• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

# 80. இரவு பகல் அங்கு இல்லை!

இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி;
இருந்தேன் இராப் பகல் அற்ற இடத்தே;
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே;
இருந்தேன் என் நந்தி இணையடிக் கீழே.

எண்ணில்லாத காலம் இந்த உடலில் தங்கி இருந்தேன்.
இரவு, பகல் என்னும் வேறுபாடுகள் இல்லாத
சுயம்பிரகாச வெளியில் நான் தங்கி இருந்தேன்.
தேவர்கள் போற்றும் பதத்தில் நான் இருந்தேன்.
என் குருநாதனான சிவபெருமானின் சிறந்த
திருவடிகளில் நான் பொருந்தி இருந்தேன்.
 
நம்பிக்கையுள்ள மனிதனுக்கு ரோஜாதான் எப்போதும் கண்ணில் படும்; முட்கள் பார்க்க வேண்டிய அவசியமில்லை.
 
அரிய செயல்கள் அனைத்தும் இப்போதே செய்ய முடியுமா என்று பார்; வெறும் வலிமையால் மட்டும் அல்ல,
விடாமுயற்சியாலேயே, நம்பிக்கை அதைச் செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும்.
 
# 81. தமிழ் செய்யப் படைத்தான்

பின்னை நின்று என்னே பிறவி பெறுவது?
முன்னை நன்றாக முயல் தவம் செய்கிலர்;
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே.

பின்னால் தயங்கி நின்று மக்கள் மீண்டும் ஏன் பிறவியைப் பெறுகின்றனர்?
முந்தைய பிறவிகளில் நன்கு முயன்று தவம் செய்யாத காரணத்தினால்!
நான் நல்ல தவம் செய்திருந்தேன். இறைவன் எனக்கு நல்ல பிறவி தந்தான்.
தன்னைப் பற்றித் தமிழில் நூல் செய்யப் பணித்து, எனக்கு நல்ல பிறவியும்,
அதற்குத் தேவையான ஞானத்தையும் நல்கினான் என் குரு சிவபெருமான்.
 
# 82. திருவடியில் பொருந்தி இருந்தேன்

ஞானத் தலைவி தன் நந்தி நகர் புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள்
ஞானப் பாலாட்டி நாதனை அர்ச்சித்து
நானுமிருந்தேன் நற் போதியின் கீழே.

ஞானத் தலைவியான சக்தியுடன் சிவன் விளங்கும் நகரில் புகுந்தேன்.
ஊனம் இல்லாத ஒன்பது முடிவுகளின் சந்திப்பில் இருந்து கொண்டு,
சிவனைத் தோத்திரம் செய்தேன். அறிவு மயமாகிய அவன் திருவடிகளின் கீழே நானும் இருந்தேனே.

'ஒன்பது முடிவுகளின் சந்திப்பு' என்பது ஏழு ஆதாரச் சக்கரங்கள் மற்றும் நாதம் பிந்து என்ற ஒன்பது இடங்களைக் குறிக்கும்.
 
# 83. வான் வழியே வந்தேன்

செல்கின்ற வாற்றில் சிவமுனி சித்தசன்
வெல்கின்ற ஞானது மிக்கோர் முனிவராய்ப்
பல்கின்ற தேவரசுரர் நரர் தம்பால்
ஒல்கின்ற வான் வழியூடு வந்தேனே.

கயிலையில் இருந்து வரும் பொழுது, சிவபெருமானை நினைத்து
மன்மதனை வெல்லும் ஆற்றல் கொண்ட முனிவர்கள்,
முப்பத்து முக்கோடி தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள்
இவர்களிடம் உள்ள நுட்பமான விண் வழியே நான் வந்தேன்.
 
Last edited:
# 84. அத்தன் அருளினான்


சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தமமாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்கு இங்கு அருளால் அளித்ததே.


சித்தத்தில் விளங்கும் நூல்களில் சிறந்தது வேதம்.
சொற்களே வேதத்தின் உடல் ஆகும் என்றால்
உற்பத்தியாகும் அந்த உடலில் வேதத்தின் பொருள்.
இறைவன் இவற்றைத் தன் கருணையால் எனக்கு அளித்தான்.
 
The effect of one’s reading and learning can be seen in one’s behaviour. If the behaviour has not changed, it means the learning acquired is like water poured over a rock, which gets wet only on the surface without allowing the water to seep into it.- Swami Krishnananda
 
# 85. சிவம் வந்து பொருந்தும்

நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்;
வான்பற்றி நின்ற மறைப்பொருள், சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வு உறு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே.

நான் பெற்ற இன்பத்தை இந்த உலகம் முழுவதும் பெறட்டும்.
வானைத் தன் இருப்பிடமாகக் கொண்டவன் சிவபெருமான்
அறிவே வடிவாக அமைந்தவன் ஆவான் நம் சிவபெருமான்
அவனைப் பற்றிச் சிந்தித்தால் சிரசில் ஓர் உணர்வு உண்டாகும்.
அந்த உணர்வை நாம் முயன்று பற்றிக் கொண்டோம் என்றால்
அந்த சிவம் நம்மைத் தேடி வந்து நம்மிடம் பொருந்தி விடும்.
 
# 86. உறைப்பொடு ஓதவேண்டும்


பிறப்பு இலி நாதனை, பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடும் கூடி நின்று ஓதலும் ஆமே.


பிறப்பும் இறப்பும் இல்லாதவன் சிவபெருமான்.
அவன் திருப் பெயர் நந்தி என்பது ஆகும்.
விண்ணுலகத்தோர் சென்று வணங்குவர் சிவனை.
உள்ளத்தில் அவனை மறவாதவர்கள் மந்திர மாலையால்
பக்தியுடன் பாராயணம் செய்து அவன் அருள் பெறலாம்.
 

திருமூலரின் திருமந்திரம்

# 87. மிகாமல் வைத்தான்

அங்கி மிகாமை வைத்தான் உடல்; வைத்தான்
எங்கும் மிகாமை வைத்தான் உலகு ஏழையும்;
தங்கி மிகாமை வைத்தான் தமிழ்ச் சாத்திரம்
பொங்கி மிகாமை வைத்தான் பொருள்தானுமே.

உடலை நமக்கு அளித்தவன் சிவ பெருமான்.
அந்த உடலில் ஜடராக்னியை மிகாமல் வைத்தான.
பூவுலகம் கடல் பொங்கி அழியாமல் இருப்பதற்கு
வடவாக்கினியை சிவன் கடலில் மிகாமல் வைத்தான்.
உள்ளத்தில் குழப்பம் தங்கி மிகாமல் இருப்பதற்காகச்
சிவன் தந்தான் தமிழ் ஆகமமான திருமந்திரம்.
அத்தனை பொருட்களும் பொங்கி மிகாமல் இருக்க
இந்த திருமந்திரத்தில் வைத்தான் சிவபெருமான்.
 
# 88. படி கண்டிலர்!

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர் மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேன்என் றச்சுதன் சொல்ல
முடிகண் டேன் என்றயன் பொய்மொழிந் தானே.

"சிவ பெருமானின் திருவடிகளையும் திருமுடியையும் காண்போம்"
என்று எண்ணினர் அரியும் அயனும் ஒருமுறை.
எத்தனை முயன்றும் அடி, முடியைக் காணவே முடியவில்லை.
மீண்டும் பூமியில் சந்தித்தனர் அவர்கள் இருவரும்.
"நான் அடியைக் கண்டிலேன்!" என்று உண்மை உரைத்தார் அரி.
"நான் முடியைக் கண்டேன்" என்று பொய் உரைத்தான் அயன்
 
# 89. என் முடி மீது தன் அடி வைத்தான்!

பெற்றமும் மானும் மழுவும் பிரிவுஅற்ற
தற்பரன் கற்பனை ஆகும் சராசரத்து
அற்றமும் நல்கி, அடியேன் சிரத்தினில்
நற்பதமும் அளித்தான் எங்கள் நந்தியே.

காளை, மான், மழு இவற்றைப் பிரியாதவன்
அனைத்துக்கும் மேலான நம் சிவபெருமான்.
கற்பனையாக அமைந்தது இந்த உலக வாழ்வு.
இதிலிருந்து எனக்கு ஒழிவைத் தந்தான் சிவன்.
என் சிரம் மீது தன் திருவடிகளைச் சூட்டினான்!
 
# 90. முற்றும் விளக்கினேன்


ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை
மாயத்தை, மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை, அச்சிவம் தன்னை யாகோசர
வீயத்தை முற்றும் விளக்கி யிட்டேனே.


அறியப்படும் பொருளையும் ( ஞேயம் )
அறியும் அறிவையும் (ஞானம்)
அறிபவனையும் (ஞாதுரு )
மாயையின் விவரங்களையும்,
சுத்த மாயையில் விளங்கும் பரை
முதலிய சக்தியின் கூட்டத்தையும்,
அச்சக்திகளில் விளங்கும் சிவத்தையும்,
வித்தாகிய சிவத்தின் பிரபாவத்தையும்
இவை அனைத்தையும் நான் இந்தத்
திருமந்திரத்தில் விளக்கினேன்.
 
Now that enough interest has been created in Thirumanthiram,

I may increase the daily dose of poems from 2 to 3 or even 4.

After we have a long way to go and cover all the 3000 poems.
 
# 91. அவன் ஆணையிட்டான்

விளக்கிப் பரம் ஆகும் மெய்ஞ்ஞானச் சோதி
அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கு அறும் ஆனந்தக் கூத்தன் சொற்போந்து
வளப்பின் கயிலை வழியில் வந்தேனே.

