• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 13

நீடூழி வாழ இன்னொரு வழி!

ஐம்புலன்களையும் அடக்கியவனே இறைவன்;
ஐம்புலன்களால் மயங்குபவர்களே மனிதர்கள்!

மெய்யால் வேண்டாதவை தீண்டியும், வாயின்
பொய்யால் சிறுமைகள் பல பட்டும், கண்ணால்

பார்க்கவே தாகாதவை பார்த்தும், செவியால்
கேட்கவே ஒவ்வாதவை கேட்டும், நாசியால்

மாறுபட்ட வாசனைகள் நுகர்ந்தும், பற்பல
மாசுபட்டு, வாழ்வும் தாழ்வு அடைந்திடும்!

நல்வாழ்வு நீண்ட காலம் உலகிலே வாழ,
நல்வழி மீண்டும் வள்ளுவர் உரைக்கிறார்!

'பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்' என்கிறார் அவர்.

பொறிகள் ஐந்தும் அடக்கிய இறைவனின்
நெறியைப் பின்பற்றி, பொய்மை தவிர்த்து,

மேன்மையான ஒழுக்கமும் மேற்கொண்டால்,
மேன்மையான வாழ்வும் இனிது மலர்ந்திடுமே!

:peace:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 14

இந்திரனே சான்று!

புலன் அடக்காத வானவர் தலைவன் இந்திரன், புகழ்
இலன் ஆகி, வெட்கித் தலை குனிந்து நின்றான்!

மாற்றான் மனைவி மீது வேண்டாத ஆசைப்பட்டு,
ஏற்றான் அருவருப்பு மிக்க ஒரு உடல் மாற்றம்!

வானவர் கோமானுக்கே இந்தக் கதி என்றால்,
மானவர் நிலை என்னவாகும் என அறிவோம்!

தன் ஐம்புலன்களை வென்று, அடக்கி ஆண்டால்,
விண் உயரத்தை எட்டலாம், நன்நடத்தையால்!

'ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி' என்று குறள் அமுதத்தில்,

இந்தக் கருத்தை வலியுறுத்தி, மனித குலத்திற்கு,
இந்தப் பிறவியின் நன்னெறி அறிய வைக்கிறார்!

:ballchain:

 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 15

துப்பாக்கிக் குறள்!

படித்ததும் புரியாது மீண்டும் மீண்டும் அதையே
படிக்கவே வைக்க எழுதினாரோ, இந்தக் குறள்!

'துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை' என்பது அவர் கூறுவது.

அறிந்தால் பிரமிக்க வைக்கும், இச் சொல் அழகு;
புரிந்தால் மனம் மகிழ வைக்கும், பொருள் அழகு!

உண்பவருக்கு தக்க உணவு விளைவிக்க உதவி,
உண்பவருக்கு உணவாகவும் ஆகுமே மழை.

மழைத்துளி இல்லையேல் உணவும் இல்லை;
மழைத்துளி இல்லையேல் குடிநீரும் இல்லை!

அரிய மழையின் சிறப்பை, இரு குறு வரிகளில்
அறிய வைக்க, இவரைத் தவிர யாரால் இயலும்?

:noidea:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 16

மழை செய்யும் தீமை!

மழையின் பெருமை உரைத்த வள்ளுவரே, அதனால்
விளையும் தீமை பற்றியும், ஒரு குறிப்பு வைக்கிறார்.

'கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை' என்பதும் அவர் வாக்கே!

ஓயாமல் பெய்து கெடுப்பதும் மழையே; பல காலம்
பெய்யாமல் வறட்சியால் வாட்டுவதும் அந்த மழையே!

கெடுப்பதற்கு இரு வழிகள் கொண்ட மழையே, தான்
கெடுத்தவர் பெற்ற நலிந்த வாழ்வை மேம்படுத்தும்!

மழைத்துளி காணா மண்ணில், புல் கூட விளையாதே;
விழையும் காலத்தில் கனிந்து பெய்தால், பயிர் வாடாதே!

'நல்லதும், தீயதும் செய்திடும் சக்தி' போன்ற மழையை,
நல்லதை அள்ளித்தர, உருகி, வணங்கி, வேண்டுவோம்!

:pray:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 17

மழையின் உயர்வு!

'வான் சிறப்பு' எனும் அதிகாரத்தில் மட்டுமின்றி, மீண்டும்
தான் உரைக்கின்றார் வள்ளுவர், மழையின் உயர்வை.

ஒப்புரவறிதல் பற்றி உரைக்கும்போது, நல்ல மழையின்
ஒப்புயர்வற்ற தன்மை பற்றியும் குறிப்பிடுகிறார், அவர்.

தான் ஒரு விருந்துக்கு நண்பரை அழைத்தாலே, 'அவர்
ஏன் மறு விருந்து தரவில்லை? எனக் கேட்பார் உலகில்!

சின்ன விஷயங்களுக்கும் கைம்மாறு எதிர்பார்க்காதவரை,
சின்னக் கை விரல்களால் எண்ணி விடலாம், எளிதில்!

எதையுமே வேண்டாது, கடமையாகப் பெய்யும் மழைக்கு,
எதையேனும் செய்து கடன் தீர்க்க முடியுமா, உலகு? அவர்

கேட்பது 'கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாட்றுங் கொல்லோ உலகு', என்ற கேள்வி!
:noidea:
 
Last edited:
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 18

கடலும் வற்றும்!

நிலப்பரப்பு ஒன்று என்றால், பூமியில் கடலின்
நீர்ப்பரப்பு இரண்டைவிடச் சிறிது கூடுதலாகும்!

முப்பது, எழுபது என்ற விகிதமாகக் கூறுகிறார்;
இப்போது, ஒரு குறளைச் சிறிது ஆராய்வோம்!

'நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்' என்பதே அவர் வாக்கு.

நெடிய கடலிலிருந்து மேலெழுந்த மேகம்தான்,
அரிய மழையாகப் பொழிகிறது, இந்த உலகில்.

மழை நீர் நிறைவாய்க் கிடைத்தால் மட்டுமே,
அழகான கடலும் வற்றாது! அவர் உணர்த்துவது,

சமுதாயத்தில் உயர்ந்த நிலை எட்டியவர், இந்த
சமுதாய உயர்வுக்கும் உதவ வேண்டும் என்பதே!
:angel:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 19

துறவறத்திற்கு ஏற்றவர்.

புலன் அடக்கம் பற்றி வள்ளுவர் பலவாறு உரைப்பார்;
இதில் அடக்கம் துறவறத்திற்கு ஏற்றவரின் பண்புகள்.

பெரிய யானையை அடக்கச் சிறிய அங்குசம் போதும்;
உரிய உறுதியால் அடக்கலாம், ஐந்து புலன்களையும்.

'உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து' என்பது குறள்.

உறுதி என்ற அங்குசத்தால் ஐம்புலனை அடக்கியவன்,
உறுதி நிறைந்த துறவறத்திற்கு விதை போன்றவன்.

புலன்கள் ஐந்தும் தரும் சிற்றின்பங்களைத் துறந்து,
நலன்கள் பல புரியும் துறவியரைப் போற்றுவோம்!

துறவிபோல் வேடமிட்டு அல்லது செய்தால், இந்தப்
பிறவியில் அவரிடம் அண்டாது, நாம் ஒதுங்குவோம்!
:fencing:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 20

அறமே ஆக்கம்!

அற வழியில் நடப்பதே பெரிய செல்வம் என்று
பல வழிகளில் உரைக்கின்றார், தன் குறளில்.

அற வழியே சிறப்பையும், செல்வத்தையும் தரும்;
பிற வழியில் சென்றால், இரண்டுமே கிடைக்காது!

செல்வம் என்பதைத் தீயோர் சேர்த்து மகிழ்ந்தாலும்,
செல்வம் நீண்ட நாள் அவர்பால் நில்லாது செல்லும்!

தனக்கென அனைத்தையும் வைத்து, சீர் கெட்டு,
தனக்கே அழிவையும் அவர்கள் தாமே தேடுவார்.

நல்வழி நடப்போர் சேர்க்கும் செல்வம், அன்புடன்
எல்லோருக்கும் பயன்படுமாறு செய்து, சிறப்பார்.

'சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு' என்கிறார் வள்ளுவர்!

:director:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 21

அளவிலாப் பெருமை!

உலக இன்பங்களைத் துறந்து வாழ்வோரின் பெருமை,
அலகு இட முடியாதது எனப் போற்றுகிறார் வள்ளுவர்!

பிறத்தலும், இறத்தலும் ஆண்டாண்டுகளாக நடப்பது!
இறந்து, உலகை விட்டவரின் எண்ணிக்கையோ பெரிது!

மறைந்தோரைப் பற்றி மனதில் எண்ணலாமே தவிர,
மறைந்தோரின் எண்ணிக்கையை அறிதல் மிக அரிது!

'துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று', என்கிறார்!

இறந்தவர் எண்ணிக்கை எத்துணை பெரிதோ, அதுபோல
துறந்தவர் பெருமைகள், நம்மால் அளவிட முடியாதது!

:nono:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 22

அந்தணர் என்பவர்...

பிறப்பு எல்லா உயிர்களுக்கும் ஒன்றெனக் கூறினும்,
சிறப்பு கிடைப்பது சில இனங்களுக்கு மட்டுமே!

மனிதரிலும் பிரிவுகளை ஏற்படுத்தி, அதில் ஒன்றை
மனிதரில் மிக உயர்வாக வைக்கின்றார், உலகினர்!

வள்ளுவர், வேறு வழியில் நிர்ணயிக்கிறார், உலகில்
உள்ளவரில் எவரெவர் அந்தணர் என்று, தம் குறளில்!

'அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்', என உரைக்கிறார்.

அற வழியில் நிற்ப்போரே, எல்லா உயிர்களிடமும்,
அருள் பெருக, அன்பு கொண்டவராய் விளங்குவதால்,

அந்தணர் அவரே என வரையறுத்து, மனிதர்கள்
இந்த வழியால் உயர் பிறவியாகலாம் என்கிறார்!
:angel:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 23

எவருடையது உலகம்?

மனிதப் பிறவி கிடைத்தற்கரிய பிறவியாகும்;
இனிதே உலகில் வாழும் வகைதான் என்ன?

'எதற்கும் இடம் தரும் திருக்குறளிலா' நாம்
அதற்கும் விடை காண இயலாது போகும்?

எவர் கட்டுப்பாட்டில் உலகம் இருக்கும், என
அவர் தன் குறட்பா ஒன்றில் காட்டுகின்றார்!

'சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு', என்பது குறள்.

சுவை, ஒளி, ஸ்பரிசம், ஒலி, வாசனை என்னும்
இவை ஐந்தின் தன்மைகளை ஆராய்ந்து, அவை

தன் கட்டுப்பாட்டில் வைத்திட இயலுபவன்தான்,
தன் கட்டுப்பாட்டில் உலகை வைக்க வல்லான்!

:first:
 
தனி நூலாகவே எழுதும் அளவுக்கு, வள்ளுவத்தில்
இனிதே நிறைந்துள்ளன, பற்பல விஷயங்கள்!

'எண்ண அலைகளின்' தொடர்ச்சியாக அமைத்ததால்,
இன்னும் பல பக்கங்களை எதிர்பார்க்கலாம்!

உலகம் உய்ய வேண்டும், :pray2:
ராஜி ராம்
 
வள்ளுவரைப் போற்றுவோம் .... 24

கோபம் நிலைக்காது!

கோபம் கொள்ளாது மனதை வைத்தால், என்றும்
சோகம் வராது, நம் வாழ்வில் அமைதி பொங்கும்!

குணம் என்னும் குன்றில் ஏறி நிற்பவரால், ஒரு
கணம் கூடக் கோபத்தைக் காப்பது அரிதாகும்.

'குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது', என்பது குறள்.

நற்குணம் எனும் பண்பை நாம் வளர்த்து, நமக்கு
எக்கணம் கோபம் வரினும், மறு கணம் மறப்போம்!

:peace:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 25

பல்லக்கு

பல்லக்கில் ஏறிச் செல்பவர், மகிழ்ந்து செல்வார்;
பல்லக்கைச் சுமப்பவரோ, வருத்தம் கொள்வார்!

அறவழியைப் பற்றி, இவர்களின் இடையே நாம்
கூற வேண்டாம், என்பதாகத் தெரியும் ஒரு குறள்!

'அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொருத்தானோ டூர்ந்தான் இடை' என்பது.

கொஞ்சம் இதைக் கூர்ந்து நோக்கினால் புரியும்,
கொஞ்சம் வேறுபட்ட இன்னொரு விளக்கமும்.

அறத்தையே ஏற்றால், பல்லக்கில் ஏறியவர் போல,
அனைத்தையும் மகிழ்வுடன் வாழ்வில் ஏற்கலாம்!

வாழ்வைத் தீய வழியில் அமைத்து வாழ்ந்தால்,
வாழ்வே சுமையாகும், பல்லக்கு சுமப்பவர்போல!

