மடி, ஆசாரம்!
அப்பாவின் மருத்துவத் தொழிலால், எங்கள் வீட்டில் அத்தனை மடி ஆசாரம் கிடையாது!
தினம் இரு வேளை குளியல்; இறை வழிபாடு போன்றவை உண்டே தவிர, ஈரத்
துணியுடன், கொடியில் முந்தின நாள் துவைத்து உலர்த்திய 'மடி'யைக் குச்சியால்
எடுத்துச் செல்லுவது, போன்ற விஷயங்கள் தெரியாது. நான் 'வாக்குப் பட்ட' வீட்டிலோ
எதிர்மறை. ஒரு டம்ளர் தண்ணீரை பக்கத்தில் வைத்துக் கொண்டு, அதில் இடது கையை
அடிக்கடி நனைத்துகொண்டேதான், 'சுய பரிமாறல்' நடக்கும். (அதே தண்ணிரை அவர்கள்
குடிக்கும்போதுதான், எனக்கு என்னவோ செய்யும்!) ஊறுகாய் பாட்டில் ஸ்பூனைத்
தண்ணிக் கையால் தொட்டால், ஊறுகாய் கெட்டுப் போகுமோ என்று எனக்கு 'டென்ஷன்'
ஏறும்! அவர்களின் பழக்க வழக்கம் தெரிந்துகொள்ளுமுன், நான் அடித்த லூட்டிகள் பற்பல!
அங்கு சென்ற பின், மறு நாள் காலை எழுந்து, பல் துலக்கி, முகம் கழுவி வந்தவுடன்,
சூடான காபி; 'தூக்கிச் சாப்பிடு அம்மா!' என்ற instruction - னுடன் கிடைத்தது! பின்,
'குளித்துவிட்டு இட்லி சாப்பிடறேன்', என்று சொல்லிச் சென்றுவிட்டேன். குளித்துவிட்டு
வந்ததும், ரொம்ப சுத்தக்காரி என்று என் நினைப்பு! அவர்களுக்கோ நான் 'விழுப்பு'!
கொடியில் கிடந்த 'மடி'யைக் கட்டவில்லையே, நான்! இட்லி வார்க்க ஒரு துணி வேண்டும்
என்று அவரின் அம்மா கேட்க, நான் அலமாரியில் இருந்த வேஷ்டியிலிருந்து ஒரு சதுரத்
துண்டு கிழித்து வருமாறு பணிக்கப் பட்டேன், அவரின் தங்கையால். நான் அப்படி ஒரு
துண்டை எடுத்து வந்து, அம்மாவிடம் நீட்டினேன்! அவரோ ஒரு அடி பின்னால்
போய்விட்டு, அதை நீரில் நனைத்துக் கொடுக்கும்படிக் கேட்டார். அவ்வாறே செய்தபின்,
மீண்டும் அவரிடம் கொடுத்தேன். அதைத் தரையில் போடும்படிச் சொல்லிவிட்டு, கீழே
போட்டதும் அதன்மேல் ஒரு சொம்பு நீரை விட்டு அலசி, பின் எடுத்துக் கொண்டார்!
'ஓஹோ! இதுதான் மடியோ?' என்று ஆச்சரியித்தேன்!
மதியம் சாப்பிடும் நேரம்; நானே பரிமாறுகிறேன் என்று அம்மா சொன்னதும், நிம்மதிப்
பெருமூச்சு விட்டு அமர்ந்தேன். 'அப்பளம் வாட்டிப் போடவா', என்று கேட்டதும், சரி என்று
ஒத்துக் கொண்டேன்; புது நாட்டுப் பெண், 'வேண்டாம்' என்று சொல்லக் கூடாதோ,
என்னமோ, என்று எண்ணி! 'கும்முட்டி' அடுப்புக் கனலில் சுட்டு, அதை எடுத்து வீசினார்.
(எங்கள் இருவருக்கும் இடைவெளி ஐந்து அடி இருக்கும்; பெரிய்ய்ய சமையலறை
அல்லவா, பண்ணையார் வீட்டில்!) இருவருக்கும் இடையில் அப்பளம் விழுந்தது என்
இடப் புறமாக! நான் இடது கையால் எடுக்கப் போனதும், 'இடக் கையில் எடுக்காதேம்மா'
என்றார். வலக் கையால் எடுக்க வேண்டுமோ என்று வளைந்து திரும்ப, 'அந்தக் கை
எச்சில் அல்லவோ?' என்றார்! நான் சிலைபோல் அமர்ந்தேன், அவர் எழுந்து வந்து, அதை
எடுத்துப் போடும் வரை!
தொடரும்............. மடி!! :ballchain: