6
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்து போனதனால்
நானுமோர் கனவோ?--இந்த ஞாலம் பொய்தானோ?
---மஹாகவி பாரதியார், ’உலகத்தை நோக்கி வினவுதல்’
"
எங்கடா போய்ட்டீங்க எல்லோரும்? காப்பி ஆறிப்போயிண்டிருக்கு!"
அம்மா-பானுவின் கூட்டழைப்பில் ஒவ்வொருவரும் தோட்டத்திலிருந்து ஓடிவந்து மளமளவென்று காப்பி குடித்துவிட்டுத் திண்ணையில் புத்தகப் பையுடன் உட்காரும்போது கூடத்துச் சுவர்க் கடிகாரம் ஏழடிக்கும்.
அதன்பின் சளசளவென்ற சந்தைக்கடை இரைச்சலில் மலயமான் திருமுடிக் காரி ரூபாய் 200 வீதம் குதிரை வாங்கி, விற்று, லாபமடைந்து, காற்றுக்கு எடையுண்டு என்று நிரூபிக்கத் தராசில் பலூனை நிறுத்துப் பார்த்து, பாத்திகள் அமைத்து நீர் பாய்ச்சி, வலையில் சிக்கிய சிங்கத்தை விடுவித்து, பாய்மரக் கப்பல் புயலில் சிக்கி ஆளரவமற்ற தீவில் ராபின்சன் க்ரூசோவுடன் ஒதுங்கிக் கோடுகளில் நாட்களைக் கணக்கிடும்போது, அவன் மட்டும் கண்கள் மடியில் உள்ள புத்தகத்தில் நிலைத்திருக்க, மனம் அனுவை நினைத்து அவளின் அன்றைய வருகையை எதிபார்த்துக் காத்திருக்க, மணி எட்டடித்ததும் ஒவ்வொருவராக பானுவின் அழைப்பில் எல்லாவற்றையும் மூட்டை கட்டிவைத்துவிட்டுக் குளிக்கப்போக, ஒன்பது மணிக்கெல்லாம் டிஃபன் ரெடி.
அம்மாவும் பானும்வும் ஒருவர் மாற்றி ஒருவர் சளைக்காமல் சுடச்சுட வார்த்துப்போட அவனும் வசந்தியும் சந்துருவும் முரளியும் கண்ணனும் முழுமூச்சுடன் தோசையை ஒருகை பார்க்க---
எல்லோருக்கும் முதல் தோசைக்கு உறியிலிருந்து தேன்பாகு. அடுத்தது மிளகாய்ப் பொடியுடன் இரண்டு. அப்புறம் ஒன்று கெட்டித் தயிருடன்.
ஆகாரம் முடிந்த கையோடு அவர்களின் வால்ட் டிஸ்னி உலகம் இயங்கத் தொடங்கிவிடும். இதற்குள் அனுவும் குளித்து சாப்பிட்டுவிட்டு கைகால் முகம் எல்லாம் மஞ்சள் மணக்க, "நானும் ஆட்டத்துக்கு வருவேன், இல்லேன்னா ஆட்டத்தைக் கலைப்பேன்!" என்ற பிடிவாதத்துடன் அவர்களோடு சேர்ந்துகொள்ளுவாள்.
பழைய தபால் கார்டுகளை நீளவாட்டில் ஒழுங்காக மடித்து கூடத்திலிருந்து திண்ணை வரை இரண்டு வரிசைகள் ரயில் பெட்டிகளாகப் பொறுமையுடன் நிறுத்திவைத்து (இன்ஜினுக்கு ஒரு கலர் கார்டு), "சென்னை செல்லும் தூத்துக்குடி எக்ஸ்ப்ரஸ் இன்னும் சில வினாடிகளில் புறப்படும்" என்று கையைக் குவித்து அறிவித்துவிட்டு, இரண்டு ரயில் வரிசைகளை ஒன்றுக்கொன்று போட்டியாக (சமயத்தில் எதிரும் புதிருமாக) விடத் தீர்மானித்து, முதல் கார்டை அனு மருதாணியால் சிவந்த தன் ஆள்காட்டி விரலால் மெல்லத் தொட, ’ஸ்...ஃபட்...ஃபட்’ என்ற மென்மையான ஒலியுடன் கார்டுகள் தலைவணங்கிப் படிகள் மீது தவழ்ந்தும் கிளைகளாகப் பிரிந்தும் அழகாகச் சாய்ந்து வரிசையாக விழுவதற்கு என்ன வேண்டுமானாலும் தரலாம்!
சமயத்தில் காற்றில் ரயில் தானே கிளம்பிவிடும்! அல்லது படிகளில் நின்று சண்டித்தனம் செய்யும். அல்லது பானு வாசலுக்கு வரும்போது அவள் தாவணியின் சலசலப்பில் தலைகீழாகப் புறப்பட்டுவிட, அவள் வசமாக வாங்கிக் கட்டிக்கொள்ளுவாள்!
கார்டுகளை வைத்து வீடு கட்டுவது, கூழாங்கற்களை ஒளித்து வைத்துவிட்டு தேடச் சொல்லுவது, தாயக்கட்டம், பரமபத சோபான படம்---
"ஏய், இந்த விளையாட்டுல யாரும் பாதியில எழுந்து போகக்கூடாது. போனா, ஸ்வாமி கோவிச்சிப்பார்னு எங்க பாட்டி சொல்லுவா!" என்று அனு ஒவ்வொரு தடவை அறிவித்தாலும் ஒரு முறைகூட அவர்கள் அதை முழுவதும் விளையாடியதாக நினைவில்லை!
அப்புறம் ஆடுபுலி ஆட்டம், கேரம் போர்டு, ’புளிய முத்துகளை’ வைத்துக்கொண்டு சில்லாக்கு அல்லது ஒற்றையா-ரெட்டையா, தீப்பெட்டிப் படக் கரன்சியில் நாலு கோலி, சிகரெட் அட்டைகளில் ஒத்த தீப்பெட்டிப் படங்களை ஒட்டி ஒரு எளிய ரம்மி---இப்படி எத்தனை எத்தனை ஆட்டங்கள்!
இதற்குள் மதியம் சாப்பாட்டுக்கு நேரமாகிவிட, தட்டு வைக்கும்வரை ’சினிமாப் பெயர்’. சரியான நடுப்பகல் வெய்யிலில் அனு விடைபெற்றுக் கொள்ளுவாள்.
சாப்பாடு முடிந்து கடைசிவரை சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் மேல் ’நீதான் கட்டக்கடைசி!’ என்று கைமழை தூறிவிட்டு, அப்பா ஒரு ’பின்னி பிளாங்கெட்’டை விரித்துப்போட, ஒவ்வொருவரும் கையில் ’பஞ்சதந்திரக் கதைகள்’, ’பீர்பால் கதைகள்’ அல்லது ’அம்புலிமாமா’ சகிதம் படுத்துக்கொண்டு, அப்பாவின் கண்டிப்பில் தூங்குவதுபோல் பாவனை செய்துவிட்டு அவர் தூங்கியதும் ஒவ்வொருவராக நழுவி விளையாடப் போக, முனுசாமி பால் கறக்க வந்துவிடுவான்.
இப்படித்தான் ஒரு மாலை முரளி பால்கறக்கும் ஆசையில் பசுவின் மடியில் கைவைக்க, அது பின்னங்காலால் உதைவிட, வலது தொடையில் வெள்ளை சிராய்ப்புடன் கீழே விழுந்த முரளி கேவத்தொடங்க, அப்பா எழுந்துவிடப் போகிறாரே என்ற பயத்தில் அவனும் வசந்தியும் மொட்டை மாடிக்கு ஓடி, அங்கு உலர்த்தியிருந்த கருவடாங்களில் ஒன்றிரண்டு கொண்டுவந்து கொடுத்து முரளியை சமாதானப் படுத்தினார்கள்.
சில நாட்கள் திடீரென்று அப்பா வந்துவிடுவார்!
"நீங்கள்லாம் என்ன பண்ணிண்டிருக்கேள் இங்க? யாருமே தூங்கலையா?"
"தூங்கி எழுந்தாச்சு பெரியப்பா. இப்பதான் காப்பி குடிச்சிட்டு விளையாட வந்தோம்."
"அப்படியா? சரி. வெயிலில் அலையாம விளையாடுங்கோ."
"ஆட்டும் பெரியப்பா!"
அப்பா அவனை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட, அடிக்கடி இதுமாதிரி பார்க்கும் அவர் பார்வையின் பொருள் அனுமதியா, மறுப்பா, கோபமா என்று புரியாமல் அவன் குழம்பி நிற்க, கொஞ்ச நேரத்தில் அனுவும், பானுவும் கூட அவர்கள் விளையாட்டில் கலந்துகொள்ள, எல்லாம் மறந்து மனசு லேசாகிவிடும்.
மூன்று மணி வெய்யிலில் வீட்டில் வலதுபக்கம் காம்பௌன்ட் சுவர்வரை படர்ந்திருக்கும் காட்டுச் செடிகளும் கொடிகளும் நிறைந்த புதர்களில் அவர்கள் பட்டுப் பூச்சிகளைப் பின்தொடர்ந்து அலைந்து, ’தட்டான்’களைப் பிடித்து அவற்றை சிறுசிறு கற்களைத் தூக்கவைத்து மகிழ்ந்து, வாலில் நூல் கட்டிப் பறக்கவிட்டு, காட்டுப் பூக்களைப் பறித்துத் தேனுறிஞ்சி, சில பூக்களின் தலையைச் சுண்டிவிட்டு, ’பட்டாஸ்’ காய்களைத் தண்ணிர் தெளித்து வெடிக்கச் செய்து, ஆமணக்கு விதைகளைச் சேகரித்து (’கணக்கு பிணக்கு ஆமணக்கு’ என்பாள் அனு), அதன் மிருதுவான பூக்களில் மயங்கி, கறையான் புற்றுகளை உடைத்து, தட்டைக்குச்சிக் கட்டுகளை அவிழ்த்து மூங்கில் விற்களில் அவற்றைப் போட்டி போட்டுக்கொண்டு அம்புகளாக வானில் எய்து (அந்த அம்புகள் மேலே செல்லும்போது சின்னதாகி மீண்டும் பழைய நிலைக்கு வந்து விழுவது பார்க்க வியப்பாக இருக்கும்), நன்றாகக் காய்ந்த குச்சிகளைத் தோலுரித்து தக்கை வண்டிகளும் பொம்மைகளும் செய்து விளையாடி, ஓணான்களை வேட்டியாட முயன்று, வானில் பறக்கும் கொக்குகளையும் கருடன்களையும் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டு, கை நகங்களை நகங்களால் தட்டி உரசிவிட்டு, அந்த நகங்களில் அப்போதுதான் கண்ணில்படும் வெள்ளைப் புள்ளைகளை அதிர்ஷ்டத்தின் சின்னங்களாக நினைத்துக்கொண்டு...
பானு இருக்கும்போது அவர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு ’கண்ணாமூச்சி’.
அனைவரும் ’சாட்-பூட்-த்ரீ’ போட்டதும் அவள், "தானா பேனா தந்திரிப் பேனா ஒனக்கொரு பழம் எனக்கொரு பழம் கொண்டோடியா!" என்று ’தாச்சி’யின் கண்களைப் பொத்தியபடி மூன்று தடவை உரக்கக் கூவிவிட்டு, "விட்டுட்டேன்... விட்டுட்டேன்... விட்டுட்டேன்!" என்று கண்களைத் திறந்துவிட, கண்களைப் பொத்திக்கொண்டவன் கம்பீரமாக நடந்து ஒவ்வொருவராகத் தேடத் தொடங்க---
"அந்தோ, பச்சைப் பாவாடை செம்பருத்திச் செடிக்குப் பின்னால! வசந்தி வெளிய வா!"
