• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

#10 யுகம் தோறும்…

angel-vs-devil.webp

யுகங்கள் தோறும் மாறும் உலகமும், அந்த
யுகத்தில் வாழும் பிறவிகள் அனைத்தும்;
யுகங்கள் தோறும் மாறும் நீதி நெறிகள்,
யுக்தியும், புத்தியும், பக்தியும் கூட!

சத்திய யுகமான முதல் யுகத்தில்,
சத்திய சந்தர்களும், தீயவர்களும்
மாறுபட்டு வாழ்ந்தனர் முற்றிலும்
வேறுபட்ட இரு நிலப் பரப்புகளில்!

நிந்திக்க வேண்டும் என்றால் மட்டுமே
சந்திக்க வேண்டுமே அன்றி அவர்கள்
சராசரி வாழ்க்கையில் தேவை இல்லை
சந்திப்புகளோ அன்றிச் சல்லாபமோ!

இரண்டாம் யுகமான திரேதா யுகத்தில்
இருவரும் வாழ்ந்தனர் ஒரே பூமியில்,
இரு வேறு தேசங்களில், நாடுகளில்
இருப்பினும் ஒரே பூமிப் பரப்பின் மேல்!

இராமனும், இராவணனும் போலவே
இயங்கினர் இந்த யுகத்தில் மனிதர்;
நல்லோரும் தீயோரும் வாழ்ந்தனர்
நானிலத்தில் ஒன்றாய்க் கலந்தே!

மூன்றாம் யுகமான துவாபர யுகத்தில்
முன்னேற்றம் நன்கு காணப் பட்டது!
இருவகை மனிதரும் இங்கு பிறந்தனர்
ஒருவருக்கு ஒருவர் உறவினர்களாக!

ஒரே இல்லத்தில் வந்து பிறந்தாலும்,
ஒருவருக்கு ஒருவர் பரம வைரியாய்;
ஒருவரை ஒருவர் உளமார வெறுத்து,
ஒருவரை ஒருவர் நாசம் செய்பவராய்!

கலியுகம் என்ற நான்காம் யுகத்துக்கு,
“கிலியுகம்” என்றும் பெயர் இடலாமே!
தானே தனக்கு வைரியாக மனிதர்கள்,
காணப்படுவது இந்த யுகத்தில்தானே!

நன்மையையும், தீமையும் ஒரே உள்ளத்தில்
நன்கு கலந்து உறைகின்றன அன்றோ?
நாட்டையோ அன்றித் தான் இருக்கும்
வீட்டையோ விட்டுச் செல்ல வேண்டாம்!

இருக்கும் இடத்திலேயே பாரதப்போர்
இருக்கும் எப்போதும் நிகழ்ந்தபடியே;
நன்மை மேலோங்கி வெல்லுமா அன்றி
நன்மை தீமையிடம் அடி பணிந்திடுமா?

நன்மையையும் தீமையும் பிறர் தர வாரா!
நம்முள் இருக்கும் தீமையை வென்றால்,
நன்மை நம்மை நாடி வரும்; தீமை வென்றால்
துன்பம் நம்மைத் தேடித் தேடி ஓடி வரும்!


வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
#11 குறைவும், நிறைவும்!
gandhi.webp

குறைவும், நிறைவும் இரு மனப்பாங்குகளே;
குறைந்த, நிறைந்த பொருட்களால் அல்ல;
போதும் என்ற மனமே நிறைவு உடையது,
போதாது என்ற மனம் குறைவு உடையது.

தனக்குள் திருப்தி கொண்ட மனத்தினர்,
நினைத்ததை எல்லாம் வாங்கிக் குவியார்;
தனக்குள் குறையை உணரும் மனிதர், தாம்
நினைத்தை வாங்கி நிறைவு பெற முயல்வர்.

நிறையப் பொருள் உள்ளவர் மேன்மேலும்
நிறையப் பொருட்களை விழைந்திடுவர்.
மனோ வியாதியாகவே மாறிவிடக்கூடிய
மனப் போக்கு அது என்பது உண்மையே.

தினக் கூலியில் பொருட்களை வாங்கியும்,
மனக் கவலை இன்றி வாழ்பவர் உள்ளார்;
அனைத்தும் பெற்றும் அமைதி இழந்து, ஏதோ
நினைத்துப் பொருமும் மனிதரும் உள்ளார்.

தியாகமே அமரத்துவம் அளிக்கும்; இது
திகட்டாது இனிக்கும் ஒரு வேத வாக்கு.
இருப்பவற்றை தியாகம் செய்வது என்பது
விருப்பத்தைத் துறந்தால் மட்டுமே நிகழும்.

மகாத்மா காந்தி ஒரு ஏழைப் பெண்மணி,
மானம் மறைக்க ஆடை இன்றி வாடுவதைக்
கண்டதும், உதறினார் மேலான ஆடைகளை;
துண்டு ஒன்றையே தமது ஆடையாக்கினார்.

குறைந்த ஆடையினால் அவர் பெருமைகள்
குறைந்தனவா? இல்லையே! மாறாக அவர்
தேசத்தின் தந்தையாகி, அமரராகி, உலகில்
நேசத்துடன் இன்றுவரை போற்றப்படுகின்றார்!

