• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

#12. தி3னமபி ரஜனி​

# 12. காலத்தின் விளையாட்டு.

தி3னமபி ரஜனி ஸாயம் ப்ராத:
சி’சி’ர வசந்தௌ புனராயாத: |
கால: கிரீட3தி க3ச்சத்யாயு:
தத3பி ந முஞ்சத் யாசா’வாயு: ||


காலம் விளையாடுகின்றது. பகலாகவும், இரவாகவும், மாலையாகவும், காலையாகவும், குளிர் காலமாகவும், வசந்த காலமாகவும் மாறி மாறிக் காட்சி அளிக்கின்றது. காலத்தின் விளையாட்டில் ஒருவனது ஆயுளும் முடிந்து போகின்றது. இது அத்தனையும் அறிந்திருந்த போதிலும் ஆசை அகல்வதில்லை. மூச்சுக் காற்று நீங்கினாலும் ஆசைக் காற்று நீங்குவதில்லை.
 

#13. கா தே காந்தா​

13 . ஆசைகளை ஒழி!

கா தே காந்தா த4னக3த சிந்தா
வாதுல கிம் தவ நாஸ்தி நியந்தா |
த்ரிஜக3தி ஸஜ்ஜன ஸங்க3தி ரேகா
ப4வதி ப4வார்ணவ தரணே நௌகா ||

முதுமையில் வாத நோயால் நடுங்கும் கிழவனே! நீ விழுந்து விடாமல் உன்னைத் தாங்கிப் பிடிப்பவர் யாருமே இல்லையா? உன்னுடைய மனைவி என்பவள் யார்? பணத்தின் மீது நீ கொண்டிருந்த ஆசை எத்தகையது? அந்தப் பணம் இப்போது உன் உதவிக்கு வருகின்றதா? நல்லவர்களின் சகவாசமே உன்னை இந்தப் பிறவிக் கடலிலிருந்து கரை ஏற்ற வல்ல ஓடம் என்பதைத் தெரிந்து கொள்வாய்.
 

#14. ஜடிலோ முண்டி3​

#14. எல்லாமே வயிற்றை வளர்ப்பதற்கே!

ஜடிலோ முண்டி3லுஞ்சித கேச:
காஷாயாம்ப4ர ப3ஹு க்ருத வேஷ:|
பச்’யன்னபி ந பச்’யதி மூடோ
ஹ்யுத3ர நிமித்தம் ப3ஹுக்ருத வேஷ:||


ஒருவன் ஜடை தரித்து ரிஷியைப் போல வேஷம் போடுகின்றான்.
இன்னொருவன் மொட்டை அடித்துக் கொள்ளுகின்றான்.
மற்றொருவன் தலை முடியை முன்னும் பின்னும் கத்தரித்துக் கொள்ளுகின்றான்.
இன்னொருவன் காஷாயம் தரித்து கண்டவர்கள் மனத்தை மயங்கச் செய்கின்றான்.
இந்த மூடர்கள் கண்கள் இருந்த போதிலும் உலகம் மாயை என்று கண்டுகொள்வதில்லை.
இவர்கள் போடும் எல்லா வேஷங்களும் ஒரு ஜாண் வயிற்றை வளர்பதற்காகவே.
 

#15. அங்க3ம் க3லிதம்​

15. ஆசை விடுவதே இல்லை.

அங்க3ம் க3லிதம் பலிதம் முண்ட3ம்
த3ச’ன விஹீனம் ஜாதம் துண்ட3ம் |
வ்ருத்3தோ4 யாதி க்ருஹீத்வா த3ண்ட3ம்
ததபி ந முஞ்சத் யாசா’ பிண்ட3ம் ||

உடல் தளர்ந்து விட்டது. தலைமுடி நரைத்துவிட்டது அல்லது மொட்டை ஆகி விட்டது.
பற்கள் உதிர்ந்து போய்விட்டன அல்லது உடைந்து போய்விட்டன.
தடியைப் பிடித்துக் கொண்டு நடமாடும் கிழவனையும் ஆசைகள் விட்டபாடு இல்லை.

 

#16. அக்3ரே வஹ்னி:​

#16. துன்பத்திலும் ஆசைகள் அழிவதில்லை.

