• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

என் கதை முயற்சிகள்

Status
Not open for further replies.
21

மூத்த வர்வெறும் வேடத்தின் நிற்குங்கால்
மூடப் பிள்ளை அறமெவண் ஓர்வதே?
---மஹாகவி பாரதியார், சுயசரிதை 38


ங்கில யாப்பிலக்கண நெறிகளைப் பின்பற்றித் தமிழில் ஒரு புதிய யாப்பிலக்கணம் படைக்க முயன்று அவர்கள் பல நாட்கள் விவாதித்துத் தங்கள் புதுக்கவிதை இலக்கணத்தின் சீர்களை உருவாக்கிப் பெயரிட்டபோது, அவை ஏற்கனவே பாரதியார் பாடல்களிலும் கண்ணதாசன் திரைப்பாடல்களிலும் ராகத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருப்பதைக் கண்டு அதிசயித்தார்கள்.

கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல.

கண்/ணன்- என்/னும் மன்/னன்- பே/ரைச்- சொல்/லச்- சொல்/ல-
கல்/லும்- முள்/ளும்- பூ/வாய்- மா/றும்- மெல்/ல- மெல்/ல-.


பாரதியார் அநேகமாகத் தன் ஒவ்வொரு கவிதையிலும் அவர்களுடைய புதிய சீர்களுக்கும் அடிகளுக்கும் இயைபுகளுக்கும் உதாரணங்கள் தந்து அவர்கள் வேலையை எளிதாக்கினார்.

வாழிய செந்தமிழ்! வாழகநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!

வா/ழிய- செந்/தமிழ்-! வாழ்/க- நற்-றமி/ழர்-!
வா/ழிய- பா/ரத- மணித்/திரு- நா/டு-!


பாரதியின் ’பாஞ்சாலி சபதம், சூதாட்டச் சருக்க’த்தின் ஆரம்ப வரிகளில் அவர்கள் ஒரு புதிய ஐந்தசைச் சீரைக் கண்டுபிடித்து அதற்கு ’பகடைக்காயொலிச்சீர்’ என்று பெயரிட்டார்கள்.

மாயச் சூதினுக்கே -- ஐயன் மன மிணங்கி விட்டான்;
தாய முருட்டலானார் -- அங்கே சகுனி ஆர்ப்பரித்தான்;

மா/யச்- சூ-தினுக்-கே/ -- ஐயன்/ மன மிணங்-கிவிட்-டான்/;
தா/ய- முருட்-டலா-னார்/ -- அங்/கே- சகு-னிஆர்ப்-பரித்-தான்/;


ப்புறம் அந்த ’ப்ரைவேட் சிலபஸ்’.

அவனும் கௌசியும் தம் ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாகச் செலவிடத் தயாரித்தது. மாதம் ஒரு ஆங்கில நாவலும், இரண்டு தமிழ் நாவல்களும், ஒவ்வொரு ஞாயிறும் காலைவேளையில் தமிழ் ஆங்கிலக் கவிதைகளும், விடுமுறை நாட்களில் இவையெல்லாம் இன்னும் அதிகமாகவும் அவர்கள் படித்தறிய முனைந்து, ஒருவருக்கொருவர் வினா-விடைத் தேர்வுகள் வைத்துக்கொண்டு, நூலகங்களுக்குப் படையெடுத்து, புத்தகங்களை ஒருவருக்கொருவர் இரவல் கொடுத்து வாங்கிக் கொண்டபோது கௌசல்யா குறிப்பிட்டாள்:

"அந்தக் காலத்தில் தலைவனும் தலைவியும் தங்கள் காதலைப் பரிமாறிக்கொள்ள உயிரினங்களையும் இயற்கைப் பொருட்களையும் தூது விடுவார்கள். தமயந்தி அன்னத்தைத் தூதுவிட்டாள். துஷ்யந்தன் மேகத்தை. இந்தக் காலத்தில நாம் புத்தகங்களைத் தூது விட்டுக்கறோம்."

பத்திரிகைகளில் அவ்வப்போது வெளியாகும் சிறுகதை, தொடர்கதைகளைப் படித்து வெவ்வேறு காலகட்டங்களில் தங்கள் விமரிசனங்களை ஒப்பிட்டுக்கொண்டது ஏதோ நேற்று நடந்தது போலிருந்தது.

"இப்போ எழுதற ஆசிரியர்கள்ல என் ஃபேவரிட் சுஜாதா. உனக்கு?"

"நான் தமிழ்த் தொடர்கதைகள் அதிகம் படிப்பதில்லை கௌசி, சுஜாதாவும் இந்துமதியும் தவிர. நல்லபெருமாளோட ’போராட்டங்கள்’ எனக்குப் பிடிச்சது. அதேபோல் நா.பா.வோட ’சத்திய வெள்ளம்’. மற்ற ஆசிரியர்களை--மெய்ன்னா கல்கியைப்--படிக்காததால ஃபேவரிட்னு யாரையும் குறிப்பிட முடியாது. ஆனால் எனக்கு சுஜாதாவும் இந்துமதியும் பிடிக்கும். போன தலைமுறை எழுத்தாளர்கள்ல சூடாமணியோட சிறுகதைகள் பிடிக்கும். அசோகமித்திரன், ஜானகிராமன், ல.ச.ரா.லாம் இனிமேல்தான் படிக்கணும்."

"நான் நிறையத் தமிழ் நாவல்கள், சிறுகதைகள் படிப்பேன். எல்லோரையும்விட சுஜாதாவின் துணிச்சலான வார்த்தை அமைப்பும், விஷய ஞானமும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்."

"எனக்கும் சுஜாதாவை அந்த விதத்தில் பிடிக்கும். அவரே சொல்லியிருக்கற மாதிரி அவருடைய நாவல்களைவிட சிறுகதைகள் டாப். ’பார்வை, நகரம், இளநீர்’, அவர் கல்கியில் எழுதின விஞ்ஞானக் கதைகள்."

"அவர் நாவல்களில் எனக்குப் பிடிச்சது ’ப்ரியா, சொர்க்கத் தீவு, 24 ரூபாய்த் தீவு’."

"சுஜாதாவோட நாவல்களில் கதையம்சம் அவ்வளவு சிறப்பா இருக்காது. இதற்கு சில விதிவிலக்குகளும் உண்டு. உதாரணமா, ’24 ரூபாத் தீவு, அப்சரா’. அவர் நாவல்களின் உயிர் பாத்திரப் படைப்புதான். அப்புறம் அந்த யுனீக் ஸ்டைல். ஆனால் அந்த ’சொர்க்கத் தீவு’ ஆல்டஸ் ஹக்ஸ்லியோட Brave New World நாவலை ஞாபகப் படுத்தறதும் அல்லாம நிறைய ஒற்றுமைகளும் இருக்கு."

"நான் Brave New World படித்ததில்லை."

"படிச்சுப் பார், தெரியும்."

இப்போது டைரியில் இதையெல்லாம் படிக்கும்போது ’கரையெல்லாம் ஷெண்பகப்பூ’வை நினைத்துக் கொண்டான். இப்போது கேட்டால் கௌசி நிச்சயம் அதுதான் அவளுடைய ஃபேவரிட் என்று சொல்லுவாள்.

கொஞ்சம் இடைவெளிக்குப் பின் சொன்னான்: "சுஜாதா இதுவரை சமூக நாவல்கள் எழுதலை இல்ல? அவரே ஒரு சமயத்தில் தனக்கு சமூக நாவல்கள் எழுத வராதுன்னு சொன்ன ஞாபகம்."

"சமூக நாவல்களைப் பொறுத்தவரை இந்துமதிக்கு ஒரு தனி அந்தஸ்து உண்டு. அவருடைய மாஸ்டர்பீஸ் அந்த ’தரையில் இறங்கும் விமானங்கள்’தான்னு சொல்லுவேன்."

"என்ன ப்ரசன்டேஷன், பாத்திரங்கள், இல்லே? இப்ப நினைக்கும்போது அந்தக் கதையில் ஒரு மாற்றம் செய்திருக்கலாம்னு தோணுது, கௌசி. அந்தப் பையன் பேரென்ன, விசுதானே? அந்த விசுவும் அவன் அண்ணியும் ரொம்ப ரெசோர்ஸ்ஃபுல் பாத்திரங்கள். ஒரே மாதிரி எண்ணங்கள், உணர்வுகள், பார்வைகள். ஆசிரியர் அவர்கள் ரெண்டுபேரையும் இணைச்சிருக்கலாம்."

"ஐ டோன்ட் அக்ரி வித் யு. அந்த அண்ணி ஒரு ட்யூட்டிஃபுல் வய்ஃப். அவளால எந்த சந்தர்ப்பத்திலயும் தன் கணவனைப் பிரியமுடியாது. அப்படிப் பிரிஞ்சா கதையின் முடிவு ஒரு நிறைவைத் தராது."

"ஒய் நாட்? கணவனும் மனைவியும் இரு துருவங்களா இருந்துண்டு என்ன வாழ்க்கை?"

"அந்த நாவல்ல ஆசிரியரோட தீமே வேற ராஜா. தி என்டயர் ஸ்டோரி இஸ் ஸ்பன் அரௌன்ட் விஸ்வம்."

"நீ சொல்றது சரிதான். ஆனாலும் எனக்கு அந்த எண்ணம் இருந்தது, ரைட் வென் ஐ ரெட் த நாவல்."

அவனுக்கு ’வளையும் நேர்கோடுகள்’ ஞாபகம் வந்தது. ஒருவேளை கௌசல்யா இப்போது அவன் கருத்தை ஆதரிக்கலாம்.

மாமியும் கௌசல்யாவும் பூஜையை முடிப்பதற்குள் அவன் செய்தித் தாள்களையும் பத்திரிகைகளையும் மேய்ந்துவிட்டு, சரியாக மணி எட்டரைக்கெல்லாம் மணி அய்யரின் கைவண்ணத்தில் மலர்ந்த இட்டலிகளை மிளகாய்ப் பொடியுடனும் தேங்காய்ச் சட்டினியுடனும் ஒருகை பார்த்துவிட்டு, அந்த சூட்டைத் தணிக்க சில்லென்று புதிய சாத்துக்குடிச் சாறு அல்லது டாங்கோ உடனடி ஆரஞ்சுப் பொடிச்சாறோ சாப்பிட்டுவிட்டு, அவன் மாமாவின் ஸ்கூட்டரில் கௌசல்யாவைக் கல்லூரியில் இறக்கிவிட்டுத் தன் கல்லூரிக்குச் செல்லும்போது பெருமையாக இருக்கும்.

மதிய உணவு இடைவெளியில் அவன் அவளை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்று நிறைவாகச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் கல்லூரி செல்வார்கள்.

மாலை கல்லூரி எப்போது முடியும் என்று இருக்கும். கடைசி மணி அடித்ததும் விடுவிடு என்று நூலகத்துக்குச் சென்று புத்தகங்களை மாற்றிக்கொண்டு அவன் ஸ்கூட்டரில் அவள் கல்லூரியை அடையும்போது அவள் வாசலில் காத்திருப்பாள்.

"கௌசி, வசந்தி எங்கே?"

"தோழியுடன் ஹாஸ்டலுக்குப் போயிட்டா. அவங்களுக்கு அஞ்சரை மணிக்குள்ள டிஃபன் எடுத்துக்காட்டா தீர்ந்து போயிடும்."

"சரி, உட்கார். நாளைக்குப் பாத்துக்கலாம்."

கல்லூரி முடிந்து புற்றீசல்கள்போல் வெளிப்படும் பெண்கள் அவர்களைப் பார்த்துக்கொண்டே செல்ல, சிலரைப் பார்த்து கௌசல்யா கையசைக்க, அவர்கள் அந்த வண்ணமலர்க் கூட்டத்தில் மிதந்துசென்று வீட்டை அடையும்போது மாமி முகத்தில் மகிழ்ச்சி சுடர்விட இவர்களை எதிர்பார்த்திருக்க மணி ஐந்தடிக்கும்.

டிஃபன், காஃபி சாப்பிட்டுவிட்டு அடுத்த அரை மணியில் மொட்டை மாடியில் உள்ள அறையில் டேபிள் டென்னிஸ். கௌசல்யா சிரத்தையாக, ஸ்போர்ட்ஸ் உடையில் கையில் விலையுயர்ந்த ’டீடி ராக்கெட்’டுடன் வருவாள்.

அந்த ’பெஸ்ட் அஃப் ஃபைவ்’ போட்டியில் எப்போதும் அவனுக்கே வெற்றி.

"உன்னை மாதிரி எனக்கு ஸ்பின்லாம் வரமாட்டேங்கறது ராஜா!"

"பழக்கம்தான் கௌசி."

"நான்கூட சீரியஸா டேபிள் டென்னிஸ் பழகப் போறேன்."

"அவசியம் இல்லை கௌசி. இந்த அளவு போதும். அப்படிப் பாத்தா நீ என்னைவிட செஸ் நல்லா ஆடறயே? உனக்கு எவ்வளவோ பயனுள்ள வேறுவகையான ஈடுபாடுகள் இருக்கும்போது, இந்த விளையாட்டைப் போய் மும்முரமா கத்துக்க வேண்டியதில்லை. இல்லைனா உன் ஆர்வங்கள் சிதறிப்போய் எதையும் முழுமையாகச் செய்ய முடியாது."

"வசந்திகூட இதையேதான் சொல்லுவா. அவளும் என்னளவுக்கு டீடி ஆடறா."

"நான்தான் அவளுடன் இங்க ஆடியிருக்கேனே? அவள் உன்னைவிடக் கொஞ்சம் பெட்டராவே ஆடறா."

இருட்டத் தொடங்கியதும் சிறிது நேரம் கேஸட்கள் கேட்டுவிட்டு, இருவரும் ’ஸ்டடி’யில் அமர்ந்து ஒருவருக்கொருவர் அனாவசியமாகப் பேசாமல் அவரவர் பாடங்களை ஆழ்ந்து படித்துவிட்டு, எட்டரை மணி வாக்கில் சாப்பிட்டுவிட்டு, மீண்டும் ஒன்பது முதல் பத்துவரை படித்துவிட்டு, தத்தம் அறைகளுக்குச் சென்று கொஞ்சநேரம் ஓய்வெடுத்துவிட்டு, இன்டர்காமில் பரஸ்பரம் ’குட் நைட், ஸ்வீட் ட்ரீம்ஸ்’ சொல்லிக்கொண்டு உறங்கச் செல்வார்கள்.
 
ருநாள் மத்தியானம் கல்லூரியில் இருந்து சீக்கிரம் வந்தவன் மாமியுடன் பேசிக்கொண்டிருந்த போது தற்செயலாக நினைத்துக்கொண்டு அவர்களுடன் அப்பா-அம்மாவின் மனத்தாங்கல் பற்றிக் கேட்டான்.

"அது ஒண்ணும் சொத்து சம்பந்தமான பிரச்சனை இல்லைப்பா. எங்களுக்குக் கல்யாணம் ஆறதுக்கு முந்தி உங்க அம்மாவழித் தாத்தா, உங்க பாட்டி காலமாகி ரெண்டு வருஷம் கழிச்சு குடும்பத்தில சொத்து பிரிக்கும்போது உங்கம்மாவுக்கு நகைகள் தவிர வேற ஒண்ணும் பணமாக் கொடுக்கலைன்னு உங்கப்பா கொஞ்சநாள் கோவமா இருந்தாராம். அது அப்புறம் சரியாயிடுத்து. உண்மையான மனஸ்தாபம் அதுக்கப்புறம்தான் ஆரம்பிச்சது."

"எனக்கு விவரம் தெரியாது மாமி. என்கிட்ட சொல்லலாம்னா சொல்லுங்கோ."

ஒரு நெடிய பெருமூச்சுடன் மாமி தொடர்ந்தாள்.

"வேற ஒண்ணும் இல்லைப்பா. என்னை உங்க மாமாவுக்குக் கல்யாணம் ஆறதுக்கு முந்தியே தெரியும். ஆனால் நாங்க வடமா, நீங்க ப்ருஹத்சரணம். இந்த உட்பிரிவுக்குள்ள அந்தக் காலத்தில வேற வழி இல்லைனான்னாதான் கல்யாணம் பண்ணிவெப்பா. போறாக் குறைக்கு எங்க கல்யாணம் நிச்சயமானதும் கொஞ்ச நாள்ல உங்க தாத்தா---அதான் என் வருங்கால மாமனார்---தவறிப்போய்ட்டார். அவர் பாவம் வயசாகித் தள்ளாமைல எல்லாரும் என்னிக்கோ ஒருநாள் போறாப்பலதான் போனார். அவருக்கே தான் இன்னும் கொஞ்ச நாள்தான் இருப்போம்னு தோணிட்டதால, தன் கடைசி காலத்தில, இருக்கற நெலம் புலம் எல்லாம் கணக்கெடுத்து பாகம் பிரிக்க ஏற்பாடு பண்ணிட்டார். உங்க மாமா, உங்க தாத்தாக்கு ரெண்டு பொண்ணுக்கப்புறம் பிறந்த ஒரே பிள்ளைங்கறதால அவருக்குத்தான் மேஜர் ஷேர். அது மத்த அக்கா தங்கை, வீட்டு மாப்பிள்ளைகளுக் கெல்லாம் பிடிக்கலை. உங்க மாமா வேற உங்கப்பாவைவிடப் பத்துப் பன்னிரண்டு வயசு சின்னவரோன்னோ, சின்னப் பையனுக்கு இவ்வளவு சொத்தான்னு பொறாமையோ என்னவோ.

"இதைத் தவிர, உங்க மாமா அவா அவருக்குப் பார்த்து வெச்சிருந்த பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது, தனக்குப் பிடிச்ச பொண்ணைத்தான் (அதாவது என்னை) பண்ணிப்பேன்னுட்டார். அதனால இவா எல்லோரும் சேர்ந்து---உங்கப்பா மூத்த மாப்பிள்ளையோன்னோ, அவர்தான் அங்க லீடர்---உங்க தாத்தா தவறிப் போனதுக்கும் எங்க கல்யாண நிச்சயத்துக்கும் முடிப்போட்டு, நான் அதிர்ஷ்டம் கெட்டவள், அதுவும் இல்லாம வேற ஜாதி, அதனால உங்க மாமா என்னைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு சொல்லிப் பார்த்தா. மாமா கேக்கலை. நான் விரும்பி நிச்சயம் பண்ண பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன், அவள் வேற ஜாதிங்கறது மஹா தப்பு, அதுவும் பிராம்மண ஜாதிதான்னு ஒத்தக்கால்ல நின்னுட்டார். கல்யாணமும் கொஞ்சநாள் தாமசமா நடந்தது.

"கல்யாணமாகிக் கொஞ்சநாள் புக்காத்தில---அதான் ஒங்காம்---நாங்க இருக்கவேண்டி வந்தது. மாமா அப்போ பக்கத்து ஊர்ல வேலையாய் இருந்தார். உங்கப்பாம்மாக்கும் பிள்ளை குட்டி கிடையாது. அதுவேற அவா மனசை அரிச்சிண்டிருந்தது..."

"மாமா என்ன வேலைல இருந்தார்?"

"முதல்ல தாலுகா ஆஃபீஸ்ல க்ளார்க்கா இருந்தார். அதை விட்டுட்டு கொஞ்சநாள் ஒரு கம்பெனில சேல்ஸ்மேன் வேலைல சேர்ந்தார். அப்புறம் இந்த மெடிகல் ரெப் வேலைல ஒருவழியா செட்டில் ஆனார்."

பழைய நினைவுகளைப் புதுப்பித்துக்கொண்டு மாமி தொடர்ந்தாள்.

"புக்காத்துல உங்கம்மாவும் அப்பாவும் என்னைப் பாடாப் படுத்தி வெச்சுட்டா. நின்னா குத்தம், ஒக்காந்தா குத்தம், சமைச்சா கேக்கவே வேணாம். உங்க பாட்டி இருந்திருந்தா இப்படில்லாம் செஞ்சிருக்கமாட்டா... பாடாப் படுத்திட்டான்னா என்ன? சாப்பாடு தண்ணிக்கெல்லாம் ஒண்ணும் குறைச்சல் இல்லை. ஆனால் நான் ஏதோ வேண்டாதவள் மாதிரி இவா என்னைக் கண்ணெடுத்துப் பார்க்கவே பிடிக்காமல் நடந்துண்ட விதமும், எதுக்கெடுத்தாலும் தப்புக் கண்டுபிடிச்சிண்டு, மாமாட்ட சத்தம் போட்டுண்டு...

"நானும் முதல்ல இதெல்லாம் சஹஜம், அவா ஸ்வபாவமே அப்படித்தான்னு பல்லைக் கடிச்சுப் பொறுத்திண்டு இருந்தேன். கொஞ்ச நாள்ல இப்படிக்கூட அக்கா-தம்பிக்குள்ள த்வேஷம் பாராட்டுவாளான்னு வெறுப்பாய்டுத்து. மாமாவும் அமைதியா, பொறுமையா இருந்தார். அவருக்கும் ஒரு நல்ல வேலை மனசுக்குப் பிடிச்சமாதிரி அமையலை. அவருக்கு விவசாயம் பண்றது பிடிக்காததால இருந்த நெலத்தை எல்லாம் வித்துட்டார். கடைசில ஒருநாள் இவா ஆர்பாட்டம் அதிகமாக, அக்காவோட சண்டைபோட்டு அமர்க்களமாகி, உங்கப்பா ’கெட் அவுட்’னு கத்த எழுந்து வந்தவர்தான். இன்னிவரைக்கும் பெரியக்கா வீட்டுப் பக்கம் தலைவெச்சுப் படுக்கலை."

"ஆனால் நான் சின்ன வயசுல கௌசல்யாவைப் பார்த்திருக்கேனே? எங்காத்துக்கெல்லாம் வந்திருக்கா."

"அதான் அதுல வேடிக்கை. உனக்கப்புறம் ஒரு வருஷம் கழிச்சு கௌசல்யா பிறந்த உடனே உங்கம்மா மனசு மாறினாப்போல இருந்தது. அவளை உன்னை மாதிரியே மூணாங் க்ளாஸ்ல ஸ்கூல்ல சேர்த்தபோது, முதல் வருஷ லீவுல ஒரு வாரம் வரவழைத்துச் சீராட்டினா. என்ன இருந்தாலும் அத்தை இல்லையா, மனசு கேட்கலை! அவாளுக்கு வேற ரொம்ப நாள் குழந்தை இல்லாம எவ்வளவோ தவமிருந்து நீ பிறந்தே..."

"அப்ப மாமா வரல்லையா?"

"நான் மட்டும் வந்து ஒரு வாரம் இருந்துட்டுக் கௌசல்யாவைக் கூட்டிண்டு வந்துட்டேன்."

"அப்போ அப்பாம்மா எப்படி இருந்தா?"

"அப்போ கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் நாங்க போனதும் திரும்பப் பேச்சுவார்த்தை இல்லை. நான் எழுதின நாலஞ்சு கடுதாசிக்கும் பதில் இல்லை."

"அதுக்கப்புறம் இத்தனை வருஷம் கழிஞ்சுமா சரியாகலை?"

"என்னவோப்பா. உங்கப்பாவும் பிடிவாதக்காரர் மாமாவும் பிடிவாதக்காரர். நாள்போக நாள்போக நான் இவர்ட்ட எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன், ’அவா அந்தக் காலத்து மனுஷா, கொஞ்சம் முன்னப்பின்னதான் இருப்பா, நாமதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்’னு, கேக்கமாட்டேங்கறார். ’நாளைக்கே ராஜாவுக்குக் கௌசல்யாவைக் கொடுக்க வேண்டியிருந்தா என்ன பண்ணுவேள்’னுகூட கேட்டேன். அதுக்கு அவர், ’அப்படிப்பட்ட சந்தர்ப்பம் வந்தாப் பாத்துக்கலாம். முதல்ல அவாளுக்கு எதிரா லைஃப்ல உயர்ந்து காட்டணும்’னு சொன்னார். இப்ப என்னடான்னா நாங்க பெரிய பணக்காராளாய்ட்டோம், அவாளை மதிக்கறதில்லைனு உங்கப்பாம்மா கட்சி. உன்னோட சித்தி, அதான் வசந்தியோட அம்மா காமு-அக்கா, அவா குடும்பத்தோடல்லாம் நாங்க சுமுகமா இல்லையா?

இப்பவாவது இவர் விட்டுக்கொடுப்பார்னு பார்த்தா அதுவும் நடக்கலை. உங்கம்மாவும்---சொந்தத் தம்பின்னுகூடப் பார்க்காம அப்படி என்ன விரோதமோ? பாவம், நீ ரொம்ப நல்ல பையன். உனக்கும் கௌசல்யாவைப் பிடிச்சிருக்கு, அவளுக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு. பழசெல்லாம் மறந்துட்டு எல்லாரும் ஒண்ணு சேரலாம்னா ஒவ்வொருத்தரும் தான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்னு நிக்கறா. நான்தான் எல்லோருக்கும் நடுவுல கிடந்து அல்லாடறேன்."

"கௌசல்யா என்னை விரும்பறதைப் பத்தி நீங்களும் மாமாவும் என்ன நினைக்கறேள்?"

"என்னைப் பொறுத்தவரைக்கும் நான் அதை ரொம்ப வரவேற்கரேன்பா. அதுதான் நேச்சுரல், விரும்பத்தக்கதும் கூட. மாமாவுக்கும் உன்னைப் பத்தி சந்தோஷம்தான். உன்னைவிட பெட்டர் மேட்ச் கௌசல்யாவுக்குக் கிடைகாதுன்னு அவருக்குத் தெரியாமல் இல்லை. தவிர, அவருக்குக் கௌசல்யாகிட்ட அளவுகடந்த பாசம். அவளுக்காக அவர் என்ன வேணும்னாலும் செய்வார். மொத்தத்துல உங்கப்பா மனசு வெச்சா நடக்கும்."

"எனக்கு இதுவரைக்கும் இந்த விவரங்கள்லாம் தெரியாது மாமி. நான் இந்த லீவுல அப்பாகிட்ட பக்குவமா பேசிப் பார்க்கிறேன்."

*** *** ***
 
22

அச்சமில்லை அமுங்குதல் இல்லை,
நடுங்குத லில்லை நாணுத லில்லை.
பாவ மில்லை பதுங்குத லில்லை;
---மஹாகவி பாரதியார், விநாயகர் நான்மணி மாலை 24


ந்த வருடக் கோடை விடுமுறையின் போது அப்பாவிடம் பக்குவமாகக் கௌசல்யாவைப் பற்றிக் கூறி அவர் மனசை மாற்றி சம்மதம் பெற்றுவிட வேண்டும் என்ற உந்துதலில் அவன் பல்வேறு வழிகளை யோசித்துத் தன்னைத் தயார்ப்படித்திக்கொண்டு ஒரு முடிவுக்கு வருவதற்குள் முதல் வாரமே ஒருநாள் மத்யானம் சாப்பிடும்போது அம்மா திடீரென்று விஷயத்தைப் போட்டு உடைத்துவிட்டாள்.

"என்னப்பா, ரா..ஜா..! மாமா மாமி எல்லாரும் சௌக்யமா இருக்காளா? மாமா பொண்ணு கௌசல்யா பார்க்க ரொம்ப அழஹா இருக்காளாமே?"

"..."

"அவளை ஸ்கூட்டர்ல எல்லாம் ஏத்திண்டு போறயாமே?"

அம்மாவுக்கு எப்படித் தெரிந்தது என்ற வியப்பில் அவன் நிமிர்ந்து பார்க்க, அம்மா தொடர்ந்தாள்.

"என்ன அப்படி ஆச்சரியமா பார்க்கற? நீ கடுதாசி எழுதாட்டத் தெரியாதா? இப்ப என்ன, ஹாஸ்டல்லதான் இருக்கயா, அல்லது காலி பண்ணிண்டு அவாத்திலேயே கெஸ்டா போய்ட்டயா?"

வசந்தியின் மேல் கோபம் வந்தது.

"ஏம்மா இந்த மாதிரியெல்லாம் பேசறே? நானும் வசந்தியும் மாமாவாத்துக்குப் போறதைப்பத்தி நான்தான் ஒரு லெட்டல்ர்ல எழுதியிருந்தேனே? நீங்கதான் அந்த லெட்டர்க்குப் பதில் போட்டபோது அவாளப் பத்தி ஒண்ணுமே கேக்கலை. அப்புறம் என்ன இருக்கு நான் எழுத? மாமா ஒரு வாரம் டூர் போனபோது என்னை வீட்டுக்கு வந்து துணையா இருக்கச் சொன்னார். அந்த நாலஞ்சு நாள் அவர் ஸ்கூட்டரை எடுத்துண்டு காலேஜ் போனேன். போற வழியில கௌசல்யாவை அவள் காலேஜ்ல ட்ராப் பண்ணினேன். இதுல என்ன தப்பு?"

"இன்னைக்கு மாமா டூர் போறபோது உன்னைத் துணைக்கு இருக்க்ச் சொல்வார். நாளைக்கு அவா எல்லாரும் எங்கேயாவது போனால் வீட்டைப் பார்த்துக்கச் சொல்வார். நீ என்ன வாச்மேனா?"

"உன்னுடைய கற்பனைக்கெல்லாம் என்கிட்ட பதில் இல்லைம்மா. ஒண்ணுமட்டும் சொல்வேன். மாமா நீ நினைக்கற மாதிரி இல்லை. அவர் ரொம்ப நல்லவர்."

"அட, அப்படியா? என்னோட தம்பியைப் பத்தி நீ கொஞ்சநாள் பழக்கத்தில தெரிஞ்சுண்டது இத்தனை வருஷமா எனக்குத் தெரியாமல் போய்ட்டது பத்தியா? (அப்பாவைப் பார்த்தபடியே) மாமா ரொம்ப நல்லவர், அக்கா அத்திம்பேரை மதிப்பவர்னா அப்பாட்ட மன்னிப்புக் கேட்டுண்டு சுமுகமா வந்துண்டு போயிண்டு இருக்க வேண்டியதுதானே?"

அவனால் இந்தக் கேள்விக்கு பதில்சொல்ல முடியவில்லை. மாமா மன்னிப்புக் கேட்கவேண்டும் என்ற அம்மாவின் கருத்தில் அடிபட்டவனாய் நிமிர்ந்து அம்மாவின் கண்களை நேருக்குநேர் பார்த்தபோது வார்த்தைகள் வைராக்கியத்துடன் வெளிவந்தன.

"எனக்கு உங்க மனஸ்தாபத்தைப் பற்றிய முழு விவரமும் தெரியும்மா."

அப்பாவைப் பார்த்தபோது அவர் சலனமில்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

"மாமி சொல்லியிருப்பா, கண்ணும் காதும் வெச்சு! என்ன சொன்னா அவ?"

"மாமி கண்ணும் காதும் வெச்சு சொல்லுவான்னா முன்னாடியே நீங்க என்கிட்ட விவரம் சொல்லியிருக்க வேண்டியதுதானே? ஏன் ஏதோ சொத்து விஷயம்னு மூடி மறைச்சீங்க?"

அவன் கேள்வியின் உஷ்ணம் அவனையே தாக்க அம்மாவின் பதிலில் கோபத்தை எதிர்பார்த்து ஏமாந்தான்.

"சொல்லவேண்டியது அவசியமில்லைனுதான் சொல்லலை."

"மாமா மாமியைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிண்டார், அதுவும் மாமி வடமான்னு தெரிஞ்சும்கூட; இதுதானே உங்க விரோதத்துக்குக் காரணம்?"

அம்மா பதில் பேசாமல் அவன் தட்டில் ரசத்தை வார்த்தாள். அப்பா மோர்சாதம் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர் முதல்முதலாகப் பேசினார்.

"இந்தாப்பா, முதல்ல சாப்பிடு. அப்புறம் கூடத்தில் உட்காந்து பேசலாம்."
 
டுத்த அரைமணியில் அம்மாவும் சாப்பிட்டுவிட்டுக் கூடத்துக்கு வந்துவிட, அப்பா ஊஞ்சலில் உட்கார்ந்துகொண்டு புளிபோட்டுத் தேய்த்துப் பளபளவென்று மிளிரும் தன் பித்தளை வெற்றிலைச் செல்லத்தைத் திறக்க, அவன் அப்பாவுக்கு எதிரில் அமர்ந்துகொண்டு, நன்றாக யோசித்து, தைரியத்தை வரவழத்துக்கொண்டு பேசத் தொடங்கினான்.

பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்,
கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்;
---மஹாகவி பாரதியார், விநாயகர் நான்மணி மாலை 32


என்று டைரியில் பாரதியார் அவனுக்கு உதவியிருந்தார்.

"நான் கேக்கறதைக் கொஞ்சம் புரிஞ்சுண்டு, பாரபட்சமில்லாமல் எனக்கு பதில் சொல்லுங்கோப்பா, என்ன? மாமாவும் மாமியும் அந்தக் காலத்திலேயே ஒருத்தரை ஒருத்தர் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிண்டாங்க. மாமி வேற சப்கேஸ்ட். அவா கல்யாணம் நிச்சமாகிக் கொஞ்சநாள்ல தாத்தா தவறிட்டார். அதை நீங்க எல்லாரும் ஏதோ அபசகுனமா நினைச்சு வீட்டுக்கு வந்த நாட்டுப்பொண்ணு துரதிர்ஷ்டம் பிடிச்சவள்னு முடிவுகட்டினீங்க. ஓகே, அதெல்லாம் உங்க சென்டிமென்ட்ஸ். எனக்கு அந்தக் காலத்து நிலவரம் பத்தித் தெரியாது. அதைப் பத்திக் கமென்ட் பண்ண எனக்கு அருகதை இல்லை...

"என்னோட கேள்வி, அதுக்காக கௌசல்யா என்ன பாவம் பண்ணினாங்கறதுதான்."

அப்பா தனக்கே உரிய அமைதியான ’அன்டர்டோன்’இல் ஒவ்வொரு வார்த்தையையும் தெளிவாக உச்சரித்தபடியே கேட்டார்.

"நீ ஏன் கௌசல்யாவைப் பத்தி நினைக்கறே? அவளைப் பத்தி அவள் பெற்றோர்க்கு இல்லாத அக்கறை உனக்கு என்ன வந்தது?"

"நான் எதிர்த்துப் பேசறதா நினைச்சுக்காதீங்கப்பா. நான் ஏன் கௌசல்யாவைப் பத்தி நினைக்கவோ அக்கறை கொள்ளவோ கூடாது?"

"எல்லாக் குடும்பத்தைலையும் சொந்தத்தில பொண்ணுன்னு இருக்கத்தான் செய்வா. அதுக்காக எல்லோரும் அத்தை பொண்ணையோ அல்லது மாமா பொண்ணையோவா கல்யாணம் பண்னிக்கறா?"

"அது வேற விஷயம்பா. சொந்தத்தில் ஒரு பொண்ணு இருக்கும்போது, அதுவும் அவள் ரொம்ப நல்லவளா, படிச்சவளா, பண்புள்ளவளா இருக்கறபோது, ஏன் கல்யாணம் பண்ணிக்கொள்ள நினக்கக்கூடாது?"

அம்மா இடைமறித்தாள்.

"உனக்கு இன்னும் இருபது வயசுகூட ஆகலை. அதுக்குள்ள கல்யாணத்துக்கு என்ன அவசரம்?"

அவன் நினைவில் அனுவும், ஜெயந்தியும், மாலதியும், கௌசல்யாவும் தோன்றி மறைய, அம்மாவின் பாமரத்தனமான கணிப்பு அவன் முகத்தில் ஒரு ஏளனம் கலந்த புன்னகையை வரவழைத்தது.

"எனக்கொண்ணும் அவசரம் இல்லைம்மா. நான் எம்.ஏ. முடிச்சு ஒரு நல்ல காலேஜ்ல வேலைக்கு சேர்ந்தபின்தான் கல்யாணம் பண்ணிப்பேன். ஒரு விவாதத்துக்காக கேக்கறேன். என்னிக்கோ ஒருநாள் திடீர்னு முடிவுபண்ணி, யாரோ முன்பின் தெரியாத ஒரு பொண்ணைப் பார்த்து என் தலைல கட்டறதைவிட, நமக்கு நல்லாத் தெரிஞ்ச பொண்ணைப் பார்த்து, சமயம் வரும்போது பண்ணிவெக்கறது எவ்வளவோ நல்லது இல்லையா?"

அப்பா தொடர்ந்தபோது அவன் வார்த்தைகளில் காயம்பட்டிருப்பது தெரிந்தது.

"நாங்க அப்படியொண்ணும் அவசரப்பட்டு உனக்குப் பொருத்தம் இல்லாம சோடையா ஒரு பொண்ணைப் பார்த்துப் பண்ணிக்கோன்னு சொல்லிடமாட்டோம். கல்யாணங்கறது ஆயிரம் காலத்துப் பயிர். உனக்கு இப்பத் தெரியாது. நாளைக்கு நீயும் நாலஞ்சு குழந்தைகளுக்குத் தகப்பனாகி அவாளுக்கு கல்யாணம் பண்ணிவெக்க அலைவே பாரு, அப்பத் தெரியும். வரன் பாக்கறது என்ன விளையாட்டுன்னு நெனச்சயா?"

"எனக்கு உங்க வரன் பார்க்கற திறமைல கொஞ்சம்கூட சந்தேகம் இல்லைப்பா. இருந்தாலும் நான் கௌசல்யாவை விரும்பறேன்."

"அவளோட மேக்கப் அழகுலயும் விதவிதமான மாடர்ன் ட்ரெஸ்லயும் மயங்கிட்ட போலிருக்கு. அல்லது மாமி ஏதாவது சொக்குப்பொடி போட்டாளா?"

"கௌசல்யா நீ நினைக்கற மாதிரி சாதாரணமானவ இல்லைம்மா! அவள் மாடர்னா இருக்கலாம். அதுக்காக அடக்கமா இல்லைனு சொல்லமுடியாது."

"என்ன இருந்தாலும் அவா பெரிய பணக்காரக் குடும்பம். வேளைக்கு ஒரு டிரஸ் போட்டுப்பா. தினம் ஒரு சினிமா பார்ப்பா. ஸ்டைலா டைனிங் டேபிள்ல சமையற்காரர் பரிமாற சாப்பிடுவா. அவளுக்கு இந்த கிராமமும் கட்டுப்பெட்டியா இருக்கற அத்தையும் ஒத்துவருமா? நாம நம்ம அந்தஸ்துக்குத் தகுந்தாப்பல அடக்க ஒடுக்கமா, தெய்வ பக்தியோடு இருக்கற, ஆத்துக் காரியம்லாம் சவரணையாச் செய்யற பொண்ணைத்தானே பார்க்கமுடியும்?"

"கௌசல்யாவைப் பத்தி சரியாத் தெரிஞ்சுக்காம நீ பேசறம்மா. அவள் எவ்வளுக்கெவ்வளவு மாடர்னா இருக்காளோ, அவ்வளவுக்கவ்வளவு அடக்கமாயும், கடவுள் பக்தியோடும், அனுசரணையாவும் இருப்பா. எனக்கு அது நிச்சயாத் தெரியும். அதனாலதான் எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு, புரியுதா?"

வெற்றிலைச் சக்கயைத் துப்பிவிட்டு வந்து அப்பா மென்மையாகச் சொன்னார்.

"அவசரப்படாதே ராஜா. எந்த விஷயத்திலயும் நிதானமா யோஜனை பண்ணி ஒரு முடிவுக்கு வரணும். கௌசல்யாவை நீ விரும்பறதில தப்பு இல்லை. ஆனால் உண்மையிலேயே உனக்கு அவளைப் பிடிச்சிருக்கான்னு பொறுத்திருந்து பார். இந்த வயசில அப்படித்தான் இருக்கும். இன்னிக்கு ஒருத்தரைப் பிடிக்கும். அவாளை நாளைக்கே பிடிக்காமப் போய்டும். காரணமா, அதைவிட உசந்தவாளா வேற ஒருத்தர் தெரியலாம். அல்லது ஒரே சமயத்தில ரெண்டு மூணுபேர் உகந்தவாளாத் தெரியலாம். இதெல்லாம் ஒரு passing phase. எல்லா விஷயங்களையும் தீர யோஜனை பண்ணித்தான் ஒரு முடிவுக்கு வரமுடியும், வர..ணும். தவிர, நம்ப குடும்ப கௌரவம், அந்தஸ்து, இதெல்லாம் பார்க்க வேண்டாமா? எல்லாத்தையும் உதறிட்டுப் போக நாம என்ன சந்நியாசிகளா?"

அப்பாவின் சொற்களில் அசந்துபோனான். அவர் இதுபோல ’ரெண்டு மூணுபேர் உகந்தவளா’--இப்படியெல்லாம் பேசணும்னா அதுக்கு ஒரே காரணம்தான் இருக்கமுடியும். வசந்தி. அவள் அம்மாவிடம் ஏதாவது சொல்லி அம்மாமூலம் அப்பாவுக்கு ந்யூஸ் போயிருக்கலாம் அல்லது---அப்பாதான் தான் ஒண்ணும் வலிய கருத்து சொல்றதில்லையே தவிர சுத்தி நடப்பதைக் கூர்ந்து கவனிச்சு வெச்சுப்பாரே, அதனால---அப்பாவே யூகிச்சிருக்கலாம். அவனுக்கு சற்றுமுன் வசந்தியின்மேல் வந்த கோபம் இப்போது குழப்பமாக மாறியது.

"இதுல என்ன குடும்ப கௌரவம் பாதிக்கப்படுதுன்னு புரியலைப்பா. இருபத்திநாலு வருஷமா மனசில வெச்சுக்கற அளவுக்கு அந்த விவகாரம் அப்படியொண்ணும் பெரிசாத் தெரியலை."

"உன் மாமாவோட ஆட்டிட்யூட் மாறணும். அப்பதான் நாம மேலே போகமுடியும்."

"நீங்களும் கொஞ்சம் மனசு மாறி விட்டுக்கொடுத்துப் போலாம்பா. என்ன இருந்தாலும் மாமா உங்களைவிட எவ்ளோ சின்னவர்!"

"அதனாலதான் சொல்றேன். அன்னைக்கு வீட்டைவிட்டு வெளியேறினவன் இன்னி வரைக்கும் சுமுகமா இல்லையே?"

"மாமாவைக் கேட்டா ’உங்கப்பாதான் இன்னும் எல்லாத்தையும் மனசில வெச்சிண்டு இருக்கார்’னு சொல்றார். மாமியோ ’உங்கப்பாவும் மாமாவும் தான் பிடிச்ச முயலுக்கு மூணுகால்னு ஒத்தக்கால்ல நிக்கறா, நடுவுல நான் கிடந்து அல்லாடறேன்’கறா."

"வேறென்ன சொன்னா மாமி? அந்தக் காலத்தில நான் ஒரு மாமியாருக்கு மேல அவளைக் கொடுமைப் படுத்தினதா இல்லாததும் பொல்லாததும் சேர்த்துச் சொல்லியிருப்பாளே? அவளுக்காவது நான் நாத்தனார்தான். நாளைக்கு இந்தாத்துக்குக் கௌசல்யா மாட்டுப்பொண்ணா வந்தா, நான் நெஜமாவே மாமியார் ஆய்டுவேன். அப்ப எவ்வளவுதான் அவளை நல்லா வெச்சிண்டாலும் ஏதாவது சாக்கு கண்டுபிடிச்சு, கொடுமைப் படுத்தறான்னுதான் சொல்லுவா. அதுதாண்டா உலகம்."

"உங்களோட தகராறுக்காக நான் கௌசல்யாவைப் பார்க்கக்கூடாது அவளோட பேசக்கூடாது, அப்படித்தானே?"

"நான் ஏண்டாப்பா குறுக்க நிக்கறேன்? நன்னாப் போய்ப் பாரு, பேசு. அதான் ஏற்கனவே மயங்கியாச்சே? தடால்னு கீழே விழாம இருந்தா சரிதான்."

"அம்மா நீ பேசறது காரணமில்லாத பேச்சு. அல்லது ஒரு விஷயத்தை முழுக்கப் புரிஞ்சுக்காம, இல்லை புரிஞ்சுக்க மாட்டென்னு அடம்பிடிக்கற மாதிரி பேசறே. நான் கௌசல்யாவை விரும்பறதில என்ன தப்பு சொல்லும்மா? அவளை மட்டும் கணக்கில எடுத்துண்டு சொல்லு."

"எனக்குத்தான் அவளைப் பத்தி முழுக்கத் தெரியாதுன்னு நீயே சொல்லிட்டயே?"

"நிச்சயமா. நீ அவளை சின்ன வயசில பார்த்ததுதானே? அப்புறம் மத்த விஷயம்லாம் வசந்தி சொல்லக் கேட்டதுதானே?"

அப்பா குறுக்கிட்டார். "இந்த விஷயத்தில உங்க மாமா என்ன சொல்றான்னு தெரியுமா?"

"மாமா ஒண்ணும் எதிர்ப்புத் தெரிவிக்கலைப்பா. தவிர, அவருக்கு கௌசல்யான்னா உயிர். அவளுக்காக மாமா என்ன வேணும்னாலும் செய்வார்."

"அந்த மாதிரி நாம கமிட் பண்ணிக்க முடியாது. கௌசல்யா உன்னை விரும்பறான்னா நீயும் பதிலுக்கு அவளை விரும்பணும்னு ஒண்ணும் சட்டமில்லை. உங்க மாமாவும் கௌசல்யாவுக்காக, ஏதோ அவள் கேட்கற விளையாட்டு பொம்மை மாதிரி உன்னை வாங்கிடலாம்னு நெனச்சான்னா அதுக்கு நான் உடன்பட மாட்டேன். உன்னை மருமானா, மாப்பிள்ளையா மதிச்சு அவன் ஏத்துக்கணும்."

"நீங்க நினக்கற மாதிரி இது அவ்வளவு சிக்கலான விஷயம் இல்லைப்பா. மாமா என்கிட்ட ரொம்ப அன்பா, மரியாதையாதான் பழகறார். அடுத்த தடவை பார்க்கறப்ப நான் அவரை சுடச்சுட நேரடியாகவே கேட்டுடறேன். நிச்சயம் அவருக்கு நீங்க நினக்கற மாதிரி எண்ணம் இருக்காது."

"சரித்திரக் கதைகள்ல வர தூதுவன் மாதிரி நீ அங்கேயும் இங்கேயும் போய்ட்டுவரப் போறே, அவ்வளவுதான். வேற ஒண்ணும் உருப்படியா நடக்கப் போறதில்லை. எனக்கு உங்க மாமாவைத் தெரியாதா? இல்லை அவள் தர்ம பத்தினியைத்தான் தெரியாதா?" என்றாள் அம்மா அபிநயத்துடன்.

*** *** ***
 
23

போயின, போயின துன்பங்கள் -- நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே... --உயிர்த்
தீயினி லேவளர் சோதியே -- என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே!
---மஹாகவி பாரதியார், கண்ணம்மாவின் காதல் 2


கோடை விடுமுறை முடிந்து கல்லூரி திறந்தவுடன் அவன் ஒரு சனிக்கிழமை வசந்தியைப் பார்க்கப் போனபோது ஓர் அதிசயம் காத்திருந்தது.

வழக்கம்போல் ப்யூனிடம் சொல்லி அனுப்பிவிட்டு பார்வையாளர்கள் பெஞ்ச்சில் அமர்ந்து சுவாரஸ்யமாக ’ஃப்லிம் ஃபேர்’ பத்திரிகையைப் பார்த்துக்கொண்டிருந்தவன், "என்ன ராஜா, அவ்ளோ இன்டரஸ்டிங்காப் படிக்கறே?" என்ற குரல்கேட்டு நிமிர்ந்தபோது வசந்தி அருகில் ஜெயந்தி நின்றிருந்தாள்!

அவனைக் கண்டதும் வெட்கத்துடன் புன்னகைத்து, "குட் ஈவனிங்" என்றாள்.

முன்பு பார்த்ததைவிட இப்போது கொஞ்சம் உயரமாக, ஒல்லியாகப் பாவாடை தாவணி அணிந்துகொண்டு கொஞ்சம் நீளமான இரட்டைப் பின்னல்களுடன் நின்றாள். வழக்கம்போல் ஒரு பின்னல் முன்னால் வந்துவிழும் என்று பார்த்தால்---காணோம்! முகத்தில் கொஞ்சம் இளமையின் மாற்றம் தெரிய, அந்தச் சிவப்புக்கல் ஒற்றை மூக்குத்தி இப்போதும் பளபளக்க, கண்கள் துருதுரு என்று அலைய, குரலில் கொஞ்சம் மெருகேறியிருக்க, கால்களின் கட்டை விரல்கள் செய்வதறியாது பின்னிக்கொள்ள, அவனது நந்தவனத்தில் மறுபடியும் மலர்க் கண்காட்சி!

"ஹல்லோ மிஸ் ஜெயந்தி! எங்கே இந்தப் பக்கம்? அப்பா ஏதோ திண்டுக்கல் காலேஜ்ல சேர்க்கப் போறதாச் சொன்னார்?"

"எங்க இருந்தாலும் ஹாஸ்டல்லதான் இருக்கணும். இங்கேயாவது வசந்தி இருக்காங்க."

"நான் இந்த ஒரு வருஷம்தானே இருப்பேன்?"

(அதுக்கப்புறம் நான் இருப்பேன், பார்த்துக்கறேன்.) "பி.யு.ஸி.ல என்ன க்ரூப்?"

"எம்.பி.ஸி.தான் எடுத்திருக்கேன். எனக்கு கெமிஸ்ட்ரினா பிடிக்கும்."

"ம்ஹூம். அப்புறம்? எப்படி இருக்கு காலேஜ் லைஃப், ஹாஸ்டல் லைஃப்?"

"ஃபைன். முதல்ல எல்லா சப்ஜக்ட்டும் இங்க்லிஷ்ல சொல்லித்தறதும் எல்லோரும் இங்க்லிஷ் பேசறதும் கொஞ்சம் கஷ்டமாய் இருந்தது. இப்ப சரியாயிடுத்து."

"எங்களுக்கெல்லாம் கூட கொஞ்சநாள் இந்தக் கஷ்டம் இருந்தது. நாமெல்லாம் ஹைஸ்கூல்ல தமிழ் மீடியம் தானே?"

கொஞ்சம் தயங்கிக் கேட்டாள். "நீங்களும் இங்க்லிஷ் ஃபைனல் இயரா?"

"ஆமாம். நான், வசந்தி, கௌசல்யா எல்லோரும் இங்க்லிஷ்தான்."

"ராஜா, நாங்க கொஞ்சம் ஷாப்பிங் போகப் போறோம். கௌசிக்குத் தலைவலின்னு சீக்கிரமே வீட்டுக்குப் போயிட்டா. நீ என்ன செய்யப் போறே, எங்களோட வரையா?"

"வித் ப்ளஷர். ஜெயந்திக்குக் கௌசல்யாவை அறிமுகப் படுத்தினாயா?"

"ஓ! இவளுக்கும் மாமா மாமிதான் லோகல் கார்டியன். இப்பதான் முதல்முதலா அவங்க வீட்டுக்குப் போகப் போறா."

ஜெயந்தியுடன் ஷாப்பிங் போகப் பிடித்திருந்தது. மூவரும் கல்லூரி கேன்டீனில் காப்பி சாப்பிட்டுவிட்டுப் பேசியபடியே காலாற மெயின் கார்ட் கேட் பக்கம் வந்தனர்.

"இன்னமும் தமிழ்வாணன் நாவல்கள் படிக்கிறாயா, ஜெயந்கி?"

"எப்பவானும் படிக்கறதுண்டு. அநேகமா எல்லா நாவலும் படிச்சாச்சு", என்று கன்னம் சிவந்தாள்.

"அப்புறம்? இந்த ஊரில் எல்லா இடமும் பார்த்தாச்சா?"

"என்னைக் காலேஜ்ல சேர்க்க அப்பா அம்மா வந்திருந்தபோது மலைக்கோட்டை, சமயபுரம், திருவானைக்கா, ஶ்ரீரங்கம் போனோம். மற்ற இடங்கள் இனிமேல்தான் பார்க்கணும்."

அவள் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கித் தனக்கு வேண்டிய ’பிளாஸ்டிக் பக்கெட், ப்ளாஸ்டிக் மக், டூத் பேஸ்ட், டூத் ப்ரஷ், ரிப்பன்’, வளையல்கள் போன்ற பொருட்களை வாங்கிக்கொண்டாள். சாரதாஸில் நுழைந்து தனக்கு நாலைந்து தாவணிகள் எடுத்துக்கொண்டு, "உங்களுக்குப் பிடிச்சிருக்கா, வசந்தி?" என்று கேட்டு அவனை ஓரக் கண்ணால் பார்த்தபோது மெல்லத் தலையாட்டினான்.

எல்லாப் பொருள்களையும் அவள் அந்த ’ப்ளாஸ்டிக்’ வாளியில் வைத்துத் தூக்கி வந்தபோது அவன் எவ்வளவோ உதவ முற்பட்டும் மறுத்துவிட்டாள்.

மறுநாள் அவர்கள் கௌசல்யா வீட்டுக்குப் போனபோது அந்த முதல் சந்திப்பிலேயே ஜெயந்தியைக் கௌசல்யாவுக்கும் மாமிக்கும் பிடித்துப்போனது.

"என்னையெல்லாம் வாங்க போங்கன்னு கூப்பிடவேண்டாம், ஜெயந்தி. நாமெல்லோரும் இப்ப தோழிகள் ஆய்ட்டதால என்னைக் கௌசின்னே கூப்பிடு."

"உங்க வீடு ஃபன்டாஸ்டிக், கௌசி. இங்கேயே இருந்திடலாம் போலிருக்கு."

"இருந்திடேன், எனக்கும் சந்தோஷமா இருக்கும். நாளைக்கே உங்க அப்பாவுக்கு ஒரு லெட்டர் போட்டுடு."
 
வனால் கௌசல்யாவைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஒவ்வொரு முறையும் ஒரு புதுக் கௌசல்யாவாகத் தோன்றினாள். இப்படிக்கூட வெள்ளை உள்ளத்துடன் மனதில் பட்டதை சட்டென்று வெளியிட்டு, அந்த உடனடிப் பேச்சிலும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து உதிர்த்து, கலைடாஸ்கோப்பின் வண்ணக் கோலங்கள் போன்ற அழகழகான முக பாவங்களில் எப்போதும் சிரித்துக்கொண்டு ஒரு பெண்ணால் இருக்க முடிவது வியப்பாக இருந்தது. கோபமோ வருத்தமோ பட்ட சந்தர்ப்பங்கள் அவள் வாழ்க்கையில் அதிகம் இருந்திருக்காது, அந்த வகையில் அவள் அதிர்ஷ்டசாலி என்று தோன்றியது.

"ஜெயந்தியை பற்றி நீ என்ன நினைக்கறே, ராஜா?"

"எ வெரி நைஸ் கேர்ள், இல்ல?"

"நான் உன்னுடைய கருத்தைக் கேட்டேன்."

"எஸ், எ நைஸ் கேர்ள். அழகானவள், நல்லவள். புத்திசாலி. வெரி ஆக்டிவ். இனிமையாப் பேசறா."

"உனக்கு அவளை முன்பே தெரியுமாமே?"

"தெரியும்னா பார்த்திருக்கேன். ஒரே ஊர்தானே? வசந்தியோட தோழிவேறு. எங்காத்துக்கெல்லாம் வந்திருக்கா."

வசந்தி எல்லோரிடமும் எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறாள் போலிருக்கிறது. அனுவைப் பற்றி ஏதாவது சொல்லியிருப்பாளோ?

வினாடிகள் மௌனமாக நழுவ, திடீரென்று கேட்டாள்: "ஜெயந்தி உனக்கு நல்ல மேட்ச், இல்லை?"

சட்டென்று நிமிர்ந்தான். அவள் கண்களில் தெரிந்தது குறும்பா, கேலியா அல்லது சோகமா என்று அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

"ஏன் இப்படிக் கேட்கிறே கௌசி? டஸ் இட் மீன் எனிதிங்?"

"இல்லை, நீ அவளை விரும்பறதா வசந்தி நினைக்கறா."

"அப்படி-யா? ஆமாம் நான் அவளை நினைத்துப் பார்த்தேன், உன்னை சந்திப்பதற்கு முன். இப்பவும் அவள் ஒரு friend. Let's not have any confusion there."

ற்றொரு சந்தர்ப்பத்தில் கௌசல்யாவோடு இதே மாதிரி மெல்லிய பிணக்கம் ஏற்பட்டது.

"ராஜா, அனு இப்ப எங்க படிக்கறா?"

"எந்த அனு?"

"அனுராதா. உன் பால்ய சிநேகிதி."

"வசந்தி சொன்னாளா?"

"எனக்கு வேற எப்படித் தெரியும்?"

வசந்தியின் மீது கோபம் வந்தது.

"என்ன சொன்னா, கௌசி?"

"நீயும் அனுவும் வசந்தியும் சின்ன வயசில இணைபிரியா நண்பர்களாம். அனு உன்மேல உயிரா இருந்தாளாம். அதே மாதிரி நீயும் அவள்மேல உயிரா இருந்தாயாம். அப்புறம் ஒருநாள் அவள் உன்னிடம் சொல்லிக்காம எங்கேயோ படிக்கப் போனதும் உனக்கு ரொம்ப ஏமாற்றமாய்ட்டதாம். யு ஸ்டில் மிஸ் ஹர், இல்ல?"

"இதபார் கௌசி, உனக்கு நான் சில விஷயங்களைத் தெளிவுபடுத்தறது நல்லதுன்னு நினைக்கிறேன்."

"சொல்லு. ஐம் ஆல் இயர்ஸ்."

"ஒவ்வொரு ஆணும் தன் இளமைப் பருவத்தில் இருந்தே ஒரு பெண்ணைப் பற்றி நினக்கத் தொடங்கிவிடுகிறான். இது ஒவ்வொரு பெண்ணுக்கும் பொருந்தும். உனக்கு உன் பள்ளிப் பருவத்தில் யாரும் தோழர்கள் இருந்தது இல்லையா, அவர்களுடன் நீ மனம்விட்டுப் பழகினது இல்லையா?"

"இல்லைனு சொல்லமுடியாது."

"அப்புறம்? நீ இப்ப அவர்களைப் பிரிந்து வருந்தறேன்னு நான் சொல்லலாமா?"

"நோ. ஐ டோன்ட் மிஸ் எனி ஆஃப் தெம். இதெல்லாம் அந்தந்தக் காலகட்டத்தில தோன்றி மறையும் அன்பு, ராஜா."

"சரியாச் சொன்னே. அந்த வகையில்தான் நான் அனுவை விரும்பினேன். காதலிச்சேன்னுகூட சொல்லலாம். ஆனால் அவள் என்னை அதேபோல் விரும்பினாளான்னு கேட்டாத் தெரியாது."

"So, you loved her and are now pining for her."

"கதைகள்ல வர்ற மாதிரி இதை அவ்ளோ சுலபமா சொல்லிவிட முடியாது, கௌசி. இன்னும் கொஞ்சம் விளக்கமா நான் உனக்குச் சொன்னா இதை நீ சரியான கோணத்தில் புரிஞ்சுப்பேன்னு நினைக்கறேன்."

"சொல்லு."

"உன்னைப் பொறுத்தவரைக்கும் உங்க பெற்றோரோட குறிக்கோள் என்ன? உன்னை அருமையா வளர்த்து நல்லாப் படிக்கவைத்து ஒரு நல்ல மாப்பிள்ளையிடம் ஒப்படைக்கணும், இல்லையா? அதுபோல என்னைப் பற்றியும் என்னோட பெற்றோர் நினைப்பார்கள் இல்லையா?"

கன்னத்தில் கையை முட்டுக் கொடுத்துக்கொண்டு கண்களில் கனல் தெரிய அவள் தலையாட்டியபோது மிக அழகாகத் தோன்றினாள். கோபத்தில் மேலும் விளங்கித் தெரியும் அவள் அழகை இப்போதுதான் பார்க்கிறான்.

"சரி. இப்ப ஒரு படி மேலே போ. உனக்கே அந்த குறிக்கோள் இருந்ததுன்னா? என்ன செய்வே? உன்னோட வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சந்திக்கும் ஆண்களை எடைபோட்டு அவர்களில் யாராவது உனக்குப் பொருத்தமான்னு நினைச்சுப் பார்க்கமாட்டே? ஒரு முடிவுக்கு வர அவர்களைப் பற்றி நிறையத் தெரிஞ்சுக்க ஆசைப்படமாட்டே? அவர்களோட பழகிப் பார்த்தால் அது முடியும்னா அந்த வழியில் முயற்சி செய்யமாட்டே?"

"Thought provoking."

"என்னைப் பொறுத்தவரைக்கும் அந்த எய்ம் எப்படியோ எனக்குச் சின்ன வயசிலேர்ந்தே இருந்தது கௌசி. சொன்னா உனக்குப் புரியுமோ என்னவோ? அனுவை முதன்முதலா நான் அந்த எலிமென்டரி ஸ்கூல் க்ளாஸ்க்ல பார்த்த உடனே என் மனசில என்ன தோணியது தெரியுமா? ’கல்யாணம் பண்ணிண்டா நான் இவளைத்தான் பண்ணிக்கணும்’னு~ அவ்ளோ அழகா இருந்தா அவ!"

"சுவாரஸ்யமா இருக்கு. கொஞ்சம் அசாதாரணமாயும் தெரியுது."

"Therefore, I began to adore her", என்று தொடங்கி அனுவைப் பற்றிய நிகழ்ச்சிகள், அவன் அனுபவங்கள் எல்லாவற்றையும் அவளிடம் விவரித்தான், அந்தக் கடிதம் தவிர. அடுத்து ஜெயந்தியைப் பற்றியும் மாலதியைப் பற்றியும் சொன்னான். அத்துடன் அவனுடைய குடும்பப் பின்னணி பற்றியும் விளக்கினான். மாலதியைப் பற்றிச் சொன்னபோது "தெரியும்" என்றாள்.

"அவள்ட்ட நான் கேட்டபோது வசந்தியைத் தெரியாதுன்னு சொன்னாளே?"

"மாலதி B section. A section நானும் வசந்தியும். அந்த சமயத்தில் எங்களுக்குள் அறிமுகம் இல்லை."

"BhAskar loves her sincerely."

"நல்ல பொண்ணு. யார் வம்புக்கும் போகமாட்டா. First in the class. மொத்தமே அவளுக்கு எங்களை மாதிரி அக்கறையாப் படிக்கற நாலைந்து தோழிகள்தான். தன் தோழிகள்கிட்ட உயிராப் பழகுவா. போலித்தனம் கிடையாது. BhAskar would be lucky if he gets her."

அவன்தன் மனம்திறந்த
வார்த்தைகளின் வெள்ளப் பெருக்கில்
அவள்விழிகளின் கோபக்கனல் அழிந்து
அவர்களிடையே மௌனம் திரையாக விழுந்தது.

சிலநிமிடங்களில் அவளொரு தீர்மானத்துடன்
அந்த மௌனத்தை விலக்கி
உண்மையை எதிர்கொண்டபோது
அவர்களிடையே தூரம் அதிகமாகிவிட்டது தெரிந்தது.


"கல்யாணம் சம்பந்தப்பட்ட உன்னுடைய கணிப்பில் நான் எந்த இடத்தில் இருக்கேன், ராஜா?"
தயங்கினான்.

எவ்வளவு எளிதாகக் கேட்டுவிட்டாள்!
அவள்தன் மனதில் காதல் என்று
நினைத்துப் போற்றி வந்தது
அவனைப் பொறுத்தவரை வெறும் தேடல்,

அதுவும் அந்தத் தேடல்
அவளுடன் முடிந்துவிடும் என்ற
உத்திரவாதம் இல்லை
என்னும் உண்மையை

அவனுக்கு முன்னரேஅவள்
இனம் கண்டுகொண்டது புரிந்துபோக,
அவளுக்கு முன்தான் மிகவும்
சின்னவனாகி விட்டதை உணர்ந்தான்.


முன்பு ஒருமுறை அவளைப் பற்றி நினைத்துக்கொண்டது ஞாபகம் வந்தது.
நான் சந்தித்த பெண்களில் இவளைவிட அழகு அனு மட்டுமே. வெற்றி மேடையில் அனு முதல்படி என்றாள் இவள் இரண்டாவது.

"Come on, RAjA! Let's face it! நீ இதுவரைக்கும் சந்தித்து உனக்கு மனைவியாகத் தகுந்தவள்னு நினைச்சுப் பார்த்த பெண்களை வரிசைப் படுத்தச் சொன்னா, முதலில் அனு. அப்புறம் ஜெயந்தி, மாலதி. இப்போது நான். Anu is out of question now. மாலதியை நீ பாஸ்கருக்கு விட்டுக்கொடுக்கத் தயார். மீதி ஜெயந்தியும் நானும். So we have a fifty-fifty chance? That's not bad. கல்யாணம் என்பது இப்போதெல்லாம் ஆண்களின் சுயம்வரம் தானே?"

"நீ என்னை சரியாப் புரிஞ்சுக்கலை கௌசி. இதுவரை என்னுடைய காதல் ஒருதலைக் காதலாகவே இருந்து வந்திருக்கு கௌசி. மறுமுனையில் நான் அன்பை, நேசத்தை எதிர்பார்க்கலைதான். இப்பத்தான் முதல்முறையா I am at the receiving end. ஒருவேளை எனக்கு அந்தத் தகுதி இல்லையோ என்னவோ?"

சட்டென்று எழுந்து அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.
"God, I love you RAjA! நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது. அப்படி ஒரு சந்தர்ப்பம் நேர்ந்தா நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்."

அவன் தோள்களில் அவள் கண்ணீர் சுட்டது.

அவளது நீண்ட, மென்மையான விரல்களை வருடியபடியே சொன்னான். "எனக்கு இப்போதும் ஏதோ ஒரு பயம்தான் கௌசி. நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் உயிருக்கு உயிராக் காதலிக்கறோம். ஆனால் அது எவ்வளவு தூரம் வெற்றிபெறும்னு தெரியலை."

"ஏன், யார் நமக்குக் குறுக்கே இருக்கா?"

"உங்கப்பா, எங்கப்பா?"

"எங்கப்பா எனக்காக எதுவும் செய்வார்."

"போன சம்மர்ல நான் எங்க அப்பா அம்மாட்ட உனக்காக நிறைய வாதாடினேன். எங்கப்பாட்ட நான் அதுவரைக்கும் அதுமாதிரி பேசினதில்லை. அவர் என்ன சொல்றார் தெரியுமா? நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறதுல அவருக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அதுக்கு முன்னால உங்க மாமாவோட ஆட்டிட்யூட் மாறணும்னு தீர்மானமா சொல்லிட்டார்."

"உண்மையைச் சொல்லப் போனா எங்கப்பாவும் பிடிவாதக்காரர் தான். யாரவது ஒருபக்கம் விட்டுக்கொடுத்தாத் தேவலாம்."

"அப்புறம் அப்பா சொன்னதில் ஒரு பாயின்ட் இருக்கு கௌசி. நீ விரும்பறதால என்னை அவரோட மாப்பிள்ளையா ஏத்துக்கறதா மாமா நினைச்சார்னா அது சரியில்லை. அவர் என்னை எனக்காக ஏத்துக்கணும்."

"நிச்சயமா."

"நீயும் நானும் இணைவதில் நம் குடும்பங்கள் இன்னமும் பிரிஞ்சிரக் கூடாது கௌசி."

"கரெக்டா சொன்னே. நீயோ நானோ குடும்பத்தை விட்டுத் தனியா வாழ முடியாது. கூடாது."

"நான் உங்கப்பாட்ட பேசிப் பார்க்கறேன் கௌசி."

*** *** ***
 
Last edited:
24

கண்ணும் கருத்தும் எனக்கொண்டு -- அன்பு
கசிந்து கசிந்து கசிந்துருகி -- நான்
பண்ணும் பூசனை கள்*எல்லாம் -- வெறும்
பாலை வனத்தில் இட்ட நீரோ -- உனக்
கெண்ணுஞ் சிந்தை யொன்றிலையோ?
---மஹாகவி பாரதியார், யோகசித்தி 1


ஜெயந்தியுடன் நிறையப் பேசவேண்டும், பேசி அவள் விருப்பு வெறுப்புகளை, ஆசைகளை, திறமைகளை, எதிர்காலத் திட்டங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற அவன் ஆசைகள் அவ்வளவு எளிதாக நிறைவேறவில்லை.

எத்தனையோ சந்தர்ப்பங்களில் அவன் அவளைப் பார்க்க நேரிட்டபோதும் சந்திக்க நேரிட்டபோதும் வசந்தியோ கௌசல்யாவோ எப்போதும் கூடவே இருந்ததனால் அவனால் சம்பிரதாயமாகப் பேசிக்கொள்வதைத் தவிர வேறொன்றும் தெரிந்துகொள்ள முடியாமல் போயிற்று.

எத்தனை சந்தர்பங்கள்!

தொடர்த்ச்சியாகப் பல வாரங்கள் கௌசல்யாவின் வீட்டில் சந்தித்தபோது அவள் என்னதான் கலகலப்பாகவும் உற்சாகமாகவும் இருந்தாலும் அவனுடன் தான் ஒரு ஜூனியர் மாணவி என்கிற உணர்வோடுதான் பழகுவதாகத் தோன்றியது.

வந்த புதிதில் வசந்தியும் கௌசியும் அவளுக்குத் தீவிரமாக டேபிள் டென்னிஸ் பயிற்சி அளித்து, கொஞ்ச நாளில் நான்கு பேரும் ’டபிள்ஸ்’ விளையாடத் தொடங்கியபோது, எப்போதும் ஜெயந்தி அவனுடைய பார்ட்னராக அவர்களால் ஒருமனதாக அனுப்பப்பட்டாள்.

"வசந்தி, ராஜா டீ.டில எக்ஸ்பர்ட். அதனால் அவனுக்கு ஜெயந்திதான் பார்ட்னர், என்ன?"

ஜெயந்தி மெல்லிய புன்முறுவலுடன் விழிகளில் வெட்கத்தைத் தவழவிட்டு அவனுடன் சேர்ந்துகொள்வதை ரசித்தவாறே அவன் அவளை வரவேற்று சொல்லிக்கொடுத்து விளையாடி ஒவ்வொரு முறையும் தோற்றாலும் அதிலும் ஒரு மகிழ்ச்சி தலைதூக்கும்.

"சாரி சார், என்னால் இதுக்கு மேல ஆட முடியலை!"

"கவலைப் படாதே, வி வில் மேக் இட். ஒரு சின்ன வேண்டுகோள்."

என்ன என்ற பார்வை.

"நீ என்னை சார்னு கூப்பிடறதை ஜீரணிக்க முடியலை. நான் என்ன அவ்வளவு வயசானவனாத் தெரியறேனா?"

"ஓ நோ!..." கண்கள் தாழக் கன்னங்களில் குறுகுறுப்பு.

"அப்புறம்? நான் உன் நண்பன் ஜெயந்தி. யு தோன்ட் மைன்ட், ஐ ஹோப்?"

மெல்லிய திடுக்கிடலில் தலையாட்டல்.

"லுக், உனக்குக் கௌசல்யாவும் வசந்தியும் எவ்வளவுதூரம் நண்பர்களோ, அந்த மாதிரி என்னையும் உன் நண்பனா நினைச்சுக்கோ. நான்வந்து, வசந்தியைவிடச் சின்னவன், கௌசியைவிடப் பெரியவன். என்னை ராஜான்னே நீ கூப்பிடலாம், சரியா?"

மறுபடியும் கன்னங்கள் குறுகுறுக்க, விழிகள் வெட்கத்துடன் நோக்க, மெல்லிய குரலில் "சரி" என்றாள்.

"சரி ராஜான்னு சொல்லு!"

"...சரி ராஜா!"

"அதுதான் நல்லது. நாளைக்குப் பார், நாமதான் ஜெயிக்கறோம்."

சொல்லிவைத்தவாறே மறுநாள் அவர்கள் முழுமூச்சுடன் விளையாடி வசந்தி-கௌசல்யா ஜோடியை ஒரு ஐந்து நிரல் ஆட்டத்தில் வென்றுவிட, அதன்பின் ஜெயந்தி அவனுடன் ஆடிய ஒற்றையர் ஆட்டங்களில் அவள் திறமை விரைவில் வளர்ந்து, தொடர்ச்சியாக அவர்கள் வசந்தி-கௌசியை வெல்ல, அந்த ஜோடி பிரிக்கப்பட்டது.

ஞாயிற்றுக் கிழமைகளில் ஜெயந்தி அனைவருடனும் சேர்ந்து ஜனரஞ்சகமான ஹிந்தி, தமிழ் சினிமாப் பாட்டுகளைக் கேட்பதிலும், சமீபத்திய நல்ல படங்களைப் பார்ப்பதிலும், தோட்டத்தை வலம் வருவதிலும், ஓவியங்களை ரசிப்பதிலும், மற்ற மகளிர் நுண்கலைகளிலும் ஆர்வம் காட்டியபோது அவளுடைய சுவைகளை ஒருவாறு தெரிந்துகொள்ள முடிந்தது.

இலக்கியத்தில் அவளுக்கு அவன் எதிர்பார்த்த அளவு ஆர்வம் இல்லை. தனக்கு அவ்வளவு தூரம் கவிதை கட்டுரைகளில் ஈடுபாடு கிடையாது என்றும், ஆனால் கதைகள், நாவல்கள் படிக்கும் வழக்கம் உண்டு என்றும் ஒரு ஞாயிற்றுக்கிழமை அவர்கள் எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டபோது கூறினாள்.

"என்ன தமிழ்வாணன் நாவல்களா?"

விழிகளில் நாணம் வழியப் பொய்க்கோபம் காட்டினாள். வசந்தி அந்த சப்ஜெக்டைத் தொடர அவன் உதட்டைக் கடித்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

"என்ன நீ அடிக்கடி அவள்ட்ட தமிழ்வாணன் நாவல்களான்னு கேக்கறே? வாட்’ஸ் ஆல் திஸ் அபௌட்?"

அவன் குறும்புடன் "அவளையே கேளேன்", என்றான்.

"என்னடி ஜெயந்தி? என்ன விஷயம்?"

"எதா இருந்தாலும் சொல்லிடு", என்றாள் கௌசல்யா. "ஐ ஸ்மெல் சம்திங் ஃபிஷ்ஷி."

ஜெயந்தி தயக்கத்துடன் அந்த நூலகச் சந்திப்பைப் பற்றிக் கூறியதும், வசந்தியும் கௌசல்யாவும் அவனை வியப்புடன் பார்த்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் பளிச்சிட்டன.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்தான் கௌசல்யா அவனிடம் ஜெயந்தியைப் பற்றியும் அனுவைப் பற்றியும் விவரங்கள் கேட்டு அவனை மலைக்கவைத்தாள்.

ஜெயந்தியுடன் ஏற்பட்ட இந்த அரைகுறைத் தோழமையின் காரணமாக அவள் அவன் மனதையும் நினைவுகளையும் நீண்ட நாள் ஆக்கிரமித்துக் கொள்ள, அவளைப் பார்க்க நேரிட்ட ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அவன் ஒரு தேனீயின் கவனத்துடன் சேகரித்து தனது டைரியில் தொகுத்திருக்க, இப்போது படிக்கும்போது இனித்தது.

ஒருநாள் காலை அவனும் வசந்தியும் ப்ரின்ஸிபால் அறைக்குமுன் நின்று பேசிக்கொண்டிருந்தபோது அவள் திடீரென்று மாடிப்படிகளில் தோன்றி அவனது அந்தநேர வருகைக்கு வியப்புக் காட்டி, "குட் மார்னிங்!" என்று தன் தோழிகளுக்குமுன் சொன்னபோது பெருமையாக இருந்தது.

ஒரு வார நாளில் அவன் வசந்தியைப் பார்க்கப் போயிருந்தபோது மழை பிடித்துக்கொள்ள, ஜெயந்தி தன் அறைக்கு ஓடி அவள் குடையை எடுத்துவந்து இரவல் கொடுத்ததும், அவன் மறுநாள் மாலை ஹாஸ்டலுக்கு வந்து அவளுக்குச் சொல்லி அனுப்பிக் காத்திருந்து (வசந்தி கல்லூரியில் நடந்த ஒரு இலக்கியக் கூட்டத்துக்குப் போயிருந்தாள்), அவள் வந்ததும் நன்றிகூறிக் குடையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு அவளுடன் அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தபோது சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது.

விடுமுறை நாட்களில் அவனும் வசந்தியும் ஜெயந்தியும் ஒன்றாக ஊருக்குப் பயணம் மேற்கொண்ட போதெல்லாம் ஒவ்வொரு முறையும் அவன் பேருந்தில் அவர்களுக்கு நடுவில் உட்கார நினைத்து முடியாமல் போனபோது, கோபம் மெலிதாத் தலைதூக்கி வசந்தியை மானசீகமாகக் கடிந்துகொள்ள வைத்தது.

விடுமுறை நாட்களில் ஊரில் அவன் வழக்கம்போல் தினமும் மாலை ஜெயந்தியின் அப்பாவைக் கோவிலில் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தபோது அவள் ஒன்றும் தெரியாதவள் போல எதிர் வரிசையில் நின்றுகொண்டு அடிக்கடி ஓரக் கண்ணால் அவர்களைப் பார்த்தபோது அந்த feined innocence---அவன் டைரியின் பிரயோகம்---அவனுக்கு வேடிக்கையாக இருந்தது.
 
தன்பின் ஒருநாள் கௌசல்யா அவனிடம் அனுவைப் பற்றிக் கேட்டதும் அவனுக்கு வசந்தியின் மேல் ஏற்பட்ட கோபம் அவளை ஒருநாள் தனியாகச் சந்தித்தபோது வார்த்தைகளாக வெடித்தது.

"வசந்தி, உன்மேல் எனக்கு எக்கச்சக்க கோபம்."

"ஏன்?"

"உனக்கே தெரியும்."

அவள் புரியாமல் விழித்ததில் கடுப்பானான்.

"செய்யறதையும் செஞ்சிட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்கிறே, இல்லை? உன்னை யார் கௌசிகிட்ட அனு, ஜெயந்தியைப் பற்றிச் சொல்லச் சொன்னா?"

"ஏன், சொன்னதில் என்ன தப்பு?"

"என்ன தப்பா? என்னைப் பத்தி சரியாத் தெரிஞ்சுக்காம, என் நடவடிக்கைகளில் உனக்குத் தெரிஞ்சதை வைத்து, ஒரு இங்கிதமாக்கூட என்னோட ஆலோசனையைக் கேக்காம, என்னை அனு, ஜெயந்தியோட இணைத்து கௌசல்யாட்ட சொல்றதுக்கு உனக்கு என்ன உரிமை இருக்குன்னு நினைச்சுப் பார்த்தியா?"

"நான் அவள்கிட்ட எதுவும் தப்பாச் சொல்லலையே?"

"என்ன தப்பாச் சொல்லலை? உபகாரம் பண்ணாட்டாலும் உபத்திரவம் பண்ணமாட்டேன்னு நினைச்சேன்."

"இப்ப நான் என்ன உபத்திரவம் பண்ணிட்டேன் ராஜா? என்ன வாய் நீளுது?"

"What the hell you think you are! நான் கௌசல்யாவைக் காதலிக்கிறேன்னு உனக்குத் தெரியும். எனக்கு எதிரா நீ சதி செய்ய நினைக்கறே இல்லை? என் விஷயத்தில் தலையிட உனக்கு என்ன உரிமை இருக்குன்னு நான் தெரிஞ்சுக்கலாமா? அல்லது நீ எங்கப்பாம்மாவோட ஸீக்ரட் ஏஜன்டா?"

"அவசரப்படாதே ராஜா. Come on, let's sit and talk."

அவள் பதிலில் கொஞ்சம் திருப்தி அடைந்து அவன் அவளை ஒரு ஆட்டுக்குட்டியைப் போல் பின்தொடர்ந்து, இருவரும் தனியாகச் சென்று ஓர் இடத்தில் அமர்ந்ததும் வசந்தி நிதானமாகத் தொடங்கினாள்.

"ராஜா, நானே உன்னிடம் சில விஷயங்களை மனம்விட்டுப் பேச நினைச்சேன். நல்ல வேளையா இன்னிக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைச்சுது."

அவன் கண்களில் கனல் மீதமிருக்க, கால் விரல்கள் தரையைக் கீற, அவனைக் கருணையுடன் பார்த்தபடியே அவள் தொடர்ந்தபோது குரல் மென்மையாகப் பாசத்துடன் வெளிவந்தது.

"கௌசல்யா விஷயத்தில் நீ ரொம்ப அவசரம் காட்டறே ராஜா. அவ்வளவு தீவிரமாக யாரையும் காதலிக்க முற்படக் கூடாது, விளைவுகளை சரியா ஆராயாம. ஒருவேளை உன் முயற்சி வெற்றி பெறலைன்னா என்ன பண்ணுவே?"

"நீ ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கணும் வசந்தி. நான் கௌசல்யாவைக் காதலிக்கறதைவிட அவள் என்னை அதிகமா காதலிக்கறா. தவிர, அவளைவிடப் பொருத்தமா எனக்கு வேற யாரும் கிடைக்கமாட்டா."

"நீயும் கௌசியும் இணைய முடிஞ்-சா, என்னைவிட சந்தோஷப்படறவா யாரும் இருக்கமுடியாது. ஒருவேளை அது நடக்காமல் போயிடுத்துன்னா அவள் எவ்வளவு தூரம் மனசு ஒடிஞ்சு போயிடுவா தெரியுமா?"

"நீ சொல்றது தப்பு. கௌசல்யா அப்படி ஒண்ணும் சென்டிமென்டல் டைப் இல்லை."

"அங்கதான் நீ தப்பு பண்றே. என்ன இருந்தாலும் அவள் ஒரு பெண். காதல் என்பது வயது, அறிவு, சூழ்நிலை எல்லாத்தையும் கடந்த உணர்ச்சி. அது பெண்களுக்கு ஆண்களைவிட அதிகம், once they are committed. கௌசல்யாவால ஓர் ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது."

"அவள் ஏன் ஏமாறணும்? நான் அவளைக் கைவிட்டு விடுவேன்னு நினைக்கறயா?"

"நிச்சயமா மாட்டே, அது உன்கையில் இருந்தால். போன சம்மர்ல நீ விவாதித்ததை எல்லாம் பெரியம்மா என்கிட்ட விவரமாச் சொன்னா. கௌசல்யா உன்னை விரும்பறாங்கறதுக்காக மாமா விட்டுக்கொடுத்தாலும், நீ அவளை விரும்பறேங்கறதுக்காக உங்கப்பா விட்டுக்கொடுக்க மாட்டார். அவருக்கு வேணுங்கறதெல்லாம் மாமாவோட போக்கு முழுவதும் மாறணும்."

"நான் மாமி, கௌசிகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன். மாமாட்டயும் பேசப் போறேன்."

"அதுக்கு அவசியம் இல்லை."

"ஏன்?"

"மாமா ஏற்கனவே தன் கருத்தை வெளிப்படையாச் சொல்லிட்டார்."

"எப்போ? என்ன சொன்னார்?"

"போன மாசம் ஒரு ஞாயிற்றுக் கிழமை. நீயும் பாஸ்கரும் ஊர்ல இல்லாதபோது. மாமி அவர்ட்ட எல்லா விஷயங்களையும் சொல்லி இதுக்கு ஒரு வழி பண்ணுங்கோன்னு கேட்டிருப்பா போலிருக்கு. நான் மத்யானம் அவாளோட சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது மாமா இந்த விஷயத்தை திடீர்னு ஆரம்பிச்சு, தீர்மானமா தன் கருத்தைச் சொல்லிட்டார்."

"என்ன சொன்னார், சொல்லேன்?"

"என்ன சொன்னார் தெரியுமா? ’பெரியக்காவும் அத்திம்பேரும் ஏதோ நான்தான் தப்பு பண்ணிட்டாதாகவும் அவாமேல ஒண்ணுமே தப்பில்லாத மாதிரியும் இன்னமும் குதிச்சுண்டிருக்கா. நான் அவா வீட்டைவிட்டு ஓடி வந்துட்டேனாம், அதனால நான்தான் அவா கால்ல விழுந்து மன்னிப்புக் கேக்கணுமாம். அவர் அன்னிக்குக் கோபத்தோட ’கெட் அவுட்!’னு கத்தினாரே, அதுக்கு யார் மன்னிப்புக் கேக்கறது? இதபார் லக்ஷ்மி, கௌசல்யா ஆசைப்படறாங்கறதுக்காக அவளுக்கு நாம் ராஜாவைப் பாக்கறோம். சும்மாச் சொல்லப்டாது, அவன் ரொம்ப நல்ல பையன், பொருத்தமானவன்தான். அதுக்காக அவனோட அப்பா அம்மா நம்மளைக் கண்டபடி பேசறதை நாம கேட்டுக்கணும்னு தலையெழுத்து இல்லையே? அவனுக்கு உண்மையில் கௌசல்யாமேல ஈடுபாடு இருந்தா, இங்க வந்திடட்டும், நாம பாத்துக்கறோம். அல்லது அவனோட பெற்றோரை வழிக்குக் கொண்டுவரது அவன் பொறுப்பு.’ போதுமா?"

"அப்ப, மாமா கௌசல்யாவுக்காகத்தான் என்னை ஏத்துக்கறார்னு ஆறது."

"ஆமாம். தவிர, மாமா இன்னொண்ணு சொன்னார். ’அப்படி ஒருவேளை கௌசல்யாவுக்கு ராஜா அமையலைன்னா குடிமுழுகியா போயிடும்? எம் பொண்ணுக்கு இதைவிடத் தகுந்த இடத்தில எனக்குப் பண்ணிக்கொடுக்கத் தெரியும். என்னோட முயற்சிகளில் நான் இதுவரை தோற்றதில்லை.’"

"கௌசல்யா இதுக்கு என்ன சொல்றா?"

"அன்னிக்கு அவள் ஆத்துல இல்லை. அதனால அவளுக்கு இன்னும் விஷயம் தெரியாதுன்னு நினைக்கிறேன். தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவா."

கொஞ்சம் மௌனமாக யோசித்தான்.

"கௌசல்யாவோட மனச் சுமையைக் குறைத்து அவள் ஒரு நடக்கத்தக்க ஏமாற்றத்தை எளிதாக எடுத்துக்கொள்ள அவளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பக்குவப் படுத்தணும்ணுதான் நான் அவள்ட்ட அனு, ஜெயந்தி பத்தி சொன்னேன். நீ அவா ரெண்டு பேரையும் ஒரு காலகட்டத்தில விரும்பினே--ஒருவேளை இப்போதுகூட விரும்பறேன்னு--எனக்கு நீயே மறைமுகமா இன்டிகேட் பண்ணியிருக்கே. எனக்கு வேறு விதமான நோக்கங்கள் கிடையாது. I know you are romantically inclined right from your boyhood. And I am ready to help you with what I can. If only you would ask me."

"I am extremely sorry for that rush of anger வசந்திம்மா. அதுக்காக நான் உன்கிட்ட மன்னிப்புக் கேட்கறேன்", என்று அவள் கைகளைப் பிடித்துக்கொண்டான்.

"மன்னிப்புங்கறது பெரிய வார்த்தை. உன் கோபம் நியாயமானதே. நானும் உன்னைக் கேட்டிருக்கலாம்."

"ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? நான் கௌசிட்ட அனு, ஜெயந்தி, மாலதி பற்றிய என்னுடைய இன்வால்வ்மென்ட் முழுக்கச் சொல்லிட்டேன். She has taken it in the right spirit. இப்பதான் அவள் என்னை முன்னைவிடத் தீவிரமாக் காதலிக்கறா!"

"யார் மாலதி? எங்க க்ளாஸ்மேட் மாலதின்னு ஒரு பொண்ணு B section-ல இருக்கா. அவளா?"

"அவளேதான். கௌசியும் தெரியும்னு சொன்னா. BhAskar is mad after her. நானும் அவனுக்கு விட்டுக் கொடுக்கறதாத் தீர்மானம் பண்ணிட்டேன்."

"என்கிட்ட நீ இதுவரை ஒண்ணுமே சொல்லலையே?"

"உனக்கு அவகாசம் இருந்தா இப்பவே சொல்லிடறேன் வசந்தி. எப்படியோ நீயும் என்னைப் பத்தி சரியாத் தெரிஞ்சுண்டா சரிதான்", என்று தொடங்கி அனுவின் கடிதம் தவிர எல்லா விவரங்களையும் அவளிடம் சொன்னான். அத்துடன் இளவயது முதல் ஓர் ஆணும் பெண்ணும் ஒருவர் மற்றவரிடம் காணும் ஈடுபாட்டை முற்றிலும் புறக்கணிப்பது தவறு, வெவ்வேறு காலகட்டங்களில் தோன்றும் இந்த அன்பின் வெளியீடுகளை நெறிப்படுத்துவதன் மூலம் சீரான விவாகங்கள் நிகழ உதவமுடியும் என்ற அவன் கருத்துகளை விளக்கியபோது, வசந்தி சொன்ன ஒரு ’பாயின்ட்’ சிந்திக்கவைத்தது.

"என்னைப் பொறுத்தவரையில் கணவன்-மனைவிக்கு இடையே குறைந்தது மூன்று வருடமாவது வயது வித்தியாசம் இருக்கணும். அப்பதான் மனைவிக்குக் கணவன்மேல் மரியாதையும் பக்தியும் ஏற்பட வாய்ப்பு அதிகம்."

"உன் கருத்து எனக்கு உடன்பாடு இல்லை வசந்தி. எவ்வளவு வயது வித்தியாசம் இருந்தாலும் கணவனும் மனைவியும் நண்பர்கள் மாதிரிப் பழகறதுதான் விரும்பத்தக்கது. Your husband is more your friend than your master or god."

"கௌசல்யா விஷயத்தில் நீ இன்னும் தீவிரமா முயற்சி பண்ணி உங்கப்பாம்மா சம்மதத்தைப் பெறுவதுதான் உங்க ரெண்டுபேருக்குமே நல்லது."

"அதுக்கு நான் ஒரு வழி வெச்சிருக்கேன். அது ஒருவேளை என்னுடைய கடைசி முயற்சியாக்கூட இருக்கலாம்."

"என்ன வழி?"

"இந்த சம்மர்ல கௌசியை நம்மாத்துக்குக் கூட்டிண்டு போகப் போறேன். அப்பாவும் அம்மாவும் அவளுடன் நேரடியாப் பழகி அவளைப் பற்றித் தெரிஞ்சுக்கட்டும். அப்போதாவது அவா மனசு மாறாதா பார்க்கலாம்."

"துவும் சரிதான்", என்று ஆமோதித்தாள். "அப்புறம் இன்னொரு விஷயம்."

"என்ன வசந்தி?"

"நீ ஜெயந்தியோட பழகறது உங்கம்மாவுக்குப் பிடிக்கலை."

அசந்துபோனான். "அம்மாவுக்கு எப்படித் தெரிஞ்சது?"

"நிஜமா நான் சொல்லலை. அம்மாவே ஒருநாள் கேட்டா. நீ அடிக்கடி அவளைக் கோவில்ல பார்க்கறதை வெச்சு முடிவு கட்டியிருப்பான்னு நினைக்கறேன்."

"என்ன கேட்டா அம்மா?"

"அம்மா என்னைக் கேட்டா, ’ராஜா அந்தப் பொண்ணோட பழகறானா’ன்னு. ’எனக்குத் தெரியாது பெரியம்மா’ன்னு சொன்னேன். ’ரெண்டு பேரும் ஒரே காலேஜ்ல படிக்கறேள், தெரியாதுங்கறயே? அவன் உன்னைப் பார்க்க வரும்போது அவளைப் பார்க்கறதுண்டா?’ என்று கேட்டா. நான், ’இதெல்லாம் சகஜம் பெரியம்மா. எல்லோரும் வாரா வாரம் கௌசி வீட்ல சந்திப்போம். மற்றப்படி வேற ஒண்ணுமில்லை’னு சொன்னேன்."

"அதுக்கு அம்மா என்ன சொன்னா?"

"ஜெயந்திக்கு யாரோ சொந்தத்தில் பையன் இருக்கானாம். தவிர, அவா பெரிய பணக்காராளாம். தூத்துக்குடில சொந்த வீடு, நிலம்லாம் இருக்காம். ’நாம ஏன் அனாவசியமா அவா விஷயத்தில தலையிடணும்? அவனை இந்த மாதிரி விஷயத்தில ரொம்ப ஜாக்கரதையா இருக்கச் சொல்லு. நீ சொன்னாக் கேப்பான். நாளைக்கு ஏதாவது ரசாபாசமா ஆய்டக்கூடாது’ன்னா."

மிகவும் முன்னேற்பாடுடன் பிரயாசைப்பட்டு மலை ஏறும் ஒருவனுக்குக் கால் இடறிப் பல அடிகள் சறுக்கியதுபோல் உணர்ந்தான். கொஞ்சநேரக் குழப்பத்துக்குப் பின் வார்த்தைகள் ஜாக்கிரதையாக வெளிவந்தன.

"எனக்கு நீ ஒரு உதவி செய்யணும் வசந்தி."

"ஜெயந்தியைப் பத்தி விசாரிச்சுச் சொல்லணும், இல்லையா?"

"தட்ஸ் ரைட். அப்பதான் நான் ஒரு முடிவுக்கு வர முடியும்."

"முயற்சி செய்கிறேன்."

*** *** ***
 
25

சாத்திரம்---(அதாவது, மதியிலே தழுவிய
கொள்கை, கருத்து, குளிந்திடு நோக்கம்)---
ஈங்கிதில் கலக்க மெய்திடுமாயின்
மற்றதன் பின்னர் மருந்தொன் றில்லை.
---மஹாகவி பாரதியார், தமிழ்ச் சாதி 69


ரு தேர்ந்த பத்திரிகை நிருபரைப் போல வசந்தி விரைவிலேயே அவன் கேட்ட விவரங்களை சேகரித்துக் கொடுத்தாள்.

"ராஜா, ஒரு சுவாரஸ்யமான செய்தி."

"சீக்கிரம் சொல்லு!"

"நீ கேட்ட விவரங்கள் சேகரிச்சிட்டேன்."

"நினைச்சேன். மேலே சொல்லு."

"ஜெயந்திக்கு இப்போ வயது பதினேழு, பிறந்த தேதி சொல்லமாட்டேன்! அப்பா பெயர் கிருஷ்ணமூர்த்தி, வயது 49. அம்மா பெயர் மங்களா, வயது உனக்கு அவசியமில்லை! பூர்வீகம், அப்பாவுக்குத் தஞ்சாவூர், அம்மாவுக்குத் திருநெல்வேலி. செட்டிலானது தூத்துக்குடியில. அங்கே அவாளுக்குக் கொஞ்சம் நிலமும் பெரிய வீடும் இருக்கு. இன்றைய நிலவரப்படி சுமார் அஞ்சு லகரம் தேறும். அப்பா ரொம்ப நாளா ஸ்கூல் வாத்தியார் வேலைல இருக்கார். கொஞ்ச நாள்தான் நம்ம ஊர்ல இருப்பார் போலிருக்கு. என்ன முகத்தில் ஈயாடலை?"

"ஏய், மேலே சொல்லேன்."

"ரைட். இதான் உனக்கு முக்கியமான விஷயம். ஜெயந்திக்கு ஒரு அத்தை பையன் இருக்கான். கிட்டத்தட்ட உன் வயசாம். மெட்ராஸ்ல பி.காம். படிக்கறான், மூணாவது வருஷம். பார்க்க ஸ்மார்ட்டா இருப்பான்னு ஜெயந்தி சொல்லக் கேள்வி."

"அப்ப அவ்ளோதான்!"

"அவசரப்படாதே! இன்னொரு விஷயம் இருக்கு."

"அதையும் சொல்லிடேன்."

"ஜெயந்திக்கு அந்தப் பையனை அவ்வளவாப் பிடிக்காதாம்."

"ஏன்?"

"அந்தப் பையன் அப்படியே அவன் அம்மாவை உரிச்சு வெச்சிருக்கானாம், குணத்தில."

"அதில் என்ன தப்பு?"

"அவன் அம்மா மஹா முன்கோபியாம். ஆத்துல சதா சண்டையாம்."

மெலிதாக விசிலடித்தான்.

"இது ரொம்பத் தப்பு. பெண்கள் கல்லூரியில் வந்து விசிலா அடிக்கறே?"

"ஐம் சாரி வசந்திம்மா. கோவிச்சுக்காதே. உன்னைவிட்டா எனக்கு யார் உதவி செய்வா?"

"உடனே றெக்கை முளச்சிடுமே? நான் சொல்ல வந்ததை இன்னும் சொல்லி முடிக்கலை."

"ஐயையோ! இன்னும் என்ன?"

"ஜெயந்தியோட அப்பா அவளுக்கு அந்தப் பையனைத்தான் கட்டிவெப்பேன்னு ஒத்தக்கால நிக்கறாராம்."

"போச்சுடா! என்னால இரண்டு வருங்கால மாமனாரை வழிக்குக் கொண்டுவர முடியாதும்மா."

"இருந்தாலும் ஜெயா ஒரு நல்ல பொண்ணு. உன்மேல் அவளுக்குத் தனி மரியாதை."

"உனக்குக் கிண்டலா இருக்கு."

"உண்மையைத்தான் சொல்றேன். உன்னைப்பற்றி அவள்கிட்ட மெதுவாக் கேட்டேன்."

"என்ன சொன்னாளோ?"

"நீ ரொம்ப ஸ்மார்ட்டாம். தங்கமான குணமாம். ஆழ்ந்த அறிவாம். சோஷலா பழகறையாம். மொத்தத்தில கௌசல்யாவுக்கு ஐடியல் மேச்சாம்."

"போச்சுடா!"

"மிஸ் எம்மா ஓடவுஸ் மிஸ்டர் எல்டனைப் பத்திச் சொன்ன மாதிரி இல்லை?"

"அப்ப நான் எல்டன்ங்கறே? என்னைப் பத்தி நான் மிஸ்டர் நைட்லினுல நினைச்சிண்டிருக்கேன்."

அவன் நினைவில் அனுவும் அவள் கடிதமும் அதற்கு டைரியில் எழுதியிருந அவன் ரியாக்*ஷனும் பளிச்சிட்டு மறைந்தன.
"Brother and sister! No, indeed!"

"என்ன யோஜனை? மறுபடியும் அனுவா?"

திடுக்கிட்டான். "எப்படித் தெரியும்?"

"தெரியும்."

"வசந்தி, எனக்கு ஒரு உதவி---"

"சாரி ராஜா. அனு எங்கேயோ மதுரைல இருக்கா. அவள் தாத்தா பாட்டிகூட இப்ப நம்ம ஊர்ல இல்லை போலிருக்கு. Absolutely no source of information."

"பரவாயில்லை."

இருவரும் சிறிது நேரம் பேசவில்லை.

பின் அவன் தயக்க்த்துடன் நிதானமாகச் சொன்னான்.

"வசந்தி எனக்கு ஒரே ஒரு குறை."

"சொல்லு."

"நீ மட்டும் என்னோட சித்தி பொண்ணா இல்லாம இருந்தா---"

"ஓ!" கண்களில் வியப்புத் தோன்றப் பார்த்தாள். "அசடு மாதிரி பேசாதே."

"உண்மையைத்தான் சொல்றேன் வசந்தி. என்னை முழுவதும் புரிந்துகொண்டவள் நீ ஒருத்திதான். உன்னை எல்லோர்க்கும் பிடிக்கறது. அப்பா அம்மாகூட உன்மேல் உயிரா இருக்கா. இத்தனைக்கும் நீயும் கௌசல்யா மாதிரி ஒரு முற்போக்காவும் இருக்கே, அதே சமயத்தில சம்ப்ரதாயத்தையும் விட்டுக்கொடுக்கமாட்டே."

அவன் புகழுரைகளில் வசந்தி என்ன சொல்வதென்று ஒரு கணம் தோன்றாமல் நின்றாள்.

அவளை மேலும் தர்மசங்கடப் படுத்த விரும்பாமல் சொன்னான்:
"உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறவன் ரொம்பக் கொடுத்து வெச்சவன் வசந்தி."
 
கௌசல்யாவுடனும் வசந்தியுடனும் அவன் தன் மனதைப் பகிர்ந்துகொண்டதைத் தொடர்ந்து பாஸ்கரிடமும் விவரங்களைக் கூறமுற்பட்டு இருவரும் ஒருநாள் மாலை

கல்லணையின் சுவரில் சாய்ந்துகொண்டு
வெள்ளமாய்க் கீழே சுழித்துவரும்
காவிரி யாற்றின் பேரலைகளை
கல்லணையின் மதகுகள் தடுத்துச்
சின்னஞ்சிறு நீர்த்துளிகளாய் சலித்துக்
காற்றில் எறிய

முகத்தில் தெளித்த அந்தச்
சாரலின் சில்லிப்பில் சிலிர்த்துக்
கண்களை ஓட்டிய போது
ஓர்நீண்ட பனிப்படலம் போல
நீர்த்துளிகள் தெறித்துக் கிளம்பி
வானவில் வண்ணங்களில் காற்றில்
மறையும் அழகு


கண்நிறைக்க, அதை ரசித்தபடியே, நீண்ட நேரம் உரக்க விவாதித்தது இந்த வைகை எக்ஸ்ப்ரஸின் இரைச்சலை மீறி இப்போதும் காதில் ஒலித்தது.

"பாஸ்கர், எனக்கு உன்கிட்ட நிறையப் பேசணும்."

"எதைப் பத்தி?"

"என்னைப் பத்தி."

"உன்னைப் பத்தியா!"

"ஆமாம். என்னைப் பத்தி உன்னிடம் நிறைய விஷயங்கள் சொல்லணும்னு ரொம்ப நாளா எண்ணம்."

"எதுவானாலும் தயங்காமச் சொல் ராஜா. அந்தரங்க விஷயம் எதுவானாலும் சரி, நீ தயங்காம என்னிடம் நம்பிச் சொல்லலாம். உன் சம்மதம் இல்லாம யார்கிட்டயும் சொல்லமாட்டேன்."

"நாம ரெண்டுபேர்க்கும் ஒரே மாதிரி எண்ணங்கள், உணர்வுகள், பார்வைகள் இருக்கு, பாஸ்கர். மேலும் எந்த மாதிரியான சந்தர்ப்பத்திலும் நீ என்னைவிட விவேகமாக, எளிதாக, இயற்கையாக நடந்துக்கறே. சீக்கிரம் ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டு அலசி ஒரு முடிவுக்கு வந்துடறே. இந்த வகையில் பார்க்கும்போது, வாழ்க்கையில் எனக்கு நேர்ந்த நிகழ்ச்சிகளில் என்னோட இடத்தில் நீ இருந்திருந்தா எப்படி ரியாக்ட் பண்ணியிருப்பேன்னு நினைச்சுப் பார்க்கறபோது சுவாரஸ்யமாத்தான் இருக்கு. உதாரணமா, மாலதி விஷயத்தில் உன்னுடைய பார்வைகள், கருத்துக்கள், ஆலோசனைகள் எல்லாம் கொஞ்சம் முற்போக்காகவும் அதே சமயம் சாத்தியமாயும் இருக்கு. அதனால அவள் உனக்குத்தான் தகுதியானவள், எனக்கும் அதுல சந்தோஷம்தான். இந்த நிலைமைல எனக்கு உன்னோட உதவியும் ஆலோசனையும் தேவைப் படறது, பாஸ்கர்."

"உனக்கில்லாமல் வேறு யாருக்கு நான் உதவி செய்யப்போறேன், ராஜா? மாலதியைப் பொறுத்தவரையில் நான் இன்னும் ஒரு முடிவுக்கு வரலை. பிகாஸ், அவள் என்னை விரும்பறாளான்னு இதுவரை ஏதும் தெரிஞ்சுக்க முடியலை."

"ஏற்கனவே உன்கிட்ட சொன்னமாதிரி, நான் மாலதியை மறந்துட்டேன் பாஸ்கர். எனக்கு இப்போ இருக்கற சந்தர்ப்பங்கள் கௌசல்யா வடிவத்திலும் ஜெயந்தி வடிவத்திலும்தான் இருக்கு. அனுகூட ரிட்டன் ஆஃப்."

பாஸ்கர் மெலிதாக விசிலடித்தான்.

"லவ்லி நேம்ஸ்! கௌசல்யா, தெரியும். அவள் உன்மேல பைத்தியமா இருக்கா. ஜெயந்தி, அறிமுகம் இருக்கு. யார் அந்த அனு?"

"உணமையில் நான் உயிருக்கு உயிராகக் காதலித்த ஒரே பெண் அனுதான் பாஸ்கர். கௌசல்யா இப்ப என்னைக் காதலிக்கறதைவிடப் பலமடங்கு நான் அனுவைக் காதலிச்சேன். அதுவும் எந்த வயசில!"

அடுத்த அரைமணி நேரம் அவன் அனுவுடன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளின், நினைவுகளின் உரத்த சிந்தனையில் ஆழ்ந்துபோனான். அந்தக் கடிதம் பற்றிக் கூறியதும் பாஸ்கர் முகத்தில் மெல்லிய சோகம் படர்ந்தது. தொடர்ந்து கௌசல்யா, வசந்தியுடன் ஏற்பட்ட பிணக்குகள் பற்றியும் விவரித்து முடித்தபோது, அதுவரை ஒன்றும் பேசாமல் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்த பாஸ்கர் அவன் தோளில் கைவைத்தபடி சொன்னான்.

"ஒரு நல்ல ஆர்ட் ஃபில்ம் பார்த்த மாதிரி இருக்கு. இனிய, எளிய நிகழ்ச்சிகள். மெலிதான சோகம். ஆனால் இன்னும் எல்லாம் முடிந்துபோய் விடவில்லை. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கைத் துணை ஆக கௌசல்யா இருக்காளே?"

"என்னுடைய ஒரே நம்பிக்கை அவள்தான். இருந்தாலும் என்னால் அனுவை மறக்க முடியவில்லையே பாஸ்கர்!"

"உன் இழப்பு எனக்குப் புரியுது ராஜா. ஆனால் நீ அதற்குக் காரணமில்லை. You tried your best."

"எனக்கு எங்கப்பாம்மா மேலதான் கோபம். என்னய்யா, அஞ்சாறு வருஷத்துக்கு மேல எங்களோட ஒண்ணா இருந்து பழகியிருக்கா. எப்பப் பார்த்தாலும் எங்க வீட்லதான் இருப்பா. பார்க்கறதுக்கு ரொம்ப அழகா, புத்திசாலித்தனமா, துருதுருன்னு வளைய வருவா. அம்மாவுக்கும் அனுவை ரொம்பப் பிடிச்சிருந்தது. இப்படி இருக்கும்போது அவள் குடும்பத்தைப் பற்றித் தெரிஞ்சிக்க ஒரு க்யூரியாசிடி இருக்காது? அம்மாவாவது அனுவோட நிறையப் பழகியிருக்கா. ஆனால் அப்பா? அவர் அவள் பெயர்கூடத் தெரிஞ்சிண்டு இருப்பாராங்கறது சந்தேகம்."

ஓர் உத்வேகத்துடன் ஆரம்பித்தவன் கொஞ்சம் யோசித்து நிதானமாகத் தொடர்ந்தான்.

"எங்க ரெண்டுபேர் குடும்பமும் ஒண்ணுக்கொண்ணு அறிமுகமாகி நெருக்கமா இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்! இத்தனைக்கும் அவா எதிர்வரிசைல நாலஞ்சு வீடுதான் தள்ளி இருந்தா. குழந்தைகள் உயிராப் பழகறபோது ஏன் தாங்களும் நண்பர்களாக இருக்கலாம்னு பெற்றோர்களுக்குத் தோணலை பாஸ்கர்? நான் ஒருநாள்கூட எங்க அம்மாவும் அனுவோட பாட்டியும் அல்லது அம்மாவும் பேசிப் பார்த்ததில்லை. உண்மையில் அனுவோட பெற்றோர்களோ அல்லது பாட்டி தாத்தாவோ யார்னுகூட எனக்கு இதுவரையில் தெரியாது. நானும் ஒருநாள்கூட அவங்க வீட்டுக்குப் போனதில்லை."

"இதெல்லாம் அந்தக் காலத்தில்---ஏன் இந்தக் காலத்திலும்---எல்லோர் குடும்பங்கள்லயும் சகஜம் ராஜா. அப்படிப் பார்த்தா அனுவோட குடும்பமும் உங்க குடும்பத்தோட பழக முயற்சி செய்யலையே? அந்தக் காலத்தில் பெரியவர்கள் எந்த அடிப்படையில் தம் நண்பர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்னு நம்ம கண்ணோட்டத்தில அளவிட முடியாது."

"அப்புறம் அந்த அடலசன்ட் வயதில் நான் அனுவை ஒரு பெண்ணாகப் பார்த்தபோது அவளுடன் எவ்வளோ பேச முயற்சி பண்ணியும் எனக்கு முடியலைன்னு சொன்னேன் இல்லையா? அப்பவாவது அம்மாவும் அப்பாவும் என்னைப் புரிஞ்சிண்டு வழிகாட்டியிருக்கலாமே? ஏன் அவா யாருக்கு வந்த விருந்தோன்னு கொஞ்சம்கூட அக்கறை இல்லாம நடந்துக்கணும்?"

"அனுவை நீ விரும்புவது பற்றி உன் பெற்றோரிடம் சொன்னாயா?"

"இல்லை பாஸ்கர்."

"ஏன் சொல்லலை?"

"அதுக்கு ரெண்டு காரணம் இருந்தது பாஸ்கர். ஒண்ணு, அனுவும் என்னை விரும்பறாளான்னு முதல்ல தெரிஞ்சுக்க நினைச்சேன். ரெண்டு, எங்க குடும்பக் கட்டமைப்பு. இந்தக் காதல் கீதல்லாம் அனாசாரமான விஷயங்கள்னு நினைக்கற குடும்பம் அது. நான் ஹைஸ்கூல் படிக்கும்போதே ஒரு பொண்ணை லவ் பண்ணினேன்கிறதை எங்க அப்பா அம்மாவால ஜீரணிக்க முடியும்னு நினைக்கறயா?"

"சிக்கல்தான். இருந்தாலும் இதுமாதிரி விஷயத்தில் நீயா ஏதாவது சொல்ற வரைக்கும் அவாளுக்கு சுயமான ஆர்வமோ அக்கறையோ ஏற்பட வாய்ப்பில்லைதான். உண்மையைச் சொல்லப்போனா உங்க அப்பா அம்மாவுக்கு இந்த சாத்தியம்கூட மனசில் பட்டிருக்காது."

"ஆனால் ஜெயந்தி விஷயத்தில் அம்மா என்னை நல்லா நோட் பண்ணியிருக்கான்னு தெரியறதே! அப்பாட்டகூட சொல்லியிருப்பா. கௌசல்யாவைப் பற்றி நானே அப்பாட்ட தர்க்கம் பண்ணியிருக்கேன். இதெல்லாம் பார்க்கும்போது தெரியற ப்ளைய்ன் ட்ரூத் என்ன தெரியுமா?"

"என்ன?"

"அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இந்தக் காதல்ங்கற வார்த்தையே பிடிக்காதுன்னு தோண்றது. அதுவும் தன் பையன் ஒரு பெண்ணை விரும்பறான்னா அது ஒரு அருவருப்பான, செய்யக்கூடாத, தவறான செயலாக அல்லது குற்றமாக நினைப்பானு படறது. அவாளோட கணிப்பில் கல்யாணாம்னா வரதட்சிணை, நகைகள், பாத்திரங்கள், தின்பண்ட சீர்வரிசைகள் இவ்வளவுதான். தவிர, பையன்---அவன் பார்க்க எப்படி இருந்தாலும் சரி---ஒரு நல்ல உத்யோகத்தில் இருக்கணும்.பெண் மூக்கும் முழியுமா, அடக்க ஒடுக்கமா, பாடத் தெரிஞ்சவளா, தெய்வபக்தி உள்ளவளா, நன்னா சமைப்பவளா இருக்கணும். ஆப்ரஹாம் லிங்கன் சொன்ன அந்த டெமாக்ரஸி தத்துவம்தான் ஞாபகம் வருது. எனக்கு வரப்போறவள் அப்பாவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அம்மாவால் தன்னைப்போல் இருப்பதாக அங்கீகரிக்கப்பட்டு, நான் எனக்காக என்பதுபோல் ஏற்றுக்கொள்ளணும். கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்னு சொல்லுவா, ஆனால் அதுக்காக இவா எடுத்துக்கற முயற்சி என்னவோ நீ சொன்ன மாதிரி கடைசி நேரத்தில கால்ல கஞ்சியைக் கொட்டிண்டு அலையறதுதான்."

"நீ சொல்வதில் எனக்கு முழுக்க உடன்பாடு உண்டு. கல்யாணம்கற விஷயத்தை இன்னும் முன்னாடியே திட்டமிட்டுத் தீர விசாரித்து, மனப் பொருத்தத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்யலாம். ஆனால் இதெல்லாம் விடியறதுக்குள்ள மாறிவிடக்கூடிய விஷயங்கள் இல்லையே?"

"நான் வந்து என்னை உதாரணமா வெச்சுச் சொல்லலை. நாமாவது ஆண் பிள்ளைகள். அதுவே பெண்களா இருக்கும்போது எத்தனைபேர் தம் கனவுகளையெல்லாம் மறந்துவிட்டு முன்பின் தெரியாத ஒரு அன்னியனுக்கு வாழ்க்கைப்படும் போது அது க்ளிக்-ஆனா அதிர்ஷ்டம் இல்லைனா வாழ்க்கை முழுவதும் கஷ்டம்னு அல்லாடற நிலைமை உருவாகிறது இல்லையா?"

"ஆனால் இங்கே வெளிநாடுகள்போல் ஒரு லிபரல் சோஷல் செட்டப் இல்லையே? சமூகத்தில் ஆணும் பெண்ணும் அவதூறு இல்லாமல் பழக முடியலையே? ஹைஸ்கூல்லர்ந்து தனித்தனியான கல்வி. செக்ஸ் பத்தி அறிவுபூர்வமான, ஆக்கபூர்வமான கருத்து கிடையாது. நம்ம பையன்களுக்கும் லைஃப்ல ஒரு தெளிவான சிந்தனை, நோக்கம், குறிக்கோள் கிடையாது. We are all hypocrites. இந்தமாதிரி சூழ்நிலைல நம் சமூகத்துக்கு எப்படி ’டேட்டிங்’ போன்ற மேலைநாட்டு வழக்கங்கள் ஒத்துவரும்?"

"இந்த இடத்திலதான் பெற்றோருடைய உதவி, ஆலோசனை தேவைப்படறது பாஸ்கர். Marriages are not made in heaven but in schools and colleges. டீன் ஏஜ் காலத்தில உருவாகிற அன்பை நடுநிலையோடு ஆராய்ந்து, நெறிப்படுத்தி, தகுதியுள்ள இடத்தில் ஊக்குவித்து... இதெல்லாம் பெற்றோர் பணிதானே?"

"நீ சொல்லும் மாற்றம் பெற்றோர்களிடம் வந்தால் மட்டும் போதாது. சமூகத்தில் எல்லா மட்டங்களிலும் ஒரு ஆண் அல்லது பெண்ணின் வாழ்க்கையில் பொறுப்பு வகிக்கும் அத்தனை பேர்களிடமும் இந்த மாற்றம் அவசியம்."

கதிரவன் மறைவால் சிவந்த மேகக் கூட்டங்களில் மெல்லிய காளான் திரைகளாக இருள் படர்ந்து அவற்றின் வண்ணப் பூச்சுகளை அரிக்கத் தொடங்குவதையும், காக்கைகளும் கிளிகளும் கூட்டம் கூட்டமாக மரங்களை நாடுவதையும் கவனித்தபடி எழுந்துகொண்டவன் கூறினான்:

"குறைந்தது நம்முடைய பிற்காலத்திலாவது நாம் இவற்றையெல்லாம் செயல்படுத்தி ஒரு புதிய தலைமுறையை உருவாக்கணும் பாஸ்கர்."

*** *** ***
 
26

கணந்தோறும் வியப்புகள் புதிய தோன்றும்;
கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்;
கணந்தோறும் நவநவமாங் களிப்புத் தோன்றும்;
கருதிடவும் சொல்லிடவும் எளிதோ?
---மஹாகவி பாரதியார், பாஞ்சாலி சபதம் 27 மாலை வர்ணனை 149


டைசி வருடப் பலகலைத் தேர்வுகள் முடிந்து ஒரு திங்கட்கிழமையில் இருந்து விடுமுறை ஆரம்பமானபோது விடுமுறைக்கு முன்வந்த ஞாயிறு அன்று கௌசல்யா தன்வீட்டில் அளித்த Farewell Party-யின் வியப்புகளும் கனவுகளும் சந்தோஷங்களும் டைரியின் பக்கங்களில் உறைந்திருக்க, இப்போது படிக்கையில் விளக்கில் இருந்து எழுந்த பூதமாக மனதை நிறைத்துக் கொண்டது.

சரியாக மூன்று மணிக்கு நானும் பாஸ்கரும் கௌசல்யாவின் வீட்டில் நுழைந்தபோது ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.

பாஸ்கர் தன் எலெக்ட்ரிக் கிடார் தோளில் தொங்க, NEVER LEAVE ME என்ற வாசகம் அவன் அணிந்திருந்த வெளிர் மஞ்சள் அரக்குக் காலர் டீ-ஷர்ட்டில் அரக்கு வண்ண எழுத்துகளில் கண்ணில் பளிச்சென்று தெரிய, அழகாக வெட்டிவிடப்பட்டு இருபுறமும் மென்மையாகச் சரியும் அவன் மீசை முகத்தின் சந்தன நிறத்தைத் எடுத்துக் காட்ட, வழக்கமாகத் துருதுருவென்று அலையும் விழிகளை rimless goggles மறைத்து எதிரில் இருக்கும் உருவங்களைப் பிரதிபலிக்க, வாய் சூயிங்கத்தை மெல்ல அசைபோட, அவன் அந்த பங்களாவின் ’கேட்’-டைத் திறந்துகொண்டு நடந்து கம்பீரமாகப் படியேறி அழைப்பு மணியை அழுத்த முனைந்து கதவுக்குப் பதில் ஓர் அழகிய திரை தொங்க மலைத்துக் கொஞ்சம் தயங்கி நிற்க, நான் ’கௌசி!’ என்று விளித்தபோது திரை கொஞ்சம் விலக, பாஸ்கரின் முகத்தில் ஓடிய வியப்பை உணர்ந்து அவன் கண்களை நோக்கியபோது என் விழிகளும் வியப்பில் விரிந்து பரவசமாயின.

பாஸ்கரின் விளிம்பற்ற கருப்புக் கண்ணாடிகளில் கொஞ்சம் குழப்பமும் கொஞ்சம் ஆர்வமும் கொஞ்சம் முறுவலும் அலைமோதத் திரைக்குப் பின்னால் இருந்து எட்டிப் பார்த்த மாலதியின் முகம் தெரிந்தது.

"எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு" என்று மனசுக்குள் பாடல் வரிகள் ஓடியபோது பாஸ்கர் உலகின் அனைத்து ஆச்சரியங்களையும் குரலில் காட்டி, "ஹல்லோ மிஸ் மாலதி! Good evening, what a surprise!" என்றான்.

"Good evening to both of you", என்று இனிய குரலில் நளினமாகத் தலைசாய்த்து, திரையை முழுதும் விலக்கினாள். "ப்ளீஸ் கம் இன்" என்றாள். "எப்படித் தெரியும் என் பெயர்?"

"என் கனவில் ஒரு தேவதை வந்து சொன்னாள். என்.மாலதி, B.A. English Literature. எப்படி எழுதியிருக்கீங்க எக்ஃஜாம்ஸ்?"

"Not bad at all."

"நைஸ்லி புட். என் பெயர் பாஸ்கர். இவன் ராஜா. ரெண்டு பேருமே உங்க செட், B.A. English Literature. இவன் குமாரி கௌசல்யாவோட அத்தை பையன். நான் இன்னும் யாருக்கும் சொந்தமாகலை."

"அதற்குள் என்ன அவசரம்?" என்றாள். "ஹலோ! நீங்கதான் ராஜாவா? கௌசி உங்களைப் பத்தி நிறைய என்னிடம் சொல்லியிருக்கா."

"நான்கூட உங்களை இதற்கு முன் சந்தித்திருக்கேன். You remember that?"

புருவங்களை மென்மையாக நெரித்துப் பின் சட்டென்று விழிகளில் நாணம் சூழக் கூறினாள். "Yes, I remember. அப்போ நீங்க யாருன்னு தெரியாது."

"நானும் ராஜாவும் தினமும் வாக்கிங் போகிற போது உங்களைக் காவேரிப் பாலத்துக்குப் பக்கம் இருக்கும் பஸ் நிறுத்தத்தில் பார்க்கறதுண்டு. அடிக்கடி உங்களைப் பத்தித்தான் பேசுவோம்."

"ம்ஹூம். நான்கூட உங்க ரெண்டு பேரையும் பார்த்திருக்கேன். நீங்க ஶ்ரீரங்கத்தில் இருக்கேளா?"

"எப்படித் தெரியும்?"

"பஸ்ல காலேஜுக்கு வந்தபோது அடிக்கடி தினமும் உங்களைப் பார்த்திருக்கேன்."

"பஸ்ல வரும்போது யாரைப் பார்த்திருக்கே மாலதி?" என்று கௌசல்யாவின் குரல் கேட்டது.

"ஹாய் ராஜா! ஹாய் பாஸ்கர்! You look the go-go Charlie in this dress. Never?... Never Leave Me! யாரவள் பாஸ்கர்?"

"தெரியாது, கௌசல்யா."

"உனக்கு அவளைத் தெரியாதா அல்லது அவளுக்கு உன்னைத் தெரியாதா?"

"அவளுக்கு என்னைத் தெரியுமோ என்னவோ, எனக்கு அவளைத் தெரியவில்ல?"

"What do you mean by that?"

"எனக்கு அவள்யார் என்று தெரியும், ஆனால் அவளைத் தெரியாது. அவளுக்கோ என்னைப் பத்தியே தெரிஞ்சிருக்குமான்னு தெரியவில்லை."

"ஆச்சரியமா இருக்கே! இப்படிக்கூட ஒரு நிலைமையா?"

"என்ன நிலைமை? இப்ப யாருக்கு யாரைப் பத்தித் தெரியணும்?" என்றபடியே வசந்தி எங்களுடன் சேர்ந்துகொண்டாள். பின்னால் அவளுக்கே உரித்தான ஆர்வமும் நேசமும் நாணமும் தோய்ந்த விழிகளுடன் ஜெயந்தி.

கௌசல்யா உரத்த குரலில் சிரிப்பொலிகளுடன் வசந்திக்கு விளக்கியபோது என் கண்கள் ஒவ்வொருவராக நிலைத்தன.

ரத்தச் சிவப்பு மாக்ஸியில் கௌசல்யாவின் அழகும் இளமையும் வழிந்தோட, ஶாம்புவில் நீராட்டப்பட்டுப் பளபளக்கும் பட்டுக் கூந்தலில் காதோரம் ஓர் ஒற்றச் செம்பருத்திப் பூவைச் செருகியிருந்தாள்.

மாலதியும் வசந்தியும் எடுப்பான புதுப் புடவைகளில் அளவான மேக்கப்புடன் பழமையும் புதுமையும் பிரதிபலிக்க நின்றனர். மாலதி வழக்கம்போல் தலையில் ஓர் ஒற்றை ரோஜாவை வைத்துக்கொண்டிருந்தது பின்னால் கண்ணாடியில் தெரிந்தது.

ஜெயந்தியின் எளிய, இனிய தோற்றத்தில் அவள் அணிந்திருந்த நீலப் பாவாடையும் கறுப்பு தாவணியும் பெரும் பங்கு வகித்தன. அவள் அங்கும் இங்கும் தலையைத் திருப்பிப் பார்த்தபோது அந்த சிவப்புக்கல் மூக்குத்தி பளிச்சிட்டது.

"கௌசி, எங்க அப்பா அம்மா?"

"ஒரு ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போயிருக்கா. வர ராத்திரியாகும்."

"ஏன் அவா பார்ட்டில கலந்துக்கலை?"

"வரலைன்னுட்டா. கேட்டா, ’நீங்க எல்லாம் வாலிப யுவ யுவதிகள். பேச்சு, பாட்டு எல்லாம் உண்டுன்னு சொல்றே. நாங்க இருந்தா உங்களுக்கு போர் அடிக்கும். என்ஜாய் யுர்செல்வ்ஸ்’ அப்படின்னு அப்பா சொல்லிட்டார். அதுவும் சரிதான்!"

ஹால் முழுவதும் வண்ணத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு ஆங்காங்கே ஹைட்ரஜன் பலூன்கள் காற்றில் குதித்தன. சோஃபாக்கள் இணைக்கப்பட்டு நடுவில் டீப்பாயில் அகாய் ’ஸ்டீரியோ ரெகார்ட் ப்ளேயர்’-இல் ரெகார்ட் ஒன்று சுழன்றுகொண்டிருக்க, சுவரில் மென்மையான மேற்கத்திய சங்கீதம் வழிந்தது. மற்றொரு டீப்பாயில் ஒரு ’கேஸட் ரெகார்ட் ப்ளேயர்’ காத்திருந்தது. ஹாலிலேயே இன்னொரு பக்கம் சாப்பாட்டு மேஜைகள் இணைந்திருக்க அதன்மேல் பளபளக்கும் சைனாவில் சிற்றுண்டி வகைகள் காத்திருந்தன. காற்றில் ரசாயன நறுமணம் கலந்திருந்தது.

"Well, ladies and gentlemen!..."

தன் வழக்கமான வெட்கத்தைக் கைவிட்டு ஜெயந்தி ஒரு தேர்ந்த அறிவிப்பாளரின் இயற்கையான கவனத்துடன் ஆங்கிலத்தில் தொடங்கியபோது கொஞ்சம் வியப்பு மேலிட்டது.

"...நாம் இதுவரையில் இதுபோலக் கூடியது இல்லை. நம் கல்லூரியில் ப்ரேக்கப் சோஷல் பார்ட்டியில் கலந்துகொண்டிருக்கலாம். But then, this is an informal and personal get-together. இந்த மாலை நம் நினைவுகளில் எப்போதும் சுடர்விட்டுக் கொண்டிருக்கப் போகிறது. We have a unique programme for this evening. முதலில் கொஞ்சம் சாப்பிடுவோமா?"

சாதாரணமாக வந்தோம்-சாப்பிட்டோம்-போனோம் என்று அமையாது அந்த பார்ட்டி ஜெயந்தியின் வார்த்தைகளில் சூடுபிடித்து கலகலப்பான ஈடுபாடுகளுக்கு இடமளித்து நினைவுகளை இனிமையாக்கிவிட, மெலிதான மேற்கத்திய இசை ஒலிக்க சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து பாஸந்தியும் அக்காரவடிசிலும், மெதுவடையும் கட்லெட்டும், டிக்ரி காஃபியும் சாப்பிட்டோம்.

"ஃப்ரெண்ட்ஸ்! இன்றைய பார்ட்டி நிகழ்ச்சிகளை நாம் ஒரு நினைவுக்காக ஒலிநாடாவில் பதிவு செய்கிறோம். இந்த மாலையின் முதல் நிகழ்ச்சி அறிமுகம்! மூன்று வருடங்கள் பழகிவிட்டு விடைபெறும்போது அறிமுகமா என்று கேட்கலாம். அறிமுகம் என்று நான் குறிப்பது நாம் ஒருவரை ஒருவர் எந்த சூழ்நிலையில் எப்படிச் சந்தித்து நேசத்தையும் நட்பையும் வளர்த்துக்கொண்டோம் என்று விவரிப்பதாகும். இந்த வகையில் பாஸ்கர் ராஜாவையும், ராஜா ஜெயந்தியையும், ஜெயந்தி வசந்தியையும், வசந்தி மாலதியையும், மாலதி கௌசல்யாவையும், கௌசல்யா பாஸ்கரையும் சந்தித்த நிகழ்ச்சிகளைக் கூற வேண்டுகிறேன். Come on, BhASkar!"
 
"சிலரை முதன்முதலாகப் பார்க்கும்போதே அவர்களுடன் பேசி நண்பர்களாகிவிட வேண்டும் என்ற ஆசை எழுவதுண்டு. ராஜாவை முதன்முதல் பார்த்தபோது எனக்கு இந்த எண்ணம் தோன்ற, நானே வலியச்சென்று பேச்சுக்கொடுத்து நண்பனானேன்", என்று பாஸ்கர் என்னைப் பற்றி இரண்டு நிமிடங்கள் புகழ்ந்து பேசிவிட்டு, "நான் என் குடும்பச் சூழ்நிலை காரணமாக என் பட்டப் படிப்பை இத்துடன் முடித்துக்கொண்டு வேலை தேடப் போவதால் ராஜாவைப் பிரிய நேரிடுகிறது. நாங்கள் எங்கு இருந்தாலும் நெருங்கிய நண்பர்களாக இருப்போம்" என்று முடித்தபோது நான் நெகிழ்ந்துபோய் அவன் கைகளை அழுத்தினேன்.

நான் ஜெயந்தியைப் பார்த்த, சந்திக்க முயன்ற, இறுதியில் சந்தித்த நிகழ்ச்சிகளை முடிந்தவரை நடுநிலையாக விவரித்தபோது அவள் கன்னம் சிவந்து கண்கள் தாழக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

"வசந்தியை என் ஹைஸ்கூல் நாட்களில் இருந்தே தெரியும். அதனால் அவளை முதன்முதல் எப்போது சந்தித்தேன் என்பது நினைவில்லை", என்று தொடங்கிய ஜெயந்தி, "வசந்தி என் கனவுத் தோழி மட்டுமல்ல. She is my friend, philosopher and guide." என்று முடித்து வசந்தியின் கழுத்தில் கரங்களைத் தழுவவிட்டது மாலதியை வியப்பில் ஆழ்த்தியது.

மாலதியின் அறிவையும் அடக்கத்தையும் புகழ்ந்த வசந்தி, அவளை மோனா லிஸாவுக்கு ஒப்பிட்டுக் கூறியது பாஸ்கரைக் குளிர்வித்தது. கடைசியில் அவள் பாஸ்கரைப் பார்த்தபடியே, "இப்படிப்பட்ட ஒரு தோழியுடன் பழக வாய்ப்பளிப்பது எங்கள் கடமை என்று நானும் கௌசியும் கருதியதால், உங்களுக்கு ஏற்கனவே தோற்றத்தால் தெரிந்திருந்து நீங்கள் பழகுவதற்கு பகீரதப் பிரயத்தனங்கள் எடுத்துக்கொண்ட மாலதியை ஓர் இனிய ஆச்சரியமாக இங்கு வரவழத்தோம். I hope MAlati will have no reservations. I wish you all the best." என்று முடித்து அவனுக்கு வாழ்வில்-ஒரு-முறை வாய்ப்பை நல்கினாள்.

கௌசல்யாவை முன்பே தெரிந்திருந்தாலும் சமீபத்தில்தான் பழக முடிந்தது என்று ஆரம்பித்த மாலதி, அவளது நுண்கலைத் திறன்களைப் புகழ்ந்து "She is going to have a very bright future." என்று முடித்தாள்.

கௌசல்யா தான் பாஸ்கரை முதலில் சந்தித்த விவரங்களைக் கூறிவிட்டு, அவனது தோற்றம், சுபாவம், ஈடுபாடுகள், கலைகள், அறிவு இவற்றை மிகவும் புகழ்ந்து, "பார்த்தால் பசுபோல இருக்கும் இந்த பாஸ்கருக்குள் எத்தனை பாஸ்கரிகள்", என்று முடித்தபோது மாலதியின் விழிகள் வியப்பால் விரிந்தன.

அறிமுகம் முடிந்ததும் அரட்டை தொடர்ந்தது. எங்கள் கல்லூரியில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள், சந்தித்த ஆசிரிரியர்கள், கேட்ட, ரசித்த கல்லூரி மற்றும் பிற நகைச்சுவைத் துணுக்குகள், சின்னச் சின்ன கதைகள் இவற்றையெல்லாம் பேசித் தீர்த்தபோது பாஸ்கர் எல்லாவற்றிலும் ’டாமினேட்’ செய்து அந்த அறையையும் மாலதியையும் கலகலக்கச் செய்தான்.

பிறகு கொஞ்ச நேரம் டேபிள் டென்னிஸ் ஆடிவிட்டு மீண்டும் ஹாலுக்கு வந்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டோம். அதன்பின் பாஸ்கர் தன் எலெக்ட்ரிக் கிடாரை மீட்டி புகழ்பெற்ற தமிழ், ஹிந்தி, ஆங்கிலத் திரைப் பாடல்களைக் கௌசல்யாவுடன் சேர்ந்து பாடியும், ’ட்யூன்’களை கிடாரில் வாசித்துக்காட்டியும் எல்லோரையும் மகிழ்வித்தான்.

ணி ஏழானதும் ’டின்னர்’ தயார்பண்ணக் கௌசல்யாவுடன் வசந்தியும் ஜெயந்தியும் சென்றுவிட, கொஞ்ச நேரத்தில் நானும் பாஸ்கர் மாலதியைத் தனியாக விட்டுவிட்டுக் கிளம்பி மாடிப்படியேறி திருப்பத்தில் நிதானித்து மறைவாக நின்று அவர்களைக் கவனிக்கத் தொடங்கினேன். "பாஸ்கர் இப்போது அவளிடம் தன் காதலை வெளியிடுவானா?"

பாஸ்கரின் மென்மையான குரல் தெளிவாகக் கேட்டது. கல்லூரிப் பாடங்களில் ஆரம்பித்து மெதுவாக மற்ற விஷயங்களுக்கு அடியெடுத்துக் கொடுத்து, நிறைய ஜோக்குகள் அடித்து, கடைசியில் ’பெர்சனல்’ விஷயங்களைத் தொட்டு... பாஸ்கரின் முறையே அலாதி.

மாலதியின் ஒற்றைச்சொல் விடைகள் கொஞ்சம் கொஞ்சமாக சோப்புக் குமிழ்கள் போல் பருத்தன. களுக்கென்று உடைந்து புன்சிரிப்பு மென்சிரிப்பாகி விரைவில் அவள் சிரிப்பலைகள் அந்த ஹால் சுவர்களில் மோதி எதிரொலிக்க, பாஸ்கரின் திறமையை வியந்து திருப்தியுடன் கௌசல்யாவின் நூலகத்தை நோக்கிச் சென்றேன்.

நிலைகொள்ளாமல் தவித்து, அடுத்த பதினைந்து நிமிடங்களில் கீழிறங்கி வந்து, பாஸ்கரின் குரல் மெதுவாக ஒலிக்கக் காதுகளைத் தீட்டிக்கொண்டு, காலடி வீழல்களைப் படிகளின் ’கார்ப்பெட்’ மௌனமாக்க, அந்தத் திருப்பத்தில் நின்று கவனித்தபோது அவர்கள் இருவரும் நீண்டநாள் பழகிய நண்பர்கள் அல்லது காதலர்களைப் போல தம்மை மறந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அவன் அடித்த ஜோக் ஒன்றில் உடல் குலுங்க நகைத்தவள் நிலை தடுமாறி அவன் தோளைப் பிடித்துக்கொண்டாள்.

"சாரி, பாஸ்கர்."

"டோன்ட் ஸே தட் மாலதி."

அதைக் கவனிக்காதவள் போல, "எனக்குத் தெரியும் உங்களால் முடியாதுன்னு. It's not easy to master a tongue-twister.", என்றாள்.

"இப்ப உன் படிப்பெல்லாம் முடிஞ்சதால நீ ஒண்ணு பண்ணலாமே மாலதி."

"என்ன பண்ண?"

"உன் தோழிகள் அன்னைக்கு உன்னை ’நீ ஒரு இன்ட்ரோவர்ட் அல்லது யு ஆர் இன் லவ்’னு பரிகாசம் பண்ணியது நினைவிருக்கா மாலதி? நீ என்ன பதில் சொன்னே?"

அவள் ஞாபகம் வந்து கன்னம் சிவக்க, அவன் மென்மையாகக் கூறினான்.

"உன் படிப்பெல்லாம் இப்ப முடிஞ்சிட்டதால் நீ கொஞ்சம் சாவகாசமாக என்னைப் பத்தி நினைத்துப் பார்க்கலாம், மாலதி. இவ்ளோ நாள் நான் உன்னையே நினைத்துக் கொண்டிருந்தேன். உனக்காகக் காத்திருந்தேன். நீ என்னை நினைப்பதாக இருந்தால் காத்திருக்க வேண்டியது இல்லை."

பாஸ்கரின் நேர்மையான காதலில் அவள் மலைத்துப் போனாள். கொஞ்சம் யோசித்து அவனைத் திருப்திசெய்ய முயன்றவளாகக் கூறினாள். "எனக்குக் கொஞ்சம் அவகாசம் தேவை பாஸ்கர். மேலும் நான் எம்.ஏ. செய்வதாக இருக்கேன்."

"நானும் காத்திருக்கேன் மாலதி."

"தாங்க் யு பாஸ்கர்."

*** *** ***
 
27

நிலவு செய்யும் முகமும் -- காண்பார்
நினைவ ழிக்கும் விழியும்
கலக லென்ற மொழியும் -- தெய்வக்
கள்து லங்கு நகையும்
---மஹாகவி பாரதியார், திருவேட்கை 1


விரல்கள் டைரியின் பக்கங்களை வருடிச் சென்று கௌசல்யாவின் தோழமையில் மலர்ந்த நாட்களை எடுத்துக் கொடுக்க, மனம் அவற்றை மாலையாகத் தொகுத்துக் கொடுக்க, நினைவுகளின் வசந்தத்தில் மனத் தோட்டத்தில் மீண்டும் ஒருமுறை மலர்ந்த அந்த நாட்களின் இனிமையை நுகர்ந்தபோது, அவனும் கௌசல்யாவும் கடைசி வருடத் தேர்வுகளை எழுதிவிட்டுக் கோடை விடுமுறையைக் கழிக்க அவன் வீட்டுக்குப் பயணித்துக் கொண்டிருந்தனர்.

வசந்தியைக் கலந்தாலோசித்து, மாமா மாமியின் சம்மதம் பெற்று, கௌசல்யாவுடன் நேரடியாகப் பழகிவிட்டால் அப்பாம்மாவின் மனம் மாறிவிடும் என்ற நம்பிக்கையுடனும், எதிர்காலக் கனவுகளுடனும், அவனும் கௌசல்யாவும் ஊர் சேர்ந்து முத்துவின் குதிரைவண்டியில் ஏறி, தெருமுனையில் வரும்போதே அம்மா வாசலில் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து மகிழ்ந்து, அவன் கௌசல்யாவின் தோளைத்தொட்டு அறிவித்து முகம் மலர்ந்தபோது, இவர்களை ஒருதரம் பார்த்துவிட்டு அம்மா சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்!

வண்டியை வாசலில் நிறுத்தி, அக்கம்பக்கம் ஜன்னல்களில் தலைகள் எட்டிப்பார்க்க, சிலர் தங்கள் வீட்டு வாசலுக்கே வந்துவிட, வண்டிச் சத்தத்தைக் கொஞ்சம் தாராளமாகவே கொடுத்துவிட்டு, அவனும் கௌசல்யாவும் தங்கள் சூட்கேஸ் சகிதம் வாசல் கேட்டைத் திறந்து, அதன் ’க்ரீச்’சில் அம்மாவை எதிர்பார்த்து ஏமாந்து, வாடாமல்லிச் செடிகள் அணிவகுத்து நிற்கும் நடைபாதையைக் கடந்து, திண்ணை அழிக்கதவின் வெளித்தாழ்ப்பாளை மெல்லத் தட்டியபோது ’ஆஃபீஸ் ரூம்’ ஜன்னலில் அப்பாவின் தலை தெரிந்தது.

"யாரூ? ராஜாவா! வாவா! கூட யாரு? ஐ ஸீ, கௌசல்யா! வாம்மா வா!"

அப்பாவின் வரவேற்பில் கொஞ்சம் ஆறுதல் அடைந்தும் அம்மாவின் புறக்கணிப்பு தகிக்க, அவன் கௌசல்யாவைப் பார்த்தபோது, அவள் அவன் கண்களைத் தவிர்த்து, முகம் மலரத் தனக்கே உரிய கலகலப்புடன் அந்த வீட்டில் அடியெடுத்து வைத்தாள்.

"என்ன அத்திம்பேர்! எப்படி இருக்கேள்? உங்களையும் அத்தையையும் நான் குழந்தையா இருக்கும்போது பார்த்ததுதான். என்னைப் பார்த்த உடனே அதெப்படி அவ்ளோ கரெக்டா கண்டுபிடிச்சேள்! ஃபன்டாஸ்டிக் மெமரி உங்களுக்கு! எங்க அத்தை?"

"சமையல் உள்ளில் எதோ வேலை இருக்குன்னு இப்பதான் உள்ளே போனா... ம்!... வெரி குட்! உங்க அப்பா அம்மா எல்லாரும் சௌக்யமா?"

"எல்லாரும் சௌக்யம் அத்திம்பேர். உங்களையெல்லாம் ரொம்பக் கேட்டதாச் சொன்னா. அம்மா அத்தைக்கு லெட்டர் கொடுத்திருக்கா."

"ரொம்ப சந்தோஷம். அத்தை உள்ளே இருக்கா, போய்ப்பாரு."

கௌசல்யா ஓட்டநடையாகக் கூடத்தை நோக்கிச் செல்ல, அவன் கொஞ்சம் பயத்துடன் அவளைத் தொடர, அவளின், "அத்தை!... அத்தை! யார் வந்திருக்கேன் பாருங்கோ!"--வைத் தொடர்ந்து அம்மாவின் மஞ்சள் முகம் தென்பட்டுக் கொஞ்சம் மலைத்து, அம்மா தன் வியப்பை அளவான, கணக்கிட்ட வார்த்தைகளில் வெளியிட்டாள்.

"அட, கௌசல்யாவா! பரவாயில்லையே? இந்த அத்தையைக்கூட ஞாபகம் இருக்கா உங்களுக்கெல்லாம்? எப்படி இருக்கா உங்க அப்பா அம்மா?"

"எல்லாரும் சௌக்யம் அத்தை. அம்மா உங்களுக்கு லெட்டர் கொடுத்தனுப்பியிருக்கா. அத்தோட இதையும் கொஞ்சம் வாங்கிக்கச் சொன்னா."

கௌசல்யா தன் சூட்கேஸைத் திறந்து அதிலிருந்து ஆப்பிள், வாழைப் பழங்களையும், நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட மல்லிகைச் சரத்தையும், மற்றும் சில விலை உயர்ந்த அன்பளிப்புப் பொருட்களையும் எடுத்து மேஜைமேல் வைக்க, அம்மா கன்னத்தில் கைவைத்துக் கொண்டு கண்கள் விரியக் கேட்டாள்.

"பரவாயில்லையே! இப்பவே உங்கம்மா சீர்லாம் கொடுத்தனுப்ப ஆரம்பிச்சுட்டாளா?"

"சீர்லாம் ஒண்ணுமில்லை அத்தை! இந்த பிர்லா மந்திர் மாடல் மார்பிள்ல செஞ்சது. இந்தக் குங்குமச் சிமிழ்லாம் மலைக்கோட்டைல வாங்கினது. அப்புறம் இந்த ஸ்வாமிபடம் ரெண்டும் நான் பெயின்ட் பண்ணினது."

"நீ பெயின்ட் பண்ணதா! பரவாயில்லையே, ரொம்ப நன்னா வந்திருக்கு. வசந்திகூட இந்தமாதிரி ட்ராயிங்லாம் நன்னா செய்வா. எதுக்கு இவ்ளோ பழம்? வாழைப்பழம் நம்மாத்துலேயே ஏகப்பட்டது இருக்கு. சாப்பிடத்தான் ஆளில்லை. உங்காத்தில ஆப்பிள் மரம்லாம் இருக்கா என்ன?"

"ஆப்பிள், வாழை எல்லாம் கடையில் வாங்கினோம்."

"இல்லை, உங்காத்தைச் சுத்திப் பெரிசா அழகா தோட்டம்லாம் இருக்குன்னு ராஜா சொல்லியிருக்கான். ஒருவேளை ஆப்பிள் மரம்கூட வெச்சிருக்கேளோன்னு கேட்டேன். ரொம்ப சந்தோஷம். எல்லாத்தையும் எடுத்துண்டுபோய் ஸ்வாமி ரூம்ல வெச்சிடு. ஏண்டா, நீ போன வாரமே வரதா எழுதியிருந்தையே? மாமா ஆத்துல டேரா போட்டுட்டையாக்கும்?"

"மாமா டூர் போட்டு நேத்துதான் வந்தார்மா. திரும்ப இன்னைக்கு வெளியூர் போறார். எனக்கும் ஹாஸ்டலைக் காலிபண்ண டயம் இருந்தது. கௌசல்யா வேற திடீர்னு என்னோட வரேன்னுட்டா!"

அம்மவின் கண்கள் அவன் கண்களை நேருக்குநேர் சந்தித்து நிலைத்தபோது தர்மசங்கடமாகப் போயிற்று. இதற்குள் கௌசல்யா ஸ்வாமி ரூமிலிருந்து மறுபடியும் கூடத்துக்கு வந்துவிட, அம்மாவின் கேலிக் கணைகள் அவள்பால் திருப்பப்பட்டுத் தொடர்ந்து அவளை வதைத்தன.

"உன்னைப் பார்த்தா அடையாளமே தெரியலையே கௌசல்யா?"

"நீங்க என்னைக் குழந்தையாப் பார்த்ததுதானே?"

"அதுக்கில்லை. கௌசல்யான்னா என்னமோ இங்கிலீஷ்காரப் பொம்மனாட்டியாட்டம் தலையை பாப் பண்ணிண்டு லிப்ஸ்டிக் பூசிண்டு சென்ட் போட்டுண்டு கவுன், மாக்ஸிலதான் இருப்பான்னு சொல்லக் கேள்வி! நீ என்னடான்னா தழையத் தழையப் பின்னிண்டு அழகா, லட்சணமாப் புடவை கட்டிண்டு வந்து நிக்கறையே! சந்தோஷம். ராஜா சொல்லிக் கொடுத்தானாக்கும், ’அத்தை ரொம்பக் கட்டுப்பெட்டி, அவளுக்கு இந்த நாகரிகம்லாம் தெரியாது, அதனால நீ எப்பவும் புடவையில் இருந்தாப் போறும்’னு?"

"நான் காலேஜ் போறச்சே விதவிதமா ட்ரெஸ் பண்ணிக்கறது உண்டு அத்தை. ஆனால் எனக்குப் புடவை கட்டிக்கத்தான் பிடிக்கும்."

"என்னவோம்மா. உன்னை நினக்கறபோது பாவமாத்தான் இருக்கு. தினுசு தினுசா ட்ரெஸ் பண்ணின்டு தினம் ஒரு சினிமாவோ டிராமாவோ போறதுக்கு இந்த கிராமத்துல என்ன பண்ணுவியோ? காமு அத்தை கோயம்புத்தூர்ல இருக்கா. அது நகரம். பொழுது போயிடும். இந்த அத்தையாத்துல உனக்கு என்ன பொழுதுபோக்கு இருக்கு சொல்லு?"

"நான் ஜாஸ்தி சினிமா ட்ராமால்லாம் போகமாட்டேன். எனக்கு உங்காத்துத் தோட்டத்திலேயே நல்லா பொழுதுபோகும் அத்தை! எனக்கு மரம் செடிகள்னா ரொம்பப் பிடிக்கும்."

"சரி, ரெண்டு பேரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து குளிச்சிட்டு சாப்பிடற வழியைப் பாருங்கோ. சமையல் ரெடியாய்டுத்து."

"நான் கார்த்தாலேயே குளிச்சிட்டேன்."

"நான் இனிமேல்தான் குளிக்கணும். வென்னீர் இருக்காம்மா பாய்லர்ல?"

"இருக்கே! என்னது, கௌசல்யா குளிச்சாச்சா? இவ்ளோ சீக்கிரமாவா! நீங்க ரெண்டு பேரும் ஏழுமணி பஸ்கே கிளம்பியிருப்பேளே?"

"அம்மாவும் நானும் தினமும் கார்த்தால சீக்கிரமே குளிச்சிடுவோம்."

"சரி. ட்ரெஸ் மாத்திண்டு சாப்பிட வா. உன்னோட பொட்டியெல்லாம் இந்த ஸ்டோர் ரூம்ல வெச்சிக்கோ. அங்கேயே ட்ரெஸ் பண்ணிக்க வசதியிருக்கு. அத்தை வீடு பழைய காலத்து வீடும்மா. ஒங்காம் மாதிரி மாடர்னா ஆளுக்கொரு ரூம் இருக்காது. இருக்கற இடத்தில கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டியதுதான்."

"இந்தாத்துக்கு என்ன அத்தை, அரண்மனையாட்டம் நீளமா பெரிசா இருக்கே! வாசல்லேர்ந்து கொல்லை வரைக்கும் நடக்கறதுக்குள்ள கால் வலிக்கும் போலிருக்கே! எனக்குத் தனி ரூம் வேணுங்கறதில்லை. நான் எங்க வேணும்னாலும் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்."

"ரொம்ப நன்னாப் பேசக் கத்துண்டு இருக்கேடியம்மா! அசல் உங்க அம்மாதான்!"

கௌசல்யா முதல்முறையாகக் கொஞ்சம் முகம் சுருங்கிச் சமாளித்துக்கொண்டாள்.

டுத்த சில நாட்களில் அம்மாவின் கேலியும் சீண்டுதலும் மேலும் அதிகரித்துக் கௌசல்யாவைத் திணற அடித்தன. அம்மாவின் பாசம் இழையிடும் செயல்கள் அவளுக்குக் கௌசல்யாவைப் பிடித்திருப்பது போல் தெரிந்தாலும் அந்தச் செயல்களுடன் வந்த சொற்கள் புதிராக இருந்தன. ஒருவேளை இது கௌசல்யாவுக்கு அம்மா வைக்கும் ஒரு ’டெஸ்டோ’ என்றுகூடத் தோன்றியது.

அவனுக்கு எதிர்லேயே இப்படியெல்லாம் பேசும் அம்மா அவன் இல்லாத சமயங்களில் கௌசியை என்ன பாடு படுத்துவாளோ என்று பயமாகவும் வருத்தமாகவும் இருந்தது. சமயத்தில் அவளை ஏன் அழைத்துக்கொண்டு வந்தோம் என்றுகூட நினைக்கத் தோன்றியது. மாமா மாமிமேல் தனக்குள்ள கோபத்தையும் விரோதத்தையும் அம்மா கௌசல்யாவின் மேல் காட்டுகிறாளோ என்ற ஐயம் தலைக்கிக் கோபம் துளிர்க்க, அம்மாவை சூடாக நாலு வார்த்தை கேட்டுவிட்டால் என்ன என்றும் தோன்றியது.

அவன் வெளிப்படையாகக் கௌசல்யாவை ஆதரித்துப் பேசுவது விஷயங்களை மேலும் சிக்கலாக்கி விடக்கூடும் என்று அஞ்சிப் பேசாமல் இருக்க வேண்டியிருந்தது.

அம்மா அவனையும் விடுவதாக இல்லை.
 
த்தனை நாள் அவள் அவன்மேல் கொண்டிருந்த அதீதமான பாசம் கொஞ்சம் மட்டுப்பட்டு, அப்பாவுக்கு எதிரில் அவனைப் புகழ்ந்தும் செல்லம் கொடுத்தும் பேசுவது அறவே ஒழிந்து அந்த இடத்தைக் கண்டிப்பும் குத்தலும் கிண்டலும் பிடித்துக்கொள்ள, அம்மாவின் சொல்லம்புகள் அவனையும் வதைத்தன. குறிப்பாக அவன் மாமா மாமிக்குப் பரிந்தோ அல்லது கௌசல்யாவைப் புகழ்ந்தோ பேசமுடியாமல் பார்த்துக்கொண்டாள்.

வந்த முதல்நாளே அம்மா அவனிடம் தனியாக, "ஏண்டா, உனக்கு என்ன ஒரு ’இது’ இருந்தால் எங்களைக் கேட்காம, ஒரு கடுதாசிகூடப் போடாம, திடுதிப்னு கௌசல்யாவைக் கூட்டிண்டுவந்து நிப்ப! அப்பா உன்மேல ரொம்பக் கோவமா இருக்கார்", என்றபோது பயம் வயிற்றில் பந்தாகச் சுருண்டுகொள்ள, அவன் அதை மறைத்து,

"கௌசல்யா தாம்மா வரணும்னு ஆசைப்பட்டாள். திடீர்னு கிளம்பினதால லெட்டர் போட முடியலை."

"கௌசல்யா வரணும்னு ஆசைப்பட்டா அவள் அப்பாவுக்கு ஒரு லெட்டர் போட முடியலையோ? அவாளுக்கு நம்பளைக் கண்டாலே இளக்காரம் தெரிஞ்சுக்கோ. இல்லேனா உங்க மாமா அப்பாவுக்கு ஒரு கடுதாகூடப் போடாமல் பொண்ணை இப்படித் திடீர்னு அனுப்புவானா? குறைஞ்சது வர்றவள்ட்ட எழுதிக் குடுத்தனுப்பறது? அநேக வருஷம் கழிச்சு ஒரு பந்தத்தைத் தொடர நெனைக்கறபோது, அப்பா ஆத்துக்கு மூத்தவர், அவரிடம் கேட்காவிட்டாலும் சொல்லணும்னு ஒரு மரியாதை வேண்டாம்?"

"மாமா அப்பாவுக்கு லெட்டர் எழுதி அனுப்பலையா?"

"இல்லை. உங்க அருமை மாமிதான் எனக்கு எழுதியிருக்கா. உங்க மாமா தன் பாஸ் திடீர்னு விஜயம் பண்ணதால அவர் கூடவே வெளியூர் போய்ட்டாராம், எழுத முடியலையாம். எல்லாம் நொண்டிச் சாக்கு."

"கரெக்ட்! மாமாவோட பாஸ் நேத்திக்கு வீட்டுக்கே வந்து சாப்பிட்டார். அப்புறம் அவா ரெண்டு பேரும் அவர் கார்ல ஏறி எங்கேயோ வெளியூருக்குக் கிளம்பிப் போனாங்க."

"ராஜா!" என்றாள் அம்மா கூர்மையாக. "எனக்கு உங்க மாமாவைப் பத்தி நன்னாத் தெரியும். நீ ஒண்ணும் சப்பைக்கட்டு கட்டவேண்டாம்."

"நான் உண்மையைத்தான் சொல்றேன். நம்பினா நம்புங்கோ நம்பாட்டா போங்கோ!"

"அவன் எப்படி வேணும்னாலும் போகட்டும், எங்களுக்குக் கவலையில்லை! அவன் எங்களை மதிக்கலைன்னா அது அவனுக்குத்தான் நஷ்டமே தவிர எங்களுக்கு ஒண்ணுமில்லை. மரியாதை இல்லாத இடத்தில் அதை எதிர்பார்க்கறதும் அவாளோட ஒட்டறதும் நமக்கு வழக்கமில்லை."

"ஏம்மா நீ ஒண்ணும் இல்லாத விஷயத்தைப் பெரிசுபடுத்தறே? உங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும். அதுக்காக கௌசல்யா அவ அத்தையைப் பார்க்க வரக்கூடாதா?"

"போன லீவுல நீ அப்பாவோடையும் என்னோடையும் கௌசல்யா பத்தி தர்க்கம் பண்ணதெல்லாம் நான் மறக்கலைடா. அப்பாவும் மறக்கலை! எனக்கு உன் ப்ளானெல்லாம் தெரியாமல் இல்லை. நவராத்திரி லீவுல நீ வந்தபோதே நான் இதை எதிர்பார்த்தேன். ஒண்ணு மட்டும் முடிவாத் தெரிஞ்சுக்க. எங்க சம்மதம் இல்லாமல் நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது. மீறிப் பண்ணிண்டா அப்புறம் உனக்கோ அவளுக்கோ இந்தாத்தில இடமில்லை. இந்த விஷயத்தில மட்டும் என்னையோ அப்பாவையோ யாரும் அசைக்க முடியாது."

ம்மாவின் பேச்சு ஒவ்வொரு சமயமும் அவள் மனத்தாங்கலை வெளிப்படுத்தினாலும், அவன் கௌசல்யாவை ஊரில் கோவிலுக்கோ ஊர் சுற்றிப் பார்க்கவோ கூட்டிச்செல்ல அம்மா தடை சொல்லவில்லை. அம்மா அவனிடம் கண்டிப்புடன் சொன்னதெல்லாம் கௌசல்யாவின் காதுகளை எட்டியதாகத் தெரியவில்லை. வெளியில் சென்றபோது கௌசல்யா அவனுடன் வழக்கம்போல் கலகலவென்று பேசிக்கொண்டு, அவனை நச்சரித்து அவன் அனுவுடன் படித்த பள்ளி, அந்த நூலகம், விளையாட்டு மைதானம் போன்ற இடங்களைச் சுற்றிப் பார்த்து அவனைக் கேலிசெய்து மகிழ்ந்தாள்.

அம்மாவின் முடிவை எதிரொலித்து அப்பாவும் மறுநாள் கௌசல்யா மாடியில் இருந்தபோது அவனையும் அம்மாவையும் ஆஃபீஸ் ரூம் வரச்சொல்லித் தீர்மானமாக் கூறிவிட்டார்:

"ராஜா, உனக்கு என்னைப் பத்தி நல்லாத் தெரியும். எனக்கு இந்த ’அலையன்ஸ்’ல விருப்பமில்லை. உனக்கு கௌசல்யா ரொம்பப் பொருத்தமானவளா இருக்கலாம். அழகாவும் இருக்கா, முறைப் பெண்ணும் கூட. உன்னைவிட ஒரு வயசுதான் சின்னவள்னாலும் பரவாயில்லை. ஆனால்... அவ அப்பாவோட போக்கு எனக்குப் பிடிக்கலை. அம்மாவோட தம்பிங்கற த்வேஷத்ல இதை நான் சொல்லலை. அம்மாவுக்கே தெரியும் அவனைப் பத்தி. என்னைவிட பத்துப் பன்னிரண்டு வயசு சின்னவன் அவன். பெரிய பணக்காரனா இருந்தா மத்தவாளை மதிக்கக் கூடாதுன்னில்லையே?"

"கல்யாணங்கறது அதைப் பண்ணிக்கறவாளோட சந்தோஷம் மட்டுமில்லை. அதில நேரடியா சம்பந்தப்பட்ட எல்லோரோட சந்தோஷமும் முக்கியம். அப்பதான் வாழ்க்கை நெறக்கும். அதேமாதிரி, மனுஷாளுக்கு மரியாதை முக்கியம். இன்னிக்கு எனக்குக் கிடைக்காத மரியாதை நாளைக்கு உனக்கு அவாத்தில கிடைக்கும்னு எனக்குத் தோணலே. கௌசல்யாவை நீ கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லை. ஆனால், அதுக்கப்புறம் ஒண்ணு நீ எங்களை மறந்துடணும் அல்லது அவள் தன் பெற்றோரை மறந்துடணும். இதுக்கு சம்மதம்னா மேலே போங்கோ."

’பட்ட காலிலேயே படும்’ என்பதுபோல் கௌசல்யா அத்தையின் வீட்டில் பத்து நாட்கள் தங்கிவிட்டுக் கிளம்பிப் போனதும் அப்பாவுக்கு மஞ்சள் காமாலை கண்டு படுத்த படுக்கையாகி, தொடர்ந்த பணக் கஷ்டங்களால் அவர் அந்தப் பெரிய வீட்டை விற்றுவிட்டு அதே தெருவில் ஒரு சிறிய ’ஸ்ட்ரீட் ஹவுஸ்’-ஐ வாங்கிக் குடிபோக, அவர்கள் உரவில் விரிசல் ஏற்பட்டது.

*** *** ***
 
28

இன்னுமொரு முறைசொல்வேன், பேதை நெஞ்சே!
எதற்குமினி உலைவதிலே பயனொன் றில்லை;
முன்னர்நம திச்சையினாற் பிறந்தோ மில்லை;
முதலிறுதி கடைநமது வசத்தில் இல்லை.
---மஹாகவி பாரதியார், பேதை நெஞ்சே! 1


ரம்பம் என்று நினைத்தது முடிவு ஆனது.
முதல்படி என்று எண்ணியபோது பயணம் முடிந்து போனது.


கௌசல்யாவின் அறிமுகம் அவன் குடும்பத்தில் இறுகிக் கிடந்த இதயங்களைத் தளர்த்தித் தென்றலைத் தவழவிட்டதென்னமோ உண்மைதான். அதே சமயம் அந்த ஜன்னல்கள் முழுவதுமாகத் திறந்துகொள்ளவில்லை.

அவள் அவன் வீட்டில் அம்மாவின் கேலிக் கணைகளையும் கோள்சொற் கணைகளையும் ஏற்று, எப்போதும் சிரித்த முகத்துடன் கலகலப்பாக வளைய வந்துகொண்டு இருந்த அந்தப் பத்து நாட்களில் ஒரு முறைகூட மாமாவிடம் இருந்து கடிதம் வராதது பெருத்த அவமரியாதையாகக் கருதப்பட்டு, கண்ணுக்குத் தெரியாமல் விஸ்வரூபம் எடுத்து,

கௌசல்யா திருச்சிக்குக் கிளம்பிப் போனபோது அவன் அவளுடன் செல்லவிருந்தது தடைசெய்யப்பட்டு, அவளுக்குத் தனியாகப் பயணம் செய்வது பழக்கம்தான் என்று அவன் பெற்றோர் அவளிடம் நன்றாகக் கேட்டு அறிந்துகொண்டு, அவள் அதற்குத் தகுந்தாற்போல் தன் பெற்றோருக்கு நாலைந்து நாட்கள் முன்னரே கடிதம் எழுதிப் போட்டு, அந்தக் கடிதத்துக்கு அவள் அம்மாவிடம் இருந்து சம்மதம் தெரிவித்து (அவள் அப்பா கடந்த இரண்டு நாட்களாக ஊரில் இல்லை என்ற செய்தியுடன்) பதில் வந்ததும், அவன் அப்பா மட்டும் ஊரின் பஸ் நிலையம் வரைசென்று கௌசல்யாவைத் தனியாக பஸ் ஏற்றிவிட்டு வந்தார்.

தன்பின் அவன் கௌசல்யாவை சந்தித்தது அந்த ஜூன் மாதம் நடைபெற்ற வசந்தியின் திருமணத்தின் போதுதான். இடைப்பட்ட காலத்தில் அந்த இருபத்தைந்து வருட உதாசீனப் பனிப்போர் அந்தக் குடும்பங்களிடையே தொடர்ந்தது.

வசந்தியின் திருமணம் அவன் அம்மாவின் வற்புறுத்தலுக்கு இணங்க---

"நன்னாயிருக்கு! வசந்தியோட கல்யாணத்தைச் சத்திரத்தில் பண்றதாவது! அவள் சின்ன வயசிலேர்ந்தே என்கிட்ட வளர்ந்தவளாக்கும்! அவள் என் பொண்ணு மாதிரி! கல்யாணத்தை இங்க நம்பாத்துல வெச்சிக்கலாம். பக்கத்து வீடு ரெண்டையும் ஒழிச்சுக் கொடுப்பா, நான் ஏற்பாடு பண்ணறேன். எதிர்த்தாம் இப்பவே காலிதான். அங்க மாப்பிள்ளை ஆத்துக்காராளைத் தங்கவைக்கலாம். இந்த ஊர்ல தண்ணீர் கஷ்டம் கிடையாது. கறிகாய்லாம் மலிவு. பூ வேணுங்கறது கிடைக்கும். பஸ் ஸ்டாண்டுலேர்ந்து நடந்தே வந்துடலாம். இல்லேன்னா ப்ளஷர் கார் கூட ஏற்பாடு பண்ணிக்கலாம். வக்கீல் கணபதி அய்யர் இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்ல தன் காரைத் தரேன்னு ஏற்கனவே சொல்லியிருக்கார்."

"ஆமாம் நாகராஜன்! நீர் எதுக்கும் கவலைப் படாதேயும்! பொண்ணை அழைச்சிண்டு முன்னாடியே பரிவாரத்தோட வந்து சேரும். எல்லாம் நாங்க பாத்துக்கறோம்."

மாமாவின் வைராக்கியத்தைத் தகர்த்து அவரை அக்கா வீட்டு வாசல் படியை மிதிக்கவைத்துவிட அம்மா கையாண்ட தந்திரம் அவனுக்குப் புரிந்தது. விட்டுக்கொடுக்க முடியாத மனது கட்டாயப்படுத்த முனைந்தது அவனுள் சில நம்பிக்கைகளையும் சாத்தியங்களையும் பயங்களையும் தோற்றுவித்தது.

அக்கம்பக்கத்து விடுகள் இணைக்கப்பட்டுத் தெருவை முக்கால் வாசி அடைத்துப் பந்தல் போடப்பட்டு, கூப்பிட்ட குரலுக்கு ஆட்கள் காத்திருக்க, இப்போது நல்ல ’பொஸிஷன்’களில் இருக்கும் அப்பாவின் அந்தக்கால மாணவர்கள் தோள்கொடுக்க, மதுரை கைலாசம் அய்யரின் நளபாகம் நாவெல்லாம் நினைவெல்லாம் இனிக்க, மணக்க, வசந்தியின் திருமணம் வெகு விமரிசையாக நடந்தது.

தன் ஆதர்ஷ தோழியின் திருமணத்தில் அவனும் கௌசல்யாவும் மாப்பிள்ளை வீட்டாரை விழுந்துவிழுந்து உபசரித்தனர். கௌசல்யாவும் ஜெயந்தியும் அவ்வப்போது வசந்தியை அடைகாத்திருக்க, அவனும் பாஸ்கரும் உக்கிராண அறை முதல் வெளி வேலைகள் வரை அனைத்துக் காரியங்களிலும் பங்குகொண்டு பெரியவர்களுக்கு உதவினார்கள்.

வசந்தியின் திருமணத்தில் முதல் நாளன்று

துருவங்கள் இணைந்தன. பல வருடங்களாக
ஸ்பரிசிக்காத கரங்கள் ஸ்பரிசித்துக் கொண்டன.
வணங்கிக் கொண்டன. ஒன்றையொன்று குலுக்கிக் கொண்டன.
வளைக் கரங்கள் தீண்டிக் கொண்டன. தழுவிக் கொண்டன.

முகங்கள் சந்தித்துக் கொண்டாலும்
இதயங்கள் சந்தித்துக் கொள்ளாதது
அப்போது தெரியவில்லை.


கல்யாண சந்தடிகள் ஓய்ந்து மூன்றாம் நாள் மாப்பிள்ளை வீட்டாரைக் கட்டுச் சாதக் கூடைகளுடனும் வசந்தியைக் கண்ணீருடனும் வழியனுப்பியபோது அவனும் கௌசல்யாவும் பஸ் நிலையம் வரை கூடவே சென்று வழியனுப்பிவிட்டுப் பின் பாஸ்கரையும் பஸ் ஏற்றிவிட்டதும் வீட்டுக்கு வந்து இருவரும் வயிற்றுக்கு இதமாக வற்றல் குழம்பும் வெண்டைக்காய்ப் பொரியலும் தயிர் சாதமும் சாப்பிட்டுவிட்டு, கௌசல்யா எதிர்வீட்டுக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிட, அவன் மாடிக்குச் சென்று மேசை மின்விசிறியைப் போட்டுக்கொண்டு களைப்புத் தீர ஒரு மணி நேரம் உறங்கினான்.

குரல்கள் கேட்க விழித்துக் கொண்டான்.

முதலில் சிறிது நேரம் ஒன்றும் புரியவில்லை. ஏன் எல்லோரும் இவ்வளவு சத்தமாகப் பேசிக்கொள்கிறார்கள்? சட், கொஞ்ச நேரம் நிம்மதியாகத் தூங்க முடிவதில்லை.

"காமு, லக்ஷ்மி ஏன் கண்ணைக் கசக்கறா?"
என்று காதில் விழுந்தபோது அவன் சகலமும் விழித்துக்கொண்டு ஓசையின்றி மாடியின் திறந்தவெளிப் பகுதிக்கு நழுவினான்.

கூடத்திலும் ஸ்வாமி அறையிலும் வெளிச்சத்துக்காக எடுத்துக் கட்டிய சுவர்களின் சின்ன ஜன்னல்களைத் தகர ’ஷேட்’கள் மறைத்திருக்க, அவன் மறைவாக ஒரு நிழலில் அமர்ந்துகொண்டு இருபுறமும் பார்வையை ஓடவிட்டபோது, ஹாலில் மாமி அழுத கண்ணும் சிந்திய மூக்குமாகத் தன் புடவைத் தலைப்பை நனைத்திருந்தாள். அம்மாவின் கண்களும் சிவந்திருந்தன.

"என்னவாம் காமு? ஏன் அவள் அழறா?"

"தெரியலை பாட்டி! அவள் ஏதோ அக்காவைப் பேசியிருப்பா போலிருக்கு. அக்காவும் திருப்பிக் கொடுத்திருக்கா."

"உங்க அக்காவுக்கும் இவ்வளவு வாய் கூடாதுடி காமு! இருவத்தஞ்சு வருஷம் கழிச்சு வந்து நமஸ்காரம் பண்றவனை நாலுபேர் முன்னாடி ’இப்பவானும் பெரியவாளை மதிக்கத் தோணித்தே, சந்தோஷம்! நல்லா இருங்கோ!’ என்று சொன்னது எந்த விதத்தில் நியாயம் சொல்லு?"

சித்தி அந்தக் கேள்விக்கு பதில்கூற விருப்பமின்றி அந்த இடத்தைக் காலி பண்ண விமரிசனங்களும் விவாதங்களும் தொடர்ந்தன.

"இவ அக்கா எப்போதும் இப்படித்தான். பார்க்கத்தான் மீனாக்ஷி மாதிரி இருக்காளே தவிர, பேச ஆரம்பிச்சா குத்தல்தான்."

"அதிருக்கட்டும் ஷேஷம்மா! இந்த நாணாவும் லேசுப்பட்ட ஆளில்லை. அந்தக் காலத்திலேயே அவன் தான்தோன்றித் தனமாக இருப்பான். இப்ப ஏகப்பட்ட பணம் என்ன, கார் என்ன, பங்களா என்ன! கேக்கவா வேணும்?"

"அவன்மேல் தப்பில்லை பாட்டி. இத்தனை வருஷம் கழிச்சுப் பாக்கறபோது, ’என்னமோ வாசல் படியை மிதிக்க மாட்டேன்னு சபதம் பண்ணியே? உன்னை மிதிக்க வெச்சுட்டேன் பத்தியா?’னு இவள் பெருமை அடிச்சுக்கலாமா?"

"அதுக்கு நாணா, ’நான் தாண்டிப்போன படியை மிதிக்கலையே! இது வேற படின்னா? நீங்கதான் இப்போ வேற வீடு மாறிட்டேளே? அதுவும் இந்தப்படி சின்னதுதானே, தாண்டியே உள்ள வந்துட்டோம்’னு வேடிக்கையாச் சொன்னது மட்டும் இவாளுக்கு சுருக்குனு தச்சதாக்கும்?"

"ஏன்?"

"தோட்டமும் தொரவுமா இருந்த பெரிய வீட்டை வித்துட்டு இவா இந்தச் சின்ன வீட்டை வாங்கினதை அவன் இடிச்சுக் காட்டிட்டானாம்!"

"என்னவோ போங்கடி! தான் ஆடாட்டாலும் தன் சதை ஆடும்னு சொல்லுவா. இங்க என்னடான்னா வலது கையும் இடது கையும் அடிச்சுக்கறது!"

"நாணா பொண்ணுக்கு மஹாதேவய்யர் பையனைப் பாக்கறாளாமே?"

"நெருங்கின சொந்தத்தில் கல்யாணம் பண்ணிண்டா செல பேர்க்குக் குழந்தை இல்லாமப் போயிடறது!"

"சிறிசுகள் ரெண்டும் ஒண்ணை ஒண்ணு விரும்பறதுகள்! பெரியவா விட்டுக்கொடுக்கலைன்னா ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடப் போறது!..."

"எல்லார்க்கும் நான் ஒருத்திதான் கிடைச்சேன். கல்யாணமாகி இருவத்தஞ்சு வருஷம் கழிஞ்சும் இந்த மாதிரி அல்லல் படணும்னு என் தலையெழுத்து. என் தலையெழுத்துதான் இப்படின்னா என் பொண்ணோட---"

"பார்த்தியா நாணா உன் பொண்டாட்டி பேசறதை?"

"பேசாம என்ன செய்வா? ஆசையோட அத்தையைப் பார்க்க வந்த எம் பொண்ணை நீ ’ட்ரீட்’ பண்ணின விதம் தெரியாதா? உனக்கு என்னைப் பிடிக்கலைன்னா என் பொண்ணு என்ன பண்ணுவா?"

"உன் பொண்ணு இல்லததையும் பொல்லாததையும் சொல்லிருப்பா. நான் என்ன அவளைக் கடிச்சா தின்னுட்டேன்? சொல்லி என்ன பிரயோஜனம், அவ அம்மா மாதிரிதானே அவளும் இருப்பா?"

"அக்கா, வார்த்தையை அளந்து பேசணும். என்னைப் பத்தி எங்க ஆத்துக்காரருக்குத் தெரியும். உங்களைப் பத்தி எல்லாருக்கும் தெரியும்!"

"என்னடி சொன்னே?"

"லக்ஷ்மீ, நீ ஓவராப் போறே."

"என்ன அத்திம்பேர் ஓவராப் போறா? ஏதோ கல்யாணமான புதுசுல நீங்க ரெண்டுபேரும் ஆட்டிவெச்சபடி ஆடினோம். இன்னமும் பணிஞ்சுபோணும்னு எங்களுக்கு என்ன தலையெழுத்து?"

"அதுதான் சரிக்குச் சரியா உக்காந்து சம்பந்தம் பேச வந்துட்டியாக்கும்?"

"நாங்க ஒண்ணும் சம்பந்தம் பேச ஆசைப்படலை?"

"பின்ன நாங்களா கேக்கறோம்?"

"நாணா, நீ பொண்ணைப் பெத்தவன்! நீதான் தணிஞ்சு போகணும்."

"எத்தனை நாளைக்கு காமு? இவ்வளவு நாள் கழிஞ்சும் எங்களை இந்தப் பாடு படுத்தறவா நாளைக்கு என் பொண்ணை நல்லா வெச்சுப்பான்னு என்ன உத்தரவாதம்? அதான் ஏற்கனவே கோடி காமிச்சுட்டாளே? உரிமை எடுத்துக்கட்டும், வேணாங்கலை. அதே நேரத்தில் கொஞ்சமாவது பாசமும் இருக்கவேண்டாம்?"

"பாசத்துக்கு என்ன கொறச்சல் நாணா? சில பேருக்கு மனசில எதையும் வெச்சுக்கத் தெரியாது. உனக்கே உங்க அக்காமேல நம்பிக்கை இல்லேன்னா எப்படி?"

"உங்களுக்கெல்லாம் அக்கா என்ன செஞ்சாலும் தப்பில்லை. இவாளைக் கேள்வி கேட்பாரில்லையா?"

"சில பேருக்கு நான் எது செஞ்சாலும் தப்புத்தான். சித்தம் போக்கு சிவன் போக்குன்னு இருக்கறவாளை யாராலும் திருப்திப்படுத்த முடியாது."

"ஆமாம், நாங்கள்லாம் சித்தம் போக்கு சிவன் போக்குன்னு அலையறவா. அதான் ஆலகால விஷத்தைக் கண்டத்துல வெச்சிண்டு துப்பவும் முடியாம முழுங்கவும் முடியாமத் தவிச்சிண்டு இருக்கோம்."

"லக்ஷ்மீ, நீ ஏன் குறுக்கே குறுக்கே பேசி விஷயத்தை சிக்கலாக்கறே?"

"பார்த்தியாடி காமு, நான் விஷமாம்!" என்று அம்மா கண்ணீர் உகுத்தாள். "அந்தக் காலத்தில நாணாட்டத் தலைல அடிச்சிண்டேன், கேக்கலை. இவள் வந்த நேரம் அப்பா போய்ச் சேர்ந்தார். இவள் பொண்ணு வந்திட்டுப் போனா, எங்களுக்கு வீடே போய்ட்டது!"

அம்மாவின் தாக்குதலில் மாமி நிலைகுலைந்து கண்ணீர் பெருக்க,

கண்ணீர்த் துளிகளை ஆகுதியாகக் கொண்டு
கோபக் கனல்கள் செழித்தன.


அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -- அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு; -- தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
---மஹாகவி பாரதியார், அக்கினிக் குஞ்சு

நேற்றுவரை தோழமை வேடம் பூண்டிருந்த
முகங்களில் வன்மம் குடிகொண்டது.
முகங்களின் தசைநார்கள் அதிர்ந்து
சொல்லம்புகளை எய்தன.

அந்த அம்புகள் நுனிகளில் சினமெனும்
நஞ்சைத் தாங்கி நெஞ்சைக் குதறின.

சொற்கள் சொற்களைக் காயப் படுத்தின.
குரல்கள் குரல்களை ஆக்கிரமித்தன.
குரல்களோடு பொருதன. வென்றன. தோற்றன.
பெரியோரைச் சிறியோராக்கின.


உறவுகள் எரிந்து தணிந்தபோது அவனும் கௌசல்யாவும் தனி மரங்களாக விடப்பட்டனர்.

*** *** ***
 
29
[அடுத்த அத்தியாயத்துடன் நிறைவுபெறும்.--ரமணி]

புதியது காணிற் புலனழிந் திடுவாய்
புதியது விரும்புவாய், புதியதை அஞ்சுவாய்
---மஹாகவி பாரதியார், மனப் பெண் 7-8


கரசரண க்ருதம் வாக்காயஜம் கர்மஜம் வா |
ஶ்ரவணநயனஜம் வா மானஸம் வாபராதம் |
விஹிதமஹிதம் வா சர்வம்*ஏதத்க்ஷமஸ்வ |
ஜய ஜய கருணாப்தே ஶ்ரீமஹாதேவ ஶம்போ |

கரசரண க்ருதம் வாக் | காயஜம் கர்மஜம் வா... |
ஶ்ரவணநயனஜம் வா | மா...னஸம் வா பராதம் |
விஹிதமஹிதம் வா | சர்வம்...ஏதத்க்ஷமஸ்வ |
ஶிவ ஶிவ கருணாப்தே | ஶ்ரீ மஹாதேவ ஶம்போ |
ஶிவ ஶிவ கருணாப்தே... | ஶ்ரீ... | மஹாதேவ ஶம்போ... |


மெலிதான ’ஃபேன்’ காற்றில் தம்புராவின் குடத்தில் விழுந்திருந்த அவள் பட்டுப்புடவைத் தலைப்பின் குஞ்சங்கள் சிலிர்க்க, விஜயாவின் குரல் ஹால் தூண்களில் பட்டு எதிரொலித்தது.

"ஶம்போ மஹாதேவ..."
என்று இமைகள் தாழ்ந்து ஓரம்பார்க்கும் விழிகளால் அவள் ஐந்துமுறை ஆழமாக விண்ணப்பித்துக் கொண்டபோது, ஆவர்த்தியாக வந்த அப்பாவின் பெயர்ப் பிரயோகத்தில் அம்மாவின் கண்கள் மருண்டு அப்பாவை நோக்கி உடனே சமாளித்துக் கொண்டன.

"சரணம் ஶ்ரீ காளதீசா,
ஶம்போ... மஹாதேவா!"


என்று மறுபடியும் மூன்று முறை பக்தி தோய்ந்த குரலில் அவளது விண்ணப்பம் தொடர்ந்தபோது, அம்மாவின் கண்கள் அப்பாவின் முகத்தில் நிலைத்ததைப் பார்த்தான்.

அப்பாவின் முகத்தில் புன்னகை மெலிதாகத் துளிர்த்து, அவர் கண்கள் அவள்மேல் கருணையுடன் படிந்திருக்க, பணிவும் பவ்யமும் கலந்து பயமில்லாமல் விஜயாவின் குரல், ஒரு கோவில் மணியின் ஓங்காரத்துடன் செவிகளில் பாய்ந்து ஊனை உருக்கியது.

அவன் விரல்கள் சப்தமில்லாமல் தாளமிட, விழிகள் அவளை நோக்கியிருந்தன.

அப்பாவின் கடிதத்தில் கண்டிருந்த, ’நன்றாகப் பாடும், வீணை வாசிக்கும், மூக்கும் முழியுமாக இருக்கும்’ பெண் இப்போது இப்படி அவன்முன்பு விஸ்வரூபம் எடுத்திருப்பது அவனை பிரமிக்க வைத்தது.

பெண் என்பதைவிட, ’டீன் ஏஜ்’ பருவத்தை அப்போதுதான் கடந்திருந்த குழந்தையாகத் தோன்றினாள். தழையத் தழையப் பின்னியிருந்த கூந்தலில் மல்லிகைத் தேன்கூடு. கொஞ்சம் ஒல்லியாக, அவனைவிடக் கொஞ்சம் நிறமாக இருந்தாள். அனாவசிய ஒப்பனைகள் இன்றி புதிதாகக் குளித்த செழுமையுடன் இருந்தாள். புருவ அலைகளுக்கிடையில் ஸ்டிக்கர் சூரியன் இறங்கிக் கொண்டிருக்க, மேலே சின்ன மேகமாக விபூதிக் கீற்று. பாடலின் நிரவல்களுக்கு ஏற்றபடி அவள் கண்டமும் முகத்தசைகளும் தென்றலாக அசைய, அவ்வப்போது சுருங்கி விரியும் நாசி மடல்களில் வசீகரமும் காதுகளில் வைரமும் தெரிந்தன. தம்புராவின் தந்திகளை மருதாணியால் சிவந்த நீளமான விரல்கள் மீட்டின. முதுகை நிமிர்த்தி கால்களைச் சம்மணமிட்டு அவள் அமர்ந்திருந்த பாங்கில் தன்னம்பிக்கையும் உயரமும் தெரிந்தன. கழுத்தில் தங்க நகையருவிகள் இறங்கிப் புடவையில் மறைய, கைகளில் பொன் வளையல்கள் சிணுங்கின.

தரையில் பரந்திருந்த இரட்டை அகலப் பட்டுப் பாயில் அவளுக்கு இருபுறமும் அவள் அம்மாவும் அவன் அம்மாவும் அமர்ந்திருக்க, அவர்கள் முன் வெள்ளித்தட்டில் மலர்களும் பழங்களும் தாம்பூலமும் நிறைந்திருக்க, பின்னால் அவள் தங்கையும் இரண்டு மாமிகளும் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவனும் அப்பாவும் அவள் அப்பாவும் சோபாவில் அருகருகே அமர்ந்திருக்க, அவனுக்கு வலப்புறம் ஸ்டூல் நுனியில் உட்கார்ந்திருக்கும் அவள் தம்பி வாசலைப் பார்த்துக் கொண்டிருக்க, சுவரில் இருந்த ஸ்வாமி அலமாரியில் சிவபெருமான் காளை வாகனத்தில் குடும்ப சமேதரராக எழுந்தருளியிருக்க, அவர்முன் சிறிய வெள்ளி விளக்கின் ஜோதி அசையாமல் தூண்போல் ஒளிர்ந்திருக்க, ஆங்காங்கே சொருகியிருந்த ஊதுபத்திகளின் சுகந்தம் ஹால் முழுவதும் வியாபித்திருக்க,

விஜயாவின் குரல் அசையும் பொருள் அசையாப் பொருள் எல்லாவற்றிலும் கலந்து, நிறைந்து, ஒவ்வொரு மனதாக வலம்வந்தது.

