• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

raji,

awesomely touching posts. thanks for the same. it sounds much in sync, atleast as far as i am concerned, more in tune with my mother's generation.

not sure your age, but i am 60 and look at world a little more optimistically. life is not all roses, but in between the flowers, one should, i think, savour the memories of previous flower, till the next one arrives.

i left in the 70s when to make a phone call to india, i had to wait for 4 - 6 hours, pay $4 a minute (a dollar was worth much much more, and one earned less less less). i was the only son, and was not unaware of the heaviness of feelings left behind.

but there is no explanation to why some want to leave, and others are 'sweet stays at home'. what i would like is to pick up at random some of your posts, and perhaps give a consoling feedback. life is not all that bad. one needs to develop interests and ensure that one retains the joie de vivre.

till the next, au revoir. :)
 
Respected Sir,

Thanks for your appreciation.... Of course, I am younger to you !! Please read my other posts too... esp. பன்முக ஈடுபாட்டை வளர்த்திடுவோம். Just want to share the feelings of so many members of my circle of friends and relatives through my kavithais.

Regards,
Raji Ram
 
இக்கட்டில் மாட்டும் இக்காலப் பெற்றோர்கள்!

ஜாதிகள் இரண்டொழிய வேறில்லை; ஆண், பெண் என்று!
போதிப்பதற்கு எளிதுதான்; சாதிக்குமா நடைமுறையில்?

“குலத்தில் நாங்களே உயர்வு” என்போரிடம்தான் – இன்று
கலக்கல் கல்யாணங்கள் முதன்மை வகிக்கிறது!

“சாத்திரம் பலப்பல பேசும் சழக்கர்காள்!
கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்?” – என

வீறு கொண்டு முழங்கிய பாரதி, தம் சம்பந்திகளை
வேறு குலத்தில் தேர்வு செய்யத் தயங்கி நின்றாரே?

கற்றையாய் பணத்தை கணினித் துறை இன்று தரும்போது
சுற்றத்தை எண்ணாது ஜோடிகள் சேருவது சாபக்கேடு!

ஒன்றுக்குப் பல மடங்காய்ப் பிள்ளையின் சம்பளம் உயரும்போது
ஒன்றும் பேச வழியில்லை! பெற்றோருக்குப் பெரும் பாடு!

துணை தேடும் செல்லப் பிராணிக்கு நாலு தலைமுறை அலசி
துணை தேடும் எத்தனைபேரை நம்மிடைக் காண்கின்றோம்!

பிள்ளைகளே வேறு குலத் துணையை நாடும்போது – அப்
பிள்ளைகளின் பெற்றோர் எய்துவரோ இறும்பூது?

சம்மதம் தாம் கொடுத்தாலும், அவர் தம் சுற்றத்திடம்
சம்மதம் கேட்க இயலாது இக்கட்டில் நிற்கின்றார்!

கொடுக்கல் வாங்கல் இல்லையென்று சொன்னாலும் - இன்று
கலக்கல் கல்யாணங்களில் செலவுக்கும் குறைவில்லை!

“பணம் பாதாளம் வரை பாயும்” என்பது பழமொழி;
“பணம் கல்யாணமேடையும் ஏறும்” என்பது புதுமொழி!

எந்த முறையிலும் சடங்குகள் செய்திட வழியுண்டு;
சொந்த பந்தங்களும் வந்து வாழ்த்திட வகையுண்டு!

இக்கட்டில் மாட்டி நின்று இப் பெற்றோர் படும்பாடு கண்டு,
பக்கத்தில் சென்று ஆறுதல் கூறுவதே நம் பண்பாடு இன்று! :tea:

 
ஒரு கலிகாலக் கல்யாணம்..... I


நம் வாரிசு பாதை மாறாது இருந்துவிட்டால், அதுவே
நம் பூர்வ ஜன்மப் புண்ணியம் எனும் காலம் வந்ததோ?

‘பட்டை வீறுவோம் காதல் செய்தால்’, என்போரைச்
சட்டை செய்யாத சிறுசுகளின் சாகசங்கள் எத்தனை?

தோஷம் சமமில்லை என்று தள்ளிய ஜாதகங்கள் – சந்
தோஷமே தராத சில சுயம்வர அரங்கேற்றங்கள்!

மன்மத பாணங்கள் எப்போது, யார் மேல் விழும்
என்பது ரகசியங்கள்! இதுதான் விதியின் சதியோ?

குலமும், கல்வியும், அழகும், வருமானமும் எனப்
பலவும் குறைந்தவனை மன்மதனால் நாடினாள்!

என்ன செய்தாலும், எல்லாம் மறந்து, தம் பெற்றோர்
வெண்ணையாக நின்றிடுவர், என்ற நினைப்புத்தான்!

கலிகாலத்தில் நடந்த அவளின் மிக வினோதமான
கலியாணம் பற்றி இனி உரைக்கிறேன்! ஆபீசில்

பறிமுதல் செய்தார் பாஸ்போர்டை எனக் கூறி – மனம்
பறி கொடுத்தவன் கைக்குப் பாஸ்போர்ட் போனது!

மணம் செய்த சடங்குகள் போலப் புகைப்படமெடுத்து,
மணப்பதிவும் நடந்தது, குடும்பத்தார் அறியாமலே!

வெளிநாடு செல்ல ‘விசா’ முத்திரை குத்த,
எளிதாக ஏற்பாடுகள் செய்யவும் முடிந்தது!

ஊர் விட்டுச் செல்லும் காலத்தில் அறிவித்தால், தம்
பேர் கெடாதிருக்கப் பெற்றோர் சம்மதிப்பாரே!

ஆனால், எண்ணியபடி மணம் நடக்கவில்லை – ஆபீஸ்
போனால், அனுபவச் சான்றிதழ் கிடைக்கவில்லை!

‘நல்ல வேலை ஒன்றை அவன் பெற்றால், நாங்கள்
நல்ல வேளை பார்த்துச் சேர்த்து வைப்போம்’, என்றிட,

சேர்ந்து வாழ இயலாதோ என ஐயம் தோன்றிவிட,
சோர்ந்து போன நெஞ்சங்களில் எழுந்தது பயம்!

பயத்தால் வந்தது அதி பயங்கர தைரியம்;
நயத்தால் திருந்தாது, செய்தனர் காரியம்!

அதிரடியான மார்க்கமொன்று விஷமமாகத் தெரிய,
உடனடியாகச் செய்தித்தாளில் மண அறிவிப்பு வர,

தொலைபேசி அழைப்புக்கள் அலைபோல மோதிட,
தொல்லை பெருகியது பெற்றோர்கள் மிக வாடிட!

பரம்பரைப் பெருமையைச் சீர்குலைப்பது அறியாது,
பரம்பரை வாரிசே மீண்டும் மீண்டும் முனைந்தது!

சீராட்டிப் பாராட்டி வளர்த்தோரை ஏமாற்றி,
சீமாட்டி அவனுடன் குஷியாகச் சென்றது!

கலி முற்றியதால் வந்த விளைவா? அல்லது நல்ல
வழி தெரியாது நிலைகுலையும் தலைமுறை வரவா?

பெற்றோரின் பாடுதான் படு திண்டாட்டம்;
உற்றாரில் சிலருக்கோ மிகக் கொண்டாட்டம்!

இளைய சமுதாயம் எத்திசையில் நடக்கிறது?
புதிய விதமாய்ப் பெயர், புகழைக் கெடுக்கிறது!

இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காத இறைவனே
சுமை தாங்கும் வலிமையை அளித்திட வேண்டும்! :pray2:

தொடரும்...
 
ஒரு கலிகாலக் கல்யாணம் ..... II


சொல்லுவது எளிது…..

கலிகாலக் கல்யாணத்தின் தொடர்ச்சிதான் இது!
கல்யாணம் தாம் செய்யாத பெற்றோரின் தவிப்பு!

தன் மனப்போக்கில் சென்றவளுக்கு என்றுமே
தம் மனத்தில் இடம் வேண்டாமென உபதேசம்!

பாச வலையில் விழவேண்டாமென உபதேசமும்,
ஏசலை வாரி இறைப்பதும் பிறருக்குத்தான் எளிது!

பெற்றோர் படும் பரிதவிப்பு ஏதேனும்
உற்றார் உணர்வாரோ, நூறு சதமானம்?

முகத்தில் கரி பூசி, பெயரைக் கெடுத்தாலும்,
அகத்தில் பெற்ற பிள்ளையை வெறுப்பாரோ?

காதலிப்பதைக் கட்டோடு வெறுத்ததால்தான்,
காதலித்து ஓடத் தூண்டியதோ? அவர்களும்

நல்லவனைத் தேர்ந்தேடு, நாங்களும் அதற்கு
நல்லவிதம் உதவுவோம் எனக் கூற வேண்டுமோ?

தன் குலப் பெருமை சீர் குலைத்தாலும், பெற்றதை
கண் காணாது தொலைப்பது மிகக் கொடுமையே!

தூற்றுவதைச் செய்து, வாழ்வு கெடுத்தல் தவறே!
ஏற்றமுடன் எதிர்காலம் அமையவே வேண்டுவோம்!

முன்னோரின் சாபமோ, இல்லை வினைப்பயனோ?
என்னவாயிருந்தாலும் காலம்தான் காயம் ஆற்றும்! :shocked:

 
யோக ஜாதகம்!


சிறந்த அழகும், நிறைந்த அறிவும், நற்பண்பும்,
உயர்ந்த கல்வியும், பணியும் உள்ள ஒரு வரன்.

யோக ஜாதகத்தைத் தேடி அலையும், ஜாதக
மோகம் கொண்டவரே வரனின் பெற்றோர்!

மற்ற பொருத்தங்களை உற்று நோக்காமல்
உற்ற நேரம் வந்ததென மணம் முடித்தார்!

மலைக்கும் மடுவுக்கும் போல ஜோடியில் வேறுபாடு!
அலைந்து எடுத்தது நல்ல யோக ஜாதகமல்லவா? :angel:


 
எச்சம் தந்த அச்சம்!


மறவாது காக்கைக்கு தினம் அன்னம் வைக்க பயம்தான்;
தவறாது அதை அவள் துணியில் எச்சமாக இடுவதால்!- என

அன்று நான் நக்கல் ஹைக்கூ எழுதினேன் - ஆனால்
இன்றுதான் அனுபவித்தேன் எச்சம் தந்த அச்சம்!

காக்கைகளுக்கு நீர்த்தொட்டியின் "ஏர் வென்ட்டில்" 'ஒரு கண்';
காக்கைகள் "மியூஸிகல் சேர்" போல அதில் மாறி மாறி அமரும்!

எப்போதும் இவ்வாறு "லூட்டி" அடிப்பதால் - "பைப்"
எப்போதும் ஆட்டம் கண்டு நீர் சொட்டல் "அவுட் லெட்"டில்!

ஆடாதிருக்க உடைந்த கையில் போடுவது வெள்ளை மாவுக்கட்டு;
ஆடாதிருக்க "அவுட் லெட்டில்" கருப்பு "இன்ஸுலேஷன் டேப்" கட்டு!

சென்ற ஆண்டு குறும்புக் காக்கை "பைப்பில்" போட்ட எலும்பு சிறிது - நான்
சென்று அழைத்து வந்த "பிளம்பர்" பட்ட பாடு பெரிது!

நாலு இடங்களில் "பைப்பை" அறுத்து,
நாலு மணி நேரம் தோண்டித் துருவி,

எலும்புத் துண்டைக் கண்டு பிடித்து எடுத்ததும் - முதுகு
எலும்பு முழுவதும் வலியே கண்டு விட்டது!

"உன் குறும்புக்கு தடை போடுகிறேன்" - எனக் கூறி
"தின்" அலுமினிய வலையை "ஏர் வென்டில்" சொருகினேன்!

நீர் கொட்டும் நயாகரா நீர்வீழ்ச்சி போல
நீர் கொட்டும் எங்கள் தண்ணீர்க் குழாய்களில்,

சில நாட்களாய் நீரின் அடர்த்தி குறைகிறது;
சில குழாய்களில் நீர் வர மறுக்கிறது!

குறைந்த உயரத்தில் உள்ள குழாயைத் திறந்தால்,
உயர்ந்த உயரத்தில் உள்ளதில் காற்றுத்தான் வருகிறது!

இரு மாதம் முன்புதானே நீர்த் தொட்டி கழுவினோம்;
ஒரு போதும் அடைப்பு வர வழியில்லையே!

எந்தத் துண்டும் உள்ளே போட முடியாதே;
இந்த அடைப்பு ஏன் வந்தது? - என வியந்து,

ஆராய்ச்சி செய்ததில் கண்டோம் "அவுட்லெட்" மீது
அரச மரக் குஞ்சு! உயரம் அஞ்சு "இன்சு"!

இலை ஆறு கொண்ட இதன் வேர் உள்ளே போயிருக்குமோ?
வலை போலப் பின்னி நீரைத் தடை செய்திருக்குமோ?

"மரக் குதிரை" மீதேறி "அவுட்லெட்" கட்டவிழ்த்து,
மரக்குஞ்சசைப் பிடுங்கி எடுத்து, "பைப்பை" இழுத்தால்

பஞ்சுபோல் மிருதுவான வேர்க்கொத்து உருண்டை - நான்
அஞ்சியதுபோல உள்ளே அடைத்து இருக்கிறது!

மெதுவாக அதை எடுத்தால் தொடர்கிறது ஆறு அடிக்கு
புதிதாக முளைத்து வரும் நூல் போன்ற ஆணி வேர்!

அறுபது நாளில் வேர் உருண்டையுடன்
ஆறு அடி ஆணி வேர் முளைக்க முடியுமா?

நம்ப முடியாத நிகழ்வாய் இருப்பதால் - இதை
நம்ப வைக்கப் பாதுகாத்தேன் மரக்குஞ்சும், நூல் வேரும்!

எச்சமிட்டு மரம் வளர்த்து அச்சம் தந்தது காக்கை! - அதை
மெச்சிவிட்டு இன்று கிடைத்த நீர் வரவில் களித்தேன்! :clap2:

23 - 3 - 2007
 
துயில் கலைந்த இரவு…..


சக்தி வினாயகரைத் தரிசனம் செய்துவிட்டு,
பக்தியுடன் வணங்கி, இல்லம் திரும்பினோம்.

இசை வகுப்புக்கள் எடுத்து, இரவு உணவு முடித்து,
இசை ஆர்வமுள்ள உடன்பிறப்புகளுடன் பேசி,

அமைதியான உறக்கத்தில் ஆழ்ந்தோம் – இந்த
அமைதி தொடர்ந்தது மூன்று மணி நேரம்தான்!

நல்ல நித்திரையைக் கலைத்துவிட்டது ஏதோ!
மெல்ல விழிப்பை ஏற்படுத்திவிட்டது!

கொல்லைப் புறத்தில் பெருமூச்சுச் சத்தம்;
கல்லை உடைப்பதுபோல் ‘டட்டக், டட்டக்’ சத்தம்!

உடல் முழுவதும் “அட்ரினலின்” பரவியது;
உடல் முழுவதும் பயமும் நிரவியது!

என்னவரோ கொண்டுள்ளார் ஆழ்ந்த உறக்கம்;
‘என்னென்னமோ சத்தம்’ – என எழுப்பிவிடத் தயக்கம்!

இறைவன் வேண்டுதலுடன், படபடத்தது நெஞ்சம்;
தரையில் ஓசையில்லாது நடந்தேன் கொஞ்சம்!

பின்கட்டில் ஒளி பரப்பும் விளக்கைப் போட்டேன் – அதன்
பின்பு சன்னல் வழியே பார்த்தேன்! சமையலறை நீரை

எடுத்து மரத்தடி சேர்க்கும் “பிவிசி” குழாய் ஒன்று – அதை
எடுத்து எடுத்துப் போடுகிறது ‘பைரவர் வாகனம்’ ஒன்று! – அந்த

பெரிய வெள்ளைக் குழாயை வாயில் கவ்வுகிறது – ஒருவேளை
பெரிய எலும்புத் துண்டாக அதை எண்ணுகிறதோ?

ஒருபுறம் “சிமென்ட்” வைத்துப் பூசியுள்ளதால்,
மறுபுறம் இழுக்க வராது அந்தக் குழாய்!

இரவு முழுவதும் ‘டட்டக் டட்டக்’ கேட்டால்,
இரவு முழுவதும் துயில இயலாதே?

ஒரு நிமிடம் திகைத்து நின்ற மனத்தில்
மறு நிமிடம் உதித்தது ஒரு நல்ல யோசனை!

நெடி தூக்கும் “பினாயிலை” ஊற்றிவிட்டால்,
நொடியில் துயில் கெடுப்பவனைத் துரத்திடலாம்!

இந்த யோசனை எண்ணியபடி வேலை செய்தது – ஆனால்
சொந்த எலும்பு பறிபோனதுபோல் ‘அதன்’ ஊளை தொடர்ந்தது!

அந்த நேரம் விழித்த என்னவரை – இரவின்
அந்த நேரம் வெளியில் செல்லத் தடை போட்டேன்!

பின்னணி ஊளையுடன் அரைத் தூக்கம் தொடர்ந்தது;
பின்னிரவு நேரம் தாண்டிக் காலை மலர்ந்தது!

ஐந்து மணிக்கு ‘பால் பையன்’ “கேட்” திறந்ததும் – அந்த
ஜந்து வெளியில் பாய்ந்து ஓடி மறைந்தது!

சின்னத் துயிலை நிசப்தமானதும் தொடர்ந்தேன் – இதைப்
பின்னர் காலையில் பணிப்பெண்ணிடம் உரைத்தேன்! – ‘அது

பெருச்சாளியைத் துரத்தி வந்திருக்கும் அக்கா’ என்றாள் – ஒரு
பெருச்சாளி தோட்டத்தில் இறந்து கிடப்பதைக் காட்டினாள்!

குழாயை எலும்பு என்று எண்ணிக் குடையவில்லை;
குழாயுள் இருக்கும் உயிர் பறிக்க முனைந்திருக்கிறது!

காக்கை பற்றி முன்பு எழுதியதைப் படித்த அக்கா
ஊக்கம் கொடுத்ததால் இக்கவிதை மலர்கிறது! – ஆனால்

நாய் நாயகனாய் விளங்குமாறு எழுதியதால்
‘நாய்ப்பாடினி’ என்று பெயர் வராதிருக்கணும்! :laugh:

 
காசே குறியாக்கும் மோசமான மருத்துவர்கள்…..


அருந்தவ முனிவர் காலம் முதல் வளர்க்கப்பட்ட
மருத்துவம் செய்யும் மருத்துவரே! என்ன செய்கின்றீர்?

மருந்துகளை உணவிலேயே காணும் முறை மாற்றி,
மருந்துகளையே உணவாக இன்று கொடுக்கின்றீர்!

நோய் நாடி நோய் முதல் நாடாமல் – உம்
வாய் ஜாலத்தால் ஏதேதோ பேசி ஜெயிக்கின்றீர்!

வந்த நோய் பற்றிச் சரியாகக் கண்டு கூறாமல்,
எந்த முறையிலேனும் செல்வம் சேர்க்கின்றீர்!

இதயக் குழாய் அடைப்பை மறைத்துவிட்டு – அந்த
இதயம் துடிக்க மின்சார இணைப்பை அமைக்கின்றீர்!

பெரும் பணம் பண்ணும் சிகிச்சையைச் செய்து,
அரும் உயிரை மிகவும் துச்சமாக மதிக்கின்றீர்!

பொய்யான நம்பிக்கைகளை அள்ளி வீசி, மக்களை
மெய்யாக நினைக்க வைத்துச் சதிகள் செய்கின்றீர்!

நாடித் துடிப்பு மங்கி வரும் நேரத்திலும், விடாமல்
ஓடிச் சென்று புதிய கருவி உடலில் மாட்டுகின்றீர்!

காசேதான் கடவுள் என்று நினைவில் நிறுத்திக் கொண்டு
காசு பண்ணும் முறைகளைக் கடைசிவரை செய்கின்றீர்!

கொல்லாமல் கொல்லும் மருத்துவ உலகமெனச்
சொல்லாமல் சொல்லும் வழிகளில் செல்கின்றீர்!

மனித நேயமே இல்லாது இப்படி வாழ்ந்தால் – இந்த
மனிதப் பிறவியில் எப்படிப் புண்ணியம் சேர்த்திடுவீர்? :frusty:

 
சிறந்த நிகழ்ச்சி!


கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? - என்ற
எழுத்துக்களின் நிஜத்தை சமீபத்தில்தான் அறிந்தேன்!

எல்லா விதத்திலும் சிறப்பு மிக்க ஒரு பாடகர் என்று
எல்லோரும் சேர்ந்து தேர்ந்தெடுக்கும் போட்டியாம்!

நீதிபதிகளின் பாரபட்சமே தாங்கவில்லை என்றால்,
சேதி அனுப்பும் அறிவு ஜீவிகளும் செய்யும் கொடுமை!

சாரீர சௌக்கியம் துளியும் இல்லாது, எந்த ஒரு
சரீர திவ்யமும் காணவே இயலாத ஒருவரை

இவர்தான் சிறந்தவர் என அறிவித்தால், அறிவுள்ள
எவர்தான் இதனைச் சகித்துக் கொள்ள முடியும்?

ஒன்று மட்டும் புரிந்தது! கற்பூர வாசனை அறியாதது
என்றுமே அதே வகையை மட்டுமே மதிக்கும்! நமக்கு

மாலை வேளைகள் ஒன்றரை ஆண்டுகள் வீண்! இனி
மாலை வேலைகளை வேறு விதமாய் மாற்றலாம்!

அறிவற்ற தீர்வு கண்டு மனம் நொந்து போகாமல்,
அறிவு மேம்படும் பொழுதையும் அதிகரிக்கலாம்!

காலத்தின் பயனை நன்கு உணர வைத்த இதை, இக்
காலத்தின் சிறந்த நிகழ்ச்சி என அறிவிக்கலாமா? :noidea:

 
உறவுகள் நீடிக்குமா?

காலம் மாறுகிறது! பொருட்களின் மதிப்பும் மாய்கிறது!
காலம் காலமாய்த் தொடர வேண்டிய உறவு தேய்கிறது!

லட்சங்களில் செலவு செய்து முடித்த திருமணங்கள் – நல்ல
லட்சியங்கள் இல்லாததால் ஆட்டம் கண்டு போகிறது!

இன்றைய இளைஞர் பலர் மனம் மாறுவதேன்? துணையுடன்
அன்றைய காலம் போல இறுதிவரை பயணிக்காததேன்?

ஏழு அடிகள் வைக்கும்போது வாழ்க்கைத்துணையாளுக்கு
ஏழு உறுதி மொழிகள் தந்து, அவற்றை மதிக்காததேன்?

சுற்றம், நட்புக்குப் பரிசளித்து வேண்டி விரும்பி அழைப்பதும்,
சுற்றம், நட்பும் கூடி மகிழ்ந்து விருந்து உண்ண அலைவதும்,

திருப்பதி தரிசனம் போல வரவேற்பில் கால்கள் கடுக்க நிற்பதும்,
திருப்தி தராத தமக்கு வந்த பரிசுகளை அங்கே தள்ளிவிடுவதும்,

பிணக்கின்றிப் புதுத் தம்பதியர் செயற்கைப் புன்னகையுடன்
தனக்கு வரும் பரிசுகளை எண்ணி, எண்ணித் திளைப்பதும்,

மேளம் கொட்ட, புரியாத மொழியில் மந்திரம் சொல்லி, நல்ல
நேரம் பார்த்து, பூமாரி பொழிய, பளபளக்கும் தாலி கட்டுவதும்,

‘மாப்பிளை வந்தாரா? நாட்டுப் பெண் வந்தாளா?’, எனக் குழைவதும்,
மாப்பிள்ளை வீட்டாரைத் தலைமேல் தாங்க மற்றோர் விழைவதும்,

பக்ஷணப் பெட்டிகளை அள்ளி அள்ளி வழங்குவதும், எந்த
லக்ஷணம் இல்லாதவரையும் அழகெனப் புகழ்வதும் – என

இந்த எதிலுமே குறைவின்றிக் கல்யாணங்கள் அரங்கேறும்;
எந்த வாழ்வு தொடர வேண்டுமோ அது கேள்விக் குறியாகும்!

“சீரியல்” மாமியார்கள் போலச் சிலர் செய்யும் கொடுமையினால்,
“ஏரியல்” இல்லாத வானொலிப் பெட்டிபோல வாழ்வு கரகரக்கும்!

கணக்குக் கேட்டு, என் பணம், உன் பணம் எனப் பிரித்து, வாழ்வின்
கணக்கை முடிக்க நினைக்கும் எத்தனை ஜோடிகள் சேர்கின்றன!

விட்டுக் கொடுத்து வாழும் நெறி முறைகள் தேய்ந்து, இன்று
தட்டிக் கேட்க ஆளில்லாது நம் நல்ல சமுதாயமே சீரழிகிறது!

பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்ற பழமொழியில் வரும்
பழகும் காலம் வெறும் பத்து நாளாய்க் கூட இருக்கிறது!

நஷ்டம் ஒருவருக்கானால் லாபம் இன்னொருவருக்கே – என்றால்
நஷ்டம் யாருக்கு? லாபம் யாருக்கு? ஆராய்ச்சியின் விளைவு!

திருமணப் பத்திரிகை விலை உயர்வாய் அச்சிட்டவரும்,
திருமணப் பட்டு மற்றும் நகைக் கடை வியாபாரிகளும்,

கல்யாண மண்டபம் கட்டியவரும், பூமாலை தொடுத்தவரும்,
கல்யாணச் சாப்பாடு தயாரிப்பவரும், தேங்காய் விற்பவரும்,

மாப்பிள்ளை அழைப்புக்கு கார் அலங்கரிப்பவரும், அருமையாய்
மணப்பெண்ணை அலங்கரிக்கும் அழகு நிலைய நிபுணிகளும்

கேட்டு ரசிக்காத கச்சேரி செய்த வித்வான்களும், பல முறை
போட்டுப் பார்க்காத வீடியோக்களை எடுத்த விற்பன்னர்களும்,

பிழைக்க வழி தேடும் விஷயமாகிவிட்டது திருமணங்கள்;
பிழைப்பதில்லை இக்காலத்தில் பல திருமண பந்தங்கள்!

சுற்றத்தாருக்கு பயண மற்றும் பரிசுச் செலவு நஷ்டம்;
சற்றே யோசித்தால் திருமண விருந்து மட்டும் லாபம்!

விருந்து பாக்டீரியா சகிதம் அன்று அமைந்துவிட்டால்,
மருந்து வாங்கப் பண நஷ்டம்; மருத்துவருக்கு லாபம்!

பெண்ணை ஈன்றவருக்கு பெரும் பொருள் நஷ்டம்;
பெண்ணின் தோழிகளுக்கு கூடிச் சிரித்தது லாபம்!

பெண் வாழாவிட்டால் அவள் வாழ்வே நஷ்டம்;
பெண் விவாகரத்து செய்தால் வக்கீலுக்கு லாபம்!

அன்புடன் எல்லோரையும் நேசிக்கும் காலம் மலருமா?
பண்புடன் கூடி வாழ எல்லா ஜோடிகளுக்கும் முனையுமா?

குறையின்றி பெருவாழ்வு அனைவரும் பெற்றிட
இறையின் கருணையை வேண்டுவதே ஒரே வழி! :pray2:

 

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ – என

ஒன்றுபட்டுக் கூடி வாழ்தல் நலம்.

இரு கரங்களால் இறையைத் தொழுதுவிட்டு,

இயன்றவரை பிறருக்கு உதவுதல் நலம்.

முப்பாலும் இனிதுரைத்த வள்ளுவன் வழி

தப்பாது வாழ்க்கை நடத்துதல் நலம்.

நான்கு வேதங்களைக் கரை காணாவிடினும்,

நான்கு நல்ல நண்பரைச் சேருதல் நலம்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாதென அறிந்து,

இளவயது முதல் நற்கல்வி கற்றல் நலம்.

ஆறு முதல் அறுபது வயதுவரை நமக்கு நல்லாசி

கூறும் பெரியோரைப் பணிதல் நலம்.

ஏழு பிறவிக்கும் இன்ப வாழ்வு அருளும் இறைவனை

எக்கணமும் மறவாது துதித்தல் நலம்.

எட்டுத் திக்கும் நம் புகழ் பரவிடினும்,

எளிய வாழ்க்கை வாழ்தல் நலம்!

ஒன்பது வாசல் கொண்ட ஓட்டைச் சரீரம் இது

என்பது நிஜமென்று உணருதல் நலம்.

பத்தும் பறக்க வைக்கும் பசியில் வாடுவோர் கண்டால்

சற்றும் தயங்காமல் உணவளித்தல் நலம்! :angel:

 
வரமா? சாபமா?

அரசனை ஒருமுறை தெனாலிராமன் வெறுப்பேற்ற,
அரசன் விதித்தானாம் அவனுக்கு மரண தண்டனை!

“எவ்விதத்தில் மரணத்தைத் தழுவுகிறாய்?”, என வினவ,
செவ்வனே அவன் கேட்டானாம் முதுமை தரும் மரணம்!

கதையில் கேட்கும்போது சிரிப்பை வரவழைப்பது, நடை
முறையில் வந்தால் எவ்வளவு கொடியதாய் இருக்கிறது!

முதுமையால் வரும் மரணம் நல்ல வரமா? சாபமா?
பொறுமையாய் யோசித்தால் மனக் கசப்பே மிஞ்சிவிடும்!

முதுமையை இரண்டாம் குழந்தைப் பருவம் என்கின்றாரே!
முதுமை குழந்தைப் பருவ இன்பங்களையா பெறுகிறது?

உடலின் மாற்றங்கள் குழந்தை போல மாறிடும்; நிஜமே!
உடனே தெரியாதபடி படிப் படியாய் வந்து சேர்ந்திடுமே!

எழுபதுகளில் வரும் நடையில் தடுமாற்றம்; பின்னர்,
எண்பதுகளில் கைகளில் ஊன்றுகோலுடன் நடமாட்டம்!

பல்லும் ஒவ்வொன்றாய் மாயமாய் மறைந்து – பேசும்
சொல்லும் மழலைபோலப் புரியாது போய்விடும்!

நடையும் மெதுவாக மறந்து, தவழும் சிசு போல
நடமாடும் நிலையும் ஒரு சிலருக்கு வந்துவிடும்!

பசித்தால் அழுது, கொஞ்சினால் குழவி சிரிப்பதுபோல்
பசித்தால் திணறுவதும் பேச்சுக்கு ஏங்குவதும் வந்திடும்!

இயற்கை உபாதைகள் தீர்க்கப் பிறர் உதவி நாடுவதும்
இயற்கை அளிக்கும் முதுமையின் கொடுமையே!

ஆயுள் இன்னும் நீண்டால், சின்னஞ் சிறிசுபோல
பாயில் இரப்பர் விரிப்பும், நாப்கினும் வந்துவிடும்!

தன் குழந்தைக்கு அன்புடன் பணிவிடை செய்வார், அது
தன் முதுமையில் உதவிடும் என எண்ணி, ஆனால்

தனக்குச் சேவை செய்த பெற்றோருக்கு எவரேனும்
கணக்குப் பாராது பாதுகாப்புத் தருவது உண்டோ?

உண்மை உண்மையிலே மிகவும் கசப்புத்தான்!
திண்மை உள்ளத்தையும் கலங்க வைப்பதுதான்!

அனாவசியமாய் நோய் தாக்கும் நீண்ட ஆயுள் வேண்டாது,
அனாயாச மரணம் கிட்ட இறையை வேண்டிடுவோம்! :hail:

 
என்னைக் கவர்ந்த பொன்மொழிகள்.....

தலாய் லாமாவின் பொன்மொழிகள்…..

நம் எண்ணங்களில் கவனம் தேவை – அவை
நம் செயல்களாய் வந்துவிடுவதால்!

நம் செயல்களில் கவனம் தேவை – அவை
நம் பழக்கவழக்கம் ஆகிவிடுவதால்!

நம் பழக்கவழக்கத்தில் கவனம் தேவை – அவை
நம் நடத்தையாய் மாறிவிடுவதால்!

நம் நடத்தையில் கவனம் தேவை – அவை
நம் விதியாய் உருவெடுப்பதால்!

நம் விதிதான் நம் வாழ்வும் ஆகும்!

உண்மைதான் மிக உயர்ந்த மதம் ஆகும்! :thumb:

 
என் எண்ண அலைகளுக்கு * வரவேற்பு அளித்த
என் மதிப்பிற்குரிய நண்பர்களுக்கு நன்றிகள் பல ....:wave:

உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம்
 
மதிப்பிற்குரிய நண்பர்களே!

இல்லத் தோற்றம் ஏற்றம் பெற, பலர்
மெல்லத் தரை மாற்றம் செய்வது உண்டு.

எங்கள் புதிய அனுபவக் கதைகளை, இங்கு
உங்கள் முன் வைக்க இதோ இரு கவிதைகள்!

உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம் :cool:
 
மின்னும் தரை மாற்றம்... இல்லத் தோற்றத்தில் ஏற்றம்... I


அழையா விருந்தாளிபோல மழை நீர் வீட்டில் புகுந்து
அழகான தரையை "கரகரப்ரியா" வாக ஆக்கியது!

பிள்ளையின் திருமணத்தின்போது தரை மாற்றத் தெம்பேது?
வெள்ளை சிமின்ட்டால் 'பட்டி' பார்த்தது பெயர்ந்தது இப்போது!

நண்பகலில் தினமும் பேசும் அக்கா ஒரு நாள் தன் நல்ல
நண்பர் வீட்டில் பார்த்த 'கண்ணாடித் தரை' பற்றிச் சொல்ல,

இசை கற்கும் மாணவிகளின் தந்தை உதவி செய்ய - மேற்கு
திசை நிற்கும் "ஷோ ரூமில்" கண்ணடித் தரை ஓடுகள் கண்டோம்!

மின்னும் ஓடுகளின் வரிசைகள் அங்கே கண்டதும்,
இன்னும் ஆர்வம் அதிகரிக்க, ஒன்றைத் தேர்வு செய்தோம்.

இரண்டுக்கு இரண்டு அடி அளவில் நான்கு ஓடுகள்; முப்பத்தி
இரண்டு கிலோ எடையில் ஒரு பெட்டியில் இருக்கும்.

சமையற்கட்டில் மாற்றும் கிரானைட் மேடைக்கு அழகு சேர்க்க
இமைக்கும் நேரத்தில் "எவர்ஸில்வர்" SINK எடுத்து வைத்தோம்!

புதிய வடிவைக் குளியலறைகள் பெற வேண்டுமென
புதிய வகை ஓடுகளும் தேர்வு செய்துவிட்டோம!

குளியலறைகளை முதலில் தயார் செய்துவிட்டால்,
எளிய முறையில் மற்ற அறைகளில் வேலை முடித்திடலாம்.

இரண்டு குளியலறைகளையும், சமையலறையையும்
இரண்டு "செட்" ஆட்கள் ஒரே நாளில் ஆக்கிரமிக்க,

வெவ்வேறு மூலைகளில் தினம் சமைக்க வேண்டுமேயென
ஒருவாறு தேவையான பொருட்களைத் தேர்ந்தெடுத்து,

சின்னச் சக்கரமுள்ள T.V. STAND - ல் அடுக்கி வைத்து,
சின்ன ஒரு மேசை மீது அகல அடுப்பை ஏற்றி வைத்து,

நடமாடும் 'கிச்சன்' ஒன்று தயார் செய்து - உள்ளே
நடமாடும் ஆட்களை வேலை செய்ய விடுகிறேன்!

பழுதான குழாய்களை அகற்றச் சுவரை உடைக்க,
அழகான குழாய்கள் போன்ற வீடுகளில் எறும்புப் படை!

"இத்தனை பெரிய தோட்டம் உனக்காக வெளியிலிருக்க
எத்தனைப் போல ஏன் நுழைந்தாய் எறும்பே?" எனக் கடிந்து,

அப்பிய எறும்பு மருந்தின் தாக்கத்தின் காரணமாய்
தப்பிய எறும்புப் படை சீக்கிரம் ஓடி மறைகிறது!

அழகான மின்னும் ஓடுகளை ஒட்டிய பின்தான்
தவறான செய்கை ஒன்று தெரிய வருகிறது!

BELLY BUTTON இல்லாத கொழு கொழுக் குழந்தை போல,
தள்ளி நின்று பார்க்க உள்ளது மொழு மொழுச் சுவர் ஒன்று!

புதிய TAP களைப் பொருத்தத் துளைகள் போடாமல்
புதிய ஓடுகளால் சுவர் முழுதும் அழகாக மூடியாச்சு!

நல்லவேளை துளைகள் வரும் இடம் நினைவிருந்ததால்,
நல்லபடியாகத் துளையிட்டு TAP களை மாட்டியாச்சு!

அடுப்படி மேடையில் ஆச்சரியங்கள் இன்னும் ஏராளம்!
கடப்பாக்கல் அடியில் வாழும் உயிரினங்கள் ஏராளம்!

எறும்பு வகைகள் முதல் சங்குப் பூச்சிகள் வரை,
விருப்பபடிக் கூடுகள் கட்டிக் கூடி வாழ்ந்துள்ளன!

இத்தனை நாள் தனியாக சமைத்தேனென எண்ணினேனே!
எத்தனை குட்டி நண்பர்கள் என்னுடனே இருந்துள்ளார்!

மேடையின் கான்கிரீட்டில் ஓட்டைகள் பல இருக்க,
மேடையைத் தாங்க சின்னத் தூண்கள் மூன்று கட்டணும்!

முதிய கொத்தனார் ஒருவர் வேலை ஆரம்பிக்க,
புதிய குட்டி "பிசா" கோபுரம் உருவாகி வளர,

விரைந்து சென்று செங்குத்தாய்க் கட்டுமாறு நான் வேண்ட,
பறந்து வந்து சித்தாள் அதைச் சரி செய்து நிறுத்தினான்!

மேடை மீது கிரானைட் கல் மறுநாள் அமர்கிறது;
சோடை போகாத அந்த வேலை சிறப்பாக இருக்கிறது!

நீண்டநாள் விருப்பம் அன்று நிறைவேறிவிட்டாலும்,
நீண்ட நாள் குட்டி நண்பர்கள் மறைந்தது சிறு சங்கடம்!

கண்ணடிபோல் தரை மாற்றத் தங்கை மகனின் நண்பன்
முன்னோடியாய் விளங்குவதாய் நல்ல செய்தி வருகிறது!.

BOSS நண்பன் பரிந்துரைத்த சென்னை வாழ் மேஸ்திரி
தாஸ் தலைமை ஏற்ற அணி வேலை ஆரம்பிக்கிறது!

நடமாடும் சமையலறை மிகவும் சிறப்புத்தான்;
தடுமாறாது சமைக்க வகை செய்தது வியப்புத்தான்! :biggrin1:

தொடரும்....

 
மதிப்பிற்குரிய நண்பர்களே!

இல்லத் தோற்றம் ஏற்றம் பெற, பலர்
மெல்லத் தரை மாற்றம் செய்வது உண்டு.

எங்கள் புதிய அனுபவக் கதைகளை, இங்கு
உங்கள் முன் வைக்க இதோ இரு கவிதைகள்!

உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம் :cool:

ராஜி ராம் அவர்களே

உங்கள் கவிதைகள் நல்ல கருத்துக்களை இந்த இணைய தளத்தில் பரப்புகின்றன

வளரட்டும் உங்கள் சிந்தனை திறன்
தொடரட்டும் உங்கள் தமிழ் தொண்டு

All the best
 
Last edited:
மின்னும் தரை மாற்றம்... இல்லத் தோற்றத்தில் ஏற்றம்... II


நெடி மிகுந்த "ஆஸிட்" கொண்டு சுத்தம் செய்கையில்,
கொடுமையாக இருக்கிறது வீட்டில் தங்குவதற்கு!

ஐந்து அங்குல SKIRTING ஓடுகளை உடைத்துப் போட,
ஐந்து அடி கோபுரமாய் அது உயர்ந்து போகிறது!

காது பிளக்கும் சப்தமாக அந்த வேலை தொடர,
ஏதும் செய்ய இயலாமல் அந்த வேளை தவிக்கிறோம்!

நான்காம் நாள் தரை மாற்றம் தொடங்குகிறது;
நான்கு ஆட்கள் கொண்ட அணி வருகை தருகிறது!

மற்ற அறைகளில் ஹாலில் உள்ளவை தள்ளிவிட்டு,
உற்ற அளவுகள் எடுத்து, அன்றைய வேலை முடிகிறது!

"பன்னிரண்டு மணி நேரம் மிதிக்காது இருக்கணும்!"
என்றிரண்டு கொத்தனார்கள் எச்சரிக்கை செய்து செல்ல,

என்றுமில்லாத் திருநாளாய் பெங்களூர் cousin,
அன்று மாலை வருகை தந்தான் பின் கதவு வழியாக!

நிச்சியதார்த்தம் உறவில் என்றழைக்க வருகிறான்!
நிச்சியமாக இருவரும் சென்று வர வழியில்லை!

பின் கதவை பூட்ட வழியில்லாமல் போக,
என்னவரை மட்டும் அனுப்பி வைத்தேன் அன்பாக!

நல்லவேளை சமைக்க வேண்டாம்! எனக்கு ஓய்வு கிடைக்கும்!
நல்ல உணவும் ந்ண்பர்களுடன் என்னவருக்குக் கிடைக்கும்!

அறைகளில் இரண்டிரண்டாய்க் காலி செய்து விட்டு,
அவைகளில் தரை மாற்ற மேஸ்திரி ஆணையிட்டு,

பீரோக்களைக் காலி செய்ய வேண்டுமேனக் கேட்க,
பீரோக்களின் கொள்ளளவை அன்று அறிந்து கொண்டோம்!

எத்தனை மூட்டைகளாய்த் துணிகளின் அணிவகுப்பு!
அத்தனையும் மாடி நடு அறையில் வைத்துவிட நினைப்பு!

வீணைகள் ஒருபுறம்! மூட்டைகள் ஒருபுறம்!
வீணாகத் தோன்றும் சில சாதனங்கள் மறுபுறம்!

மாடி ஏறியிறங்கி அத்தனையும் கடத்தினால்,
ஆடித்தான் போனது உடம்பு கடின உழைப்பினால்!

வேலையெல்லாம் முடிந்தபின் தரை மினுமினுக்கிறது!
வேலை செய்த களைப்பெல்லாம் மாயமாய் மறைகிறது!

சின்னக் கடுகு விழுந்தாலும் கண்களில் தெரியும்!
தண்ணீருடன் நடந்தால் கருப்புப் பாதச் சுவடுகள் பதியும்!

நீர் படும் அறைகள் முன்பு ரப்பர் மிதியடி இருக்கும்!
நீர் துடைக்க அவை மீது துணி மிதியடி இருக்கும்!

சண்டைக் காளை பாயும் முன்பு குளம்புகள் தேய்ப்பதுபோல,
ஈரக் காலை மிதியடிமேல் தேய்க்கும் பயிற்சி தொடக்கம்!

இரும்புக் கீறல் விழுந்தால் படிந்துவிடும் என்ற பயம்!
இரும்புப் பாத்திரக் கூடை துணி ஷூக்கள் அணியும்!

உயர்ந்த பீரோ பச்சை வண்ண ஸ்டாண்ட் மேல்
உயரம் இன்னும் அதிகமாகி அசையாது நிற்கும்!

தையல் மிஷினும் ஆடாது தடுக்கு மடிப்பில் நிற்கும்!
ஒயிலாக "காஸ் ஸிலிண்டர்" அட்டை மீது அமரும்!

"பாத ரக்ஷை" வித விதமாய் இவை அணிந்து நிற்க - வீட்டில்
"பாத ரக்ஷை" தேவையில்லை என்னவருக்கு நடக்க!

கதவுகளின் 'தடுப்பான்கள்' பயனின்றி வழுக்கி வரும்!
'காந்தத் தடுப்பானே' இனிமேல் நல்ல பலன் தரும்!

புதிய SKIRTING மேலே சுவரில் சிமின்ட் பூச்சு கருத்திருக்க,
புதிய முறை கண்டறிந்து வண்ணம் பூச முனைகிறேன்!

வெள்ளை சிமின்ட் வாங்கி வந்து, சிவப்புப் பொடி கலந்து,
வெளிர் ரோஜா வண்ணக் குழம்பு தயார் செய்கிறேன்!

பச்சை வண்ணம் உணவில் இட வாங்கி வந்து வருடம் பல! வெளிர்
பச்சை வண்ணப் பூச்சுக்கு அவை உதவியாய் வர,

இரு வார வேலை என்று தொடங்கிய ஒன்று,
இரு மாதம் ஆனபின் முடிந்தது அன்று!

புதிய அழகு பெற்று எங்கள் இனிய இல்லம் திகழ்கிறது!
பழைய தெம்பும் திரும்பிவர உள்ளம் மகிழ்கிறது! :music:

ராஜி ராம் 23 - 2- -2008
 
ராஜி ராம் அவர்களே

உங்கள் கவிதைகள் நல்ல கருத்துக்களை இந்த இணைய தளத்தில் பரப்புகின்றன

தொடரட்டும் உங்கள் சிந்தனைகள் வளரட்டும் உங்கள் தமிழ் தொண்டு

நண்பர்களின் பாராட்டுகளுக்கு நன்றி...

வட இந்திய சங்கீதத்தில் "மிஸ்ர" என்று ராகத்தின் பெயருக்கு முன் இணைத்திடுவார், அந்த ராகத்தில் இல்லாத ஸ்வரம் இணைத்துப் பாடும்போது!

என் கவிதைகளில் தமிழ் அல்லாத ஆங்கிலச் சொற்களும் கலப்பதால், ஒருவேளை 'மிஸ்ர கவிதை' என அழைக்கலாமோ?

உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம்
 
நண்பர்களின் பாராட்டுகளுக்கு நன்றி...

வட இந்திய சங்கீதத்தில் "மிஸ்ர" என்று ராகத்தின் பெயருக்கு முன் இணைத்திடுவார், அந்த ராகத்தில் இல்லாத ஸ்வரம் இணைத்துப் பாடும்போது!

என் கவிதைகளில் தமிழ் அல்லாத ஆங்கிலச் சொற்களும் கலப்பதால், ஒருவேளை 'மிஸ்ர கவிதை' என அழைக்கலாமோ?

உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம்

ராஜி ராம் அவர்களே

ஒரு கவிஞனின் எண்ண அலைகளுக்கு மொழி தடையில்லை
நல்ல எண்ணங்களுக்கு வார்த்தைகள் வெவ்வேறு மொழிகளில் அமைவதில் தவறில்லை
வளரட்டும் உங்கள் சிந்தனை திறன்
தொடரட்டும் உங்கள் தமிழ் தொண்டு

All the best
 
திருப்தியான ஒரு திருப்பதி தரிசனம்....

இறையருளும் குருவருளும் கூடியதால் வந்தமைந்த
நிறைவான எங்கள் சுற்றத்தார் வீட்டுத் திருமணம்.

திருப்பதியில் நடப்பதால் எங்களில் ஒரு சிலர் மட்டும்
திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் ஒருவர் உதவியுடன்,

விரும்பும் குல தெய்வத்தைத் தரிசிக்க ஏற்பாடு நடக்க,
'கரும்பு தின்னக் கூலியா?' என விரைந்தோம் மனம் துடிக்க!

'நீராட நேரமில்லையே! காலைக் குளியலே போதுமே!' என
வாதாடும் மனத்துடன் உடன்பாடு செய்து கொண்டு,

பேருந்துப் பயணம் குலுக்கியும், அலுங்காதிருந்த உடையிலே
சீருந்தில் ஏறினோம் ஏழுமலையானைக் கண்டு களிக்க!

அம்புபோலப் பறந்தது வண்டி; மாலை ஆறுமணிக்குத் திருப்பதி.
தெம்பு தரும் A C அறையில் கொஞ்சம் ஓய்வு மிகவும் திருப்தி!

சுத்தமான அந்த அறையில் உடனிருந்த குளியலறை;
சத்தம் போடாமல் சிலர் உறங்க, மற்றவர் அமர்ந்திருக்க,

மேலை நாட்டு வகையில் அமைந்த அதிவேகச் சுடுநீரில்,
காலை நன்கு காட்டியதும், பறந்தது பயணக் களைப்பு!

சிறு பிள்ளையின் ஆர்வத்தோடு மன மகிழ்ச்சி பொங்க,
பெருமானைக் காண ஆவலுடன் புறப்பட்டோம் அனைவரும்.

கொஞ்சம் நடை, கொஞ்சம் ஓய்வு, என்று படிப் படியாக,
நெஞ்சம் கவர் வேங்கடத்தான் திசை நோக்கி நடந்தோம்.

பொற்கூரை கண்டதும், மலையப்பன் நெஞ்சில் நிழலாட,
சொற்கள் தேட முடியுமா அவன்தன் புகழ் பாட?

இரண்டு மணி நேரம் மெதுவாக நகர்ந்து, நகர்ந்து சென்று,
திரண்டு வரும் கூட்டம் குறையச் சன்னதி அருகே நின்றோம்!

எத்தனை அழகு மிளிரும் சங்கு போன்ற வடிவ 'கிரில்'கள்!
இத்தனை நாட்கள் கண்களில் படாதிருந்த வடிவங்கள்!

'தயவு செய்து உள்ளே வாருங்கள்' என அழைப்பால் மகிழ,
தயை புரியும் ஐயனைக் காண விரைந்தோம், மனம் நெகிழ!

அடிமேல் அடி வைத்து, வைகுண்ட வாசல் உள்ளே செல்ல,
வடிவழகாய் மேற்புறம் உள்ளன தசாவதார உருவங்கள்!

மேற்புறம் நோக்கினால் பத்துத் தங்கத் திருமேனிகள்;
உட்புறம் நோக்கினால், வேங்கடத்தானின் திருமேனி!

தங்க மயமாய் எல்லாம் ஒளி வெள்ளத்தால் தகதகக்க,
பொங்கி வரும் பரவசத்தால் உள்ளமெலாம் படபடக்க,

இன்றுவரை கேட்காத PLEASE MADAM என்ற சொற்கள்,
இன்று ஒருபோல எல்லாப் பணியாளரும் உரைக்க,

'கலி நாளுக்கிரங்கிக் கல்லிலே இறங்கி' அருள் தர நிற்கும்
கலி தீர்க்கும் பெருமானின் அருகில் மெதுவாகச் சென்றோம்!

காலில் கஞ்சி கொட்டியதுபோல் விரட்டப்படும் நாட்களில்,
நேரில் நிற்கும் கணப் பொழுதில் என்னதான் காண முடியும்?

திருமேனி முழுதும் கண்டு மகிழ மனம் விழையும்;
திரு முகம் தாண்டிக் கண்கள் கீழே செல்ல மறுக்கும்!

கன்னக் கதுப்புகள் அருகில் கண்டதும் வேறு எந்த
எண்ணம் ஏதுமில்லாது மனம் அதில் லயித்தது.

அருமையான வண்ண மாலைகளில் அவன் ஒளிர்ந்தாலும்,
கருமையான திருமேனியே மிக உயர்வாகத் தெரிந்தது!

கிடைத்த அந்த அரிய வாய்ப்பைக் கொஞ்சமும் நழுவ விடாது,
கிடைத்த மணித் துளிகளில் முழு அழகு கண்டோம் விடாது!

மனம் நிறையத் திருமலையான் தரிசனம் கிடைத்தது.
மனம் முழுதும் அவனின் திரு உருவமும் பதிந்தது!

வெளிப் பிரகாரத்தில் சிறியதாக அமைந்த ஒரு சன்னதியில்
ஒளி நிறைந்த முகத்தினனாம் மணி வண்ணனை ஈன்றவள்!

பிரகாரம் சுற்றி வந்ததும், ஒரு மண்டபத்தில் அமர்த்தி,
பிரசாதம் எமக்குத் தர வேண்டிப் பண்டிதர்கள் நின்றார்கள்!

எதிர் நிற்கின்ற பண்டிதர் வேத கோஷ ஆசீர்வாதத்துடன்,
எதிர்பாரா நிகழ்வாகப் பொன்னாடைகள் போர்த்திவிட,

ஒவ்வொருவருக்கும் அபிஷேக தீர்த்தமும், சந்தனமும்,
வெவ்வேறு பைகளில் பத்து 'சீர்' லட்டுவுடன் கிடைக்க,

'என்றுமில்லாத் திருநாள்தான் இன்று', என மனம் உரைக்க,
அன்று கிடைத்த பாக்கியத்தை என்னவென்று உரைக்க?

இந்திய ஜனாதிபதியும், பிரதமரும் பெறும் பெரும் பேறு
விந்தையாய் எமக்கும் அன்று கிடைத்தும் பெறும் பேறு!

குறையின்றி வாழ்வளிக்கும் குணக் குன்றைக் கண்டு,
நிறைவான மனத்துடன் ஆனந்தித்தோம் அன்று! :first:

 
நன்றி ராஜி ராம். தங்கள் கவிதையின் வாயிலாக ஏழுமலையானை கண்முன்னே கொண்டு நிறுத்தியிருக்கிறீர்கள்
நாங்களும் ஏழுமலையானை தரிசித்த அனுபவம் பெற்றோம்

வணக்கம்
 
ஒரு நல்ல மனிதரின் அனுபவம் .....


நாடித் துடிப்பும் நாணய மதிப்பும் ..... I


இறையருளும் குருவருளும் என்றும் வேண்டி நின்றிடுவார்;
குறைவில்லா வாழ்வு தமக்கு என எண்ணி மகிழ்ந்திடுவார்!

அறுபதுகளில் இருந்தாலும் மனதில் இளமை மாறவில்லை;
இருபதுகளில் ஓடியதுபோல் உள்ளது இன்றளவும் வேலை!

உற்றார் உறவினரைக் கருத்துடனே பேணிடுவார்;
சுற்றமும் நட்பும் கூடி நிற்க இனிது வாழ்ந்திடுவார்!

நாணயமாய் வாழ்வதே நல்வாழ்வு எனக் கருதிடுவார் - ரூபாய்
நாணயத்தில் மதிப்பில்லை என்று என்றும் கூறிடுவார்!

திருமண நிகழ்ச்சிகளில் தவறாது கலந்திடுவார்;
அருமையான உணவுகளைப் பாராட்டி வந்திடுவார்!

சென்ற மாதம் வெளியூரில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு
சென்று வந்த வேளையில் புது அனுபவம் தன் அதிர்ச்சிக்கு!

விமானப் படியிறங்கும்போது கண்கள் இருட்டிவர,
நிதானம் தவறினாலும் சமாளித்து இல்லம் சேர,

உண்ட உணவினால் வந்தது இந்த நிலைமை - எனக்
கொண்டு வந்து தந்தாள் துணைவி கஷாயக் கலவை!

நெஞ்சு வலி அதிகரிக்க, நேரமும் கடந்து செல்ல,
அஞ்சா நெஞ்சராய் மருத்துவமனையில் தஞ்சமடைய,

'எலக்ட்ரோ கார்டியோகிராம்' முதல் 'எக்கோ கார்டியோகிராம்' வரை
பலவித சோதனைகள் செய்து அவர்கள் தன்னை மிரட்ட,

அஞ்சா நெஞ்சனையும் கொஞ்சம் கலங்கச் செய்துவிடும்
'ஏஞ்சியோகிராம்' செய்து, மீண்டும் மீண்டும் தன்னை வாட்ட,

தன் திறனால் பல்வேறு சாதனைகள் செய்தவர்,
எந்திரனாய் மாறி நினைவின்றிக் கிடந்தார்! :faint:

தொடரும் .....
 
நாடித் துடிப்பும் நாணய மதிப்பும் ....... II


ஆச்சாரியாள் திருமுகம் புன்சிரிப்பாய் நிழலாட,
ஆச்சரியமான உலகில் சில மணிகள் சஞ்சரித்தார்!

துடிக்க ஐந்து மணித்துளிகள் மறந்து போன இதயத்தைத்
துடிக்க வைக்க 'ஷாக்' கொடுத்து மீண்டும் இயங்க வைத்து,

பலவிதமான கருவிகளை உடலில் இணைத்துவிட்டு,
சில மணி நேரம் 'சீரியஸ்' நிலை எனக் கூறிவிட்டு,

அன்பு மனைவியுடன், பண்பான பிள்ளைகளையும்,
தெம்பு இன்றி மருத்துவர்கள் செய்துவிட்டு - அவரின்

'எலக்டிரிக் கனெக்க்ஷன்' ஏதோ போய்விட்டது என்று கண்டு,
'எலக்டிரிக்' இதய நிபுணர் உடனடியாய் வந்து சேர்ந்தார்!

துடிக்கும் இதயக் குழாய்கள் பழுதின்றி இருந்தாலும் - இதயம்
துடிக்க வைக்கும் மின்சாரம் பழுதாகப் போய்விட,

சம்சாரம்தான் மின்சாரம் என்று எண்ணிய பலரும்,
'சம்சாரக் கடலில் உழல உடலில் மின்சாரமா?' என வியக்க,

புதுவிதக் குட்டி இயந்திரத்தை உடலில் பொருத்தினால்,
புது வாழ்வு வாழ்ந்திடலாம் எனத் தீர்மானிக்க,

பாதாளம் வரை பாயும் பணம் உதவிக்கு வர,
சேதாரம் இல்லாது உடல் பழைய நிலைக்கு வர,

'பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை என்ற வாசகத்தின்
பொருளில் இத்தனை ஆழமா?' என வியந்து போனார்!

பொருளின்றிப் பலவற்றை சாதிக்க முடியாது - எனினும் இறை
அருளின்றி அவை எதுவும் சோபிக்க முடியாது! :pray2:

 
Last edited:

Latest posts

Latest ads

Back
Top