• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

#963 to #967

#963. அகரத்துடன் உகரத்தைச் சேர்க்க வேண்டும்

ஓதும் எழுத்தோடு உயிர்க்கலை மூவைஞ்சும்
ஆதி எழுத்து அவை ஐம்பதோடு ஒன்று என்பர்,
சோதி எழுத்தினில் ஐ இருமூன்று உள;
நாத எழுத்திட்டு நாடிக்கொள் ளீரே.

எழுத்துக்கள் எல்லாமே வாய் பேசும் போது பிறப்பவை. இவற்றில் அகரத்துடன் மேலும் பதினைத்து உயிர் எழுத்துக்கள் உள்ளன. மொத்த எழுத்துக்கள் ஐம்பத்தொன்று. சோதியாகிய அகரத்தில் (சந்திரகலையில்) மற்ற எழுத்துக்கள் நுட்பமாக அடங்குகின்றன. நாத எழுத்தாகிய உகாரத்தை அகாரத்துடன் சேர்த்து அறிந்து கொள்வீர்!

#964. சக்தியே எழுத்துக்கள் ஆவாள்


விந்து விலும்சுழி நாதம் எழுந்திடப்

பந்தத் தலைவி பதினாறு கலையதாம்,
கந்தர ஆகரம் கால் உடம்பு ஆயினள்,
அந்தமும் இன்றியே ஐம்பத்தொன்று ஆயதே.

சிரசில் நாதம் எழுந்து விரிந்து பரந்து வான மண்டலத்துடன் தொடர்பை ஏற்படுத்தும். பந்தத்தைத் தரும் (குண்டலினி) சக்தி அகாரம் முதல் உன்மனி ஈறாக பதினாறு கலைகளாக விளங்குகின்றாள். அவளே கழுத்து, கை, கால் உடம்பு என்று எல்லா அங்கங்களாகவும் ஆகின்றாள். அவளே ஐம்பத்தொன்று எழுத்துக்களாகவும் ஆகின்றாள்.

#965. சிவ சொரூபம் பெறலாம்

ஐம்ப தெழுத்தே யனைத்துவே தங்களும்
ஐம்ப தெழுத்தே யனைத்தா கமங்களும்
ஐம்ப தெழுத்தேயு மாவ தறிந்தபின்
ஐம்ப தெழுத்தும் போய் அஞ்செழுத்தாமே.

ஐம்பது எழுத்துக்களில் வேதங்கள் அமைந்துள்ளன. ஐம்பது எழுத்துக்களில் ஆகமங்கள் அமைந்துள்ளன. ஐம்பது எழுத்துக்கள் தெரிவிப்பது எது என்று அறிந்து கொண்டால், ஐம்பது எழுத்துக்கள் ஐந்தெழுத்துக்களில் அடங்கிவிடும். ஐம்பது எழுக்களையும் கடந்து, ஐந்தெழுத்துக்களையும் கடந்து, ஒரேழுத்தாகிய பிரணவத்தை அறிந்து கொள்பவர் சிவ சொரூபத்தை அடைவர்.

#966. அனைத்திலும் ஐந்தெழுத்துக்கள்

அஞ்செழுத் தாலைந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத் தாற்பல யோனி படைத்தனன்
அஞ்செழுத் தாலிவ் வகலிடம் தாங்கினான்
அஞ்செழுத் தாலே யமர்ந்து நின்றானே.

பஞ்ச பூதங்களைத் தோற்றுவித்தன ஐந்தெழுத்துக்கள். அருவமான உயிர்கள் பஞ்ச பூதங்களுடன் பொருந்தி வாழப் பல யோனிகளைப் படைத்தன. பஞ்ச பூதங்களாக உலகைத் தாங்குவதும், உலகில் வாழும் உயிர்களிடையே திகழ்வதும் இந்த ஐந்தெழுத்துக்களே.

#967. சிவன் அழைப்பான்

வீழ்ந்தெழ லாம்விகிர் தன்திரு நாமத்தைச்
சோர்ந்தொழி யாமல் தொடங்கு மொருவர்க்குச்
சார்ந்த வினைத்துயர் போகத் தலைவனும்
போந்திடு மென்னும் புரி சடையோனே.

சிவன் ஒருவராலும் படைக்கப்படாதவன் ஆவான். சோர்வின்றி அவன் திரு நாமத்தைத் தொடர்ந்து ஓதுபவரின் வினைகளும் அவற்றின் பயனாகிய துன்பங்களும் நீங்கிவிடும். நீங்கிவிட்டால் பிரணவ ஒலியில் சிவன் “என்னோடு வாருங்கள் ” என்று நம்மை அழைப்பான்.




 
#968 to #972

#968. யாவுமாகி இருப்பான்

உண்ணும் மருந்தும், உலப்பு இலி காலமும்

பண்உறு கேள்வியும் பாடலு மாய் நிற்கும்
விண் நின்று அமரர் விரும்பி அடி தொழ
எண் நின்று, எழுத்து அஞ்சும் ஆகி நின்றானே .

அனுபவிக்கப் படும் பொருட்கள் அனைத்தும் சிவனே. காலத்தைக் கடந்து நித்தியமாக விளங்குபவன் சிவனே. இசையுடன் பொருந்திய வேதமாகவும் பாடலாகவும் இருப்பவன் அவனே. வானவர் வணங்க நிற்பவனும் அவனே. ஐந்தெழுத்தின் வடிவமாக இருப்பவனும் அவனே.

#969. காப்பவன் சிவனே

ஐந்தின் பெருமையே யகலிட மாவதும்
ஐந்தின் பெருமையே ஆலய மாவதும்
ஐந்தின் பெருமையே யறவோன் வழக்கமும்
ஐந்தின் வகை செயப் பாலனு மாமே.

காணப்படும் விரிந்து பரந்த உலகம் ஐந்தெழுத்துக்களின் பெருமையினாலேயே . ஆலயங்கள் இருப்பதும் ஐந்தெழுத்துக்களின் பெருமையாலேயே. அறமும் நீதியும் நிலை பெறுவதும் ஐந்தெழுத்துக்களின் பெருமையினாலேயே. ஐம்பூதங்களிலும் விளங்கும் சிவபெருமான் அவற்றுக்குக் காவலனாகவும் உள்ளான்.

#970. சிவனே ஒளிரும் பிரணவச் சுடர்.

வேர் எழுத்து ஆய் விண் ஆய் அப்புறமாய் நிற்கும்

நீர் எழுத்து ஆய் நிலம் தாங்கியும் அங்கு உளன்
சீர் எழுத்து ஆய் அங்கி ஆய் உயிராம் எழுத்து
ஓர் எழுத்து ஈசனும் ஒண் சுடர் ஆமே.

எழுத்துக்களின் வேராகிய அகரமாகவும், அதற்கு மேலே விளங்கும் வானமாகவும், அதற்கும் மேலே இருக்கும் நாதமாகவும் விளங்குபவன் சிவன். மகாரத்தில் அவனே நீராக விளங்குகின்றான். நகாரத்தில் அவனே நிலமாக விளங்குகின்றான். சிகாரத்தில் சிவனே தீயாக விளங்குகின்றான். யகாரத்தில் சிவனே உயிராக விளங்குகின்றான். ஒளிரும் பிரணவச் சுடர் சிவனே ஆவான்.

#971. சக்தியே அனைத்துக்கும் ஆதாரம்

நாலாம் எழுத்து ஓசை ஞாலம் உரு அது ;

நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கிற்று;
நாலாம் எழுத்தே நவில வல்லார்கட்கு
நாலாம் எழுத்து அது நன்னெறி தானே.

திருவைந்தெழுத்தில் நான்காவது எழுத்து வகரம். இது சக்தியைக் குறிக்கும். உலகே சக்தி மயம் ஏனென்றால் உலகை உருவாக்கி இயங்கச் செய்வது மாயை. மாயை சக்தியில் அடங்கும். எனவே உலகம் சக்தியில் அடங்கிவிடும். உலகம் சக்தியின் ஆணைகளின் வழி நடக்கும். குண்டலினி சக்தி சிரசை அடிந்தால் அங்கே அது பிரணவ சக்தியாக மாறிவிடும் அதுவே நமக்கு நல்ல நெறிகளைக் காட்டும்.

#972. ஞானம் கிடைக்கும்

இயைந்தனள் ஏந்திழை என் உளம் மேவி

நயந்தனள் அங்கே நமசிவ என்னும்
பயம்தனை ஓரும் பதம் அது பற்றும்
பெயர்ந்தனன் மற்றும் பிதற்று அறுத்தேனே.

சக்தி விரும்பி வந்து என் உள்ளத்தில் பொருந்தினாள். அந்த உள்ளதையே நயந்து சக்தி அங்கேயே அமர்ந்து விட்டாள். “நான் சிவனுக்கு அடிமை!” என்ற உண்மையை ஆராய்ந்து உணருங்கள். பிரணவம் என்ற மந்திரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள். உலகப் பற்றையும், மற்ற பிதற்றல்களையும் முற்றிலுமாக ஒழித்துவிட்டால் அப்போது தெளிந்த ஞானம் கிடைக்கும்.



 
#973 to #977

#973. உடலில் நிலவி நிற்பாள்

ஆமத்து இனிது இருந்து அன்ன மயத்தினை
ஓமத்திலே உதம் பண்ணும் ஒருத்திதன்
நாமம் நமசிவ என்று இருப்பார்க்கு
நேமத் தலைவி நிலவி நின்றாளே.

தானியங்களில் பொருந்தி அடியார்கள் உயிர் வாழ உதவுபவள் சக்தி. வயிற்றில் உள்ள ஓம குண்டத்தில் அன்னத்தை ஆகுதி பண்ணுபவள் சக்தி. அவள் நாமமாகிய ‘நமசிவ’ என்று இருப்பவர்களுக்குச் செயல்களைத் தூண்டுகின்ற குண்டலினி சக்தியாக விளங்குவதும் சக்தி.

#974. உள்ளும் புறமும் உள்ளாள் சக்தி

பட்ட பரிசே பரம் அஞ்செழுத்து அதின்

இட்டம் அறிந்திட்டு இரவும் பகல்வர
நட்டம் அது ஆடும் நடுவே நிலையம் கொண்டு
அட்ட தேசு அப்பொருள் ஆகி நின்றானே.

‘சிவாயநம’ என்ற ஐந்தெழுத்துகள் நல்வினை உள்ளவர்களுக்கு கிடைக்கும் அரிய பரிசுப் பொருள் ஆகும். உயிர்களின் விருப்புக்கு ஏற்றவாறு இரவும் பகலும் நடனம் ஆடுபவன் சிவபெருமான். அவன் எட்டு ஒளிவீசும் பொருட்களாக எங்கும் விளங்குகின்றான். அவை நிலம் , நீர், ஒளி, வளி, வெளி, கதிரவன், சந்திரன் அக்கினி என்பவை ஆகும்.

#975. ஐந்தெழுத்துக்கள் உணர்த்துபவை

அகாரம் உயிரே; உகாரம் பரமே;
மகாரம் மலமாய் வரும் முப்பதத்தில்
சிகாரம் சிவமாய் வகாரம் வடிவமா
யகாரம் உயிர் என்று அறையலும் ஆமே.

பிரணவ என்பது ஓம் ( அ + உ + ம) ஆகும். இவற்றில் ‘அ’ என்பது ஆன்மாவையும், ‘உ’என்பது இறைவனையும், ‘ம’ என்பது மலம் அல்லது மாயையையும் குறிக்கும்.

'சிவாய' என்ற மூன்று எழுத்துக்களில் ‘சி’ என்பது சிவனையும் ‘
வா’ என்பது சக்தியயும், ‘ய’ ஆன்மாவையும் குறிக்கும்.

#976. அக்கினிக் கலைக்கு உரியவன் சிவன்

நகாரம் மகாரம் சிகாரம் நடுவாய்
வகாரம் இரண்டும் வளியுடன் கூடி
ஒகாரம் முதல்கொண்டு ஒருகால் உரைக்க
மகார முதல்வன் மனத்தகத் தானே.

அசபை மந்திரத்தை மூச்சுக் காற்றுடன் பொருத்திவிட வேண்டும். மூச்சை உள்ளே இழுக்கும் போதும் வெளியே விடும் போதும் சிவனைத் தியானித்தபடி இருந்தால், அக்கினிக் கலைக்கு உரிய சிவன் நம் உள்ளத்தை விட்டு அகலவே மாட்டான்.


#977. ஐந்து யானைகளை அடக்க வல்ல அங்குசம்

அஞ்சு உள ஆனை அடவியில் வாழ்வன;
அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவன;
அஞ்சையும் கூடத்து அடக்க வல்லார் கட்கே
அஞ்சு ஆதி ஆதி அகம் புகலாமே.

உடல் என்னும் காட்டுக்குள் ஐம்பொறிகள் என்னும் ஐந்து யானைகள் வாழ்கின்றன. அந்த ஐந்து யானைகளையும் அடக்கவல்ல ஒரே அங்குசம் ‘நமசிவாய’ என்னும் ஐந்தெழுத்து மந்திரம். இந்த ஐந்தெழுத்துக்களால் அந்த ஐந்து யானைகளை அடக்குபவர்கள் அந்த ஐந்துக்கும் முதன்மையான ஆன்மாவில் புக இயலும்.

( #921, #922
, #950, #975 இவற்றையும் மீண்டும் ஒரு முறை படிக்கவும்)

எழுத்து……பொறி…………………………………தன்மாத்திரை

ந……………மெய்………………………………….ஸ்பரிசம் = தொடு உணர்ச்சி

ம ……………நாக்கு ………………………………..ரசம் = சுவை

சி ……………கண் …………………………………..ரூபம் = ஒளி

வா …………மூக்கு ………………………………..கந்தம் = நாற்றம்

ய ……………காது ………………………………….சப்தம் = ஓசை.

 
#978 to #982

#978. புறவழிபாடு தேவையில்லை

ஐந்து கலையில் அகர ஆதி தன்னிலே
வந்த நகர ஆதி மாற்றி, மகராதி,
நந்தி யை மூலத்தே நாடிப் பரை யொடும்
சாந்தி செய்வார்கட்குச் சடங்கு இல்லை தானே.

நிவிருத்தி முதலான கலைகள் ஐந்து ஆகும். சந்திர கலைகள் பதினாறு அகும். உடலில் உள்ள முக்கிய ஆதாரச் சக்கரங்கள் குறி, கொப்பூழ், இதயம், கழுத்து, நெற்றி என்ற ஐந்து ஆகும். . மூலாதாரத்தில் உள்ள கனலைக் காமக் கழிவில் வீணாக்காமல் மேலே ஏற்றிச் சென்று, புருவங்களின் நடுவில் பொருந்துமாறு செய்து, அங்குள்ள ஒளியுடன் அதை இணைக்க அறிந்து கொண்டவர்களுக்கு, உடலால்செய்ய வேண்டிய புற வழிபாடுகள் தேவையில்லை.

#979. வீடுபேறு என்பது என்ன?

மருவும் “சிவாய” மே மன்னும் உயிரும்
அருமந்த யோகமும் ஞானமும் ஆகும்
தெருள் வந்த சீவனார் சென்று இவற்றாலே
அருள் தங்கி அச்சிவம் ஆவது வீடே.

‘சி’ என்ற சிவனுடனும், ‘வா’ என்னும் சக்தியுடனும், ‘ய’ என்னும் ஆன்மா சஹஸ்ர தளத்தில் பொருந்தி இருப்பதே அரிய சிவயோகம் ஆகும். இதுவே அரிய சிவ ஞானம் ஆகும். மலங்கள், கன்மங்கள் நீங்கித் தெளிவு பெற்ற ஆன்மா, சிவ சக்தியரின் திருவருள் பெற்றுச் சிவமாகவே மாறிவிடுவதே வீடுபேறு எனப்படும்.

#980. அனைத்து மலங்களும் நீங்கி விடும்

அஞ்சு உக அஞ்செழுத்து உண்மை அறிந்தபின்
நெஞ்சகத்துள்ளே நிறையும் பராபரம்;
வஞ்சகம் இல்லை, மனைக்கும் அழிவில்லை,
தஞ்சம் இது என்று சாற்றுகின் றேனே.

மிக அதிக இன்பத்தைத் தருபவை ஐந்தெழுத்துக்கள். இவற்றின் உண்மையை அறிந்து கொண்டவரின் மனத்தையே தங்கும் இடமாகக் கொண்டு பரமும் அபரமும் ஆகிய சிவசக்தியர் அங்கு விளங்குவர். இது சற்றும் பொய் அல்ல. முற்றிலும் உண்மையே. இதனால் ஆன்மா வாழும் உடலுக்கும் அழிவில்லை. சிவனிடம் தஞ்சம் அடைவதே சிவனை அடைவதற்குச் சிறந்த வழி என்று நான் கூறுகின்றேன்.

#981. சிவ தரிசனம் கிடைக்கும்

சிவாய வொடு ‘அவ்’வே தெளித்து உள்ளத்து ஓதச்
சிவாய வொடு ‘அவ்’வே சிவன் உரு ஆகும்;
சிவாய வொடு ‘அவ்’வும் தெளிய வல்லார்கள்
சிவாய வொடு ‘அவ்’வே தெளிந்திருந்தார.

‘அ ‘ என்னும் சந்திர கலையை அறிந்து கொண்டு; ‘சிவாய’ என்று தெளிந்த மனத்துடன் ஓதினால்; அந்தச் சந்திர கலையினால் அவரும் சிவன் வடிவத்தைப் பெறுவார். சந்திர கலையையும், ‘சிவாய’ என்ற மந்திரத்தின் பொருளையும், உணர்ந்து தெளிந்தவர்கள் சிவ வடிவத்துடன் அந்தச் சந்திர கலையில் திகழ்வார்கள்.

#982. சிவன் வெளிப்படுவான்

சிகார வகார யகாகர முடனே
நகார மகார நடுவுற நாடி
ஒகாரமுடனே யொருகா லுரைக்க
மகார முதல்வன் மதித்து நின்றானே.

‘சிவாயநம’ என்பதில் நடுவில் அமைந்துள்ள ‘ய’காரத்தை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். சுழுமுனையில் பிரணவத்தைக் கேட்க அறியும் போது அக்கினிக் கலையின் தலைவனான சிவன் தானே வெளிப்படுவான். அக்கினிக் கலையில் ஒளிரும் சிவன், நாதக் கலையில் விளங்கும் சிவன், அசபையில் உள்ள சிவன் அனைவரும் ஒருவனே ஆவான்.




 
#983 to #987

#983. சதாசிவனும், உருத்திரனும்.

நம்முதல் ஓர் ஐந்தின் நாடும் கருமங்கள்
அம்முதல் ஐந்தின் அடங்கிய வல்வினை;
சிம்முதல் உள்ளே தெளிய வல்லார்கட்குத்
தம்முதல் ஆகும் சதாசிவம் தானே.

நீங்கள் விரும்பும் செயல்கள் நன்றாக நடைபெற ‘நமசிவாய’ மந்திரத்தின் உதவியை நாடுங்கள். அதன் தலைவனான உருத்திரன் வல்வினைகளையும் செய்து முடிக்கும் வல்லமை பெற்றவர். ‘சி’காரத்தைத் தம் மனத்தில் உணர்ந்து தெளியும் வல்லமை உடையவர்களுக்குச் சதாசிவனே உருத்திரனைச் செயல்படச் செய்வார்.

#984. சிவத்துடன் சேர்ந்த ஆத்மா பரம் ஆகும்


நவமும் சிவமும் உயிர்பரம் ஆகும்
தவம் ஒன்றிலாதன தத்துவம் ஆகும்
சிவம் ஒன்றி ஆய்பவர் ஆதரவால் அச்
சிகம் என்ப தான்ஆம் எனும் தெளிவு உற்றதே.

நட்புடன் சிவத்தை பொருந்தும் ஆன்மாவும் பரம் ஆகிவிடும். சிவத்துடன் நட்புக் கொள்வதற்கு உயிரை வருத்துகின்ற கடினத் தவம் செய்ய வேண்டாம். சிவத்துடன் ஒன்றி விடும் அருள் பெற்றவர் அறிவர் தானும் அந்த சிவமும் ஒன்றே என்று.

#985. குரு அருள் பெற வேண்டும்!

கூடிய எட்டும் இரண்டும் குவிந்து அறி

நாடிய நந்தியை ஞானத்துளே வைத்து
ஆடிய ஐவரும் அங்கே உறவு ஆவார்கள்
தேடி அதனைத் தெளிந்து அறியீரே.

எட்டு = சந்திர கலை = இடக் கண்

இரண்டு = சூரிய கலை = வலக் கண்

சூரிய கலை, சந்திர கலைகளாகிய இரண்டு கண் பார்வைகளையும் சேர்த்துப் பார்க்கும் போது சிவன் என்னும் ஒளியை நாம் குருமண்டலத்தில் காண இயலும். சலனம் கொண்டுள்ள ஐம்புலன்களும், அவற்றை இயக்கும் நான்முகன் முதலான ஐந்து தெய்வங்களும் அந்த குரு மண்டலத்தில் இன்பம் அடைவர். எனவே நீர் குருவை நாட வேண்டும். அவர் அருளைத் தேட வேண்டும்.

#986. பத்து என்னும் எண்ணின் சிறப்பு

எட்டும் இரண்டும் இனிது அறிகின்றிலர்;

எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இரு மூன்று நான்கு எனப்
பட்டது சித்தாந்த சன் மார்க்க பாதமே.

எட்டு என்பதும் இரண்டு என்பதும் இனியவை என்று மூடர்கள் அறியவில்லை. எட்டும்( சூரிய கலையும்), இரண்டும் (சந்திரகலையும்) சேர்ந்தால் கிடைக்கும் பத்து என்னும் எண். ஆறும் (ஆதாரச் சக்கரங்களும்) நான்கு (அவற்றுக்கு மேலே விளங்கும் நான்கு தத்துவங்களும் ) சேர்ந்தால் கிடைப்பதும் பத்து என்னும் எண்.

#987. சக்கரமும் மந்திரமும்


எட்டு வரையின் மேல் எட்டு வரை கீறி

இட்ட நடுவுள் இறைவன் எழுத்து ஒன்றில்,
வட்டத்திலே அறை நாற்பத்தெட்டும் இட்டுச்,
சிட்ட அஞ்செழுத்தும் செபி சீக்கிரமே.

எட்டுக் கோடுகளுக்குக் குறுக்கே எட்டுக் கோடுகள் வரைந்தால் நாற்பத்தொன்பது அறைகள் கிடைக்கும். நடு அறையில் சிவனின் எழுத்தான ‘சி’ யை அமைத்துச் சுற்றியுள்ள மற்ற அறைகளில் மற்ற எழுத்துகளை நிரப்பி அதன் பின்னர் ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
 
#988 to #992

#988. சிவச் சக்கரம்

தானவர் சட்டர் சதிரர் இருவர்கள்
ஆன இம்மூவரோடு ஆற்றவர் ஆதிகள்
ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமும்
சேனையும் மெய்சிவச்சக்கரம் தானே.

அட்ட திக்குப் பாலகர்கள்:

(1). நிருதி (2). வருணன் (3). வாயு (4). குபேரன் (5). ஈசானன் (6) இந்திரன் (7) அக்கினி (8) இயமன்

சட்டர் :

(1) அசிதாங்க பைரவர் (2) குரு பைரவர் (3). சண்ட பைரவர் (4). குரோத பைரவர் (5). உன்மத்த பைரவர் (6). கபால பைரவர் (7). பீடண பைரவர் (8).
சம்மார பைரவர்

சதிரர் :

(1). நந்தி (2). மகா காளர் (3). பிருங்கி (4). விநாயகர் (5). விருஷபர் (6). ஸ்கந்தர் (7). தேவி (8). சண்டிகேஸ்வரர்

இவர்களை வெளிச் சுற்று வட்டங்களில் அமைக்க வேண்டும். உள் சுற்றுப் பதினாறு கட்டங்களில் உயிர் எழுத்துக்களை ‘அ’ முதல் ‘அ :’ வரையில் அமைக்க வேண்டும். நாத, விந்து எழுத்துக்களை அதன் உள் கட்டங்கள் எட்டில் அமைக்க வேண்டும். இதுவே சிவச் சக்கரம் அமைக்கும் முறை.

#989. இறையருளைப் பற்றிப் பேசுவேன்

பட்டன மாதவம் ஆறும் பராபரம்
விட்டனர் தம்மை, ‘விகிர்தா நம’ என்பர்;
எள் தனை ஆயினும் ஈசன் திறத்திறம்
ஒட்டுவன் பேசுவன் ஒன்று அறியேனே.

ஆறு ஆதாரங்களும் ஒன்று பட்டு அமைவது பெரிய தவம் ஆகும். இந்த உண்மையை அறிந்து கொண்டவர்கள் தற்போதத்தைக் கை விட்டு விட்டு “எல்லாம் சிவன் செயல்” என்று நம்பிச் சிவனின் அடிமையானவர்கள். எள் அளவு செயல் புரிந்தாலும் அதிலும் நான் சிவன் அருளைப் பற்றியே பேசுவேன் வேறு எதுவும் நான் அறியவில்லை.

#990. சங்கரன் என்ற பெயர் ஏன்?

சிவன் முதல் மூவரோடு ஐவர் சிறந்த
அவை முதல் ஆறு இரண்டு ஒன்றோடு ஒன்று ஆன
அவை முதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவை முதல் சங்கரன் தன் பெயர் தானே.

சிவன், உருத்திரன், நான்முகன் , திருமால் என்று மூவராக விளங்குவான். சிவன் திருச் சிற்றம்பலத்தில் உருத்திரன், நான்முகன், திருமால், மகேசுரன், சதாசிவன் என்று ஐவராகவும் விளங்குவான். ஆறு ஆதாரங்களும், மகேசுரம், சதாசிவம் என்ற இரண்டும் பொருந்திய சஹஸ்ரதளம் அந்த அவையாகும். அதில் நாதமும் விந்துவும் பொருந்தும் போது சிவன் சங்கரன் என்ற பெயர் பெறுவான்.

#991. துணைச் சக்கரம்

வித்துஆம் சகமயம் ஆக வரை கீறி

நாத்துஆர் கலைகள் பதினாறு நாட்டிப், பின்
உத்தாரம் பன்னிரண்டு ஆதி கலைதொகும்
பத்தாம் பிரம சடங்கு பார்த்து ஓதிடே.

விந்து மயமான பதினாறு சந்திர கலைகளை பிருத்வீயிலிருந்து கணக்கிட வேண்டும். அவற்றை நிலைப் படுத்திக் கொள்ள வேண்டும். மறு பகுதியான சூரியனின் பன்னிரண்டு கலைகளை இவற்றுடன் சேர்க்க வேண்டும். பத்து அக்கினிக் கலைகளும் இவற்றுடன் பொருந்தினால் பிரமத்தை அறிந்து கொள்ளலாம். அகரமும் உகாரமும் சேரும் போது விளங்கும் ஒளியில் பிரமம் நன்கு விளங்கும்.

#992. ஆண்டவனின் அடிமை

கண்டெடுந் தேன்கம லம்மலர் உள்ளிடை
கொண்டெழுந் தேன்உடன் கூடிய காலத்துப்
பண்டழி யாத பதிவழி யேசென்று
நண்பழி யாமே நமவென வாமே.

சஹஸ்ரதளத்தில் இறைவனைக் கண்டதும் நான் எழுந்தேன். சிவத்துடன் ஒன்றி நான் அகத்துள் நின்ற போது உடலை விட்டு அழியாத சிவச் சக்கரத்தின் வழியே போனேன். சிவனுக்கும் எனக்கும் இடையே உள்ள ஆண்டவன் அடிமை என்னும் உறவு கெடாதபடி அவன் திருநாமத்தை ‘சிவாய நம’ என்று ஓதிக் கொண்டே இருந்தேன்

 
#993 to #997

#993. சிவத்துடன் கலந்து நிற்கலாம்

புண்ணிய வானவர் பூமி தூவி நின்று
எண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம்
நண்ணுவர் நண்ணி நமவென்னு நாமத்தை
கண்ணென உன்னிக் கலந்து நின்றாரே.

நல் வினைப் பேற்றால் அண்ணலின் அருள் பெற்றவர் விண்ணுலகம் செல்வர். அங்கும் அவர்கள் சிவனைப் பூக்களால் பூசித்து செய்து அவன் மந்திரத்தை ஓதுவர். சிவனின் அடிமை என்று அவனுடன் கலந்து நிற்பர்.

#994. பிறவி நீங்கும்

ஆறெழுத் தாவது ஆறு சமயங்கள்
ஆறுக்கு நாலே யிருப்பது நாலென்பர்
சாவித் திரியில் தலைஎழுத் தொன்றுள
பேதிக்க வல்லார் பிறவி யற்றார்களே.

ஆறு எழுத்துக்கள் ‘சிவாயநம ஓம்’ என்பவை. ஆறு சமயங்கள் சிறப்பாகப் பேசுவது இருபத்து நான்கு தத்துவங்களையே ஆகும். ஒரெழுத்தாகிய பிரணவம் சீவன் உடலில் உள்ள போதே அதைச் சிவனுடன் சேர்த்து வைக்கும். அதனால் பிறவாநெறி பிரணவ யோகமே ஆகும்.

#995. நாதாந்த அறிவு

எட்டினில் எட்டு அறை இட்டு, ஓர் அறையிலே
கட்டிய ஒன்று எட்டாய்க் காணும் நிறை இட்டுச்
சுட்டி இவற்றைப் பிரணவம் சூழ்ந்திட்டு
மட்டும் உயிர்கட்கு உமாபதியான் உண்டே.

எட்டு அறைகள் வெளியிலும் ஓர் அறை உள்ளேயும் இருக்க அமைக்க வேண்டும். நடு அறையில் உள்ள சிகாரம் என்ற அக்கினி மற்ற எட்டு அறைகளிலும் உயிர் எழுத்துக்களின் வடிவில் பரவியுள்ளதாகக் கருத வேண்டும். பிரணவத்தை இதனைச் சுற்றி எழுத வேண்டும் . இந்த எல்லைக்குள் இருந்து சிவனை நினைப்பவருக்கு உமாபதி வெளிப்படுவான்.

சுரம் எனப்படுபவை “அ ” முதல் “அ:” வரையில் உள்ள பதினாறு உயிர் எழுத்துக்கள் சாந்தியாதீதக் கலையில் உள்ளன. சிகாரம் ஒளி மயமானது. இந்த ஒளியையும் சுரத்தையும் சிரசில் அறிவது சாந்தியதீதக் கலையை அறிவது ஆகும். இவ்வாறு அறிந்து கொள்வது உடலைக் கடந்த நாதாந்த அறிவாக விளங்குவது ஆகும்.

#996. சிரசில் சிவன் விளங்குவான்

நம் முதல் அவ்வொடு நாவினர் ஆகியே

அம் முதலாகிய எட்டு இடை உற்றிட்டு,
உம் முதலாக உணர்பவர் உச்சிமேல்
உம் முதல் ஆயவன் உற்று நின்றானே.

‘நமசிவாய’ என்னும் திருவைந்துடன் தியானம் செய்ய வேண்டும். அ முதலாகிய பதினாறு உயிர் எழுத்துக்கள் எட்டு அறைகளில் அமைவதை அறிந்து கொள்ள வேண்டும். அவற்றின் இடையே உகாரத்தை முதலாகக் கொண்டு அதை உணரவேண்டும். அப்போது தலை உச்சியில் உமையின் தலைவன் விளங்குவான்.

#997. தம்பனம் என்னும் கட்டுதல்

நின்ற வரசம் பலகை மேல் நேராக
ஒன்றிட மவ்விட்டு வோலையில் சாதகம்
துன்று மேழுகையுள் பூசிச் சுடரிடைத்
தன்ற வெதுப்பிடத் தம்பனங் காணுமே.

இது நமக்குத் தேவை இல்லாதது என்று கருதுவதால், இங்கு இதன் பொருளைத் தரவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன்!

 
#998 to #1002

#998. மோகனம் ( மயங்க வைத்தல்)

கரண இரளிப் பலகை யமன்றிசை
மரணமிட்டெட்டின் மகார எழுதிட்டு
வரணமி லைங் காயம் பூசியடுப்பிடை
முரணிற் புதைத்திட மோகன மாகுமே.

#999. உச்சாடனம் ( விரட்டி விடல்)

ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில்
பாங்கு படவே பலாசப் பலகையிற்
காங்கரு மேட்டிற் கடுப்பூசி விந்து விட்
டோங்காரம் வைத்திடும் உச்சா டனத்துக்கே.

#1000. மாரணம் ( மந்திரத்தால் அழிப்பது)

உச்சியம் போதி லொளி வன்னி மூலையில்
பச்சோலை யிற்பஞ்ச காயத்தைப் பாரித்து
முச்சது ரத்தின் முதுகாட்டில் வைத்திட
அச்சமற மேலோர் மாரணம் வேண்டிலே.

#1001. வசியம் ( கவர்ச்சி )

ஏய்ந்த வரிதார மேட்டின்மே லே பூசி
மேய்ந்த வகார முகார மெழுத்திட்டு
வாய்ந்ததோர் வில்வப் பலகை வசியத்துக்குக்
கேய்ந்தவைத் தெண் பதினாயிரம் வேண்டிலே.

#1002. ஆகர்ஷணம் ( அழைப்பு )

எண்ணாக் கருடனை யேட்டின் உகாரமிட்டு
எண்ணாப் பொன்னாளி லெழு வெள்ளி பூசிடா
வெண்ணாவற் பலகை யிலிட்டுமேற் கேநோக்கி
எண்ணா வெழுத்தொடெண்ணாயிரம் வேண்டிலே.

சிவனைப் பற்றிப் புரிந்து கொள்வதே நம் நோக்கம். பிறருக்குத் தீங்கு விளைவிப்பது அல்ல. அதனால் இவற்றின் பொருள் மறைபொருளாக இருப்பதே அனைவருக்கும் நலம் பயக்கும்.
 
3. அருச்சனை

3. அருச்சனை
மலர்களாலும், நறுமணப் பொருட்களாலும் இறைவனை பூசிப்பது.

#1003 to #1005

# 1003. உகந்த மலர்கள்

அம்புய நீலம் கழுநீ ரணிசெய்தல்
வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்
தும்பை வகுளஞ் சுரபுன்னை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே.


இயந்திரத்தில் மந்திர உருவில் எழுந்தருளிய இறைவனை வழிபட உகந்த மலர்கள் தாமரை, நீலம், செங்கழுநீர், கரு நெய்தல், பாக்குப் பூ, மகிழம்பூ, மாதவி, மந்தாரம், புன்னை, மல்லிகை, செண்பகம், பாதிரி, செவ்வந்தி ஆகியவை.

#1004. உகந்த நறுமணப் பொருட்கள்


சாங்கம தாகவே சந்தொடு சந்தனம்
தேங்கமழ் குங்குமம் கற்பூரங் காரகில்
பாங்கு படப்பனி நீரால் குழைத்து வைத்
தாங்கே யணிந்து நீர் அர்ச்சியும் அன்பொடே.

புனுகு, கஸ்தூரி முதலிய சாந்துகள், சந்தனம், குங்குமம், பச்சைக் கற்பூரம், அகில் இவற்றை பன்னீர் கலந்து முறையாகப் பூசி வழிபட வேண்டும்.

#1005. தூப தீபம் காட்டுதல்


அன்புட னேநின் றமுதமு மேற்றியே
பொன் செய் விளக்கும் புகைதீபந் திசைதொறுந்
துன்ப மகற்றித் தொழுவோர் நினையுங்கால்
இன்புட னேவந் தெய்திடு முத்தியே.


அன்புடன் நிவேதனந்தைப் படைக்க வேண்டும். விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். தூப தீபம் காட்ட வேண்டும். இவ்விதம் இம்மைப் பேறும் மறுமைப் பேறும் பெறலாம்

 
1006. எல்லாப் பேறும் தாமே வரும்!

எய்தி வழிபடில் எய்தா தனவில்லை
எய்தி வழிப்படி லிந்திரன் செல்வமுன்
எய்தி வழிப்படி லெண்சித்தி யுண்டாகும்
எய்தி வழிப்படி லெய்திடு முத்தியே.

இங்ஙனம் வழிபடும் போது அடைய முடியாத பேறு என்று எதுவும் இராது. இந்திரனின் செல்வம் கிடைக்கும். தம்பனம் முதலிய எட்டு சித்திகளும் கிடைக்கும். மறுமையில் வீடுபேறும் கிடைக்கும்.


#1007. மனம் அடங்கும்


நண்ணும் பிறதார நீத்தா ரவித்தார்
மண்ணிய நைவேத் திய மனுசந்தான
நண்ணிய பஞ்சாங்க நண்ணுஞ் செபமென்னும்
மன்னும் மனபவ னத்தொடு வைகுமே.

இவ்வாறு வழிபடுபவர்கள் ஐம்பொறிகளை அடக்கி ஆள்வர். தானே விரும்பி வரும் பர தாரத்தையும் விரும்ப மாட்டார். இவர் படைக்கும் நிவேதனம், இடையூறு இல்லாத யோகம், ஐந்து அங்கங்கள் ( சிரசு, இரு கரங்கள், இரு முழங்கால்கள் ) தரையில் பொருந்த செய்யும் வணக்கம், செபம் இவற்றால் மனம் பிராணனோடு நிலை பெற்று விளங்கும்.


