சிந்தனை தந்த இந்திர ஜாலம்
#038. ஏழு ஜாடித் தங்கம்
அரசனுக்கு நாவிதனான அவன்
பரம சுகமாகவே வாழ்ந்து வந்தான்.
இல்லை எந்தக் குறையும், அரசன்
அள்ளித் தந்த தங்கக் காசுகளால்.
காட்டு வழியே செல்லும்போது, ஒரு
காட்டுக் குரல் அவனிடம் கேட்டது,
“வேண்டுமா உனக்கு ஏழு ஜாடித் தங்கம்?”
“வேண்டும்! வேண்டும்!” என்றான் அவன்.
மரத்தில் வாழ்ந்த யக்ஷனின் குரலே அது!
மரத்திலேயே அவன் மறைந்திருந்தான்.
“வீட்டுக்குப் போவாய்! நான் உன்னுடைய
வீட்டிலேயே வைத்து விட்டேன் அதை!”
ஓட்டமும் நடையுமாக, மூச்சிரைக்க
வீட்டை அடைந்தவன் அங்கு கண்டது
அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த
ஏழு ஜாடிகளில் தங்கக் காசுகள்!
ஆறு ஜாடிகள் நிரம்பி வழிந்தாலும்,
ஒரு ஜாடியில் குறைவாக இருந்தது.
மறு எண்ணம் இல்லாமல் அவன்
நிரப்ப முயன்றான் அந்த ஜாடியை.
தன் செல்வங்கள் அனைத்தையும்,
தன் முன் உள்ள ஜாடியில் இட்டான்.
வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம்
விற்றுத் தங்கமாக மாற்றி இட்டான்.
அரசனிடம் கெஞ்சியும், கூத்தாடியும்,
அதிகக் காசுகள் பெற்று இட்டான்.
பிச்சை எடுத்தும் கூட முயன்றான்;
இச்சை மட்டும் நிறைவேறவில்லை.
மாய ஜாடி நிறையவே இல்லை!
மன்னன் அவனிடம் கேட்டான்,
“முன்னம் நன்றாக இருந்தாய் நீ!
இன்னம் கூலி அதிகம் பெற்றாலும்,
சின்னத்தனம் ஏன் சொல்? உனக்கு
மின்னும் ஏழு ஜாடிகள் கிடைத்தா?”
திடுக்கிட்ட நாவிதனிடம், அரசன்
வெடுக்கென்று சொன்னான் இதை,
“ஒரு தங்கக் காசு கூட உன்னால்
விரும்பிச் செலவு செய்ய முடியாது!
ஒரு நாளும் அந்த மாய ஜாடியை
ஒருவராலும் நிரப்பவே முடியாது!
அது இருந்தாலே உன் குடும்பம்
அகதி ஆகிவிடும் திருப்பிக் கொடு!”
காட்டையடைந்து யக்ஷனிடம் சொன்னான்,
“மீட்டுக்கொள் உன் ஏழு தாங்க ஜாடிகளை;
வீட்டை விட்டுப் போனாலே போதும்;
மாட்டி விட்டு வேடிக்கை வேண்டாம்!”
“நல்லது அப்படியே” என்றான் யக்ஷன்.
நல்ல காலம் பிறக்கும் என்று நம்பி,
வீட்டை அடைந்தால் ஜாடிகளை அவன்
போட்டிருந்த செல்வத்துடனே காணோம்!
புது வெள்ளம் பழைய வெள்ளத்தை அடித்துப்
போவதுபோல எல்லாமே மறைந்து விட்டன!
பேராசை பெரு நஷ்டம் ஆனதால்,
நிராசை மிகவும் அடைந்தான்.
அனைத்தையும் இழந்து நின்றதால்,
களைத்துப் போய்விட்டான் அவன்.
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி