• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 183

பகைவரை ஏற்கலாம்!

நண்பர்களுக்கு உதவி, நட்பை மேம்படுத்துவதைவிட, நம்
நண்பர்களாகப் பகைவரைச் செய்ய, விரைந்து முயலலாம்!

பகைவரே இல்லாமல் செய்யும் வழியைக் காட்டுவதற்கு,
பகைவரை நட்பாக மாற்றும் உபாயம் உரைக்கிறார், அவர்.

'நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்', என்பது குறள்.

தம்முடன் இருப்பவர்களும் அஞ்சும் வகையில் உள்ளவரால்,
தம்முடைய எதிர்பார்ப்பு நிறைவேறும் என்றால், அவர்களை

வலியவராக எண்ணி ஏற்றுக்கொள்ளலாம், என்கின்றார் அவர்.
வலியவர் நன்கு உதவினால், அவரைப் பணியலாம் என்கிறார்.

'உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து', என்பதே அறிவுரை.

தம் செயல்களை முடிப்பதற்கு வலியவர் உதவினால், அவரைத்
தாம் பணிந்து, நட்புடன் ஏற்றுக் கொள்ள, அறிவுரை கூறுகிறார்.

:director:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 184

நாட்டின் சிறப்புக்கு, தூதர் தகுதியுடன் இருப்பது தேவை.
நாட்டின் புகழைத் தாங்கும் தூண்களே நல்ல தூதுவராவர்.

நல்ல தூதருக்கு வேண்டிய மூன்று அடிப்படைப் பண்புகள்,
நல்ல அன்பான குணம், புகழ் வாய்ந்த குடிப்பிறப்பு, மற்றும்

அரசினர் பாராட்டக்கூடிய நற்பண்பு ஆகியவையே என்று,
அருமையான குறட்பாவில், திருவள்ளுவர் உரைக்கிறார்.

'அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு', என்பது குறள்.

இன்னும் இன்றியமையாத தேவைகளாக அவர் கூறுவது,
அன்பு, அறிவு மேலும் ஆராய்ந்து பேசுகிற சொல்வன்மை.

'அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று', என்பதுவே அந்தக் குறட்பா.

இன்னும் மூன்று பண்புகளின் பட்டியலும் தருகிறார், தம்
இன்னொரு குறட்பாவில், தூதுவர்களின் தேவையாக!

சிறந்த அறிவு, பொலிவான தோற்றம், ஆராய்ந்து கற்றுத்
தெளிந்த கல்வி என்பவையே அவை என்று கூறும் குறள்:

'அறிவுரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு'.

ஆழமான தெளிந்த அறிவும், சொல் வன்மையும், அன்பும்,
அழகான தோற்றமும் கொண்ட தூதர்தான் வெல்லுவார்!

:peace:
 
அழகிய தோற்றம்...

அழகிய தோற்றம், தூது செல்வோருக்கு வேண்டும் என்கிறார் வள்ளுவர்;

அழகில் மயங்காதவர் யார்? ஆள் பாதி, ஆடை பாதி என்றும் அறிவோமே!

நல்ல தோற்றம் தர நாமும் முயலுவோம், தூது செல்லாவிட்டாலும்! . :clap2:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 185

செய்திகளை நன்றாகத் தொகுத்து, தேவையற்றவை நீக்கிவிட்டு,
செய்திகள் மகிழ்ச்சியும், பலனும் தருவதுபோலக் கூறவேண்டும்.

இப்படித் தொகுத்து உரைக்கத் தெரிந்த, சொல்வன்மை உள்ளவர்,
எப்படியும் சிறந்த தூதராகச் செயல்படுவார், என்கின்றார் அவர்.

'தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது', என்பது வழிகாட்டல்.

நன்கு கற்ற அறிவாளனாக, பகைவரின் கனல் பார்வைக்கு அஞ்சாது,
நன்கு உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, உரிய காலத்தில், உணர்ந்து

அறிந்து கொள்ளவேண்டியவற்றை அறிந்து கொள்பவனே, நாட்டின்
சிறந்து விளங்கும் தூதனாக இருக்க முடியும், என்கிறார் வள்ளுவர்.

'கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லி காலத்தால்
தக்க தறிவதாம் தூது'. இது அவரது அமுத மொழி.

தன் அழிவே நெருங்கி வந்தாலும், அதை எண்ணி அஞ்சிவிடாது,
தன் கடமை ஆற்றுபவனே, தலைவனின் நம்பிக்கையான தூதன்.

'இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவர்க்கு
உறுதி பயப்பதாம் தூது', என்பது குறட்பா.

உறுதியான அஞ்சா நெஞ்சுடன், தன் உயிரையும் பொருட்படுத்தாது,
இறுதிவரை கடமை ஆற்றுபவனே, நாட்டின் பெருமைக்குரிய தூதன்!

:blabla: . :thumb:
 
இதிகாசங்களில் தூது...

இதிகாசங்களில் தூது சென்றவர், எத்துணை சிறந்து திகழ்ந்தவர்!

இன்று வரை போற்றுகிறோமே, கண்ணன், அனுமன் இருவரையும்! :pray:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 186

எவ்வாறு அணுகுவது?

அரசரின் வட்டத்தில் உள்ளவர்கள் எந்த முறைகளில்,
அரசரிடம் அணுகவேண்டும் என்பதை உணர்த்துகிறார்.

நெருப்பில் குளிர் காய்பவர்கள், நெருங்காது, விலகாது,
நெருப்பின் பலனைப் பெற அறிய வேண்டும்; அதுபோல,

மிகவும் நெருங்கி அரசரிடம் சென்று உறவாடாமலும்,
மிகவும் விலகிப் போகாமலும் இருத்தலே, நலமாகும்.

'அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்'. இது குறள்.

அரசர் விரும்புவது எல்லாவற்றையும் தாம் விரும்பாது,
அரசரைச் சார்ந்து இருத்தலே, நிலையான ஆக்கமாகும்.

'மன்னர் விழைய விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கம் தரும்', என்பது அறிவுரை.

என்றுமே தவறு செய்யாத விழிப்புணர்வு தேவையாகும்;
என்றேனும் தலைவர் சந்தேகித்தால், மாற்றுவது அரிது!

'போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது', என எச்சரிக்கை.

ஒரு அரசருக்கு மட்டுமன்றி, உயர் அதிகாரிகளுக்கும்,
பொருத்தமாக இவை அமைவது, மிக விந்தைதானே!

:decision: . . :nod:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 187

தவிர்க்க வேண்டும்...

பெரியவர் அருகில் உள்ள பொழுது, எவ்வாறு இருத்தல் நலம்?
அரிய குறட்பாக்கள் அமைத்து, திருவள்ளுவர் வழிகாட்டுகிறார்.

பெரியவர் எதிரில் இருக்க, மற்றவர் செவிக்குள் சொல்லுவதும்,
பெரிதாகச் சேர்ந்து சிரிப்பதும், தவிர்க்க வேண்டிய செயல்களாம்.

'செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து', என்று அறிவுரை கூறுகின்றார்.

அரசர் மறைவாகப் பேசுவதை ஒட்டுக் கேட்பது மிகத் தவறாகும்;
அரசரே கூறும் வரை, என்னவென்று கேட்பதும் மிகத் தவறாகும்.

'எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை', என்பதும் அறிவுரையே.

மன நிலை ஒருவருக்கு எவ்வாறு உள்ளது என்றே அறியாமல்,
மனம் போனபடி அவரிடம் ஏதேனும் பேசுவது, மிகத் தவறாகும்.

ஒருவரின் மன நிலையை அறிந்து, தக்க காலத்தையும் அறிந்து,
வெறுப்பவை விலக்கி, விரும்பத் தக்கவை சொல்ல வேண்டும்.

'குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்'. இது குறள்.

நல்ல பண்பாடுகளை அறிந்து, நம் வாழ்வில் அவற்றை ஏற்று,
நல்ல உயர் வாழ்வை வாழ அறிந்து, உலகில் சிறந்திடுவோம்!

:blabla: . . . :grouphug:
 
தொல்லைபேசி!

பிறர் மன நிலை அறியாது, பேசுதல் மிகத் தவறாகும்;
இடர் பல வந்து சேரும், தேவையில்லாப் பேச்சினால்!

தொலைபேசி எடுத்தவுடன், நம் மன நிலை அறியாது,
தொல்லைபேசியாய், நேரம் கெடுப்பவரை அறிவோம்!

முகத்தைக் காண முடியும், நேரில் கண்டு பேசும்போது;
முகத்தைக் காணாது தொலைபேசும்போது, மன நிலை

அறிவது மிகக் கடினமே; கவனம் மிகத் தேவையாகும்!
சிறிய நல விசாரிப்புக்குப் பின், பேசத் தொடங்குவோம்!

:phone: ... :blabla:
 
தொல்லைபேசி!

பிறர் மன நிலை அறியாது, பேசுதல் மிகத் தவறாகும்;
இடர் பல வந்து சேரும், தேவையில்லாப் பேச்சினால்!

தொலைபேசி எடுத்தவுடன், நம் மன நிலை அறியாது,
தொல்லைபேசியாய், நேரம் கெடுப்பவரை அறிவோம்!

முகத்தைக் காண முடியும், நேரில் கண்டு பேசும்போது;
முகத்தைக் காணாது தொலைபேசும்போது, மன நிலை

அறிவது மிகக் கடினமே; கவனம் மிகத் தேவையாகும்!
சிறிய நல விசாரிப்புக்குப் பின், பேசத் தொடங்குவோம்!

:phone: ... :blabla:

உண்மை . நன்றி .
 
யதார்த்த வாழ்வில் எத்தனை துன்பங்கள்!

இயற்கை முன் நாம்!


தாம்தான் உலகைத் தாங்குவது போன்று, பலர்
தம் மனத்தில் எண்ணுவது, உலகில் மிக இயல்பு!

தம் பெரும் பொருள், நகைகள் என்று வங்கிகளில்
தாம் சேர்த்து மகிழ்வதும் கூட, இந்த உலக நடப்பு!

ஒரு கணமேனும் சிந்திப்பாரா, இவற்றின் நிலை,
ஒரு நிமிடம் பூமி அதிர்ந்தால், என்னவாகுமென!

புதைந்துபோன பகுதியில், எதைத்தான் தேடுவார்?
சிதைந்துபோன வீடுகளை, எவ்வாறு புதுப்பிப்பார்?

ஆண்டவனின் அருள் உள்ளவரையே, நமது ஆட்டம்!
ஆண்டவன் தண்டித்தால், வந்துவிடும் திண்டாட்டம்!

முற்பிறவியில் செய்த நல்வினையால், நல்வாழ்வு!
இப்பிறவியில் செய்வோம் நல்வினையே, மறவாது!

:decision: ... :angel:

The tsunami hit Japan brings this thought!
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 188

செய்யக் கூடாதவை...

அரசராய் இருப்பவர் வயதில் இளையவர்தானே என்று
அரசரை மதிக்காது இகழ்தல் கூடாது, என்கிறார் அவர்.

என்னைவிட இளையவர் அரசர், எனக்கு இன்ன உறவு
என்னாது, அவரது பெருமை அறிந்து நடக்க வேண்டும்.

'இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்', என்று அறிவுரை.

ஆட்சியால் ஏற்கப்பட்டோம் என்ற காரணத்தால், தம்
மாட்சி குறைய, ஏற்க இயலாதவை செய்தல் கூடாது.

தெளிந்த அறிவு உடையவர், இது போன்ற செயல்களைத்
தெரிந்து செய்ய மாட்டார், என்று கூறுகிறார் வள்ளுவர்.

'கொளப்பட்டோம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்', என்பது அவரது அமுத மொழி.

நீண்ட காலமாகப் பழகுகிறோம் என்பதால், உரிமையாக
வேண்டாத செயல்கள் செய்தலும் கூடாது, என்கின்றார்.

அவ்விதம் உரிமை எடுத்துச் செய்யும் தகாத செயல்கள்,
எவ்வித நன்மையும் பயக்காது, கேடாக முடிந்துவிடும்.

'பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்', என எச்சரிக்கை.

செய்யக் கூடாத செயல்களை விடுத்து, நற்செயல்களைச்
செய்ய அறிந்து, உலகில் வாழ்வு நடத்திச் சிறந்திடுவோம்!

:angel:
 
இளைய BOSS!

அறிவுத் திறன் அடுத்த தலைமுறையில் உயர்வதால்,
அறிவு நிறைந்த இளையவர் BOSS ஆகிவிட முடியுமே!

அறிவுரை அரசரைச் சார்ந்து இருந்தாலும், இன்றுள்ள
அரிய இளம் அதிபர்களுக்கும், இதுவே பொருந்துமே!

:thumb:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 189

குறிப்பறிதல்...

குறிப்பறிதல் எல்லோருக்கும் தெரியாத ரகசியமே; அதைக்
குறித்து, ஒரு அதிகாரம் அழகுற அமைத்துள்ளார், வள்ளுவர்.

