• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 33

பகிர்ந்து கொள்ளுதல்.

பழி பாவத்துக்கு அஞ்சாது பொருள் சேர்ப்பது ஒரு
வழி ஆகிவிட்டது, கலி காலக் கொடுமையால்!

எத்தனை ஆண்டுகளுக்கு முன்னரே வள்ளுவர்,
எத்தனை பொருத்தமாக அறிவுரை கூறுகிறார்!

'பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் இல்வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்', என்கிறார் அவர்.

பழிக்கு அஞ்சாது பொருள் சேர்த்து நிறைவதைவிட,
பழிக்கு அஞ்சிச் செல்வம் சேர்த்தலே உயர்வாகும்.

அதையும் பங்கிட்டு மற்றவருக்கு உதவி வாழ்ந்தால்,
அதைவிட ஒழுக்கமுள்ள வாழ்க்கையே கிடையாது.

என்றும் தூய வழியில் பொருள் ஈட்டி, அதையும்,
நன்கு பங்கிட்டு, நல்லொழுக்கத்தால் உயர்வோம்!

:tea:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 34

ஐந்து கடமைகள்.

வாழ்வின் நெறிகளை அழகாக வகுத்த வள்ளுவர், இல்-
வாழ்வின் ஐந்து நன்னெறிகளைத் தாம் அறிவிக்கிறார்.

பிறந்து, உலகில் வாழ்ந்து, மறைந்தவர், காக்கும் தெய்வம்,
விருந்தினராகத் தம்மை நாடுபவர்கள், சுற்றத்தினர் ஆகிய

நான்கு வகையினரைப் போற்றுவது, மேலும் இவைகளை
நன்கு நிறைவேற்றத் தம்மைத் நிலைப்படுத்துவது, என்று

ஐந்து அற நெறிகளும் இல்வாழ்க்கைக்கு மிகத் தேவை;
இன்றும் மனித குலம் அறிந்துகொள்ள வேண்டியவை!

'தென்புலத்தார், தெய்வம், விருந்தொக்கல், தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை', என்று குறளில் அவர் குரல்!

வாழ்வில் இந்த நெறிகளை நாமும் பின்பற்றி, உலகில்
வாழ்வாங்கு வாழும் முறை தவறாது வாழ்வோம்!

:angel:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 35

நல்ல மனைவி.

இல்லாள் என்று குறிப்பிடப்படும் மனைவி, தன்
இல்லம் ஆளும் உரிமை உடையவள்! என்றுமே

ஆட்சிக்கு வந்தவர் தம் கடமைகளில் தவறாது, நல்-
லாட்சி புரிவதே, அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.

மேலான வகையில் இல்வாழ்வு அமைய ஆதாரம்,
சீரான முறையில் அமைத்திடும் பொருளாதாரம்.

'மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை', என்பது குறள்.

இல்வாழ்க்கைக்குத் தக்க மாண்புகள் கொண்டு, தம்
நல்வாழ்க்கைக்குக் கணவனின் பொருட் செல்வத்தை,

ஞாலத்தில் அளவுடன் செலவு செய்பவள் நல்ல துணை; இக்
காலத்தில் அவளுடைய ஊதியமும், செல்வத்தில் அடக்கம்!

:first:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 36

இல்வாழ்வான் கடமைகள்.

இல்வாழ்வில் சிறந்து விளங்கப் பல வழி கூறும்போது,
இல்வாழ்வானின் தலையாய கடமைகளைச் சுட்டுகிறார்.

உலகில் தானே வந்து சேருவதுதான் இந்த மூன்றும்;
உலகிற்கு தம்மை அளித்த பெற்றோர்கள், பின்னர்

வாழ்வில் இணையும் வாழ்க்கைத் துணை, மற்றும் இல்-
வாழ்வின் வரமாக அமையும் தம்முடைய வாரிசுகள்.

தலையாய கடமையாக இருப்பது ஒருவருக்கு, நல்ல
நிலையில் இவர்களை வைத்துக் காப்பதே ஆகும்.

'இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை', என வலியுறுத்துகிறார்.

அனைவரும் இக்கடமைகளைக் கருத்தாகச் செய்தால்,
இனிவரும் நாட்களில் 'காப்பகங்கள்' இருக்காதோ?

:noidea:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 37

மேலும் மூன்று கடமைகள்.

இல்வாழ்வானின் தலையாய கடமைகள் சொல்லி
நல்வழி காட்டிய வள்ளுவர், மேலும் உரைக்கிறார்,

இன்னும் மூன்று கடமைகளைத் தம் குறளில். அவை
தன்னை அண்டும் எளியோரைக் காப்பதேயாகும்.

உலகில் வாழும் துறவிகள், பசியால் வாடுவோர்,
உலகில் வாழ்ந்தும், இறந்தாருக்கு ஒப்பாக எந்தவொரு

சுகமும் காண முடியாத எளியோர், இவர்களுக்கும்
தினமும் துணை போவது, இல்வாழ்வான் கடமையே!

'துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை', என்பது குறளாகும்.

தானே ஈட்டிய பொருட் செல்வம், யாவரும் பயனுறத்
தானே, என்பதை இல்வாழ்வான் அறிதல் வேண்டும்!

:grouphug:
 
சிரிக்கச் சிரிக்க .....

கவிதையின் விதை திரு. Brahmanyan அவர்கள் தந்தார்;
கவிதையாக வடிக்கிறேன், தமிழ் விரும்பிகளுக்காக!

சிறிய மாற்றங்கள் கருத்தில் இருந்தாலும் - அவை
சிரிக்க வைத்துவிடுவதால், மறக்க வேண்டுகிறேன்!

**************************************************

மனித நேயம் மிகுந்த போப் ஆண்டவர், வெளிநாட்டில்,
இனிய பிரசங்கம் முடித்து, காரில் ஏற வந்தார்! அந்தக்

காரோட்டி உள்ளே அமரச் சொல்லி வேண்டியும், அமராது,
காரோட்ட அன்று தாம் விரும்புவதைச் சொன்னார். தன்

நாட்டில் காரோட்ட இயலாது என்றும், அதை இந்த
நாட்டில் செய்து, ஆசை தீர்த்துக்கொள்ள வேண்டினார்!

நயத்தால் சொல்லியும் அவர் கேளாததால், ஓட்டுனர்,
பயத்தால் நடுங்கியபடி, பின் இருக்கையில் அமர்ந்தார்.

வண்டி கிடைத்த குஷியில் போப் ஆண்டவர், காரைச்
சண்டி குதிரை போல மிக விரைவாய்ச் செலுத்தினார்.

ஓட்டுனர் பயந்தபடியே, விரையும் காரைத் தொடர்ந்து
ஓட்டியபடி வந்தது, பெரும் 'சைரனுடன்' போலீஸ் வண்டி.

ஓரம் கட்டிய வண்டியின் ஓட்டுனரைக் கண்ட போலீஸ்,
ஓரம் சென்று, தன் உயர் அதிகாரிக்குத் தொலைபேசினார்!

தண்டனை உடனே கொடுக்க அவர் சொல்ல, இங்கு இவரோ,
'தண்டனை கொடுக்க இயலாது!', எனப் பயந்து நடுங்கினார்!

'யார் அவர்? மேயரோ?' ; 'இல்லை! அதைவிடப் பெரியவர்!'
'யார் அவர்? மந்திரியோ?'; 'இல்லை! அதைவிடப் பெரியவர்!'

'யார் அவர்? பிரதமரோ?' 'இல்லை! அதைவிடப் பெரியவர்!'
'யார் அவர்? ஜனாதிபதியோ?; 'அதை...அதைவிடப் பெரியவர்!'

பொறுமை இழந்த அதிகாரியின் கோபம் அதிகமாக, இவர்
'பெருமை மிக்க ஆண்டவரே காரில் செல்கிறார்!' என்று கூற,

'ஆண்டவரே என எப்படித் தெரியும்?' என்று அவர் கத்த, 'போப்
ஆண்டவரே சாரதியாக இருக்கிறாரே!' என்று இவர் முடித்தார்!

