• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

குறை ஒன்றுமில்லை.....

முன் குறிப்பு:

தாயை இள வயதில் இழந்து, உடன்பிறப்புகளுடன்,
தாயை ஈன்றவள் அரவணைப்பில் வளர்ந்து - தன்

முதுமையில் தம் ஐந்து மக்களை ஒப்பிட்டு, மயங்கி,
புதுமையான 'டிப்ரஷன்' பெற்ற அன்னைக்கு எழுதியது!

*******************************************

அன்பு மிகு அன்னைக்கு ஆசை மகளின் மடல் ஒன்று;
அன்பு மிகு வாழ்க்கைதனை எவ்வாறு வாழ்வதென்று!

இளம் வயதில் தாய் அன்பை அறியாது வளர்ந்தீர்கள்;
தினம் அன்பு காட்ட அவளின் அன்னையைப் பெற்றீர்கள்!

பெண்ணாகப் பிறந்ததைக் குறைவாக நினைத்தீர்கள்;
ஆணாக பிறக்கவில்லையே என்றும் தவித்தீர்கள்!

சிறிய வயதில் திருமணம்; கூட்டுக் குடும்ப வாழ்வு;
பெரிய பொறுப்புக்கள் பல ஏற்று, பாரம் சுமந்தீர்கள்!

ஒரு கண நேரம் கூட விரயமே செய்து விடாமல், நல்ல-
தொரு 'சகல கலா வல்லி' போலவே திகழ்ந்தீர்கள்.

தந்தையின் சுற்றத்துக்கும், பின்னர் எங்களுக்கும் வேண்டி
தங்கள் வாழ்வின் பெரும் பகுதியை அர்பணித்தீர்கள்.

பாரம் அதிகமாய்ச் சுமந்து வந்த உங்களுக்கு,
நேரம் இப்போதுதான் இளைப்பாற, மறவாதீர்!

ஒரே போல ஒரு கை விரல்களே இருப்பதில்லை;
ஒரே போல உம் மக்கள் இல்லாததில் வியப்பில்லை!

உங்களின் பல்வேறு திறமைகளில் ஒரு சிலதான்,
எங்களில் ஒவ்வொருவரும் பெற்றோம், நிஜம்தான்!

ஒவ்வொருவர் சிறப்பை மட்டும் பாராட்டி வாழ்ந்தால்,
ஒருபோதும் துன்பமில்லை; எல்லாமே இன்பமயமே!

முதுமையில் உடல் வருத்தம் தெரியும்...ஆனால் அதே
முதுமையில் அடி வைக்கும் எங்களையும் அறியுங்கள்!

தினை அளவாய் இன்பம் பெற்றிடும்போது, அதனைப்
பனை அளவாய்ப் பாராட்டி மகிழ்ந்திட அறிந்திடுங்கள்!

குறை ஒன்றுமில்லை என எப்போதுமே எண்ணிடுங்கள்;
நிறைவான மன அமைதி என்றென்றும் பெற்றிடுங்கள்! :peace:


பின் குறிப்பு!

எண்பது தாண்டிய தாய்குலத்தினர் பலருக்கும் இதன் பெரும் பகுதி பொருந்துமோ?

 
சிந்தை செயும் விந்தை ..... I

அண்மைக்கால என் அனுபவம் ஒன்று,
உண்மையாய் உரைக்கிறேன் இன்று!

விடியலின் இன்பத்தில் விழித்து எழுந்த வேளை,
விழிகளுள் தெரிந்தன இரு மெல்லிய கோடுகள்!

விழிகளின் நேர் பார்வைக்குச் சற்றுக் கீழே,
"விடேன் உன்னை" எனப் படர்ந்து நின்றன!

கண்ணுக்குள் என்ன சிலந்தியின் வலையா?
கண்ணுக்குள் "வலை அடிக்க" வழி உள்ளதா?

நிலை குலைந்த மனத்துள் சோகம் அப்பியது!
அலை அலையாகப் பயம்; வயிற்றுள் பட்டாம்பூச்சி!

தன் வாலைப் பூனைக்குட்டி கடிக்க முயலும்போது - அது
அதன் வாயில் எட்டாது சுற்றிச் சுற்றி வருவதுபோல்,

நான் "அதை"க் காண முயலும்போதெல்லாம்,
தான் முன்னே ஓடிச்சென்றன அந்தக் கோடுகள்!

மருத்துவரை நாடிச் சென்றால், அவரிடம்
கருத்துக்களைக் கேட்டு, நல்வழி கண்டிடலாம்!


மருத்துவமனை....


கண்களில் மருந்து இட்டு 'டயலேட்' செய்தபின்,
கண்களை மூடி அமர்ந்தேன் ஒளி மிகக் கூசியதால்!

சூரிய ஒளியைவிடப் பன்மடங்கு பிரகாசம்,
கூரிய வாள்போல் விழிக்குள் பிரவேசம்!

"எல்லோரும் சிவப்பாகத் தெரிகின்றாரே?" என்றேன்;
"நல்லதொரு யோசனை கிடைத்தது!" என்ற என்னவர்,

"பெண் பார்க்கப் போகும் எல்லாப் பிள்ளைகளுக்கும்,
கண்களை 'டயலேட்' செய்து விடலாமே!", என்றார்!

அடித்துக் கொள்ளும் "திக்திக்" மனதிற்கு, இந்தக்
கடி ஜோக் தந்தது கொஞ்சம் ஆறுதல்! பின்னர்

பிரகாச ஒளி பாய்ச்சி, விழித்திரை பார்ப்பது,
பிரமாத உடற்பயிற்சி போல் அயர வைத்தது!

தொடரும் ..... :scared:
 
சிந்தை செயும் விந்தை ..... II

"மேலே பார்; கீழே பார்; இங்கே பார்; அங்கே பார்" என
"பாலே டான்சர்" கால்களைப்போல என் கண்களை

அதி வேகத்தில் சுழற்ற வைத்தார் மருத்துவர்;
கதி கலங்கிப் போனேன் நான், அந்த நேரம்!

பொங்கும் பிரவாகமாகக் கண்ணீர் பெருகியது;
எங்கும் பிரகாசமாய் ஒளி வெள்ளம் சிதறியது!

ஐந்து மணித்துளிகளில் முடிந்த அச்சோதனை,
ஐந்து மணி நேரம் ஆனதுபோல் அயர வைத்தது!

நல்ல வார்த்தை வந்தது மருத்துவரிடமிருந்து;
நல்ல நிலையில் விழித்திரை இருக்கிறது என்று!

இது போன்ற தோற்றங்கள் சிலருக்குத் தெரியும்!
இது தொல்லை செய்யாது; மனம் இதை மறக்கும்!

மனித மூளை வரிகளை அலட்சியம் செய்யும்!
இனிது கண் பார்வை இருப்பதும் புரியும்!

மனத்துள் பெரும் நிம்மதி உடனே பிறந்தது;
கணத்தில் துயரம் ஓடிச் சென்று மறைந்தது!

சிந்தை செயும் விந்தைதான் என்னே! இது
சிந்திக்க ஒரு விஷயமாய் வரும் நம் முன்னே!

நல்லாசி பெரியோர் தருவது ஏன் எனப் புரிந்தது;
நல்லாசி பெற்ற மனம் தெளிவுறும் என்பதால்!

உடுக்கை அடித்து, குடுகுடுப்பைக்காரன், தன்
"உடுக்கை" (உடை) வேண்டி நற்சொல் சொல்வதும்,

அல்லலுற்று வருந்தும் நோயாளிக்கு, எல்லோரும்
பல்வேறு விதமாகப் பேசி உற்சாகம் அளிப்பதும்,

எப்போதும் நேர்மறை எண்ணங்களை வளர்ப்பதும்,
இப்போது புரிந்தது, மன அமைதிக்குத்தான் என்று!

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது நன்று!
எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்பது நன்று!

நல்லது! நல்லது! என எண்ணிடுவாய் மனமே;
நல்லது கிடைத்திடும் தவறாது அனுதினமே! :angel:

 
குறிப்பு:

(மேலை நாடு வாழ் மகனின் திருமணம் ஆனபின் வந்த மாற்றங்களைச்
சில பெற்றோர் உரைக்க, அவற்றின் எதிரொலியாக வந்தது இக்கவிதை)

கீதையின் சாரத்தை உணர்த்தும் 'அங்கும் - இங்கும்'

'கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!' இது
மடமை நிறை நெஞ்சுக்குக் கீதை சொல்லுவதே!

அன்பைப் பொழிந்து, அருமையாகக் காத்தாலும் - அந்த
அன்பை மறந்து அவர்கள் 'அங்கேயே' செல்லுவதேன்?

பேரன்பை நாம் காட்டுவது நம் கடமைதானோ?
பேரன்பை எதிர் நோக்குவது நம் மடமைதானோ?

கொண்டவன் செலவு செய்தால் கொண்டாட்டம் அங்கே;
கொண்டவனை ஈன்றவர் பாடு திண்டாட்டம் இங்கே!

பெட்டி நிறையப் பரிசுப் பொருள் சென்றுவிடும் அங்கே;
குட்டிக் குட்டிப் பரிசு சிலது வந்து சேரும் இங்கே!

'சர்க்கரை' அளவு பார்க்க "மீட்டர்" போகும் அங்கே;
'சர்க்கரை' அளவு பார்க்க ஒரு LAB இருக்கு இங்கே!

சேமிப்பு பற்றிக் கவலை இன்றி "போன்" பேச்சு அங்கே;
சேமிப்பு பற்றிக் கவலைப்பட்டு P C பேச்சு இங்கே!

"கார்டு" தேய்த்துப் பொருட்கள் வாங்குவது அங்கே;
"கார்டு" தேவையில்லை என எடுப்பதில்லை இங்கே!

சமையலில் உதவி செய்த பின்பு 'ஊர் சுற்றல்' அங்கே!
சமையலில் உதவி செய்யாது 'நாவல் படிப்பு' இங்கே!

சாஸ்திரம் தெரிந்தவர்போல் இருந்திடுவார் அங்கே!
'சாஸ்திரம் எதற்குத் தேவை?', என்றிடுவார் இங்கே!

தெய்வம் பல தரிசிக்கக் கோவில் போவார் அங்கே! - குல
தெய்வம் கூட தரிசிக்காமல் "லீவு" போடுவார் இங்கே!

காலம் மாறினாலும், கண்ணன் உபதேசம் மாறவில்லை;
மேலும் மன அமைதிக்கு நமக்கு வேறு மார்க்கமில்லை! :nono:

 
என்னைக் கலக்கிய கேள்வி!

இசை ஆர்வம் மிக்க மாணவிகளுக்கு, நான்
இசை கற்பிக்கும் வகுப்புக்களில், எந்தப்

பாட்டு வேறு மொழியில் அமைந்தாலும், அந்தப்
பாட்டின் கருத்தை விளக்குவது வழக்கம்.

ஒவ்வொரு வார்த்தையும் புரியாவிடினும்,
ஒவ்வொரு பாட்டின் கருத்தை அறியணுமே!

'ஸீதம்ம மாயம்ம' என்ற வசந்தா ராகத்தில்,
ஸீதையை அன்னையாக வரிக்கும் கீர்த்தனை.

"'ஸீதம்மா எங்கம்மா' என்றும், அடுத்து
'ஸ்ரீ ராமர் எங்கப்பா!' என்றால் அழகு வராது!

ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு அழகு;
ஒவ்வொரு பாடலும் அதனாலேயே அழகு!",

என்று வேடிக்கையாகச் சொல்லிவிட்டு,
அன்று பாடம் கற்பித்தேன்... அனுபல்லவியில்,

'சகோதரன் லக்ஷ்மணன், பரதன், இன்னும் சிலர்,
சகோதரர்கள் எமக்கு', என்ற பொருளில் வரிகள்!

''தியாகராஜர் ஏன் குழப்புகிறார், மிஸ்?'' என்று
தியாகராஜரையே யோசிக்க வைக்கக் கேட்டாள்,

''ராமரும், ஸீதையும் அவரின் பெற்றோர் என்றால்,
ராமரின் தம்பிகள் அவரின் சித்தப்பாக்கள்தானே?''

கலக்கலான ஒரு கேள்வி கேட்டு, என்னைக்
கலக்கிவிட்டாள் அந்த இளம் மாணவி! :dizzy:

 
Last edited:
அருள் தரும் திருக்கடவூர் தெய்வங்கள்... I

மார்க்கண்டேயனுக்கு அருளிய அமிர்தகடேஸ்வரரை,
யார் கண்டாலும் விலகுமே யம பயமே! அவரின் தேவி,

அன்னை அபிராமி அழகு வடிவு கண்டுவிட்டால்,
முன்வினைப் பயனால் வந்த துயரம் விலகுமே!

ஆண்டுகள் அறுபது நிறைந்த பெரியோரும், அடுத்து
ஆண்டுகள் பத்துப் பத்தாய் முடிய, மீண்டும் சென்று

இறையை வழிபட்டு, இப்பூவுலக வாழ்வு என்றும்
குறையே இல்லாதிருக்க வழி தேடுவது வழக்கம்!

நாங்கள் முதல் முறை பெற்ற சில அனுபவங்களை,
உங்களுடன் பகிர்ந்துகொள்ள வரும் சில பக்கங்கள்.... :typing:

*********************************************

திருக்கடவூர் திருக்கோவில் தரிசனம் செய்ய அழைப்பு;
திருவுருவ அழகு காண ஆவல்; கூறவில்லை மறுப்பு!

எங்கள் உடன் பிறவா அண்ணனுக்கு பீமரத சாந்தியாம்;
எங்கள் அனைவரையும் அழைத்துச் செல்ல ஆவலாம்.

தகுந்த ஆடை அணிகலன்களுடன் பயணம் ஏற்பாடு;
மிகுந்த எதிர்பார்ப்புடன் அதிகாலையில் புறப்பாடு.

பேருந்து புறப்பட்டு எட்டுக் கல் சென்றபின், அதை
ஆராய்ந்து அக்கா கேட்டாள், 'விடியோக்காரார் எங்கே?'

சி. டி இல்லாத வைபவமா இன்றைய நாளில் நடக்கும்?
மோடி மஸ்தான் வேலைபோல ''கிராபிக்ஸும்'' அடக்கம்!

ACTION REPLAY செய்தவாறே படப்பிடிப்பு நடக்கும்;
ACTION REPLAY - யில் 'தாலி கட்டுதலும்' கூட அடக்கம்!

விமான நிலையத்தருகில் சென்று பேருந்து நின்றது;
விடியோக்காரருக்கு அடுக்கடுக்காய் போன் பறந்தது.

'செல்லை' அணைத்துவிட்டு அவர் எங்கோ போயிருக்க,
தொல்லை வந்தது எமக்குப் பேருந்தில் அமர்ந்திருக்க!

பேருந்து நின்றதால் உடனே 'குளிரூட்டி'யும் நின்றது!
பேருந்து சன்னல்களும் திறக்க இயலாது கிடந்தது!

வானம் காலிறங்கிக் கடும் மழை கொட்டியது;
நாமும் கீழே இறங்க முடியாது அது தடுத்தது!

ஒரு மணி நேரம் அனைவரும் தவித்த பின்னர்,
ஒருவழியாக வந்து சேர்ந்தார் விடியோக்காரர்!

பலரிடம் கடுஞ் சொற்கள் கேட்டபின் காட்டினார்
அவரிடம் கொடுத்த சீட்டில் 7 p.m. என எழுதியதை!

வசை மொழிகளை இன்முகத்துடன் கேட்டிருந்து,
இசைபட வாழ்வது எவ்வாறு என உணர்த்தினார்! :peace:

தொடரும் .....

 
Last edited:
அருள் தரும் திருக்கடவூர் தெய்வங்கள்... II


மழையில் மித வேகத்தில் பயணம் தொடர்ந்தது;
வழியில் அருமையான உணவும் கிடைத்தது!

நமக்கென்றே கட்டியதுபோல சுத்தமான உணவகம்;
நமக்கெல்லாம் உணவளித்தவர்களுக்கு நகைமுகம்!

திருக்கடவூரின் பேருந்து நின்றது பயண முடிவில்;
திருக்கோவில் பின்புறம்; தங்குமிடம் தொலைவில்!

முதுமையில் அடி வைத்தோரின் முழங்கால் வலுவிழக்க,
பொறுமையாய் நடை பயின்று சென்றார் உடல் தவிக்க!

சிறிய வீடுகள் விடுதியை மாறியுள்ளது வியப்பு;
பெரிய அறைகளாய்க் 'குளிரூட்டி'யுடன் அமைப்பு!

திருக்கடவூர் வேதியருக்குப் பெருஞ் செல்வம் சேருவதை
திருத்தமான அவர்களின் இல்லங்களால் அறிந்திடலாம்!

பளிங்குத் தரைகளும், பல வண்ணப் பூச்சுக்களும்,
துலங்கும் அழகான வீடுகள் பல கண்டிடலாம்!

வரிசையாய் அமைந்துள்ள வீடுகளின் இடையே, பல
வரிசையில் மேசை நாற்காலி உள்ள உணவுக்கூடம்!

ஒரு பகுதியில் நல்ல தரை போடப்பட்டுள்ளது; ஆனால்,
மறு பகுதி மணல் பரப்பியே விடப்பட்டுள்ளது!

மொத்தமாகப் பணம் செலுத்தி வரும் குடும்பங்களுக்கு,
மெத்தனமான கவனிப்பே! தனியார் விடுதிபோல இல்லை!

குளித்துப் பட்டு உடுத்தித் திருக்கோவில் சென்றோம்;
தனித்து வருவோரே இல்லை! குடும்பங்களாகவே வரவு!

முற்காலத்தில் கட்டிய மிகப் பெரிய திருக்கோவில்;
இக்காலத்தின் மாற்றங்களும் இருக்கக் காண்கின்றோம்!

மார்க்கண்டேயனுக்குச் சிரஞ்சீவி வரமளித்த க்ஷேத்திரம்;
மார்க்கண்டேயனுக்கும் தனிக் கோவில்; ஒரு கல் தூரம்!

காலனைக் காலால் உதைத்த சம்ஹார மூர்த்தி - அதனால்
காலனின் கல்லுருவத்தில் வெள்ளிக் கவசம் இட்டுள்ளார்!

ஒரு கணம் கவசத்தை விலக்கிவிட்டு, அதை நாம் கண்டதும்,
மறுகணம் மூடி, எதிரில் காலன் உயிர்த்த இடம் காட்டுகின்றார்!

சம்ஹார மூர்த்தியாக நீண்ட நேரம் இல்லை தரிசனம் - அவர்
சம்சார சாகரத்தைத் தாண்டிட அருளுதல் நிதர்சனம்!

கம்பீரமாய் நிற்கும் காணத் தெவிட்டாத திருக்கோலம்;
தெய்வீகமாய் விளங்கும் மிக உயரிய சன்னிதானம்! :pray2:

தொடரும் .....
 
Last edited:
அருள் தரும் திருக்கடவூர் தெய்வங்கள்... III


அபிராமி என்றால் எப்போதும் அழகு - அன்னை
அபிராமி சன்னதியில் இது புரியும் மிக எளிதாய்!

கண் இமைக்க மறக்கும் சுந்தரி ரூபம் கண்டுவிட்டால்;
கண் இருந்தும் பயனில்லை வடிவழகு காணாவிட்டால்!

சிங்காரப் பட்டு உடுத்தி, அரிய அழகுப் பெட்டகமாய்,
இங்கிருந்து காத்தருள்வாள், திருவருள் வடிவமாய்!

திருக்கோவில் பிரகாரம் சுற்றிலும் பல சன்னதிகள்;
அருள் வேண்டிச் செய்கின்ற பற்பல ஹோமங்கள்!

ஒவ்வொரு சன்னதியிலும், பல தீர்த்தக் குடங்கள்;
ஒவ்வொரு குடும்பமாய் பூஜை காணும் முகங்கள்!

புகை மண்டலம் சூழ்கிறது நேரம் செல்லச் செல்ல - சிலர்
புகையிலிருந்து தப்பிக்க வெளியேறினர் மெல்ல மெல்ல.

ஒரு நிமிடம் இடம் பெயர்ந்து எவரேனும் சென்றால்,
மறு நிமிடம் பின் உள்ளோர் நகர்ந்து இடித்தார் முதுகை!

எல்லாச் சன்னதியிலும் நிரம்பி வழியும் கூட்டங்கள்;
எல்லாச் சன்னதியிலும் மூளும் புகை மூட்டங்கள்!

ஹோமங்கள் முடிந்ததும், சிற்றுண்டிக்குச் சென்றோம்;
ஹோமங்கள் பலன் தந்து ஆரோக்கியம் நிலைக்கணும்!

சுத்தத்தின் பொருளே சுத்தமாகத் தெரியாதது போல,
மொத்த உணவுக் கூடமும் விளங்குவது பரிதாபம்!

சென்னைத் திருமண வரவேற்பில் 'இடம் பிடிப்பது'போல,
அன்னையின் க்ஷேத்திரத்திலும் அவலமாய் இருந்தது!

ஒரு வழியாக இடம் கிடைத்து அமர்ந்ததும் வந்தது,
மிகச் சரியாகச் சிற்றுண்டி, இனிய மணத்துடன்; ஆனால்,

என்ன கொடுமை! விளக்கைச் சுற்றும் குட்டிப் பூச்சிகள்,
சின்ன உருண்டைகளாய் விழுந்தன எம் இலைகளில்!