:painkiller:
 
Madam,

I should confess that Tamil Kavithigal was never on the top of my reading list compared to Tamil Novels. (Except Bharathiar's).But your poems are beautiful and more importantly meaningful. I just stumbled upon your poems and I want to say I like it.

One thing I like - If I am permitted to say - is non advisory tone and more of stating the facts without exaggeration.This is my view please.

Namaskarams
Revathi
 
Dear Revathi,

Very happy to note that you have 'spotted' my Tamil poems and like them too!

Now, I have started writing poems on the greatness of 'ThirukkuraL'.

It is an ocean. I just want to share the pearls that I collect from that ocean, everyday.

Best wishes,
Raji Ram :typing:
 
Last edited:
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 26

பிறவாமை தரும்!

பிறவியைப் பெருங்கடலாய் வருணித்து, மீண்டும்
பிறவி வரா வரமே எல்லோரும் விழைந்திடுவார்.

எல்லோருக்கும் நன்மை செய்திருப்பதே, இதற்கு
எல்லா வகையிலும் மிகச் சிறந்த வழியாகும்!

'வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்' என்பது குறள்.

ஒரு நாள் கூட வீணாக்காது நல்லது செய்தால்,
ஒருவருக்கு மறு பிறவியே இல்லாது போகும்.

மேலான வாழ்க்கைப் பாதையை, நற்செயல்களே
சீரான பாதையாக அமைத்தும் கொடுக்கும். எனவே

நாளை செய்வோம் என நல்லவை ஒதுக்காது, இந்-
நாளே செய்வோம்; வாழ்வில் நாம் உய்வோம்!

:grouphug:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 27

தினம் அறம்!

அற வழி நிற்றலை ஒரு நாளும் மறக்கலாகாது;
பிற வழிச் செல்வோரைப் பெருமைகள் சேராது!

வாழ்நாளின் பிற்பகுதிக்கு ஒதுக்க வேண்டாம்,
வாழ்நாளில் பிறருக்குப் பயன் சில புரிவதை!

'அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை' என்கிறார்.

'சாகும் காலத்தில் சங்கரா' என்று பொதுவாகப்
போகும் நிலையில் நன்மை செய்தால், சொல்வர்!

பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒரு போதும்
மறந்து போகலாகாது, நாம் நல்லறம் செய்வதை!

உலகை விட்டுச் சென்ற பின்னும் பெருமை தரும்,
உலகில் நாம் செய்யும் நலன்கள் மட்டுமேயாம்!

:high5:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 28

நாவடக்கம்

அடக்கி ஆளவேண்டியது ஐம்புலன்களும், என்றாலும்,
அடக்கி ஆள முதன்மையானது நம் நாவே, என்கிறார்!

'யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு', இது குறள்.

கொஞ்சம் ஆராய்ந்தால் இதன் ஆழம் விளங்கும்;
நெஞ்சில் பசுமரத்தாணியாய் என்றும் துலங்கும்.

கெட்டதைப் பார்த்தாலும், தீயதைக் கேட்டாலும்
கெடுவது அவரவர் மனங்கள் மட்டுமே! மேலும்,

முகர்வது, உண்ணுவது, தீண்டுவது தீதானால்,
தகர்வது அவரவர் உடல் நலம் மட்டுமே! ஆனால்.

அடக்கம் இன்றிச் சொற்குற்றம் வந்துவிட்டால்,
இடக்கும் வந்து சேரும், பிறர் புண்படுவதால்!

:whoo:
 
Last edited:
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 29

இல்லறத்தின் பெருமை.

துறவிகள் தாம் முற்றும் துறந்து வாழ்வதால்,
அறநெறி கடைப்பிடித்தல், கொஞ்சம் எளிது!

இல்லறத்தில் நுழைந்து, பற்பல பாத்திரங்கள்
நல்ல முறையில் ஏற்பது, பெருமைக்குரியது!

சிறந்த தனயனாக, நண்பனாக, கணவனாக,
பிறக்கும் வாரிசுகளுக்குத் தந்தையாக, என,

ஆண்கள் பல வேடமிட்டு வாழ்வது போலவே,
பெண்கள் பங்கும் இணையாக உண்டு, இதில்!

'ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து', இது குறள்.

நல்வழிச் சென்று, அதில் மற்றவரை இழுக்கும்
இல்லறம், துறவிகளின் நோன்புக்கும் மேலாகும்!

:first:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 30

இல்லறமே நல்லறம்.

இல்லறத்தின் பெருமையைப் பலவாறு காட்டும்,
நல்வழிகள் பல நமக்குக் கூறிடும் வள்ளுவம்.