குறைவு கொண்ட மனபாங்கை மாற்றி,
நிறைவு கொண்டதாக நாம் ஆக்குவோம்.
தியாகமே மனித உள்ளதைப் பண்படுத்தி,
தீபம் போல் வாழ்வை ஒளிரச் செய்யும்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
#12 உரிமையும், கடமையும்.

images.webp

உரிமைப் போராட்டம் என்ற ஒன்று,
உலகமெங்கும் நிரவியுள்ளது இன்று.
பெண் உரிமைப் போராட்டம் என்றும்,
பெண் விடுதலைப் போராட்டம் என்றும்,


முதியோர் உரிமைப் போராட்டம் என்றும்,
மாணவர் உரிமைப் போராட்டம் என்றும்,
எண்ண முடியாதபடி போராட்டங்கள்
எங்கிருந்து வருகின்றன? எதற்காக?


தாய் தந்தையரைக் காக்க வேண்டும்
தனயர்கள், என்று சட்டம் இயற்றும்
அவல நிலைக்கு, அரசே தள்ளப்படும்
அவசியம் ஏன், எப்படி ஏற்பட்டது?


உரிமைகளைப் பற்றிப் பேசும்போதே,
உடன் நிழலாகத் தொடருகின்ற நமது
கடமைகளையும் தவறாமல் நமது
கருத்தில் கொள்ள வேண்டுமன்றோ?


ஒவ்வொருவரும் தத்தம் கடமைகளை,
ஒன்று விடாமல் செய்தோம் என்றால்,
எங்கிருந்து தொடங்கும் உரிமைப்போர்?
எதற்காகத் தொடங்கும் உரிமைப்போர்?


பெற்றோரைத் தாம் பேணுவது கடமையாகப்
பிள்ளைகள் எண்ணினால், சட்டம் எதற்கு?
பெற்றோர் புகார் அளிக்கவும் வேண்டாம்;
பிள்ளை காவலரிடம் சிக்கவும் வேண்டாம்.


மாண்பு மிகு மந்திரிகள் தம் கடமையை,
மாண்புடன் செய்து கொண்டு வந்தால்,
மாறி மாறி மகளிரும், மாணவர்களும்,
மறியல் போராட்டம் நடத்த வேண்டாமே!


உரிமை, உரிமை எனக் கூட்டம் கூடி,
உரத்த குரலில் நாம் போராடும் முன்பு,
கண நேரம் எண்ணிப் பார்ப்போம், நமது
கடமைகளை சரிவரப் புரிகின்றோமா?


கடமைகளும், உரிமைகளும் ஒன்றாகக்
கலந்து பின்னிப் பிணைந்துள்ளன அன்றோ!
ஒருவரின் உரிமை மற்றவரின் கடமையில்,
ஒளிந்துள்ளதை அறிந்தால் வழக்கு ஏன்?


வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
#13 வெள்ளைப் பொய்கள்!

people62.gif

உலகமே ஒரு நாடக மேடை, அதில்
உள்ளோர் எல்லோரும் நடிகர்களே!
உலவுகின்றது இப்படியும் ஒரு கருத்து;
உண்மையும் இதில் கலந்து உள்ளது.


நாம் நினைப்பதை எல்லாம் வெளியே
நால்வரிடம் விவரமாகக் கூற முடியாது;
அல்லவை நேரினும் நல்லறிவுரை கூடாது;
நல்லவைபோல் எண்ணுவோம்; அது பாசாங்கு!


வெள்ளை பொய்கள் என்று ஒன்று உண்டு;
வெள்ளை மனத்தவர் கூறிடும் பொய்கள்;
விபரீதம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டி
விளம்பப்படும் இவ்வகைப் பொய்கள்!


கலகங்கள், கலவரங்கள் பரவுவதைக்
கவனத்துடன் தடுக்கவேண்டிய அரசே,
பரப்பும் பல வித ஊடகங்கள் மூலம்,
பலப் பல வெள்ளைப் பொய்களை!


குடும்பத்தில் குழப்பம் வராமல் இருக்க,
கூறவேண்டும் சில வெள்ளைப் பொய்கள்!
குறைகளை மறைத்து நிறைவைக் காட்ட,
கூற வேண்டும் சில வெள்ளைப் பொய்கள்!


உண்மை இல்லாது இருந்தபோதிலும்,
உலகில் விரும்பப்படுகின்றன இவைகள்;
வெள்ளை மனத்துடன், நன்மை விரும்பி,
வெளிச் சொல்லும் இவைகள் மெய்களே!


வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
# 14. நல்லதோர் வீணை!







வீணையும் பெண்ணும் ஒரேபோலவே;
வீணர்கள் இசைக்கவே இயலாதவர்கள்.
இசைக்கத் தெரிந்தவரிடம் கிடைத்தால்,
இசைப்பார் உலகை மயக்கும் இசையை.

பெண் பார்க்கப் போகும்போது தேவை,
பெண் ஆடவும், பாடவும் தெரிந்தவளாக!
படித்து விட்டுப் பணியிலும் இருந்தால்,
பல மதிப்பெண்கள் கூடிவிடும் அன்றோ!