குறிப்பு: ஒருநாள் வள்ளுவருக்கு விடுமுறை! ....... :wave:

 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 38

நிறைந்த இல்வாழ்க்கை

இல்வாழ்வில் பெரும் துணையாய் உள்ள மனைவி,
நல்வாழ்வு வாழ, குணக் குன்றாய் அமையவேண்டும்.

சிறந்த இந்தக் கருத்தை வள்ளுவர் வலியுறுத்துகிறார்,
நிறைந்த பொருள் கொண்ட தம் இரு குறட்பாக்களில்!

நற்பண்பு இல்லாத மனைவி அமைந்தால், வேறு பல
நற்பண்பு கொண்டவருக்கும் சிறப்பே கிடையாது. இதை

'மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்', என்று ஒரு குறளிலும்,

வாழ்வில் நற்பண்புடைய மனைவி அமைந்துவிட்டால்,
வாழ்வில் இல்லாததே இல்லையென, நிறைந்துவிடும்!

அவ்வகைத் துணை அமையாதவரின் வாழ்க்கையோ,
எவ்வகைச் சிறப்பும் இல்லாது போய்விடும், என்பதை

'இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை' , என்ற குறளிலும் கூறி,

துணையாக வாழ்வில் உடன் வரும் பெண்மணி, தன்
குணமாக நற்பண்புகளைக் கொள்ள வேண்டுகிறார்!


:cheer2:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 39

பெய்யெனப் பெய்யும்

'தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை' என்ற ஒரு குறளுக்கு,

தெய்வத்தைத் தொழாது, கணவனைத் தொழும் பெண்,
பெய்யென்றால் மழை பெய்யும் என்று பொருளென்பார்!

பள்ளியில் படிக்கும்போது இதற்கு எம் தமிழ் ஆசிரியர்,
சொல்லிச் சிரிப்பார் வேடிக்கையாக, வேறு பொருள்!

'தொழ மாட்டாள் தெய்வத்தையும்; கணவன் தன்னைத்
தொழுது வேண்டியபின் (காபியுடன்!) துயிலெழுவாள்.

அவள் "பெய்" என்று மிரட்டினால், மழையும் கூடப் பயந்து,
அவள் சொற்படியே பெய்துவிடும்', என்பார்! வேறு பொருள்:

'பெய்' என்றதும், பெய்யும் மழை தரும் இன்பம் போலவே,
தெய்வமாய்க் கொழுநனை மதிப்பவள் இன்பம் தருவாள்!


:pray:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 40

புதிய நல்வாழ்வு.

மனைவி நன்கு அமைவது இறைவனின் வரம் என்பர்;
மனைவி நல்லகணவனைப் பெறுவதும் ஒரு வரமேதான்!

'பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு', என்கிறார் திருவள்ளுவர்.

நல்ல கணவனைப் பெற்றால், தம் புது வாழ்வாக வரும்
இல்வாழ்வும் சிறப்பாகும், எனச் சிலர் பொருளுரைக்க,

தெளிவுரை திருக்குறளுக்கு அளித்த மு. வ. அவர்கள்,
தெளிவாகக் கூறுகிறார், வேறு விதமாக ஒரு பொருள்!

தான் பெற்ற கணவனைப் பரிவுடன் பாதுகாத்த மகளிர்,
வான் உலகில் நற்பதவியும் அடைவார்கள் என்கிறார்.

நல்ல புது வாழ்வு, இல்வாழ்வாயினும், சுவர்க்கமாயினும்,
நல்ல பெண்டிருக்குத் தப்பாது எப்போதும் கிடைத்துவிடும்!

:thumb:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 41

வாரிசுகள்

இல்வாழ்வில் இன்பம்தர வல்லவை வாரிசுகள்;
நல்வாழ்வாய் அமைய, இறை நல்கும் பரிசுகள்!

மழலைப் பருவத்தில் அவை தரும் இன்பங்களை
அழகாய்க் குறளில் வடிக்கின்றார், வள்ளுவர்!

'மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு' என்கிறார்.

குழந்தையை அணைப்பது தரும் இன்பம்; மேலும்
குழந்தையின் மழலை தரும், செவிக்கு இன்பம்!

