அத்திரிபாச்சா!
நண்பன் ஒருவன் விருந்துண்ண அழைத்தான் என,
அன்புடன் புறப்பட்டான் ஒருவன், மகிழ்ச்சி பொங்க!
காலை புறப்பட்டு, நண்பன் ஊருக்குச் சென்றுவிட்டு,
மாலை வருவதாக, மனைவியிடம் கூறிப் போனான்!
நல்ல ஒரு விருந்து, அகமகிழ்ந்து நண்பனும் அளிக்க,
நல்ல கொழுக்கட்டைகள், அழகாகச் செய்து கொடுக்க,
அன்றுவரை அதனை உண்ணாதவன், தன் நண்பனை,
'என்னது, புதுப் பலகாரம்?' என்று அதிசயித்துக் கேட்க,
'இதுதான் கொழுக்கட்டை என்னும் பெயர் கொண்டது;
இதுதான் புதிதாய் நான் செய்யக் கற்றுக் கொண்டது',
என்று அவன் சொல்ல, அதையே மனதில் நினைத்து,
அன்று மாலையே மனைவியிடம் சொல்ல விழைந்து,
விடை பெற்றுக்கொண்டு திரும்பினான், வீடு நோக்கி,
கோடை காலக் கத்திரி வெய்யிலையும் பாராட்டாது!
'கொழுக்கட்டை, கொழுக்கட்டை' என்றே ஜபம் செய்து,
கொழுக்கட்டை நினைவிலே, இல்லம் வரும் பொழுது,
கத்திரி வெய்யில் காரணமாய் வந்த திடீர் மழையில்,
'அத்திரிபாச்சா' என்று சில சிறுவர் கத்துவது கேட்டு,
அதிசயித்த அவன், என்னவென நோக்க, அச்சிறுவர்,
வரிசையில் நின்று , மழைநீர்க் குட்டையைத் தாண்ட,
அதையே மந்திரம்போலச் சொல்லி, குதிப்பது கண்டு,
அதையே அவனும் சொல்லிக் குட்டையைத் தாண்ட,
அவன் ஜபித்த பழைய மந்திரம், மறந்தே போய்விட,
அவன் மனமும், 'அத்திரிபாச்சா' மந்திரம் ஜபித்தது!
இனிய இல்லம் திரும்பியதும், தன் மனைவியைத்
தனியே அழைத்து, 'எனக்கு அத்திரிபாச்சா சாப்பிட
வேண்டும் என்று சொல்ல, அவள் பயந்து, 'அதுபோல
என்றும் பலகாரமே செய்ததில்லை', என்று சொல்ல,
பலமுறை சொல்லியும், இதுவே பதிலாய்க் கிடைக்க,
பலமாக அடித்தான் அவளை, அவளது கன்னத்திலே!
பக்கத்து வீட்டுத் தோழி, சத்தம் கேட்டு உள்ளே வர,
திக்கற்று நிற்கும் அவளைப் பார்த்ததும், கனிவுடன்,
'என்ன! இப்படியா சண்டை போடுவது? உன் அழகுக்
கன்னம் இப்படிக் கொழுக்கட்டைபோல் வீங்குவது?'
என்று கேட்டதுமே, இவனுக்கு நினைவிலே வந்தது,
இன்று தான் உண்டது, கொழுக்கட்டைதான் என்பது!
:argue: . . :decision: