• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

#43. நிறைந்து நிற்பான்

அரன்அடி சொல்லி, அரற்றி, அழுது
பரன்அடி நாடியே, பாவிப்ப நாளும்
உரன்அடி செய்து அங்கு ஓதுங்க வல்லார்க்கு
நிரன்அடி செய்து நிறைந்து நின்றானே.

திரு ஐந்தெழுத்தை தூய உள்ளத்துடன் இடைவிடாது ஓதி,
அவன் பிரிவை ஆற்றாமல் அரற்றியும் அழுதும் திரிந்து,
அவன் அடிகளையே எப்போதும் நாடுபவர்களுக்கு,
அந்தத் திருவடிகளிலேயே அடங்கி நிற்க வல்லவர்களுக்கு,
அவன் தன் திருவடிகளை உறுதியாகத் தருவான்.
மேலும் அவர்களிடம் ஒன்றி நிறைந்து நிற்பான்.
 
# 44. அன்புள் விளங்குவான்
போற்றி என்பார் அமரர் புனிதன் அடி;
போற்றி என்பார் அசுரர் புனிதன் அடி;
போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி;
போற்றி என் அன்புள் விளங்க வைத்தேனே.

அமரர்கள் சிவபெருமானைப் போற்றுவர்.
அசுரர்கள் சிவபெருமானைப் போற்றுவர்;
மனிதர்கள் சிவபெருமானை போற்றுவர்.
நானும் அந்தப் பெருமானைப் போற்றி வணங்கி
என் அன்பினுள் அவன் விளங்குமாறு செய்தேன்.

(தேவர்கள் தம் சுய நலத்துக்காகப் போற்றுவர்.
ஞானிகள் எப்பயனும் கருதாமல் போற்றுவர்.
தேவர்கள் ஈசனை அன்பு இன்றிப் போற்றுவர்.
ஞானிகள் ஈசனை அன்புடன் போற்றுவர்.)
 
# 45. வழிகாட்டி
விதிவழி அல்லதுஇல் வேலை உலகம்;
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை;
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவன் ஆமே.

கடல் சூழ் உலகு இறைவன் விதித்தபடி இயங்கும்.
வேறு விதமாக அதனால் இயங்க இயலாது.
நாம் அடையும் இன்பமும் விதி வழிப்பட்டதே.
அதுவும் இறைவனின் விதிக்கு மாறுபட்டதல்ல.
துதிவழி நின்றால் பேரொளியாகிய சோதிப் பிரான்
முக்தி பெறும் வழியை நமக்குப் பகலவன் போலக் காட்டுவான்.
 
# 46. மனம் புகுந்தான்

'அந்திவண்ணா, அரனே, சிவனே' என்று
சிந்தைசெய் வண்ணம் திருந்து அடியார் தொழ
'முந்தி வண்ணா, முதல்வா, பரனே' என்று
புந்தி வண்ணன் எம் மனம் புகுந்தானே.

"அந்தி வண்ணச் செம்மேனி உடையவனே!
அரனே! சிவனே ! "என்று ஏத்தித் தொழுவர்
தம் சிந்தையைச் செப்பனிட்ட அடியவர்கள்.
"அனைத்துக்கும் பழமையானவனே! முதல்வனே!
அனைத்துக்கும் மேலானவனே!" என்று நான் தொழ
ஞான வடிவினன் ஆக அவன் என் மனம் புகுந்தான்!

(அந்திவண்ணா! அரனே! சிவனே! - உருவ வழிபாடு
முந்திவண்ணா முதல்வா! பரனே! - அருவ வழிபாடு)
 
# 47. நினையாவிடில் நின் இன்பம் இல்லை!

மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்;
நினைவுள் இருந்தவர் நேசத்தில் நிற்பர்;
பனையுள் இருந்த பருந்தது போல
நினையாதவர்க்கு இல்லை நின்இன்பம் தானே.


சிவபெருமான் உயிர்களிடத்தில் கோவில் கொண்டுள்ளான்.
இந்த உண்மையை உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்பத் தம்
உடலைப் பேணுகின்றவர்கள் மாதவம் செய்பவர்கள் ஆவர்.
அந்தப் பெருமான் தம் நெஞ்சத்தில் எழுந்தருளி இருக்கும்
தன்மையை அறிந்தவர்கள் அவனிடம் மாறாத அன்பு பூணுவர்.
பனை மரத்தில் இருக்கும் பருந்து சுவையான பனம் பழங்களை
உண்ண எண்ணாமல் இழிந்த உணவை நாடிச் செல்கின்றது.
பருந்து பனம் பழத்தின் பெருமை அறியாது அந்த இன்பத்தை இழக்கின்றது.
உன் பெருமையை அறியாதவர்கள் அதுபோன்றே உன் இன்பத்தை இழக்கின்றார்கள்.
 
# 48. விடியா விளக்கு

அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியார் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கு என்று மேவி நின்றேனே.

அடியவர்கள் தொழும் அமரர் பிரானை என்
முடியால் தொழுது பணிந்து வணங்கினேன்.
அவனையே இடைவிடாது எண்ணினேன்.
உலகத்தார்களுக்கு அனைத்தையும் அருளும்
ஈசனை, எந்தையை அனைத்துக்கும் மேலான
அணையா விளக்கு என்று நினைத்து இருந்தேன்.
 
#49. முக்தி பெறலாம்

நரைபசு பாசத்து நாதனை உள்ளி,
உரைபசு பாசத்து ஒருங்க வல்லார்க்குத்
திரைபசு பாவச் செழும்கடல் நீந்திக்
கரைபசு பாசம் கடந்து, எய்தலாமே.

பழமையான ஜீவன், பாசத்தளை இவற்றின் தலைவனை எண்ணி;
பசு என்றும், பாசம் என்றும் கூறப்படுபவற்றின் தன்மையை அறிந்து;
இவற்றின் தலைவனாகிய சிவனோடு ஒன்றாகக் கூட வல்லவர்கள்;
அலைகள் போல வரும் பண்டு செய்த ஜீவனின் பாவக் கடலை நீந்தி;
பசு, பாசங்களைக் கடந்து முக்தி என்னும் கரையை அடைய முடியும்.
 
# 50. வழிபடும் வகை
சூடுவன்; நெஞ்சிடை வைப்பன்; பிரான் என்று
பாடுவன்; பன்மலர்தூவிப் பணிந்து நின்று
ஆடுவன்; ஆடி, அமரர் பிரான் என்று
நடுவன்; நான் இன்று அறிவது தானே.


இறைவனின் திருவடிகளை என் முடிமேல் சூடுவேன்;
அவற்றை என் நெஞ்சத்தில் வைத்துப் போற்றுவேன்;
என் தலைவனைப் போற்றிப் பாடுவேன்;
பல வண்ண மலர்களைக் கொண்டு பூசிப்பேன்;
அவன் பெருமையை எண்ணிக் கூத்தாடுவேன்;
தேவர்களின் தேவன் என்று அவனையே நாடுவேன்;
அவனை வழிபட நான் செய்வது இவையே ஆகும்.
 
சிவன் சிறப்புகள் இத்துடன் முற்றுப் பெற்ற.

நாளை முதல் வேதச் சிறப்பினைக் காண்போம்.
 
Last edited:
ii . வேதச் சிறப்பு

# 51. வேதம் ஓதி வீடு பெறலாம்

வேதத்தை விட்ட அறமில்லை; வேதத்தின்
ஓதத் தகும் அறம் எல்லாம் உள; தர்க்க
வாதத்தை விட்டு, மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே.

வேதம் கூறாமல் விட்டு விட்ட அறம் எதுவும் இல்லை.
நாம் ஓதத் தகுந்த நீதிகள் எல்லாம் வேதத்தில் உள்ளன.
வாதங்களை விட்டு, வேதங்களை ஓதிய அறிஞர்கள்
அதன் மூலமே முக்தி அடையும் பேறு பெற்றார்கள்.
 
# 52. மெய்ப்பொருள் காட்டவே!

வேதம் உரைத்தானும் ஆகிலன்
வேதம் உரைத்தாலும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.

வேதத்தை உரக்கப் படிப்பதனால் மட்டும் ஒருவன்
வேதம் அறிந்த வேதியன் ஆகிவிட மாட்டான்.
வேதத்தை உரைத்த இறைவன் மக்களுக்கு
பிரம்ம தத்துத்தை நன்கு விளக்கவும்,
வேதியர்கள் வேள்வி செய்யும் பொருட்டும்,
உண்மைப் பொருளை உணர்த்துவதற்காகவும்,
வேதத்தைக் கூறி அருளி உள்ளான்.
 
# 53. கருக் குருவானவன்

இருக்கு உருவாம் எழில் வேதத்தின் உள்ளே

உருக்கு உணர்வாய் உணர் வேதத்துள் ஓங்கி,
வெருக்கு உருவாகிய வேதியர் சொல்லும்
கருக்குரு வாய் நின்ற கண்ணனும் ஆமே.

மந்திர வடிவானது அழகிய வேதம்.
அதில் உள்ளதை உருக்கும் உணர்வாக விளங்கி,
அச்சத்தை ஏற்படுத்தும் ஒலி அலைகளைக்கொண்ட
வேத மந்திரத்தில் நுண்ணிய வடிவில் விளங்குவது
முக்கண்ணனாகிய சிவபெருமானே ஆவான்.
 
# 54. வேதாந்தம் ஓதும்

திருநெறி ஆவது செய்து அசித்து அன்றிப்
பெருநெறி ஆய பிரானை நினைந்து
குருநெறியாம் சிவமரம் நெறி கூடும்
ஒருநெறி; ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.


திருநெறி எனப்படும் ஒருநெறி இதுவே ஆகும்.
அறிவு, அறியாமை அற்றதாகிய, வீடுபேறாகிய
இறைவனை எண்ணி, குருவினால் உணர்த்தப்பட்டு,
சிவத்துடன் இணையும் ஒப்பில்லாத நெறியாகும்.
வேத முடிவாகிய உபநிடதம் கூறுவதும் இதுவே.
 
#55. சிவனை அறிந்தவர் எவர்?

ஆறு அங்கமாய் வருமாமறை ஓதியைக்
கூறு அங்கம் ஆகக் குணம் பயில்வார் இல்லை,
வேறு அங்கம் ஆக விளைவு செய்து அப்புறம் ,
பேறு அங்கம் ஆகப் பெருக்குகின்றாரே.

ஆறு அங்கங்கள் கொண்ட வேதத்தைத் தந்தவன் ஈசன்.
அந்த இறைவனின் இயல்பினை, உடல் அங்கங்களைக்
கொண்டு அறிந்து கொண்டவர் எவரும் இல்லை.
இறைவனைத் தம்மிலும் வேறு பட்டவனாக எண்ணிக் கொண்டு
தம் விருப்பங்களை பெருக்கித் துன்பம் அடைகின்றார்களே!
 
# 56. மாறுபட்டு அழிவர்

பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார்
வேட்டு விருப்பார், விரதம் இல்லாதவர்
ஈட்டும் இடம் சென்று இகலல் உற்றாரே.

பாட்டும், அதன் இசையும், அதற்கேற்ற நடனமும் ஆடும்
கணிகையரின் ஆட்டம் நிறைந்த உலகம் ஆகும் இது.
வேதங்கள் காட்டும் நன்னெறியில் நில்லாதவர்கள்,
விரதங்கள் எதையும் கைக் கொள்ளாதவர்கள்,
ஆயினும் வேள்வியைச் செய்யும் விருப்பம் கொண்டவர்கள்
தம் மாறுபாட்டினால் பல விதத் துன்பங்களை அனுபவிப்பார்கள்.
 
# 57. ஆகமச் சிறப்பு

அஞ்சன மேனி அரிவை ஓர் பாகத்தன்
அஞ்சொடு இருபத்து மூன்று உள ஆகமம்;
அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்
அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே.

கருநிறம்கொண்ட உமை அன்னையின் நாதன்
அருளினான் நமக்கு இருபத்தெட்டு ஆகமங்கள்.
அறுபத்தறுவரும் அஞ்சலி செய்து ஆகமங்களை
அவன் ஐந்தாம் திருமுகத்தால் கூறக் கேட்டனர்.
 
# 58. அண்ணல் அருள்
அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடி நூறாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்;
எண்ணி நின்று அப்பொருள் ஏத்துவன் நானே.

ஆன்மாக்களின் மீது கொண்ட கருணையினால் அண்ணல் அளித்தான்
எண்ண இயலாத இருபத்தெட்டுக் கோடி நூறாயிரம் ஆகமங்கள்.
தேவர்கள் இவற்றின் வழியே இறைவன் பெருமையைக் கூறினர்.
நானும் அவ்வழியைப் பின்பற்றி அப்பொருளை வணங்குவேன்.
 
# 59. அற நெறி உரைக்கும்

பண்டித ராவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறும் கருத்தறி வாரென்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதலா னறஞ் சொன்னவாறே.

