• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

Raji Ram

Active member
யதார்த்த வாழ்வில் எத்தனை இன்பங்கள், துன்பங்கள்!
யதார்த்த நடையில் வரும் எளிய இந்தத் தொகுப்பில்
மேன்மையாக இறை அளித்த இம் மனிதப் பிறவியை,
மென்மையான கவிதைகளால் மாற்ற முனைகிறேன்!

உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம்
 
கேட்டதும் கிடைத்ததும்!

வேடிக்கையாகப் பொழுது போக்குவதையே
வாடிக்கையாகக் கொண்டவன் ஒருவன்.

பள்ளிப் படிப்பிலும் கவனம் இல்லாமல்,
துள்ளிக் குதித்து விளையாடி மகிழ்ந்தான்!

ஆண்டுகள் உருண்டு ஓட, இவனும் வளர்ந்து
ஆண் மகனாகி, வேலைக்கு அலைந்தான்.

உல்லாச வாழ்க்கை வாழ நினைத்தவன்,
செல்லக் காசாகிப் போனதில் உடைந்தான்!

பெரிய ஒரு ஞானியின் உரைகள் ஒரு முறை
பெரிதாகத் தன் காதில் விழ, கவனித்தான்.

இறைவனை முழுதாய் நம்பி வேண்டினால்,
குறையின்றி அவனும் அருளுவது அறிந்தான்.

ஒருமனதாகத் தினம் தியானம் செய்தான்;
ஒரு நாள் இறைவனை நேரில் கண்டான்!

சுற்றிலும் இளம் பெண்களும், தான் ஊர்
சுற்றி வரப் பெரிய வாகனமும், மேலும்

பை நிறையக் காசும் தினமும் வேண்டுமெனப்
பைய வரம் கேட்டவனை இறைவன் நோக்கினார்!

'அவ்வாறே ஆகட்டும்', என்று உரைத்த அவரும்,
இவ்வாறு அவனுக்கு வேலையை அமைத்தார்!

சில்லறைக் காசுகள் பையை தினம் நிறைக்க,
சில்லென்று குளு குளுப் பேருந்து கிடைக்க,

சுற்றிலும் இளம் பெண்கள் நடந்தனர் - அதில்
சுற்றி வந்த இவனே அந்தப் பேருந்தின் நடத்துனர்! :crazy:

 
மாற முயலலாமே!


சொல்லுவது எளிது, செய்வதோ மிகக் கடினம்;

எள்ளளவும் மாறாதோருடன் வாழ்வதும் கடினம்!

கொஞ்சம் நம்மை மாற்றினால், நெஞ்சத்தில் வந்து

கொஞ்சம் அமைதி கிட்டுமோ என எண்ணுகிறேன்!

இப்பிறவியில் கிடைத்தது இவ்வளவுதான் என

இப்பொழுதே உணர்ந்து, கெட்டவை மறக்கலாம்!

எதிர்ப் பேச்சே பேசாது, காதையும் மூடியிருக்கலாம்!

எதிர்பார்ப்பைக் குறைத்து, ஏமாற்றம் தவிர்க்கலாம்!

நம்மால் முடிந்ததை மட்டுமே செய்துவிட்டு,

என்னால் இனி முடியாது என்று ஒதுங்கலாம்!

நம்மிடம் உள்ள திறமை மறுக்கப்பட்டாலும்,

நம்முடைய தனிமையில் வெளிப்படுத்தலாம்!

மிதியடிபோல மாறவேண்டாம்! அதே சமயம்

அதிரடியாய் எதிர் பாணம் போட வேண்டாம்!

நம் வயதைக் காரணமாகக் காட்டி, இனிமேல்

நம் வேலைகளின் இலக்கை நிர்ணயிக்கலாம்!

நல்ல நிகழ்வுகளை மட்டுமே நினைத்து, மன

அல்லல் தவிர்க்க எப்போதும் விழையலாம்!

‘ஒன்றரை கண்ணன் ராஜ பார்வை பார்க்க மாட்டான்!’,

என்பதை உணர்ந்து கொண்டால், அமைதி கிட்டலாம்! :thumb:

 
வாழ்வை இன்பமாக்குவோம்…


இது என்ன? புது விஷயமா? நிச்சயமாக இல்லை, இல்லை;
பொதுவான கருத்துக்களையே மீண்டும் சொல்லும் வேலை!

வினைப்பயனால் அமைவதுவே நமக்குப் பூவுலக வாழ்க்கை;
துணை அமைவதும் விதியால் வந்துவிடும் ஒரு சேர்க்கை!

எப்படி இனிமையாக்குவது விதியால் வரும் அமைப்பை?
அப்படி எண்ணியதன் விளைவே இன்று எழுதும் கவிதை!

வேதாளத்திற்கு வாக்குப்பட்டால் முருங்கை மரம் ஏறணும்!
பாதாளத்திற்கு வழி கேட்டால் பாதையே மாறிப் போகணும்!

பிறரை மாற்ற விழைவதை விட்டு, நாம் மாறினால் என்ன?
துயரைத் துடைக்க இதை விட்டால் வேறு மார்க்கம் என்ன?

விட்டுக் கொடுக்க நம்முடைய துணை அறியாவிடில், நாமே
விட்டுக் கொடுத்துத்தான் பார்ப்போமே! வாழ்வும் மாறிடுமே!

உடனிருப்போருக்குப் பிடிப்பதை நாம் செய்து விடுவோமே;
உடனிருப்போருக்குப் பிடிக்காததைச் செய்யாது விடுவோமே!

நானே பெரியவன், நல்ல அறிவாளி என இருவரும் எண்ண,
தானே வந்து சேரும் விஷயம், தினம் வாக்குவாதம் பண்ண!

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் என அறிந்தும் – இந்த
அரிய பிறவியைக் கசந்து போக வைக்க முயலவேண்டாம்!

குறைவின்றி நம்மைப் படைத்த இறையைத் தலை வணங்கி,
குறைவில்லா இன்பம் பெற இக்கணம் முதல் மாறிடுவோம்! :decision:

 
கொஞ்சம் சிரிக்க ...

நக்கல் ஹைக்கூ!


என்ன கிழித்தீரென அவரைக் கேட்கவே முடியாது! – அவர்
சின்னத் தாளை நாட்காட்டியில் தினம் காலை கிழிப்பதால்!

**************************************************

நாளேடுகளை வாசலில் குனிந்து அவள் எடுப்பதேயில்லை - ஒரு
நாளில் அவரின் உடற்பயிற்சி அது ஒன்றே என்பதால்!

**************************************************

வாசல் தெளித்துக் கோலமிட அவள் செல்வதே கிடையாது!
ஈசல் போல் வரும் “ஒண்ணர்கள்” துர்நாற்றம் பரப்புவதால்!

**************************************************

ஆட்டோக்காரனிடம் அவள் பேரம் பேசுவதே கிடையாது – அவன்
ஓட்டும் படுவேகத்தால் எலும்புகள் உடைக்க முயலுவதால்!

**************************************************

மறவாது தினம் காக்கைக்கு அன்னம் வைக்க பயம்தான்!
தவறாது அதை எச்சமாக அவள் துணியில் இடுவதால்!

**************************************************

பட்டணத்தில் வாக்குப்பட்டு முன்னுக்கு வர ஏற்றாள் தாலிக் கயிறு!
பத்து மாதத்தில் முன்னுக்கு வந்ததோ பானை போல் பெரிய வயிறு!

**************************************************

அவள் மீது கரிசனம் பக்கத்து வீட்டு ஓர்ப்படிக்கு! தன் திருஷ்டி
அவள் மீது படாதிருக்கப் போட்டாள் மதில் சுவர் எட்டடிக்கு! :target:

**************************************************


 
பைகள்!


பொறுமையாய்க் கருப்பையுள் கிடந்துழன்ற பின்னர்,
வெறுமையாய்க் காற்றடைத்த பையாய்த் திரிந்தாலும்,

காலபைரவனை உருவாக்கியவனின் ஐந்தெழுத்தை,
காலத்தில் முக்தி பெற, பைய உணர்ந்து ஓதுவோம்!

