வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – நாலாயிரத்தில் நாயகி உபந்நியாசம் – Boston
நாலாயிரத்தில் நாயகி பாவனை
ஆழ்வார்கள் பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்னாடி அவதரித்தவர்கள். அதில் தலைவராக நம்மாழ்வார் இருந்தார். இவர்கள் பன்னிரெண்டு பேருக்குள்ளே ஒருத்தி, ஆண்டாள் மட்டும்தான் பெண்ணாகப் பிறந்தவள். மற்ற எல்லா ஆழ்வார்களுமே புருஷர்கள்தான். ஆனா அவர்களுக்குள்ள எப்படி நாயகி பாவத்தில பாசுரம் வந்தது? அவர்கள் எதற்காகப் பெண் பாவனைல பாடினார்கள்ங்கிறது ஒரு முக்கியமான விசாரம். அது ஏன்னு தெரிஞ்சுக்கறது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனா அந்தப் பாசுரங்கள் எவ்வளவு நன்னாயிருக்கு, எவ்வளவு அனுபவிக்கிறாப்போலே இருக்குங்கிறதுதான் இன்னும் நமக்கு முக்கியம்.
பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார், இவா பத்து ஆழ்வார்கள். இதிலே நம்மாழ்வாருக்கு ஒரு சிஷ்யர் இருந்தார், மதுரகவியாழ்வார்னு பேர். பெரியாழ்வாருக்கு ஒரு பெண் பிறந்தாள், ஆடி மாசம், பூர நட்சத்திரலே, ஸ்ரீவில்லிபுத்தூரில். ஆண்டாள்ன்னு திருநாமம். ஆக மொத்தத்தில பன்னெண்டு பேர். இதிலே ஒருத்தி மட்டும்தானே பெண்ணாகப் பிறந்தாள்? மற்ற எல்லாரும் ஆண் தானே? அப்படியே பாசுரங்களைப் பாடிடுறதுதானேன்னு நமக்குத் தோணும். ஆழ்வார்கள் லோகத்தில் பரப்ப வந்தது பக்தி நெறியை. பக்திங்கறது ஞானத்தினுடைய ஒரு பக்குவமான நிலை. பல சமயங்களீல் பக்தி முற்றித்தான் ஞானம்ன்னு நாம நினைச்சிண்டிருப்போம். அப்படி அல்ல. ஞானம் முற்றினால்தான் பக்தியே பிறக்கும். பக்திஸ்ச்ச ஞான விஷேஷஹா, அப்படின்னு அதை விளக்குகிறார்கள். பக்திங்கறதே ஞானத்தினுடைய ஒரு விஷேசமான தன்மை. ஞானத்தினுடைய முதிர்ந்த தன்மை. இதை பக்தின்னு சொல்லுகிறோம். பவ்யம் இருந்தால்தான் பக்தி வரும். பவ்யமா இருக்கறதுன்னா விநயமா இருக்கறது; நெகிழ்ந்திருத்தல்; நனைந்திருத்தல். இது இத்தனையும் இருந்தாத்தான் பக்தியே பண்ண முடியும். ஞானம்ங்கிறது வறட்டுத்தனமா நிறைய அறிவு பெற்று இருப்பது. பக்திங்கறது நேர் எதிரா இருக்கே? இதுவோ நனைஞ்சிருக்கறதா இருக்கு, நெகிழ்ந்திருக்கிறதா இருக்கு. ஆனா பல பண்டிதர்களை நாம பார்க்கிறோமோல்லையோ? ஒரேயடியா சமஸ்கிருத ஞானம் இருக்கும். தெரியாததே இருக்காது. பேசறதுக்கே கிட்டக்கப் போக முடியாது. அப்படிப்பட்ட பண்டிதர்களெல்லாம் ஞானவான்களா இருக்கட்டும். அப்போ பக்திங்கறது நேர் எதிரா? பாண்டித்யமே வேண்டாமா? ஞானம் வேற மார்க்கம், பக்தி வேற மார்க்கமான்னா, அப்படி அல்ல. ஞானமே பரிபக்குவமான நிலை அடைந்தால்தான் பக்தி ஆகிறது.
என்னைக்குமே நமக்கே கொஞ்சம் இளரத்தமா இருக்குன்னு வச்சுக்கங்கோ. இப்பத்தான் 25 வயசு, 30, 35ன்னா, ரத்தம் வேகமாத்தான் இருக்கும். அப்போ நம்ம பேச்செல்லாமே வேகமாத்தான் இருக்கும். கொஞ்சம் நாளாக, நாளாக நம்ம பேச்சே மாறதோல்லையோ? நாமே 25 வயசுக்கு எப்படிப் பேசியிருப்போம்? இப்போ 50 வயசுக்கு எப்படிப் பேசறோம்ன்னு பார்த்தா மாறுதல் நமக்கே தெரியும். அப்போ வேகமா பேசியிருப்போம், அறிவு பூர்வமா பேசியிருப்போம். தர்க்க ரீதியாப் பேசியிருப்போம். இன்ன கேள்வி கேட்டு, இன்ன பதில் கிடைச்சாத்தான் சரின்னுவோம். ஆனா வயசாக, வயசாக அப்படி யாரும் வாதம் பண்ணிண்டு இருக்கறதாத் தெரியலே. இதுதான் உலகம். இதுதான்ங்கிறது தெரியறது. இதுல வாதம் பண்ணி பிரயோஜனம் இல்லே. இந்தப் பல விஷயங்களை நாம வயசானா தெரிஞ்சுக்குறோம். அப்போ சிறு வயசில் ஞானத்தின் அடிப்படையில் பேசினோம். வயசாக, வயசாக அனுபவத்தின் அடிப்படையில் பேசுகிறோம். ஞானத்தில பேசினதை விட, அனுபவத்தில் பேசுவது என்பது இன்னும் மெருகூட்டுகிறதோல்லையோ? அதனாலே முதல் நிலைங்கறது ஞானம். அது முதிர்ந்தாத்தான் அனுபவம். இது வாழ்க்கையில நாம நிச்சலும் பார்க்கிறது.
அதேபோல சம்ப்ரதாயத்திலே, ஆன்மீகத்திலெ பார்த்தோம்ன்னாலும், முதல் நிலை ஞானம். அந்த ஞானமே முதிர்ந்தாத்தான் பக்தி நிலையை அடைகிறோம். ஞானத்திலேர்ந்து எப்படி பக்தி நிலைக்குப் போறாள்ன்னா, ஞானத்தாலே தியானம் பண்ணுவோம். பகவானைக் குறித்து தியானம் பண்றதோ, ஆத்மாவைக் குறித்து தியானம் பண்றதோ, இதெல்லாம் ஓர் நிலை. அதுல அன்பு ரொம்ப சேர்ந்திருக்கும்ன்னு சொல்ல முடியாது. நீங்க பூ தொடுத்துப் பார்த்திருக்கீளோல்லையோ? புஷ்பங்களை எடுத்து நார்ல வைக்கிறோம். கட்டறோம். கட்டறச்சே வெறும தொடுத்துற மாட்டா. பக்கத்துல ஒரு பாத்திரத்துல ஜலம் வச்சிண்டு, தொட்டுத் தொட்டு தொடுக்கறாளோல்லையோ? ஏன் வெறும் பூவா தொடுத்தாப் போறாதா? என்னத்துக்கு ஜலத்தைத் தொடணும்ன்னால், அப்பதான் அது ஒழுங்கா கட்ட வரும். ஜலத்தைத் தொடாமல் பூவைக் கட்டினோம்ன்னால், அவ்வளவு நன்னாக இனிக்காது, ரசிக்காது. எப்படிப் புஷ்பத்தைத் தொட்டுக்கறச்சே ஜலத்தை தொட்டுக்கறோமோ, அதைப்போல தியானம் பண்ணிண்டே இருக்கறச்சே அன்பு சேர வேண்டும். வெறுமேகூட தியானம் பண்ணலாம். பல இடத்துல நீங்களும், யோகா, தியானம் கற்றுக் குடுக்கப்படும்ன்னு போட்டு, கத்துகிறதுக்காக போறோமோல்லையோ? அங்க இப்படி வட்ட, வட்டமாப் போட்டு, நடுவுல ஒரு புள்ளி குத்தி, அந்தப் புள்ளியையே பார்த்திண்டு இரு. அங்கயே உன்னுடைய லக்ஷியம் வச்சுக்கோன்னுவா. எத்தனை நாழி புள்ளியைப் பார்க்க முடியும்? ஏதோ கொஞ்ச நாழி பார்க்கலாமே தவிர, என்ன பெரிய ரசனையா? இல்ல ஏதானும் குணம் இருக்கா, சுவை இருக்கா, ஒன்னுமே இல்லே. இதே ஒரு திருவரங்கநாதன் படமோ, திருக்குடந்தை ஆராவமுதனோட படமோ வச்சுட்டு, கொஞ்ச நாழி பார்த்திண்டிருன்னு சொன்னா, எத்தனை நாழி வேணாலும் பார்த்திண்டிருக்கலாம். அதென்ன கருப்புப் புள்ளியா, பார்க்க முடியாத கொஞ்ச நாழி கழிச்சுப் போய்டறதுக்கு. அப்போ வெறும தியானம் மட்டும் பண்ணிண்டு இருந்தோம்ன்னா, அது பக்தி ஆகாது. அது தியானத்தோட, ஞானத்தோட நின்னுடும். அந்த தியானத்திலேயே நாம் அன்பு கலந்தோம்ன்னால், தியானத்திலேயே பிரேமம் கலந்தோம்ன்னால், அது பக்தி ஆகிறது. வெறும் தியானம் பண்ணினா ஞான நிலைன்னு அர்த்தம். தியானத்தில அன்பைக் கலந்துட்டோம்ன்னால் அது பக்தி நிலைன்னு அர்த்தம். இதுனாலதான் ஸ்நேகபூர்வம், அநுதியானம், பக்தித்தய அபிதீயதேன்னு சொல்லுவர்கள். தியானம், அநுதியானம். இடைவிடாத தியானம். அதிலே ஸ்நேகபூர்வ அநுதியானம். ஸ்நேகம்ங்கிறதுதான் பக்தி. ஸ்நேகத்தோடு கூடியிருக்கிற தியானத்தைப் பக்தின்னு சொல்லுகிறார்கள். அதனாலே ஞானம் கனிந்துதான் பக்தியே தவிர, பக்தி கனிந்து ஞானம் அல்ல. இது கீதையிலே ஆகட்டும், புராணங்களிலே ஆகட்டும், ஞானம் கனிந்த நலமான பக்தியைப் பேண வேண்டும்ன்னு சொல்லுவர்கள். சரி, அப்போ பக்திங்கறது ஞானமில்லாம இல்லையோல்லையோ? ஞானமிருந்தாத்தான் மேல பக்தியே பிறக்கும். வெறும் ஞானத்தோட நின்னுட்டாலும் முக்தி கிடைக்காது. ஞானமில்லாம வெறும் பக்தி மட்டும் பண்ணனும்ன்னாலும், பண்ணவே முடியாது. ஞானம் இருந்திருந்தாத்தான் பக்தியே வரும். அப்போ ஞானம் தேவை, பக்தி தேவை. அப்போ ஞானம், பக்தி இந்த ரெண்டும் கலந்ததுதான் நமக்கு முக்தி குடுக்கிறது. இதுக்கு ’பக்தி ரூபாபன்ன ஞானம்’ன்னு பேர். இதைத்தான் ‘உபாசனம்’ என்று உபநிஷத்திலே சொல்லுவர்கள். உபாசனம் பண்றார்ன்னு சொல்றோமோல்லையோ, அது வெறும் தியானம் பண்றார்ன்னு அர்த்தமல்ல. தியானமும், பிரேமமும் சேர்ந்தால்தான் உபாசனமே பண்ண முடியும். அப்போ யாரும் உபாசனா மார்க்கத்தாலேதான் மோக்ஷம் போக வேண்டும். ஆணா இருந்தாலும் அப்படித்தான், பெண்ணா இருந்தாலும் அப்படித்தான். யாருமே அப்படித்தான்.
ஆனா இந்த நிலை யாருக்கு நன்னா வரும்ன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கோ. ஆணுக்கு இந்த நிலை சுலபமா வந்துருமா? இல்லே பெண்ணுக்கு இந்த நிலை சுலபமா வருமான்னா, அவரவர்களுக்குன்னு சில உடல்ரீதியான, மனரீதியான எண்ணங்கள் ஓட்டம் இருக்கோல்லையோ? ஆணின் எண்ண ஓட்டமும், பெண்ணின் எண்ண ஓட்டமும் ஒரே மாதிரி இல்லே. பெண்களுக்குள்ளேயே ஒரோருத்தரின் எண்ண ஓட்டமும் மாறுபடுகிறது. ஆண்களுக்குள்ளேயும் மாறுபடும். ஒருவேளை ஆண்களெல்லாம் ஒரு எண்ண ஓட்டம், பெண்களெல்லாம் ஒரு எண்ண ஓட்டம்ன்னு வச்சுக்கங்கோ. அதுக்குள்ள நிறைய வித்தியாசம் இருக்கோல்லையோ? அநேகமா ஆண் பேசறது ஞான பாவனையோடதான் இருக்கும். அநேகமா பெண் பேசறது பிரேம பாவனையோடதான் இருக்கும். ஒரு குழந்தைகிட்ட நடந்துக்கிற விதமே பார்ப்போமே. அப்பா, பொண்ணோ, பிள்ளைகிட்டயோ எப்படி நடந்துப்பர்? அம்மா பொண்ணு, பிள்ளைகிட்ட எப்படி நடந்துப்பள்ன்னு பார்த்தாலே, ஒன்னு ஹிதத்தைக் குறித்தும், ஒன்னு பிரியத்தைக் குறித்தும். நம்ம வாழ்க்கைல ரெண்டு உண்டு, ப்ரியம்ன்னு ஒண்ணு, ஹிதம்ன்னு ஒண்ணு. ஹிதம்ன்னா எனக்கு நல்லது. எதெது நல்லதோ அது ஹிதம். ப்ரியம்ன்னா எனக்குப் பிடிச்சது. இந்த ரெண்டும் ஒன்னா இருக்கணும்ன்னு அவசியமே இல்லே. எனக்கு நன்னா இருக்கறதெல்லாம் பிடிச்சிருக்கணும்ன்னு தேவையில்லே. பிடிச்சதெல்லாம் நன்னா இருக்கணும்ங்கிற அவசியமும் இல்லே. எனக்கு எத்தனையோ விஷயம் பிடிக்கும். அதெல்லாம் சாப்பிடக்கூடாது. இது சாப்பிட்டா ரொம்ப நன்னா இருக்கும் தொண்டையிலேன்னா, அது சாப்பிட்டுடலாமா? கூடாதுன்னா கூடாதுதான். நன்னா இருக்கறதெல்லாம் பிடிக்குமா? வேப்பங்கொழுந்து ரொம்ப நல்லது. உடம்புக்கு நல்லதுதான், சாப்பிடுன்னா யார் சாப்பிடுவா? அதுக்கு வயசு வேண்டியிருக்கு பாருங்கோ. இப்போ நானே பாகற்காயை பதினாறு வயசிலே, சாப்பிடுன்னு எங்க அம்மா சொல்றச்சே, வேண்டாம்னுட்டேன். இப்ப 45 வயசிலே அதுதான் உடம்புக்கு நல்லது, சாப்பிடுன்னா சரிங்கறேன். அப்ப அப்படி சொன்னீரே, இப்ப இப்படி சொல்றீரேன்னா, அது ஞானம், இது பிரேமம். அந்த ஞானதசை மாறிடுத்து. இனிமெ வாதப் பிரதிவாதங்களுக்கெல்லாம் இடம் இல்லே. அதனாலே, ஹிதம், பிரியம் ரெண்டிலே, அநேகமா நல்லது எதோ, இந்தப் பிள்ளை இப்படி வரணுமே, இப்படி வரணுமேங்கறதப்பத்திதான் அப்பா பேசுவர். இப்படியே கையிலே பிரம்பை வச்சிண்டே பேசிண்டிருந்தா பிள்ளை முன்னுக்கு வரவே போறதில்லே. அதுக்குப் பிடிச்சதையும் குடுத்தாத்தான் முன்னுக்கு வரும். இது அம்மா பேசுவள். சரி, பிடிச்சதையே குடுத்திண்டிருந்தியானா கெட்டே போயிடும் பிள்ளை, பிரம்பும் கையில வச்சிக்கணும். இது அப்பா பேசுவர். அப்போ இவர் பேச்சு, அவள் பேச்சு ரெண்டையும் சேர்த்து ஒரு பிள்ளையை வளர்க்கறதோல்லையோ? எப்படி பிரியம், ஹிதம்ன்னு ரெண்டையும் தாய், தகப்பனார்கிட்ட பார்க்கறோமோ, அதேபோல, அதையே கொஞ்சம் இழுத்து வைச்சுப் பாருங்கோ. ப்ரியத்தையே பிரேமமாக்கிக்கங்கோ, ஹிதத்தையே ஞானமாக்கிக்கங்கோ.