இவற்றை எனக்கு நன்றாக விளக்கியவன் நம் சிவபெருமான்.
அகோசர வித்து நிலையில் இருப்பான் அறிவு மயமான ஜோதியாக.
அளவில்லாத பெருமைகளை உடையவன் அந்த ஆனந்த நந்தி.
அசைவற்று இருக்கும் அந்த ஆனந்த நடராசன் இட்ட ஆணையின் படி
சிறந்த கயிலாய மலையிலிருந்து நான் இங்கே வந்தேன்.
 
# 92. மெய்ஞானம் தந்தான்

நந்தி அருளாலே மூலனை நாடிப் பின்
நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்;
நந்தி அருளால் மெய் ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளாலே நான்இருந் தேனே.

சிவ குருவின் அருளால் நான் மூலாதாரத்தில் உள்ள ருத்திரனை நாடினேன்.
சிவ குருவின் அருளால் நான் சதாசிவன் என்னும் பெயர் பெற்றேன்.
சிவ குருவின் அருளால் நான் உண்மையான ஞானத்தைப் பெற்றேன்.
சிவ குருவின் அருளால் நான் நிலை பெற்றிருந்தேன்.
 
# 93. நாதாந்ததில் வீசும் பொன்னொளி

இருக்கில் இருக்கும் எண்இலி கோடி
அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆரழல் வீச
உருக்கிய ரோமம் ஒளிவிடும் தானே.

இருக்கு வடிவான வேதத்தில் எண்ணற்ற மந்திரங்கள் உள்ளன.
மூலாதாரத்தில் உள்ள சிவசக்தி மேலே சென்று உச்சியை அடையும்.
மந்திரங்கள் நாத மயமானவை. அவை பிரணவத்தில் முடிவாகும்,
பிரணவம் முடிந்த நாதாந்த நிலையில், சூரிய சந்திரர்களின் கதிர் ஒளியில்,
பிரணவ உச்சியில், ஆன்மாவானது பேரொளி மயமாக விளங்கும்.
அந்நிலையில் அது பொன்னொளி போன்ற கிரணங்களுடன் ஒளி வீசும்.
 
# 94. எப்போதும் புகழ்வேன்

பிதற்றுகின்றேன் என்றும் பேர்நந்தி தன்னை
இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும்
முயற்றுவன் ஓங்கு ஒளிவண்ணன் எம்மானை
இயல் திகழ் சோதி இறைவனும் ஆமே.

நந்தி என்னும் பெயர் கொண்ட இறைவனை நான் புகழ்வேன்.
இரவும், பகலும் அவனையே எண்ணி நான் தியானிப்பேன்.
ஸ்வயம் பிரகாசியாகிய அவனை நான் அடைய முயல்வேன்.
இயற்கையிலேயே ஒளி வடிவானவன் நம் சிவபெருமான்.

திருமூலர் வரலாறு இத்துடன் முற்றுப் பெற்றது.
அடுத்துக் காண்போம் திருமூலரின் அவையடக்கம்
 
vi . அவையடக்கம்

# 95. வேர் அறியேன்

ஆர் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை;
யார் அறிவார் இந்த அகலமும் நீளமும்;
பேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று; அதின்
வேர் அறியாமை விளம்புகின்றேனே.

எம் பிரான் நந்தியின் பெருமையை யார் அறிவார்?
அவன் நீளத்தையும், அகலத்தையும், பரப்பையும் யார் அறிவார்?
அவன் தனக்கென்று பெயரோ, உருவமோ இல்லாத ஒரு பெருஞ்சுடர்.
அவன் வேரைக் கூட அறியாத நான் அவனைப் பற்றிப் பேசுகின்றேன்.

வேர் = பாதங்கள்
அவன் திருவடிகள் பாதாளம் ஏழுக்கும் கீழே உள்ளன.
திருமால் அவற்றைத் தேடித் தேடித் தோற்றுப் போனான்.
 
# 96. நெறி அறிகிலேன்

பாடவல்லார் நெறி பாடவறிகிலேன்
ஆடவல்லார் நெறி யாடவறிகிலேன்
நாடவல்லார் நெறி நாட வறிகிலேன்
தேடவல்லார் நெறி தேடகில்லேனே.

சிவ பெருமானின் புகழைப் பாட வல்லவர்கள்
நெறியில் சென்று பாட வல்லவன் அல்ல நான்!
பக்தி பரவசத்துடன் ஆட வல்லவர்களின்
நெறியில் சென்று ஆட வல்லவன் அல்ல நான்!
ஞான நெறியில் சென்று அவனை நாடவல்லவர்கள்
போல அவனை நாடவும் நான் அறிகிலேன்.
உடலில் அவனைத் தேடி, அவன் காட்சிக்காக ங்கி,
யோகநெறியில் நின்று ஆராய்வதையும் அறிகிலேன்!
 

Latest posts

Latest ads

Back
Top