இல்லத்தில் அன்பைப் பெருக்கி, ஆனந்திப்போம்!
உள்ளத்தில் பண்பைக் கூட்டி, நன்மை செய்வோம்!

சிறந்த நட்பைப் போற்றி, வேற்றுமைகள் மறப்போம்!
பிறந்த பயன் பெற, வெறுப்பை அறவே துறப்போம்! :bounce:

 
சி. மு – சி. பி…..


கி.மு கி.பி என்றால் (ஏசு) கிருஸ்துவுக்கு முன் – பின்!

சி.மு சி.பி என்றால் (காடராக்ட்) சிகிச்சைக்கு முன் – பின்!

கிட்டப் பார்வைக் கண்ணாடி தேவையானது அன்று;

பட்டப் பகலில் வீட்டினுள்ளே குளிர்க் கண்ணாடி இன்று!

நீலமெல்லாம் பச்சையாகி வண்ண மாற்றம் அன்று;

நீல வண்ணம் பிரகாசமாய் ஒளிருகிறது இன்று!

தரையில் ஓடும் பல்லி கூடத் தெரியவில்லை அன்று – வேஷ்டிக்

கரையில் ஓடும் சிற்றெறும்பு தட்டப்படுது இன்று!

தெருவில் வரும் பஸ் நம்பர் தெரியவில்லை அன்று;

இரவில் குட்டி நக்ஷத்திரமும் மின்னுகிறது இன்று!

தேங்காய் விழுந்தாலும் கண்ணில் படாது அன்று – குட்டி

மாங்காய் கீழே விழுந்தால் கூடக் கண்ணில் படுது இன்று!

கார் ஓட்டக் கடினமென்று விற்கப்பட்டது அன்று;

கார் ஓட்ட முடியுமென்று எண்ணும் மனம் இன்று!

கண்ணாடியை மறந்து சென்றால் தொல்லைதானே அன்று;

கண்ணாடியே தேவையில்லை நல்ல பார்வை இன்று!! :nod:

 
இனியது கேட்பின்…..


கண் விழித்ததும் கேட்கும் கழுதைக் குரல் இனியது!
மண் காயும் காலத்தில் மயிலின் கானம் இனியது!

காலை வேளை வேலையாள் பெருக்கும் சத்தம் இனியது!
மாலை வேளை ஊதும் சங்கு தொழிலாளிக்கு இனியது!

வேட்டையாடும் பாம்புக்குத் தவளைச் சத்தம் இனியது!
கோட்டைவிடும் கிரிக்கெட் வீரருக்கு மழைச் சத்தம் இனியது!

மகப்பேறு மருத்துவமனையில் குழந்தையின் அழுகை இனியது!
மிகப் பெரிய அறுவை வித்துவானின் மங்களம் கேட்க இனியது!

 
முதலாவதும், இரண்டாவதும்…


முதலாம் குழந்தைப் பருவம் மிகவும் இனியதே!

பெறலாம் ஈன்றோரின் அரவணைப்பை இனிதே!

இரண்டாம் குழந்தைப் பருவமோ மிகக் கொடியதே!

இரண்டாம் கருத்துக்கும் வழியில்லாது முடிவதே!

பிஞ்சுக் குழந்தையைக் கையாள்வதுபோலத் தலை

பஞ்சாய் நரைத்தவரைக் கையாள முடிவதில்லை!

பல்லில்லாத் தன் பொக்கைவாய்ச் சிரிப்பால், மற்றவரைச்

செல்லாக் காசுபோலான முதியவர் கவர முடிவதில்லை!

உலகுக்குத் தன்னைக் கொடுத்தவரை விடத் தான்

உலகுக்குக் கொடுத்த வாரிசிடம் பாசமும் அதிகமே!

முற்பிறவியில் எனக்கு இல்லாதிருந்த நம்பிக்கை,

இப்பிறவியில் சிலரின் வேதனை கண்டபின் வந்தது!

பொறுமையும் அன்பும் மிகுந்த சிலரின் அவதியும்,

பொறுமையே இல்லாத சிலரின் அனாயாச மரணமும்,

உண்டு உண்டு முற்பிறவியும், மறுபிறவியும் என்று

கண்டு நாம் உணர்ந்து கொள்ளவே என்றும் அறிகிறேன்!

என்னவெல்லாம் முன் ஜன்மத்தில் செய்தோமென அறியோம்!

என்னவெல்லாம் எதிர்காலத்தில் வருமெனவும் அறியோம்!

நன்மை தவிர மற்றவை நினையாமல், செய்யாமல், என்றும்

அன்பை மட்டுமே கொடுத்து, நல்ல மறுபிறவிக்கு முயலுவோம்! :bathbaby:

 
நேற்று இன்று நாளை…..


நேற்றைய வாழ்வு கனவைப் போன்றது;
நாளைய வாழ்வு நாம் அறியாதது!

இன்றைய நிஜத்தில் சிறந்தவை சாதிப்பதைச்
சிந்தையில் நிறுத்திச் செவ்வனே முயன்றால்,

சோதனைகளை நாம் எதிர்கொண்டாலும், நம்
சாதனைகளை எதனாலும் தடுக்க இயலாது!

புரியும் செயல்கள், நாளைய நம் கனவில்,
விரியும் இனிதாய்; நிலைக்கும் நினைவில்! :hail:

 
கவலையோ கவலை!


கவலை எனும் வலை வாழ்வில் உண்டு – ஆனால்
கவலை வலையிலேயே சிக்கி உழல்வதோ நன்று?

அறியாக் குழவிகளுக்கு முழு நேர ஆனந்தம் – விவரம்
தெரிய ஆரம்பித்ததும், கவலையும் கூடவே ஆரம்பம்!

குறும்பு செய்தால் பெற்றோர் அடிப்பாரெனக் கவலை;
அரும்பும் ஆர்வக் கேள்விகளால் திட்டு வாங்கும் கவலை!

சிறுவராய்ச் சேட்டைகள் செய்ய இயலாத கவலை;
பெரிய வகுப்பில் நுழைந்தால் மதிப்பெண் தரும் கவலை!

இடம் நல்ல கல்லூரியில் கிடைக்க வேண்டிக் கவலை;
தடம் மாறி வாழ்வு செல்லக் கூடாதே என்ற கவலை!

படிப்பு முடித்ததும், வெளிநாடு செல்லும் கவலை;
துடிப்பு மிக்க இளமையில் வேலை தேடும் கவலை!

காதலில் ஒரு வேளை மாட்டினால், திருமணமும்
காதல் புரிந்தவருடன் ஆக வேண்டுமெனக் கவலை!

மனம் விரும்பிய வாழ்வு கிடைக்க வேண்டிக் கவலை!
மணவாழ்வு தொடங்கிய பின்னர் வரும் வாரிசுக் கவலை;

வாரிசுகளுக்கு பள்ளியில் இடம் தேடும் கவலை;
பெரிசுகளாய் அவை மாறினால் கூடிடும் கவலை!

ஒருவழியாய் அவர்களுக்கும் நல்வாழ்வு அமைந்தால்,
வேறு வழியில் வந்து சேர்ந்திடும் வெவ்வேறு கவலை!

ஓடி ஓடி இளமையில் ஈட்டிய பெரும் பொருள்,
தேடித் தேடி வந்தடையும் உடல் நலக் குறைவால்,

நாடி கொஞ்சம் தளரும் வேளையில், அள்ளி அள்ளி
நாடி பிடிக்கும் வைத்தியருக்குக் கொடுக்கும் கவலை!

வேடிக்கையான உண்மை சம்பவம் ஒன்று அறிந்தேன்,
வாடிக்கையாகக் கவலை கொள்ளும் பேராசிரியர் பற்றி!

கவலைப்பட்டுப் புலம்பியே காலம் கழித்த அவரின் ஒரு நாள்
கவலையே, ‘கவலைப்பட ஒன்றுமே இல்லையே’ என்பதாம்!

மனக் கவலையைப் பின் எப்படித்தான் போக்குகிறது?
மனம் கவரும் வள்ளுவமே ஒரு வழியைக் கூறுகிறது!

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது! எத்துணை உண்மை இது!

தினமும் முழு நேரமும் கவலைப்பட்டே கழித்து விடாது,
தினமும் மாறாத பக்தியுடன் இறையை நன்கு தொழுது,

நடப்பவை எல்லாம் நன்மைக்கே என அற வழி நடந்தால்,
நடத்தலாம் நல்வாழ்வு, கவலை எனும் வலையில் வீழாது! :biggrin1:

 
விந்தையான சராசரி இந்தியக் கணவர்கள்…..


இந்தியக் கணவர்கள் வீட்டுக்கு வீடு செய்துவரும்
விந்தைகள் சொல்லவே இக்கவிதை மலர்ந்து வரும்!

பகலிரவு பாராது இல்லாளே உழைத்திடுவாள் – இவர்
பகலிரவு பாராது கண்ட நேரம் உறங்கிடுவார்!

காலை வேளை ஒரு புன்னகை செய்யவும் மறந்திடுவார்;
காலைக்காபி தன் கையில் தர எதிர்பார்த்திடுவார்!

“உனக்கு வயசாச்சு!” எனப் பிரகடனம் செய்திடுவார்;
தனக்கு வயது ஏறுவதை சொன்னால் வைதிடுவார்!

நாட்டு நடப்புக்களை மணிக்ணக்காய்ப் பேசிடுவார்;
வீட்டு நடப்புக்களைச் செவிமடுக்க மறுத்திடுவார்!

மராமத்துப் பணிகள் பற்றிப் பேச ஆரம்பித்தால்,
பேராபத்து வந்தது போல் வேறுபுறம் போய்விடுவார்!

முழுப் பொறுப்புக்களையும் துணைவி தோளில் ஏற்றி,
முழுச் சுதந்திரம் கொடுத்ததாக ஓயாமல் நினைத்திடுவார்!

ஓய்வு நாட்களில் இளவயதில் சுற்றுலா வர மாட்டார்;
ஓய்வு பெற்ற பின் செலவுக்கு அஞ்சி சுற்றுலா செல்லார்!

புதிதாக எதையும் செய்ய மனது வைக்க மாட்டார்;
இனிதாய் வாழ்க்கைமுறை மாற்ற முனைய மாட்டார்!

தனக்குப் பிடித்தவர் சாப்பிடுவதை சாதனையாக்கி மகிழ்வார்;
தன் கரம் பிடித்தவளின் சாதனைகளை “நக்கல்” செய்து இகழ்வார்!

வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழை, தன் துணைவியின்
பெருமை பற்றிக் கூறிக் காவிப்பல் காட்டிடுவான்!

பெருமை மிக்க குடும்பத்தில் பிறந்த இந்தியக் கணவர்கள்
பெருமை மிக்க மனையாளின் அருமை ஏன் உணர்வதில்லை?

மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரமென அறிந்தும்
துணைவியின் ஏற்றத்தை ஏற்று, ஏன் புகழ்வதில்லை? :tape2:


 
ஆனந்த ஜோதி பரவட்டும்…


‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை;
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை!’

வண்ணத்திரை இசை வரிகளேயானாலும்
கண்ணெனப் போற்ற வேண்டிய உண்மை வரிகள்!

வெந்ததைத் தின்று, சோர்வுடன் உறங்கி,
இந்திரியங்களை அடக்கினேன் எனச் சொல்லி,

புன்சிரிப்பும் இல்லாமல், அன்புமொழி பேசாமல்,
உன்மத்தர் போல் வாழ்வது என்ன வாழ்வு?

தனி மரம் தோப்பாகாது என நன்கு உணரவேண்டும்;
இனி வரும் நாட்களில் ஆனந்த ஜோதி பரவ வேண்டும்!

உற்ற துணையுடன் நட்புடன் பழகவேண்டும்;
குற்றம் குறை மறந்து இனிதாய் வாழ வேண்டும்!

ஒரே போல ஒரே கையில் ஐந்து விரல்களே இருக்காது!
ஒரே போல நற்குணத்தை எவரிடமும் காண இயலாது!

ஒரே காசில் பூவும் தலையும் உள்ளது – அதுபோல
ஒரே மனிதனுள் குணமும், கோபமும் உள்ளது!

குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்கக் கொளல் – என்பது வள்ளுவம்!

சுற்றம் என்பது ஆண்டவன் நமக்கு அளிப்பது – அதன்
குற்றங்களை மறந்திடுவோம்! குணங்களைப் போற்றிடுவோம்!

குணம் போற்றிக் குற்றம் மறந்து வாழ்ந்தால்,
கணம் கூடத் துன்பம் நம்மை வந்து தீண்டாது!

எத்தனை ஆண்டுகள் வாழ்வோமென எவருக்கும் தெரிவதில்லை!
அத்தனை ஆண்டுகளும் அன்புடன் வாழாவிடில் பெருமையில்லை!

தனிமைதான் மனிதனின் எதிரிகளில் மிகப் பெரிது;
தனிமையில் இன்பம் கண்டால், மீண்டு வருதல் அரிது!

சுற்றத்தார் நலம்தானே முதன்மையான இன்பம்!
சுற்றத்தாரை வருத்தி நின்றால் வந்திடுமே துன்பம்!

ஏற்றத்தாழ்வு எல்லோர் வாழ்விலும் வருவது உண்மை!
குற்ற உணர்வின்றி அதை ஏற்று வாழ்தல் திண்மை!

இல்லத்தில் இன்பம் பெருக இன்முகமே முதன்மை!
இல்லத்தரசி நல்லுடையில் இன்முகம் காட்டுதல் கடமை! :nod:

 
‘வாழ்க்கைத் துணை’ விரல்…


ஐந்து விரல்கள் பற்றிச் சீனர்களின் மதிப்பீடு; எனக்கு
வந்து கிடைத்த “இ – மெயிலில்” தந்தது ஒரு குறிப்பேடு!

கட்டை விரல் பெற்றோர்; ஆட்காட்டி விரல் உடன் பிறப்பு!
குட்டைச் சுண்டு விரல் குழந்தைகள்; நடு விரல ‘நாம்’!

மோதிர விரல் வாழ்க்கைத் துணை; அதனால் திருமண
மோதிரத்தை அந்த விரலில் அணிகின்ற வழக்கமாம்!

சுவையான சோதனை ஒன்றும் வருகிறது;
சுவையான தகவலாக அதுவும் தெரிகிறது!

இரு கை விரல்களை விரித்து ‘நாம்’ ஆகிய நடுவிரல்களை
இரு கைகளிலும் இரண்டாய் மடித்துச் சேர்த்து அழுத்தவும்!

மற்ற விரல்களை நீட்டிய நிலையில் வைத்து
உற்ற துணை போல நுனிகளை இணைக்கவும்!

இணைத்த ஒவ்வொரு நுனியாகப் பிரிக்க முயலவும்.
தனித்துப் பிரிவது மூன்று ஜோடி விரல் நுனிகளே!

மூன்றும் குறிப்பது பெற்றோர், உடன் பிறந்தோர்,
மற்றும் குழந்தைகள் ஆகியோரை மட்டுமே!

பிரியாது இருப்பது ‘வாழ்க்கைத் துணை’ விரல்தான்!
பிரியாது என்றும் பிரியமாய் வாழ வேண்டுவதுபோல!

விந்தையாக இருக்கும் இதைச் செய்து பார்த்தால்,
சிந்தையில் வாழ்க்கைத்துணையின் மதிப்பு உயருமே! :clap2:

 
பன்முக ஈடுபாட்டை வளர்த்திடுவோம்!


ஆய கலைகள் அறுபத்து நான்கு இருக்க – வேண்டும்
தூய மனத்துடன் சிலவற்றைக் கற்க!

அன்னை மடி விட்டெழுந்த காலம் முதல்,
அன்னை போல் காக்க வரும் துணை அமையும் வரை,

கலைகள் கற்கும் பொற்காலமே! மறக்கலாகாது! – பல
கலைகள் கரை காணாவிடினும், சிலவேனும் கற்றல் நலம்!

இருபதுகளில் திருமணம்; ஐம்பதுகள் வரை பிள்ளை பாதுகாப்பு என
இருப்பது இன்றும் மாறாவிட்டாலும், பேரப் பிள்ளைகள் எங்கே?