என் மருமகள், என் மனைவி என்றே
எக்காளம் இடுவர் மணமான புதிதில்;
“என்ன பாட்டும் கூத்தும் எப்போதும்?”
என்று மாறிவிடும் வெகு விரைவில்.

எல்லாமே அறிய வேண்டும்; ஆனால்
எதுவுமே செய்ய அனுமதி மறுப்பு!
எதற்காகக் கற்றுத் தேர்ந்த மருமகள்?
எதுவும் கற்காத பெண் போதாதோ?

கலையை அழிப்பதும், ஒடுக்குவதும் ஒரு
கொலைக்குச் சமம், கற்றவர் நோக்கில்.
விலை மதிப்பில்லாத கலையைக் கற்று
வீணாக்குவதால் என்ன பயன் விளையும்?

நல்லதோர் வீணையைக் கைகளில் எடுத்து,
நலம் கெடப் புழுதியில் எறிந்து விடாதீர்!
வல்லவன் கைகளை அடையட்டும் அது!
வானவர் மயங்க இசைக்கட்டும் அது!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
# 15. பெண் என்னும் பாலம்!




இரு நதிக் கரைகளை மிக அழகுற
இணைப்பதே நாம் காணும் பாலம்;
இல்லத்தில் உள்ளவர்களை எல்லாம்
இணைப்பவளே பெண் எனும் பாலம்.

தந்தை என்றால் பயம், மரியாதை;
தாய் என்றால் பாசம், உரிமைகள்;
தாயிடம் ஒருமுறை சொன்னாலேயே,
சேய் விரும்புவது உடனே கிடைக்கும்.

தந்தை குழந்தைகளுக்கு இடையே,
தாத்தா பேரப் பிள்ளைகளுக்கிடையே,
ஆசிரியர் மாணவர்களுக்கு இடையே
ஆவாள் பெண்ணே உறுதியான பாலம்.

பத்து ஆண்கள் செய்யும் வேலைகளை
பதறாமல் செய்து முடிப்பாள் ஒரு பெண்.
பத்து ஆண்கள் ஒன்றாய் முயன்றாலும்
முத்துப் போலப் பணி செய்ய இயலார்!

பெண் இருக்கும் வீடே நல்ல வீடு.
பெண் இல்லாத வீடு வெறும் காடு!
இளையவள் வீட்டை விட்டு விலகி,
மூத்தவள் வந்து குடி புகுந்திடுவாள்!

பாலத்தை நன்கு பராமரித்தாலேயே
பாலம் பயன்படும் போக்குவரவுக்கு.
பெண்மைப் போற்றிப் பேணுவோம்,
பெண் என்னும் பாலம் பயன் தரவே.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
# 16. மறதியும் ஒரு வரமே!







நினைக்க தெரிந்த மனிதனுக்கு, மறதியும் ஒரு வரமே!
மறக்க தெரிந்த மனதும், நம் இறைவன் அளித்த வரமே!
எத்தனை எத்தனை பிறவிகள்; எத்தனை எத்தனை உறவுகள்!
எத்தனை எத்தனை பிரிவுகள்; எத்தனை எத்தனை துயரங்கள்!

பாரில் புழு, பூச்சி, வண்டுகளாக வாழ்ந்ததும்,
நீரில் மீன், சுறா, ஆமைகளாக மிதந்ததும்,
விண்ணில் பற்பல பறவைகளாய்ப் பறந்ததும்,
மண்ணில் பற்பல மிருகங்களாய்ப் பிறந்ததும்,

வீட்டில் பல்லி, பூனை, நாய் என உலவியதும்,
காட்டில் பாம்பு, மயில், குயில், மான் எனவும்,
கரடி, நரி, புலி, சிங்கம் எனவும் அலைந்ததும்,
பேரிடிபோல் பிளிரும் யானையாய்த் திரிந்ததும்,

பித்தனைப் போலக் குரங்காய்க் குதித்ததும்,
எத்தனை எத்தனையோ பிறவிகள் எடுத்ததும்,
அத்தனையும் முற்றிலும் மறப்பது என்றால்,
எத்தனை நன்மை நம் மனதிற்கு, எண்ணுவீர்!

பிறந்து, அலைந்து, திரிந்து, அல்லாடி,
இறக்கும்வரை துன்புற்றுத் திண்டாடி,
உணவுக்காக, உலகில் நாயாய்ப் பேயாய்,
உழன்றது அனைத்தும் நம் உணர்வில் நின்றால்…

ஒரு நொடியேனும் மன நிம்மதி இருக்குமா?
ஒரு நாளேனும் நாம் உயிர் வாழ முடியுமா?
இறைவன் கொடுத்த வரங்களில் எல்லாம்,
மறதிச் செல்வமே மிகச் சிறந்த வரம் !

முற்பிறவி நினைவுகளைப் போக்கிய இறையை,
இப்பிறவி பயனுற மலர்த்தாள் பணிவோம்!
நல்லதைக் கொண்டும், அல்லதைக் களைந்தும்,
பல்லாண்டுகள் நாம் பண்புடன் வாழ்வோம்.

வாழ்க வளமுடன்.
விசாலாக்ஷி ரமணி.




 
#17. ஆசைகள் அறுமின்!





“ஆசை தான் துன்பத்துக்கு காரணம்”,
ஆர் தான் அறியார் இதை எனினும்,
ஆசையை அறுத்தவர் யார் உள்ளார்?
அலைந்து தேட வேண்டும் உலகில்!

ஆசைகள் நிரம்பிய மனமானது, ஒரு
ஓட்டைக் குடம்; என்றுமே நிறையாது!
ஆசைகளை நிறைவேற்ற முயன்றால்,
ஓங்கும் அவை, நெய் இட்ட நெருப்பாக!

மத யானைகள் போல் வலம் வருகின்ற,
மனதின் ஆசைகளை அடக்கத் தேவை,
விவேகம் என்ற ஒரு கூரிய அங்குசம்;
வைராக்கியம் எனும் ஒரு இரும்புச் சங்கிலி.

ஆசை கொண்ட மனத் தராசின் முள்,
ஈசனை விட்டு விலகியே நிற்கும்;
ஆசை, செய்த தவத்தைக் கெடுக்கும்;
ஆசை, வளர்த்த பக்தியை அழிக்கும்.

பிறவிப் பிணி என்னும் முள் மரத்தின்,
மறுக்க முடியாத வித்துக்கள் ஆசைகளே!
அஞ்சி அகன்றிடுவீர் ஆசைகளில் இருந்து;
வஞ்சித்து வாழ்வை அழித்திடும் அவைகள்.

துன்பத்துக்கு இனிய முகமன் கூறி,
துன்பக் கடலில் நம்மைத் தள்ளும் ஆசை;
இன்பத்துக்கு விடை கொடுத்து அனுப்பி,
இன்பத்தை விலக்கி வைக்கும் ஆசை.

ஆசைகள் குறைந்து அழியும் போது,
லேசாகிவிடும் மனிதனின் மனது;
லேசாகிய மனமே உயர எழும்பும்;
ஈசனை நாடும்; பிறவியை நீக்கும்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.




 
# 18. தேவைகளைக் குறையுங்கள்.





செறிந்த அறிவினன் ஆத்மா ஆயினும்,
சிறந்த உடலின்றி இயங்க இயலாதவன்;
துரத்தும் கரும வினைகளை அழிக்கவும்,
துறந்த மனதுடன் சித்திக்கு முயலவும்;

கடமை உணர்வுடன் உடலைப் பேணுவீர்!
உடலே ஆத்மா குடியிருக்கும் கோவில்;
“சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத”,
உடல் இருந்தால் தான் முக்திக்கு முயல!

ஊனுடன் உயிர் கலந்து வாழ்ந்திட,
தேவைகள் சில நாம் பூர்த்தி செய்குவோம்;
தேனும், பாலும் எனத் தம் தேவைகளை,
வானளவாக வளர்த்த வேண்டாம்.

எத்தனை பொருட்கள் தேவை என்போமா,
அத்தனை பொருட்களின் வசத்தில் சிக்குவோம்;
எத்தனை பொருட்கள் தேவை இல்லையோ,
அத்தனைக்கத்தனை விடுதலை அடைவோம்.

“அகழ்வாரை தாங்கும்” பூமி இருக்க,
அகன்ற கட்டில் , மெத்தைகள் எதற்கு?
திண்ணென்று இரு நீள் கரங்கள் இருக்க,
திண்டினைத் தேடி, நாடுவது எதற்கு?

கனி, காய்கறிகள் பசி தீர்க்கும் எனில்,
இனிக்கும் உணவினைத் தேடுவது எதற்கு?
பருத்தி ஆடைகளே மானம் மறைப்பதால்,
பகட்டான ஜரிகை பட்டாடைகள் எதற்கு?

புன்னகையால் முகம் பொலிவுடன் இருக்க,
பொன்னகையைத் தேடி போவது எதற்கு?
சின்ன இல்லத்தில், சீரிய வாழ்வு என்னாமல் ,
மின்னலைத் தொட்டிடும் மாளிகைகள் எதற்கு?

தன் தலைமுறை வாழ வழி செய்தாலும்,
பின் ஏழு தலைமுறைக்கு சேர்ப்பது எதற்கு?
பளபளக்கும் பேருந்து பயணம் இருக்க,
குளுகுளு வண்டிகளை வாங்குவது எதற்கு?

“மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்”
மற்ற உயிரினங்கள் முற்றும் நம்புகின்றன,
மனிதன் மட்டும் “இன்னமும் வேண்டும்”, என
மாளாத் துயரைத் தேடிச் செல்கிறான்.

தேவையைக் குறைத்துக் கொள்ளுங்கள்,
சேவையை பெருக்கிப் பாருங்கள்;
தனக்கென வாழ்பவனுக்கு தன்னிறைவில்லை,
தனக்கென வாழாதான் தன்னிறைவடைகிறான்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
#19. வேறுபாடும், இடர்ப்பாடும்.







ஐந்து விரல்களும் ஒரே நபரின் கையில்
ஐந்து விதமாக இருப்பதைப் போன்றே,
மனிதர்களிலும் உண்டு பலவகைகள்
மனிதர்கள் ஒரே குடும்பத்தவராயினும்!

அனைத்துப் பொருட்களும் ஒரு போலவும்,
அனைத்து மனிதர்களும் ஒரு போலவும்
அமைந்திருந்தால், நம் வாழ்வில் எவ்விதச்
சுவையும், அழகும் இல்லாது போய்விடும்!

வித விதமான பொருட்களே வாழ்வில்
வித விதமான சுவைகளைச் சேர்க்கும்;
பழையதையே பார்த்துக் கொண்டிருந்தால்,
பழகப் பழகப் பால்போல் புளிக்கும்-ஆனால்

மற்றவர்களிடமிருந்து முற்றிலும் ஒருவர்
மாறுபட்டாலோ அன்றி வேறுபட்டாலோ,
விளையும் அனர்த்தம் விரும்பாவிடினும்;
விதியாலும் அதை மாற்றிவிட முடியாது!

தன்னிலும் வேறுபட்டவரைக் கண்டால்,
தாங்கவே முடியாது சக மனிதர்களால்.
மாறுபட்டவர்கள் படும் பாட்டையோ
மாளாது நாவினால் சொல்லிச் சொல்லி!

பட்டப் பெயர்கள் பலப்பல சூட்டப்படும்;
திட்டும், உதையும் தாராளமாகக் கிட்டும்;
கல்லால் அடித்துக் கூடச் சிலர் விரட்டுவர்;
சொல்லால் அடித்தும் நிம்மதியைக் கெடுப்பர்.

புதுக் கருத்துக்களைக் கண்டு, விண்டவர்கள்
பொதுவாக எங்கும் வரவேற்கப்படுவதில்லை!
கருத்துக்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படும்;
கருத்தினை உரைத்தவர்களும் அதன் கூடவே!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
#20. உடலும், உள்ளமும்.







ஒரு சந்நியாசி, உலகைத் துறந்தவர்.
அருகில் வீட்டில் ஒரு இளம் பெண்;
அழகிய அவளை நாடி வருவார்,
அல்லும் பகலும் பலவித ஆண்கள்.

துறவிக்கு கோபம் பெண்ணின் மீது,
“பரத்தையின் வாழ்வும் ஒரு வாழ்வா?
சுமக்க முடியாத பாவம் செய்பவள்,
சுழல்வாள் ஒரு நாள் நரக வேதனையில்!”

பெண்ணோ துறவியை மிகவும் மதித்தாள்;
கண்கண்ட கடவுளாக அவரை மதித்தாள்.
செய்யும் தொழிலை மனமார வெறுத்து,
செய்தாள் பிரார்த்தனை தினம் மனமுருகி.

துறவிக்கு கிடைத்தது ஒரு புதுப் பணி!
வந்து போகும் ஒவ்வொரு ஆணுக்கும்,
ஒரு சிறு கல்லை எடுத்து வைத்ததில்,
ஒரு சிறு கல்மலையே குவிந்துவிட்டது!

ஒரே இரவில் இறந்து போயினர் இருவரும்.
துறவியின் ஆத்மா கொடிய நரகத்திற்கும்,
பரத்தையின் ஆத்மா இனிய சுவர்கத்துக்கும்,
பறந்து சென்றன பாருங்கள் அங்கே அதிசயம்!

“ஈனப் பிறவிக்கு அளித்தீர் சுவர்கம்,
இறை அடியவனுக்கு இந்த நரகமா?”
துறவியின் கேள்விக்கு கிடைத்தது,
இறுமாப்பு அகற்றும் ஒரு சிறந்த விடை.

“பதிதை ஆனாலும், பாவம் செய்தாலும்,
பரமனையே எண்ணிக் கண்ணீர் உகுத்தாள்.
துறவி நீர் ஆயினும், துறவையே துறந்தீர்;
வரும் ஆண்களையே நீர் கண்காணித்தீர்!

உடலால் பாவம் செய்தவள் நீத்த உடலை,
உடனே நாய், நரிகள் தின்பதைப் பாரும்!
உடலால் உயர்ந்த உங்கள் உடலுக்கு,
உடனே மாலை மரியாதைகள் பாரும்!

உள்ளத்தால் உயர்ந்தவளுக்கு சுவர்கம்;
உள்ளத்தில் கள்ளம் கொண்டவர்க்கு நரகம்;
இதுவே இறைவனின் நியதியும் ஆகும்;
இதுவே இறைவனின் நீதியும் ஆகும்!”

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
Mr. NSP,

If any one requires Konar Notes to read and understand such simple poems,
I would rather not have them read any of my poems!

If you can't understand the concept conveyed, that itself is a shame!
But to need a guide to read...THAT will be THE real agony!

The spelling is Thamizh and not Tamiz!

V.R.
 
Last edited:
It seems to be a mindset to look for Konar notes to read poems. Cinema songs are also are very appealing when heard. But it is very difficult to get meanings out of it by reading its text.

Your poems seems to be simple. But doubt lingers as to what I understood is what you wanted to convey.
Mr. NSP,

If any one requires Konar Notes to read and understand such simple poems,
I would rather not have them read any of my poems!

If you can't understand the concept conveyed, that itself is a shame!
But to need a guide to read...THAT will be THE real agony!

The spelling is Thamizh and not Tamiz!

V.R.
 
Dear Mr. NSP,

If you have a mindset to look for Konar guide in order to read Tamil poems, it is your problem, not mine!

If doubt lingers after reading the poem, I can give the message/moral/theme of the poem in English at the end of the poem! Hope it will help you!

As for film songs, you will never ever find their meanings-how much ever time you may spend on them and how much ever they may be appealing!

The reason... they do not convey any meaning!

Please don't compare my poems with the film songs -which is the one thing I really hate.


with best wishes
V.R.
 
#21. வர்ண ஜாலங்கள்!





வானவில்லின் வர்ண ஜாலங்கள்
வானத்தை அலங்கரிப்பது போன்றே,
வர்ணங்களின் பொருளும், ஜாலமும்
வாழ்க்கையை நன்கு அலங்கரிக்கும்.

“வெள்ளை மனம் கொண்ட ஒரு
பிள்ளை” என்போம்; அவர்கள்
மாசில்லாத மனத்தினர் என்பதை
நேசத்துடன் பிறருக்குத் தெரிவிக்க.

கரிய நிறம் கொண்ட மனமோ
கொடுமைகள் நிறைந்த ஒன்று;
ராமாயணக் கூனியையும் மற்றும்
ராட்சதக் கம்சனையும் போன்று.

நீல வானமும் நீலக் கடல்களும்
நிம்மதியை நமக்குத் தந்தாலும்,
நீல வர்ணப் படங்களோ மன
நிம்மதியையே அழித்துவிடும்.

மஞ்சள் வர்ணம் மிக மங்களகரம்;
மஞ்சள் முகமோ மயக்கும் அழகு!
திருமண அழைப்பு அதே நிறம் – மேலும்
திவாலாகும் மனிதனின் அறிவிப்பும்!

பச்சை வர்ணம் காணக் குளுமை:
பச்சை மண் ஒரு பிறந்த குழந்தை!
பச்சை பச்சையாகப் பேசுகின்றவரைப்
பார்த்தாலே நாம் விலகிச் செல்வோம்.

சிவந்த முகமும், செவ்விழிகளும்,
சீற்றத்தையே வெளிக் காட்டினாலும்,
சிவந்த கரங்கள் காட்டும் உலகுக்குச்
சிறந்த உழைப்பை, சீரிய ஈகையை.

செம்மண்ணின் அரிய நிறமோ, உள்ளம்
செம்மைப் பட்டவர் உடுத்திக் கொள்வது.
பூமியை முற்றும் துறந்தோரும் மற்றும்
பூமியின் பொறுமை கை வந்தோரும்!

கோபத்தின் நிறம் சிவப்பு என்றால்,
தியாகத்தின் நிறமே சிறந்த காவி;
காவியும், வெள்ளையுமாகத் தோன்றும்
கோவில் சுவர் அழகுக்கு ஈடு ஏது?

வர்ணங்களுக்கு உண்டு நமது தினசரி
வாழ்வில் பங்கு என்பதை அறிவோம்;
வர்ண மயமான வாழ்க்கையை நாம்
வாழ்ந்து நலம் பல அடைவோம்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
#22. தாங்கும் கரங்கள்.







முன்னேறுவதில் உண்டு இரு வகை;
முற்றிலும் அவை முரண்பட்டவை.

தட்டிக் கொடுப்பது அதில் ஒரு வகை;
தடுத்து நிறுத்துவது அதில் மறு வகை.

உரமிட்டால் நன்கு வளரும் பயிராய்
ஊக்கப் படுத்தினால் வளருவர் சிலர்.

வெட்டி விட்டால் வளரும் செடி போல
வேகத்தடை வைத்தால் வளருவர் சிலர்.

தானாக அனைத்தும் செய்ய இயலாதார்,
தாங்கும் கரங்களை நாடுவர் எப்போதும்.

தடைகளே வேகத்தை அதிகரிப்பதனால்
தடைகளை விரும்பி வரவேற்பர் சிலர்.

ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்கணும்;
பாடுகிற மாட்டைப் பாடிக் கறக்கணும்!

தடுத்தால் வளருபவராக இருந்தால்,
தாங்க வேண்டிய அவசியம் இல்லை.

தாங்கினால் வளருபவராக இருந்தால்
தயவு செய்து அவர்களைத் தடுக்காதீர்!

நமக்கு வேண்டியது வளர்ச்சிதானே?
நமக்கு இரு வழிகளும் நல்லவையே!

வாழ்க வளமுடன்,

விசாலாக்ஷி ரமணி.




Cancel reply
 
#23. தொடரும் வகையில்…





தாய் தந்தையருக்குத் தருவதற்குத்
தாமதம் செய்யும் அவர் மகன்கள்,
தாம் பெற்ற செல்வங்களுக்கு மட்டும்
தங்கு தடை இன்றி அளிப்பது ஏன்?

தம்மை வாரிசுகளாகப் பெற்றவரைவிடத்
தம் வாரிசுகளிடம் அதிக அக்கறை ஏன்?
விடுகதை போலத் தோற்றம் அளித்ததை,
விடாமல் ஒரு நாள் நான் ஆராய்ந்தேன்!

ஓடும் ஒரு பெரு நதியைப் போலவே
ஓடவேண்டும் சந்ததிகளும் என்றே,
கடவுள் வகுத்த நியதியே இந்தக்
காரணம் கூற இயலாத பண்பு!

தனக்குத் தந்தவருக்கே தானும் தந்தால்,
கணக்குத் தீர்ந்து, முடிந்து போகுமே!
கணக்குத் தொடர நாம் விரும்பினால்,
கணக்கைத் தீர்த்துவிடக் கூடாது!

தந்தை தன் மகனுக்கு என்றும், அவன்
தன்னுடைய மகனுக்கு என்றும் ஒரு
சங்கிலித் தொடர்போலத் தொடருவதே
இங்கிதமான வாழ்க்கை முறை ஆம்.

இறைவன் அறிவான் நல்ல வழிகளை,
இயல்பை அமைப்பான் தகுந்தபடியே.
செய்தவனுக்குத் தெரியாதா மீண்டும்
செய்ய வேண்டியது என்ன என்று?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.




 
#24. விளக்கும், இருட்டும்!







இயற்கையில் விந்தைகள் பல உண்டு;
இருளும், ஒளியும் இணைந்து இருப்பதும்,
இயற்கையின் விந்தைகளில் ஒன்றாகும்;
இது நாம் தினமும் காணும் ஒன்றாகும்!

ஒளியை உலகுக்கு அளிக்கும் அழகிய
விளக்கின் அடியில் இருள் மண்டும்;
விளக்கின் அடியில் உள்ள அந்த இடம்,
விளக்கின் ஒளியை அறிவதே இல்லை!

உயர்வால் ஒருவர் ஒளிர்ந்தாலும், அவர்
உயர்வின் ஒளியை, தொலைவில் இருந்து
பார்ப்பவர் மட்டுமே அறிந்து கொள்வார்;
பக்கலில் இருப்பவர் என்றும் அறிகிலார்!

பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பார்,
நிழலாய் அருகில் இணைந்து உள்ளோரை,
விரும்பும் எண்ணம் விலகி மெல்லவே
அரும்பத் தொடங்கும் ஒரு வித வெறுப்பு.

அதிகப் பழக்கத்தால் அங்கு பிறக்கும்
அலட்சியம் மிகுந்த ஒரு மனோபாவனை.
நெருங்கி இருப்பதாலேயே ஒரு இகழ்ச்சி,
நெடுந்தொலைவில் இருப்பின் புகழ்ச்சி!

தன்னுடன் இருந்து தினமும் காத்திடும்
தனையனை காட்டிலும், தொலைவிலிருந்து
என்றோ வந்து கண்டு செல்லும் தனையனை
அன்றோ விரும்பிக் கொண்டாடுகின்றனர்!

உள்ளதை உள்ளபடிக் காண வேண்டும்;
நல்லதை எப்போதும் ஏற்க வேண்டும்;
திறமை நம் அருகில் இருப்பதினாலேயே,
சிறுமைப் படுத்தி அதனை இகழ வேண்டாம்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி




 
Villakkum Iruttum enbadarkku Vilakkamum Irukkattum. Does it say that people tend to praise those who have migrated then those who are slogging here?
 
Mr.RKB,
Let us see POSITIVE of everything. There is a saying in English" FAMILIARITY BREEDS CONTEMPT"
It is also a fact of life that you maintain the best of relationship with everyone only if you keep some distance.
JOINT FAMILY SET UP OF THOSE DAYS THRIVED,MAY BE,PEOPLE OF THOSE DAYS SAW ONLY POSITIVE SIDE.
 
Mr. RKB and Mr.BKM

Thank you for your responses.

Distance adds enchantment to the view. Isn't it?

I have known families where the sons/daughters who visit once in two years (with suitcases full of gifts) receive more warmth from the members of the family than the son who had been a dependable pillar of strength continuously.

Probably people want to make up for the love and affection missed in their absence, in the short time available.

We all know the story of the prodigal son. Don't we?

How many husbands realize the true worth of their wives and how many of them refrain from teasing / humiliating their wives in front of others?

It is time to think about this!

with warm regards,
V.R.
 
#25. பழிக்குப் பழி?







முதுமையில் பெற்றோரைத் துறந்துவிடும்,
மக்களை எண்ணி நான் வியந்தது உண்டு!
எப்படி முடிகின்றது ஈவு இரக்கமின்றி,
இப்படி எல்லாம் செய்வதற்கு என்று!

ஒரு நாள் மனத்தில் பொறி தட்டியது;
ஒரு வகைப் பழி வாங்குதலோ இதுவும்,
சிறு வயதில் தன்னைத் தனியே விட்டுப்
பொருள் ஈட்டச் சென்ற பெற்றோர்களை?

“சிறியோர் காப்பகத்தில் விட்டுச் சென்றோரை,
முதியோர் காப்பகத்தில் விட்டால் என்ன தவறு?
பொருள் கருதியே அவர்கள் அதைச் செய்தனர்,
பொருள் கருதியே நாமும் அதைச் செய்வோமே!”

இளமையில் வறுமையும், வளமற்ற வாழ்வும்,
முதுமையில் தனிமையும், ஜனமற்ற வாழ்வும்,
இரண்டுமே மிகப் பெரிய தண்டனைகளே,
இவ்வுலகில் வாழும் மனிதர்களுக்கு.

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை;
அருள் இல்லார்க்கு எவ்வுலகமும் இல்லை!
பொருளும் வேண்டும், அருளும் வேண்டும்;
பொருளும் வேண்டும், குடும்பமும் வேண்டும்!

குடும்பத்துக்கு என்றும், மற்றும் தன் இனிய
குழந்தைகளுக்கு என்றும், தன் நேரத்தை
இனிமையாகப் பகிர்ந்து அளித்து வந்தால்,
இனிமை ஆகிவிடும் நமது வாழ்க்கையே.

ஒரு கண் போலக் குடும்பத்தையும் மற்றும்,
ஒரு கண் போலப் பணிகளையும் பாவித்தால்
இளமையில் வறுமையும் வரவே வராது;
முதுமையில் தனிமையும் வரவே வராது.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
#26. இருவகைத் துயில்கள்!





உறங்குவதில் உண்டு இரு வகைகள்;
அறி துயில், அசல் துயில் என்ற இரண்டு.
பார்ப்பதற்கு ஒருபோலத் தோன்றினாலும்,
பலப்பல வேறுபாடுகள் உண்டு இவற்றில்!

திருமாலின் அறி துயில், உலகளாவிய
பெருமை பெற்றது என்பதை அறிவோம்;
திருமாலுக்குச் சற்றும் சளைக்காமல்,
பெறுவார் அறி துயில் மனிதருள் பலர்!

விழித்த கண்களோடு சிலர் உறங்குவர்;
வாயை மூடாமலேயே சிலர் உறங்குவர்;
சிம்ம கர்ச்சனையோடு சிலர் உறங்குவர்;
சிந்தித்தால் இவைகள் அறிதுயில் அல்ல!

வெளியே நடப்பவைகளை நன்கு அறிந்தும்,
வெளிப் பார்வைக்கு நன்கு உறங்குவதுபோல்,
பாசாங்கு செய்வதே அறிதுயில் ஆகும்;
பாடு படுத்தினாலும் அவர் கண் திறவார்!

தூங்குபவரை எழுப்பிவிடலாம்; ஆனால்
தூங்குவது போல் நடிப்பவரை அல்லவே!
பாசாங்கும் நல்ல பயன் அளித்திடும்,
பேசாமலே நாம் இருக்க விரும்பினால்!

தூங்கும் ஒரு சிங்கத்தை இடருவதும்,
தொங்கும் ஒரு புலி வாலை இழுப்பதும்,
அறி துயில் கொண்ட ஒருவரைச் சென்று
அறியாமல் நாம் எழுப்புவதும் சரி சமமே!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி




Cancel reply
 
# 27. செல்வமும், செல்வாக்கும்!




சென்று கொண்டே இருப்பதாலே அது
செல்வம் என்று பெயர் பெற்றதோ?
உருண்டு ஓடுவதால் நாணயங்கள்
உருண்டையாக என்றும் உள்ளனவோ?

பறந்து போவதால் தான் பணம்
பறக்கும் காகிதம் ஆயிற்றோ?
விடை இல்லாத இவைகளை
விடுகதைகள் எனக் கூறலாமா?

உருண்டு சென்றாலும் பறந்து சென்றாலும்,
உலகில் மதிப்பு சேர்ப்பது இதுவே.
பணம் இருந்தால் எல்லாம் உண்டு;
பணம் இல்லாவிட்டால் ஏதும் இல்லை.

மதிப்பு இல்லாதவர்களுக்கும் நல்ல,
மதிப்பு சேர்க்கும் இந்தச் செல்வம்.
மதிக்க வல்லவரானாலும் ஒருவர் தன்,
மதிப்பை இழப்பார் செல்வம் இன்றேல்.

செல்வந்தருக்கு பெரிய சுற்றம் இருக்கும்,
செல்வம் இல்லையேல் எவரும் இல்லை.
உலகின் ஆதாரம் இந்தப் பொருளே,
உலகில் பொருளாதாரம் என்பது இதுவே.

பாம்பு என்றால் படையும் நடுங்குமோ?
பாம்புக்கு படை அஞ்சாதோ அறியோம்!
பணம் என்றால் இறந்த மனிதனின்,
பிணம் கூட வாய் திறப்பது உறுதி!

பாதாளம் வரை பாய வல்ல இந்தப்
பணம் கொடிய பகைவரை அழிக்கும்,
நண்பர் எண்ணிக்கையைப் பெருக்கும்,
நன்மைகளை நம் வசப் படுத்தும்.

செல்வம் உள்ளவர்களின் வாக்கே,
செல்வாக்கு என்று அழைக்கப்படும்.
செல்வம் இருந்தால் செல்லும் நம் வாக்கு,
செல்வம் இன்றேல் செல்லாது நம் வாக்கு!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 

Latest posts

Latest ads

Back
Top