#1008. புறவழிபாடுகள் வேண்டா!


வேண்டார்கள் கன்மம் விமலனுக் காட்பட்டோர்
வேண்டார்கள் கன்ம மதிலிச்சை யற்றபேர்
வேண்டார்கள் கன்ம மிகுசிவ யோகிகள்
வேண்டார்கள் கன்ம மிகுதியோ ராயந்தன்பே.

இறைவனுக்கு அடிமையானவர்கள் கர்மத்தை விரும்ப மாட்டார்கள். கர்மத்தில் இச்சை கொள்ளாததனால் இவர்கள் கிரியைகள் மூலம் சிவனை வழிபட விரும்ப மாட்டார்கள். கர்மத்தை புரியவிரும்பாமல் சிவன் அருள் வழியே நின்று இவர்கள் சிவனைத் தொழுவார்கள்.
 
#1009 to #1011

#1009. மணியின் ஒளி

அறிவரு ஞானத் தெவரு மறியார்
பொறி வழித் தேடித் புலம்புகின்றார்கள்
நெறிமனை யுள்ளே நிலை பெற நோக்கில்
ஏறிமணி யுள்ளே யிருக்கலும் ஆமே.

சிவயோகம் என்பதை அறிவு வழியால் மட்டுமே அடைய முடியும் என்ற உண்மையை, சிவ யோகத்தைப் பொறி வழியே தேடுபவர்கள் அறிவதில்லை. கிரியையால் வழிபடுபவர்களின் கவனம் எல்லாம் மூர்த்தி, பூஜை, மந்திரம், செபம், திரவியங்கள் இவற்றில் நிலை பெற்றிருக்கும். இறைவன் மீது அல்ல. கிடைதுள்ள உடலிலேயே நெறிப் படுத்தப் பட்ட மனத்துடன் நோக்கினால் மணியுள் ஒளி போல உடலுள் இறைவனைக் காணலாம்.


#1010. மயக்கம் என்பதே இராது


இருளும் வெளியும்போ லிரண்டா மிதயம்
அருளறி யாமையு மன்னு மறிவும்
அருளிவை விட்டெறி யாமை மயங்கும்
அருளுஞ் சிதைத்தோ ரவர்களா மன்றே.


உள்ளம், இருள் ஒளி என்ற இரண்டு இயல்புகளுடனும் பொருந்தக் கூடியது. உள்ளம் ஒளியைச் சேர்ந்தால் அப்போது அருளைப் பெறும். மயக்கம் அறும். உள்ளம் மயக்கும் இருளைச் சேர்ந்தால் அறியாமையில் விழும். மயக்கம் உறும். உள்ளத்தில் மயக்கம் நீங்காவிட்டால் அறிவும் மயங்கும். மயக்கத்தைத் துறந்தவரே மெய்யான சிவனடியார்கள் ஆவர்.


#1011. அனைத்தும் அவன் செயல்


தானவ னாக வவனேதா னாயிட
ஆன விரண்டி லறிவன் சிவமாகப்
போனவ னன்பிது நாலா மரபுறத்
தானவ னாகுமோ ராசித்த தேவரே.


“தானே சிவன்” என்றும் “சிவனே தான்” என்றும் இரண்டு வழிகளில் தன்னையே சிவமாகக் காணுவர் சிவனடியார். சிவனிடம் கொண்ட பக்தியால், தன் அறிவைச் சிவன் அறிவில் கொண்டு சேர்ப்பது சாயுஜ்யம் என்னும் வீடுபேற்றின் நான்காவது நிலையினை அடைவது ஆகும். இந்தச் சித்தியைப் பெற்றவர்கள் “எல்லாம் அவன் செயல்” என்று நம்பித் தான் நன்மை தீமை என்று எதையுமே சிந்தியாமல் இருப்பார்கள்.




 
#1012 to #1014

#1012. விந்து நாதங்கள் மேல் நோக்கிச் செல்லும்

ஓங்கார முந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகாரமும் நீள்கண்டத் தாயிடும்
பாங்கார் நகாரம் பயில்நெற்றி யுற்றிடும்
வீங்காகும் விந்துவும் நாதமே லாகுமே.


உந்திக்குக் கீழே மூலாதாரத்தில் இருப்பது அணையாத அக்கினிக் கலையாகும். இந்த மூலாக்கினியைச் சிவாக்கினியாக்கிச் சிவத் தியானம் செய்ய வேண்டும். அப்போது குண்டலினி சக்தி மேல் நோக்கிச் சென்று கழுத்தில் ‘வ’காரமாக விளங்குவாள். சுவாதிஷ்டானத்தில் இருக்கும் ‘ந’காரம் நெற்றிக்கு இடம் பெயரும். இந்த இடத்திலிருந்து தோன்றும் விந்துவும் நாதமும் மேல் நோக்கிச் செல்லும்.

#1013. வீடுபேறு என்றால் என்ன?


நமவது வாசனமான பசுவே
சிவமது சிதீஷ் சிவமாம் பதியே
நமவற வாதி நாடுவ தன்றாம்
சிவமாகு மாமோனஞ் சேர்த்தல் மெய் வீடே.

‘நம’ என்ற இரண்டு எழுத்துக்கள் மறைக்கும் சக்தியான திரோதனத்தையும், மலத்தையும் குறிக்கும். ஆன்மாக்கள் இந்த இரண்டையும் இருப்பிடமாகக் கொண்டு இயங்கும் இயல்பின. அதுவே ஆன்மா பசுத் தன்மை பெற்று இருப்பதன் காரணம் ஆகும். இந்தப் பசுத் தன்மையை மாற்ற வேண்டுமெனில் சிவத்தைச் சார்ந்து சிவத்தைச் சிந்திக்க வேண்டும். அப்போது பசுத் தன்மை கேட்டு சிவத் தன்மை தோன்றும். வெறும் ஜபத்தினால் மட்டும் இது நிகழாது. ‘நான் இந்த உடம்பு அல்ல’ என்ற எண்ணத்துடன் சிவத்துடன் சேர வேண்டும். இதுவே உண்மையான வீடுபேறு ஆகும்.

#1014. சீவ ஒளியும் சிவ ஒளியும் ஒன்றி விடும்


தெளிவரு நாளில் சிவஅமு தூறும்
ஒளிவரு நாளில் ஓரெட்டில் உகளும்
ஒளிவரும் அப்பதத் தோரிரண் டாகில்
வெளிதரு நாதன் வெளியாய் இருந்ததே.

“தான் உடல் அன்று” என்று உணரும் அன்று சீவனின் மன மண்டலத்தில் சிவனின் ஒளி வீசும். அது சந்திர கலையாகத் தோன்றும். இங்ஙனம் ஒளி வீசும் போது, பிரிந்திருந்த சீவனின் நிலை சிவத்துடன் ஒன்றாகும். அதன் பின்னர் சீவ ஒளியும், சிவ ஒளியும் கலந்து நிற்கும்.
 
4. நவகுண்டம்

4. நவகுண்டம்

ஒன்பது வகைப்பட்ட ஓம குண்டங்கள்:

(1). சதுரம், (2). யோனி, (3). பிறை, (4). முக்கோணம், (5). வட்டம், (6). அறுகோணம், (7). பத்மம், (8). அட்டகோணம், (9). வர்த்துவம்.

இவற்றுக்கு உரிய ஒன்பது திசைகள்:

(1). கிழக்கு, (2). தென் கிழக்கு, (3). தெற்கு, (4). தென் மேற்கு, (5). மேற்கு, (6). வடமேற்கு, (7). வடக்கு, (8). ஈசானியம், (9). ஈசானியத்துக்கும் கிழக்குக்கும் நடுவே

#1015 to #1019

#1015. நன்மை அளிக்கும்

நவகுண்டம் ஆனவை நான் உரை செய்யின்
நவகுண்டத்துள் எழு நல் தீபம் தானும்
நவகுண்டதுள் எழு நன்மைகள் எல்லாம்
நவகுண்டம் ஆனவை நான் உரைப்பேனே.


நவ குண்டத்தைப் பற்றி நான் கூறுவது இதுவே. நவ குண்டங்களில் பேரொளி எழுந்து நிற்கும். அந்த நவ குண்ட சோதி எல்லா நலன்களையும் நமக்குத் தரும்.

#1016. நாற்கோணக் குண்டம்


உரைத்திடும் குண்டத்தின் உள்ளே முக்காலும்
நகைத்துஎழு நாற்கோணம் நன்மை கள்ஐந்தும்
பகைத்திடும் முப்புரம் பார்அங்கி யோடே
மிகைத்துஎழு கண்டங்கள் மேல்அறி யோமே.


இந்த ஒன்பது குண்டங்களில் நாற்கோணக் குண்டத்தின் சிறப்புகள் இவையாகும். நாற்கோணக் குண்டம் மகிழ்ச்சியைத் தரும். ஐந்தொழில்களும் நன்மை அடையும். ஆணவம், கன்மம், மாயை என்னும் மும் மலங்களும் கெடும். மூலாதாரத்தின் அக்கினி மேல் நோக்கிச் செல்லும். அது உடலில் உள்ள மண்டலங்களைக் கடந்து விளங்கும்.

#1017. ஒரே பேரொளியானது!


மேல்அறிந்து உள்ளே வெளிசெய்த அப்பொருள்
கால்அறிந்து உள்ளே கருத்து உற்ற செஞ்சுடர்
பார்அறிந்து, அண்டம் சிறகுஅற நின்றது
நான்அறிந்து, உள்ளே நாடிக் கொண்டேனே.


மூலாதாரத்து அக்கினி மேல் நிலையை அடைந்து வான பூதத்தைப் பற்றிக் கொண்டது. அப்போது உள்ளே இருந்த செஞ்சுடர் பிருத்வி முதல் துவாதசாந்தம் வரையில் ஒரே ஒளிப் பிழம்பாகக் காட்சி அளித்தது.

#1018. ஆக்கி அழிக்கலாம்


கொண்டஇக் குண்டத்தின் உள்எழு சோதியாய்
அண்டங்கள் ஈரேழும் ஆக்கி அழிக்கலாம்
பண்டையுள் வேதம் பரந்த பரப்பு எலாம்
இன்று சொல் நூலாய் எடுத்துரைத் தேனே.


இங்ஙனம் அகத்தில் உள்ள குண்டத்தில் ஒளி வடிவாகத் திகழ்பவர் ஈரேழு மண்டலங்களையும் ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தவர். பண்டைய வேதங்கள் இந்த குண்டத்தின் பெருமைகளைக் கூறியுள்ளன. நானும் அவற்றை இந்த நூலில் உரைத்தேன்.

#1019. வல்வினைகள் வந்து பொருந்தா!


எடுத்தஅக் குண்டத்து இடம் பதினாறில்
பதித்த கலைகளும் பாலித்து நிற்கும்
கதித்து அனல் உள் எழக் கண்டுகொள் வார்க்கே
கொதித்து எழும் வல்வினை கூடகி லாவே.

இத்தகைய குண்டத்தில் பதினாறு கலைகளும் விளங்கும். காம ஜெயத்துடன், மூலாக்கினி சுழுமுனை வழியே மேலே செல்வதை அறிந்து கொள்ளலாம். இதைச் செய்யவல்லவர்களை வல்வினைகள் வந்து பற்றிக் கொள்ளா!

பதினாறு கலைகள்

அகரம், உகரம், மகரம், விந்து, அர்த்தச் சந்திரன், நிரோதினி, நாதம், நாதாந்தம், சத்தி, வியாபினி, வியோமரூபினி , அனந்தை , அநாதை, அநாசிருதை, சமனை, உன்மனி.


 
#1020 to #1024

#1020. சிவசூரியன்

கூட முக்கூடத்தின் உள்ளெழு குண்டத்துள்

ஆடிய ஐந்தும் அகம் புறம்பாய் நிற்கும்;
பாடிய பன்னீர் இராசியும் அங்கு எழ
நாடிக் கொள்வார்கட்கு நற்சுடர் தானே.

முக்கோண வடிவ குண்டத்தில் ருத்திரன், நான்முகன், திருமால், மகேசுவரன், சதாசிவன் என்னும் ஐந்து தெய்வங்களும் சத்யோஜாதம், வாம தேவம், தத்புருடம், அகோரம், ஈசானம் என்ற ஐந்து முகங்கள் கொண்ட சிவனாக உடலின் உள்ளேயும் வெளியேயும் விளங்குவர். உறுதியாகத் தியானம் செய்பவர்களின் சிரசின் மீது சூரியனின் பன்னிரண்டு ராசிகளும் முழுமையாக அமையும். சூரிய வட்டம்முழுமை அடையும். அப்போது சிவ சூரியன் தலை மேல் தோன்றுவான்.

#1021. உடல் ஒளிரும்!


நற்சுடர் ஆகும் சிரம் முக வட்டமாம்

கைச்சுடர் ஆகும் கருத்து உற்ற கைகளில்
பைச்சுடர் மேனி பதைப்புற்று இலிங்கமும்
நற்சுடராய் எழும் நல்லது என்றாளே.

நவகுண்ட வழிபாடு செய்பவரின் உடல் ஒளிரும். அவர் தலையும், முகமும் நல்ல ஒளி பெறும். இடைகலை, பிங்கலை என்னும் இரு கைகளில் சுழுமுனை ஒளிரும். அன்னமய கோசத்தில் இலிங்கம் உள்ளேயும் வெளியேயும் ஒளியுடன் விளங்கும். “இது நன்மை அளிக்கும்!” என்று சக்தி தேவி உரைத்தாள்.

#1022. ஒளி மயமான சக்தி


நல்லதுஎன் றாளே நமக்குற்ற நாயகம்

சொல் அது என்றாளே சுடர்முடி பாதமா
மெல்லநின் றாளை வினவகில் லாதவர்
கல்அதன் தாளையும் கற்கும் வின்னாளே.

“திவ்விய லிங்கம் நன்மை அளிக்கும்!” என்று சக்தி கூறினாள். அவளே “ஆன்மாக்கள் கடைத்தேறுவதற்கு உரிய சொல் பிரணவம்” என்று கூறினாள். முடி முதல் பாதம் வரையில் சுடர் போல ஒளிரும் சக்தியைப் பற்றி நல்ல குருவிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். அங்ஙனம் செய்யாதவர் கற்ற கல்வி நல்ல கல்வியாகாது. அவர்கள் அறிவும் சிறந்து விளங்காது.

#1023. அகத்துள் இடம் கொண்டது.


வின்னா இளம்பிறை மேவிய குண்டத்துச்

சொன்னால் இரண்டும் சுடர் நாகம் திக்கு எங்கும்
பன் நாலு நாகம் பரந்த பரஞ்சுடர்
என் அகத்துள்ளே இடங்கொண்ட வாறே.

ஒளிவீசும் இளம் பிறைக் குண்டத்திலிருந்து இடைகலை பிங்கலை என்னும் இரண்டு நாடிகள் பாம்புகளைப் போலப் பின்னிப் பிணைந்து எல்லா ஆதாரச் சக்கரங்களையும் சென்று அடையும். சஹஸ்ரதலத்தை அடைந்த பின்னர் வானக் கூற்றில் பரவும் அதன் பேரொளி, பின்னர் என் உள்ளத்திலும் இடங்கொண்டு விளங்கியது.

#1024. சிவாக்கினியைக் காணலாம்


இடம் கொண்ட பாதம் எழிற்சுடர் ஏகம்;

நடம் கொண்ட பாதங்கள் நண்ணீரதற்குச்
சகம் கொண்ட கை இரண்டாறும் தழைப்ப
முகம் கொண்ட செஞ்சுடர் முக்கண்ண னார்க்கே.

சிவாக்கினி மூலாதாரத்தை இடமாகக் கொண்டது. இந்த சிவாக்கினிக்கு ஊன்றிய கால் சூரிய நாடியாகிய பிங்கலை ஆகும். நீர்ப்பகுதியாகிய மணிபூரகத்தை நோக்கித் தூக்கிய திருவடி இடகலை ஆகும். இந்த இரண்டு கலைகளால் மூலாதாரம் முதலான ஆறு ஆதரங்களையும் நாம் செழிப்படையச் செய்ய வேண்டும். அப்போது நம் முகத்தின் முன்னர் சிவாக்கினி வந்து தோன்றும்.
 
#1025 to #1029

#1025. தலைவன் அவனே!
முக்கணன் தானே முழுச் சுடராயவன்
அக்கணன் தான அகிலமு முண்டவன்
திக்கண னாகி த திசையெட்டும் கண்டவன்
எக்கணன் றானுக்கும் எந்தை பிரானே.

முழுச் சுடராக விளங்குபவன் சூரியன், சந்திரன், அக்கினி என்னும் மூன்று கண்களை உடைய சிவபெருமானே ஆவான். அந்த விதமாகக் கண்களை உடைய சிவனே அகிலத்தைத் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளான். திசைகளில் எல்லாம் கண்கள் உடையவனாக அவன் அனைத்துத் திசைகளையும் காண்கின்றான். எல்லாக் கணங்களுக்கும் தலைவன் சிவபெருமானே ஆவான்.

#1026. சீவனே ஆவான் சிவன் மைந்தன்


எந்தைப் பிரானுக் கிருமூன்று வட்டமாய்த்
தந்தைதன் முன்னே சண்முகந் தோன்றலால்
கந்தன் சுவாமி கலந்தங் கிருத்தலான்
மைந்த னிவனெற்று மாட்டிக்கொள் ளீரே.


எந்தையாகிய சிவபிரானிடம் ஆறு தீப்பொறிகள் தோன்றின. அவை ஆறும் இணைந்து அதிலிருந்து ஆறுமுகன் தோன்றினான். சிவன் அந்தத் தீப்பொறிகளில் கலந்திருப்பதால் கந்தன் சிவனின் மைந்தன் ஆனான். சிவன் திருவருள் பெற்ற சீவனின் ஆறு ஆதாரங்களும் ஒன்றாகிவிடும். அப்போது சீவனே சிவன் மைந்தன் கந்தன் ஆகி விடுவான்.

#1027. தேவர் ஆகிவிடுவர்


மாட்டிய குண்டத்தின் உள்எழு வேதத்துள்
ஆட்டிய கால்ஒன்றும் இரண்டும் அலர்ந்திடும்
வாட்டிய கை இரண்டு ஒன்று பதைத்து எழ
நாட்டும் சுரர் இவர் நல்லொளி தானே.


மூலாதாரம் நான்கு இதழ் தாமரையின் வடிவம் கொண்டது. அதில் சுழுமுனை நாடியானது, இடைகலை நாடி, பிங்கலை நாடிகளின் தன்மையை விரிவடையச் செய்யும். அவை இரண்டும் பக்குவம் அடையும் போது சுழுமுனையில் அக்கினிக் கலை விரைவாக மேலே எழும். இந்த ஆற்றல் பெற்றவர் தேவர் ஆவார்.

#1028. கண்களில் அருள் பெருகும்


நல்லொளி யாக நடந்து உலகு எங்கும்
கல்ஒளி யாகக் கலந்து உள் இருந்திடும்
சொல்ஒளி யாகத் தொடர்ந்த உயிர்க்கு எலாம்
கல்ஒளி கண்ணுளும் ஆகிநின் றானே.

முன்னம் கூறிய வண்ணம் ஒளி உடல் பெற்றவர் நிலையான ஒளியுடன் இந்த உலகில் உலவுவார். ஒளிரும் சொல்லாகிய பிரணவத்தை அறிந்து கொள்ள விரும்பும் உயிர்களுக்கு எல்லாம் அவர் தன் அருட்கண்ணால் நிலையான ஒளியை வழங்குவார். அவர் கண்களில் ஆருளாக நிற்பாள் சக்தி அன்னை.

#1029. பிரணவ உடலுடன் எங்கும் செல்லலாம்


நின்ற இக் குண்டம் நிலைஆறு கோணமாய்ப்
பண்டையில் வட்டம் பதைத்து எழும் ஆறாறும்
கொண்ட இத் தத்துவம் உள்ளே கலந்து எழ,
விண்ணுளும் என்ன எடுக்கலும் ஆமே.


பிரணவ குண்டம் ஒளியின் இருப்பிடம் ஆகும். இதில் ஆறு ஆதாரச் சக்கரங்களும், அவற்றுடன் தொடர்பு கொண்ட முப்பத்தாறு தத்துவங்களும் அடங்கும். பிரணவம் உள்ளேயும் உள்ளது; வெளியிலும் உள்ளது. எனவே பிரணவ உடல் பெற்ற ஒருவர் எந்த உலகத்துக்கும் சென்று வர இயலும்.
 
#1030 to #1034

#1030. பிரணவத்தின் வடிவம்

எடுக்கின்ற பாதங்கள் மூன்ற தெழுத்தைக்
கடுத்த முகம் இரண்டு; ஆறு கண் ஆகப்
படித்து எண்ணும் நா ஏழு; கொம்பு ஒரு நாலும்;
அடுத்து எழு கண் ஆனா அந்த மிலாற்கே.

பிரணவத்துக்கு மூன்று பாதங்களும் , இரண்டு கூரிய முகங்களும், ஆறு கண்களும், ஏழு நாக்குகளும், நான்கு கொம்புகளும் பொருந்தி விளங்கும்.

#1031. ஆன்மா அழிவற்றது


அந்தம் இலானுக்கு அகலிடம் தான் இல்லை;
அந்தம் இலானை அளப்பவர் தாம் இல்லை;
அந்தம் இலானுக்கு அடுத்த சொல் தான் இல்லை;
அந்தம் இலானை அறிந்து கொள் பத்தே.


எல்லை இல்லாத ஆன்மாவே பிரணவம் ஆகும். அதற்கு என்று ஒரு இருப்பிடம் இல்லை; அதை வரையறுக்க முடியாது; அதைச் சொற்களால் விளக்கவும் முடியாது. அதன் வடிவம் தமிழில் ‘பத்து’ என்ற எண்ணின் குறியீடாகிய ‘ய’ என்பது . இதுவே சூலத்தின் வடிவம் ஆகும். பிரணவத்தில் இரண்டு முகங்களையும் இந்த ‘ய’காரம் இணைக்கும்.

#1032. சிரசின் மேல் தோன்றுவாள் சக்தி


பத்து இட்டு, அங்கு எட்டு இட்டு, நால் இட்டு,
மட்டு இட்ட குண்டம் மலர்ந்து எழு தாமரை
கட்டிட்டு நின்று கலந்த மெய் ஆகமும்
பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே.


இரு கண்களில் விளங்கும் சந்திர, சூரிய கலைகளாகிய ‘அ ‘கார, ‘உ’காரங்களை புருவத்தின் நடுவில் ஒன்றாகச் சேர்க்க வேண்டும். ‘எட்டு’ என்னும் எண்ணைக் குறிக்கும் ‘அ’ காரமாகிய சந்திர கலையினால் ஆறு இதழ்கள் கொண்ட சுவாதிஷ்டானத்தையும், நான்கு இதழ்கள் கொண்ட மூலாதாரத்தையும் மாற்றம் அடையச் செய்ய வேண்டும். சுவாதிஷ்டானச் சக்கரம் மலரும் போது விந்து ஜெயம் ஏற்பட்டும். ஆறு ஆதாரங்களும் ஒன்று படும். உணர்வாகக் கலந்து சென்று சிரசின் மேல் உள்ள பார்வதி தேவியாகிய சக்தியுடன் சேந்து நிற்கும்.

#1033. சதாசிவன் பொருந்தும் வகை.


பார்ப்பதி பாகன் பரந்தகை நால்ஐஞ்சு
காற்பதி பத்து, முகம் பத்துக் கண்களும்
பூப்பதி பாதம் இரண்டு சுடர் முடி
நாற்பது சோத்திரம் நல்இரு பத்தஞ்சே.


பார்வதி பாகனாகிய சதாசிவனுக்கு மூலாதாரத்தில் உள்ள கலைகள் நான்கு ( வ , ஷ , ச’, ஸ ) ஆகும்.
இவரே பஞ்சப் பிராணன்களுக்குத் தலைவர். ஐந்து பூதங்களிலும் சிவனும், சக்தியும் விளங்குவர். பத்து முகங்களும் அவற்றில் ஒளிமயமாக உள்ளதை அறியும். இடை கலை, பிங்கலை என்ற நாடிகள் சுவாதிஷ்டானத்தில் விளங்கும். ஒளிமயமான முடி ஒன்று இருக்கும். இடைகலை, பிங்கலை நாடிகள் ஐந்து பூதங்களில் உண்டாக்கும் நாதம் பத்து ஆகும். மொத்தத் தத்துவங்கள் இருபத்து ஐந்து ஆகும்.

#1034. முத்தி என்பது என்ன?


அஞ்சு இட்ட கோலம் அளப்பன ஐயைந்தும்,
மஞ்சிட்ட குண்டம் மலர்ந்து அங்கு இருத்தலால்
பஞ்சு இட்ட சோதி பரந்த பரஞ்சுடர்
கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதல் முக்தியே.

ஆன்மாவுக்கு ஐந்து கோசங்கள் உள்ளன. அவை அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞான மய கோசம், ஆனந்தமய கோசம். உடலில் உள்ள தத்துவங்கள் இருபத்தைந்து. சஹஸ்ரதளம் பனிப் படலம் போன்று தெளிவில்லாமல் இருக்கும். குண்டம் விரியும் போது பரந்து விரியும் கதிர்கள் சென்று சுடரும் நாதமும் ஆன அக்கினியுடன் கூடுவது முத்தி எனப்படும்.
 
I Thank the readers of this thread for the increased traffic to ~900 in the past 24 hours. You are welcome to use the links given below to read all the posts of the entire Thirumanthiram in a more organized manner.

Thiru Moolar's Thirumanthiram blogs:

1. திருமந்திரம் - முதலாம் தந்திரம்

2. திருமந்திரம் - இரண்டாம் தந்திரம்

3. திருமந்திரம் - மூன்றாம் தந்திரம்

4. திருமந்திரம் - நான்காம் தந்திரம்

5. திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

6. திருமந்திரம் -ஆறாம் தந்திரம்

7. திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

8. திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

9. திருமந்திரம் - ஒன்பதாம் தந்திரம்


திருமூலரின் திருமந்திரம் சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறை ஆகும். தமிழில் முதல் முதலில் தோன்றிய யோக நூல் இது என்பது இதன் தனிச் சிறப்பு. முதல் சித்தர் திருமூலரே ஆவார். இவர் பதினெட்டு சித்தர்களில் ஒருவர் மட்டுமல்ல. அறுபத்து மூன்று நாயன்மார்களிலும் ஒருவர் ஆவார் திருமூலர். திருவாவடுதுரையில் ஓர் அரச மரத்தின் கீழ் மூவாயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். ஆண்டுக்கு ஒரு பாடல் என்று மூவாயிரம் பாடல்களை இவர் இயற்றினார் என்பர்.
 
#1035 to #1039

#1035. பற்று அறும் இன்பம் வரும்

முத்த நற்சோதி முழுச்சுடர் ஆனவன்
கற்று அற்று நின்றார் கருத்துள் இருந்திடும்
பற்று அற நாடிப், பரந்த ஒளியூடுபோய்
செற்றற்று இருந்தவர் சேர்ந்திருந்தாரே.


சிவபெருமான் மலங்கள் இல்லாத பரஞ்சோதிச் சுடர் ஆவான். கற்றவற்றைக் கடந்து, அவற்றில் மயங்காமல் நிற்பவர்களின் கருத்தில் சிவன் எழுந்தருள்வான். உலகப் பற்றை ஒழித்து விட்டு, பரவிச் செல்லும் இயல்புடைய குண்டலினியின் ஒளியின் உதவியால், ஆதாரங்களைக் கடந்து சென்று சிவனுடன் சேர்ந்து இருப்பவர்கள் இன்பம் ற்று மகிழ்வுடன் இருப்பர்.

#1036. மூலக் கனலை வெறுத்தவர்


சேர்ந்த கலை அஞ்சும் சேருமிக் குண்டமும்;
ஆர்ந்த திசைகளும் அங்கே அமர்ந்திடும்
பாய்ந்த ஐம்பூதமும் பார்க்கின்ற வன்னியைக்
காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே.


பிரணவம் என்னும் குண்டம் நிவிருத்தி முதலான ஐந்து கலைகள் பொருந்துகின்ற இடம். இதில் நிலை பெறும் வண்ணம் திசைகளும் வந்து பொருந்தும். ஐம்பூதங்களையும் இயக்குவது மூலத் தீ. இதை கீழே நோக்க விடாமலும், ஐம்பூதங்களை இயக்காமலும் காய்பவர் பிரணவத்துடன் கலந்தவர் ஆவர்.

#1037. சிவனை விட்டுப் பிரியாதீர்கள்!


மெய்கண்ட மாம்விரி நீருல கேழையும்
உய்கண்டஞ் செய்த வொருவனைச் சேருமின்
மெய்கண்ட ஞானந் திருந்திய தேவர்கள்
பொய்கண்ட மில்லாப் பொருள் கலந்தாரே.


பரந்த நீரால் சூழப்பட்ட ஏழு உலகங்களையும் உய்யும்படிச் செய்யும் ஒப்பற்ற தலைவன் சிவனைச் சேருங்கள்! பலன்களில் விருப்பம் கொண்டு செய்யும் யாகம் முதலியவற்றால் பெற்ற அரிய சித்திகளை விடப் பலன்களை எதிர்பாராமல் இறைவனுடன் இணைவதே நல்லது என்ற ஞானம் பெற்ற தேவர்கள், பொய் என்ற ஒன்றினால் மாசுபடாத மெய்யான தலைவன் சிவனுடன் பிரிவின்றிச் சேர்ந்து இருப்பார்கள்.

#1038. சிவனைச் சிரசில் தியானிப்பீர்!


கலந்திரு பாத மிருகர மாகு
மலர்ந்திரு குண்ட மகாரத்தோர் மூக்கு
மலர்ந்தெழு செம்முக மற்றைக்கண் ணெற்றி
உணர்ந்திருங் குஞ்சியங் குத்தம னார்க்கே.

தாமரை மலர் போல மலர்ந்துள்ள சஹஸ்ரதளத்தில் உறைபவன் சிவ பெருமான். இடைகலை, பிங்கலை நாடிகளே அவன் இரு திருவடிகள்; சுழுமுனையே அவன் மூக்கு; மலர்ந்து சிவந்த ஒளியே அவன் திருமுகம். திங்கள், கதிரவன் இவற்றுடன் விளங்கும் அக்கினியே அவன் நெற்றிக் கண். சிவனைச் சிரசில், குடுமிக்கு மேல் உள்ள இடத்தில், இவ்வாறு தியானிப்பீர்!

#1039. அனைத்தையும் தருவான் சிவன்


உத்தமன் சோதி உளன் ஒரு பாலனாய்;
மத்திமன் ஆகி மலர்ந்து அங்கு இருந்திடும்
பச்சிம திக்கும் பரந்து குளிர்ந்தன,
சத்திமான் ஆகத் தழைத்த கொடியே.


மூலாதாரத்தில் விளங்கும் பொழுது சிவன் ஒரு சிறிய பாலகன். அது குண்டலினி சக்தியின் வாலைப் பருவம் ஆகும். சிவன் இளைஞன் பருவத்தை அடையும் போது சஹஸ்ரதளத்தில் ஈசான மூர்த்தியாகி விடுவான். அது குண்டலினி சக்தியின் தருணீப் பருவம். அப்போது தலையின் பின் பக்கத்தில் இருக்கும் சிறு மூளையில் ஆற்றல் பெருகும். அது மேலே சென்று பிரமரந்திரம் என்னும் உச்சிக் குழியை அடையும். ஆறு ஆதாரங்களையும் கடந்து செல்லும் அக்கினிக் கலையே ஆன்மாவைத் தழைக்கச் செய்யும்.
 
#1040 to #1044

#1040. நாம் பெறும் பெரும் செல்வம்

கொடி ஆறு சென்று குலாவிய குண்டம்
அடி இரு கோணமாய் அந்தமும் ஒக்கும்
படி ஏழ் உலகும் பரந்த சுடரை
முடியாது கண்டவர் மாதனம் ஆமே.


சித்திரணி என்னும் நாடி, தாமரை நூல் போல, முதுகுத் தண்டின் ஊடே கீழிருந்து மேல் வரை செல்லும். இதன் வழியே மூலாதாரத்தில் உள்ள தீ உடலில் உள்ள ஆறு ஆதாரங்களையும், சஹஸ்ர தளத்தையும் கடந்து மேல் நோக்கித் தலை வரை செல்லும். இவ்வாறு விரிந்து பரவிச் செல்லும் மூலாதார ஒளியைச் சோம்பல்இன்றிக் காண்பவர் மிகப் பெரிய செல்வதை பெற்றவர் ஆவர்.


#1041. மாதனத்தைப் பாதுகாப்பீர்!


மாதனம் ஆக வளர்கின்ற வன்னியைச்
சாதனம் ஆகச் சமைந்த குரு என்று
போதனம் ஆகப் பொருந்த உலகு ஆளும்
பாதனம் ஆகப் பரிந்தது பார்த்தே.


மிகப் பெரிய செல்வமாக விரிந்து பரவும் மூலத் தீயைப் பயிலும் சாதனமாகக் கொள்வார் சிறந்த குரு. அவர் போதனம் செய்யும் ஆற்றலில் பொருந்தியவர். பாதனம் என்னும் அருள் வீழ்ச்சி ஏற்படாமல் அவர் சீடர்களைப் பாதுகாப்பார்.


#1042. சோதியைக் கண்டால் அழிவில்லை


பார்த்திடம் எங்கும் பரந்துஎழு சோதியை
ஆத்தம்அது ஆகவே ஆய்ந்து அறிவார் இல்லை
காத்து உடல் உள்ளே, கருதி இருந்தவர்
மூத்து உடல் கோடி உகம் கண்டவாறே.


பார்க்கும் இடமெல்லாம் நீக்கமறப் பரவி எழும் சோதி சிவபெருமான். அவனை அன்புடன் ஆராய்ந்து அறிந்து கொண்டவர் எவருமில்லை. உடல் என்னும் ஓம குண்டத்தில் அந்த சிவப் பேரொளியைக் காத்து தியானம் செய்பவர் அறிவில் முதிர்ச்சி அடைவர். அவருக்கு வயது முதிர்ந்தாலும் பல கோடி யுகங்களைக் காண்பர்.


#1043. சகம் இருக்கும் அகத்தின் உள்ளே.


உகம் கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க
அகம் கண்ட யோகி உள்நாடி எழுப்பும்
பகம் கண்டு கொண்ட இப்பாய் கருஒப்பச்
சகம் கண்டு கொண்டது சாதனம் ஆமே.

உடலில் ஒன்பது குண்டங்கள் உள்ளன. அவை உடலில் உள்ள ஆறு ஆதாரங்கள், குவிந்த சஹஸ்ரதளம், நிமிர்ந்த சஹஸ்ரதளம் மற்றும் யோனி என்பவை. இவை ஒன்பதையும் ஒளி மயமாக எழும்படிச் செய்வான் ஒரு சிவயோகி. கருவில் குழந்தையின் வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்துமே அடங்கி இருப்பது போலவே யோகியின் உள்ளே உலகம் முழுவதும் அடங்கி இருக்கும். இங்ஙனம் அகத்தினுள் சகத்தைக் காண்பதே பெரிய சாதனை.


#1044. ஒன்பது குண்டங்கள்


சாதனை நாலு, தழல் மூன்று, வில்வயம்,
வேதனை வட்டம், வினை ஆறு, பூநிலை,
போதனை, போது, தைஞ்சு பொற்கய வாரண
நாதனை நாடும் நவகோடி தானே.


நாற்கோணம், முக்கோணம், அர்த்த சந்திரன், வட்டம், அறுகோணம், எண் கோணம், பதுமம், யோனி, நீள் வட்டம் என்னும் ஒன்பதும் ஒன்பது வகைக் குண்டங்கள் ஆகும்.




 
5. சக்தி பேதம்

5. சக்தி பேதம்

சக்தி என்னும் திவருட்செல்வி கலைமகள், மலைமகள் என்னும் பேதங்களை உடையவள்.
இவளே பரமேச்வரனுடன் வேறுபடாமல், பிரியாமல் இருந்து ஐந்தொழில்களையும் ஆற்றுகின்றாள்.


#1045 to #1049

#1045. எல்லாம் சக்தி மயம்

மாமாயை, மாயை, வயிந்தம் வைகரி
ஓ மாயை உள் ஒளி ஓர் ஆறு கோடியில்
தாம் ஆன மந்திரம் சத்தி தன் மூர்த்திகள்
ஆம் ஆய் அலவாம் திரிபுரை ஆங்கே.

சுத்த மாயை, அசுத்த மாயை, விந்து, வைகரி வாக்கு , ஓம் என்னும் பிரணவம், உள்ளொளி, ஆறு தொகுதிகளில் மந்திரம், சக்தியின் மூர்த்தி இவை அனைத்தும் சக்தியின் பல வடிவங்களே!

#1046. சக்தியின் பல வடிவங்கள்


திரிபுரை, சுந்தரி, அந்தரி, சிந்தூரப்
பரிபுரை, நாரணி, ஆம் பால வன்னத்தி
இருள்புரை, ஈசி, மனோன்மணி, என்ன
வருபல வாய் நிற்கும் மாமாது தானே.

அக்கினி, சூரியன், சந்திரன் என்னும் மூன்று கண்டங்களாக விளங்குவாள் திரிபுரை. அவள் பேரழகு வாய்ந்தவள்; வானத்தைத் தன் வடிவாகக் கொண்டவள்; செவ்வொளியுடன் திகழ்ந்து உலகினைத் தாங்குபவள்; நாராயணி என்ற பெயர் கொண்டவள்; பல வேறு வர்ணங்களில் மிளிர்பவள்; கரிய நிறத்தில் இருப்பவள், ஈசனின் சக்தியானவள்; நினைப்பவர் மனத்தில் ஒளிர்பவள்; மாறுபட்ட இவை அனைத்துமே அந்தத் திரிபுரையின் பல வேறு வடிவங்கள் ஆகும்.

#1047. கல்வி, செல்வம், முக்தி தருவாள்!


தானா அமைந்தவ முப்புரம் தன்இடைத்
தான் ஆன மூ உரு ஓர் உருத் தன்மையள்
தான் ஆன பொன் செம்மை வெண்ணிறத்தாள் கல்வி
தான் ஆன போகமும் முத்தியும் நல்குமே.

இயற்கையாகவே அமைந்துள்ள முப்புரங்களில் தானே மூவுருவெடுத்து மலைமகள், அலைமகள், கலைமகள் என்று திகழ்வாள். அந்த மூன்று உருவங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு ஒரே உருவில் சதாசிவனின் நயகியாவாள். தானே பொன்னிறம், செந்நிறம், வெண்ணிறம் கொண்டு விளங்குவாள். தானே கல்வி, செல்வம், முத்தி என்னும் மூன்றையும் தருவாள்.

#1048. அன்புடன் அறிவைத் தருவாள்


நல்கும் திரிபுரை; நாத நாதாந்தங்கள்
பல்கும் பரவிந்து பார் அண்டம் ஆனவை
நல்கும் பரை, அபிராமி, அகோசரி
புல்கும் அருளும் அப்போதந்தம் தாளுமே.

திரிபுரை அன்னை நாதத்தையும், நாதத்தைக் கடந்து விளங்கும் நாதாந்தம் என்னும் நிலையையும் தன் அன்பனுக்கு அருள்வாள்.அவளே பரவிந்துவாக இருந்து கொண்டு உலகம் முதலிய அண்டங்களை தருவாள். அவள் பரை, அவள் அபிராமி, அவள் வாக்குக்கும் மனத்துக்கும் அப்பாற்பட்ட அகோசரி என்ற போதிலும் அன்புடன் நம்மைத் தழுவிக் கொண்டு நல்ல அறிவை வழங்குவாள்.

#1049. இராசேசுவரியின் வடிவம்


தாள் அணி நூபுரம், செம்பட்டுத் தான் உடை
வார் அணி கொங்கை, மலர்க் கன்னல்வாளி வில்
ஏர் அணி அங்குசபாசம் எழில் முடி
காரணி, மாமணிக் குண்டலக் காதிக்கே.

காலணிகளானஅழகிய சிலம்புகள்; சிவந்த பட்டாடைகள்; கச்சை அணிந்த கொங்கைகள்; மலர் அம்புகள்; கரும்பு வில்; அங்குச பாசம், அழகிய தலை முடி, கருநீல நிறக் குண்டலங்கள் இவை இராசேசுவரி தேவியின் வடிவத்தில் அமைந்திருக்கும்.



 
#1050 to #1054

#1050. சண்டிகையின் வடிவம்

குண்டலக் காதி, கொலைவில் புருவத்தள்,
கொண்ட அரத்த நிறம் மன்னு கோலத்தள்
கண்டிகை ஆரம் கதிர்முடி மாமதிச்
சண்டிகை, நால்திசை தாங்கி நின்றாளே.


சண்டிகை என்னும் அம்பிகையின் திருவடிவம் இது. அவள் காதுகளில் அழகிய குண்டலங்களை அணிந்தவள்; கொல்லும் தன்மை கொண்ட வில் போல வளைந்த புருவத்தை உடையவள்; செந்நிற மேனியுடன் திகழ்பவள்; தோள் அணிகள், கழுத்தில் ஆரங்கள், ஒளி வீசும் திருமுடி, சந்திரன் இவற்றைத் தரித்தவள்; உலகின் நாகு திசைகளையும் காத்து அருள்பவள்.


#1051. வித்தையில் விளங்குபவள்


நின்ற திரிபுரை நீளும் புராதனி
குன்றில் மோகினி, மாதிருக்குஞ் சிகை,
நன்று அறி கண்டிகை, நாற்கால் கரீடணி,
துன்றிய நச்சுத் தா மரைச் சுத்தையே.

உயிர்களை உய்விக்க அவற்றுடன் கலந்து நிற்பவள் திரிபுரை. அவள் மிகவும் புராதனமானவள். குறைவில்லாத நிறைந்த அழகு உடையவள்; சீவனின் சிரசின் மேல் உள்ள சிகையில் விளங்குபவள்; அனைத்தையும் கண்டு அறியும் கண்கள் படைத்தவள்; நான்கு திசைகளில் இருப்பவற்றைத் தன் பால் வசீகரிப்பவள்; சஹஸ்ரதளத்தில் விளங்கும் வித்தியா தேவி இவள்.


#1052. அருள் புரியும் இறைவி


சுத்தவம் பாரத் தனத்தி சுகோதயள்
வத்துவ மாயாளு மாசக்தி மாபரை
அத்தகைய யான மனோரணி தானுமாய்
வாய்த்த அக்கோல மதியவள் ஆகுமே.

இறைவி தூய கச்சினை அணிந்தவள்; மாலைகள் சூடியவள்; இன்பத்தின் ஊற்றானவள்; சீவர்களை பொருளாகக் கொண்டு ஆட்கொள்ளும் மகா சக்தி; பராபரை; மனம் என்னும் ஆரண்யத்தில் வாழ்பவள்; தானே தனக்கு வடிவம் படைத்துக் கொண்ட ஞான வடிவானவள்; தானே சந்திர மண்டலம் ஆக விளங்குபவள்.


#1053. அவள் அளிப்பாள் வீடுபேறு


அவளை அறியா அமரரும் இல்லை
அவள் அன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவள் அன்றி ஐவரால் ஆவது ஒன்றில்லை
அவள் அன்றி ஊர்புகும் ஆறு அறியேனே.


அவளை அறியாத அமரர்கள் எவருமே இல்லை. அவளைக் குறித்துச் செய்யாத அருந்தவம் என்று எதுவுமே இல்லை. சீவர்களைத் தொழிற்படுத்தும் ஐந்து மூர்த்திகளும் அவள் இன்றேல் எதுவுமே செல்ல இயலாதவர். அவளை அறிந்து கொள்ளாமல் வீடுபேறு அடையும் வழியை நான் அறியேனே.


#1054. சக்தியின் ஆற்றல்


அறிவார் பராசக்தி ஆனந்தம் என்பர்
அறிவார் அருவுரு வாம்அவள் என்பர்
அறிவார் கருமம் அவள் இச்சை என்பர்
அறிவார் பரனும் அவளிடத்தானே.


அனைத்தும் அறிந்த ஞானியர் கூறுவது இதுவே:
பராசக்தி ஆனந்த வடிவானவள்;
பராசக்தி அறிவு வடிவானவள்;
நிகழ்பவை அனைத்தும் அவள் இச்சையே;
சிவனும் பராசக்தியிடம் அமைந்தவன் தான்.



 
#1055 to #1059

#1055. சிவசக்தியர் இணைந்து செயல் புரிவர்.

தான் எங்குளன், அங்கு உளள் தையல் மாதேவி,
ஊன் எங்கு உள , அங்கு உள உயிர்க்காவலன்;
வான் எங்கு உள அங்குளே வந்து மப்பாலாம்
கோன் எங்கும் நின்ற குறிபல பாரே.


எங்கெங்கு சிவம் உள்ளதோ அங்கெல்லாம் உடன் இருப்பாள் சக்தி.
எங்கெங்கு ஊன் உள்ளதோ அங்கெல்லாம் உயிருக்குக் காவல் ஆவாள்.
எங்கெங்கு வான் உள்ளதோ அங்கெல்லாம் விளங்குவாள் தலைவியாகிய சக்தி.
அதைத் தாண்டிய பரவெளியிலும் அவள் நிறைந்து நிற்கும் குறிகளை ஆராய்ந்து அறிவாய்!

#1056. யாவுமானவள் சக்தி


பராசத்தி, மாசத்தி, பல்வகை யாலும்
தராசத்தி யாய்நின்ற தன்மை உணராய்
உராசத்தி ஊழிகள் தோறும் உடனே
புராசத்தி புண்ணியம் ஆகிய போகமே.

பலவிதங்களிலும் பராசக்தியே சிறப்பு வாய்ந்தவள். அவளே அனைத்தையும் தங்குகின்ற ஆதாரசக்தி. அவளே எல்லா ஊழிகளிலும் உயிர்களைக் காப்பவள். அவளே புண்ணியச் செயல்களின் பலனை நமக்குத் தருபவள்.

#1057. ஞானமும் இன்பமும் நல்குவாள்


போகம் செய் சத்தி , புரிகுழ லாளொடும்
பாகம் செய்து ஆங்கே பராசத்தியாய் நிற்கும்,
ஆகம் செய்து ஆங்கே அடியவர் நாள்தோறும்
பாகம் செய் ஞானம் படர்கின்ற கொம்பே.


உயிர்களுக்கு இன்பத்தைத் தருபவள் சக்தி. அவள் குண்டலினி சக்தியுடன் இணைந்து பராசக்தியாக உயிர்களைப் பரிபாகம் செய்வாள். தன் அடியவர்களை மனதில் வைத்து தினமும் அவர்களுக்கு பரி பக்குவம் தருகின்ற கொழு கொம்பு அவள்.

#1058. மனத்திடை திரிபுரை


கொம்புஅனை யாளை, குவிமுலை மங்கையை,
வம்புஅவிழ் கோதையை, வானவர் நாடியைச்,
செம்பவள திருமேனிச் சிறுமியை
நம்பி என்னுள்ளே நயந்துவைத் தேனே.


உயிர்களுக்குக் கொழுகொம்பானவள் சக்தி. குவிந்த கொங்கைளை உடையவள் சக்தி. தேன் சிந்தும் மலர்களைத் தன் முடியில் அணிந்தவள் சக்தி. விண்ணவர் விரும்பும் விழுப் பொருள் ஆனவள் சக்தி. செம்பவளம் போன்ற நிறம் கொண்டவள் சக்தி. அத்தகைய சக்தியை நான் நம்பி, மிகவும் விரும்பி என் உள்ளத்தில் குடியிருத்தினேன்.

#1059. கலைகளின் தலைவி


வைத்த பொருளு மருவுயிர்ப் பன்மையும்
பத்து முகமும் பரையும் பராபரைச்
சித்தக் கரணச் செயல்களும் செய்திடும்
சாதியம் வித்தைத் தலையவ ளாமே.

உலகில் உண்டு பண்ணப் பட்ட பொருட்கள்அனைத்தும் சக்தியின் வடிவம். அவற்றுடன் நன்றாகப் பொருந்தியுள்ள உயிர்க் கூட்டம் சக்தியின் வடிவம். பத்து முகங்களுடன் பத்து திசைகளிலும் பரந்து நிறைந்து காப்பவள் சக்தி. அவள் உயர்ந்தவள். உயர்ந்தவற்றுக்கெல்லாம் உயர்ந்தவள். நம் சித்தம் முதலான அந்தக்கரணங்கள் நான்கையும் செயல்படச் செய்யும் சக்தியே வித்தைகளின் தலைவியும் ஆவாள்.
 
#1060 to # 1064

#1059. கலைகளின் தலைவி

வைத்த பொருளு மருவுயிர்ப் பன்மையும்
பத்து முகமும் பரையும் பராபரைச்
சித்தக் கரணச் செயல்களும் செய்திடும்
சாதியம் வித்தைத் தலையவ ளாமே.

உலகில் உண்டு பண்ணப் பட்ட பொருட்கள்அனைத்தும் சக்தியின் வடிவம். அவற்றுடன் நன்றாகப் பொருந்தியுள்ள உயிர்க் கூட்டம் சக்தியின் வடிவம். பத்து முகங்களுடன் பத்து திசைகளிலும் பரந்து நிறைந்து காப்பவள் சக்தி. அவள் உயர்ந்தவள். உயர்ந்தவற்றுக்கெல்லாம் உயர்ந்தவள். நம் சித்தம் முதலான அந்தக்கரணங்கள் நான்கையும் செயல்படச் செய்யும் சக்தியே வித்தைகளின் தலைவியும் ஆவாள்.

