#130. நிருகன் கதை
களித்து விளையாடிய கண்ணனின் மகன்கள்
களைத்து நீர் வேட்கை மிகுந்ததால் ஒரு
கிணற்றில் எட்டிப் பார்த்தனர்; அங்கே
கிண்ணென்று கல் போன்ற ஒரு ஓணான்.
அற்புதமான அதனை அவர்களால் வெளியே,
எத்தனை முயன்றும் தூக்க இயலவில்லை.
கண்ணனிடம் சென்று கூறினர் பிள்ளைகள்
மண்ணுலகோர் காணா விந்தையைப் பற்றி.
இடத்தை அடைந்த கண்ணன் தன் சிவந்த
இடக்கையால் தூக்கி வெளியே எடுத்தான்;
கண்ணன் கைபட்டவுடனேயே அந்த ஓணான்
பொன்னிற தேவனாகவே மாறி விட்டது!
பட்டாடைகளும், பலப்பல ஆபரணங்களும்
பளபளக்கும் ஒரு வாலிபனாக மாறியது.
பணிவுடன் கண்ணன் தாள்களை அவன்
பணிந்து தன் கதையைக் கூறலானான்.
அரசன் நிருகன் எனப்படுபவன் அவனே!
சிறந்த இக்ஷ்வாகு குலத்தின் மன்னன்;
கொடைவள்ளல் என்ற புகழ் பெற்றவனுக்கு
கொடையினாலேயே கொடுமை நிகழ்ந்தது.
காராம் பசுக்களை அந்தணர்களுக்கு தானம்
கோராமலேயே அளிக்குபோது, ஒருவனின்
கராம் பசுவும் மந்தையில் சேர்ந்துகொண்டது.
ஆராயாமல் அதையும் அளித்து விட்டான்.
பசுவின் சொந்தக்கார மனிதனுக்கும்
பசுவை தானம் பெற்ற மனிதனுக்கும்
பரபரப்பான வாக்குவாதங்கள் முற்றி
சமரசம் செய்ய முடியவே இல்லை.
அந்திமக் காலம் வந்த மன்னனிடம்,
“முந்தி தண்டனையா? சுவர்க்கமா?”
வந்து வினவினான் யமதர்மராஜன்,
“தந்து விடு தண்டனையை முதலில்!”
“விழு!” என்றதும் ஒரு ஓணானாக மாறி
விழுந்தான் கிணற்றில் என்றோ ஒருநாள்!
விழுந்தவன் வெகுநாள் காத்திருந்தான்;
வேணு கோபாலனின் கை ஸ்பரிசத்துக்கு.
காத்திருந்தது சற்றும் வீண்போகவில்லை.
“காலமெல்லாம் உன்மீது நான் கொண்ட
பக்தி மாறாமலேயே நிலைத்து இருக்க
பக்தனுக்கு அருள் செய்வாய் கண்ணா!”
பொன் விமானத்தில் ஏறிக் கொண்டான்;
பொன்னுலகம் பறந்து சென்றான் நிருகன்.
நல்லதையே எண்ணிச் செய்யும் போதும்
நாம் எதிர்பாராத தீயவிளைவுகள் வரலாம்!
வாழ்க வளமுடன்
விசாலாக்ஷி ரமணி.
Please use the link given below for the translation in English.
களித்து விளையாடிய கண்ணனின் மகன்கள் களைத்து நீர் வேட்கை மிகுந்ததால் ஒரு கிணற்றில் எட்டிப் பார்த்தனர்; அங்கே கிண்ணென்று கல் போன்ற ஒரு ஓணான். அற்புதமான அதனை அவர்களால் வெளியே, எத்தனை முயன்றும் தூக்க இய…
vannamaalai.wordpress.com