத்த அவளை நான் போற்றுகின்றேன்.




 
#1150 to #1154

#1150. கூற்றுவனை வெல்லலாம்

போற்றி என்பேன் புவனாதிபதி அம்மை என்
ஆற்றலுள் நிற்கும் அருந்தவப் பெண் பிள்ளை,
சீற்றம் கடிந்த திருநுதல் சேயிழை
கூற்றம் துரக்கின்ற கொள்பைந் தொடியே.


அந்த புவனாதிபதி அம்மையை நான் அன்புடன் போற்றுவேன். என் அருந்தவத்தின் ஆற்றலுள் நிற்கும் பெண் அவள். என் மனத்தின் சினத்தை மாற்றியவள் அவள். சிற்றம்பலத்துள் விளங்கும் சொவ்வொளி மயமானவள் அவள். கூற்றுவனை விரட்டும் திறமை படைத்தவள் அவள்.


#1151. ஆதிப் பரம்பொருள் அவளே


தொடி ஆர் தடக்கை சுகோதய சுந்தரி
வடிவு ஆர் திரிபுரை யாம் மங்கை, சங்கைச்
செடி ஆர் வினை கெடச் சேர்வரை என்றென்
அடியார் வினை கெடுத்து ஆதியும் ஆமே.


சுழுமுனையில் நாதமாக விளங்கி இன்பத்தைத் தரும் அழகிய பெண் அவள். வடிவழகு படைத்த திரிபுரை என்னும் இனிய மங்கை அவள். கங்கையாற்றைப் போலப் பெருகுகின்ற தீவினைகளைப் போக்கும் வழியினைக் கூறுபவள் அவள். அடியார்களின் வினைகளைப் போக்கும் ஆதி சக்தியும் அவள்.


#1152. மெல்லியலாள் மனம் புகுந்தாள்


மெல்லிசைப் பாவை, வியோமத்தின் மென்கொடி,
பல்லிசைப் பாவை, பயன்தரு பைங்கொடி,
புல்லிசைப் பாவையைப் போதந் துரந்திட்டு
வல்லிசைப் பாவை மனம்புகுந் தாளே
.


சக்தி நுட்பமான நாதத்தில் விளங்குகின்றவள். அவள் பராகாசதில் உள்ள மெல்லிய ஒளி அணுக்களால் ஆன மென் கொடி. எல்லோராலும் புகழப்படுபவள். அடியவர்களின் பக்குவத்துக்கு ஏற்பப் பயன்களைத் தருபவள். அற்பமான புகழ் மொழிகளில் உள்ள விருப்பத்தைப் போக்கி, வலிமை மிகுந்த நாதமயமான பராசக்தி என் உள்ளதில் புகுந்தாள்.


#1153. படைப்பவள் பராசக்தி


தாவித்த அப்பொருள் தான் அவன்; எம் இறை;
பாவித்து உலகம் படைக்கின்ற காலத்து,
மேவிப் பராசக்தி மேலொடு கீழ்தொடர்ந்து
ஆவிக்கும், அப்பொருள்தான் அது தானே.


அவள் அருளால் தாபிக்கப்பட்டவன் தான் என் இறைவன் சிவன்.
சங்கற்பத்தால் அவள் உலகைப் படைக்கின்ற போது அவள் மேலும் கீழுமாகப் பரவுகின்றாள். தானே அப்பொருளாகித் தானே அதற்கு உயிரையும் தருகின்றாள்.


#1154. திரிபுரையை வழிபடுங்கள்


அதுஇது என்பர் அவனை அறியார்
கதிவர நின்றது ஓர் காரணம் காணார்
மதுவிரி பூங்குழல், மாமங்கை நங்கை
திதம்அது உன்னார்கள் தேர்ந்துஅறி யாரே.


சிவத்தின் பெருமையை அறியாதவர்கள் அது, இது என்று சென்று பலவேறு தெய்வங்களை வழிபடுவார்கள். முத்தியைத் தரும் மூலநாதன் சிவன் என்பதை அவர்கள் அறியார். தேன் சிந்தும் மலர்களை அணிந்த அம்மையின் ( குழலை நிகர்த்த சித்திரணி என்னும் நாடியில் விளங்குகின்ற அம்மையின்) அருளால் இது நிகழ்கின்றது என்று அவர்கள் அறிய மாட்டார்கள். அவர்கள் தெளிவினைச் சிறிதும் பெறாதவர்கள் ஆவர்.




 
8. ஆதாரம், ஆதேயம்

8. ஆதாரம், ஆதேயம்

திரிபுடி என்பது நெருங்கிய தொடர்புடைய மூன்று சொற்களாகும்.
ஆதாரம், ஆதேயம், தாரணம் என்பவை ஒரு திரிபுடி

ஆதாரம் = தாங்கும் இடம்
ஆதேயம் = தாங்கப் படும் பொருள்
தாரணம் = தாங்கும் சக்தி

சக்தி தேவியே ஆதாரமாகவும், ஆதேயமாகவும் விளங்குகின்றாள்.

#1155 to #1159

#1155. சக்தியே ஆதாரங்கள் ஆவாள்

நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறு

தான்இதழ் ஆனவை நாற்பது நால் உள
பால்இதழ் ஆனவள் பங்கயம் மூலமாய்த்
தான்இதழ் ஆகித் தரித்திருந் தாளே.

நான்கு இதழ்த் தாமரை ஆகிய மூலாதாரத்துக்கும், ஆறாவது ஆதாரமாகிய ஆக்ஞைக்கும் இடையே தொண்ணூறு நரம்புகளல் செயல்படுகின்றன. சுவாதிட்டானம் (6 இதழ்கள்); மணிபூரகம் ( 10 இதழ்கள்); அனாகதம் ( 12 இதழ்கள்)விசுத்தி ( 16 இதழ்கள்) என இவ்விரண்டு ஆதாரங்களுக்கு இடையே உள்ள நான்கு ஆதாரங்களில் மேலும் நாற்பத்து நான்கு இதழ்கள் உள்ளன. ஆக்ஞைச் சக்கரத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் இருப்பவள் சக்திதேவி. உடலின் மற்ற ஆதாரங்களைத் தாங்குபவளும் அவளே! அவற்றில் விளங்குபவளும் அவளே!

உடலில் தொண்ணூறு உணர்வு சக்திகள் உள்ளன. நாம் ஒரு செயல் புரிவதும், புரிந்த செயலை அறிவதும் இந்த உணர்வுகளாலேயே. சீவன் ஆக்ஞைச் சக்கரத்தில் உள்ளபோது இந்த உணர்வுகள் பணி புரியும். ஆக்ஞையில் இரண்டு உணர்வுகளும் மற்ற ஆதாரங்களில் 88 உணர்வுகளும் அமையும்.


#1156. மாது நல்லாள் நம்மை இயக்குவாள்


தரித்திருந் தாள்அவள் தன் ஒளி நோக்கி,
விரித்திருந் தாள்அவள் வேதப் பொருளைக்
குறித்திருந் தாள் அவள் கூறிய ஐந்து
மறித்திருந்தாள் அவள் மாது நல்லாளே.


தன் ஆளுமையில் உள்ள ஆறு ஆதாரங்களின் அறிவை அறிந்து கொள்வதற்காகத் தேவி அவற்றைத் தன் திரு மேனியிலே தரித்துக்கொண்டு இருக்கின்றாள். அவள் தன் அறிவைச் செயல்படுத்த உடலில் மூலாதாரம் வரையில் நரம்புகளை வலை போல விரித்திருக்கொண்டு இருக்கின்றாள். அவள் கழுத்துக்குக் கீழே உள்ள ஐந்து சக்கரங்களின் இயக்கத்தைக் கவனித்துக் குறித்துக் கொண்டு இருக்கின்றாள். யோகியர்களின் உடலில் இவை ஐந்தும் செயல் படாமல் அவற்றை மறித்துத் தடுத்துக் கொண்டு இருக்கின்றாள்.

யோகியரின் நோக்கம் விந்துவும், நாதமும். அதனால் அவர்களுக்குக் கண்டத்துக்குக் கீழே நிகழும் மற்ற செயல்களின் அவசியம் இல்லை.


#1157. வேதனைகள் தீர்ப்பாள்


மாதுநல் லாளு மணாள னிருந்திடப்

பாதிநல் லாளும் பகவனு மானது
சோதிநல் லாளைத் துணைப் பெய்ய வல்லிரேல்
வேதனை தீர்தரும் வெள்ளடை யாமே.

கண்டத்துக்குக் கீழே நிகழ்வதை அறியும் ஆவல் இல்லாத போது , சக்தி தேவிய சிற்சக்தியாகச் சிவனுக்குச் சமமான அறிவுடன் விளங்குவாள். இங்ஙனம் சமமான நிலையில் இறைவனும் இறைவியும் இருக்கும் போது ஒளி வடிவான அன்னையைத் தியானிக்க வேண்டும். அப்போது செயல்வழிச் செல்லும் சக்தி நிலை கெடும். துன்பங்கள் மறையும். சாதகன் உடலைத் தாண்டி விட்டு வெளியில் வந்து விளங்குவான்.

#1158. சக்தியின் தன்மை வந்து பொருந்தும்


வெள்ளடை யானிரு மாமிகு மாமலர்க்

கள்ளடை யாரக் கமழ்குழ லார்மனம்
அள்ளடை யானும் வகைத்திற மாய்நின்ற
பெண்ணொரு பாகம் பிறவி பெண்ணாமே

வெளி வானத்தில் சிவனுடன் பொருந்தியவன்; சகசிரதளத்தில் உள்ள பேரின்பத்தை அனுபவித்தவன்; மணம் மிகுந்த மலர் சூடும் பெண்களின் இதயத்தில் இடம் பெறாதவன்; சக்தி தேவியை வழிபடும் போது தானும் சக்திதேவியின் பெண் தன்மை அடைவான்.

#1159. பேரின்பத்தில் பேச்சறும்!


பெண்ணொரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதைமை

பெண்ணிடை ஆணும் பிறந்து கிடந்தது
பெண்ணிடை ஆணென் பிறப்பறிந் தீர்க்கின்ற
பெண்ணுடை ஆணிடைப் பேச்சற்ற வாறே.

ஒரு பெண் ஆசை கொண்டு மற்றொரு பெண்ணைச் சேர்வது அறியாமை. ஆனால் பராசக்திக்குப பெண் தன்மையும் உண்டு; ஆண் தன்மையுமுண்டு. சக்தி இங்ஙனம் இரண்டுமாக இருப்பானேன்?

சாதகனைக் கவர்ந்திடும் போது, சிவன் ஆண் தன்மை கெட்டுச் சக்தி மயமாகப் பெண் தன்மை பெறுவான். சக்தியைத் தொழுபவன் சக்தியின் பெண் தன்மை பெறுவான். பின்னர் சிவத்துடன் கூடுவான்.

சிற்றின்பத்தில் பேச்சற்று இருப்பது போலவே பேரின்பத்திலும் பேச்சு அறும்!




 
#1160 to #1164

#1160. சக்தி மன மகிழ்ச்சி தருவாள்

பேச்சுஅற்ற நற்பொருள், காணும் பெருந்தகை,
மாச்சு அற்ற சோதி, மனோன்மணி மங்கையாம்
காச்சு அற்ற சோதிக் கடவுளுடன் புணர்ந்து,
ஆச்செற்றுஎ னுள் புகுந்து ஆலிக்கும் தானே.


சொற்களைக் கடந்த நற்பொருள்; காண்பதற்கரிய பெருந்தகை; மாசற்ற சோதி; மனோன்மணியாகிய மங்கை; சினம் இல்லாத சோதிக் கடவுடன் கூடி என்னுள்ளம் புகுந்தாள். எனக்கு மன மகிழ்ச்சியைத் தந்தாள்.