அக்3ரே வஹ்னி: ப்ருஷ்டே பா4னு :
ராத்ரௌ சுபு3க ஸமர்பித ஜானு: |
கரதல பி4க்ஷஸ் தருதல வாஸ:
தத3பி ந முஞ்சத்யாசா’ பாச’ : ||


ஒருவன் தவம் செய்கின்றான். பகலில் எதிரில் நெருப்பு. பின்புறம் கொளுத்தும் சூரியன். இரவில் குளிர் தாங்கமுடியாமல் தான் முகவாய்க் கட்டையை தான் முழங்காலில் வைத்துக் கொள்ளுகின்றான். திருவோடும் இன்றி கைகளிலேயே பிச்சை வாங்குகின்றான். அப்படிப் பட்டவனையும் ஆசை என்கின்ற பாசக் கயிறு விடுவதே இல்லை.
 

#17. குருதே க3ங்கா3​

17. ஞானம் இன்றேல் மோக்ஷம் இல்லை!

குருதே க3ங்கா3 ஸாக3ர க3மனம்
வ்ரத பரிபாலன மத்2வா தா3னம் |
ஞான விஹீன: ஸர்வ மதேன
முக்திம் ந ப4ஜதி ஜன்மச’தேன ||


கங்கையிலும், கடலிலும் நீராடுவதனாலும், பல விரதங்களைப் புரிவதாலும், அனேக தான தர்மங்கள் செய்வதாலும் மோக்ஷம் கிடைக்காது. ஞானம் அடைந்தவனுக்கே மோக்ஷம் கிடைக்கும். ஞானம் ஏற்படாவிட்டால் நூறு பிறவிகள் எடுத்தபோதும் முக்தி கிடைக்காது!
 

#18. ஸுரமந்தி3ர தரு​


18. வைராக்யமே பரமசுகம்.

ஸுரமந்தி3ர தரு மூல நிவாஸ:
ச’ய்யா பூ4ஸ் தரு ஜனிதம் வாஸ: |
ஸர்வ பரிக்3ரஹ போ4க3 த்யாக3:
கஸ்ய ஸுகம் ந கரோதி விராக3: ||


கோவிலிலோ அல்லது மரத்தின் அடியிலோ வாசம்; தரையே படுக்கை;
மரப் பட்டைகளினால் செய்த உடை; தன்னுடைய எந்த உடமைப் பொருளையுமே அனுபவிக்காத வைராக்கியம்; இவை யாருக்குத் தான் சுகம் அளிக்காது?
பற்றற்ற நிலையே பரம சுகமானது.
 

#19. யோக3ரதோ வா​

19. பிரம்மானந்தமே உண்மை ஆனந்தம்.

யோக3ரதோ வா போ4க3ரதோ வா
ஸங்க3ரதோ வா ஸங்க3விஹீன: |
யஸ்ய ப்3ரம்மணி ரமதே சித்தம்
நந்த3தி நந்த3தி நந்த3த்யேவ ||


உலக போகங்களைத் துறந்து யோகத்தில் ஈடுபட்டவனாகிலும் சரி;
உலக போகங்களை அனுபவிப்பவனாக இருந்தாலும் சரி;
மற்றவர்களுன் தொடர்பு உடையவனாக இருந்தாலும் சரி;
யாருடனும் தொடர்பு இல்லாதவனாகிலும் சரி;
எந்த நிலையிலும் பிரம்மத்தின் மீது மனதைச் செலுத்துபவனாக இருந்தால்,
அவன் முக்காலங்களிலும் தப்பாமல் ஆனந்தம் அடைகின்றான்.
 

#20. ப4க3வத்3 கீ3தா​

20. யமதண்டனை இல்லை!

ப4க3வத்3 கீ3தா கிஞ்சித3தீ4தா
க3ங்கா3 ஜலலவ கணிகா பீதா |
ஸக்ருத3பி யேன முராரி ஸமர்ச்சா
க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா ||

எந்த மனிதன் தான் வாழ்நாட்களில் பகவத் கீதை
என்ற புனித நூலைச் சிறிதேனும் கற்கின்றானோ,
எந்த மனிதன் கங்கையின் புனித நீரை ஒரு துளியேனும் அருந்தினானோ;
எந்த மனிதன் ஒரு முறையேனும் இறைவனுக்கு பூஜை செய்கின்றானோ
அவனிடம் யமன் வாக்குவாதம் செய்வதே இல்லை.
அவனுக்கு யம தண்டனையும் இல்லை.
அவன் முக்தி அடைகின்றான்.
 

#21. புனரபி ஜனனம்​


21. இறைவனே! என்னைக் காப்பாற்று!

புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனி ஜட2ரே ச’யனம் |
இஹ ஸம்ஸாரே ப3ஹு து3ஸ்தாரே
க்ருபயாsபாரே பாஹி முராரே ||

மறுபடியும் பிறப்பு; மறுபடியும் இறப்பு; என்று மாறி மாறி வருகின்றன.
மீண்டும் மீண்டும் ஒரு தாயின் வயிற்றில் வாசம் செய்ய வேண்டிவருகிறது.
இப்படி முடிவே இல்லாத பிறப்பு, இறப்பு என்னும் சுழலில் சிக்கி உள்ளேன்.
கரை காணமுடியாத இந்த உலக வாழ்விலிருந்து கருணையுடன் நீ தான்
என்னைக் கரை சேர்க்க வேண்டும்.
 

#22. ரத்2யா கர்ப்பட​

22. யோகியும் ஒரு பித்தனே!

ரத்2யா கர்ப்பட விரசித கந்த2:
புண்யாபுண்ய விவர்ஜித பந்த2: |
யோகி3 யோக3 நியோஜித சித்த:
ரமதே பா3லோன்மத்தவ தே3வ ||

ஆண்டவனிடம் மனத்தைச் செலுத்திய யோகி, தெருவில் கிடக்கும் கந்தல் துணியைக் கோவணமாக அணிந்து கொள்வான். அவன் செயல்கள் எல்லாம் புண்யமா, பாவமா, ஆசாரமா, அனாசாரமா என்று அறிய முடியாதபடி இருக்கும். ஒரு குழந்தையைப் போலவும், ஒரு உன்மத்தனைப் போலவும் அவன் தனக்குத் தானே மகிழ்ச்சி அடைவான்.
 

#23. கஸ்த்வம் கோsஹம்​


23. ‘நான் யார்’ என்று யோசி!

கஸ்த்வம் கோsஹம் குத ஆயாத:
கா மே ஜனனி கோ மே தாத: |
இதி பரிபா4வய ஸர்வமஸாரம்
விச்’வம் த்யக்த்வா ஸ்வப்ன விசாரம் ||

” நீ யார்? நான் யார்? எங்கிருந்து நான் வந்தேன்? என் தாய் யார்? என் தந்தை யார்? இவை அனைத்தும் கனவைப் போன்ற மாயை அல்லவா?” இப்படியெல்லாம் சிந்தித்து இந்த உலகமே சாரமற்றது என்று உணருவாய்.
 

#24. த்வயி மயி​


24. ஸர்வம் விஷ்ணு மயம்!

த்வயி மயி சான்யத்ரைகோ விஷ்ணு :
வ்யர்த்த2ம் குப்யஸி மய்யஸஹிஷ்ணு |
ஸர்வஸ்மின்அபி பச்’யாத்மானம்
ஸர்வத்ரோத்ஸ்ருஜ பே4த3ஜ்ஞானம் ||


உன்னிடமும், என்னிடமும், மற்றும் எல்லா இடங்களிலும் ஒரே விஷ்ணு தான் பரவி உள்ளான். என்னிடம் பொறாமை கொண்டு ஏன் நீ கோபம் கொள்கின்றாய்? எல்லாவற்றிலும் தன்னையே காண்பவனுக்கு ‘ நீ, நான்’ என்ற பிரித்துப் பார்க்கும் பேத ஞானம் அகன்று விடும்.
 
Every problem in our life can be traced back to
"Me & Mine AND /OR You & Your".

When "I" and "You" are both equated to the same paramathma
all the existing micro-mini-differences, hatred and fear will vanish!

Easier said than done???
 

#25. ச’த்ரௌ மித்ரே​

25. எல்லோரையும் ஸமமாகக் காண்பாய்!

ச’த்ரௌ மித்ரே புத்தரே ப3ந்தௌ4
மா குரு யத்னம் விக்3ரஹஸந்தௌ4 |
ப4வ ஸம சித்த ஸர்வத்ர த்வம்
வாஞ்ச்சஸ் யசிராத் யதி விஷ்ணுத்வம் ||


விஷ்ணுத்வம் என்கின்ற மோக்ஷத்தை அடைய விரும்பினால், பகைவனிடத்திலும், நண்பனிடத்திலும், பிள்ளை இடத்திலும், உறவினன் இடத்திலும் பகைமையோ அல்லது நட்போ பாராட்டதே. எல்லோரையும் சமமாகக் கருதிப் பழகும் மனப் பக்குவத்தை அடைவாய்!
 
THIS equanimity of treating everyone equal has come to effect now.

Thanks to COVID....