பசி வந்தால் பத்தும் பறக்குமே! விழுந்த பூச்சிகள் மீது
ருசியான உப்புமாவை சிறு உருண்டைகளாய் வைத்து,

தேடித் தேடிப் பூச்சி விழாத பகுதியை மட்டும் உண்ண,
ஓடிப் போனது, கால் வயிறு நிரம்பியதுமே, என் பசி!

எத்தனை பேர் பூச்சிகளைக் கடுகு என நினைத்தாரோ?
எத்தனை பேர் உப்புமா புது ருசி எனவும் நினைத்தாரோ?

கால சம்ஹார மூர்த்தியும், அன்னை அபிராமியும் அருளி,
காலை வேளை உடல் நலத்தோடு எழுந்திட உதவணும்! :amen:

தொடரும் .....

 
அருள் தரும் திருக்கடவூர் தெய்வங்கள்... IV

அன்னை அபிராமிக்கு அபிஷேகம் மிக அதிகாலையில்;
அண்ணா அண்ணியுடன் வேறு சிலரும் தரிசித்தோம்!

எட்டு மணிக்குக் கோவில் நுழைவாயிலில் கூடணும் -ஆனால்,
எட்டு மணிக்கு மேல் இன்னும் ஒரு மணிதான் கூடியது!

மெதுவாக எல்லோரும் வந்து சேர்ந்து கொண்டதும்,
மெதுவாகக் கோவிலினுள் நுழைந்தோம் அனைவரும்.

நுழைவாயில் தாண்டியதும், மிகப் பெரிய மைதானம்;
அழைத்து வந்த 'மாப்பிள்ளை - பெண்' கஜ பூஜை செய்யணும்.

கஜராஜன்.. இல்லை.. கஜராஜி துதிக்கையில் சிறு கோலுடன்,
கஜ நடை மேலும் கீழும் பயில்வது, காணக் கிடைக்கணும்!

கம்பீர நடை பயின்று, அழகாகப் பூஜை ஏற்றுக் கொண்டு,
தம்பதிகளை வாழ்த்துவதைக் காணுவதும் நன்று.

கோ பூஜை தொடர்ந்தது; அழகிய கன்றுடன் பசுமாடு ஒன்று
கோலாகலமாய் நின்றது; எல்லோரும் வணங்கினோம்!

திருக்கோவிலில், முன் தினம் அமர்ந்த இடத்திலேயே,
மணக்கோலத்தில் அமர்ந்தார், அண்ணா அண்ணியுடன்.

ஒரு குடம் ஒருவருக்கென பூஜை முடிந்ததும் கொடுத்து,
ஒரு பிரதக்ஷணம் செய்வித்தனர் எங்களில் பன்னிருவரை.

அபிராமியின் அருளுடன், மகாதேவன் அருள் கிடைத்திட,
அபிஷேகம் செய்தனர், தம்பதியர் இருவரும் நடுங்கிட!

உடை மாற்ற இடம் இன்றித் தவித்தைக் கூற வேண்டும்;
'நடை'கள் அருகில் சின்னஞ்சிறு மறைப்பே இருந்தது!

அபிஷேகமான பெண்கள், ஈர உடைகளை மாற்றுவதால்,
அபிஷேக நீர் நிரம்பி அந்த இடம் குளம் போலவே ஆனது!

பண்டை நாடக நாயகனின் நுழைவு நேரத் திரைபோல,
அண்டை அயலார் பாராதிருக்க நாங்கள் திரை பிடித்தோம்!

கூறைப் புடவை உடுத்தவும் உதவ வேண்டும்; அதையும்
வேறு யார் கண்ணிலும் படாத வண்ணம் செய்ய வேண்டும்!

இறை அருள் இருந்தால்தான் இயலும் இந்த வேலைகள்;
குறை இன்றிச் செய்தோம்; இல்லை இனி தொல்லைகள்! :grouphug:

தொடரும் .....

 
அருள் தரும் திருக்கடவூர் தெய்வங்கள்... V


தலைவனுக்குத் தலைப்பாகை கட்டி மரியாதை உண்டு;
தலைவியுடன் யாவரும் மகிழ்ந்தோம், தீபாராதனை கண்டு!

மறந்து விட்டேனே! ஆஸ்தான நாதஸ்வர வித்வானை!
சிறந்த அறிவாளிகளே கண்டுபிடிக்கலாம், அவர் பாட்டை!

ஸ்வரங்களை வைத்துப் பாடலை அறியவே முடியாது;
ஸ்வரங்களின் நீளத்தால் மட்டுமே அறிய முடியும்!

பே பே - பெ பெப்பே பேபெப்பே என்று கேட்டால், அது
பாக்யாத லக்ஷ்மி பாரம்மா என்ற பாடலாகும்.

பேபே - பெபெப்பே பே - பே பே - பெ என்று கேட்டால், அது
சபாபதிக்கு வேறு தெய்வம் என்ற பாடலாகும்!

இந்த இசை முன்னே செல்லப் பின் தொடர்ந்தோம்,
எந்த ராகமும் புரியாமல் பாடலைக் கண்டுபிடித்தபடி!

மீண்டும் அன்னையின் தரிசனம் கண்டு களித்தபின்,
மீண்டும் 'அதே' உணவகத்தில் மதிய உணவு எங்களுக்கு!

'நேற்றுப் பாடு எவ்வளவோ மேல்' என உணர்த்துவது போல
அன்று வலம் வந்தது பைரவர் வாகனம், எம்மைச் சுற்றி!

மண் தரை அமைந்த கூடத்தில், மேலும், கீழும் ஓடியது;
உண்ண வைத்த அப்பளக் கூடையை மோப்பம் பிடித்தது!

என்னதான் எம பயத்தை அகற்றும் க்ஷேத்திரமானாலும்,
சின்னதாய்க் கூட சுத்த உணர்வு இல்லாதது நெருடியது!

கருணைக் கடல்தான் தேவனும், தேவியும் - அவர்கள்
கருணை காட்டியதால் நல்லபடியாகச் சென்னை வந்தோம்!

அன்புடன் அண்ணா அண்ணி புத்தாடை பரிசளித்தனர்;
அன்புடன் எங்கள் பரிசுகளையும் ஏற்றுக் கொண்டனர்.

அடுக்காய்ப் புடவைகள் இருந்தாலும், புதிய வரவில் மகிழ்ச்சி;
கொடுத்த விசேஷங்களை எண்ணி வருமே மன நெகிழ்ச்சி.

புத்தாடைகள் அளிக்கும் வழக்கம் இதனால்தான் வந்ததோ?
புத்தம் புதிதுபோலப் பழைய நினைவலைகள் தொடருமோ?

திருக்கடவூர் தரிசனம் கிடைத்தது மட்டிலா மகிழ்ச்சி;
திருக்கடவூர் தெய்வங்கள் தருமே வாழ்வில் மலர்ச்சி! :cheer2:


 


எல்லோர் இல்லங்களிலும் திருமணங்கள் வருவது சகஜம்;
பல்வேறு ஏற்பாடுகளில் நாம் மும்மரமாவது மிகவும் நிஜம்.

