• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 258

புன்மையான இன்பம் வேண்டாம்.

இம்மையில் அறவழி நாடுவோர், எப்பொழுதும் தாம்
புன்மையான இன்பத்தை நாடாது, விலகி இருப்பார்.

பொருட்செல்வம் ஒன்றையே, பொருளாகக் கருதிடும்,
பொருள் விழையும், பொதுமகளிர் தரும் புன்மையான

இன்பத்தை, அருளாகிய சிறந்த செல்வம் தந்துவிடும்
இன்பத்தை நாடுவோர், எந்நாளும் விரும்ப மாட்டார்!

'பொருட்பொருளார் புன்னலம் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்' என, நல்வழி காட்டுகிறார் அவர்.

சிறந்த அறிவை இயற்கையாகப் பெற்று, மேலும் கற்றுச்
சிறந்த அறிவை வளர்த்த சான்றோர், பொதுமகளிரின்

புன்மையான இன்பத்தில் என்றும் மூழ்கமாட்டார்; இத்
தன்மையை, தம் குறட்பாவில் உரைக்கிறார், வள்ளுவர்.

'பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்', என்பதே அந்தக் குறட்பா.

உண்மையான இன்பம் தரும், அறவழியை நாடுவோம்;
புன்மையான இன்பத்தை, வெறுத்து நீக்கி வாழுவோம்!

:evil: . . . :nono: . . . :angel:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 259

மயங்க வேண்டாம்...

பெருமைக்குரிய ஆடவர் எவரும், என்றும், மனத்தில்
சிறுமையான இன்பத்தை நாடி, மதி இழக்க மாட்டார்.

தம் அழகில் செருக்குற்ற, பொதுமகளிரின் தோள்களில்,
தம் புகழ் நிலைக்க வேண்டும் எவருமே, சாய மாட்டார்!

'தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்', என்பது குறட்பா.

எவர் இத்தகைய பெண்களை நாடி மகிழ்வார், என்பதை,
அவர் ஒரு குறட்பாவில், உலகிற்கு உணர்த்துகின்றார்!

நெஞ்சத்தை நிறுத்தி, அடக்கத் தெரியாதவர்தான், தமது
நெஞ்சத்தில் வேறு பொருட்களை நாடும், உண்மையான

அன்பு இல்லாது, சிற்றின்பம் தரும் பொதுமகளிரை நாடி,
அன்பு காட்டி, அவர்களின் தோள்களைப் பொருந்துவார்.

'நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்', என்பது அந்தக் குறள்.

உண்மை அன்பு காட்டும் மனைவியை நேசிக்க வேண்டும்;
புன்மை இன்பம் தரும் பண்பிலாதவரை, ஒதுக்க வேண்டும்!

:pout:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 260

மோகினி மயக்கம்.

வஞ்சக எண்ணம் கொண்டு, பொருள் சேர்க்கத் தமது
நெஞ்சில் அன்பு கொண்டதுபோல, வேடம் இடுகின்ற,

அணங்குகளிடம் மயங்கும், அறிவில்லா ஆடவருக்கு,
'அணங்குதாக்கு' என்னும் 'மோகினி மயக்கம்' என்பார்.

'ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு', என்பது அந்தக் குறள்.

உயர்ந்த நெறியற்ற பொதுமகளிரின் மெல்லிய தோள்,
உயர்வில்லாத கீழ்மக்கள் அமிழும், நரகச் சேறு ஆகும்.

'வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு', என்பது அவரின் எச்சரிக்கை!

திருமகளின் வரவையே, எல்லோரும் விழைந்திடுவார்;
திருமகள் வரவால், பெரும் செல்வமும், சிறப்பும் வரும்!

இருமனமுள்ள பொதுமகளிர் தொடர்பும், கள்ளும், சூதும்,
திருமகள் வரவைக் கெடுத்து, வாழ்வின் சிறப்பை நீக்கும்!

'இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு'. இது குறள்.

மோகினி மயக்கத்தில் சிக்காது, மேன்மை அடைதல் நலம்;
மேதினி மீது, அதுவே, சிறந்த, உயர்ந்த வாழ்வினைத் தரும்!

:first:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 261

மது குடித்தல் வேண்டாம்!

கள்ளுண்ணும் பழக்கம் தீயது என்ற எண்ணமில்லாது,
கள்ளுண்ணுவதை, வேறுவிதமாகச் செய்கிறார், சிலர்.

போதை ஏறக் கள்ளை உண்ணாது, நல்ல சரக்கு எடுத்து,
போதை ஏற்றிக் கொள்ளுகின்றார், தவறாக எண்ணாது!

வள்ளுவப் பெருந்தகை 'கள்ளுண்ணாமை' அதிகாரத்தில்,
சொல்லுவது, எல்லா வகை மது பானங்களையும்தான்!

மது தரும் கேடுகளை எல்லாம் உணர்த்தி, பெரும் தவறே
அது, என்பதை விவரித்து, உலகினருக்கு உரைக்கின்றார்.

மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், தம் சிறப்பையே
மெதுவாக இழப்பார்; யாரும் அவர்களை அஞ்ச மாட்டார்!

'உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்', என்கிறார்.

அறிவில் சிறந்த பெரியோர் மனதில் இடம் பிடித்திடவே,
உலகில் வாழுகின்ற பலரும் விரும்புவது, இயல்பு ஆகும்!

என்றும் மதுவை அருந்த வேண்டாம்; சான்றோர் மனதில்
என்றும் உயர்வு வேண்டாதவராயின், அதை உண்ணலாம்.

'உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப்பட வேண்டா தார்', என்பது எச்சரிக்கை.

எந்நாளும் மது உண்டு, மயங்குவதைத் தவிர்த்திடுவோம்;
எந்நாளும், அது உண்டு என்பதையே நாம் மறந்திடுவோம்!

:tea:
 
Dear Smt. Raji Ram,

I admire your way with Tamil and the mostly self-depreciating and non-preaching style. (You must expect a "but" now and I do have a but) But, I am unable to go along with your last two posts in this thread, Thiruvalluvar not withstanding.

The way you have presented Mohini mayakkam makes women mere object of desire for men. That is not quite fair to women, or men. Men and women must take responsibility for their own actions, men cannot blame the women for being seductive, nor the women blame men for being irresistible. These are cliches that harm women more often than men.

The next item being wine, a little wine can do wonders both for health and emotional well being. Getting drunk and behaving like an ass is condemnable, but to have a drink or two is no vice, IMO. I have had a glass or two of wine with my dinner everyday for long enough to say that your admonition about drinking is not persuasive.

Cheers!
 
Dear Prof Sir,

I am glad that you are going through my posts and have time to send your valuable

comments too! Thank you, Sir!

I thought, now that I have entered a delicate subject to handle, I am using my words very

carefully, (As you expect a 'but'...here it is!) but made probably a minor error!

1. About Mohini mayakkm, I have clearly stated, there should NOT be 'mayakkm' towards

'podhu magalir' (Please go thro' once more please!)

2. About drinking, since we have been 'preached' right from childhood that drinking is a bad

habit and since none of the members in our family drinks (includes my better half and his

brothers too... I am proud to say this!!!), I might have written NOT to think of drinking wine!

But I can not say 'Hey! Dude! Have a peg or two and then STOP!' :bump2:

Regards,
Raji Ram :cool:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 262

நற்பண்புகள் போய்விடும்!

மது உண்டு அதற்கு அடிமையாவதைத் தடுக்க, உலகப்
பொது மறை, பலவாறு உலகிற்கு எடுத்து உரைக்கிறது.

தன் மகன் தவறு செய்தாலும், தாய்தான் மன்னிப்பாள்;
தன் மகன் மது உண்டால், தாயும் தன் முகம் சுளிப்பாள்!

அவ்வாறு அவளே செய்தால், குற்றம் கடியும் சான்றோர்,
எவ்வாறு வெறுப்பைக் காட்டுவர், என அறிந்திடுவோம்!

'ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி', என்பது எச்சரிக்கை!

அல்லவை செய்திட நாணுதல், நற்பண்பே ஆகும்; அந்த
நல்ல பண்பு, மதுவின் அடிமைகள் முன், நிற்காது ஓடும்!

பேணாத பெருங்குற்றமான, மதுவுக்கு அடிமையானவர்,
பேணாத எதையுமே செய்யும் தன்மையைப் பெறுவார்!

'நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு', என்பதும் எச்சரிக்கை!

மது மயக்கம் தரும் கேடுகளைப் பற்றி அறிந்திடுவோம்;
மது மயக்கம் மறுத்து, வாழ்வில் சிறப்பைப் பெறுவோம்!


:first:
 
Dear Prof Sir,

I hope the previous post is OK for you! The words மதுவின் அடிமைகள் are used!!

Regards,
Raji Ram
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 263

மது இழிவைத் தரும்!

இன்னும் சில குறட்பாக்கள் அமைத்து, மதுவால் வரும்,
இன்னும் சில தீங்குகளை, திருவள்ளுவர் கூறுகின்றார்.

போதைப் பொருளை வாங்கி, மெய் மறந்துவிடுவதற்கு,
பேதைகளே பொருளைச் செலவிடுவார்; இதைவிடவும்

விவரிக்க முடியாத மூடத்தனமே இருக்க முடியாது என,
விவரிக்கிறார், இந்த ஒரு சிறந்த குறட்பாவை அமைத்து!

'கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்', என்பது அக் குறள்.

அருந்திய மதுவால், போதையில் மயங்குவோர், நஞ்சு
அருந்திய ஒருவருக்கு இணையாவார்; மயக்கத்தினால்

மெய் மறந்து அவர்கள் கிடப்பது, நஞ்சுண்டவரின் உயிர்
மெய் விட்டுப் பறந்த பின்னர், கிடப்பதைப் போன்றதே!

'துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்', என்று உரைக்கிறார்.

செத்தாரைப் போல் கிடப்பதை, எவரும் விரும்பமாட்டார்;
செத்தாருக்கு இணையாக்கும் மது, அதன் அடிமையானால்!

:humble:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 264

குடி தரும் கேடுகள்!

மறைந்துகொண்டு மது உண்டாலும், ஊர் மக்கள் அதை
அறிந்து, கண் சாயும் அவர்களை எள்ளி நகையாடுவார்.

'உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்', என்று எச்சரிக்கை!

மது உண்டவர், அதை மறுக்கவே முடியாது! ஏனெனில்
மது உண்ட மயக்கத்தில், உண்மையை உளறிவிடுவார்!

'களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்
தொளித்ததூஉம் ஆங்கே மிகும்'. இது குறள்.

குடி போதைக்கு அடிமையைத் திருத்துவது, நீரில் மூழ்கி
அடியில் செல்பவனை, தீப்பந்தத்தோடு தேடுவது போல.

'களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று', என்கிறார்!

குடிக்கு அடிமையானவன், குடிக்காது தெளிந்த பொழுது,
குடித்தவனின் தள்ளாட்டத்தைக் கண்டு, அதன் பின்னர்,

குடி மயக்கம் தரும் கேடுகளை அறியமாட்டானா, என்று
அடி இரண்டை அமைத்துத் திருவள்ளுவர் கேட்கின்றார்!

'கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு', என்பதே கேள்வி!

விவரமாகக் குடியின் கேட்டினை உரைத்து இருப்பதால்,
விவரங்கள் அறிந்த மக்கள், நல்வழிச் செல்ல வேண்டும்!

:car:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 265

மூன்றாவது தீமை...

மனக் கட்டுப்பாடு இல்லாமல், பொதுமகளிரை நாடுதல்,
தினம் மதுவால் களித்தல், சூதாடிக் காலம் கழித்தல், என

இந்த மூன்றைத்தான், பெரும் தீமைகளாக உரைக்கிறார்,
அந்தக் காலத்தில், தமது குறட்பாக்களில் திருவள்ளுவர்.

வெற்றியையே தந்தாலும், சூதாடலைத் தவிர்த்தல் நலம்!
பெற்றது நல்ல இரையே என்று, தூண்டில் முள்ளில் உள்ள

பொறியாக வைத்த இரையை எண்ணி வரும் மீன், தனது
அறிவிழந்த செயல் அதுவென்று, மாட்டிய பின் உணரும்!

இதையே உவமையாக உரைத்து, சூதில் முதல் வெற்றி,
இதைப் போன்றதே என அறிவுறுத்துகிறார், வள்ளுவர்.

'வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று', என்பது குறள்.

வாழ்வில் நலமடைய வெற்றிகள் அதிகமாகவும், வரும்
தாழ்வான தோல்விகள், குறைவாகவும் இருக்கவேண்டும்.

ஒரு வெற்றி அளித்து, பின்பு நூறு தோல்விகள் தருகின்ற
பெரும் சூதாட்டத்தால், என்ன நலம் வாழ்வில் கிட்டும்?

'ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு', இது அவரது வினா.

இதிகாசக் கதைகளிலும் சிறுமையே தந்த சூதாட்டத்தை,
விரிவாக விவரித்து, நல்வழி காட்டுகிறார், குறளமுதில்!

:director: . . . :angel:
 

Dear Prof Sir!
Hope you read my clarification. (koLarification?? :decision:) Your comments, please...

Or, மௌனம் சம்மதம்?

Regards..........
 
நன்றி.

:clap2:
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 265

மூன்றாவது தீமை...

மனக் கட்டுப்பாடு இல்லாமல், பொதுமகளிரை நாடுதல்,
தினம் மதுவால் களித்தல், சூதாடிக் காலம் கழித்தல், என

இந்த மூன்றைத்தான், பெரும் தீமைகளாக உரைக்கிறார்,
அந்தக் காலத்தில், தமது குறட்பாக்களில் திருவள்ளுவர்.

வெற்றியையே தந்தாலும், சூதாடலைத் தவிர்த்தல் நலம்!
பெற்றது நல்ல இரையே என்று, தூண்டில் முள்ளில் உள்ள

பொறியாக வைத்த இரையை எண்ணி வரும் மீன், தனது
அறிவிழந்த செயல் அதுவென்று, மாட்டிய பின் உணரும்!

இதையே உவமையாக உரைத்து, சூதில் முதல் வெற்றி,
இதைப் போன்றதே என அறிவுறுத்துகிறார், வள்ளுவர்.

'வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று', என்பது குறள்.

வாழ்வில் நலமடைய வெற்றிகள் அதிகமாகவும், வரும்
தாழ்வான தோல்விகள், குறைவாகவும் இருக்கவேண்டும்.

ஒரு வெற்றி அளித்து, பின்பு நூறு தோல்விகள் தருகின்ற
பெரும் சூதாட்டத்தால், என்ன நலம் வாழ்வில் கிட்டும்?

'ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு', இது அவரது வினா.

இதிகாசக் கதைகளிலும் சிறுமையே தந்த சூதாட்டத்தை,
விரிவாக விவரித்து, நல்வழி காட்டுகிறார், குறளமுதில்!

:director: . . . :angel:

குறளமுது நன்றாக உள்ளது .மென்மேலும் சிறக்க
அன்பு வாழ்த்துக்கள்.... அன்றாடும் இது பற்றி என்
எண்ணங்களை
இங்கு பதியாவிட்டாலும் -
வள்ளுவரைப் போற்றுவோம்-
அடிக்கடி நான் விரும்பி படிக்கும்
ஒரு பக்கம்...படிப்பதோடு
நிற்காமல் மனிதர்கள் தங்களின் வாழ்கையில்
கடைபிடிக்க
வேண்டிய ஒன்று ..

நன்றி.
 