#1161. சிவசக்தியர் ஐந்தொழில் புரிவர்


ஆலிக்கும் கன்னி யரிவை மனோன்மணி
பாலித் துலகிற் பரந்து பெண்ணாகும்
வேலைத் தலைவியை வேத முதல்வியை
ஆலித் தொருவன் உகந்து நின்றானே.

வாலையாக மூலாதாரத்தில் இருந்து கொண்டு சீவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவாள் சக்தி.
சிவத்தினிடமிருந்து வேறாக இருந்து கொண்டு உலகினை விளக்குவாள் பார்வதி தேவி.
உலகில் எல்லா உயிர்களையும் காத்துப் பரந்த பெண் வடிவம் ஆவாள் மனோன்மணி.
ஐந்தொழிகளின் தலைவி, வேதத்தின் முதல்வியாகிய அவளுக்கு மகிழ்வூட்ட சிவன் விரும்பி நின்றான்.

#1162. சிவசக்தியர் உயிர்களைக் காப்பர்


உகந்துநின் றானம்பி யொண்ணுதற் கண்ணோடு
உகந்துநின் றாநம் முழைபுக நோக்கி
உகந்துநின் றானிவ் வுலகங்க ளெல்லாம்
உகந்துநின் றானவ டன்றோ டொகுத்தே.


சிவபெருமான் நெற்றிக் கண்ணுடன் மகிழ்ச்சியாக நின்றான். அவன் சீவர்களிடம் எழுந்தருள விழைந்தான். அதனால் சிவன் எல்லா உலகங்களையும் விரும்பி நின்றான். போகியாகிச் சக்தி தேவியின் தோளைத் தழுவியபடி நின்றான்.

#1163. பேரின்பம் சொல்ல இயலாதது


குத்து முலைச்சி குழைந்த மருங்கினள்
துத்தி விரித்த சுணங்கின் தூமொழி
புத்தகச் சீறடிப் பாவை புணர்வினைத்
தொத்த கருத்துச் சொல்லகில் லேனே.

பெருத்த முலைகளை உடையவள்; மென்மையான இடையை உடையவள்; புள்ளிகள் பரவிய தேமலை உடையவள்; தூய மொழி பேசுபவள்; மயில் தோகை போன்ற மெல்லிய அடிகளை உடையவள். இத்தகைய சக்தியை அடைந்ததால் விளைந்த இன்பத்தை எடுத்துக் கூற இயலாது.

#1164. மல்லவொண்ணாத மனோன்மணி


சொல்லவொண் ணாத அழற்பொதி மண்டலம்
செல்லவொண் ணாது திகைத்தங் கிருப்பர்கள்
வெல்லவொண் ணாத வினைத்தனி நாயகி
மல்லவொண் ணாத மனோன்மணி தானே.


தீ மண்டலம் விளங்கும் காமபீடத்தின் வலிமையை வெறும் வாய் வார்த்தைகளால் உரைக்க இயலாது. செல்ல இயலாமலும், அளந்து அறிய இயலாமலும், மக்கள் திகைத்து அங்கேயே இருப்பார்கள். வினைப் பயன்களை வெல்ல அரிதாகும்படிச் செய்கின்றாள் ஒப்பில்லாத தலைவியாகிய சக்தி. ஆற்றல் மிகுந்த மனோன்மணியைச் செயலாற்றாத வண்ணம் பந்தித்து நிறுத்தவும் இயலாது.
 
#1165 to #1169

#1165. ஐம்பெரும் பூதங்கள் அவளே

தானே இருநிலந் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும் அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்
தானே வடவரைத் தண்கடற் கண்ணே.


மண்ணுலகத்தைத் தாங்குபவள் மனோன்மணி.
விண்ணாய் நிற்பவளும் மனோன்மணி ஆவாள்.
அக்கினி, கதிரவன், திங்கள் இவைகளும் அவளே.
அருள் மழை பொழியும் சக்தி தேவியும் அவளே.
சிரசின் வடக்கில் இருக்கும் வடவரையும் அவளே.
குளிர்ந்த கடலில் உள்ள வடவாக்கினியும் அவளே.

#1166. தேவர்களைக் காணலாம்


கண்ணுடை யாளைக் கலந்தங் கிருந்தவர்
மண்ணுடை யாரை மனித்தரில் கூட்டொணாப்
பண்ணுடை யார்கள் பதைப்பற்றி ருந்தவர்
விண்ணுடை யார்களை மேலுறக் கண்டே.


நெற்றிக் கண்ணை உடைய சக்தியுடன் கூடி மதி மண்டலத்தில் இருந்தவர்கள் ஞானியர். அவர்கள் மண்ணுலகத்தோர் ஆயினும் தெய்வத் தன்மை பெற்றவர் ஆவர். அவர்களால் விண்ணுலகவாசிகளாகிய தேவர்களைக் காண இயலும்.

#1167. பலரும் தொழுது எழுவர்


கண்டெண் திசையும் கலந்து வரும்கன்னி
பண்டெண் திசையும் பராசத்தி யாய்நிற்கும்
விண்டெண் டிசையும் விரைமலர் கைக்கொண்டு
தொண்டெண் டிசையுந் தொழ நின்ற கன்னியே.


குண்டலினி சக்தி வாலையாக எல்லா திசைகளிலும் பரந்து நிற்பாள். சீவனின் உடல் உருவாகும் முன்னர் இவளே பராசக்தியாக எல்லாத் திசைகளிலும் நிறைந்து இருந்தவள். கீழே இருந்த குண்டலினி சக்தி மேலே எழும்பிச் சென்று சகசிரதளத்தை அடையும் போது, அந்த சீவனை எல்லாத் திசைகளிலும் உள்ளவர்கள் தொழுது எழும் வண்ணம் மாற்றி அமைத்து விடுவாள்.

