அவரவர் வீடு! அவரவர் பாடு!
நாரணன் கேட்டான் ஒரு நன்னாளில்
நாரத முனியிடம் இந்தக் கேள்வியை.
"மாற்றினேன் சுதர்சனத்தைக் கோளமாக!
மாறிய மனித இனத்தின் மேல் ஏவினேன்!
'கோவிட்' என்பது கூட 'கோவிந்த்'தின் மரூஉ.
ஏவிய பின் நடந்தது என்ன எனக் கூறுவீர் " என
கூறினார் நாரதர் தான் கண்ட விவரங்களை.
"மாறி விடவில்லை மனித இனம் மிகையாக.
ஓடி ஆடித் திரிந்தவர்கள் பலர் இன்று அஞ்சி,
ஓய்ந்து, சோர்ந்து, தம் இல்லங்களில் சிறை!
பணி புரிகின்றனர் அவரவர் இல்லங்களில்;
பாடம் படிக்கின்றனர் அவரவர் இல்லங்களில்.
பாடி ஒளி பரப்புகின்றனர் வீட்டில் இருந்தே!
ஆடி ஒளி பரப்புகின்றனர் வீட்டில் இருந்தே!
கண்டும், கேட்டும் மகிழ்கின்றார்கள் உலக மக்கள்
குட்டித் திரையிலோ அல்லது பெரிய திரையிலோ!
'டும்! டும்!' திருமணம் மாறிவிட்டது இன்று - ஒரு
'ஃ ஜூம்! ஃ ஜூம்!' காணொளித் திருமணமாக.
பந்தல் இல்லை, பந்தி இல்லை, செலவில்லை;
பார்ட்டியும், விருந்தும் அவவரர் இல்லங்களில்.
கற்றுக் கொண்டு விட்டது உலகம் - ஊர்
சுற்றாமலேயே காரியத்தை சாதிப்பதற்கு!
குறைத்து விட்டீர் பூமி பாரத்தை மிகவும்;
நிறைத்து விட்டீர் தூய பஞ்ச பூதங்களால்.
திருந்திய மனிதர்கள் என்றும் மறந்தும் கூட
புரியக் கூடாது மீண்டும் அதே தவறுகளை.
சாம, தான, பேத, தண்டப் பிரயோகங்களில்
சமம் ஆக வேறு யார் உள்ளார் தங்களுக்கு?"
வாழ்க வளமுடன்! வாழ்க நலமுடன்!
உங்கள் உண்மையுள்ள,
விசாலாக்ஷி ரமணி
P.S
A request to the readers of this thread.
I am not in any social media but I want this message to reach as many people as possible.
So kindly share this in your social network so that mankind will refrain from repeating its mistake.
Thank you in advance!