"அம்போஜ சம்பவனும் அன்பான மாயவனும்
அடிமுடி காணா நெடுமலை வாண
அகில புவன பரிபாலா சகல வரகுண விஷாலா!"


குரலின் அழுத்தத்தில், தெளிவில், வார்த்தைகள் உயிர்ப்பிக்கப்பட்டுக் காற்றில் மிதந்தன. மீண்டும் மீண்டும் அவள் அவற்றை அழைத்து மெருகூட்டி அனுப்பியபோது புதுப்புது அர்த்தங்கள் சேர்ந்துகொண்டன. அறிந்தோ அறியாமலோ அவள் அந்த வரிகளில் அப்பாவின் ’கேரக்டர்’-ஐ சிறைப்படுத்திவிட்டது வியக்க வைத்தது.

ஒருமுறை---ஒரே ஒருமுறை---அவள் விழிகள் உயர்ந்து அவன்மீது நிலைத்துப் பின் தாழ்ந்து ஒதுங்கின.

"அறியேன் | சின்னஞ்சிறியேன் உனக்கனந்தம் | தண்டனிட்டேன்...
அபராதங்கள் முழுதும் | க்ஷமித் தருள்வாய் | கைகும்பிட்டேன்...
பரிவாய் உன்சொல் | கனவில்கொண்டு | பிழைக்கும் வழி தொட்டேன்...
பேதை யாகிலும் உன் | பாதம் பணியும் என்...
பெருகிய பவ வினைதீரும் | குருபரனே கருணைக் கண்பாரும்..."


அந்த ஒரு பார்வையில் அவனை அவளுக்குப் பிடித்துவிட்டதும் அவனது பதில் வேண்டுவதும் தெரிந்தது. அந்த வேண்டுதலை வெளியிட்ட வரிகளில் தோய்ந்த குரலின் பணிவும் விஸ்வாசமும் நெகிழவைத்தது. அந்த வேண்டுதல் அவனிடமா அல்லது அப்பாவிடமா என்ற ஐயமும் எழுந்தது. இந்த சமயத்திற்காக இந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்திருந்த விதத்தில் அவளது தைரியமும் சுதந்திர மனப்பான்மையும் குடல்வலிவும் புலப்பட, அவனுக்கு அவளைப் பிடித்துவிட இவையே போதுமானதாக இருந்தன.

பாடலைக் கண்மூடி ரசித்தாலும் அவளது துணிவை அப்பா எப்படி எடுத்துக் கொள்வாரோ என்ற கவலை மெல்லத் தலைதூக்கியது. அன்று காலை அவன் அம்மாவிடம், "உங்களுக்குப் பெண் பிடிச்சிருந்தா நிச்சயம் பண்ணிடலாம். எனக்குன்னு தனி அபிப்ராயம் கிடையாது. அதாவது என்னைப் பொறுத்தவரையில் ஓகேன்னு எடுத்துக்கோங்கோ. இன்னொரு முறை நான் பெண்பார்க்க வரமாட்டேன். அப்படி உங்களுக்குப் பிடிக்கலைன்னா எனக்குக் கல்யாணமே வேண்டாம்", என்று கூறியது நினைவுக்கு வர, அவள் கண்கள் மீண்டும் அவனை நோக்கி உயர்ந்தபோது அவனுக்கு அந்தப் பாடலின் செய்தி புரிந்தது.

"இதுமாதிரி விட்டேத்தியாப் பேசறதில் அர்த்தமில்லை. இது உன்னுடைய கல்யாணம். உன் சம்மதம்தான் முக்கியம். நல்ல, பெரிய இடம். பொண்ணைப் பொறுத்தவரை ஒண்ணும் குறைசொல்ல முடியாது. இப்பத்தான் படிப்பை முடிச்சிருக்கா. அவாளுக்கும் இதுதான் முதல் முயற்சி. அப்பா ரெண்டு வருஷம் திண்டுக்கல்ல வேலை பார்த்தபோது அவளோட அப்பா, கூட வேலை பார்த்திருக்கார். நம்மாத்துல சம்பந்தம் பண்றதை பாக்யமா நினைக்கறா."

"அதான் பெரியவாளாப் பார்த்துப் பேசி முடிவு பண்ணிட்டேளே? அப்புறம் இதுல நானோ அவளோ சொல்றதுக்கு என்ன இருக்கு?"

"அதெப்படி? என்னதான் பெரியவா பார்த்தாலும் பொண்ணுக்கும் பையனுக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிக்க வேண்டாமா? நீ ஒரே பொண்ணைத்தான் பார்ப்பேன்னு நினைக்கற மாதிரி அவளும் நினைக்கலாம் இல்லையா? மனசுங்கறது எல்லார்க்கும் ஒண்ணுதானே?"

அவன் நினைத்ததை அவள் நினைப்பது புரிந்தது, அந்தப் பாடல் வாயிலாக.

"ஶம்போ... மஹாதேவா!
சரணம் ஶ்ரீ காளதீசா,
ஶம்போ... மஹா... தேவா...!"


என்று இறுதியாக அவள் அப்பாவின் பெயர்விளித்து அவரை ஒருகணம் பார்த்துவிட்டுப் பாடலை நிறைவு செய்தாள்.

பாடல் முடிந்ததும் அப்பா மூச்சை ஆழமாக உள்ளிழுத்துவிட்டுக் கண்களைத் திறந்து, "குழந்தை ரொம்ப நன்னாப் பாடறா", என்றார்.

"எல்லாம் உங்கள் ஆசிர்வாதம்", என்றாள் அவள் அப்பா.

இதற்குள் அம்மா எழுந்துகொண்டு புடவைத் தலைப்பைப் போர்த்தியபடி அப்பாவின் அருகில் வந்துநிற்க, அவள் தம்புராவை வைத்துவிட்டு எழுந்து மீண்டும் ஒருமுறை அவர்களை நமஸ்கரிக்க, அப்பாவும் எழுந்துநின்று அவள் நமஸ்காரத்தை ஏற்று, "சகல சௌபாக்யங்களோட சௌக்யமா இருக்கணும்மா!", என்று ஆசிர்வதிக்க, எல்லோரும் குறிப்பறிந்து விலக, அவர்கள் தனியாக விடப்பட்டனர்.

சமையல் அறையில் பாத்திரங்களைக் கையாளும் ஒலிகளுக்கு நடுவில், "ஒரு அஞ்சு நிமிஷம் பொறுத்து டிஃபன் கொண்டுவை பத்மா. அவா டிஸ்கஸ் பண்றா", என்று அவள் அப்பா கிசுகிசுப்பது கேட்டது.

அப்பா அவனைப் பாசத்துடன், பரிவுடன், பெருமையுடன் பார்த்து, "ராஜா, உன்னோட ஒப்பீனியன் என்ன?" என்றார்.

"எனக்குப் பிடிச்சிருக்கு."

"நிச்சயத்துக்கு நாள் பார்த்துடுங்கோ", என்றார் அப்பா, அவர்களிடம் இருந்து விடைபெறும் முன்.

ல்யாணத்துக்குப் பின் காதலிப்பது எளிதாக இருந்தது. சுகமாக இருந்தது.

மனைவியே காதலியாகிப் போனதும் மனதின் சஞ்சலங்கள், சபலங்கள் மறைந்து---அல்லது மறந்து---போயின.
மேனியைப் படித்தபின் மனதைப் படிப்பது சாத்தியமானது.

பிரம்மச்சரியக் காதலின் கவலையும் அவசரமும் அச்சமும் அனிச்சயமும் அனாதரவும் அறவே நீங்கி இப்போது அந்த இடங்களை நிம்மதியும் நிதானமும் நிர்பயமும் நிர்விகல்பமும் பிடித்துக்கொள்ள அவர்களது இல்லற வாழ்க்கை இனிதே தொடங்கி நல்லறத்தின் வழிப்பட்டு நலமாய் நடந்தது.

’அன்பும், மதிப்பும் வேட்கையும் இரண்டறக் கலந்திருப்பதே காதல்’ என்று அவன் டைரியின் முதல் பக்கத்தில் எழுதியிருப்பது இப்போது கணவன் மனைவி இருவருக்கும் சாத்தியம் ஆனது.

மாதங்களடைவில் விஜயா அவன் டைரியில் நிறைய இடத்தைப் பிடித்துக் கொண்டாள். பாஸ்கரைப் போல் எப்போதும் சுத்தமாக, புதிதாகத் தோன்றும் அவள் அவனுக்கு வற்றாத ஆச்சரிய நதியாய் விளங்கினாள். அவளது கர்நாடக சங்கீதப் புலமை அவனையும் கர்நாடக சங்கீதம் கேட்கவைத்தது; ரசிக்கவைத்தது. அவளும் அவனது இலக்கிய ஈடுபாடுகளில் ஆர்வம் காட்டி, அவன் பரிந்துரைத்த ஆங்கில நாவல்களையும், சிறுகதைகளையும், கவிதைகளையும் படித்து (தமிழ்க் கதைகளுக்கும் கவிதைக்கும் அவள் ஏற்கனவே நல்ல ரசிகையாக இருந்தாள்) அவற்றை அவனுடன் விவாதிக்கும் அளவு வளர்ந்தாள். விரைவிலேயே அம்மாவின் மேற்பார்வையில் அவள் தன் நளபாகத்தை மேம்படுத்தி, வாய்க்கு ருசியாகவும் வயிற்றுக்கு இதமாகவும் சமைக்கக் கற்றுக்கொண்டாள்.

எல்லாவற்றையும் விட, அவளை அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மிகவும் பிடித்துப் போனது. அம்மா தன் கேலிப் பேச்சுகளை மிகவும் குறைத்துக் கொண்டுவிட, அப்பாவும் அவளுடன் எளிதாகப் பழகி அவளைப் பாசத்துடன் கவனித்துக் கொள்ள, மகள் இல்லாத வீட்டில் மாற்றுப் பெண் மகளானாள்.

கல்யாணமான மறு வருடமே அவனுக்கு மதுரையில் ஒரு புகழ்மிக்க கல்லூரியில் வேலை கிடைத்துவிட, ஊரிலிருந்து தினமும் மதுரை சென்றுவர முடிந்ததால் எல்லோரும் ஒன்றாகக் குடும்பம் நடத்த முடிந்தது.

அனுவும் ஜெயந்தியும் மாலதியும் கௌசல்யாவும் இப்போதெல்லாம் வெறும் கதைப் பாத்திரங்களாகிப் போக, அவனுக்குத் துணைதேடும் போட்டியில் அப்பா அவனுக்கு வாய்ப்பே அளிக்காமல் வென்றுவிட்ட ஏமாற்றம் மட்டும் மனத்தின் அடியில் வண்டலாய் இறங்கியிருந்தது.

அவர் அமைத்துவிட்ட ’ரெகார்ட்’-ஐ இனி அவனது அடுத்த தலைமுறை வம்சம்தான் உடைக்க முடியும் என்று புரிந்தது.

அவன் இவ்வளவு காலம் போற்றிப் பாதுகாத்து வந்த டைரியின் அந்தரங்கம் இனி அவனுக்கு மட்டும் சொந்தமானது அல்ல, அதை விஜயாவும் படிக்கவேண்டும், அதை அவள் படிப்பது அவனைப் பற்றி அவளும் அவளைப் பற்றி அவனும் மேலும் புரிந்துகொள்ள உதவும் என்று தீர்மானித்து அந்த அக்கினிப் பரீட்சைக்குத் தயாரானான்.

*** *** ***
 
30

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கிஇவ் வையம் தழைக்குமாம்
---மஹாகவி பாரதியார், புதுமைப் பெண் 4


ரண்டு நாட்கள் உட்கார்ந்து அவன் டைரியின் இரண்டு ’வால்யூம்’-களையும் ஒரே மூச்சில் படித்து முடித்த விஜயாவின் முதல் ’ரியாக்*ஷன்’ ஒரு கேள்வியாக வெளிப்பட்டது.

"இதென்ன டைரியா, சுயசரிதமா, முன்கதைச் சருக்கமா, நாவலா அல்லது கற்பனை விரவிய வரலாறா?"

"வாழ்க்கை" என்றான் ஒற்றைச் சொல்லில்.

"எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு."

"தாங்க்யு விஜி."

"உங்களை அல்ல. உங்கள் கதையை."

"என்ன சொல்ற விஜி?"

"கதை முழுக்க உங்கள் சுயநலம்தான் பிரதானமா இருக்கு. எதுக்கெடுத்தாலும் நான். என் ஆசைகள், கனவுகள், லட்சியங்கள்! மத்தவாள்லாம் அப்புறம்தான்."

"என்னுடைய டைரியில் என்னைப்பற்றி தானே விஜி பிரதானமா எழுதமுடியும்?"

"அதுக்காக மத்தவாளைக் குறை சொல்றதுக்கும் ஓர் அளவு வேண்டாம்? உங்க அப்பா அம்மாவை இப்படித்தான் மிகைப்படுத்தி வரையறதா? They look like caricatures, not portraits."

"நோ, விஜி. Certainly not."

"எனக்கு அதிகம் ரிசெம்ப்ளன்ஸ் தெரியலை. Specially about your mother. கல்யாணத்துக்கு முன் உங்க டைரியைப் படிச்சிருந்தா நான் உங்கம்மாவைப் பத்தி என்னென்னவோ நினைச்சு பயந்திருப்பேன். உங்கப்பாகூட எனக்கு அவ்ளோதூரம் ஒரு இன்ட்ரோவர்ட்டாத் தெரியலை."

"நான் உனக்கு ஏற்கனவே சொல்லியிருக்கேன் விஜி, கல்யாணமான புதுசுல. மானுடம் என்பது மனதைப் பொறுத்தது. ஒரு மனிதனைப் பற்றி---அது ஆணோ பெண்ணோ---மற்றவர்கள் என்ன நினைக்கறாங்களோ அதுதான் அவன். அல்லது அவள். தன்னுடைய நினைப்பும் மற்றவர்களுடைய நினைப்பும் ஒத்துப் போகும்போது மனிதன் உயர்ந்தவனாகிறான். ஆனால் இது நூத்துல ஒருத்தருக்குத்தான் சாத்தியம். அப்பாம்மாவைப் பொறுத்தவரைக்கும் நீ மனுஷாளைப் பார்க்கறதைவிட மனசைப் பார்க்கக் கத்துண்டிருக்கே."

"இருபத்தஞ்சு வருஷத்துக்கு மேல பழகியும் உங்களுக்கு அவர்கள் மனசு பிடிபடலையா? Then something is wrong with you!"

"Impressions, விஜீ! நான் அவர்கள் மனசைப் புரிஞ்சுக்க முயலாமல் இல்லை. ஆனால் அந்த முயற்சி அவர்களிடம் இருந்ததாகத் தெரியவில்லை. என்னுடைய துணை தேடும் முயற்சிகள்ல அவர்களிடமிருந்து எனக்கு ஒரு சாதகமான ரெஸ்பான்ஸ் அல்லது கைடன்ஸ் கிடைக்கலையே?"

"உங்க அப்பா அம்மா இருக்கும்போது உங்களுக்கென்ன தனியாத் துணை தேடும் முயற்சி? அதுவும் சின்ன வயசிலேர்ந்தே?"

"That's a good question. எனக்கு இதுக்கு சரியா பதில் சொல்லத் தெரியலை. ஒருவேளை என்னுடைய இயற்கை அப்படி இருந்திருக்கலாம். அல்லது நான் வளர்ந்த சூழ்நிலையில் என்னுடைய உள்மனசில தோழமையின் பற்றாக்குறையால I might have felt insecure."

"பேர் என்னவோ ராஜாராமன். குணத்தில் கிருஷ்ணன்."

சிரித்தான்.

"உங்களுடைய தேடல் முடிஞ்சுபோச்சா அல்லது இன்னும் தொடருமா?"

"இன்னும் தொடரும்."

"என்னது?..."

"ஆமாம் விஜி. ஆனால் எனக்காக அல்ல. இன்னும் நாலு மாசத்தில் நமக்குப் பிறக்கப் போற ப்ரேம் அல்லது ப்ரீதிக்காக அந்தத் தேடல் தொடரும்."

"இப்பவே பேர் வெச்சாச்சா? குழந்தையைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அது தன் துணையைத் தானே தேடிக்கொள்ளும்! அப்பா மாதிரிதானே குழந்தையும் இருக்கும்?"

"ஏன், அம்மா மாதிரி இருக்கலாமே?"

"என்னை மாதிரி ஏமாளியாகவா?"

"என்ன சொல்ற விஜி? நான் உன்னை ஏமாத்திட்டேன்னு நினைக்கறயா? அல்லது நீயும் கல்லூரி வயதில காதலிக்கலையேன்னு வருத்தப்படறயா?"

"யு ஆர் டீஸிங் மி. நீங்க காதலிச்சா உலகமே காதலிக்கணும்னு ஒண்ணும் சட்டமில்லை."

’கௌசல்யா உன்னை விரும்பறான்னா நீயும் பதிலுக்கு அவளை விரும்பணும்னு ஒண்ணும் சட்டமில்லை.’ என்று அப்பா சொன்னது நினைவில் பளிச்சிட, "எங்கப்பா மாதிரியே பேசறே விஜி. அதுதான் அவருக்கு உன்னைப் பிடிச்சிருக்கு."

"அவருக்குப் பிடிச்ச அளவுகூட உங்களுக்குப் பிடிக்கலை போலிருக்கே?"

"கமான் விஜி! பொய் மட்டும் சொல்லப்டாது. கல்யாணமாய் இதுநாள் வரைக்கும் நான் என்னைக்காவது உன்னைப் பிடிக்காத மாதிரி நடந்துகொண்டேனா?"

"வெளிப்படையா இல்லை. ஆனால் உங்க உள்மனசில அனு, ஜெயந்தி, மாலதி, கௌசல்யாவுக்கெல்லாம் அப்புறம்தானே நான்? Now I know I rank low in your personal preference."

"It's not like that-னு புரிஞ்சுக்கோ விஜி! கல்யாணத்துக்கு முன் காதலிச்சது குற்றமில்லை, பாவமில்லை. அந்த சமயத்தில் நீ என் வாழ்க்கையில் குறுக்கிட்டிருந்தா உன்னையும் காதலிச்சிருப்பேன்! It's as simple as that. ஆனால் ஒண்ணு. நான் உன்னைக் காதலிக்கறேங்கற ஒரே காரணத்துக்காக எங்க அப்பா அம்மா உன்னை எனக்குப் பார்த்திருக்க மாட்டா. அட்லீஸ்ட், இப்ப எனக்கு அந்த சான்ஸ் கிடைச்சிருக்கு. I love you Viji, with all my heart and soul! இந்த க்ஷணத்தில என்னைவிட அதிர்ஷ்டமானவன் உலகத்தில் யாரும் இருக்கமுடியாது. என்னைப் பார் விஜி! Do you love me?"

"நாட் யெட்", என்றாள் பொய்க் கோபத்துடன். "எனக்கு உங்களை இன்னும் சில கேள்விகள் கேட்கணும்."

"நல்லாக் கேள் விஜி."

"கல்யாணத்துக்கு முன் காதலிப்பது பாவமில்லை. ஆனால் காதலிச்சுக் கைவிடறது பாவமில்லையா? கௌசல்யா சரியாத்தான் சொன்னா, ’கல்யாணங்கறது ஆண்கள் சுயம்வரம்’னு."

"குட் லார்ட்! நான் ஒண்ணும் அவளைக் கைவிடலை. குடும்ப சிக்கல்களைத் தவிர்க்கவே நாங்கள் முழு மனசோட சம்மதிச்சு எங்கள் காதலைத் துறந்தோம். அவள் எழுதின லெட்டரைக் காட்டறேன், படிச்சுப்பார். You will be convinced."

"கௌசல்யாவுக்குக் கல்யாணம் ஆய்டுத்தா?"

"இன்னும் இல்லை. அவள் காலேஜ் ஸ்பான்சர் பண்ணி இப்ப கலிஃபோர்னியா யுனிவர்சிடில டாக்ரேட் பண்றா."

"அனு?"

"அனு, ஜெயந்தி, மாலதி பற்றித் தெரியாது."

"அப்ப பாஸ்கர் மாலதியைக் கல்யாணம் பண்ணிக்கலையா? என்னவோ பெரிசா ப்ரபோஸ்லாம் பண்ணினாரே? எல்லா ஆண்களுமே இப்படித்தான் போலிருக்கு."

"பாஸ்கர் பாவம் விஜி! வீட்டில் ஏகப்பட்ட எதிர்ப்புக் கிளம்பி, காதலிச்ச பொண்ணையும் கல்யாணம் பண்ணிக்க முடியலை. கல்யாணம் பண்ணிண்ட---அல்லது பண்ணிவைக்கப்பட்ட---பொண்ணும் ஒரே பிடுங்கல் டைப். அவனுக்கு இப்படி ஒரு சராசரி பொண்ணுதான் கிடைக்கணுமா?"

"அப்படீன்னா உங்க நண்பர்கள்ல யாரும் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கலை?" என்றாள் குரலில் கேலியுடன்.

"வசந்த் தவிர."

"வசந்த் ஒரு நண்பனாத் தெரியலையே? உங்க டைரியில அவர் ஒருதரம் தானே வரார்?"

"யு ஆர் ரைட். பாஸ்கர் அளவு அவன் எனக்கு நெருக்கமில்லை. ஆனால் நம்ம கல்யாணத்துக்கு வந்திருந்தான் குடும்பத்தோட."

"அவரோட வாழ்க்கை?"

"அவன் ரொம்ப சந்தோஷமா இருக்கான்."

"எனக்குத் தெரிஞ்ச ஒருத்தி இருந்தா. கல்பனான்னு பேரு. காலேஜ்ல ரெண்டு வருஷம் எனக்கு சீனியர். கல்லூரிப் படிப்பு முடிஞ்சதும் தான் காதலிச்சவனையே கல்யாணம் பண்ணிண்டா. அவள் இப்ப சந்தோஷமா இல்லை."

"எனக்குத் தெரிஞ்சு சில arranged marriages fail ஆகியிருக்கு."

டைரியின் ஒரு பக்கத்தைத் திருப்பி வைத்துக்கொண்டு சொன்னள்:

"காதலியே மனைவியாகிக் கசந்த வாழ்வும் உண்டு.
மனைவியே காதலியாகி மணந்த வாழ்வும் உண்டு.
ஆதலினால் காதல் செய்யத் தேவயில்லை உலகத்தீரே!"


அந்த வரிகளில் இருந்த கவிதையையும் கிண்டலையும் ரசித்தான்.

"வாழ்க்கைல எல்லாவிதமான சேர்க்கைகளும் சாத்தியம் விஜி."

"அதேதான் நானும் சொல்ல வரேன். வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துக்கணும். இப்படித்தான் மணவாழ்க்கை அமையும்னு என்னால் தீர்மானிக்க முடியாது."

"ஆனால் யாருடன் உன் மணவாழ்க்கை அமையணும்னு உனக்குத் தீர்மானிக்க முடியும் விஜி. உனக்கு இருக்கும் அந்த உரிமையை நான் மறுக்கக் கூடாது."

"என்னுடைய அந்த உரிமையைப் பயன்படுத்தறதால என் வாழ்க்கை சந்தோஷமா அமையும்னு உத்தரவாதம் இல்லை. உங்கப்பா சொன்ன மாதிரி, ’கல்யாணங்கறது அதைப் பண்ணிக்கறவாளோட சந்தோஷம் மட்டுமில்லை. அதில நேரடியா சம்பந்தப்பட்ட எல்லோரோட சந்தோஷமும் முக்கியம்.’ இந்த நோக்கம் பெரும்பாலும் காதல் கல்யாணங்கள்ல இருப்பதில்லை."

"அதுக்குக் காதலர்கள் மட்டுமே காரணமில்லை. அப்படிப் பார்த்தா தம் மகனுக்குத் தாம் பார்த்த பெண்ணை எத்தனை குடும்பங்கள்ல நல்லா வெச்சுக்கறாங்க?"

"இதுக்கெல்லாம் சைகலாஜிகல் காரணங்கள் இருக்கு. என்னைவிட உங்களுக்கு நல்லாத் தெரியும். என்னுடைய பாயின்ட், Marriage by choiceதான் சிறந்ததுன்னு சொல்லமுடியாது. There is no formula to make a marriage click,"

"Marriage by choice தான் சிறந்ததுன்னு நான் சொல்லவரலை. But it is preferable to marriage by chance."

"இருக்கலாம். அந்த ’சாய்ஸ்’ என்கிற உரிமையைப் பயன்படுத்த, பையனுக்கோ பெண்ணுக்கோ போதுமான அளவு மனமுதிர்ச்சி இருப்பதில்லை. பெற்றோர்களுக்கும் அந்த உரிமையில் பங்கு இருக்கணும்."

"என் டைரியில் நான் சொல்லியிருக்கற விஷயமே அதுதான் விஜி! பையனோ பெண்ணோ, காதலிக்கத் தலைப்படுவது இயற்கை. காதல் என்பது உன்னதமான சமூகம் அமைக்க இயற்கை அளித்துள்ள வரப்பிரசாதம். அதைப் பெற்றோர் புறக்கணிக்கக் கூடாது. சரியான இடத்தில் ஊக்குவித்தும் தவறான இடத்தில் திருத்தியும் அதை நெறிப்படித்தறதுதான் அவர்கள் கடமை. கல்யாண விஷயத்தில் மனப் பொருத்தத்துக்குத்தான் முதல் இடம் தரணும். மனங்கள் பொருந்துவதற்கு மக்கள் பழகணும், பெற்றோர் கண்காணிப்பில்."

"பெற்றோர் கண்காணிப்பில் மக்களைப் பழவிடணும் என்பது ஒரு நல்ல பாயின்ட். இந்தக் குழந்தையைப் பொறுத்தவரை அதற்கு நான் தயார்", என்று தன் வயிற்றைத் தொட்டுக் காட்டினாள். "ஆனால் சமூக மட்டத்தில் நீங்க விரும்பற மாறுதல்கள் அவ்வளவு சீக்கிரம் வரும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை."

அவனுக்கு அந்த நம்பிக்கை இருந்தது.

[நிறைவு பெற்றது]

*** *** ***
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top