#1168. பதினாறு கலைகள் பராசக்தியின் நிலையம்


கன்னி யொளியென நின்றவிச் சந்திரன்
மன்னி இருக்கின்ற மாளிகை செந்நிறம்
சென்னி இருப்பிடம் சேர்பதி னாறுடன்
பன்னி யிருப்பப் பராசத்தி யாமே.

செந்நிறம் வாய்ந்த சுவாதிஷ்டானத்தில் பிறைத் திங்கள் போலப் பொருந்தி இருக்கும் ஒளியே, சிரசை அடையும் போது பதினாறு கலைகளுடன் பூரணம் ஆகிவிடும். இதுவே பராசக்தி இருக்கும் நிலையம் ஆகும்.

#1169. சக்தியின் பலச் சிறப்புகள்


பராசத்தி என்றென்று பல்வகை யாலும்
தராசத்தி யான தலைப்பிர மாணி
இராசத்தி யாமள வாகமத்த ளாகுங்
குராசத்தி கோலம் பலவுணர்ந் தேனே.


பராசக்தி பலவகையாலும் எல்லாவற்றையும் எப்போதும் தாங்கி நிற்பவள்; முதன்மையான பிரமாணியாகத் திகழ்பவள் சக்தி தேவி; இராசக்தியாக உருத்திர யாமளம் என்னும் ஆகமத்தால் விளக்கப்படுபவள்; குரு வடிவானவள். இங்ஙனம் பல சிறப்புகள் பொருந்தியவள் சக்தி தேவி.
 

#1170 to #1174

#1170. பன்னிரு யோகினி சக்திகள்

உணர்ந்த உலகு ஏழையும் யோகினி சக்தி
உணர்ந்து, உயிராய் நிற்கும், உள்ளத்தின் ஈசன்
புணர்ந்து ஒரு காலத்துப் போகம் அது ஆதி,
இணைந்து, பரம் என்று இசைந்திது தானே
.

உடலின் ஏழு ஆதாரங்களையும் உணர்ந்து கொண்டு, அவற்றை உயிர்களுக்கு உணர்த்துபவர் பன்னிரு யோகினி சக்தியர் .உள்ளத்தில் உள்ள ஈசன் இவர்களைப் புணர்ந்து பரம் என்னும் தன்மை அடைந்தான். இந்த சக்தியரின் தொகுப்பு பராசக்தியானது.

பன்னிரு யோகினியர் :
(1). வித்தியா, (2). ரேசிகா, (3). மோசிகா, (4). அமிர்தா, (5). தீபிகா, (6). ஞானா, (7). ஆபியாயதி, (8). வியாபினீ, (9). மேதா, (10). வியோமா, (11). சித்திரூபா, (12). லக்ஷ்மி


#1171. யோகமும், போகமும் தருபவள் சக்தி


இதுஅப் பெருந்தகை எம்பெரு மானும்
பொதுஅக் கலவியும் போகமும் ஆகி,
மதுவக் குழலி மனோன்மணி மங்கை
அது அக் கலவியுள் ஆயுழி யோகமே.


சக்தியும், சிவனும் வான் கலப்பில் ஒன்று சேருகின்றனர். அதனால் அவர்கள் கலவியும், அதில் விளையும் இன்பமும் போல ஒன்றாக விளங்குகின்றனர். இன்பம் பொருந்தியுள்ள சுழுமுனையில் விளங்கும் தேவியே அந்த யோகமும் ஆவாள்; அதில் விளையும் போகமும் ஆவாள்.

#1172. ஒளியே அவளது பீடம் ஆகும்


யோகநற் சத்தி யொளிபீடத் தானாகும்
யோகநற் சத்தி யொளிமுகம் தெற்காகும்
யோகநற் சக்தி யுதர நடுவாகும்
யோகநற் சக்திதாள் உத்தரந் தேரே.

புருவ மத்தியில் உள்ள ஒளியைத் தன் பீடமாகக் கொள்வாள் யோகத்தை விளக்கும் சக்தி தேவி. யோக நற்சக்தியின் ஒளிவீசும் முகம் வலக்கண் என்னும் நம் முகத்தின் தென் பகுதியாகும். நாபிப் பிரதேசத்தில் உள்ள மணிபூரகச் சக்கரத்தில் யோக நற்சக்தி கதிரவனாக விளங்குவாள்.
யோக நற்சக்தி திங்களாக விளங்குவது முகத்தின் வடக்குப் பகுதியாகிய இடக் கண் ஆகும்.

#1173. சிவாக்கினியும், குண்டலினி சக்தியும்


தேர்ந்துஎழும் மேலாம் சிவன் அங்கி யோடுஉற,
வார்ந்துஎழும் மாயையும் அந்தம் அது ஆய் நிற்கும்,
ஓர்ந்துஎழு விந்துவும் நாதமும் ஓங்கிட,
கூர்ந்துஎழு கின்றாள் கோல்வளை தானே.

சிவாக்கினியைத் தூண்டி, அதை மேல் நோக்கிச் செலுத்தி, ஒளி பீடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். அப்போது ஒழுகும் தன்மையுடைய விந்துவை வென்றதால் காமஜயம் ஏற்படும். ஆராய்ந்து அறியவேண்டிய விந்துவும் நாதமும் பெருகும். சுழுமுனை நாடியில் வளைந்து உயரே செல்லும் இயல்புடைய குண்டலினி சக்தியும் முளைத்து எழுவாள்.

#1174. பரவாதனை


தான் ஆனவாறு எட்டதாம் பறைக்குள்; மிசை
தான் ஆனவாறும் ஈர்ஏழும் சமகலை;
தான் ஆன விந்து சகமே, பரம் எனும்
தான் ஆம்; பரவாதனை எனத் தக்கதே.

ஆறு ஆதாரங்களிலும் விளங்குபவள் பராசக்தி. பதினாறு கலைகள் பொருந்தி விளங்குபவள் பராசக்தி. பதினாறு கலைகளில் ஒன்பதாம் கலை வரை அதிகம் விரிவு பெறாதவை. அவை சிரசுக்குள் தொழிற்படும் கலைகள்.
கலை வடிவமாக அமைந்த சக்தி உலகத்திலும் கலந்து இருப்பாள். அவளே பரத்திலும் கலந்து இருப்பாள். இந்த விதமாக அவள் இரண்டுடனும் கலந்து இருக்கும் நிலையே பரவாதனை எனப்படும்.



 
#1175 to #1179

#1175. வான மண்டலம் விளங்கும்

தக்க பராவித்தை தான் இருபானேழில்
தக்கு எழும் ஓர் வுத்திரம் சொல்லச் சொல்லவே
மிக்கிடும் எண் சக்தி, வெண்ணிற முக்கண்ணி
தொக்க கதையோடு தொன்முத்திரை யாளே.

தலையைச் சுற்றிப் பன்னிரண்டு ராசிகள் உள்ளன. அவற்றில் பராசக்தியே இருபத்தேழு விண்மீன்களாக விளங்குவதை அறிந்து கொள்ள வேண்டும். தக்க மந்திரங்களைச் சொல்லி வந்தால் முதலில் எட்டு சக்தியரும் வெளிப்படுவர். பின்னர் அவர்களோடு பராசக்தியும் வெளிப்பட்டு அருள்வாள். தலைச் சுற்றியுள்ள ராசி வட்டம் பூர்த்தியானால் வான மண்டலம் நன்கு விளங்கும்.

#1176. சிற்றின்பமும் பேரின்பமும்


முத்திரை மூன்றில் முடிந்த மெய்ஞ் ஞானத்தள்
தத்துவ மாய் அல்ல ஆய சகலத்தள்
வைத்த பராபரன் ஆய பராபரை
சாதியம் ஆனந்த சத்தியும் கொங்கே.


கதிரவன் மண்டலம், திங்கள் மண்டலம், அக்கினி மண்டலம் என்னும்
மூன்றிலும் நிறைந்து இருப்பவள் பராசக்தி. அவள் அனைத்துத் தத்துவங்களாக விளங்குகின்றாள். அவள் தத்துவம் அல்லாத பொருட்களிலும் நிறைந்து விளங்குகின்றாள். பராபரனைத் தன்னுள் கொண்டவள் பராபரையாகிய பராசக்தி. அவன் சிற்றின்பமும் தரவல்லவள்; பேரின்பமும் தர வல்லவள்.

#1177. தகுதிக்கேற்பத் தயை புரிவாள்


கொங்கு ஈன்ற கொம்பின் குரும்பைக் குலாம் கன்னி
பொங்கிய குங்குமத்தோளி பொருந்தினள்
அங்குச பாசம் எனும் அகிலம் கனி
தங்கும் அவள் மனை தான்; அறிவாயே.


தேனைத் தருவது போல நாம் விரும்பும் பொருளைத் தரும் சக்தி வீணாத் தண்டில் பல வேறு சக்திகளுடன் கூட்டாகப் பொருந்தியுள்ளாள். அவள் குங்குமம் போன்ற செவ்வண்ணம் கொண்டவள். அங்குசமாக யோகியரின் ஐம்பொறிகளை அடக்கவும்; பாசமாக அஞ்ஞானிகளைப் பிணிக்கவும்; உதவுகின்ற அகிலம் அவள் விரும்பித் தங்கும் இடம் ஆகும்.

#1178. தாய், மகள், தாரம் அவளே.


வாயு மனமும் கடந்த மனோன்மணி
பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயு மறிவுங் கடந்த அரனுக்குத்
தாயும் மகளுநல் தாரமு மாமே.

சீவர்களின் மூச்சையும், மனதையும் கடந்து விளங்குபவள் மனோன்மணி. பல பேய்களையும், பூத கணங்களையும் தான் ஏவுகின்ற படைகளாகக் கொண்டவள். ஆராய்கின்ற அறிவைக் கடந்த சிவனுக்கு அவளே தாய், அவளே மகள் அவளே தாரம்!

சக்தி தத்துவத்திலிருந்து சாதாக்கிய தத்துவ வாசியாகிய சதாசிவன் தோன்றுவதால் சக்தி சிவனின் தாய் ஆகின்றாள். சிவத் தத்துவத்தில் இருந்து சக்தி தத்துவம் தோன்றுகின்றது. எனவே சக்தி சிவனின் மகள் ஆகின்றாள். சிவசக்தியர் ஒன்றாக உலகையும், உயிர்களையும் படைக்கின்றனர்.எனவே சக்தி சிவனின் தாரம் ஆகின்றாள்.


#1179. பாரளவாகிய புராதனி


தாரமும் ஆகுவள் தத்துவமாய் நிற்பள்
காரணி, காரியம் ஆகும் கலப்பினள்,
பூரண விந்து பொதிந்த புராதனி
பார் அளவாம் திசை பத்து உடையாளே.


மனோன்மணி சிவனுக்கு மனைவி ஆவாள். சக்தி தத்துவமாக இருந்து கொண்டு நாத விந்துக்களைத் தோற்றுவிப்பாள். சிவனுடன் சேர்ந்து அனைத்தையும் படைக்கும் போது காரணி ஆவாள். படைப்பின் போது பிரிந்து அவளே காரியம் ஆவாள். இங்ஙனம் காரண காரியம் என்னும் இரண்டும் கலந்தவள் அவள். விந்து சக்தி பொருந்தியுள்ள புராதனி அவள். பத்து திசைகளையும் தன் உடைமையாகக் கொண்டு பாரெங்கும் நிறைந்து நிற்பாள்.
 