பானுவுக்கு அனுவிடம் கொஞ்சம் தாராள மனசு. அவள் கண்களைப் பொத்திக்கொண்டாலும் சரி, ஒளிந்துகொண்டாலும் சரி, அவளுக்கு பானுவிடமிருந்து நிச்சயம் ஒன்றிரண்டு கண்ஜாடைகள் கிடைத்துவிடும். இதனால் அனுவை ’அவுட்’டாக்குவது ரொம்பக் கஷ்டம். எப்படியாவது கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஓடிவந்து பானுவைத் தொட்டுவிடுவாள். அப்படியே அவுட்டாகி கண்களைப் பொத்திக்கொண்டாலும் எல்லோரையும் கண்டுபிடிப்பது அவளுக்கு கஷ்டமாக இருக்காது.
’கண்ணாமூச்சி’ என்றதும் அவன் சமீபத்தில் படித்த அனிதா தாஸின் 'Games in a Twilight' சிறுகதை ஞாபகம் வந்தது. இப்படித்தான் அந்தக் கதையில் ஒரு சிறுவன் கதவின் சின்ன இடுக்கு வழியே நுழைந்து ஒரு பழைய ’ஷெட்’டில் ஒளிந்துகொண்டு தவம் கிடக்க, மற்ற குழந்தைகள் அவனை அறவே மறந்து வேறு விளையாட்டுகளுக்குச் சென்றுவிட, அவனுக்கு மிகவும் ஏமாற்றமாகப் போய்விடுகிறது. கதையின் அழகிய வருணனைகளும் அந்த feel of wordsஸும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தன.
சூரியன் மறைந்ததும் எல்லோரும் திண்ணையின் முன்னால் உள்ள புல்வெளியில் அமர்ந்துகொண்டு, தரை முழுவதும் இறைந்துள்ள வாடிய பூவரசம் பூக்களைப் பொறுக்கி இதழ்களைப் பிய்த்துவிட்டு ’கூஜா’ செய்து (பானு அதில் எக்ஸ்பர்ட்), பூவரசம் இலைகளில் ஊதல்கள் செய்து போட்டி போட்டுக்கொண்டு ஊதி, மஞ்சள், வெள்ளை, சிவப்பு என்று வாசல் ’கேட்’வரை அழகாகப் பூத்திருக்கும் அந்தி மந்தாரைப் பூக்களைப் பார்த்து வியந்து, வாடிய பூக்களை விலக்கி நன்றாகக் கறுத்த விதைகளை சேகரித்து மனம் போன போக்கில் பூமியில் ஊன்றி, மீதம் இருப்பவற்றை தீப்பெட்டிகளில் பத்திரப்படுத்தி, வாடாமல்லிப் பூக்களில் வெளுத்தவற்றைப் பிய்த்துத் தோட்டம் எங்கும் தூவி (சில நாட்களில் அவை பசுமை எறும்புக் கூட்டங்களாக முளைத்துவிடும்), இருட்டத் தொடங்கியதும் வீட்டுக்குள் நுழைவார்கள்.
விளக்கு வைத்ததும் ஸ்லோகங்கள் சொல்லிவிட்டு சீக்கிரமே சாப்பிட்டுவிட்டு
"அனு, நீயும் எல்லோரோடையும் உட்கார்."
"இல்லை பானுக்கா, நான் எங்காத்துக்குப் போய் சாப்டுட்டு வந்துடறேன்."
"உங்க பாட்டி திட்டுவான்னு பயமா?"
"நான் சொல்லிக்கறேண்டி உங்க பாட்டிகிட்ட!"
"வேண்டாம் பானுக்கா".
"அப்ப நீ கதை கேட்க வரலையா?"
"இங்க சாப்டாத்தான் கதை."
"சமர்த்தா ராஜா பக்கத்தில உட்கார்ந்துக்கோ பார்க்கலாம்."
பானு சாப்பிடும்வரை பேருக்கென்று பாடம் படித்துவிட்டு, இரவு ஒன்பது மணி வரை பானு அளக்கும் கதைகளை மெய்மறந்து கேட்டுவிட்டுக் கொட்டாவியுடன் அனு விடைபெற்றுக்கொள்ள படுக்கச் செல்வார்கள்.