சில திருமண ஏற்பாடுகள் தந்த அனுபவங்களை, உங்களுடன்
சில பக்கங்களில் பகிர்ந்துகொள்ள விழைகிறேன், ஆவலுடன்! :welcome:


 
சிருங்கேரியில் ஒரு கல்யாணம் ..... I


இறை அருளால் எவருக்கும் குருபார்வை கிடைக்கும்;
குறைவின்றிச் சேர்ந்து வாழ நல்ல துணை கிடைக்கும்.

குரு பகவான் அருட்பார்வை நல்ல நேரம் கிடைத்தது - குல
குரு அருளும், ஆசிகளும் நன்கு கூடி வந்தது!

எங்கள் தங்கை மகனுக்குத் துணைவியைத் தேர்வு
எங்கள் குருவே செய்ததில், வந்தது மன நெகிழ்வு!

நண்பர்கள் கூட்டம்; சுற்றத்தார் கூட்டம் - சிருங்கேரி
அன்பர்கள் கூட்டம்; அயல் நாட்டார் கூட்டம் - என

அரிய கதம்ப மாலை போல் விருந்தினர் அமைந்திருக்க
பெரிய வகையில் ஏற்பாடுகள் ஆரம்பமாயின!

திருமணம் சிருங்கேரியில் நடக்கும் என்று சொன்னதும்,
ஒரு கணமும் தாமதமின்றி வரவிழைந்தனர், அனைவரும்!

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்; குருவின் ஆசி பெறலாம்;
ஒரு செலவும் இல்லாமல் திருமணமும் பார்த்திடலாம்!!

பிள்ளை வீட்டுக் கல்யாணம் என்றால், உடன் வருவோர்,
பிள்ளையின் பெற்றோரை 'டிக்கட்' வாங்கச் செய்வாரே!

வேலைகளை அலுவலகத்தில் ஓரம் கட்டிக் கலியாண
வேலைகளில் மூழ்கினர் பணி புரியும் சிஷ்யர்கள்!

திருமணப் பத்திரிகையும் பலவகையாய் எழுதியாச்சு;
அருமையாய் மூன்று மொழிகளிலே தயாராச்சு..

சிங்காரச் சென்னையில் ரயில் ஏறிச் சென்றால்,
சிருங்கேரி சென்றடைய ஏறக்குறைய ஒரு நாள்.

பயணம் செய்ய அனைவருக்கும் டிக்கட் எடுத்தாச்சு;
சயனம் இனிதாய் இருக்க 'ஏ. சி' யில் ஏற்பாடாச்சு!

வழியிலே சாப்பாடு, பலகாரம், பாக்கெட்டில் தந்து,
எளிதிலே பசியாற, 'கேடரருக்கு'ச் சொல்லியாச்சு!

ஸ்வீட்டும், காரமும் சின்னச் சின்ன பாக்கெட் செய்ய,
ஸ்வீட்டுக் கடையில் மொத்தமாக வாங்கி வந்தாச்சு!

மண்டபம் சென்றடையப் பேருந்துக்குச் சொல்லியாச்சு;
கண்டதும் வரவேற்க 'இவன்ட் மானேஜர்' ஏற்பாடாச்சு! :cool:

தொடரும்......
 
Last edited:
சிருங்கேரியில் ஒரு கல்யாணம் ..... II


மேலை நாட்டின் விடுதி அறைகளில் உள்ளதுபோல்,
மேலான ஏற்பாடுகள் செய்துவிட விரும்பியதால்,

பெரிய, சிறிய துண்டுகள், 'ஆல் அவுட்', 'டார்ச்' உள்ள
பெரிய 'பாக்கெட்', மேலை நாட்டினருக்குக் கிடைக்கும்!

புடவை, நகைகள் அணிய அப் பெண்கள் விரும்புவதால்,
புடவை, நகைகள் பரிசு 'செட், செட்'டாக அணி வகுக்கும்!

'நவாவரணம்' பாட வைக்கச் சிலருக்கு விருப்பம் - எனவே
'நவாவரணம்' பற்றித் தயாரானது ஓர் எழுத்துச் சுருக்கம்!

தம்பூரா ஸ்ருதி அருமையாக இருக்கும்; 'எலெக்ட்ரானிக்'
தம்பூரா வாங்கி வந்தேன்; தீர்ந்தது என் நெடு நாள் விருப்பம்!

'ராசி பலன்' பாடும் தினத்தில் என்னவென்று பார்க்க - என்
ராசிக்கு "மறதி" என்று தின நாட்காட்டியில் போட்டிருக்க,

உடனே சென்று பாட்டுக்களை 'ஜெராக்ஸ்' எடுத்தேன் - என்
உடனே கொண்டு போகும் பெட்டியில் மறவாது வைத்தேன்!

இனிதாய்க் கல்யாணம் கண்டுவர அருமையான ஏற்பாடு;
தனித் தனி 'செட்'டாய்ச் சேர்ந்து, சென்னையில் புறப்பாடு!

ஆசையாய் ஏ.சி-யில் கிடைத்த ஓசிப் பயணம் இனிமை;
ஆசையாய் எமக்கு அளித்த உணவும் மிகவும் அருமை!

என் புதுக்கவிதைகளை, நன்றாக நேரம் போகப் படித்தேன்;
என் நண்பர்கள் புது ரசிகர்களாய் மாறியதில் மகிழ்ந்தேன்!

எழுதி வந்த ஊஞ்சல் பாட்டு, கோஷ்டியாகப் பாடிப் பார்த்து,
பழகி வந்த பாட்டுப்போலச் செய்தோம், அந்த நேரம் பார்த்து!

அருமையான பயணம் முடித்து மங்களூரை அடைந்தோம்;
குளுமையான காற்று வீசப் பேருந்தில் ஏறி அமர்ந்தோம்! :couch2:

தொடரும் .....

 
Last edited:
சிருங்கேரியில் ஒரு கல்யாணம் ..... III


வளைந்த மலைப் பாதைகளில் பேருந்து 'நடக்கும்';
களைத்தவரின் சோர்வு நீக்கிப் பூவாசம் மயக்கும்!

மண்டபத்தை அடையக் காலை மணி ஒன்பது - அந்த
மண்டபத்தின் அருகிலேயே தங்கும் அறை உள்ளது.

குளித்துவிட்டுப் பட்டுடுத்தி, மண்டபத்தை அடைந்தோம்;
களித்தவாறு வரவேற்றதில், மன நிறைவு அடைந்தோம்.

அழகு வடிவமாகப் பிள்ளை ஒருபுறம் அமர்ந்திருக்க,
அழகுப் ராணி போலப் பெண் மறுபுறம் அமர்ந்திருக்க,

ஜோடிப் பொருத்தம் காண மிகவும் சிறந்ததே என
ஓடி வந்து மின்னல் போல எண்ணம் உதித்ததே!

பெண் அணியில் பாலிகை தெளித்து முடித்ததும், பல
பெண்மணிகள் துணையுடன் சென்றனர்"தீர்த்தம்" வாங்க.

நீண்ட அறை ஒன்றில் உணவளிக்க இலை போட்டு,
நீண்ட பாய் விரித்து எம்மை அமரவைத்தனர்; ஆனால்

இலை பற்றிக் கொஞ்சம் கவனம் வேண்டும் எண்ணத்தில்;
இலை கழுவிய நீர் விழுந்தது நல்ல ஆரத்தி வண்ணத்தில்!