இல்லறத்தில் உள்ளவரால், தாமும் உயர்ந்து,
அல்லலுறும் சுற்றத்துக்கும் உதவ இயலும்.

சிறந்த வாழ்க்கைதனை நடத்தி, இந்த உலகில்
பிறந்த பயனையும், மிக எளிதிலே எட்டலாம் .

தாமும் வாழ்ந்து, எளியோரும் நல்ல பயன் பெற,
தானம் செய்ய, இல்லறமே ஏற்றதாக இருக்கும்.

'அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்', என வினவுகிறார்.

அறவழியால் இல்வாழ்கையில் பெறும் நற்பயனை,
வேறு வழியில் சென்றவரால் பெற முடியுமோ?

:noidea:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 31

அன்பும், அறனும்

நல்ல இல்வாழ்க்கைக்கு எவை தலையாயவை?
தெள்ளத் தெளிவாக வள்ளுவர் உரைக்கிறார்.

அன்பு செலுத்துதல் அதில் முதன்மையானது;
நன்கு அன்பைத் தொடரும், பல நற்பண்புகள்.

அறவழியில் நாம் நடந்தால், அதன் மூலம்
சிறப்பான பயனும் வந்து நம்மைச் சேரும்.

'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது ', என்கிறார் குறளில்.

அன்பை அடித் தளமாக அமைத்துவிட்டால்,
இன்ப நிலை எட்டுவது உலகில் எளிது!

:grouphug:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 28

நாவடக்கம்

அடக்கி ஆளவேண்டியது ஐம்புலன்களும், என்றாலும்,
அடக்கி ஆள முதன்மையானது நம் நாவே, என்கிறார்!

'யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு', இது குறள்.

கொஞ்சம் ஆராய்ந்தால் இதன் ஆழம் விளங்கும்;
நெஞ்சில் பசுமரத்தாணியாய் என்றும் துலங்கும்.

கெட்டதைப் பார்த்தாலும், தீயதைக் கேட்டாலும்
கெடுவது அவரவர் மனங்கள் மட்டுமே! மேலும்,

முகர்வது, உண்ணுவது, தீண்டுவது தீதானால்,
தகர்வது அவரவர் உடல் நலம் மட்டுமே! ஆனால்.

அடக்கம் இன்றிச் சொற்குற்றம் வந்துவிட்டால்,
இடக்கும் வந்து சேரும், பிறர் புண்படுவதால்!

:whoo:

ஒரு சந்தேகம்!

நாவடக்கம் பற்றி கூறிய வள்ளுவர் இன்று இருந்தால் - 'பே
னா' அடக்கம் பற்றியும் எழுதி இருப்பாரோ, என்னவோ!

ஐந்து புலன்கள் அவரவருக்கே கேடு விளைவிக்கும்;
இந்த நாவே பிறரைத் துன்புறுத்தும் என எண்ணினார்!

'பேனா' என ஒன்று வந்து, எழுத்தால் பிறரை ஏசும் என,
ஏனோ அவருக்குத் தோன்றவில்லை! இக்காலத்தில்,

தட்டெழுதும் கணினியும் பேனாவுக்குத் துணை! பிறரை
மட்டம் தட்டச் சிலர் அதை ஆயுதமாகவே வைப்பதால்!

நற்சொற்களை ஆள வேண்டும், :pray2:
ராஜி ராம்
 
வள்ளுவரைப் போற்றுவோம் ...... 32

தெய்வத்துக்குச் சமம்.

வையத்தில் வாழும் நல்ல நெறி அற நெறியே; அது
தெய்வத்துக்கு நிகராக மனிதரையும் உயர்த்தும்!

'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்', என உரைக்கிறார் அவர்.

வாழ்வாங்கு வாழ்வது என்பது எளிதல்ல; நீண்ட
வாழ்வு முழுதும் நலன்கள் பல புரிதல் வேண்டும்.

தான் மட்டும் வாழுவது என எண்ணாது, பிறரும்
தன்னால் உயர, உதவிகள் செய்தல் வேண்டும்.

மனம், மொழி, உடல் இவை மூன்றாலும், நல்லவை
தினம் நினைத்து, உரைத்து, செய்தலும் தேவை!

உயர்வாக இவ்வாறு வாழும் மாந்தர், மெதுவாக
உயர்வார், வானுறை தெய்வத்துக்கு இணையாக!

:hail:
 

Latest posts

Latest ads

Back
Top