பதினெட்டு மொழிகளை நன்கு அறிந்தவர்கள் அறிஞர்கள்.
அவர்கள் ஆகமம் கூறும் பொருளை நன்கு உணர்ந்தவர்கள்.
அறிஞர்கள் அறிந்த அந்த பதினெட்டு மொழிகளும் கூறுகின்றன
அண்டங்களுக்கு முதல்வனாகிய சிவபெருமான் கூறும் அறத்தையே.
 
# 60. நீர் மேல் எழுத்து

அண்ண லருளா லருளுந்திவ் யாகமம்
விண்ணி லமரர் தமக்கும் விளங்கரிது
எண்ணி லெழுபது கோடி நூறாயிரம்
எண்ணிலும் நீர்மே லெழுத்து வாகுமே.

சிவபெருமான் நமக்கு அருளிய இந்த ஆகமங்கள்
விண்ணவர்களுகும் அனுபவத்தில் கிடைக்காது.
எழுபது கோடியே நூறாயிரம் என்று நாம் அவற்றைக் கணக்கிட்டாலும்,
அனுபவம் இல்லாவிடில் அவை நீர் மேல் எழுத்துப்போல வீணாகிவிடும்.
 
# 61. ஓங்கி நின்றான்

பரனாய்ப் பராபரம் காட்டி உலகில்
தரனாய்ச் சிவதன்மம் தானேசொல் காலத்து
அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி
உரன்ஆகி ஆகமம் ஓங்கி நின்றானே.

சிவன் மிகவும் மேன்மை வாய்ந்தவன்.
பரஞானம், அபரஞானம் என்னும் இரண்டையும்
அவன் உலகத்தினருக்கு உவந்து அளிக்கின்றான்.
உலகைத் தாங்குபவனும் அந்தச் சிவ பெருமானே.
சிவதர்மத்தை அவனே அனைவருக்கும் அருள்கின்றான்.
அமரர்கள் அவனைஅரனாக எண்ணி அர்சிக்கின்றனர்.
சிவனே ஆகமத்தில் அறிவாக ஓங்கி விளங்குகின்றான்.
 
# 62. நவ ஆகமம்

சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே.

பரம் பொருளாகி, குருவாகிய பரமசிவத்திடமிருந்து
சக்தியும், சதாசிவமும், மகேசரும், உருத்திர தேவரும்,
திருமாலும், நான்முகனும் அவரவர் அறிவில் விளங்கிய
ஒன்பது ஆகமங்களை குருமுகமாகப் பெற்றனர்.
 
# 63. நவ ஆகமங்கள்

பெற்றநல் லாகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீர முயர்சிந்திய வாதுளம்
மற்றவ்வியாமள மாகுங்கா லோத்தரம்
துற்ற நற் சுப்பிரஞ் சொல்லு மகுடமே.

குருமுகமாகப் பெற்ற ஒன்பது ஆகமங்கள் இவை:
காரணம், காமிகம், வீரம், சிந்தியம், வாதுளம்,
யாமளம், கலோத்திரம், சுப்பிரம், மகுடம் என்பவை.
இந்த ஒன்பது ஆகமங்களின் சரமே திருமந்திரம் ஆகும்.
 
# 64. உணராவிடில் வீணாகும்
அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்இலிகோடி தொகுத்திடும் ஆயினும்
அண்ணல் அறைந்த அறிவு அறியாவிடின்
எண்இலி கோடியும் நீர் மேல் எழுத்தே.


சிவபெருமான் அருளிய சிவாகமாங்கள்
எண்ணற்றவைகள் ஆகும் எனினும் அவற்றில்
இறைவன் சொன்ன மெய்ப்பொருளை உணராவிடில்
அவை நீர் மேல் எழுதிய எழுத்துப் போல பயனற்றவை.
 
I thank the readers of this thread for the impressive traffic. :pray2:
In the past 24 hours it has been ~222! Thank you!

I had a doubt as to how many of you will really want to read /
understand /know and use the knowledge found in Thirumanthiram.

It is fascinating by its Ethugai and Monai.
It is fantastic in its knowledge content.

Let us together explore the remaining poems of this great work

P.S. I have long since realized that
the only way to learn a thing is to try to teach it.

In order to be able to teach, one will have to learn it first.

So I am learning these along with you ...
may be few days earlier than you! :)
 

Latest posts

Latest ads

Back
Top