பின்புலக் கதை
இந்தத் தொடரின் பின்புலக் கதை இது!
யோகதர்ஷன் மாஸ்டர் ஸ்ரீமன் நாராயணீயத்தை விளக்கினார்.
ஒவ்வொரு வரியும் ஒரு மினி ரயில் வண்டி போல இருக்கும்.
எங்கே நிறுத்த வேண்டும்? எப்படிப் பிரிக்க வேண்டும்? தெரியாது.
படிப்பதை விடப் பாடுவது எளிதாக இருக்கும் போலத் தோன்றியது.
திருச்சூர் ராமச்சந்திரன் அவர்களின் ஒலிநாடாவை வைத்துக் கொண்டு
மிகவும் சிரமப்பட்டு 100 வேறு ராகங்களில் பாடக் கற்றுக் கொண்டேன்.
ஒவ்வொரு தசகமும் வெவ்வேறு ராகம். இது ஒரு 100 ராக மாலிகை.
அப்போதும் முழு மனத் திருப்தி ஏற்படவில்லை எனக்கு.
வார்த்தைகளின் பொருள் தெரிந்தால் நன்றாக இருக்கும்
என்று முனைப்பாகப் புத்தகத்தைத் தேடத் தொடங்கினேன்.
ஏறக் குறைய நான் பிறந்த போது வெளிவந்த ஒரு புத்தகத்தில்
பதம் பிரித்துச் சொற்களின் பொருளும் அழகாகத் தரப்பட்டு இருந்தது.
ஆனால் அந்த புத்தகத்தைக் கடனாகக் கொடுப்பதற்குக் கூட
அதை வைத்திருந்த அவர்கள் சம்மதிக்க வில்லை.
ஏறக் குறைய நம்பிக்கையை இழந்து விட்டேன் அது கிடைக்கும் என்று.
இவருடைய அத்திம்பேரின் தம்பியிடம் அது பற்றி பேசியபோது
அவர் என்னிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார்,
“உனக்கு சமஸ்கிருதம் படிக்கத் தெரியுமா?”
“தெரியும்” என்றேன். அவர் முகம் மலர்ந்து விட்டது.
“நீ தேடும் புத்தகம் என்னிடம் ஒரு காபி உள்ளது.
எத்தனையோ பேர்கள் தரச் சொல்லிக் கேட்டார்கள்.
ஆனால் சம்ஸ்க்ருதம் படிக்கத் தெரிந்தவருக்குத் தான் கொடுப்பது
என்று தீர்மானமாகக் கொடுக்க மறுத்து விட்டேன்.
இனி அந்தப் புத்தகம் உன்னுடையது” என்றார்.
எனக்கு மகிழ்ச்சியில் பேசக் கூட முடியவில்லை.
அவர் புத்தகத்தில் என் பெயர் எழுதியிருந்தது போலும்!
புத்தகத்தை அனுப்பி வைத்தார் சென்னை சென்ற உடனேயே.
இப்போது அது என் இணை பிரியாத் துணை ஆகிவிட்டது!
அந்தப் புத்தகம் மட்டும் என்னிடம் இல்லாவிட்டால்
இந்தத் தொடர் பிறந்து இருக்கவே முடியாது நிச்சயமாக!
அந்தத் தாத்தாவுக்கு நன்றி நம் எல்லோர் சார்பிலும்!
ஏதோ பெரிதாக சாதித்தது போல ஒரு திருப்தி ஏற்படுகிறது.
“கண்ணன் அருள் எல்லோருக்கும் எப்போதும் இருக்க வேண்டும்”
என்று வேண்டிக் கொண்டு இந்தத் தொடரை முடிக்கின்றேன்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதை வசிக்கலாம்.
தினப்படியும் வாசிக்கலாம்! கோகுலாஷ்டமிக்கும் வாசிக்கலாம்!