இரு வரங்கள்!
உலகே தன்னைப் பார்த்ததும் அஞ்சிட,
உலகில் சிலரும் கொள்வார் ஆவல்!
அதுபோல் ஆவல், அரணை கொண்டு,
மெதுவாய் இறைவன் அருகே சென்று,
'இறையே! பாம்பு பெற்ற விஷத்தை,
நிறைய எனக்குத் தந்து அருள்வாய்!
பாம்பைக் கண்டால் படையே நடுங்கும்;
பாம்பைப் போலவே நானும் ஆகணும்!'
இறைவன், 'அதுபோல் செய்ய இயலாது;
இரண்டு ஜீவன்களை, ஒன்று போலவே!
கேட்டது அளிப்பேன்; கூட இன்னொரு
கேட்காததும், நீ அறியாது அளிப்பேன்!'
என்று உரைக்க, விஷம் கிடைத்ததே
என்று, மனத்தில் மகிழ்ந்த அரணை,
'அப்படியே செய், எந்தன் இறைவனே!
எப்படியோ விஷம் வரணும்!' என்றது.
வீரமாக விரைந்த அரணையும், வெகு
நேரமாக நின்றது, மனிதன் வரவுக்கு.
தெருவில் ஒருவன் வந்திட, அவனை
விரைவில் அணுக விரைந்து செல்ல,
அருகில் சென்றதும் மறந்தது, தான்
விரைவில் வந்தது எதற்கு, என்பது!
வரத்தை கேட்டபடி அளித்து, கேளாத
வரமாய் அளித்தார், அதன் மறதியை!
குறும்பு எறும்பு இக்கதை கேட்டதும்,
குறும்பாய் வேறொரு யோசனை வர,
'நானும் இறையிடம் விஷம் கேட்பேன்!
ஆனால் இறையிடம் ஏமாற மாட்டேன்!
நான்கு சொற்களில் வரத்தைக் கேட்டு,
நன்கு பெறுவேன், கொடிய விஷத்தை!'
என்றே சென்றது, இறைவனைத் தேடி!
அன்றே இறையைக் கண்டது; கேட்டது
தான் சிறந்த புத்திசாலி என்றெண்ணி,
'நான் கடித்தால், உடனே இறக்கணும்!
நான் கேட்கும் வரத்தினை அளிப்பாய்;
நான் கேட்பதை மட்டுமே அளிப்பாய்!'
'அப்படியே ஆகட்டும்!' என்று சொல்லி,
அப்பொழுதே மறைந்தான், இறைவன்!
தான் பெற்ற வரத்தினை சோதித்திட,
தான் பார்த்த மனிதனையே கடித்திட,
'ஐயோ' என்றலறி, அவனும் அடித்திட,
'ஐயோ' என்றலறி, அதுவும் இறந்தது!
வேகமாக இறையிடம் சென்ற எறும்பு,
கோபமாக இங்கு நடந்ததைச் சொல்ல,
தான் சிரித்தபடி, இறைவன் கேட்டான்,
'நான் கடித்தால், உடனே இறக்கணும்!
என்று தானே வரத்தைக் கேட்டாய்!
நன்கு அளித்தேன், கேட்ட வரத்தை!'
:whip: . . :angel: