Excerpts from Narayaneeyam
ஸ்ரீ குருவாயூரப்பனின் மகிமைகளை எடுத்துரைக்கும் ‘ஸ்ரீமத் நாராயணீயம்’ பாடிய நாராயண பட்டதிரியை நாம் அறிவோம். நாராயண பட்டதிரியுடன் ஸ்ரீ குருவாயூரப்பன் நிகழ்த்திய உரையாடல் மிகவும் சுவையானது, ரசிக்கத்தக்கது.
தம் முன் தோன்றிய ஸ்ரீகுருவாயூரப்பனிடம், பகவானே… நீங்கள் மிகவும் விரும்பும் நிவேதனம் என்ன?” என்று பட்டதிரி கேட்கிறார்.
நெய்ப் பாயசம்” – இது குருவாயூரப்பன்.
ஒருவேளை நெய்ப் பாயசம் செய்ய எனக்கு வசதி இல்லை என்றால், நான் என்ன செய்வது?”
‘‘அவலும் வெல்லமும் போதுமே!”
‘‘சரி பகவானே… அவலும் வெல்லமும் நைவேத்தியம் செய்து வைக்க எனக்கு வசதி இல்லை என்றால்?”
‘‘வெண்ணெய், வாழைப்பழம், பால், தயிர் – இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து வழிபடு. ஏற்றுக் கொள்கிறேன்.”
‘‘மன்னிக்க வேண்டும் பகவானே… தற்போது தாங்கள் சொன்ன நான்கும் என்னிடம் இல்லை என்றால்?”
‘‘துளசி இலைகள் அல்லது ஒரு உத்தரணி தீர்த்தமே எமக்குத் திருப்தி தரும்!”
‘‘அதுவும் என்னிடம் இல்லை என்றால்?” – பட்டதிரியின் குரல் தழைந்து போகிறது.
‘‘எனக்கு நைவேத்தியம் செய்து வைக்க ஒன்றும் இல்லையே என்று வருத்தப்பட்டு கவலையுடன் நீ அழுவாய் அல்லவா… அப்போது உன் கண்களில் இருந்து கசியும் இரண்டு சொட்டுக் கண்ணீரே எனக்குப் போதும்” என்று பகவான் சொன்னதும், ‘ஓ’வென்று கதறி அழுதே விட்டார் பட்டதிரி.
தெய்வங்கள், தன் பக்தர்களிடம் எதையும் எதிர் பார்ப்பதில்லை.
எதிர்பார்ப்பது எல்லாம் – உண்மையான பக்தி ஒன்றைத்தான்!
Hare Krishna