மதிய உணவு முடிந்ததும், வந்தது தூக்கக் கலக்கம்;
புதிய அறையில் சிறிது நேரம் ஓய்வுடனே உறக்கம்.

புதிய உணவு பலருக்குத் தந்தது வயிற்றுக் கலக்கம்;
போதிய மாத்திரை என்றும் என் கைவசம் இருக்கும்.

என் அன்புத் தந்தை "கைராசி" எனக்கும் சிறிது உண்டு;
என் கையால் மாத்திரை வாங்கி உண்டவர் நலமே; நன்று! :thumb:

தொடரும் ......
 
சிருங்கேரியில் ஒரு கல்யாணம் ..... IV


மாலையில் அருள்மிகு சாரதாம்பாள் தரிசனம் - பூ
மாலையுடன் வீணையும் காண ஏங்கியது மனம்!

அருள் விழிச் சுடருடன் பட்டாடையும் ஜொலிக்கும்;
அருள் வடிவு காணக் காண, நம் மெய் சிலிர்க்கும்!

அருகில் ஒரு திருக்கோவில் பழமை மாறாது உள்ளது;
அருமையாக கணபதி, ஈஸ்வரன் சன்னதிகள் உள்ளது.

ஞானம் வழங்க இருவரும் பாங்காக அமர்ந்துள்ளார்;
ஞானம் மேலும் கிடைக்க நன்றாக அருளுகின்றார்!

நிச்சயதார்த்தம் தொடங்க நேரம் கடந்து விட்டது;
நிச்சயம் பாட நினைத்த 'நவாவரணம்' விடப்பட்டது!

புண்ணியம் செய்ததுதான் என் புதிய தம்பூராப் பெட்டி;
புண்ணிய க்ஷேத்ரம் சும்மாக் காண வந்தது அந்தக் குட்டி!

மேல் நாட்டு மங்கையர் நன்கு புடவை நகை அணிந்து, நம்
தாய் நாட்டுக்கு மரியாதை கொடுத்தனர், மனம் மகிழ்ந்து!

"ஜூன்" நிகழ்ச்சிகளெல்லாம் அருகிலமர்ந்து ரசித்தார்;
தான் ஓர் 'அமெரிக்க யசோதை' என உணர்த்தினார் - அவர்

நியூயார்க்கில் தாய்போல மாப்பிள்ளையைப் பேணியவர்;
நியூயார்க்கிலிருந்து திருமணம் காணவே இங்கு வந்தவர்.

எண்பதுகளில் வயது இருந்தாலும், தன் அன்பு உள்ளத்தில்
எண்ணியபடி இந்தியா வந்தார், அந்த மருத்துவ மூதாட்டி.

தன் வாழ்வின் குறிக்கோள் பற்றி அவர் உரைக்கும்போது,
'அன்பு எல்லோரிடமும் காட்டுவதே', என்று அசத்தினார்!

இரவு உணவு முடித்து, பலரும் பூஜை காணச் சென்றனர்;
சிரமமாக நினைத்தவர், தம் அறை நோக்கிச் சென்றனர்! :yawn:

தொடரும் .....


 
சிருங்கேரியில் ஒரு கல்யாணம் ..... V


அதிகாலையில் நல்ல நேரம் தொடங்குவதால் - மறுநாள்
அதிகாலை அனைவரும் கூடினோம் மண்டபத்தில்...

கையில் வைத்திருந்த குட்டி 'மேக்கப்' பெட்டியில்
மையால் கண்ணெழுதும் 'பென்சிலை' நான் எடுத்து,

கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு பிள்ளைக்கு இட்டுவிட,
கணத்தில் அழகு கூடிவிட்டாற்போல் தெரிந்தான்!

''மைவிழியால் மைவிழியாளை நோக்க வேண்டும்;
மைவிழியாய் அவனைச் செய்!'' எனச் சிலர் சொல்ல,

கண் எரியும் எனப் பயந்து அவனும் பரிதவிக்க - அவன்
கண்ணில் பாவனையாகக் காட்டினேன், அவனைக் காக்க!

சாஸ்திரியார் உடையுடுத்த, பெரிய மாமா மாலையிட,
சாஸ்திரப்படி காசி யாத்திரை நல்ல நேரம் தொடங்கிவிட,

மைத்துனன் குடை பிடிக்க, மாமன்கள் உடன் வர,
அத்தனை கண்களும் மாப்பிள்ளை மீது படிந்துவிட,

நடந்தான் மாப்பிள்ளை, தன் பெற்றோர் தன்னுடன் வர;
தொடர்ந்தார் பெண்ணின் தந்தை, தடுத்து அழைத்து வர!

பெண்மணிகள் புடை சூழச் சிருங்கேரி மடத்தாரின்
கண்மணியாம் பெண்மணி, மெல்ல நடைபயின்று வர,

மான் விழியாள்; தேன் மொழியாள் என அவளை வருணிக்க,
தான் மண் நோக்கியபடி வந்தடைந்தாள், மாலை மாற்ற.

மாமனுக்குப் பதிலாக இளையவர் மாப்பிள்ளை தூக்குவது
'காமன்' ஆகிப்போனதாலே, மாமனுக்கு வேலையில்லை!

ஒன்று சேர்ந்த இளையவர் அவர்களைத் தோள் தூக்கி நிற்க,
நன்கு முடிந்தது மாலை மாற்றல், சுற்றத்தார் ரசித்து நிற்க!

கன்னியவள் கரம் பிடித்து, ஊஞ்சலுக்கு அழைத்து வர,
மன்னிகளும், மாமிகளும் ஊஞ்சலைச் சுற்றிச் சூழ,

இந்தத் திருமணத்திற்காக நான் எழுதிய இரு பாடல்கள்,
சந்தம் தவறாது பாடினோம் - நின்றன மேள தாளங்கள்! :grouphug:

தொடரும் .....

 
Last edited:
சிருங்கேரியில் ஒரு கல்யாணம் ..... VI


நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாய் நடக்கும் என்பதால் - ஊஞ்சல்
நிகழ்ச்சி நேரம் அதிகமாக்கத் தேவையில்லை என்றனர்!

சொட்டுப் பாலைக் காலில் இட்டு, பட்டாலே துடைத்து,
கொட்டாது வெள்ளிக் கிண்ணியில் பால் பழம் கொடுத்து,

மங்கையர் வலம் வந்து, திருஷ்டி சுற்றிய பின் - பெண்ணின்
அங்கையைப் பற்றி வந்து பிள்ளை மணமேடை ஏறினான்.

பூஜைகள் செய்து, கன்னியைத் தாரை வார்த்துக் கொடுத்து,
ஆசையாய் மாமியார் கொடுத்த நகைகளை அணிவித்து,

மணப்பெண் அலங்காரியாய்க் கூரைப் புடவை உடுத்தி வர,
மணமேடை களை கட்டியது; சுற்றம் அகம் மிக மகிழ்ந்தது.

மங்கல வாத்தியம் முழங்க, அனைவரும் பூமாரி பொழிய,
மங்கல நாண் பூட்டினான்; க்ருஹஸ்தனாய் மாறினான்.

இறையின் திருவருளுடன் குருவின் திருவருளும் வேண்டும்;
குறைவின்றி இருவரும் நீண்டநாள் இனிது வாழ வேண்டும்!

ஆசையாய்த் துணைவருடன் வந்த நண்பி - ஹொரநாடு காண
ஆசையைத் தூண்ட, வண்டி ஏற்பாட்டில் என்னவர் முனைந்தார்.

அன்னபூரணி தேவி கோவில் ஹொரநாட்டில் உள்ளது - அந்த
அன்னபூரணி தேவி அருளால். வளத்தோடு வாழ்ந்திடலாம்!

ஒன்பது பேர் அமர்ந்து செல்லும் வண்டியென்று சொன்னதால்,
ஒன்பது பேரை 'செட்' சேர்த்தேன். ஹொரநாடு சென்றுவர.

'சாதாரண' அளவுடையோர் என்ற குறிப்புத் தரவில்லை; 'அ
சாதாரண' அளவினால் நெருக்கடிக்குக் குறைவில்லை!
:bump:
தொடரும் .....
 
சிருங்கேரியில் ஒரு கல்யாணம் ..... VII


சொன்ன சொல் காப்பதைச் சின்ன வயதில் கற்றதால்,
சொன்னபடி அனைவரையும் வண்டியில் அமர்த்தினோம்!

பசுமையான மரக்கூட்டம்; விதவிதமாய்ப் பல தோட்டம்;
குளுமையான மலைக்காற்று மணக்க, வாச மலர்க் கூட்டம்.

சின்னச் சின்ன அருவிகள் இடையிடையே கொட்டின;
வண்ண வண்ணப் பறவைகள் பறந்து வானை எட்டின.

ஒவ்வொரு நொடியும் காட்சி மாறிக் கண் சிமிட்ட மறந்தது;
ஒவ்வொன்றும் 'பிக்சர் கார்டு' போல மனத்திரையில் பதிந்தது!

"ஆடாது, அசங்காது" நெருக்கடியில் பயணம் செய்தோம்;
"ஆடும் பாதன்" கலசேஸ்வரன் திருக்கோவில் அடைந்தோம்.

அருமையான கலசேஸ்வரன் பேரழகு வடிவம்;
பழமை மாறாத் திருக்கோவிலில், குங்குமப் பிரசாதம்.

மூர்த்தி சுயம்புவாய் வந்த க்ஷேத்ரம் என்று கூறினர் - இதன்
கீர்த்தி புனித காசிக்கு நிகரானதென்றும் கூறினர்!

வழியில் 'ப்ரேக்' பிடிக்கவில்லை என்று கூறிய காரோட்டி,
அருகில் உள்ள 'கெராஜில்' சரி பார்த்துக்கொண்டு வந்தார்!

மலைப் பாதைகளில் 'ப்ரேக்' இல்லாது பயணித்தோமே!
அலையாய்ப் பயம் நிறைய, நடுங்கினோம் அனைவருமே!

எப்போதும் நல்லோருக்குத் துணை நிற்பான் ஆண்டவன் - அதை
அப்போதும் உணர்த்தினான், அந்த ஆனந்தத் தாண்டவன்!

மீண்டும் பயணித்து ஹொரநாடு அடைந்தோம் - அருள்
வேண்டும் மனத்துடன், அன்னையைத் தரிசித்தோம்.

தங்கத் திருவுருவாய் ஜொலிக்கின்றாள் தேவி - அவள்
அங்கமெலாம் ஒளிரும் நகைகள், நவரத்தினங்கள் கூடி!

காணக் கண் கோடி வேண்டும் கரு விழியால் அருள்பவளை;
காணும் கண் இமைக்காது, கண்டவுடன் அருட்கடலை!

ஏழு தலை நாகம ஒன்று குடையாக உயர்ந்து நிற்க,
ஏழு பிறவிக்கும் நலம் தர, நாற்கரத்தாள் நிற்கின்றாள்!

அழகான சன்னதியைச் சுற்றிப் பாம்பு இருப்பதுபோல்,
அழகாகக் கல்லாலேயே செதுக்கி அமைத்துள்ளார்.

நிறைந்த மனத்துடன் தரிசனம் கண்டு, அருள் கோரி,
விரைந்து பயணம் செய்து, அடைந்தோம் சிருங்கேரி.
:car:


தொடரும் .....
 
Last edited:
சிருங்கேரியில் ஒரு கல்யாணம் ..... VIII


மறுநாள் மீண்டும் ஸ்ரீ சாரதா தேவி தரிசனம் - அந்தத்
திருநாள் தங்க வீணையுடன் நான் வேண்டிய தரிசனம்!

அன்னை தன் அருளாசி எல்லோருக்கும் வழங்கணும்;
அன்னையின் அருளாலே நல்வாழ்க்கை தொடரணும்.

பாலிகைக்குப் பூஜை செய்து, அண்டா நீரில் கரைத்துவிட்டு,
பாலிகைக் கரைசலைச் சுற்றிப் பாடினோம் கும்மிப் பாட்டு.

ஐந்து நாள் கலியாணமாய் நடக்கணும் என்பதால்,
பந்துக்கள் சிலருடன் புது ஜோடி சிருங்கேரியில்;

முக்கியமான நிகழ்ச்சிகள் நன்கு நடந்தேறியதால்,
முக்கியமானோர் தவிர மற்றவர் ஏறுவார் ரயிலில்.

சுற்றத்தாரிடம் விடைபெற்று, முகூர்த்தத் தேங்காய் பெற்று,
உற்ற நேரத்தில் புறப்பட்டோம், மங்களூரில் ரயில் ஏற.

பேருந்து இந்த முறை "நடக்காமல்" அழகாய் ஓடியது;
பேருந்தின் 'டயர்' மாற்றக் கொஞ்சம் நேரம் கிடைத்தது.

மதிய உணவு முடித்துவிட்டு, ரயிலில் ஏறி அமர்ந்தோம்;
போதிய தூக்கம் இல்லை; 'பர்த்தில்' ஏறிச் சாய்ந்தோம்!

பேச்சுக் கச்சேரி மாலை வேளை 'க்ரூப்' போட்டுக்கொண்டு;
சீட்டுக் கச்சேரி வேறு புறம், புது 'க்ரூப்' போட்டுக்கொண்டு.

கேலியும் சிரிப்புமாய், நண்பர்கள் கூட்டத்துடன், நாங்கள்
ஜாலியாய் வந்தடைந்தோம், சிங்காரச் சென்னையை.

வீட்டுக் கவலை ஏதுமின்றி நான்கு நாட்கள் பறந்தன - இன்று
வீட்டுக் கவலை வந்துவிட, கால்கள் விரைந்து நடந்தன!

இனிய இல்லம் அடைந்ததும், எங்கள் மனத் திரையிலே,
இனிய காட்சிகளாய் இந்த அரிய பயணம் தெரிந்ததே.

எல்லாம் வல்ல சாரதா தேவி, அனைவருக்கும் அருளணும்;
எல்லாம் நலனும் கிடைக்கப்பெற்று, ஆனந்தமாய் வாழணும்!

உலகம் உய்ய வேண்டும, :pray2:
ராஜி ராம்
 
Last edited:
ஒரு படைப்பாளியின் சிறு வெற்றி!