Raji%20Ram%27s%20-%20Longwood%20gardens.jpg


:thumb: . . . :thumb: . . . :thumb:

This is a click of the musical fountains, Longwood gardens, Pennsylvania, U. S.
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 266

சூதாட்டத்தில் மயக்கம் வேண்டாம்!

அரசர்கள் ஆண்ட காலத்தில் எழுதப்பட்டதால், இவை
அரசருக்கே மிக மிகப் பொருத்தமாக அமைகின்றன!

தாயக் கட்டைகளை உருட்டி ஆடும் சூதாட்டத்தினை,
நேயமுடன் விரும்பி ஆடி, அடிமை ஆவோர் ஈட்டிய

பெரும் செல்வமும், அதை ஈட்டும் வழிகளும் போய்ச்
சேரும், எதிர்த்து ஆடும் பகைவரிடத்தில், என்கிறார்!

'உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம்
போஓய்ப் புறமே படும்', என்பது குறட்பா.

சிறுமைகள் செய்து, வாழ்வை அழிக்கும் சூதாட்டமே,
வறுமை தரும் தீமையான செயல்களில் முதன்மை!

'சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன் றில்', இது குறள்.

எல்லாமே இருந்தும் எதுவும் இல்லாதவராகச் செய்ய,
வல்லமை படைத்தது, இந்தச் சூதாட்டமே, என்கிறார்.

தன் சூதாட்டத்தின் கருவியும், ஆட்டத்தின் இடமும்,
தன் முயற்சியும் கைவிடாதவர், எல்லாமே இழப்பார்!

'கவரும் கழகமும் கையும் தருக்கி
இவறரியார் இல்லாகி யார்'.

அந்தக் காலத்தில் தாயக்கட்டைச் சூதாட்டம்; ஆனால்,
இந்தக் காலத்தில், வேறு வகைகளில் அவதரிக்கின்றன!

:attention:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 267

அனைத்தும் அழியும்!

சூதாட்டம் எல்லாவற்றையும் அழிக்கும் என்று, மேலும்
சூதாட்டத்தின் கொடுமைகளை, அவர் உரைக்கின்றார்.

அருமையான உணவை மறந்து, துன்பத்தில் உழலுவர்,
திருமகளின் மூத்தவளான சூதால் விழுங்கப்பட்டவர்!

'அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்', என்கின்றார்.

சூதாடும் இடத்திலேயே ஒருவர் காலத்தைக் கழித்தால்,
மூதாதையர் அவருக்கு அளித்த செல்வத்துடன் சேர்த்து,

அவரது நற்பண்பு என்கின்ற சிறந்த குணத்தையும், அது
தவறாது கெடுத்துவிடும், என்றும் எச்சரிக்கிறார் அவர்!

'பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்', என்பது குறள்.

பொருளை மட்டும் அழிப்பதுடன் நிறுத்தாத சூதாட்டம்,
அருளையும் கெடுத்துவிடும் தன்மையுடையது ஆகும்.

பொருளைக் கெடுத்து, பொய்யனாக்கி, நெஞ்சத்திலுள்ள
அருளை மாற்றி, துன்பமான இருளில் உழலவிடும், சூது!

'பொருள்கெடுத்து பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது', என்பது எச்சரிக்கை ஆகும்!

இத்தனை இழிவுகளை வாழ்வில் தரும் இந்தத் தீமையை,
எத்தனை விரிவாகக் கூறி, வழி காட்டுகிறார் வள்ளுவர்!

:ranger:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 268

வாழ்வைக் கெடுக்கும் சூது!

வாழ்வில் எல்லா நலன்களும் சூதால் போய்விடும் என
வாழ்வின் வழிகாட்டும் பொதுமறை சொல்லுகின்றது!

எவர் சூதாட்டத்தின் அடிமையாகி மதி இழக்கின்றாரோ,
அவர் இழப்பது வேறு என்னவெல்லாம் என்ற பட்டியல்!

சிறந்த உடை, சேர்த்த செல்வம், நல்ல உணவு, நற்புகழ்,
நிறைந்த கல்வி ஆகிவையே அந்த ஐந்தும், என்கிறார்!

'உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின்', எனக் குறட்பா.

இன்னும் ஓர் அரிய ஒப்புமையை நாம் அறிய, வள்ளுவர்
தன்னுடைய குறட்பாவில் தெளிவாகக் கூறுகின்றார்!

பொருளை இழக்க இழக்கச் சூதாட்டத்தில், மேன்மேலும்
பெருகும் ஆவல் என்பது போன்றே, வயதான பொழுதும்,

உடல் துன்பம் அதிகம் ஆக ஆக, தம்முடைய இனிய
உயிர் மேல் ஆவல் அதிகமாகும், என்கின்றார் அவர்!

''இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்'. என்னே கற்பனை!

எல்லாவற்றையும் இழந்து வருந்த வைக்கும் சூதினை,
எல்லோரும் மறந்து வாழ்ந்து, வெல்வோம் உலகினை!

:ballchain: . . :hail:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 269

நோயும் மருந்தும் ....

உலகில் நோய் வருவதற்கான காரணங்களை, நாம்
எளிதில் அறிந்துகொள்ள, ஒரு குறட்பா அளிக்கிறார்.

அன்றே, உடலில் உள்ள வாதம், பித்தம், சிலேத்துமம்
என்ற மூன்றை, மருத்துவர்கள் கண்டுள்ளனர். இதில்

எது ஒன்று அதிகமாகவோ, குறைந்தோ போயினும்,
அது நோயை வரவழைக்கும், என்கிறார் வள்ளுவர்.

''மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று', என்பது குறட்பா.

உணவே மருந்து என்பதைக் கூறாமல் கூற, உலகில்
உணவை எப்படி உண்ணுதல் நலமெனக் கூறுகிறார்.

முன்பே உண்ட உணவு செரித்ததா என்பதை அறிந்த
பின்பே, தேவையான உணவை உண்ணுவது நலம்.

அளவாக, இடைவெளிவிட்டு உணவு உட்கொண்டால்,
நலமாக உடலும் இருக்கும்; மருந்தே தேவையில்லை!

'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்', என்பது அவரது அறிவுரை.

அளவாக, நேரமறிந்து, மிதமான உணவையே உண்டு,
வளமாக வாழ்ந்திடுவோம், நோய் நொடிகள் அற்று!

:hungry: . . :decision:
 

உணவே மருந்து!

இந்த வார்த்தைகள் இப்போது பரவலாக எல்லோராலும் கூறப்படுபவை! ஒரு

சுவாரஸ்யமான விஷயம்.......... இசைக் கலைஞர், திரு. விஜயசிவா அவர்கள் ஒரு

விளக்கம் கூறுவதைக் கேட்டேன். நாம் உண்ணும் உணவு, நம் குணமாக மாறுமாம்....

அதற்கு மூன்று நாட்கள் ஆகுமாம். (காரம் அதிகம் உண்டவர் மூன்று நாட்களுக்குப் பின்

சண்டை போடுவாரோ, என்னவோ!) பெரியோர்கள், அதனால்தான் ஏகாதசியன்று சாத்வீக

உணவை, ஒரு வேளை மட்டும் உண்ணச் சொல்லுகிறார்களாம். ஏற்கனவே, அமாவாசை,

பௌர்ணமி நாட்களில் சந்திரனின் தாக்கத்தால், மூளை ஒரு மாதிரி இருக்குமாம். அத்துடன்

உணவின் தாக்கமும் சேர்ந்து மனதைச் சலனப் படுத்தாமல் இருக்கவே, ஏகாதசி

விரதத்தைக் கடைப்பிடித்தார்களாம்!


பின் குறிப்பு: இதைக் கேட்ட பிறகு, அமாவாசை, பௌர்ணமி தினங்களில்,

நான் யாருடனும் அதிகம் பேசுவதில்லை!!


:kev: . . :decision: . . :tape2:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 270

சிறந்த வழி...