Now everyone except oneself is a complete stranger!

ONE OWES nothing to anyone - whoever it may be!
 

#26. காமம் க்ரோத4ம்​

26. ஆன்மாவை உயர்த்துவாய் !

காமம் க்ரோத4ம் லோப4ம் மோஹம்
த்யக்த்வாத்மானம் பா4வய கோஹம் |
ஆத்மா ஞான விஹீன மூடா4:
தே பச்யந்தே நரக நிகூ3டா4: ||

காமம், கோபம், பணத்தாசை, மயக்கம் என்பவற்றை விட்டு விட்டு “நான் யார்” என்ற ஆராய்ச்சியில் இறங்குவாய். ஆத்ம ஞானம் இல்லாத மூடர்கள் நரகத்தில் மூழ்கித் துயர் அடைகின்றனர்.
 

#27. கே3யம் கீ3தா​

27. செய்ய வேண்டியன.

கே3யம் கீ3தா நாம ஸஹஸ்ரம்
த்4யேயம் ஸ்ரீபதி ரூப மஜஸ்ரம் |
நேயம் ஸஜ்ஜன ஸங்கே3 சித்தம்
தே3யம் தீ3ன ஜநாய ச வித்தம் ||


பகவத் கீதையும், விஷ்ணு ஸஹஸ்ரநாமமும் பாடப் பட வேண்டும்;
ஸ்ரீபதியாகிய நாராயணனின் உருவம் எப்போதும் த்யானம் செய்யப் பட வேண்டும்; மனத்தை நல்லவர்களின் நட்பில் செலுத்த வேண்டும்;
செல்வம் ஏழைகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படவேண்டும்.
 

#28. ஸுகத: க்ரியதே​

28. பாவச் செயல்களை விடவேண்டும்!

ஸுகத: க்ரியதே ராமா போ4க3:
பச்’சாத் ஹந்த ச’ரீரே ரோக3: |
யத்3யபி லோகே மரணம் ச’ரணம்
தத3பி ந முஞ்சதி பாபா சரணம் ||


பெண்ணின் அனுபவம் சுகமாகச் செய்கின்றான்.
பிறகு உடலில் நோய் நொடிகள் உருவாகின்றன.
மரணம் தவிர்க்கவே முடியாதது என்றாலும்
பாபச் செயல்கள் செய்வதை யாருமே விடுவதில்லையே!
 

#29. அர்த்த2மனர்த்த2ம்​


29. பணத்தால் துன்பமே!

அர்த்த2மனர்த்த2ம் பா4வய நித்யம்
நாஸ்தி தத: ஸுகலேச’: ஸத்யம்|
புத்ராத3பி த4ன பா4ஜாம் பீ4தி:
ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி: ||

பணத்தை சுகம் என்று எண்ணாதே.
அது எப்போதும் துன்பத்தைத்தான் தரும்.
பிள்ளையிடமிருந்து பணம் வாங்கினாலும் பயம் தான்.
எல்லாவிடங்களிலும் பணத்தால் ஏற்படும் துன்பம் சமமானதே.
 

#30. ப்ராணாயாமம்​

30. மனத்தை அடக்குவாய்!

ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம்
நித்யா நித்ய விவேக விசாரம் |
ஜாப்ய ஸமேத ஸமாதி4 விதா4னம்
குர்வவதா4னம் மஹத3வதா4னம் ||

மூச்சுக் காற்றை பிராணாயாமத்தில் அடக்குவதையும் ;
பிரத்யாஹாரத்தில் புலன்களை அடக்குவதையும்;
‘நிலையானது எது? நிலை அற்றது எது?’ என்ற விவேக ஞானத்தையும்,
ஜபம் செய்வதையும் , சமாதி என்ற மனதின் ஒரு நிலைப் பாட்டினையும்
நீ ஏற்றுக்கொண்டு நன்கு அவற்றைச் செய்ய வேண்டும்.
 

#31. கு3ரு சரணாம்பு3ஜ​


31. குருதிருவடிகளே சரணம்!

கு3ரு சரணாம்பு3ஜ நிர்ப4ர ப4க்த :
ஸம்ஸாரா த3சிராத்3 ப4வ முக்த: |
ஸேந்த்3ரிய மானஸ நியமா தே3வம்
த்3ரக்ஷ்யஸி நிஜ ஹ்ருத3யஸ்த்தம் தே3வம் ||


நீ உன்னுடைய புண்ணிய, பாவங்களாகிய பாரத்தையெல்லாம் குரு திரு அடிகளுக்கு அர்ப்பணம் செய்து பக்தி செய்தால், விரைவிலேயே உன் பிறவித் தளைகள் நீங்கிவிடும். உன் இந்திரியங்களையும், மனத்தையும் நன்றாகக் கட்டுப்படுத்தினால் உன் உள்ளத்திலேயே அந்தர்யாமியாக உள்ள இறைவனையும் நீ தரிசிப்பாய்!
 