எவர், சொற்கள் இல்லாது, முகம் நோக்கிக் குறிப்பறிவாரோ,
அவர், மாறாத நீர் நிறைந்த உலகிற்கு அணிகலன், என்கிறார்.

'கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி', என்பது அவரின் பாராட்டு!

மனத்தில் ஐயப்பாடு இல்லாமல், உள்ளக் குறிப்பை அறிபவர்,
இனத்தில் மனிதரே ஆயினும், தெய்வத்தோடு ஒப்பிடலாம்.

'ஐயப் படாஅது அகத்தது உணர்வானை
தெய்வத்தோ டொப்பக் கொளல்', என்கிறார்.

முகக் குறிப்பை வைத்தே, அகக் குறிப்பை அறிபவரை, வேண்டி
அகம் மகிழ்ந்து, பொறுப்பு அளித்துப் துணை ஆக்கிட வேண்டும்.

'குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்துங் கொளல்', என அறிவுரை.

குறிப்புணர நாம் அறியாவிடினும், அத்தன்மை உள்ளவரை
அறிந்து, நட்புப் பாராட்டினால், நாமும் நலம் பெற முடியும்!

:grouphug:
 
'மனத்தில் ஐயப்பாடு இல்லாமல், உள்ளக் குறிப்பை அறிபவர்,
இனத்தில் மனிதரே ஆயினும், தெய்வத்தோடு ஒப்பிடலாம்.'


கோவில்...

குடும்பத்தில் அனைவரும் குறிப்பறிந்து செய்தால்
குடும்பமே ஒரு கோவிலாக மாறும், அல்லவா?

 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 190

அகத்தின் அழகு...

'ஒருவரது முகக் குறிப்பே அவரது மனத்தில் நினைப்பதை
ஒருவாறு காட்டும்போது, அதை அறிந்துகொள்ள முடியாத

கண்கள் இருந்து என்ன பயன்?', என்று வினவுகிறார், அவர்;
கண்கள் காண இருக்கும்போது, கண்டு அறிய வேண்டாமா?

'குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்', என அந்தக் கேள்வி.

கண்ணால் கண்டு அறிய வேண்டும் எனச் சொன்னவர், நம்
எண்ணத்தை எவ்வாறு முகம் காட்டும் என அறிவிக்கிறார்!

தன் அருகில் இருக்கும் பொருளைப் பளிங்கு காட்டுவதுபோல்,
தன் மனத்தில் எழும் எண்ணங்களை, தன் முகம் காட்டிவிடும்.

'அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்', என்பது குறட்பா.

'ஒருவன் விருப்பம் கொண்டாலும், வெறுப்புக் கொண்டாலும்,
ஒருவனின் முகமே முந்திக்கொண்டு அதைத் தெரிவிக்கும்.

அரிதான இந்த குணம் கொண்ட முகத்தைவிட, வேறு சிறந்த
அறிவு மிக்கதும் உள்ளதோ?', என்று அவர் வினவுகின்றார்.

'முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்', என்பது அந்தக் குறட்பா.

முகமே அகம் காட்டும் கண்ணாடி, என்று அறிந்துகொள்வோம்;
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்; அகத்தை அழகாக்குவோம்!

:decision:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 191

கண் காட்டும்...

அகத்தில் உள்ளதை அறிய இயலுவோர், ஒருவருடைய
முகத்துக்கு எதிரில் நின்றாலே போதுமானது ஆகுமாம்!

அகத்தின் அழகு முகத்தில் நன்கு தெரிவதால், பார்க்கிற
முகத்தின் தன்மையால், அகத்தை அவர் அறிந்திடுவார்.

'முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்றது உணர்வார்ப் பெறின்', என்பது குறள்.

பார்வையின் வேறுபாடுகளைத் தெரிந்து கொள்ளுபவர்,
பார்வையைக் கொண்டே பகையா, நட்பா என அறிவார்.

'பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்', என்று உரைக்கின்றார்.

நுண் அறிவு உடையவர், பிறர் மனம் அறிய அளவுகோல்,
கண் அன்றி வேறல்ல என்பதை, நன்றாக அறிந்திடுவார்.

'நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற', என்பது அவரின் குறள்.

மனத்தில் தெளிவு இருந்தால், முகம் நல்ல தெளிவு பெறும்;
குணத்தில் கருணை இருந்தால், கண்ணும் அதைக் காட்டும்!

:peace:
 
அழகுக் குறிப்பு!

அழகாகத் தோற்றம் அளிக்க விரும்பாதவரும் உண்டோ?

அழகுக் கலையால் நம் முகம் களையாக்க முனைவோமே!

எளிய வழியில் அழகு மிளிர ஒரு சிறந்த உபாயம் இருக்கிறது;

இனிய எண்ணங்களும், கருணை மனமும் கொள்ளுவதே, அது!

அக அழகால், முக அழகு பெறுவோம்! :thumb:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 192

அவை அறிதல் வேண்டும்...

சொல்வன்மை பற்றிக் கூறிய வள்ளுவர், தாம் பேசுகின்ற
சொல் யாரை அடைகிறது என்றும் ஆராயச் சொல்கிறார்.

அவையில் பேசும் அறிஞர், தம் சொற்களின் தன்மையுடன்,
அவையில் உள்ளவரின் தன்மை அறிந்தும் பேச வேண்டும்.

'அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்', என்பது குறட்பா.

அவையின் தன்மை அறியாது பேசுபவருக்கு, சொற்களின்
வகையும் தெரியாது; பேசும் திறமையும் கிடையாது! இதை

'அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்', என்று கூறுகின்றார்.

பாலும் வெண் சுண்ணாம்பும் ஒரே நிறத்ததே ஆயினும்,
பாலின் தூய்மையும், பெருமையும் சாலச் சிறந்ததாகும்!

அறிவுள்ளவர் முன், பால் ஒத்த தூய்மை காட்டும் அறிஞர்,
அறிவில்லாதவர் முன் சுண்ணாம்பாக இருக்க வேண்டும்.

'ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்', என அறிவுரை!

:director:
 
எப்பொழுதுமே!

சொற்கள் யாரைச் சேருகின்றன என எப்போதும் அறிதல் நலம்;
சொற்களை விழலுக்கு இறைத்த நீராக்கினால் என்ன பயன்?

காய்கறிக்காரியிடம் தியாராஜ கீர்த்தனை பற்றிச் சொன்னால்,
காய்கறிகளின் பெயரே இல்லையே என்று வியக்க மாட்டாளா?

நம் சொற்கள் சேருமிடம் அறிந்து பேசுவோம்! :high5:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 193

அறிவுடையார் அவையும், அறிவிலார் அவையும்.

எல்லா நலன்களிலும் சிறந்த நலன் எதுவென்று, நாம்
எல்லோரும் அறிந்திடச் சொல்லுகிறார், வள்ளுவர்.

அறிந்தவர்கள் உள்ள அவையில், முந்திக் கொண்டு,
தெரிந்தவர் போல் பேசாது, அடங்கி இருத்தலே அது.

'நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு', என்பது அறிவுரை!

உணர்ந்து கொள்ளும் ஆற்றல் இருப்பவரிடம் பேசுவது,
வளர்ந்து வரும் பயிருக்கு, நீர் பாய்ச்சுவதைப் போன்றது.

'உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று', என்று உரைக்கிறார்.

தம் இனமாக இல்லாதவரிடம் சென்று பேசினால், அமிழ்-
தம் தூய்மையிலா முற்றத்தில் கொட்டியதுபோல ஆகும்!

'அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர்
அல்லார்முன் கோட்டி கொளல்', என்பது குறட்பா.

அவையறிந்து பேசுவதை அறிந்துகொண்டு, தவறான
அவைகளில் பேசுவதைத் தவிர்த்து, நாம் சிறப்போம்!

:peace:
 
அறிவைப் பகிர்வோம்!

நாம் அறிந்தவற்றை, நம் சுற்றத்தில் உள்ளவருக்கு,
நாம் பகிர்ந்து அளிப்பது, மிகவும் நன்மை பயக்கும்!

எவர் எதில் ஆர்வம் காட்டுகின்றார் என்று அறிந்து,
அவர் உணரும் நிலையில் இருந்தால், பகிர்வோம்!

:blabla: ... :grouphug:
 
Sorry ........ I forgot to include the kuraL in post # 102. Hence posting again!

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 102


அரசருள் ௦சிங்கம் ...

நாளும் நல்வாழ்வு வாழ்ந்து உயர, அறத்துப் பால் இருக்க,
மேலும் குறட்பாக்கள் கூறுகிறார், பொருட்பால் அமைக்க.

ஆதி பகவனின் சிறப்பை முதலாக வைத்துவிட்டார் அங்கு;
ஆளும் அரசரில் சிங்கத்தை நமக்குக் காட்டுகின்றார் இங்கு!

காடாளும் அரசன் சிங்கம் என்பது ஒப்புக்கொள்கின்றோம்.
நாடாளும் அரசருள் சிங்கம் ஆக என்ன என்ன வேண்டும்?

ஆற்றல் மிக்க படை; அறிவில் சிறந்த மக்கள்; குறைவிலா
ஏற்றம் மிக்க வளம்; குறையற்ற அமைச்சர்; வலிமையான

முறியாத நட்பு; மோதி அழிக்க முடியாத வலுவான அரண்;
அரிதான இவை ஆறையும் உடையவனே, அரசருள் சிங்கம்!

'படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு', என்பது குறள்.

நல்ல படையும், அறிவில் சிறந்தோரும், சிறந்த வளமும்
நன்கு அமைந்த நம் நாட்டில், மற்றவை வருவது எப்போது?

:noidea:
 
Last edited:
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 194

பேச்சுத் திறமை...

கற்றவற்றைப் பேசும் திறமை உள்ளோரும், தாம் கற்றவை
மற்றவரை அடைய, பிழைகள் இல்லாது பேசுதல் வேண்டும்.

தாம் பேசும் சொற்களை அளவு அறிந்து உரைக்கும் தூயவர்,
தம் அவையின் வகையும் அறிந்தால், பிழையாகவே பேசார்!

'வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்', என்கிறது குறட்பா.

கற்றவர் என்று எல்லோராலும் மதிக்கத் தக்க அறிஞர், தாம்
கற்றவற்றைக் கற்றவர் மனதில் பதியுமாறு சொல்லுபவரே!

'கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்', என உரைக்கிறார்.

அவை அஞ்சாமல் பேசுவது, எவ்வளவு கடினம் என அறிய,
இவை இரண்டையும் தெரிவிக்கின்றார், குறட்பா ஒன்றில்.

அமர் களத்தில், உயிருக்கு அஞ்சாது போரிடுபவர், பலராவர்;
அவைக் களத்தில், அச்சம் இல்லாது பேசுபவர், அரிதே ஆவர்!

'பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்', என்கிறார்.

கற்பவை கற்று, கற்றவரிடம் சேருமாறு பேசும் வல்லமையும்
கற்று, அவை அஞ்சாமை அறிந்து, வாழ்வில் சிறப்படைவோம்!

:first:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 195

கற்றதன் பயன்...

கல்வி கற்றதன் பயனை, சில அழகிய குறட்பாக்களாகச்
சொல்லிப் புரிய வைக்கின்றார், வள்ளுவப் பெருந்தகை.

கற்றுத் தேர்ந்தவர்கள், அவையில் பேச அறிய வேண்டும்;
கற்றும் பேச இயலாது போவதற்கு ஒப்புமை அளிக்கிறார்.

ஒரு கோழைக்கும் வாளுக்கும் என்ன தொடர்பு? அதுபோல்
ஒரு அவை அஞ்சுபவனுக்கும், நூலுக்கும் என்ன தொடர்பு?

'வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு', என்று வினா எழுப்புகிறார்.

தேடிச் சென்று வாள் கொடுத்துப் போரிடச் சொன்னாலும்,
பேடி கையில் பிடித்த வாளால், போரில் பயனே இல்லை.

அரிய பல நூல்களைக் கற்றாலும், அவை அஞ்சுவோருக்கு,
சிறிய பயனும் இல்லாது, கற்றவை வீணாகப் போய்விடும்.

'பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்', என்று எச்சரிக்கின்றார்!

அறிவுடையோர் அவையில், அவர்கள் மனம் அறியுமாறு
செறிவுடன் பேசாதவர் கற்ற நூலால், ஒரு பயனுமில்லை!

'பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்', என்பது குறட்பா.

அவை அச்சம் நீக்கிட அறிந்து, கற்றவற்றைப் பிறருக்குச்
சுவை குன்றாது கூறவும் அறிந்து, வாழ்வில் சிறப்போம்!

:thumb:
 
பேச்சுத் திறமை!

பெரியவர்கள் 'வாயுள்ள பிள்ளை பிழைச்சுக்கும்' என்பது இதனால்தானோ? :director:
 

Latest ads

Back
Top