நீண்ட காலம் வாழ்வது எல்லோரும் விரும்புவதே;
நீண்ட காலமும், வாழ்வில் உடல் நலம் தேவையே!

எளிய ஒரு வழியை வள்ளுவர் உரைக்கின்றார், இவ்-
வரிய மானிடப் பிறவியைப் பெற்றுள்ள மாந்தருக்கு.

உண்ணும் உணவு செரித்ததா என்பதை அறிந்த பின்,
எண்ணும் எல்லாவற்றையும் உண்ணாமல், சரியான

அளவை அறிந்து உண்பதுதான், நமது ஆயுளின், கால
அளவை அதிகரித்து, நீடூழி வாழும் வழி, என்கின்றார்.

'அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு', என்கிறார்.

ஒவ்வாமை பற்றி, இன்றும் நிறைய ஆராய்ச்சி உண்டு;
ஒவ்வாமை பற்றி, அன்றே வள்ளுவர் கூறினார் நன்று!

உண்ட உணவு செரிக்காத பொழுது, மீண்டும் உணவு
உண்டு, துன்புற வேண்டாம் என்பதை, மீண்டும் கூறி,

உணவு செரித்த பின், உடலுக்கு மாறுபாடில்லாத அந்த
உணவை அறிந்து, பசித்தபின் புசிக்கச் சொல்லுகிறார்.

'அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து', என்பது அறிவுரை.

பசித்த பின், உடலுக்கு ஒத்துக்கொள்ளும் உணவையே
ருசித்து உண்போம்; உடல் நலத்தைக் காத்திடுவோம்!

:hungry: . . :popcorn:
 
ஒவ்வாமை...

Allergy என்கிற ஒவ்வாமை! இது இன்று அதிகம் பேசப்படும், ஆராய்ச்சிகள் செய்யப்படும்

விஷயம்... ஒரு ஊசி பற்றி மட்டும் இங்கு எழுதுகிறேன். எங்கள் உறவில் ஒரு

பெண்ணுக்கு, அவளின் உணவில் உள்ள 'ஒவ்வாமை' பற்றிக் கண்டுபிடிக்க விழைந்த

மருத்துவர், அவளது மணிக்கட்டிலிருந்து முழங்கை வரை உள்ள பகுதியில் நடுவாகத்

தேர்ந்தெடுத்து, பதினைந்து வெவ்வேறு ஊசிகளை ( எப்படிப் பொறுத்தாளோ!! ) குத்தினார்.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு காய்கறி மற்றும் தானியத்தின் ஒவ்வாமையைக் காட்டுமாம்.

மறுநாள், 'தக்காளி ஊசி'யின் பகுதி மட்டும் சிவந்து வீங்க, அவளின் உணவில், தக்காளி

அன்று முதல் அறவே கிடையாது!


பின் குறிப்பு: என் அண்ணன், மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போது, அவனின்

நெருங்கிய நண்பன், ஒருநாள், சப்பாத்தி சாப்பிட்டதும் மயங்கிவிட்டான்! Mess

சாப்பாட்டில்தான் ஏதோ mess என்று எண்ணினர். பின்னர் கண்டனர் அவனுக்கு கோதுமை

allergy என்று. பின் என்ன? பசங்கள் அவனுக்குப் புதிய நாமகரணம் செய்தனர், 'கோதுமை

BOY' என்று!

:grouphug:
 
Last edited:
அளவான உணவு!

அளவு என்பது எல்லாவற்றுக்கும் இருப்பது போலவே,
அளவை, உண்ணும் உணவிலும் கொள்ளுவது நலமே!

மாறுபாடில்லாத உணவை, அதிகம் ஆகாது மறுத்தால்,
ஊறு விளைவிக்கும் எந்த நோயும் நம்மைத் தாக்காது.

'மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு', என்கின்றார்.

குறைந்த அளவு என்ன என்பதை அறிந்து, எப்போதும்
குறைத்து உண்பவனுக்கு வரும் பேரின்பத்தைப்போல,

பேராவலுடன், அதிகம் உண்ணுபவனுக்கு, நோய்களும்
பெரிய அளவில் வந்து தாக்கும், என்று உரைக்கின்றார்.

'இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்', என்பது குறட்பா.

தன் பசியின் அளவு அறியாது, அதிகமாக உண்ணுபவன்,
தன் உடலில் அதிகமான நோயின் தாக்குதல் பெறுவான்!

'தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்', என்று எச்சரிக்கை!

உண்டு கெட்டான் என்று பெயர் பெறாது, அளவு அறிந்து
உண்டு, நம்மை நோய்கள் வருத்திடாது பாதுகாப்போம்!

:hungry:
 

எளிய வழி!

உடல் நலம் காக்க ஒரு எளிய வழி உண்டு!

அதுதான், மற்றவர் நமக்கு உணவு பரிமாறும்போது,

இடம் வலமாகத் தலையை ஆட்டி மறுப்பது! :nono:
 

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 272

நோய் தீர்க்கும் வழி.

உலகப் பொதுமறையில், நோய் தீர்க்கும் வழிகளை,
உலக மக்கள் அறிய, திருவள்ளுவர் உரைக்கின்றார்.

நோய் என்ன என்று அறிந்து, அதன் காரணம் அறிந்து,
நோய் தீர்க்க வழிகள் கண்டு, குணமாக்க வேண்டும்.

'நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்', என்பது குறட்பா.

கற்றுத் தேர்ந்த மருத்துவர், நோயாளியின் வயதும்,
பெற்ற நோயின் தன்மையும், மருத்துவம் செய்கிற

நேரமும், கருத்தில் கொண்டு பணி புரிந்தால், உற்ற
நேரம் அவன் நலமடைவான் என்பதைக் கூறுகிறார்,

''உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்', என்ற குறட்பாவில்.

இன்னொரு பட்டியலில், மருத்துவ வழிகள் நான்கை,
இன்னொரு குறளாக அமைத்து, அவர் வழங்குகிறார்!

நோய் வந்தால் மருத்துவர் தேவை; மருந்தும் தேவை,
நோய் தீர்க்க; மருத்துவருக்கு உதவியாளரும் தேவை!

நோயாளி, மருத்துவர், மருந்து, உதவி செய்பவர் என,
நோய் தீர்க்கும் மருத்துவத்தை வரிசைப்படுத்துகிறார்.

'உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று
அப்பால்நாற் கூற்றே மருந்து', என்பது அழகிய குறள்.

:sick:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 273

உயர்ந்த குடிமை ...

உயர்ந்த குடியில் பிறந்தவரின் பெருமைகளை,
சிறந்த முறையில் வள்ளுவர் உரைக்கின்றார்.

நடுவு நிலைமை தவறாத நல்ல பண்பும், மேலும்
கடுகு அளவும் ஆரவாரம் இல்லாத அடக்கமும்,

உயர் குடியில் பிறந்தவரைத் தவிர, யாருக்கும்
இயல்பான பண்பாக வந்துவிடாது, என்கின்றார்.

'இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு', என்பது குறட்பா.

ஒழுக்கமும், வாய்மையும், அடக்கமும், என்றும்
வழுவாது வாழ்வார், உயர் குடியில் பிறந்தோர்!

'ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்', என்பது அவர் வாக்கு.

வாய்மை உள்ள குடி மக்கள் என்பவர்கள், நான்கு
தூய்மையான குணங்கள் கொண்டவர்கள்; அவை

முக மலர்ச்சி, ஈகை, இனிய சொற்கள், மற்றவரை
இகழாத நல்ல பண்பு ஆகியவையே, என்கின்றார்.

'நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு'. இது குறள்.

உயர் குடியின் நற்குணங்களை நாம் அறிவோம்;
உயர்வு எய்திட, அந்த குணங்களைப் பெறுவோம்!

:high5:
 

Latest posts

Latest ads

Back
Top