#1180 to #1184

#1180. சகசிர தளத்தில் சக்தி தேவி

பத்து முகம் உடையாள் நம் பராசக்தி
வைத்தனள் ஆறு அங்கம், னாலுட தான் வேதம்
ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே
நித்தமாய் நின்றாள் எம் நேரிழைக் கூறே.


சக்தி பத்து முகங்களை உடையவள். நான்கு இதழ்த் தாமரை மூலாதாரத்தை நான்கு வேதங்களாகவும், ஆறு இதழ்த் தாமரை சுவாதிட்டானத்தை ஆறு அங்கங்களாகவும் அமைத்துள்ளாள். சகசிரதளத்தில் சிவனுடன் பொருந்துகையில் அவனுக்குச் சமமாக நிற்பாள். அவளே நிலையான பொருள். அவளே எம் தலைவி.

#1181. புருவ மத்தியில் திரிபுரை


கூறிய கன்னி, குலாய புருவத்தள்,
சீரியள் ஆய்உலகு ஏழும் திகழ்ந்தவள்,
ஆரிய நங்கை அமுத பயோதரி
பேருயிர் ஆளி பிறிவு அறுத்தாளே.


குண்டலினி சக்தி தன் சக்திக் கூட்டத்துடன் புருவ மத்தியில் விளங்குவாள். அவள் சீர்மை நிறைந்தவள். உலகு ஏழினும் நிறைந்தவள். மகிமை பொருந்திய மங்கை. அமுதம் ஊறும் முலைகளை உடையவள்; எண்ணற்ற உயிர்களின் மீது ஆளுமை கொண்டவள்; பிரிவே இல்லாமல் நமக்கு அருள் செய்த வண்ணம் இருப்பாள்.

#1182. சக்தி அறிவுக்கு அறிவானவள்


பிறிவு இன்றி நின்ற பெருந்தகைப் பேதை,
குறி ஒன்றி நின்றிடும் கோமளக் கொம்பு,
பொறி ஒன்றி நின்று புணர்ச்சி செய்து, ஆங்கே
அறிவி ஒன்றி நின்றனள் ஆருயி ருள்ளே.


பிரிவு இன்றிச் சிவனுடன் எப்போதும் விளங்கும் பெருமாட்டி. இவள் புருவ நடுவில் அழகிய கொம்பினைப் போலக் காட்சி தருவாள் மனம் ஒன்றித் தியானம் செய்பவர்களுக்கு. உயிர்களின் அறிவுக்குள் அறிவாய் பொருந்துவாள். உயிர்களின் அறிவுக்குள் அறிவாகக் கலந்து நிற்பாள்.

#1183. ஆசைகளை அழித்துவிடுவாள்


உள்ளத்தின் உள்ளே உடன் இருந்து ஐவர்தம்
கள்ளத்தை நீக்கிக், கலந்து உடனே புல்கிக்
கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்து
வள்ளல் தலிவி மருட்டிப் புரிந்தே.


வள்ளல் தன்மை நிறைந்தவள் அன்னை பராசக்தி. அவள் நம் உள்ளத்தில் தங்குவாள். அங்கு கள்ளத்தனம் செய்யும் ஐம்புலன்களை அடக்குவாள். உயிருடன் ஒன்றிவிடுவாள். தவ நெறியில் உள்ள இன்பத்தை நமக்குக் காட்டுவாள். அதில் மிகுந்த விருப்பத்தை ஏற்படுத்துவாள். அதன் மூலம் உலக ஆசைகளை அறவே ஒழித்து விடுவாள்.

#1184. மலரும் மணமும் போலச் சிவசக்தியர்


புரிந்து அருள் செய்கின்ற போக மாசத்தி
இருந்து அருள் செய்கின்ற இன்பம் அறியார்,
பொருந்தி இருந்த புதல்வி பூவண்ணத்து
இருந்த இலக்கில் இனிது இருந்தாளே.

சீவனின் மனத்துள் இருந்து கொண்டு, விருப்பத்துடன் அந்த உயிருக்கு இன்பத்தைத் தருபவள் போகத்தைத் தருபவளாகிய பராசக்தி. இந்த உண்மையைப் பலரும் அறியார். இந்த அழகிய பெண் மலரில் மணம் போலச் சிவத்தில் பொருந்தி இருக்கின்றாள். இனிதாக விளங்குகின்றாள்.




 
#1185 to #1189

#1185. தடுக்கும் எண்ணங்களை அகற்றுவாள்

இருந்தனள் ஏந்திழை என் உளம் மேவித்,
திருந்து புணர்ச்சியில் தேர்ந்து உணர்ந்து, உன்னி,
நிரந்தரம் ஆகிய நிரதி சயமொடு
பொருந்த, இலக்கில் புணர்ச்சி அதுவே.

விருப்பத்துடன் என் உள்ளத்தைத் தன் இருப்பிடமாகக் கொண்டாள் சக்தி அன்னை. அவளை எண்ணி, ஆராய்ந்து, உணர்ந்து, அறிந்து, தெளிந்து அவளுடன் நிரந்தரமாக நிரதிசயத்துடன் பொருந்தி இருப்பதே சக்தி கலப்பு என்னும் உயர்ந்த நிலையாகும்.


#1186. ஊழையும் உப்பக்கம் காணலாம்


அதுவிது என்னும் அவாவினை நீக்கித்
துதியது செய்து சுழியுற நோக்கில்
விதியது தன்னையும் வென்றிட லாகும்
மதிமல ராள் சொன்ன மண்டல மூன்றே.


“அது வேண்டும், இது வேண்டும்” என்று உலகப் பொருட்களின் மீது கொண்டுள்ள அவாவினை அகற்ற வேண்டும். அவளைப் புகழ்ந்து போற்ற வேண்டும். தலை உச்சியில் உள்ள தொளையாகிய பிரமரந்திரத்தின் மீது தியானம் செய்ய வேண்டும். இங்ஙனம் செய்பவர் விதியையும், வினைகளையும் வென்று விடலாம். மதி மண்டலத்தில் உறையும் அன்னை சொன்ன மண்டலங்கள் மூன்று என்று அறிவீர்.


#1187. மோகினியின் மூன்று மண்டலங்கள்


மூன்றுள மண்டலம் மோகினி சேர்விடம்
ஏன்றுள வீரா றெழுகலை யுச்சியில்
தோன்று மிலக்குற வாகுதன் மாமாயை
ஏன்றன ளேழிரண் டிந்துவொ டீறே.

மோகினி உறையும் மண்டலங்கள் அக்கினி, கதிரவன் திங்கள் என்ற மூன்றாகும். பன்னிரண்டு கலைகள் கொண்ட கதிரவ மண்டலத்தின் உச்சியில் பொருந்துதல் சுத்த மாயையாகும். நன்மைகளை நல்குகின்ற நாயகி அப்போது திங்கள் மண்டலத்தில் விளங்குவாள்.


அக்கினி மண்டலம் தாமச குணம் நிறைந்தது.

கதிரவன் மண்டலம் ராஜச குணம் நிறைந்தது.

திங்கள் மண்டலம் சத்துவ குணம் நிறைந்தது.

சந்திர மண்டலம் முழுமை அடையும் போது

நாதத்தைக் கடந்த நாதாந்தம் விளங்கும்.


#1188. சிந்தனயில் நாதம் தோன்றும்


இந்துவினின்று எழு நாதம், இரவி போல்
வந்தபின் நாக்கில், மதித்து எழும் கண்டத்தில்
உந்திய சோதி இதயத்து எழும் ஒலி
இந்துவின்மேல் உற்ற ஈறு அது தானே.


ஒளி மயமான அநாகதத்தில் எழும் இதயத் துடிப்பின் ஒலி மேல் நோக்கிச் செல்லும், கழுத்தினின்று மேல் நோக்கி எழும்பும். பிடரியில் உள்ள சிறு மூளைப் பகுதியில் பரவிப் படரும். அது இறுதியாகச் சந்திர கலையைச் சென்று அடையும். திங்கள் மண்டலத்தில் எழும் நாதம் மலை போல ஓங்கி விளங்கும்.


#1189. ஆதியும் அவளே! அந்தமும் அவளே!


ஈறுஅது தான் முதல் எண் இரண்டு ஆயிரம்
மாறுதல் இன்றி, மனோவச மாய் எழில்
தூறுஅது செய்யும் சுகந்தச் சுழி அது;
பேறுஅது செய்து பிறந்து இருந் தாளே.


படைப்புக்கு முதன்மையாக அமைவது திங்கள் கலைகளின் பதினாறின் முடிவு ஆகும். அந்த நிலையில் ஆயிரம் மாற்றங்களை அடையாமல் மனம் சம நிலையில் இருக்கும். மனம் முழுதுமாகக் சீவனின் கட்டுக்குள் அடங்கி வசப்படும். எழிலும், மணமும் நிறைந்த இடம் போலாகிவிடும். சக்தி அதையே ஒரு பேறாகக் கருதி அதில் இனிதாக விளங்குவாள்.




 
#1190 to #1194

#1190. சந்திர கலையில் சக்தி தேவி

இருந்தனள் ஏந்திழை, ஈறு அது இல் ஆகத்
திருந்திய ஆனந்தம், செந்நெறி நண்ணிப்
பொருந்து புவனங்கள் போற்றி செய்து ஏத்தி,
வருந்த, இருந்தனள் மங்கை நல்லாளே.


சக்தி தேவி சந்திர கலையின் இறுதியில் விளங்குகின்றாள். சிறந்த இன்பம் பெறுவதற்காக நன்னெறியில் நடந்தும், அவள் புகழைப் போற்றியும், மக்கள் ஏங்கி இருக்கும் போது அவள் நன்மைகள் செய்யும் சக்தியாக அங்கே அமைந்து இருக்கின்றாள்.


#1191. ஐந்தொழில் புரிபவள் சக்தி


மங்கையும், மாரனும் தம்மோடு கூடி நின்று
அங்குலி கூட்டி, அகம் புறம் பார்த்தனர்
கொங்கை நல்லாளும் குமாரர்கள் ஐவரும்
தங்களின் மேவிச் சடங்கு செய்தாரே.

சக்தியும், சிவனும் பொருந்தி நின்றனர். பிரணவத்தின் உச்சியிலிருந்து கொண்டு சீவர்களைப் படைக்க விரும்பினர். அவர்கள் சீவர்களின் உடம்புக்குத் தேவையானவை எவை என்றும், உயிருக்குத் தேவையானவை எவை என்றும் முதலில் கணக்கிட்டனர். அழகிய தனங்களை உடைய அன்னையும், அவளது ஐந்து குமாரர்களும் அதன் பின்னர் படைத்தல் என்னும் தொழிலைச் செய்தனர்.


#1192. அகவழிபாடும், புறவழிபாடும்


சடங்குஅது செய்து தவம் புரிவார்கள்
கடம்தனில் உள்ளே கருதுவா ராகில்
தொடர்ந்து எழுசொதி துளை வழி ஏறி,
அடங்கிடும் அன்பினது ஆயிழை பாலே.


உடலால் செய்யும் சடங்குகளால் புற வழிபாடு செய்வதைக் காட்டிலும், அகவழிபாடாகிய தியானதத்தைத் தொடர்ந்து செய்து வரவேண்டும். அப்போது மூலாதாரத்தில் மூண்டு எழும் மூல அக்கினி, உடலில் உள்ள ஆறு ஆதரங்களையும் கடந்து மேலே சென்று சக்தி தேவியுடன் பொருந்தி நிற்கும்.


#1193. ஆறு ஆதாரங்களிலும் ஒளி


பாலித்து இருக்கும் பனி மலர் ஆறினும்
ஆலித்து இருக்கும் அவற்றின் அகம் படி
சீலத்தை நீக்கித் திகழ்ந்து எழும் மந்திரம்
மூலத்து மேலது முத்துஅது ஆமே.


மூலத்தில் உள்ள முத்தைப் போன்ற வீரியம் வற்றி ஒளியாக மாறவேண்டும். அப்போது உடலின் ஆறு ஆதாரங்களிலும் பொருந்திய திங்கள் கலை தன் ஆற்றலை நன்கு வெளிப்படுத்தும். இதற்கு பிரணவம் உதவும். இது இன்பத்தைத் தரும்.


#1194. உள்ளக் கோவிலில் குடி கொண்டாள்


முத்து வதனத்தி முகந்தொறு முக்கண்ணி
சத்தி சதிரி சகளி சடாதரி
பத்துக் கரத்தி பராபரன் பைந்தொடி
வித்தகி என்னுள்ள மேவி நின்றாளே.


முத்துப் போன்ற சுக்கில நாடியில் முகம் உடையவள், கதிரவன், திங்கள் , அக்கினி என்னும் முக்கண்களை உடையவள்; ஆற்றல் உடையவள்; திறமை உடையவள்; சகளி; சடாதரி; பத்து நாடிகளிலும் செயல் புரிபவள்; மேலான சிவனின் நாயகி; இத்தகைய வித்தகி என் மனத்தைத் தன் கோவிலாகக் கருதிக் குடி கொண்டாள்.




 
#1195 to #1199

#1195. ஓவினும் மேவுவாள் சக்தி

மேவிய மண்டலம் மூன்றுடன் கீழ் எரி

தாவிய நற்பதத் தண்மதி அங்கதிர்
மூவரும் கூடி முதல்வியாய் முன்னிற்பர்
ஓவினும் மேவிடும் உள்ளொளி ஆமே.


தான் பொருந்தியுள்ள மூன்று மண்டலங்களில் சக்தி தேவி தீ மண்டலத்தில் திருவடிகளை உடையவள். கதிர் மண்டலத்தில் உடலை உடையவள்; திங்கள் மணடலத்தில் முகத்தை உடையவள். அவள் மூன்று மண்டலங்களின் தலைவியாக இருப்பவள். நாம் விலக்கினாலும் விலகிச் செல்லாமல் நம்முடன் மேவி நிற்பாள். உள்ளத்தின் விளங்கும் உள்ளொளியாக நம்மை விட்டு விலகாமல் இருப்பாள்.


#1196. தேவி இன்பம் அருள்வாள்


உள்ளொளி, மூவிரண்டு ஓங்கிய அங்கங்கள்

வெள்ளொளி அங்கியின் மேவி அவரொடும்
கள் அவிழ் கோதை கலந்து உடனே நிற்கும்
கொள்ள விசுத்திக் கொடி அமுது ஆமே.


குண்டலினி சக்தி உடலின் உள்ளொளியாகும். இது ஆறு ஆதாரச் சக்கரங்களைக் கடந்து மேலே சென்று அங்கு வெள்ளொளியாகிய சிவத்துடன் பொருந்தி நிற்கும். அங்கே உடலில் அமுது விளையும். விசுத்திச் சக்கரத்தைத் தாண்டிய பிறகு அமுது விளைகின்ற அற்புதமான மண்டலம் தொடங்கும்.


#1197. இன்ப வடிவானவள் சக்தி


கொடியது இரேகை குருவருள் இருப்ப,

படியது வாருணைப் பைங்கழல் ஈசன்
வடிவு அது; ஆனந்தம் வந்து முறையே
இடும் முதல் ஆறங்கம் ஏந்திழை யாளே.


நடு நெற்றியிலிருந்து பிரமரந்திரம் என்னும் உச்சித் தொளை வரையில் உள்ளது சகசிரதளம். அதில் சதாசிவம் பரம குருவாக விளங்குவான். அங்கு தேவியும் தேவனும் கலந்து விளைவிப்பது ஆனந்தம் தரும் அமுதக்கள் ஆகும். பைங்கழல் ஈசனின் வடிவமே ஆனந்தம் ஆகும். மூலாதாரம் முதல் ஆறு ஆதாரங்களையும் தன் உடலாகக் கொண்ட சக்திதேவி ஆனந்தம் தரும் இன்ப வடிவானவள்.


#1198. பராசக்தியைப் பரவுபவர்கள்


எந்திழையாளும் இறைவர்கள் மூவரும்

காந்தாரம் ஆறும், கலைமுதல் ஈரெட்டும்
ஆந்த குளத்தியும் மந்திர ராயவும்
சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே.


குண்டலினி சக்தியும், மும்மூர்த்திகளும், அஞ்ஞானத்தின் வனங்களாகிய ஆறு ஆதாரங்களும், சந்திரகலை பதினாறும், சதாசிவனின் பத்தினியும், ஈசானவரும் போற்றிப் பரவிடப் பராசக்தி விளங்குவாள்.


#1199. ஆரவார பக்தி வேண்டாம்


சத்தியென் பாளொரு சாதகப் பெண்பிள்ளை

முத்திக்கு நாயகி யென்ப தறிகிலர்
பத்தியைப் பாழி லுகுத்தவப் பாவிகள்
கத்திய நாய்போற் கதறுகின் றாரே.


வாலை வடிவில் குண்டலினி சக்தி நம் உடலில் உள்ளாள். அவள் இயல்புகளை நன்கு அறிந்து கொண்டு அவளை உடலில் மேலே மேலே எழச் செய்தால் அவளே வீடுபேற்றினைத் தரும் நாயகி ஆகிவிடுவாள். இந்த உண்மையை அறியாதவர்கள் பக்தி என்னும் பெயரில் வீணே ஆரவாரம் செய்து, கத்திக் கொண்டு, காலத்தைக் கழிக்கின்றார்களே!




 

Latest posts

Latest ads

Back
Top