அப்போ ஞானத்தாலே பேசறாள்ன்னா அநேகமா ஆண் பேச்சாக இருக்கும். பிரேமத்தோடே பேசறோம்ன்னா பெண் பேச்சாக இருக்கும். இது லோகத்துல கண்கூடா நாம பார்க்கறது. இதையேதான் ஆழ்வார்களும் பின்பற்றினார்கள். எப்பப்பெல்லாம் தங்களுக்கு ஞானம் அதிகரிக்கிறதோ, பகவான் புருஷோத்தமன், அவன்தான் முழுமுதற் கடவுள், ஜகத்துக்குக் காரணம், படைக்கிறவர், காக்கிறவர், அழிக்கிறவர், முமூஷுவுக்கு மோக்ஷம் குடுக்கிறவர்ன்னு என்னென்னல்லாம் தோண்றதோ, இதெல்லாம் ஞானத்தின் அடிப்படையில் சம்ஸ்கிருத வேதாந்தத்தின் அடிப்படையில் தோன்றுவது. அது அத்தனைக்கும் ஆழ்வார்கள் ஆணாகவே பாடிடுவா. ஆனா இப்படியே பண்ணிட்டு மோக்ஷம் போய்ட முடியுமா? வெறும் வறட்டுத்தனமா தியானம் பண்றேன்ங்கறதுக்காக, மோட்சம் பகவான் குடுத்துறதில்லே. அவரிடத்திலே உள்ளம் கனிந்து, உருகி, நைந்தாத்தான் முக்தி. அப்போ அந்த நிலையை ஏறிட்டுக்கனும்ன்னால், ஆண்களேதான் பக்தியும் பண்ணனும். ஆழ்வார்களுக்கு அந்த பக்தியை பண்ணப்பண்ண ஏதோ நாம போட்டிண்டிருக்கற வேஷத்துக்கு ஒத்து போறதில்லேன்னு தோணிப் போய்டறது. இவர்கள் இருக்கறது ஆண் உடுப்பிலே இருக்கா. ஆனா பண்றதோ பரமப்ரேமம் கலந்த பக்தி. ஏதோ ஒரு வேஷம் போட்டுண்டு, ஏதோ ஒரு மாதிரி நடந்திண்டிருந்தா? இது அப்பப்ப ஒத்து வரமாப் போகவேதான் அந்த நிலையை விட்டுவிட்டு, தங்களையே பெண்ணாகப் பாவித்துக் கொண்டு, நாயகி பாவத்தில் பாடுகிறார்கள்.
நாயகியாக பாடுகிறார்கள்ன்னு சொல்றச்சேவே, அப்போ பிரேம பாவனையில பாடுகிறார்கள்ன்னு சொல்ல வேண்டும். ஆச்சார்ய ஹ்ருதயம்ன்னு ஒரு கிரந்தத்திலே, அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்ன்னு ஒரு ஆச்சார்யர், அந்த ஸ்வாமி தெரிவிக்கிறார், ‘ஞானத்தில் தன் பேச்சு, ப்ரேமத்தில் பெண் பேச்சு’. ஞானத்தோடு ஆழ்வார் பாடினா, தன் பேச்சாகப் பேசுவர். தன் பேச்சுன்னா, ஆண் பாவனைன்னு அர்த்தம். ப்ரேம பாவனையில் பாடினா, அப்போ நாயகி பாவனையிலே பாடுகிறார். இது அடிப்படை. அப்போ ஆழ்வார்கள் ஏன் நாயகி பாவத்தில் பாடறான்னா, பிரேமம் அதிகரித்தால் நாயகி பாவத்தோடே பாடுவர்கள். ஞானத்தோடே பாடினார்களென்னால் ஆண் பாவனையில பாடினார்கள். அப்படின்னா பெண் பாவனையில பாடறச்சே ஞானமில்லேன்னு சொல்லக்கூடாது. ஞானம் முதிர்ந்துதான் பிரேமம்ன்னு இப்பதான் பார்த்தோம்.
இதிலே நம்மாழ்வார் நாயகி பாவத்திலே பாடியிருக்கார். திருமங்கையாழ்வார் நாயகி பாவத்தில் பாடியிருக்கார். பத்து ஆழ்வார்களும் பாடவில்லை. முதல் மூன்று ஆழ்வார்களிடத்தும் நாயகி பாவம் இல்லை. ஆண் பாவனையோட மட்டும்தான் பாடியிருக்கார்கள். திருமழிசையாழ்வார், ஒருவேளை ஓர் பாசுரம் நாயகி பாவத்திலே பாடினாரோன்னு சந்தேகம். அவர் ரெண்டு பிரபந்தம் பாடியிருக்கார். அதிலே ஒரே ஒரு பாட்டு மட்டும் நாயகி பாவமோன்னு சந்தேகப்பட்டு, அதுவும் ஆராய்ச்சியாளர்கள் இல்லேன்னு முடிவு பண்ணிட்டா. அதனால முதல் நான்கு ஆழ்வார்களும் நாயகி பாவத்திலே பாடவில்லை. ஐந்தாவது ஆழ்வார்தான் நம்மாழ்வார். வைகாசி மாசத்தில், விசாக நட்சத்திரத்தில், ஆழ்வார் திருநகரி, திருக்குறுகூர்ன்னு திருநெல்வேலிக்குப் பக்கத்திலே திவ்யதேசம். அந்த இடத்திலதான் நம்மாழ்வார் திருவவதாரம் பண்ணினார்.
உண்டோ வைகாசி * விசாகத்துக்கொப்பொரு நாள் *
உண்டோ சடகோபர்க்கொப்பொருவர் * உண்டோ
திருவாய்மொழிக்கொப்பு * தென் குருகைக்குண்டோ *
ஒரு பார் தனில் ஒக்குமூர்
-(உபதேச ரத்தின மாலை – 15)
ஆழ்வார் திருநகரிக்கு நிகர் அந்த ஊர்தானாம். வைகாசி விசாகத்திற்கு நிகர், அந்த நட்சத்திரம்தானாம். நம்மாழ்வாருக்கு நிகர் அவர்தானாம். அவர் பாடின திருவாய்மொழிக்கு நிகர் அதே பிரபந்தம்தானாம். அவ்வளவு உயர்த்தியா பாடியிருக்கார் நம்மாழ்வார், அவரிடத்திலதான் நாயகி பாவத்தை முழுமையோடே நம்மால பார்க்க முடியும். நாயகியாகவே தன்னை நினைச்சிண்டு பத்து பத்துப் பாசுரங்களாகப் பாடுகிறார். நம்மாழ்வார் நாலு பிரபந்தம் பாடியிருக்கார், திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி. இந்த நாலும் நான்கு வேதங்களுக்குச் சமம். ரிக் வேதம், சாம வேதம், யஜுர் வேதம், அதர்வண வேதம். இதிலே என்ன ஆச்சர்யம்ன்னா, சொல்ல வந்த கருத்துக்களெல்லாம் வேதாந்தத்தினுடைய கருத்து. ஆனா அதை இவர் பாடிண்டிருக்கறது நாயகி பாவத்தோடே. சொல்ல வந்திருக்கறது ரொம்ப ஞானத்தினுடைய நிலையைத்தான் சொல்ல வரார். ஆனா அதைப் பிரேம தசையில் இருந்து கொண்டு அர்த்தங்களைத் தெரிவிக்கிறார். இப்படிச் சேருமான்னு கேட்டா, ரெண்டும் சரியான விகிதத்தில சேர்ந்திருந்தாத்தான் நமக்கும் பக்தி வளரும். வெறும் ஞானத்தோட மட்டும் பேசிண்டிருந்தாலும் பிரயோஜனமில்லே. வெறும் மூடத்தனமான பிரேமத்தோட பேசியும் லாபமில்லே. அப்போ ஞானமும், பக்தியும் கலக்க வேண்டுமோல்லையோ? அதைத்தான் முதல் பாசுரத்தாலே நம்மாழ்வார் சாதித்தார்.
உயர்வற உயர் நலம் * உடையவன் யவன் அவன் *
மயர்வற மதி நலம் * அருளினன் யவன் அவன் *
அயர்வறும் அமரர்கள் * அதிபதி யவன் அவன் *
துயரறு சுடரடி * தொழுதெழன் மனனே!
(திருவாய்மொழி – 1.1.1)
- என்று முதல் பாசுரம். அதிலே ’மதிநலம் அருளினன்’னு சாதித்தாரோல்லையோ? மதி, நலம். மதின்னு சொல்றது ஞானம். நலம்ன்னு சொல்றது பிரேமம். மதிநலம்ன்னு சொல்றது ஞானமும், பிரேமமும் கலந்தது. இதைத்தான் பகவான் ஆழ்வாருக்கு அனுகிரகிக்க அது கொண்டே 1102 பாசுரங்களும் பாடினாராம். இந்த 1102 பாசுரங்களை 100 திருவாய்மொழியாக பிரிச்சுப்பா. மொத்தம் 1102 சேர்த்தும் திருவாய்மொழின்னுதான் கிரந்தத்துக்குப் பேர். அதற்குள்ளே பத்து, பத்து பாசுரங்களா பிரிவு. பத்துன்னு சொன்னா பதினொன்னுன்னு வச்சுக்கங்கோ. பதினோரு, பதினோரு பாசுரங்களா மொத்தம் 100 திருவாய்மொழிகள். 11 x 100 = 1100 ஆச்சா? இப்போ 2 பாசுரம் கூட இருக்கோல்லையோ? ஏன்னா, ‘கேசவன் தமர் கீழ்மேல் எமரேல் எழு பிறப்பும்..’ன்னு ஒரு பத்துப் பாசுரம். இரண்டாம் பத்திலே பாடியிருக்கார். அதிலே மட்டும் 11 பாசுரத்துக்குப் பதில் 13 பாசுரம் இருக்கு. எப்பவுமே பத்துப் பத்தா பாசுரம் பாடுவர். பத்தாம் பாட்டு வரைக்கும் தான் சொல்ல வந்ததை சொல்லிடுவர். பதினோராவது பாசுரத்திலே, நான்தான் நம்மாழ்வார், நான்தான் திருக்குறுகூரில பிறந்தேன், நான்தான் ஆயிரத்துக்குள்ளே இந்தப் பத்துப் பாசுரத்தைப் பாடியிருக்கேன், இந்தப் பத்துப் பாசுரத்தை யார் சொன்னாலும் இந்தப் பலம் கிடைக்கும். அப்படின்னு ‘பலஸ்ருதி’ பாசுரம்ன்னு சொல்றோமோல்லையோ, அதைத்தான் கடைசிப் பாட்டில வச்சுருவர். இந்த கேசவன் தமர்ல மட்டும், அதுக்கு ’பன்னிரு திருநாமப் பாடல்’ன்னு பேர். ’கேசவாதி த்வாதச நாமங்கள்’ன்னு கேள்விப்பட்டிருப்பீள். கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, திரிவிக்கிரம, வாமன, ஸ்ரீதர, ரிஷிகேத் ,பத்மநாப, தாமோதர-ன்னு சொல்லுகிறோமோல்லையோ? அந்த பன்னெண்டு திருநாமத்துக்கும் பன்னெண்டு பாட்டுப் பாடிட்டார். அதுக்கப்புறம் தான் பாடினதுன்னு ஒரு பாட்டிலே சொல்லணுமோல்லையோ? அப்போ 12 + 1, 13 போச்சு. அதனாலே 1102 பாசுரங்கள். இதை திராவிட வேத சாகரம்ன்னு சொல்லுவர்கள். சாந்தோக்ய உபநிஷத்துக்குச் சமமான பாசுரம். சாம வேதத்தில் என்னென்ன கருத்துக்கள் உண்டோ, அது அத்தனையும் தெள்ளு தமிழிலே, இனிமையான தமிழிலே நம்மாழ்வார் குடுத்தார்.
இந்த சம்ப்ரதாயத்துக்கு ’உபய வேதாந்தம்’ன்னு பேர். உபய வேதம்ன்னா, சமஸ்கிருத வேதம், திராவிட வேதம். சம்ஸ்கிருதமும் கற்றிருக்க வேண்டும், தமிழும் கற்றிருக்க வேண்டும். உபநிஷத்துக்கள், சம்ஸ்கிருத வேதம், வேதாந்தம். அதே ஆழ்வார் பாசுரங்கள் திராவிட வேதம், வேதாந்தம். இந்த ரெண்டையும் நாம் ரெண்டு கண்களாகக் கொள்ள வேண்டும். ரெண்டு கண் இருந்ததுன்னா விஷயத்தை நன்னாப் பார்க்கிறோமோல்லையோ? ரெண்டு கண்ணு இருக்குங்கிறதுக்காக வஸ்து ரெண்டாத் தெரியலாமா? அது ஒன்னாத்தான் தெரியணும். அதுபோல சம்ஸ்கிருத வேதாந்தம், திராவிட வேதாந்தம் ரெண்டு கண்ணும் சேர்ந்து பகவானை ஒருவனாகத்தான் காட்டும். ரெண்டு அர்த்தம் சொல்லாது. எம்பெருமான் ஒருத்தன், அவனிடத்திலே பக்தி பண்ண வேண்டும், இந்த அர்த்தத்தைத்தான் சம்ஸ்கிருத வேதாந்தமும் சொல்லும், திராவிட வேதாந்தமும் சொல்லும்.
அப்போ சம்ஸ்கிருத வேதாந்தம்தானே பழசு? ரிக் வேதம், யஜுர் வேதம் எல்லாம் எவ்வளவு நாட்களாக இருக்கிறது. ஆழ்வார் தமிழ்ப் பாசுரம்தானே பாடியிருக்கார். முதல்ல தமிழுக்கு சமஸ்கிருதம் சமமாகுமா? ஒரு கேள்வி. மேலும் சம்ஸ்கிருதம் ரொம்ப நாள் முன்னாடி இருக்கே. ஆழ்வார் பாட்டு என்னைக்குன்னு எங்களுக்குத் தெரியுமே. தேதியிருக்கிற பாசுரம் போய் உசந்த பாசுரமா இருக்க முடியுமா? ரெண்டாவது கேள்வி. மேலும் இது பாடினது எல்லாம் பிராமணர்களாகக்கூடத் தெரியலையே? ஆழ்வார்கள் எல்லாரும் பிராமணர்கள் அல்லர்கள். ஒரு சிலர், தொண்டரடிப்பொடியாழ்வார், பெரியாழ்வார், மதுரகவியாழ்வார், இதைப் போன்றவர்கள்தான். குலசேகரர், ஷத்திரியர். திருமங்கையாழ்வார், கள்ளர் குலத்திலே பிறந்தார். திருப்பாணாழ்வார், பாணர் குலத்திலேயே பிறந்தார். இப்போ இந்த மூன்று சந்தேகம் வந்துருச்சு பாருங்கோ. இது சம்ஸ்கிருதமா, இல்லையே தமிழாச்சே? இது ரொம்ப பழைய காலம் இல்ல போலருக்கே. ஆழ்வார்கள் எல்லாம் பிராம்மணாள் இல்ல, போலருக்கே. இந்த மூன்றையும் ஒன்னுமில்லேன்னு ஆக்கற அளவுக்குத்தான் அந்த பாசுரங்களிலே பக்தி ததும்புகிறது. ஆழ்வார் பாடினது அத்தனையும், இவ்வளவு ஒசத்தியா, சம்ஸ்கிருத வேதத்துக்கு சமமா திவ்யதேசங்களிலே நாம சேவிச்சுட்டு இருக்கோம். இதே ஒரு ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி பார்த்தேள்ன்னா, கோவில்களிலே ஆழ்வார் பாசுரங்களை இப்படி சேவிச்சிண்டு இருக்கலே. நாதமுனிகள்ங்கிற முதல் ஆச்சார்யன்தான் இதை உள்ளே புகுத்தினார். 823ம் வருஷத்திலே நாதமுனிகளோட அவதாரம். சுமார் 1200 வருஷத்துக்கு முன்னாடி. அவர்தான் இந்த ஆழ்வார் பாசுரங்களைக் கொண்டு போய் திவ்யதேசங்களிலே பாடவேண்டும் என்று ஏற்படுத்தினார். அது என்ன ஆயிடுத்துன்னா, இன்னைக்கு வேதம் பின்னாடி போய்டுத்து, ஆழ்வார் திவ்யப் பிரபந்தம் முன்னாடி வந்துடுத்து. முன்னாடி காலத்துல சம்ஸ்கிருத வேதம் மட்டும்தான் உண்டு. ஆனா இன்னைக்குப் பெருமாளுக்கு புறப்பாடு நடக்கறதுன்னா, அருளிச்செயல் கோஷ்டிதான் முன்னாடி வரும். வேத பாராயண கோஷ்டி பின்னாடிதான் வரும். முன்னாடி இருந்ததை பின்னுக்குத் தள்ளியிருக்கணும்ன்னால், என்னமோ அந்தப் பாட்டில இருக்கணுமோல்லையோ? இல்லேன்னா இவ்வளவு தூரம் வேதத்தைப் பின்னுக்குத் தள்ளிட்டு, அதாலே முன்னுக்கு வந்திருக்க முடியுமா? என்ன இருக்குன்னா, ஒன்னுமில்லே, நாயகி பாவம்தான் இருக்கு. அந்தப் பாசுரங்களுக்கு இவ்வளவு தூரம் ஏற்றம் எதனாலே ஏற்பட்டதுன்னா, வெறும் வேதாந்தம்ன்னு பேசியிருந்தா, அது பெண் பாவனையே பேசாது. ஆண் பாவனையேதான் வேதம் பேசும். ஆனா ஆழ்வார்களைப் பொறுத்தவரை தங்களையும் மீறி, பக்தி ததும்ப பெண் பாவனையோட பாடியிருக்காளோல்லையோ? அதனாலதான் இந்தப் பாசுரங்களுக்கே ஏற்றம்.
இது எல்லாமே அனுபவ ரீதியான பாசுரங்கள். மேலே சொன்ன மாதிரி தர்க்க ரீதியாக இங்கெ பேச்சில்லே, அனுபவ ரீதியாகத்தான் பேச்சு. அதனால வாதத்துக்கு இங்க எதுவுமே இல்லே. ஆழ்வார் நிலைமைலேர்ந்து யோசிக்கணும். அந்த பக்தி நிலைமைக்கு நம்மளை உசத்திண்டாத்தான், ஓ, இவர் என்ன சொல்ல வர்றார்ன்னே புரியும். நாம பக்தில ஆரம்பப் படிக்கட்டுல நின்னுகிட்டு, கடைசி படிக்கட்டுல நின்னுகிட்டு இருக்கிற ஆழ்வாரைப் பார்த்து, இந்த மாதிரி எல்லாம் நடக்குமான்னால், நடக்கணும், நடந்திருக்கு. ஆழ்வாருக்கு நடந்திருக்குங்கிறதைத்தான் உண்மையா எழுதி வச்சிருக்கா. அப்போ என்ன ஆசைப்படலாம்? இந்த நிலைக்கு நானும் வருவேனா? அப்படிங்கற அளவுக்கு வேணா நாம பகவானிடத்திலே ப்ரார்த்தித்துக் கொள்ளலாம்.
(தொடரும்)
-(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – நாலாயிரத்தில் நாயகி உபந்நியாசம் – Boston
--
--