மழலைச் சொல்லின் பெருமை கூறும்போது, அது
குழலையும் யாழையும்விட இனிது என உயர்த்த,

'குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்', என்கின்றார்!

:baby:
 
இனிய கணினி

தொலைவில் வாழும் பிள்ளைகளைக் காணத்
தொலைத் தொடர்பு நமக்கு உதவி செய்திடும்.

நித்தமும் கிடைக்காத நேற்றைய அனுபவம்;
சுற்றமும் நட்பும் கண்டு நிறைந்தது எம் மனம்!

செல்ல மருமகளுக்கு வளைகாப்பு - நாங்களும்
மெல்ல இணைந்துகொண்டோம் அவர்களோடு!

பழகிய skype - ல் கணினிகளை இணைத்தோம்;
அழகிய வைபோகம், இங்கிருந்தே ரசித்தோம்.

எங்கள் வரவேற்பறையில் வந்தது மகன் வீடு;
எங்கள் பங்கேற்புக்கும் கணினி வழி ஏற்பாடு!

ஒரு கல்யாண வைபோகப் பாடலை நான் பாட,
சிறு கூட்டமாயிருந்த மங்கையர் வளை போட,

வந்திருந்த சுற்றம், நட்பும் கொஞ்சம் உரையாட,
இங்கிருந்தே சேர்ந்தோம், விசேஷம் நிறைவேற!

கணினி தந்த சந்தோஷம் மிகவும் சிறந்தது;
கணினி தந்த காட்சிகளால் மனம் நிறைந்தது!

இறையருளே தரும் மனிதகுல மேம்பாடு - அதை
குறைவின்றி அனுபவிப்போம், நம் இனத்தோடு!

:typing:
 
இன்பமும் துன்பமும்

இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை;
இன்பத்தின் வெளிப்பாடைத் தொடர்கிறது, இது.

துன்பம் பல செய்யும் இந்நாள் மருத்துவம் பற்றி,
முன்பே வடித்த ஒரு கவிதை வரும், அடுத்ததாக!

:blabla:
 
குறிப்பு: ஒரு முதிவர், பலநாட்கள் I C U வில் கிடந்ததைப் பார்த்துக் கலங்கி, எழுதியது!

கொல்லாமல் கொல்லும் மருத்துவ உலகம்!

'எத்தனை ஆண்டுகள் உலகில் வாழ்வது?' என
சித்தனைக் கேட்டாலும் இயம்ப இயலாது!

சுகமாக உடல் நலம் காத்து, தமக்கு உதவுபவரைச்
சுமையாகப் எவரும் எண்ணத் துணிவதில்லை.

பெற்ற பிள்ளைகளும் கூட, உடல் நலமிழந்த, தம்
பெற்றோரைப் பாதுகாக்க அஞ்சிடும் காலம் இது!

மருத்துவ உலகம் முன்னேறி வாழ்வை நீட்டிக்கும்;
மருந்துவம் சிலர் வாழ்வை எட்டிக்காய் போலாக்கும்!

முற்பிறவியில் நம்பிக்கை இல்லாதவரும் - இப்
பிறவியில் சிலர் படும் பாடு கண்டால் நம்பிடுவர்!

எடுத்த பிறவியில் நலம் புரியவேண்டும்; அதனால்
அடுத்த பிறவியில் கடைத்தேற நல்வழி தோன்றும்.

இனி, இன்றைய மருத்துவ உலகம் .....

எண்பதைத் தாண்டினாலும், சருகுபோல் காய்ந்தாலும்,
எண்ணுவதில்லை மருத்துவர் சுவர்க்கம் அனுப்பிவிட.

மூச்சுத் தடைபட்டு, தொண்டை 'கடைந்தாலும்', நயமான
பேச்சுத் திறமையால், 'வென்டிலேட்டரில்' வைத்திடுவார்.

எக் காரணமேனும் காட்டி, 'டிரெகியாட்டமி' செய்திடுவார்;
'அக்காப் பட்சி' போல அந்த மனிதரையும் மாற்றிடுவார்.

