மறுநாளைக்கு பலராம அண்ணா தொடர்ந்தார்.
இந்த தனிமைப் படுத்திக்கறதை எதிர்த்து அப்பப்போ சில பேர் கொரல் குடுத்திருக்கா. அதிலே முதல் மனுஷன் நம்ம பாரதி. பாரதியைப் போல பிராமண சமூகத்துக்கு நல்லது நெனச்சவா கெடையாது.
பாரதியா? அவர் பூணூலை அறுத்து எறிஞ்சவராச்சே!
அப்படித் தான் சினிமாவிலே காட்டறா. ஆனா அவரோட எழுத்துக்களைப் படிச்சோம்னா அவர் அப்படிச் செய்திருப்பாராங்கறது சந்தேகமாத் தான் இருக்கு.
அவர் ஹரிஜனனுக்குப் பூணல் போட்டு வெச்சு வெகண்டை பண்ணினது கூட பொய்யா?
பூணல் போட்டது பொய்யில்லே. ஆனா அவர் வெகண்டையா செய்யலை அதை. அவருக்கு வேதத்தின் மேலே உண்மையான பக்தி இருந்தது. வேதங்களை அர்த்தம் புரிஞ்சு படிச்சவர் அவர். அவரோட பாடல் ஒவ்வொண்ணும் வேத ஸாரம்.
அப்படியா?
பாரதி செய்த வேதம்னு
www.sangapalagai.com - Tamil Stories & eBooks Online லே ஒரு ஈ-புக் படிச்சேன். நாம அர்த்தம் தெரியாம பண்றோமே சந்தியா வந்தனம் தர்ப்பணம் எல்லாம், அதோட கருத்தை எல்லாம் அவர் பாட்டாக்கி இருக்கார்னு தெரிஞ்சுது. பல சூக்தங்களை அவர் தமிழ்லே மொழிபெயர்த்து இருக்கார்னும் தெரிஞ்சுது. அரவிந்த கோஷோட சேர்ந்து அவர் வேதத்துக்கு ஒரு புது விளக்கம் கொடுக்கறார். அவர் ஹரிஜனனுக்குப் பூணல் போட்டதும் வேத அடிப்படையிலே தான். அவர் ஒரு கட்டுரைலே, “பூணூல் என்பது யாகம் செய்வதற்கான அடையாளம். இந்த நாட்டிலுள்ள அத்தனை பேரையும் மது மாம்சாதிகளை நிறுத்தச் சொல்லி பூணூல் போட்டுவிட்டு எல்லாரும் வேத வழியிலே யாகம் செய்வதற்கான தகுதி பெறச் செய்யவேண்டும்” என்கிறார். பாரதியை அந்தக் காலத்து பிராமணாளும் ஏத்துக்கல்லை, இந்தக் காலத்திலும் அவரோட வேத அபிமானத்தை பல பேர் புரிஞ்சுக்கல்லை.
வாஸ்தவம்.
கணபதி, கண்ணனோட கூட காளி, மாரிக்கும் கூட அவர் பாட்டுப் பாடி இருக்கார். விநாயகருக்கு அவர் செய்யற அர்ச்சனையிலே
தேவதேவா சிவனே கண்ணா
வேலா சாத்தா விநாயகா மாடா
இருளா சூரியா இந்துவே சக்தியே
வாணீ காளீ மாமகளேயோ ன்னு கூப்பிட்டு தெய்வங்களுக்குள்ளே வேறுபாடு பார்க்கக் கூடாதுன்னு சொல்றார்.
அவர் சொன்னதை நாம கேக்கல்லை. இன்னிக்கு நாம கருமாரி அம்மனுக்கு கோயில் கட்டினாலும் அதை ஏன் கிருஷ்ண மாரின்னு சொல்லி அதுக்கு பிராமண வேஷம் போட்டு விடணும்னு புரியல்லை.
கல்கியும் செம்மங்குடியும் தமிழ் இசைக்கு எவ்வளவு போராடினாங்கறது நமக்குத் தெரியும். இன்னிக்கு போனாப் போறதுன்னு தமிழ்லே பாடறாளே தவிர தமிழுக்கு முக்கியத்துவம் குடுக்கல்லே. சேரிக்கும் சேரவேணும், அதுக்கு ஒரு பாட்டு படின்னு பாலசந்தர் சொன்னாரே, அதோட அர்த்தம் எத்தனை பேருக்கு புரிஞ்சுது?
என்ன தான் இருந்தாலும் மும்மூர்த்திகள் பாட்டு மாதிரி வருமா?
மும்மூர்த்திகள் ஒசத்தி தான். அந்த ஒசத்தியை எல்லாரும் அனுபவிக்க வேண்டாமா? பாமரர்களை, 'பாடறியேன்' மாதிரி பாட்டுகள் மூலமா இழுத்து படிப்படியா மேலே தூக்கி விடணும். குன்னக்குடியும் அதைத் தான் செஞ்சார். வித்தைகள் பண்ணி எல்லாரையும் இழுத்தார். அவா ஆர்வத்தை தக்க வெச்சுக்கறாப்பல இன்னும் நாலு பேர் பொறப்படலையே. குன்னக்குடி சங்கீதம் ஸாஸ்த்ரீயம் இல்லே, வெறும் ஜிம்னாஸ்டிக்ஸ்னு கமெண்ட் அடிச்சவா தான் ஜாஸ்தி. சுப்புடு ரொம்ப நாள் கழிச்சு அவர் கச்சேரியைக் கேட்டுட்டு “நான் கூட என்னவோன்னு நெனைச்சேன். அவரோட மேதையை இப்போ தான் புரிஞ்சுண்டேன்”னார். ஒதுங்கி இருக்கறவாளை இழுக்கறதுக்கு இந்த மாதிரி ஜிம்னாஸ்டிக்ஸும் வேண்டித்தான் இருக்கு. சரி, சந்தி பண்ண நேரம் ஆச்சு நாளைக்கு வரேன்னு பலராம அண்ணா புறப்பட்டார்.