#1061. இரண்டறக் கலந்து நின்றாள்


நின்றவள் நேரிழை நீள்கலை யோடுஉற;
என்றன் அகம்படிந்து ஏழ் உலகும் தொழ
மன்று அது ஒன்றி மனோன்மணி, மங்கலி
ஒன்று எனோடு ஒன்றி நின்று ஒத்து அடைந்தாளே.

எங்கும் நிறைந்து நிற்கும் பராசக்தி என் உள்ளத்தில் முழுக் கலைகளுடன் வந்து பொருந்தினாள். ஏழு உலகத்தினரும் தொழும்படி சஹஸ்ரதலத்தில் மனோன்மணியாக நின்றாள் . மங்கலப் பொருளாகிய அவள் பிரித்து அறிய முடியாதபடி இரண்டறக் கலந்து நின்றாள்.

#1062. அடையும் வழியை அறிய வேண்டும்


ஒத்து அடங்கும் கமலத்திடை ஆயிழை,
அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி
மத்து அடைகின்ற மனோன்மணி, மங்கலி
சித்து அடைக்கும் வழி தேர்ந்து உணரார்களே.

சஹஸ்ரதளத்தில் ஒத்து அடங்கித் திகழும் பராசக்தி, அவளுடைய பெருந் தலைவனாகிய இறைவன் சிவபெருமானுடன் மகிழ்வுடன் பொருந்தி மனோன்மணியாகவும் மங்கலையாகவும் திகழ்கின்றாள். அவர்களை உள்ளத்தில் நிறுத்தி அடைத்து வைக்கும் வழியைப் பலர் தெளிவாக அறிவதில்லையே!

#1063. நற்கதி நல்குவாள்


உணர்ந்து உடனே நிற்கும் உள்ளொளி ஆகி,
மணம் கமழ் பூங்குழல் மங்கையும் தானும்
புணர்ந்து உடனே நிற்கும்; போதரும் காலைக்
கணிந்து எழுவார்க்குக் கதி அளிப்பாளே.

உணர்ந்து உடன் நிற்கும் சக்தி உள்ளொளியாவாள். மணம் பொருந்திய மலர்களைச் சூடிய சக்தி, தானும் சிவனும் புணர்ந்து நிற்கும் அந்தப் போதினில் நினைவு கூர்பவருக்கு நற்கதி நல்குவாள்.

#1064. சிவகதி காட்டினாள்


ளி ஒத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி
புளி உறு புன்பழம் போல் உள்ளே நோக்கி
தெளி உறுவித்து, சிவகதி காட்டி
ஒளி உறவைத்து என்னை உய்ய உண்டாளே.


அருள் புரிவதில் எல்லோரிடமும் ஒத்து விளங்குபவள் சக்தி. அவள் ஆனந்தமே வடிவானவள். அவள் அழகியவள். ஓட்டுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் புளியம்பழத்தைப் போல இருந்த என் உள்ளதை அவள் பக்குவப்படுத்தினாள். எனக்குச் சிவ கதியைக் காட்டினாள். பிறகு என்னையும் தன் ஒளியில் இணைத்துக் கொண்டாள்.
 
#1065 to #1069

#1065. ஆதிகாரணி பராசக்தி

உண்டு இல்லை என்றது உருச்செய்து நின்றது

வண்தில்லை மன்றினுள் மன்னி நிறைந்தது
கண்டிலர் காரண காரணி தம்மொடும்
மண்டலம் மூன்று உற மன்னி நின்றாளே.

உண்டு என்றும் இல்லை என்றும் உலகினர் தேவியைக் குறித்துக் கூறுவார். ஆனால் அந்த சக்தியே ஜீவனின் நுண்ணிய உடலைப் பரு உடலாகச் செய்பவள். அவளே வண் தில்லை அம்பலம் எனப்படும் சஹஸ்ர தளத்தில் நிலைபெற்று நிற்பவள். சிவபெருமான் அறிவு வடிவமாக இருந்து கொண்டு ஆன்மாவின் பந்த மோட்சங்களுக்குக் காரணம் ஆகின்றான். ஆனல் அதைச் செயல்படுத்துவது சக்தி என்பதை உலகத்தோர் அறிவதில்லை. சூரிய மண்டலம், சந்திரமண்டலம் அக்கினி மண்டலம் என்ற மூன்றிலும் திகழ்பவள் ஆதி காரணி பராசக்தி.

#1066. பரஞ்சுடர் ஆகிய பராசக்தி


நின்றாள் அவன்தன் உடலும் உயிருமாய்ச்

சென்றாள் சிவகதி சேரும் பராசக்தி
ஒன்றாக என்னுள் புகுந்து உணர்வு ஆகியே
நின்றாள் பரஞ்சுடர் ஏடு அங்கை யாளே.

சீவர்களின் உயிரும் உடலும் ஆனவள் சக்தி தேவி. சீவனைச் சிவனிடம் சேர்ப்பதற்குச் சக்திதேவி சந்திர மண்டலத்தை நோக்கி ஊர்த்துவ முகமாகச் சென்றாள். அவள் வேத வாக்கை ஏந்தி நிற்கும் ஒளி மயமானவள். என் உடலில் அவள் விளங்கிய போது என் உணர்வில் புகுந்து கலந்து நின்றாள்.

விளக்கம்
கலைமகள் நான்முகனின் தேவி,. இவள் சுவாதிஷ்டானச் சக்கரத்தில் ஒளி மயமாக விளங்குவாள். இவள் கீழ் நோக்கிச் சென்றால் காம உணர்வாக மாறி விடுவாள். மேல் நோக்கிச் சென்றால் சீவனைச் சிவகதியில் சேர்ப்பாள்.


#1067. ஏடு அங்கை கொண்ட நங்கை


ஏடு அங்கை நங்கை, இறைஎங்கள் முக்கண்ணி

வேடம் படிகம், விரும்பும் வெண்டாமரை’
பாடும் திருமுறை, பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னிவாய்த் தோத்திரம் சொல்லுமே.

சொல்லின் வடிவத்தில் விளங்குவாள் இறைவி. அவள் முக்கண்களை உடையவள். தூய்மையான படிகத்தைப் போன்ற வெண்ணிறம் கொண்டவள். வெண்தாமரை ஆகிய சஹஸ்ர தலத்தில் விரும்பி அமர்பவள் அவள் நாத மயமானவள். அவள் திருவடிகளைத் தலை மேல் சூடுங்கள். அவள் புகழைப் பாடுங்கள்.

#1068. ஆதித் தலைவி இவளே


தோத்திரம் செய்து, தொழுது துணை அடி

வாய்த்திட ஏத்தி வழி படு மாறிரும்பு
ஆர்த்திடும் அங்குச பாசம் பசுங் கரும்பு
ஆர்த்திடும் பூம்பிள்ளை ஆகும் ஆதிக்கே.

சக்தி தேவியைத் துதியுங்கள். அவள் இரு திருவடிகளையும் வணங்குங்கள். சூரிய சந்திரர்கள் இணைந்து விளங்கும் வண்ணம் ஒலியையும் ஒளியையும் ஒன்றாக்குங்கள். தியானத்தில் பாசம், அங்குசம், கரும்பு வில் ஏந்திய மெல்லியலாளைக் காணுங்கள்.

#1069. முக்காலமும் தோன்றும்.


ஆதி விதமிகுத்த, அண்டந் தமால் தங்கை

நீதி மலரின் மேல் நேர்இழை நாமத்தைப்
பாதியில் வைத்துப் பலகால் பயில்விரேல்
சோதி மிகுந்து முக் காலமும் தோன்றுமே.

படைப்பு பெருகுமாறு செய்பவன் பாற்கடலில் உள்ள நாரணன். அவன் தங்கையான நாராயணி சஹஸ்ரதளத்தில் வீற்றுள்ளாள். இவள் திரு நாமத்தைச் சிவசக்தியாக எண்ணித் தியானித்து வந்தால் நுண் உடல் ஒளி மயமாகி விடும். அப்போது முக்காலங்களும் நன்கு தோன்றும்.
 
#1070 to #1074

#1070. அருட் சக்தி ஆனவள்

மேதாதி ஈரெட்டும் ஆகிய மெல்லியல்
வேதாதி நூலின் விளங்கும் பராபரை
ஆதாரம் ஆகியே ஆய்ந்த பரப்பினள்
நாதாதி நாதத்துள் நல்லாருளாளே.


அகாரம் முதல் உன்மனி ஈறாக உள்ள பதினாறு கலைகளும் தேவியின் வடிவம் ஆகும். வேதம் முதலிய நூல்களில் பரமாகவும், அபரமாகவும் போற்றப்படுபவள் தேவி. இவளே ஆவாள் உயிர்களுக்கு ஆதாரம். நாதம், நாதாந்தம் இவற்றில் விளங்கும் சிவபெருமானுடைய அருட் சக்தியும் இவளே.

#1071. மயக்கத்தை மாற்றுவாள்


அருள் பெற்றவர் சொல்ல வாரீர் மனிதர்
பொருள் பெற்ற சிந்தை புவனா பதியார்
மருள் உற்ற சிந்தையை மாற்றி அருமைப்
பொருள் உற்ற சேவடி போற்றுவன் நானே.


அனுபவத்தில் தேவியின் அருள் பெற்ற மனிதர்களே! முன்னே வந்து எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்! உண்மைப் பொருளைத் தன்னுடையது ஆக்கிக்கொண்டவள் அந்தத் தேவி. அவள் அருள் புரிவதிலும் வள்ளன்மை வாய்ந்தவள். உலகத்தைப் பற்றிக் கொண்டு மயக்கத்தில் ஆழும் சீவர்களின் சிந்தையை மாற்றிப் பந்தம் இல்லாதபடிச் செய்பவள் தேவி. அவள் சேவடிகளை நான் போற்றுகின்றேன்.

#1072. வராக முகத்தினள்


ஆன வராக முகத்தி பதத்தினள்
ஈன வராகம் இடிக்கும் முசலத்தொடு
ஏனைய யுழுபடை ஏந்திய வெண்ணகை
ஊனம் அற உணர்ந்தார் உள்ளத்து ஓங்குமே.

தேவியைச் சுற்றியுள்ள எழுவரில் ஒருவள் வராகி. இவள் பன்றி முகம் உடையவள். இழிந்தவர்களின் உடலை இடித்துத் துன்புறுத்த உலக்கை, கலப்பை போன்ற ஆயுதங்களை ஏந்தியவள். குற்றங்கள் இல்லாத இவளை, ஊன் உடலைக் கடந்து தியானிப்பவர்களின் மனத்தில் இந்த சக்திச் சிறந்து விளங்குவாள்.

#1073. தேவி வழிபாடு


ஓங்காரி என்பாள் அவள் ஒருபெண் பிள்ளை
நீங்காத பச்ச்சை நிறத்தை உடையவள்,
ஆங்காரி ஆகியே ஐவரைப் பெற்றிட்டு
ரீங்காரத் துள்ளே இனிது இருந்தாளே.


ஓம் என்ற பிரணவ வடிவம் கொண்டவள் தேவி. ஐந்தொழில்களின் தலைவியும் அவளே. நீங்காத பச்சை நிறம் கொண்டவள் தேவி. அஹங்காரத் தத்துவத்துடன் அவள் பொருந்தி விளங்கும்போது தன்னுடைய அம்சங்களாகச் சதாசிவன், மகேசுரன், உருத்திரன், திருமால், நான்முகன் என்ற ஐந்து தெய்வங்களை உருவாக்கினாள். ஹ்ரீம் என்னும் மந்திர பீஜத்துள் தேவி இனிதாக வீற்றிருப்பாள்.

#1074. பதினான்கு வித்தைகள்


தானே தலைவி என நின்ற தற்பரை
தானே உயிர்வித்துத் தந்த பதினாலும்
வானோர் தலமும், மனமும் நற்புத்தியும்
தானே சிவகதித் தன்மையும் ஆமே.


பராசக்தியே எல்லாவற்றுக்கும் தலைவி. வாக்குவடிவமாக விளங்கும் பதினான்கு வித்தைகளுக்கும் அவளே தலைவி. தேவர்களின் வான மண்டலம், மன மண்டலம், நல்ல அறிவு எல்லாம் அவளே. நாதாந்ததைக் கடந்த சிவகதியை அளிப்பவளும் அவளே.

பதினான்கு வித்தைகள்:

வேதங்கள்………………. 4

அங்கம்…………………..6

நியாயம்………………….1

மீமாம்சை ……………….1

ஸ்மிருதி…………………1

புராணம்………………….1

 

Latest ads

Back
Top