உணவு வாயால் உட்கொள்ள வழியின்றிச் செய்திடுவார்;
உணவு செல்ல 'மூக்குக் குழாய்' ஒன்றைச் சொருகிடுவார்!

தான் வைத்த அத்தனை மிஷினிலும், ஏற்றி இறக்கிடுவார்;
'ஏன்?' என்ற நம்முடைய கேட்வியே கூடாது என்றிடுவார்!

கடின உழைப்பால் சேமித்ததில் பெரும் பகுதி போனபின்,
'கடினமே காப்பாற்றுவது' என்று தம் கை விரித்திடுவார்!

'மண்ணாசையால் உயிர் ஊசலாடுகிறது', எனக் கூறி,
மண் கரைத்து வாயில் ஊற்றும் வழக்கமாம், முன்பு!

'இது என்ன? கருணைக் கொலையா?', என்று நான்
இது பற்றி அறிந்த நாளில், மிக வருந்தியது நிஜமே!

மருத்துவத்தின் மேம்பாடு படுத்தும் இந்தப் பாடு கண்டு,
கருத்து இன்று கொஞ்சம் மாறத் தோன்றுவதும் நிஜமே!

சிறந்த பட்டிமன்றத் தலைப்பு ஒன்று கிடைத்தது இன்று;
'சிறப்பான மருத்துவம் கொள்ளையா? இல்லையா?' என்று!
:argue:
உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம்
10 - 02 - 2004

 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 42

இருவரின் கடமைகள்

மக்களைப் பெற்றால், குழந்தைப் பருவத்தில் அந்த
மக்கள் செய்யும் செயல்களால், இன்பம் கிடைக்கும்.

அத்துடன் தந்தையின் கடமை முடிவதில்லை, என
எத்தனை அழகாகத் தம் குறளில் தெரிவிக்கிறார்!

'தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்', என உரைக்கிறார்.

பெற்றால் மட்டும் போதாது; கற்றவர் நடுவில்,
பெற்ற மகன் முதன்மை அடையச் செய்தலே,

தந்தை மகனுக்கு ஆற்றும் நல்லுதவி என்கிறார்.
இந்த உதவி இக்காலத்தில், மகளுக்கும் ஏற்றதே!

மகன் தந்தைக்குக் கைம்மாறு செய்ய வேண்டுமே!
அதன் விளக்கமும் தம் குறளில் சொல்லுகிறார்.

'மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்', என்கிறார்.

'என்ன தவம் செய்து இவனை மகனாகப் பெற்றானோ!'
என்று மற்றவர் புகழ்வதே, அந்தக் கைம்மாறாகும்!

இக்காலத்தில், பிறந்தது மகனாயினும், மகளாயினும்,
எக்காலத்திலும் நினைவில் வைக்கவே, இந்தக் குறள்!

:hail:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 43

மகிழ்ச்சி தருவது

நல்ல மக்களைப் பெற்றாலும், அவர்கள் உயர்ந்த
நல்ல நிலையை அடைதலே பெற்றோர் விருப்பம்.

பிள்ளைகள் தன்னைவிடச் சிறந்து விளங்கினால்,
எள்ளளவும் பொறாமையே வராது, அவர்களுக்கு!

'தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது', இதுவே குறட்பா.

பெற்றோரைவிடப் பிள்ளை அறிவில் சிறந்தால்,
பெற்றோர் மட்டுமல்லாது உலகே மகிழ்ந்திடும்!

சான்றோராகப் பிள்ளை உருவெடுத்தால், தான்
ஈன்ற பொழுதைவிட மிக மகிழ்வாள், அத் தாய்!

'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்', என்பது அக் குறள்.

இன்பம் மிகவும் தருவது தாய்மை; அதனிலும் பே-
ரின்பம் வருவது, அறிவு நிறைந்த பிள்ளையாலே!

நிலை தடுமாறப் பல்வேறு வழிகள் இன்றிருக்க, தம்
நிலை உயர்த்த, இளைஞர் நன்கு உழைக்க வேண்டும்!

:thumb:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 44

அன்பின் வலிமை

அன்புடைய நெஞ்சம் பற்றி உயர்வாக உரைக்கிறார்,
தன்னுடைய பத்துக் குறட்பாக்களில் வள்ளுவர்.

தன் அன்புக்கு உரியவரின் துன்பம் கண்ட உடனே,
தன் கண்களில், தானே கண்ணீர் பெருகி வருமே!

அன்பினை எதனாலும் அடைத்திடவே முடியாது
என்பதை, அருமையான ஒரு குரளாய் வடிக்கிறார்.

'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்', என்பதே அந்தக் குறள்.:Cry:

அன்பு அறவழிக்கு மட்டுமே துணை ஆகுமென,
அன்பு பற்றி அறியாதோரே நினைத்திடுவார்.

அன்பிற்கு உரியவருக்கு உதவுதல் மட்டுமல்லாது,
அன்பிற்கு உரியவருக்காகக் கொதிப்பதும் உண்டே!

ஈரமான நெஞ்சில் தோன்றும் அன்புதான், சில
வீரமான சாகசங்களுக்கும் உறுதுணை ஆகும்!

'அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை', இது உண்மை!

:fencing:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 45

அன்பின் பெருமை

அன்பு இல்லாதவர், அனைத்தையும் தனதாக்குவர்;
அன்பு கொண்டவரோ, உடல் பொருள் ஆவி ஆகிய

அனைத்தையும், பிறருக்காக உழைப்பதிலும், தன்
அனைத்துச் செல்வத்தையும் பகிர்ந்தளிப்பதிலும்,

தேவையென்றால், தன் உயிரையும் கூட நல்ல
சேவைக்காக அளிப்பதிலும் மனம் மகிழ்வார்கள்!

'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.' இந்தக் குறளில் வரும்

'என்பு' என்ற சொல்லுக்கு, 'உடல்' என்று பொருள்
கொண்டு, 'சிபி' அரசனைக் காட்டுவோர் உண்டு!

என்பு என்பது உடல், பொருள், ஆவி என்றால்,
அன்பு மிக உயர்ந்த பெருமையை அடையுமே!
:angel:
 
How many sacrifices do parents make to get their children well educated and well settled in life? Saint Thiruvalluvar has brought out the duties of the parent and the children in proper perspective!
 
கொல்லாமல் கொல்லும் மருத்துவ உலகம்!

Superb description of an anguished relative on the medical business of today, not the Life Science or God's Gift!
 
Thank you very much Sir, for your replies to my posts.

I never thought I can write so many poems on ThirukkuraL! It is a vast ocean full of pearls.

Regards,
Raji Ram
 
கொல்லாமல் கொல்லும் மருத்துவ உலகம்!

One of my very close relatives suffered a 'dead brain'. She had nine children.

They were willing to keep her alive, in spite of her 'vegetable life', since she was only 73 years old.

She was in a coma stage for nearly 3 months, in two different hospitals.

Her son-in-law came all the way from the US, to convince the Chennai doctors,

to withdraw all the life supporting medication, except oxygen.

After one week, her soul departed peacefully from this world! :rip:

It was a very bitter experience. :sad:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 45

அன்பின் பெருமை

அன்பு இல்லாதவர், அனைத்தையும் தனதாக்குவர்;
அன்பு கொண்டவரோ, உடல் பொருள் ஆவி ஆகிய

அனைத்தையும், பிறருக்காக உழைப்பதிலும், தன்
அனைத்துச் செல்வத்தையும் பகிர்ந்தளிப்பதிலும்,

தேவையென்றால், தன் உயிரையும் கூட நல்ல
சேவைக்காக அளிப்பதிலும் மனம் மகிழ்வார்கள்!

'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு'. இந்தக் குறளில் வரும்

'என்பு' என்ற சொல்லுக்கு, 'உடல்' என்று பொருள்
கொண்டு, 'சிபி' அரசனைக் காட்டுவோர் உண்டு!

என்பு என்பது உடல், பொருள், ஆவி என்றால்,
அன்பு மிக உயர்ந்த பெருமையை அடையுமே!

:first:
 

Latest ads

Back
Top