 

அபிராமி அந்தாதி​

திரு அபிராமிப் பட்டர் சோழ நாட்டில், 18 வது நூற்றாண்டின் பிற்பகுதியில், அந்தணர் குலத்தில் பிறந்தவர். திருக்கடவூரில் வாழ்ந்தவர். இவர் தமிழ் மொழி, வடமொழிப் புலமையும், நல்ல ஒழுக்கமும், இறை பக்தியும் கொண்டு இலங்கினார். தம் குல தெய்வமான அபிராமி அம்மையிடம் அளவற்ற பக்தி கொண்டவர். அவள் அருளைப் பரிபூரணமாகப் பெற்றவர்.

நல்லவர்களை உலகம் நிம்மதியாக வாழவிடுமா? பொறாமையால் பீடிக்கப்பட்ட சில அந்தணர்கள் இவரைப் பற்றி குறை கூறித் திரிந்தனர். சரபோஜி மகாராஜா ஒரு தை அமாவாசை அன்று திருக்கடவூர் கோவிலுக்கு வந்தார்.

கோள் கூறுபவர்களுடைய கூற்றை ஆராயவேண்டி, பட்டரிடம் அரசன் அன்றைய திதியைக் கேட்டான். அம்மையின் அருள் ஒளி உள்ளத்தில் நிறைத்து வைத்திருந்த பட்டர் பௌர்ணமி திதி என்ற பதில் அளித்து விட்டார். அமாவாசையைப் பௌர்ணமி என்ற கூறக் கேட்ட மன்னன் அளவற்ற கோபம் கொண்டான்.

அரசன் தனக்கு தண்டனை தருமுன்னர் தானே தனக்கு தண்டனை அளித்துக் கொள்ள எண்ணினார் பட்டர். ஒரு நெருப்பு குண்டம் அமைத்து அதற்கு மேல் நூறு கயிறுகளால் தாங்கப்படும் உறியை அமைத்து அதன் மீது அமர்ந்து கொண்டு நூறு அந்தாதிப் பாடல்களைப் பாடினார்.

ஒவ்வொரு பாடல் முடிந்ததும் ஒவ்வொரு கயிறாக வெட்டினார். அவர் 79 வது பாடல் ஆகிய ‘விழிக்கே அருள் உண்டு’ என்ற பாடலின் முடிவில் தேவி தன் காதணியைச் சுழற்றி வீசவே, வானில் பூரண நிலவின் ஒளி வீசியது!

எஞ்சிய பாடல்களையும் பாடுமாறு அன்னை பணிக்கவே, பட்டரும் நூறு பாடல்களையும் பாடி முடித்தார். தன் தவற்றை உணர்ந்த மன்னன் மன்னிப்புக் கோரி, அவரை வணங்கி, அவருக்கு ‘அபிராமிப் பட்டர்’ என்ற பட்டதையும் வழங்கினான்.

கணபதி துதியையும், நூற்பயனையும் சேர்த்து 102 பாடல்கள் கொண்ட இந்தத் தொகுதியைக் காண்போம்.

அபிராமி அன்னையையும், அபிராமிப் பட்டரையும் வணங்கி இத்தொடரைத் தொடங்குகின்றேன்.

உங்கள் உண்மையுள்ள,
விசாலாக்ஷி ரமணி.
 

கணபதி காப்பு.​

தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே, உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
கார் அமர் மேனி கணபதியே நிற்கக் கட்டுரையே.


கொன்றைப் பூவையும், சண்பக மாலையையும் சூடியுள்ள, தில்லை ஈசனின் இடது பாகத்தில் இடம் பிடித்துள்ள உமையின் மகனே! கரிய நிறத் திருமேனி கணபதியே! ஏழு உலகங்களையும் காக்கும் புகழ் வாய்ந்த அபிராமி அன்னையின் மீது யான் பாடத் தொடங்கும் அந்தாதி, என் உள்ளத்துள் என்றும் நிலை பெற்று விளங்க அருள் புரிவாய்.
 

Latest posts

Latest ads

Back
Top