படைத்த சில பக்கங்கள், ஒரு சிறு சலனமேனும்,
படித்தவர் மனத்தில் தோற்றுவித்தால், வெற்றி!

'விந்தையான சராசரி இந்தியக் கணவர்கள்' என்று
சிந்தையைத் தூண்டும் சிறு கவிதை நான் எழுத,

அதைப் படித்த சில நண்பர்கள், தாம் மனம் மாற
இதைத் தூண்டுகோலாகக் கொள்ளுவதாகக் கூற,

சிறு வெற்றியேனும் என் எழுத்துக்கள் தந்ததை,
சிறு முறுவலுடன் பகிந்துகொள்ளவே இக்கவிதை!

உலகம் உய்ய வேண்டும், :angel:
ராஜி ராம்
 
கல்யாண வைபோகமே!

ஒருவர் வீடு கட்டுவதையும், கல்யாணம் பண்ணுவதையும்,
மருள வைக்கும் பணியாக எண்ண, உள்ளது ஒரு பழமொழி!

தத்தம் விருப்பத்துக்கு ஏற்றவாறு இல்லம் கட்டுவதும்,
தத்தம் பிள்ளைகளுக்குப் பெற்றோரே துணை தேடுவதும்,

இரு இமாலய சாதனைகளாகவே உள்ளன, இன்றுவரை!
ஒரு வருடம் எங்கள் செல்லப் பிள்ளைக்குத் துணை தேடி,

திருமணம் முடித்து அனுப்பிய, பல்வேறு அனுபவங்களை,
சிறுக(வி)தை வடிவத்தில், இங்கு அளிக்க விழைகின்றேன்! :cool:

உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம்
 
கல்யாண வைபோகமே ..... I

அவனின்றி ஓரணுவும் அசையாது; குருபகவானின்
அருளின்றி ஒருவருக்கும் திருமணம் நடக்காது!

கன்னி ராசியிலிருந்து மகரராசி பார்க்கும் குருபகவான்
எண்ணி இருபதாம் திங்கள் துலாராசி சென்றிடுவார்!

மகனுக்கு மகரராசி; அதனால் நாங்கள் உடனடியாக
அவனுக்கு நல்ல துணை தேடித் தர வேண்டும்!

குருப் பெயர்ச்சிக்கு இன்னும் கொஞ்ச காலமே உள்ளது;
குரு பார்வை உள்ளபோதே திருமணம் செய்தல் நல்லது!

விளம்பரம் செய்தால் சிறந்த இடம் அமையும் என எண்ணி,
விளம்பரம் செய்தோம் தமிழ், ஆங்கிலச் செய்தித் தாள்களில்.

ஒரு மருத்துவர் சொல்வதை, அடுத்தவர் மறுப்பதுபோல,
ஒரு சோதிடர் சொன்னதை, அடுத்தவர் மறுத்தார்!

உன்னதமான ஜோடியாகச் சேர்த்திடுவார் ஒருவர் - மற்றவர்
'உன்னிடம் சொல்வதற்கென்ன? சேர்க்காதே!' என மறுப்பார்!

இரு மனைவிக்காரனுக்குக் கூட அத்தனை தொல்லையில்லை;
இரு ஜோதிடர் செய்யும் அந்தக் குழப்பத்திற்கோ எல்லையில்லை!

எத்தனை தொலைபேசி அழைப்புக்கள் வந்தன! உலகின்
எத்தனை வித மனிதர்களை எடை போட வைத்தன!

மிரட்டுவார் சிலர்; மிகக் குழைவார் சிலர்;
அலட்டுவார் சிலர்; அடிபணிவார் சிலர்! :yo:

தொடரும் .....
 
கல்யாண வைபோகமே!

ஒருவர் வீடு கட்டுவதையும், கல்யாணம் பண்ணுவதையும்,
மருள வைக்கும் பணியாக எண்ண, உள்ளது ஒரு பழமொழி!

தத்தம் விருப்பத்துக்கு ஏற்றவாறு இல்லம் கட்டுவதும்,
தத்தம் பிள்ளைகளுக்குப் பெற்றோரே துணை தேடுவதும்,

இரு இமாலய சாதனைகளாகவே உள்ளன, இன்றுவரை!
ஒரு வருடம் எங்கள் செல்லப் பிள்ளைக்குத் துணை தேடி,

திருமணம் முடித்து அனுப்பிய, பல்வேறு அனுபவங்களை,
சிறுக(வி)தை வடிவத்தில், இங்கு அளிக்க விழைகின்றேன்! :cool:

உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம்

can't wait.. :)
 
கல்யாண வைபோகமே ..... I

அவனின்றி ஓரணுவும் அசையாது; குருபகவானின்
அருளின்றி ஒருவருக்கும் திருமணம் நடக்காது!

கன்னி ராசியிலிருந்து மகரராசி பார்க்கும் குருபகவான்
எண்ணி இருபதாம் திங்கள் துலாராசி சென்றிடுவார்!

மகனுக்கு மகரராசி; அதனால் நாங்கள் உடனடியாக
அவனுக்கு நல்ல துணை தேடித் தர வேண்டும்!

குருப் பெயர்ச்சிக்கு இன்னும் கொஞ்ச காலமே உள்ளது;
குரு பார்வை உள்ளபோதே திருமணம் செய்தல் நல்லது!

விளம்பரம் செய்தால் சிறந்த இடம் அமையும் என எண்ணி,
விளம்பரம் செய்தோம் தமிழ், ஆங்கிலச் செய்தித் தாள்களில்.

ஒரு மருத்துவர் சொல்வதை, அடுத்தவர் மறுப்பதுபோல,
ஒரு சோதிடர் சொன்னதை, அடுத்தவர் மறுத்தார்!

உன்னதமான ஜோடியாகச் சேர்த்திடுவார் ஒருவர் - மற்றவர்
'உன்னிடம் சொல்வதற்கென்ன? சேர்க்காதே!' என மறுப்பார்!

இரு மனைவிக்காரனுக்குக் கூட அத்தனை தொல்லையில்லை;
இரு ஜோதிடர் செய்யும் அந்தக் குழப்பத்திற்கோ எல்லையில்லை!

எத்தனை தொலைபேசி அழைப்புக்கள் வந்தன! உலகின்
எத்தனை வித மனிதர்களை எடை போட வைத்தன!

மிரட்டுவார் சிலர்; மிகக் குழைவார் சிலர்;
அலட்டுவார் சிலர்; அடிபணிவார் சிலர்! :yo:

தொடரும் .....

dear raji,

it is well known that no two astrologers predict identical. why do people still go to two astrologers?

is it because, they did not like the readings of the first? or the first did not give them the desired results?

or is it for verification?

in our family we had only one astrologer forever - a panikkar who did his thing with shells. after he passed away, we never went to astrologers (ie my mom from her mid age).

fyi mine is an arranged marriage, without the benefit of astrology. my sister had a love marriage.
 
Dear Sir,

I still wonder how the marriage of my mother and father decided by selecting one packet from the two containing red and white flowers and the marriage of my eldest uncle and aunt who had 5th star combination (supposed to be opposed by both 'east' and 'west' astrologers) were very successful!

Still we go to astrologers ........ one for the father's side and one for the mother's side! :peace:

Regards,
Raji Ram
 
Last edited:

Latest posts

Latest ads

Back
Top