• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#2991. தெண்ணீர் படுத்த சிவன் உள்ளான்

மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள்
எண்ணிற் கலங்கி இறைவன் இவன்என்னார்
உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத்
தெண்ணீர்ப் படுத்த சிவன்அவன் ஆமே

கலங்கிய சேற்று நீரில் தூயநீரின் தன்மை தெரியாது. அது போன்றே உடல் பற்றினால் கலங்கிய மனத்தினை உடையவர்கள் இறைவனின் தூய தன்மையை அறியார்.

கலங்கிய குடிநீரை ஒரு குடத்தில் முகர்ந்து வைத்தால் அது சிறிது நேரத்தில் தெளிந்துவிடும். அது போன்றே சீவன் தன் கலங்கிய சிந்தையைத் தெளிவிப்பதற்கு அதைச் சிவன் மீது செலுத்திக் காத்திருக்க வேண்டும்.

சித்தம் தெளிந்தவுடன் சீவன் சிவன் ஆவான்.
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#2992. கைத்தலம் சேர்தரும் நெல்லிக்கனி

மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக்
கைத்தலம் சேர்தரு நெல்லிக் கனியொக்கும்
சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள்
அத்தனை நாடி அமைந் தொழிந் தேனே

மெய்த் தவத்தான் ஆகிய சிவபிரானை விரும்பும் மெய்யன்பருக்கு அவன் உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெள்ளத் தெளிவாகத் தோன்றுவான்.

எனவே நானும் தூயவனும், தூய நெறியாய் விளங்குபவனும் ஆகிய நம் தேவதேவனை உளமாற விரும்பினேன்.

அவனிடம் இரண்டறப் பொருந்தினேன். உலகக் கவர்ச்சியையும், என் இருவினைகளையும் கடந்து நின்றேன்.
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#2993. புகைந்து எழும் பூதலம்.

அமைந்தொழிந் தேன்அள வில்புகழ் ஞானம்
சமைந் தொழிந் தேன்தடு மாற்றம்ஒன் றில்லை
புகைந் தெழும் பூதலம் புண்ணியன் நண்ணி
வகைந்து கொடுக்கின்ற வள்ளலும் ஆமே.

அளவில்லாத புகழை உடைய ஞானத்தைப் பெற்று, நான் தத்துவக் கூட்டங்களிலிருந்து விடுபட்டு நின்றேன். என் எண்ணங்களில் சிறிதும் தடுமாற்றம் இல்லாமல் இருந்ததால் நான் சிவ வடிவம் பெற்று நின்றேன். அதனால் இருளாகிய மலங்களில் நான் இருந்து விடுபட்டேன். மூலாதாரத்தீ புகைந்து எழுந்து சென்னியை அடைந்த போது, ஒளிபொருந்திய புண்ணிய மூர்த்தி என்னிடம் வந்து பொருந்தினான். சீவனின் உடல் வேறு, அந்த உடலின் உடமையாளன் ஆகிய ஆன்மா வேறு என்று வகைப்படுத்தி எனக்கு விளங்கச் செய்த வள்ளல் ஆனான்.
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#2994. உள்ளத்தின் உள்ளே ஒளிந்திருப்பான்

வள்ளல் தலைவனை வானநன் னாடனை
வெள்ளப் புனற்சடை வேதமுதல்வனைக்
கள்ளப் பெருமக்கள் காண்பர்கொலோஎன்று
உள்ளத்தின் உள்ளே ஒளிந்திருந்து ஆளுமே.

வள்ளல் தன்மை உடைய என் தலைவன், வான நன்னாட்டின் அதிபதி; கங்கை புனைந்த சடையான்; வேதங்களின் முதல்வன்; கள்ளத் தன்மை படைத்த கீழோர் தன்னைக் காணக்கூடாது என்று எண்ணி அவர்கள் உள்ளத்தில் ஒளிந்திருந்து அவர்களை ஆளுவான்!
 
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#2995. மலர் பதம் தந்த கடவுள்

ஆளும் மலர்ப்பதம் தந்த கடவுளை
நாளும் வழிபட்டு நன்மையுள் நின்றவர்
கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின்
வாளும் மனத்தொடும் வைத்தொழிந் தேனே

தன் மலர்பாதங்களை எனக்குத் தந்து என்னை ஆண்டு கொண்டவன் இறைவன். அவன் தன்னை நாளும் வழிபட்டு நன்னெறியில் நிற்பவர்களின் தீய குணங்களையும், தீய செயல்களையும் அறுத்துக் களைவான். நானும் ஒளியை விரும்பி என் மனத்தை அவன் மேல் வைத்து உலகப் பற்றினை ஒழித்து விட்டேன்.
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#2996. அவன் திருவடிகள் தருபவை

விரும்பில் அவனடி வீர சுவர்க்கம்
பொருந்தில் அவனடி புண்ணிய லோகம்
திருந்தில் அவனடி தீர்த்தமும் ஆகும்
வருந்தி அவனடி வாழ்த்தவல் லார்க்கே.

சிவன் பிரிவை எண்ணி எண்ணி வருந்தி அவன் அடிகளை வாழ்த்தி வணங்குபவருக்கு அந்தத் திருவடிகள் தருபவை எவை?
சிவனை விரும்புபவர்களுக்குச் சிவன் திருவடிகளே வீர சுவர்க்கம்;
அவன் திருவடிகளைப் பொருந்துவதே புண்ணிய லோகத்தை அடைவது ஆகும். அவன் திருவடிகளே அவர்களுக்குப் புண்ணிய தீர்த்தமும் ஆகும்.
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#2997. வானகம் ஊடறுத்தான்

வானகம் ஊடறுத் தான்இவ் வுலகினில்
தானகம் இல்லாத் தனியாகும் போதகன்
கானக வாழைக் கனிநுகர்ந்து உள்ளுறும்
பானகச் சோதியைப் பற்றிநின் றேனே.

விண்ணைக் கடந்து விளங்குபவன் சிவன்;
இந்த உலகில் தனக்கு என்று ஓர் உடல் இல்லாதவன் சிவன்;
அனைவரின் உடலும் அவன் உடலே! அறிவு மயமானவன் சிவன்;
சீவனின் குருநாதன் ஆகியவன் சிவகுரு, சீவனிடம் பொருந்தியுள்ள அறியாமை என்ற வாழைக் கனியை அழித்து விட்டு, ஞானம் என்னும் பானகத்தைத் தருகின்ற பரஞ்சோதியை நான் பற்றி நின்றேன்!
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#2998. தொல்வினைப் பற்று அறுவிக்கும்!

விதியது மேலை அமரர் உறையும்
பதியது பாய்புனல் கங்கையும் உண்டு
துதியது தொல்வினைப் பற்றறு விக்கும்
பதியது வவ்விட்டது அந்தமும் ஆமே.

சீவனின் தலையெழுத்து ஆவது அதன் அறிவாகாயத்தின் ஒளியே!
இதுவே தேவர்கள் வசிக்கும் இடம். இங்கு வான் கங்கை உள்ளது. துதிப்பதற்குத் தகுதி வாய்ந்தது இது.
தொல்வினைகளைப் பற்றறுத்திடும் அருட்சக்தியின் பதி இதுவே. உலகைத் தாண்டிய முடிவு நிலை இதுவே!
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#2999. ஆனது செய்யும் எம் ஆருயிர் தானே

மேலது வானவர் கீழது மாதவர்
தானிடர் மானுடர் கீழது மாதுஅனங்
கானது கூவிள மாலை கமழ்சடை
ஆனது செய்யும்என் ஆருயிர் தானே

அறிவாகாசத்தில் மேலே இருப்பவர்கள் வானவர்கள். அதற்கு கீழே மாதவர்கள் இருப்பர். துன்பங்களில் சிக்கித் தவிக்கும் மானிடர் அதற்கும் கீழே இருப்பர். அறிவும் ஆனந்தமும் பொருந்திய சக்தி தேவி, வில்வமாலை சூடிய சிவனுடன் அங்கு பொருந்தி இருப்பாள். உயிர்களுக்குச் செய்ய வேண்டியவற்றைச் அவள் செய்வாள்.
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#3000. திரு ஐந்தெழுத்தின் மன்னன்

சூழுங் கருங்கடல் நஞ்சுண்ட கண்டனை
ஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பிலி
யாழுஞ் சுனையும் அடவியும் அங்குளன்
வாழும் எழுந்தைந்து மன்னனும் ஆமே

பாற்கடலில் பொங்கித் திரண்ட கரிய நஞ்சினை உண்டு அதைத் தன் கண்டத்தில் அடக்கியவன் சிவன். ஈரேழு பதினான்கு உலகங்களுக்கும் கருவானவன் ஆயினும் பிறப்பிலி! ஆழ்ந்த சுனைகளும், காடும் நிரம்பிய கயிலை மலையில் அவன் உறைவான். சீவனை வாழ வைக்கும் திரு ஐந்தெழுத்துக்களில் குடி இருப்பவனும் அவனே!
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#3001. திகைத்தேவர் பிரான்

உலகமது ஒத்துமண் ஒத்ததஉயர் காற்றை
அலர்கதிர் அங்கிஓத்து ஆதிப் பிரானும்
நிலவிய மாமுகில் நீர்ஒத்து மீண்டுஅச்
செலவுஒத்து அமர்திகைத் தேவர் பி ரானே.

உலகத்தில் உள்ள உயிர்த்தொகைகளின் உயிராகவும், நிலத்தின் மண்ணாகவும்,வீசும் உயர்ந்த காற்றாகவும், சூரியன், சந்திரன், அக்கினி என்பவைகளாகவும், பெரிய மேகம் பொருந்துகின்ற வானம் ஆகவும், அதன் நீராகவும் அனைத்துமாக விளங்குபவன் சிவன். அவனே அவற்றை அழிப்பவனாகவும், திசைத் தேவர்களின் தலைவனாகவும் இருக்கின்றான்.
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#3002. பரிசறிந்து அங்குளான்

பரிசறிந்து அங்குளன் அங்கி அருக்கன்
பரிசறிந்து அங்குளன் மாருதத்து ஈசன்
பரிசறிந்து அங்குளன் மாமதி ஞானப்
பரிசறிந்து அந்நிலம் பாரிக்கும் ஆறே.

அக்கினி, கதிரவன் இவற்றின் தன்மையை அறிந்த சிவன் அவற்றுள் அதற்கேற்பப் பொருந்தி இருப்பான். காற்றின் தன்மைக்கு ஏற்ப அதில் பொருந்தி இருப்பான். மதி மண்டலத்தின் தன்மை அறிந்து அதில் பொருந்தும் ஈசன் அந்த சந்திர மண்டலத்தைப் பெருக்கிச் சீவனின் அறிவு விளங்கச் செய்வான்.
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#3003. தந்த உலகு எங்கும் தானே பராபரன்

அந்தங் கடந்தும் அதுவது வாய்நிற்கும்
பந்த வுலகினிற் கீழோர் பெரும்பொருள்
தந்த வுலகெங்குந் தானே பராபரன்
வந்து படைக்கின்ற மாண்பது வாமே

ஐம்பெரும் பூதங்கள் சிவனால் அழிக்கப்பட்டாலும் அவை நுட்பமான ஒளி அணுக்களாக மாறிச் சிவசோதியில் திகழும். சீவனைப் பதப்படுத்தும் உலகில் தன்னை அடைந்தவர்களைத் தாங்கும் பொருளும் சிவனே.
தான் படைத்து அளித்த உலகம் அனைத்துக்கும் தானே பராபரன் ஆவான். பக்குவம் அடைந்துவிட்ட சீவனுக்குத் தானே சிவகுருவாக வந்து அருள் புரிவதே அவன் மாண்பு!
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#3004. அத்தன் உருவம் உலகேழு எனப்படும்!

முத்தண்ட வீரண்ட மேமுடி யாயினும்
அத்தன் உருவம் உலகே ழெனப்படும்
அத்தனின் பாதாளம் அளவுள்ள சேவடி
மத்தர் அதனை மகிழ்ந்துண ராரே

வீடுபேறு எனப்படும் சிவலோகம் சிவபெருமானின் திருமுடியாகும்.
ஏழு உலகங்களும் அவன் திருமேனியாகும்.
அவன் திருவடிகள் பாதாளம் ஏழினுக்கும் கீழே ஊடுருவி நிற்கும். அறிவற்றவர்கள் பெருமானின் இந்த சிறப்பினை உணர்ந்தும்,
அறிந்தும் அகம் மகிழ இயலாதவர்கள்.
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#3005. ஆதிப் பிரான் நடுவாகி நின்றான்!

ஆதிப் பிரான்நம் பிரானவ் வகலிடச்
சோதிப் பிரான்சுடர் மூன்றொளி யாய்நிற்கும்
ஆதிப் பிரான்அண்டத் தப்புறங் கீழவன்
ஆதிப் பிரான்நடு வாகிநின் றானே.

நம் அனைவரையும் நடத்திச் செல்லும் லைவன் சிவன்; முத்தி உலகில் அவன் கதிரவன், திங்கள், அக்கினி என்னும் முச்சுடர்களாகப் பேரொளி வீசுவான். மேலே உள்ள அண்டங்களுக்கு மேலாக இருப்பவன் அவனே. கீழே உள்ள அண்டங்களுக்குக் கீழாக இருப்பவனும் அவனே. இந்த உலகங்களின் நடுவாகி நின்று அவற்றை நடத்துபவனும் அவனே!
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#3006. அண்டம் கடந்த பெருமையன்

அண்டம் கடந்துஉயர்ந்து ஓங்கும் பெருமையன்
பிண்டம் கடந்த பிறவிச் சிறுமையன்
தொண்டர் நடந்த கனைகழல் காண்டொறும்
தொண்டர்கள் தூய்நெறி தூங்கிநின் றானே.

அண்டங்களைக் கடந்து ஓங்கி இருக்கும் பெருமை வாய்ந்தவன் சிவன்; உருவம் பொருந்தி இருக்கும் தாழ்ந்த பிறவிகளின் நிலைகளைக் கடந்து நிற்பவன் அவன்; ஒலிக்கின்ற தன் திருவடிகளை நாடி நடந்து வரும் தொண்டர்களைத் தூயநெறியில் அழைத்துச் செல்பவனும் அவனே!
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#3007. பொன்னிறமாகி நின்றான்!

உலவுசெய் நோக்கம் பெருங்கடல் சூழ
நிலம்முழுது எல்லாம் நிறைந்தனன் ஈசன்
பலம்முழுது எல்லாம் படைத்தனன் முன்னே
புலம்முழு பொன்னிற மாகிநின் றானே.

பெருங் கடல் சூழ்ந்த பரந்த நிலவுலகில் ஈசன் நிறைந்து நிற்பது அதில் உலவும் எண்ணம் கொண்டு இருப்பதனால்! சீவராசிகளுக்குத் தேவையானவற்றை அவன் உலகில் முன்னரே படைத்து விட்டான். அவன் உலகினரைக் காக்க வேண்டிப் பொன்னிறம் ஆகி நிற்கின்றான்.
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#3008. நிராபரனாகி நிறைந்து நின்றான்

பராபர னாகிப் பல்லூழிகள் தோறும்
பராபர னாய்இவ் அகலிடம் தாங்கித்
தராபர னாய்நின்ற தன்மை யுணரார்
நிராபர னாகி நிறைந்துநின் றானே

தானே பரனாகவும், அபரனாகவும் விளங்குபவன் சிவன். பல ஊழிகளில் தானே நுண்மையாகவும், பருமையாகவும் விளங்குபவன் சிவன். தானே பூமியைத் தங்கி வருவதை உலகத்தோர் உணர்ந்து கொள்ளவில்லை. அவன் ஆன்ம எல்லைகளைக் கடந்து ஆன்மாவிலும் நிறைந்து நிற்கின்றான்.
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#3009. போற்றும் தெய்வம் தானே!

போற்றும் பெருந்தெய்வம் தானே பிறரில்லை
ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும்
வேற்றுடல் தானென்றும் அதுபெருந் தெய்வமாம்
காற்றது ஈசன் கலந்து நின்றானே.

போற்றுதலுக்கு உரிய பெருந்தெய்வம் சிவனன்றி வேறு எவரும் இல்லை. சீவனுக்கு ஆதாரமாகிய உடலும், அந்த ஆதாரத்தைக் கடந்து நிற்கும் நாதமும், அந்த நாதத்தைக் கடந்து நிற்கும் நாதாந்தமும், அகண்ட வடிவமும் ஆகிய சிவனே அனைத்துத் தெய்வங்களிலும் பெரிய தெய்வம் ஆவான். பருமை, நுண்மை என்ற இரண்டையும் ஒன்றாக இணைக்கும் பிராண சக்தியும் நம் சிவனே!
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்

#3010. திகையனைத்தும் சிவனே!

திகையனைத் தும்சிவ னேஅவ னாகின்
மிகையனைத் தும்சொல்ல வேண்டா மனிதரே
புகையனைத் தும்புறம் அங்கியிற் கூடு
முகையனைத் தும்எங்கள் ஆதிப் பிரானே.

அனைத்துத் திசைகளும் நம் சிவனே! அவனுக்கு மேலான தெய்வம் ஒன்றுண்டு என்று நீங்கள் சொல்ல வேண்டாம் மனிதர்களே! புகை மேலே உயரத்தில் காணப்பட்டாலும் அது தீயிலிருந்து எழும்பியதே. மேலாகக் காட்சி தரும் பொருட்கள் எல்லாம் சிவன் என்னும் ஆதிப்பிரானிடம் இருந்து தோன்றியவை என்று அறிவீர்!
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#3011. சிவன் தான் பலப்பல சீவன் ஆவான்

அகன்றான் அகலிடம் ஏழும்ஒன்றாகி
இவன்தான் எனநின்று எளியனும் அல்லன்
சிவன்தான் பலபல சீவனு மாகி
நவின்றான் உலகுறு நம்பனும் ஆமே.

மேல் உலகங்கள் ஏழு, கீழ் உலகங்கள் ஏழு என்ற எல்லா உலகங்களும் சிவனே! அவனே அவற்றில் இருந்து வேறாகவும் நிற்பான்!
சிவன் அனைத்துருவாக இருந்த போதிலும், இவனை எவராலும் காண இயலாது. பலப்பல சீவராசிகளின் உயிராக இருந்து அவற்றைச் செலுத்துபவன் சிவனே! சீவன் நம்புவதற்கு உரிய ஒரே தெய்வம் சிவனே!
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#3012. உள்ளுறும் உள்ளவன் சிவன்

கலையொரு மூன்றும் கடந்தப்பால் நின்ற
தலைவனனை நாடுமின் தத்துவ நாதன்
விலையில்லை விண்ணவ ரோடும் உரைப்பன்
உரையில்லை உள்ளுறும் உள்ளவன் தானே.

தந்திரக்கலை, மந்திரக்கலை, உபதேசக் கலை என்ற மூன்றினையும் கடந்து அவற்றுக்கு அப்பால் நிற்பவன் சிவன். அந்தத் தலைவனை நீங்கள் விரும்பி நாடுங்கள்! அனைத்துத் தத்துவங்களுக்கும் அவனே தலைவன்! அவன் நம்மால் விலை மதிக்க முடியாதவன்! அவனைத் தேவர்களுள் ஒருவனாகப் பிற தேவர்களைப் போல எண்ணுவது தவறு. சிந்தையை அவன் மேல் நிலை நாட்டி இடையறாது அவனைக் குறித்து எண்ண, எண்ண உங்களிடம் நன்கு விளங்குவான் சிவன்.
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#3013. அன்பு கொண்டேனே!

படிகால் பிரமன்செய் பாசம் அறுத்து
நெடியான் குறுமைசெய் நேசம் அறுத்துச்
செடியார் தவத்தினில் செய்தொழில் நீக்கி
அடியேனை உய்யவைத்து அன்புகொண் டானே.

பல பிறவிகள் தொடரக் காரணம் ஆகிய என் பாசத்தை சிவன் அறுத்துக் களைந்தான். காக்கும் தெய்வம் திருமால் எனக்குள் பெருக்கிய உலகப் பொருட்களின் மேலே உள்ள விருப்பங்களை ஒழித்தான். அட்டாங்க யோகத்தால் விளையும் துன்பங்களைப் போக்கினான். இங்கனம் தானே உவந்து வந்து என்னை உய்வித்த பிரானிடம் நான் அன்பு கொண்டேனே!
 

Latest posts

Latest ads

Back
Top