ஆத்ம தரிசனம்.
மரம் வெட்டி விற்று, அந்த
வருமானத்தில் வாழ்ந்தான்
சிரமம் நிறைந்த வாழ்க்கை,
சிறு விறகு வெட்டி ஒருவன்.
மகான் கூறினார் அவனிடம்,
“மகனே! நீ காட்டுக்குள் செல்;
செல்வம் கொழித்து, நல்லதோர்
செல்வந்தனாய் ஆகிவிடுவாய்!”
அடுத்த நாள், அந்த விறகுவெட்டி
அடர்ந்த காட்டுக்குள் சென்றபோது,
விலையுயர்ந்த மரக் கூட்டங்களைத்
தொலை தூரம் வரையில் கண்டான்.
தினமும் சிறிது வெட்டி விற்று,
மனம் மகிழ்ந்து வாழலானான்.
“இன்னும் உள்ளே சென்றால்,
என்னென்ன உள்ளதோ?” என்று
கண்டறியச் சென்றான், ஒரு முறை
பண்டு செல்லாத பகுதிகளுக்கு!
தாமிரச் சுரங்கத்தைக் கண்டான்;
கோரிய பொருளைப் பெற்றான்.
இன்னமும் உள்ளே சென்றால்,
இருந்தது வெள்ளிச் சுரங்கம்!
அள்ளிக் கொண்டு வந்தவனுக்கு,
கொள்ளை கொள்ளை மகிழ்ச்சி!
இன்னும் உள்ளே சென்றவன்,
பொன்னும், வைரக்கற்களும் கூடி
மின்னும் சுரங்கத்தைக் கண்டான்.
இன்னும் வேறு என்ன வேண்டும்?
சித்திகள் எட்டும் இவ்வகையே.
யத்தனம் நாம் செய்யச் செய்ய,
புத்தம் புதிதாகக் கிடைக்கும்;
மொத்தமாக அல்ல, என்றுமே!
சக்திகளில் மயங்கி நிற்காமல்,
யுக்தியுடன் தொடர்ந்து சென்றால்,
கிடைக்கும் ஆத்ம தரிசனமும்;
கிடைக்கும் இறையின் தரிசனமும்!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
ம்!................. அது காடுகள் இருந்தகாலம்!!