கற்றுத் தேர்ந்த பிள்ளைகள் இந்தியாவை விட்டு
வேற்று நாடுகளை நாடுதல் அதிகரித்துவிட்டது!

பெற்றோருக்கு ” BABY SITTING ” செய்வது தவிர
மற்றோர் வேலையும் பிள்ளைகள் தருவதில்லை!

ஓய்வுக் காலத்தில் நமக்கென ஆர்வங்கள் தேவை!
ஓடி உழைத்த காலம் போலக் கடும் பணிகள் செய்ய இயலாதே!

அலுவலகம் தவிர வேறு எதிலும் ஈடுபாடு இல்லையெனில்
அலுவலகம் ஓய்வளித்தால் என்னதான் செய்வது?

இளமையில் பன்முக ஈடுபாட்டை வளர்த்தால்,
முதுமையில் சிலவற்றில் மூழ்கி இன்புறலாம்!

புத்தகம் படிப்பது, புகைப்படம் எடுப்பது, “யோகா” செய்வது,
நித்தமும் ஆன்மீகத்தில் ஆர்வம் கொள்வது,

நல்லிசை கேட்பது, நடைப் பயிற்சி செய்வது,
நலிந்தோருக்கு உதவுவது, சுற்றம் நட்புடன் கூடி மகிழ்வது, ,

நற்கலைகள் சிலவற்றைப் பாராட்ட முனைவது,
கற்றவற்றில் சிலவற்றை மற்றோருக்குக் கற்பிப்பது – என

எத்தனை விதங்களில் நேரம் செலவிடலாம்!
எத்தனை அருமையாக ஓய்வில் களித்திடலாம்!

பன்முக ஈடுபாட்டை வளர்த்திடுவோம்!
இன்முகத்துடன் வாழ்க்கை வாழ்ந்திடுவோம்! :target:



(அலுவலகம் செல்லும் இருபாலாருக்கும் பொதுவாக எழுதியது……
இது இல்லம் பேணும் இல்லத்தரசிகளுக்கும் பொருந்துமே!)

 
பிடிக்காதவை சில…


மாடு உருண்டதுபோல் படுக்கையை விட்டுச் செல்லுவது!

வீடு தேடி வந்து அழைப்பு மணியை ஓயாமல் அடிப்பது!

பல் தேய்க்கிறேன் பேர்வழி என்று பல்வித ஓசை எழுப்புவது!

“மில்க் குக்கர்” அடுத்த வீட்டில் “உச்ச ஸ்தாயியில்” அலறுவது!

குளியலறை ஓரம் அழுக்கு நுரை விட்டு செல்லுவது!

ரயிலில் வந்த பெட்டிகளைப் படுக்கை மீது பரத்துவது!

தாம் “போனில்” பேசும்போது பின்புறத்தைக் காட்டுவது!

நாம் “போனில்” பேசும்போது பின் பாட்டுப் பாடுவது!

பிறர் தூங்கும் வேளையில் “தடா புடா”வென உருட்டுவது!

சுவர்மீது எண்ணைத் தலை வைத்து வட்டம் வரைவது!

அவசரமாய்ச் செல்லும்போது அரட்டை அடித்து ராவுவது!

அடுத்தவர் தொலைபேசியில் அலுக்காமல் பேசுவது!

பஸ்ஸில் நிற்கையில் முதுகில் மூச்சு விடுவது!

கண்ட இடத்தில் ஆடை அவிழ்த்து “ஜகன் நாத்தம்” செய்வது!

தண்ணீர்த் தட்டுப்பாட்டில் “நயாகரா” போல் குழாய் திறப்பது!

வண்டிச்சேறு மண்டிய செருப்பை வீட்டினுள் வைப்பது!

விருந்தினர் வந்தபோது நடு வீட்டில் உறங்குவது!

விருந்தினரிடம் பேசாமல் தொலைக்காட்சியில் மெய் மறப்பது!

சாப்பிடும்போது நாக்கை நீட்டி உணவை உள்ளே தள்ளுவது!

எதிர் நின்று பேசும்போது குடை தேட வைப்பது!

உம்மணாம் மூஞ்சியாய்க் காலைப் பேப்பர் படிப்பது!

“குட் நைட்” கூடச் சொல்லாமல் படுக்கையில் விழுவது!! :faint2:

 
பிடித்தவை சில .....

அன்புடன் அரவணைத்து வாழ்வது

ஆசையாய் இன்மொழி பேசுவது

இன்முகம் மாறாது இருப்பது

ஈன்றோரைப் பேணிப் பராமரிப்பது

உயர்ந்த நூல்களைப் படித்தறிவது

ஊர் மெச்சும்படி நடந்துகொள்வது

எல்லோரையும் ஒருபோல மதிப்பது

ஏற்றமுடன் வாழ்ந்திட விழைவது

ஐயமின்றி இறையை நம்புவது

ஒன்று கூடி வாழ்ந்து சிறப்பது

ஓதிட ஒரு நாமம் தெரிவது

ஔவை எழுத்தை உணர்வது :cool:


 
அறிவீரே பெற்றோரே!


பாசம் காட்டி வளர்த்த மகன் மேலை நாடு சென்ற பின்
நேசம் காட்ட மறந்தால் என்னதான் செய்வது?

“தென்னையை வச்சா இளநீரு; பிள்ளையைப் பெத்தா கண்ணீரு!”
உண்மைதான் உரைத்துள்ளார்! அது மிகக் கசப்புத்தான்!

தன் வாழ்க்கைத் துணையைத் தானே தேடணுமாம் – பெற்றோர்
தன் வேலை வளர்த்ததுடன் தீர்ந்த்ததென எண்ணணுமாம்!

நம் இனத்தில் நல்ல பெண்ணிருந்தால் கூறு என்றால்,
எவ்வினமாயின் என்ன? உன் வேலையைப் பார் என்கின்றார்!

தன்னைப் பேணிய பெற்றோரை விடவும் – தான் அந்த
மண்ணில் கண்ட மடந்தை உயர்வாகப் போகின்றாள்!

இந்நாளில் பெண்களுக்கோ அமெரிக்க மாப்பிள்ளை வேணும்;
எந்நாளும் மாமன் மாமி இந்தியாவில் இருக்கவேணும்!

பெண்கள் மட்டும்தான் பெற்றோரைப் பேணுகின்றார் – இல்லை!
பெண்கள் தன் பெற்றோரை மட்டும் பேணுகின்றார்!!

சாண்பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை என்று எண்ணித்
தான் மகிழ்ந்த காலமெல்லாம் மலை ஏறிப் போயிற்று!

பிற் காலத்தில் தன் தேவைகளைத் தன் பிள்ளை கவனிப்பான் என
எக்காலத்திலும் கற்பனை வேண்டாம்! அறிவீரே! பெற்றோரே!

தன் உழைப்பால் சேர்த்த செல்வம் தானம் தருமம் போகத்
தனக்கென்றே வைத்தவர்தான் கலிநாளில் பிழைத்திடுவர்!!

(தம் செலவுகளுக்குத் தம் வாரிசுகளையே எதிர்பார்க்க வேண்டாம் என
இக்காலத்தில் பிழைக்கும் வழி சொல்லவே முயன்றுள்ளேன்!)

உலகம் உய்ய வேண்டும், ராஜி ராம்


 
நிஷாவின் விஷமம்….. I


“அவனின்றி ஓரணுவும் அசையாது” என்பதை – அவன்
பயனின்றி நம் திட்டங்களைச் செய்வதால் நிரூபிப்பான்!

சும்மா இருப்பதே சுகமென எண்ணிப் பழகி – எப்போதும்
சும்மா இருந்துவிட்டால் நம் வாழ்வில் சுவையேது?

திருமணம் ஒன்றை மையப்படுத்திச் சுற்றுலாச் செல்ல
இருவருக்கும் அவா பெருகி, ஏற்பாடுகளில் எண்ணம் செல்ல

உற்றாரை மதுரைத் திருமணத்தில் கண்டு, கன்னியாகுமரியும்,
குற்றாலமும் கண்டு வரத் திட்டம் தீட்ட விழைந்தோம்.

ரயில் டிக்கெட்டுகளும், தமிழ் நாடு சுற்றுலா உபயத்தில்
துயில் கொள்ள அறைகளும் ஏற்பாடு செய்தோம்!

ஆண்டவனின் விளையாட்டு ஆரம்பம் என அறியாமல்,
நீண்டநாள் ஆசையான வள்ளுவன் தரிசனம் அருமையாய்

அமையும் என எதிர்பார்த்து, “இன்டர்நெட்டில்’ புகுந்து
சமயம் கிடைக்கும்போதெல்லாம் தகவல்கள் சேகரித்தோம்!

வற்றாத அழகு மிகு கன்னியாகுமரி அம்மனும், வள்ளுவனும்,
குற்றால அருவியும், தினம் என் கனவுகளில் சுற்றி வந்தன!

கனவு நனவாக என்றும் ஆண்டவன் அருள் வேண்டும்!
நிலவு கூட எட்டிவிடலாம் அவனின் அருளிருந்தால்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைக் காண விழைகையில்
வரலாறு காணாத மழை சிங்காரச் சென்னையில் தொடங்கியது!

நிஷா என்ற அழகுப் பெயரைச் சூட்டிக்கொண்ட சூறாவளி,
நிமிஷ நேர நிம்மதியின்றி மக்களை மாற்றிய பத்ரகாளி!

கண் கொட்டாது கொட்டிய மழையால் வெள்ளம் பெருக்கெடுக்க,
கண் கொட்டது கழிந்தன துயில் கலைந்த இரவுகள்!

எங்கள் மீது ஆசை கொண்டு ஓடி வரும் நண்பனைப்போல்
எங்கள் வீட்டில் நுழைந்து வந்தது பொங்கிய மழை வெள்ளம்!

மின்னும் தரையாய் மாற்றி ஓராண்டு கூட ஆகவில்லை!
எண்ணும்போதே உறையவைக்கும் நீர் நுழைவால் பெரும் தொல்லை!

மழை நீர் சேகரிப்பு இல்லாத நாட்களில் – பெரு
மழை வரவு கண்டால் உள்ளம் குதூகலிக்கும்!

அன்று நல்ல திட்டமென அரசு நிறைவேற்றியது;
இன்று நல்ல மழை கண்டால் உள்ளம் பதறுகிறது !

“டிப்ரஷன்” வளைகுடாவில் என அறிவிப்பு வரும்!
“டிப்ரஷன்” நம் மனதில் உடனே குடியேறிவிடும்!

அனைத்து கப்போர்டுகளின் அடித் தட்டுகளைக் காலி செய்ய,
அனைத்து இடங்களும் களேபரமாய்க் காட்சியளிக்க,

ஓடோடி அடுக்கியதில் பொருட்கள் இறைந்து விட,
நாடோடி வீடு போல இனிய இல்லம் மாறியது!

தொடரும் .....
 
நிஷாவின் விஷமம்….. II


இணைந்தவாறு இரு ஸ்டூல்களப் படுக்க வைத்து – மேலே
வீணை “ஸ்டாண்டை” ஏற்றி வீணைகளை அடுக்கியாச்சு!

குட்டி சுவாமி அலமாரியை “டீபாய்” மேல் ஏற்றியாச்சு!
பெட்டிகளில் புடவைகளை அடைத்துக் கட்டிலில் போட்டாச்சு.

எங்களைத் தவிர வீட்டில் அனைத்தும் கட்டிலில் கிடக்கிறது!
எங்கள் “வாஷிங் மெஷின்”, “ஏர் கூலர்” அதில் அடங்குகிறது!

“டிபன் காரியர்” கிண்ணங்களை பலகை மேல் கவிழ்த்து,
“டிபன்” மாவு, பால், தயிர் காக்கும் “பிரிஜ்ஜு”க்கு

“ஸ்டாண்ட்” போல் செய்து வைக்க, அதன்மேல் ‘அது’
“ஸ்டண்ட் மாஸ்டர்” போல “பாலன்ஸ்” செய்கிறது!

அஞ்சு இஞ்சு தண்ணீர் வீடு முழுதும் வியாபித்திருக்க,
அஞ்சியபடி நடந்தோம் கீழே வழுக்கி விழாதிருக்க!

Tub – பினுள் நின்று சமைக்கவிட்டால் கால்கள் குளிரும்!
உடம்பினுள் நடுக்கம் மின்னல் போல ஏறி வரும்!

Tub – பிலே நின்றவாறு நகர்ந்தும் செல்லப் பழகிவிட்டால்,
செவ்வனே குச்சிப்புடி நடனம் கற்றுத் தேற ஏதுவாகும்!

‘ஆத்துக்கு வாங்கோ’ என்று சகஜமாய் மாமிகள் அழைப்பர்! – நிஜமான
ஆத்துக்குள் குடியிருப்பதுபோல இப்போ இல்லம் மாறியது!

காலைத் தேய்த்து தேய்த்து இதேபோல நடந்தால்.
காலை வீசி நடக்க இனி மறந்தே போய்விடுமோ?

இரண்டுநாள் இதுபோல உழன்றபின், மோட்டார் வைத்து
திரண்ட நீரை வெளியேற்றி, எட்டு நூறு கொடுத்த பின்,

இரண்டே மணிகளில் வீட்டில் மீண்டும் அஞ்சு இஞ்சு ஆறு!
இருண்டே போனது மனம்; இம்முறை வந்த நீரில் சேறு!

ஒருமாதம் இதுபோலக் குடித்தனம் செய்துவிட்டால்
அருவருப்பு என்ற சொல் நம் அகராதியில் காணாது போகும்!

மூன்றாம் நாள் மின்சாரம் தடைப்படுத்தப்பட,
அன்றிரவு பெரு மழையால் நீரும் ஏறி வர,

நள்ளிரவில் தட்டுத்தடுமாறி “காட்ரேஜி”ன் அடித் தட்டுக்களைப்
புள்ளி போல் வந்த “டார்ச்” ஒளியில் காலி செய்தோம்!

கிண்ணங்கள் உருட்டுவதுபோல் சப்தம் எழுந்து வர,
எண்ணங்கள் பல தோன்றி அச்சம் மிகுந்து வர,

என்னவென்று மறுநாள் காலைதான் புரிந்தது, “ஷோ கேசில்”
என்னவரின் பரிசுக் கோப்பைகள் மழை நீரில் உருண்டது!

தேங்காய்கள் உள்ள மோட்டார் ரூம் கதவு விழுந்துவிட,
தேங்காய்கள் தோட்டமெங்கும் நீரில் மிதந்து செல்ல,

பூக்கள் செடிகளில் பூப்பதையே மறந்துவிட,
பூக்கள் போல “பிளைவுட்” கதவுகள்தான் விரிந்தன!

“ஜாலியாக ‘ஆத்துக்குள்’ இருந்து உடம்பை வருத்தாதே!
காலியாக இருக்கும் மாடிக்கு உடனே மாறிக்கொள்” – என

அன்புடன் தங்கை எனக்குக் கட்டளை இட – மீண்டும் புதிய
தெம்புடன் “டெம்பரரி” ஜாகை மாடிக்கு மாற்றினோம்!

அடுப்பும் அத்தியாவசியப் பொருட்களும் கடத்தியதில்
இடுப்பும் கேட்டது “என்ன சேதி?” என்று அன்று!

தொலைபேசி இல்லாவிடில் தொல்லைதான் – எனவே
தொலைபேசி இணையொன்றும் மாடியில் வைத்தோம்!

புயல் கரையைக் கடந்த பின்னும் மழை தொடர்கிறது – அடுத்த
புயல் சின்னம் உருவாகுமெனச் செய்தியும் பரவுகிறது!

ஜோடியாக வருவதற்குப் புயலுக்கும் ஆசை வருமோ?
கூடிக் குலாவிட நிஷாவின் தங்கை திரிஷா வருமோ?

வாங்கி வைத்த எல்லா டிக்கெட்களும் கான்சல் செய்தாச்சு!
ஏங்கி எதிர்பார்த்த சுற்றுலா இல்லாமல் பொய்யாச்சு!

எப்போது ஆண்டவன் கட்டளை இடுகிறானோ – பயணங்கள்
சென்று வரும் ஆசைகள் அப்போதுதான் நிறைவேறும்!

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்பது வேதாந்தம் – அதை
நடப்பதிலெல்லாம் காணும் பக்குவமே யதார்த்தம்!

29- 11 – 2008
 
அதிதிகளாய் மாறிவிட்ட அமெரிக்க மகன்கள்..... I

விடுமுறை வந்ததும் இந்தியா வருகிறோம்! – மகன்
ஒருமுறை சொன்னதும் தொற்றிக் கொண்டது சந்தோஷம்!

திருமணம் முடிந்த பின் முதல் முறை வருகை;
ஒரு கணம் நினைத்ததும் மறு கணம் புன்னகை!

வசதியாக வாழும் குழந்தைகள் வந்தவுடன் – நல்ல
வசதியுடன் தங்கிவிட இல்லத்தில் ஏற்பாடுகள்!

‘சித்தி, சித்தி’ – என ஆசையுடன் எனை அழைத்துச்
சுத்திச் சுத்தி வரும் இருவரின் வருகையால்

மகிழ்ச்சி இரட்டிப்பாக, ஏற்பாடுகள் ஆரம்பம்!
அயர்ச்சி பற்றி எண்ணாது ஓட்டமும் ஆரம்பம்!

மூன்று பேரும் கூடுகின்றார் ஐ. ஐ. டி. நாட்களுக்குப் பின்;
நான்கு நாட்களேயானாலும் இனிக்க வேண்டும் நினைவுகள்!

வரும் ஜோடி இருவருக்கும் தனித்தனியே அறைகள் – இளவலுக்கு
வரன் தேடி வரும் அக்கா குடும்பத்திற்கு இன்னொரு அறை!

நாமும் விருந்தாளியாய் வேறு வீடு செல்லும்போது – நமக்குப்
பாயும் தலையணையும் போதுமென இருந்த காலம்

மலையேறிப் போச்சு! குடும்பத்தார் வருகையே நமக்கு
மலைப்பாகத் தோன்றுவதுபோலக் காலம் மாறிப் போச்சு!

அதிதிகளாய் மாறியதுபோல் மனம் “N R I” – களை நினைக்கிறது!
‘அதிதி தேவோ பவ’ எனும் எண்ணமும் உதிக்கிறது!

ஆபீஸிலிருந்து வந்த கம்ப்யூடர்களை ஓரம் கட்டி – மாடி
ஆபீஸை வீடுபோல் மாற்றி வைக்க ஒரு வாரம்!

எட்டு மாத காலமாய் தூசி தட்டியிரா ஜன்னல்களில்,
எட்டு மணி “ப்ளோயர்” அடித்து ‘ஜீபூம்பா’ப் புகை மண்டலம்!

சமயம் பார்த்துத்தான் தண்ணீர்க் குழாய் அடைத்துக் கொள்ளும்!
அபயம் தர எந்த “பிளம்பரும்” வாராது நம்மை வேலை வாங்கும்!

தட்டித் தட்டிக் குழாய்களைச் சரி செய்து அவற்றில் – நீர்
கொட்டச் செய்யப் பட்டபாடு பகீரதப் பிரயத்தனம்!

அல்லித் தண்டால் அடித்து “அனகோண்டாவை” விரட்டுவதுபோல்
பல்லி எறும்புப் படைகளை “லைஸால்” தெளித்து விரட்ட முயற்சி!

கடைக்குச் சென்று புதுப் படுக்கைகளும் விரிப்புகளும் வாங்கி
அடைத்து வைச்சாச்சு! மகன்களுக்கு வீடு தயார்!

காலச் சக்கரத்தின் வேகம் மாறாமல் இருக்கிறது! – நம்
காலின் சக்கர வேகம் அதனால் குறைகிறது!

முப்பதுகளில் மிக எளிதாய்ச் செய்து வந்த வேலைகள்
ஐம்பதுகளில் கடுமையாக மாறுகின்ற விந்தைகள்!

பால் தயிர் உண்ணாத “வீகன்”களாய் மூவர் மாறியிருக்க
பால் தயிர் உபயோகிக்காத உணவு வகைத் தேடல்கள்!

நெய்யில்லாது செய்ய முயன்ற இனிப்பு வகைகள்!
கையில் ஒட்டாது, மோர் விடாது அரிசிக் கூழ்க் கிண்டல்கள்!

முப்பது பலாப் பழங்கள் மரத்தில் தொங்கி நிற்க – அவற்றைப்
பத்து நாளாய்ப் பிரித்து நெய்யில்லாத “ஜாம்” செய்ய

வந்தது கட்டை விரல்களில் வலி! இதுதானோ குழந்தைகளுக்கு
வந்தது எனக் கூறும் “video thumb syndrome”!

நடு இரவில் விழித்தெழுந்து மருமகளை அழைத்து வந்தால்,
இரு இரவு தங்கிவிட்டுத் தாய் வீடு சென்றுவிட்டாள்!

அடுத்த மாதம் மகன் வரவை எதிர்பார்த்து மனம் ஏங்கும்!
படுத்தவுடன் உறக்கம் வராது மதி மயங்கும்!

மகன் வரவில், மன நிறைவில் உடல் வலியும் மறக்கும்;
பகல் இரவு பாராது ஓட்டமும் தொடரும்!

மறுநாளே வருகை தந்தான் அக்கா மகன் மனைவியுடன்;
இரு நாளாய் அவளுக்கு ஜுரம் என்றான் கவலையுடன்!

இரண்டு பெரிய ரொட்டி வாங்கி வந்தான் அவளுக்கு;
இரண்டையுமே நாங்கள் உண்டோம்; ரசம் சாதம் அவளுக்கு!

வேற்று மொழிப் பெண்ணை மணந்து வந்த அவனுக்கு – மொழி
மாற்றம் செய்வதே முழு நேரப் பணியானது!

பொறுமையாய் அவளிடம் எல்லாவற்றையும் மொழி பெயர்த்து
அருமையாய் மாற்ற முனைந்தான் ‘பேச்சுக் கச்சேரிகளை’!!

தாய் மொழியில் ‘கடி’ ஜோக்கில்லாமல் பேசத் தெரியவில்லை!
தாய் மொழி தெரியாமல் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை!

சுற்றிச் சுழன்று பம்பரமாய் என் ‘பெண்ணரசி’ உதவுகின்றாள் – தலை
சுற்றிச் சுழல்வதுபோல் அந்தப் பெண்ணோ தவிக்கின்றாள்!

கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் உணர்கின்றாள்! – நம்
மண்ணில் இருக்கும் நாட்களைப் பாடாய் நினைக்கின்றாள்!

நம் கலாச்சாரம் புரிந்து கொள்ள அவளுக்கு மனமுமில்லை!
நம் தாய் மொழி அறிந்துகொள்ள ஏனோ முயலவில்லை!

அமெரிக்கா சென்றவருக்குக் கண்ணோட்டம் மாறிவிடும்;
“அமெரிக்க சுதந்திரமே” உயர்வாகத் தோன்றிவிடும்!

புதிதாக எதையேனும் கற்கணுமெனக் கூறிவிட்டால்,
எளிதாக அதைச் ‘சுதந்திரக் குறுக்கீடு’ என எண்ணிடுவார்!

தொடரும் .....
 
Last edited:
அதிதிகளாய் மாறிவிட்ட அமெரிக்க மகன்கள்….II


இதனிடையில் ஒரு நாள் மகனின் நண்பனின் திருமணம்;
பட்டுடையில் சென்ற நான் கண்டது “சென்னைத் திருமணம்”!

“சாப்பிடவா!” என்றழைக்க ஒரு ஜீவனும் அங்கில்லை!
கூப்பிடமாட்டார் என அறிந்து சிற்றுண்டி எம் வீட்டிலே! – மாப்பிள்ளையின்

அக்காவிடம் நான் சென்று “அவன் அம்மாவா” எனக் கேட்க,
அக்கா என்னை முறைக்க, நான் பிழைக்க எடுத்தேன் ஓட்டம்!

மூன்று நாள், அன்னையைக் காண வேறு ஊர் சென்றதில்,
மூன்று மணித்துளி போல நேரம் ஓடி மறைந்தது!

ஓயாமல் பேசி, ஒன்றாய்க் கூடி மகிழ்ந்து – அன்பு
மாறாமல் பெருகிவிட அரியதோர் சந்தர்ப்பம்!

தியான லிங்கம் கோவில் தரிசனம் கண்டு வந்தோம்!
தியானத்தின் உயர்வும், அமைதியின் அருமையும் அறிந்தோம்!

கொட்டும் மழை கேரளாவில்; அதனால் பாலக்காட்டில் வீட்டை
விட்டு வெளியில் செல்லவில்லை! நல்ல ஓய்வு அங்கு!

பிரியா விடை பெற்றுத் திரும்பினோம் சென்னைக்கு!
பிரிந்து சென்றான் மகன் மனைவியுடன் வேறு திசையில்!

பெண்ணரசியுடன் ரயிலில் ஏறிய பின் அறிந்தான்
நடுநிசி தாண்டி ரயிலில் ஏறியதால் “டிக்கட்” செல்லாது என்று!

“ஒரு நாளில் நடுநிசி தாண்டி ரயில் ஏறினால் – “டிக்கெட்டில்”
மறுநாள் தேதி போடணும்” – அதிகாரி கூறினார்!

மறுபடியும் பயணக் காசுடன் அபராதமும் கொடுத்து
மறுநாள் காலை திருச்சி அடைந்தனர் தேவி தரிசனத்திற்கு! – பின்

ஒருவார அலுவலக வேலை பெங்களூரில் செய்து முடித்து,
ஒருவாறு இங்கு வந்தான்; மீதம் ஏழு நாளே சென்னையில்!

இரு நாளில் உறவினர்கள் அனைவரையும் கண்டு வந்தோம்;
ஒரு நாள் என் மாமாவின் “தங்கத் திருமணநாள்” விருந்து!

நேரம் போவதே தெரியவில்லை! மறுநாள் அதிகாலை
நேரம் வருகை தந்தனர் அக்கா குடும்பத்தினர்!

” Fast food ” கடைகளின் குறுக்கு வழி பல கற்று
” Fast food ” தயாரிக்க “திடீர் மசால்” உதவிற்று!

எலுமிச்சம்பழம் பிழிந்து விரல் வலி வராமல்,
எலுமிச்சம்பழச் சாத “மிக்ஸ்” பேருதவி புரிந்தது!

தங்களுக்குள் “க்ரூப்” போட்டுக் கொண்டு வெளியே சென்று
தங்களுக்குத் தேவையானதை அவரவர் வாங்குகின்றார்!

“பீச்”சுக்கு வா – என நச்சரித்த மகனை, தந்தையின்
பேச்சுத் துணையுடன் சென்று வர அனுப்பினேன் – இதனிடையே

இரு பெண்கள் “பார்த்து” வந்த இளவல் தன் முடிவு சொல்ல
ஒரு இரவு முழுவதும் கண்விழித்துக் குழம்புகின்றான்!

ஒருவாறு தெளிவடைந்து தன் முடிவை உரைக்கின்றான்;
“இரு நாளில் நிச்சியதார்த்தம்” – எனப் பெண் வீட்டார் உரைக்கின்றார்!

பெண்ணின் தந்தை வீ. கே; அவர் யூ.கே. செல்ல வேண்டுமாம்!
அண்ணன் அண்ணி சுற்றத்துடன் ‘ function ‘ முடிக்கணுமாம்!

வீ. கே. யூ, கே. போறதாலே ‘ function ” செய்யும் ‘பேக்கே’! – இப்படி
“ஓ. கே, ஓ. கே” – ன்னு ஓடினால் உன் உடம்பு ஆயிடும் “வீக்கே”! – என

அடி மனதில் “நக்கல் ஹைக்கூ” தோன்றி மறைந்தாலும்
படிப் படியாய் ஏற்பாடுகள் துரித கதியில் தொடர்ந்தன!

ஒரே நாளில் மூன்று செட்டாய் ” N R I ” – கள் பயணம்!
அதே நாளில் காலை வேளை நிச்சியதார்த்தம் செய்யணும்!

” என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு ” – இது வள்ளுவம்!

என்னைத் திருமணமான புதிதில் ஆறாண்டுகள் – அன்பு
அன்னைபோல் பேணியவள் அக்கா – அதை மறக்கலாகாது!

வள்ளுவன் வாய்மொழி போற்றுவதும் உத்தமம்!
வள்ளுவன் கூறிய வழி நடப்பதும் உன்னதம்!

Packing ஒருபுறம்; சமையல் ஒருபுறம்;
Shopping ஒருபுறம்; தூக்கம் எங்கே வரும்?

இறை அருளால் எல்லாமே நல்லபடி நடந்தது! – ஒரு
குறைவின்றிச் சுற்றத்தாரின் மனம் மகிழ்ச்சி கொண்டது!

அனைவரையும் அவரவர் ஊருக்கு அனுப்பிய பின்
அனைத்துமே கதை போல மனத்திரையில் விரிகிறது!

இவையனைத்தும் நிஜமே! – என்றுணர்த்த அன்றெடுத்த
சபை கூடிய போட்டோக்கள் ” c. D ” யாக இருக்கிறது!

அதி வேக நிகழ்வுகளை எதிர்பாரா இளவலுக்குப்
புதிதாக வரும் வாழ்க்கை சந்தோஷம் தரணும்!

எல்லாம் வல்ல எம் சக்தி கணபதியை – நலம்
எல்லாம் தந்தருள அனுதினமும் வேண்டுகிறோம்! :pray2:

 
Last edited:
இந்திரனின் கோரத் தாண்டவம்…..


மாதம் மும்மாரி பொழிந்து செழிக்க
மாதம் பன்னிரெண்டும் வேண்டுதல்கள்!

அருமையான அமிர்தவர்ஷிணி ஆலாபனைகள்;
வருண பகவானுக்குப் பல வித பூஜைகள்!

இந்திரனே மழைத் தேவன் – இது பாகவதம் கூறுவது!
இந்திரனை மறந்து நின்றால் பலன்கள் இனியேது?

தப்பாகப் பூஜித்தது தப்பாகப் போனதோ?
அப்பாவி மக்களைச் “சுனாமி” கொண்டு போனதோ?

நிலை குலைய உலகை உலுக்கிய பயங்கரம் – நீர்
நிலைகளின் தேவனாம் வருணனின் சாகஸமோ?

“எத்தைத் தின்னால் பித்தம் தீரும்?” – என அலைவதுபோல்
கத்தையாய்ப் பணம் செலவழித்துக் கழுதைத் திருமணங்கள்!

“சென்னை பத்து ஆண்டுகளில் பாலைவனமாகும்!”
இன்ன பிற ஆரூடங்கள் தந்துவிடும் சோகம்!

“லாரி” வரவை எதிர்பார்த்து வண்ண வண்ணக் குடங்கள்;
சேரி முதல் பங்களா வரை பரிதவிக்கும் முகங்கள்!

மழை நீர் சேகரிக்க வேண்டிப் பல திட்டங்கள்;
ஏழைக் குடிசையும் கட்டாயம் செய்யக் கோரும் சட்டங்கள்!

சாலைகளில் கிணற்று உறை ஏற்றிச் செல்லும் வண்டிகள் – ஒரு
வேளை கூட ஓய்வில்லாமல் கிணறு தோண்டும் மனிதர்கள்!

நீர்மட்டம் கீழே சென்று “ஜெட் பம்பு” மாற்றங்கள்;
நீரின்றி வாழ்வில்லை – எனவே எங்கும் குழாய்க் கிணறுகள்!

அலுக்காமல் போட்ட பல ஆழ்குழாய்க் கிணறுகளில்
அலுங்காமல் வந்து கலந்தது கரிக்கும் கடல் நீர்!

பிடிவாதமாய் வந்த நீரில் சமைக்கத் தோது இல்லை! – எனவே
“அபிவாதயே” போஸில் நீர்க்குடுவை நிற்காத வீடு இல்லை!

பூமித்தாயைத் துளைத்துத் துளைத்து மனிதன் செய்த மாற்றங்கள்;
பூமித்தாய் அதிர்ந்து அதிர்ந்து பூகம்பச் சீற்றங்கள்!

“மனித குலமே! இது மட்டும் போதாது உனக்கு;
உனது வளமே போகப் போடுகிறேன் இந்திரனிடம் வழக்கு!”

பொறுமைக்கு உவமையாம் பூமித் தாயின் வழக்கு;
உரிமையுடன் போட்டான் இந்திரன் புதுக் கணக்கு!

வருணனை வணங்கித் தன்னை மறந்தது ஜனம்;
தருணம் பார்த்தது தண்டிக்க இந்திரனின் மனம்!

இந்திரனின் கோரத் தாண்டவம் தொடங்குகிறது! – முதலில்
இந்தியாவின் பெருமை மிக்க மும்பை நகரம் மிதக்கிறது!

அன்றாடம் செழிப்பில் திளைப்பவர் முதலாக
‘அன்றாடம் காய்ச்சி’ வரை எல்லோருக்கும் சிரமங்கள்!

அடுத்துத் தாக்கப்படுகிறது பெங்களூர் நகரம்;
அடுக்கு மாடிக் குடியிருப்பும் நீர் சூழ்ந்த துயரம்!

பெரு மழையின் பேயாட்டம் அங்கு யாம் பார்க்கவில்லை;
பெரு நகராம் சென்னையும் தப்பிக்க மார்க்கமில்லை!

“மழையா வேண்டுகிறாய்? கன மழையாய்ப் பொழிகின்றேன்;
‘மழை’ என்ற சொல்லே வெறுப்பேற்ற வைக்கின்றேன்!

கங்கணம் கட்டியதுபோல் இந்திரனின் புறப்பாடு;
எங்ஙனம் கூறுவது? சொற்களில் அடங்காது!

கிணற்று நீர் உயர்ந்து வந்து தரை தொட்டுவிட்டது;
அடுத்து வரும் நீர் ஊறத் தடை போட்டது!

சாலைகளில் நிற்காமல் ஓடும் புது ஆறுகள்;
ஏரிகளில் வழிந்து வரும் நீரும் தரும் ஊறுகள்!

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்;
அளவுக்கு மிஞ்சிய திட்டங்களும் பாழாகும்!

அழையா விருந்தாளிபோல் வீட்டில் நுழையும் பிரவாகம்;
மழை நீர் சேகரிப்பால் வந்தது பெரும் சோகம்!

அடுக்கு மாடிக் கட்டிடங்கள் ஏரி மீது கட்டினால்
தடுக்க இயலுமா துயரம் நீர் வீட்டை எட்டினால்!

ஏரிகளும் ஆறுகளும் சரியாக அமைத்திருந்தால்
நீரினால் நன்மையே பெற்றிடுவோம் என்றென்றும்!

தூர் வாரா ஏரிகளில் சரணடைய இடமில்லை;
நீர் மீது பழி போட எவ்வித ஞாயமுமில்லை!

சிங்காரச் சென்னை சீரழிந்து கிடக்கிறது;
பொங்கிவரும் வெள்ளத்தால் நிலை குலைந்து நிற்கிறது!

தென் மாவட்டங்களிலும் மித மிஞ்சிய மழைதான்;
சொல்லொணாத் துயரங்கள் வந்தது நிஜம்தான்!

பயிர்கள் அடித்துச் சென்று பாழாகிப் போனது – மக்கள்
உயிர்கள் காக்க வேண்டி ஓடும்படியானது!

வீடுகளும் பொருட்களும் அடித்துச் சென்ற வேதனை;
பாடுபடும் ஏழைகளுக்கு மேலும் மேலும் சோதனை!

அடுத்த வேளை உணவு கிடைக்குமா என மயக்கம்;
உடுத்த மாற்றுத் துணியில்லாது வந்துவிடும் கலக்கம்!

பயணம் செய்த சில ரயில்களும் பேருந்துகளும் – கடைசிப்
பயணம் கூட்டிச் செல்லும் எமனான துயரம்!

மின்சாரக் கம்பத்திலிருந்து அறுபட்டன “வயர்கள்” – அதுபட்டு
சம்சாரக் கடலிலிருந்து விடுபட்டன உயிர்கள்!

கருணையுள்ளம் கொஞ்சமேனும் இந்திரனே நீ பெற்றிடு;
தருணமிது மழை நிறுத்த, இப்போதே கற்றிடு!

—– ராஜி ராம் —– 12 – 12 – 2005

(குறிப்பு 13 – 12 – 2005 முதல் மழை குறைந்தது!) :rain:
 
தைரிய லக்ஷ்மியை நாடுவோம்!


சங்கீத கலாநிதி திரு. S. ராமநாதன் அவர்கள்
சங்கீத சிட்சை அளிக்கும்போது, ஒரு நாள்,

கூறினார் ஒரு கதை, தைரியமாக இருக்க!
கூரிய மதி இருந்தாலும், வேண்டுமே வீரமும்!

அஷ்ட லக்ஷ்மிகளையும் வேண்டி ஒருவன்,
கஷ்டம் பல அனுபவித்துச் செய்தான் தவம்!

அரிய தவத்தால் மனம் மகிழ்ந்த எண்வரும்
உரிய நேரத்தில் நல்ல தரிசனம் தந்தனர்!

அனைவரையும் தன்னுடனே இருக்க வேண்ட,
“அனைவரும் ஒரே இடத்தில் இருக்க இயலாது!

எங்களில் ஒருவரை மட்டும் தேர்வு செய்தால்,
தங்குவோம் உன்னுடன் என்றுமே!” என்றனர்.

கணமும் யோசிக்காது அவன் வேண்டினான்,
கணமும் பிரியாது தைரிய லக்ஷ்மி இருக்க!

அவ்வாறே ஆகட்டும் என அவளும் தங்கிவிட,
இவ்வாறே உரைத்தான் அவன் மற்ற எழுவரிடம்!

“என்னை விட்டு எவரேனும் செல்ல முயன்றால்,
என்ன செய்வேனோ என எனக்கே தெரியாது!”

மிரட்டல் கேட்டு மிரண்டுபோன எழுவரும்,
அலட்டல் இல்லாது அவனிடமே தங்கினர்!

எட்டு லக்ஷ்மிகளின் அருளும் இருந்தால் – திக்கு
எட்டும் பரவுமன்றோ அவனின் சாதுரியம்!

தைரிய லக்ஷ்மியின் அருளை நாடுவோம்!
தைரியமாய் நல்வாழ்க்கை நடத்துவோம்! :biggrin1:

 
இனிப்பைத் தொலைக்கும் இரண்டு D - கள்...


உண்ணும் உணவும் வாழ்க்கைத் துணையும் - எவரும்
எண்ணும் அளவும் மனத்தில் மகிழ்ச்சி தரணும்!

இந்த மகிழ்ச்சி குலைத்து, இனிப்பைத் தொலைப்பது
இந்த இரண்டு D - கள்தான் என்பது நான் நினைப்பது!

ஒன்று Diabetes எனும் இனிக்கும் குருதியின் விளைவு!
மற்றொன்று Divorce எனும் கசக்கும் மனத்தின் பிரிவு - இன்று

ஐந்தில் மூன்று மனிதர்கள் முதல் D பிரிவாம் !
ஐந்தில் இரண்டு மனிதர்கள் இரண்டாம் D பிரிவாம்!

பந்தியில் அமர்ந்தால் இயல்பாக உண்ண விடாது ஒன்று;
சந்திப்போரிடம் பேசினால் இயல்பாக எண்ண விடாது ஒன்று!

கலி முற்றிப் போனதின் ஒரு விளைவுதானோ இது?
கிலி வாழ்வின் பெரும் பகுதியான வினைதானோ இது?

Tension என்பது இன்று மனித குலத்தின் இயல்பாகிறதோ?
Pension வாங்கும் வயதிலும் விடாது அது துரத்துகிறதோ?

நோய் உடலில் இருந்தால் நல்ல மருந்தால் பலனுண்டு;
நோய் மனத்தில் இருந்தால் நல்ல மருந்துகள் அதற்கேது?

மனித இனமே மன அமைதி காக்க அறிந்திடு;
கொடிய இவ்விரு D - க்களை ஒழிக்க முயன்றிடு!

 

Latest ads

Back
Top