F
Falcon
Guest
ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்
பெரியவா சரணம் !!
பரமாசார்யாளிடம் வெண்ணெய் கேட்ட பாலகிருஷ்ணன்"
(பெரியவாளோட உதட்டுல இருந்த எல்லா பாளம்
பாளமான வெடிப்பும் இருந்த எடமே தெரியாம சுத்தமாக
போய்விட்டிருந்தது.ஆச்சரியமா பார்த்தவாகிட்டே
ஆசார்யா சொன்னார்;"என்ன பார்க்கறேள்? வெண்ணெயை
வாங்கிண்டுபோன பால கிருஷ்ணன் அதை சாப்ட்டுட்டான்
போல இருக்கு. அதான் எனக்கு சரியாயிடுத்து!")
நன்றி-குமுதம் லைஃப்-இன்று வெளியான இதழ்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
கும்பகோணம் மடத்துல ஒரு சமயம். நல்ல பனிக்காலம்.
விடியற்காலையில் எழுந்திருக்கறதுக்கே பலரும்
சோம்பல்படுவா. பனிகொட்டறதுல ரெண்டடி தூரத்துல
இருக்கறவாளோட முகம்கூட தெரியாது.ஒரு போர்வைக்கு
நாலு போர்வை போர்த்திண்டாலும் உடம்பு நடுங்கும். ஆனா
அத்தனை குளிர்லயும் மகாபெரியவா கார்த்தால
நாலுமணிக்கெல்லாம் எழுந்து, கொஞ்சமும் சலிச்சுக்காம
நீராடிட்டு நித்ய கர்மானுஷ்டானங்களையும் அனுஷ்டிக்க
ஆரம்பிச்சுடுவார்.
வாட்டற பனியோட பிரதிபலிப்பா, மகா பெரியவாளோட
உதடுகள்ல நிறைய வெடிப்பு வந்துடுத்து. உதட்டோட உள்
பக்கம் எல்லாம் புண்ணாயிடுத்து.அந்த மாதிரியான
நிலைமைல உதட்டை சரியா மூடக்கூட முடியாது.
ரணமா இருந்ததால, சரியா பேசக்கூட முடியாம வேதனை
இருந்தாலும் தன்னோட கஷ்டம் எதையும் வெளிக்காட்டிக்
கொள்ளாமல் எப்போதும்போல மடத்துல உள்ளவா,
வேதம் சொல்ல வர்றவா,தரிசனம் பண்ண வர்றவாள்னு
எல்லார்கிட்டேயும் பேசிக் கொண்டிருந்தார்.
பனிக்காலத்துல உதடு வெடிக்கும்போது அடிக்கடி வெண்ணெய்
தடவிண்டே இருந்தால் சீக்கிரமா வெடிப்பு சரியாகிவிடும்.
ஆனால், ஆசார சீலரான பெரியவா, கடைகள்ல விற்கிற
வெண்ணெயை வாங்கித் தந்தால் தடவிக் கொள்ள மாட்டார்..
என்ன பண்ணுவது? மடத்துலய தயார் செய்யறதுன்னா அப்போ
இருந்த நிதி நிலைமைல அது கொஞ்சம் செலவான விஷயம்.
அதோட வெண்ணெய் தயார் பண்றதுக்கு குறைஞ்சது ரெண்டு
நாளாவது ஆகும். என்ன செய்யறதுன்னு மடத்துல இருந்தவா
எல்லாரும் யோசிச்சுண்டு இருந்தா.
அந்த சமயத்துல வயசான பாட்டி ஒருத்தர், ஆசார்யாளை
தரிசனம் செய்யறதுக்கு வந்தா.முந்தின நாள் பெரியவாளை
தரிசனம் பண்ண வந்தப்போ அவரோட உதடு
வெடிச்சிருக்கறதைப் பார்த்ததாகவும்,அதனால் தானே மடியோட
ஆசாரமா பசும்பால் வாங்கி,காய்ச்சி,உறை குத்தி,தயிராக்கிக்
கடைஞ்சு ஆசாரத்துக்கு எந்தக் குறைபாடும் வராம வெண்ணெய்
எடுத்துக்கொண்டுவந்திருக்கறதாகவும் மடத்து சிப்பந்திகள்கிட்டே
சொன்ன அந்தப் பாட்டி,தான் கொண்டுவந்த வெண்ணெயை
ஆசார்யா முன்னால வைச்சுட்டு நமஸ்காரம் பண்ணினா.
"பெரியவா! ஒங்க ஒதடு பனியால ரொம்ப பாளம் பாளமா
வெடிச்சிருக்கு. நான் ரொம்ப மடியா வெண்ணெய் கடைஞ்சு
எடுத்துண்டு வந்திருக்கேன். நீங்க மறுக்காம இதை ஏத்துண்டு
ஒதட்டுல தடவிக்கணும்!" அப்படின்னு ப்ரார்த்தனை செய்தாள்.
அப்போ பெரியவாளை தரிசனம் பண்றதுக்கு வந்திருந்த ஒரு
தம்பதியோட குழந்தை அம்மாவோட கையைப் பிடிச்சுண்டு
அத்தனைநேரம் சமர்த்தா நின்னுண்டு இருந்த குழந்தை,
வெண்ணெயைப் பார்த்ததும், தாயாரோட கையை உதறிட்டு
ஓடிவந்து பெரியவா முன்னால நின்னு,'எனக்கும் வெண்ணெய்
வேணும்'கற மாதிரி தன்னோட பிஞ்சுக்கையை நீட்டியது.
சாட்சாத் பாலகோபாலனே வந்து ஆசார்யாகிட்டே வெண்ணெய்
வேணும்னு கேட்கற மாதிரி தோணித்து அங்கே இருந்தவா
எல்லாருக்கும்.இதுக்குள்ளே, அந்தக் குழந்தையோட பெற்றோர்
அவசர அவசரமா அதைத் தூக்கிக்க வந்துட்டா. அதோட
வெண்ணெய் கேட்டது தப்புங்கற மாதிரி உஸ்னு அதட்டவும்
ஆரம்பிச்சா. கை அசைவுல அவாளை பேசாம இருக்கச்
சொன்னார், மகாபெரியவா.
தன்னை தரிசிக்கவர்றவா கேட்காமலேயே அவாளுக்குத்
தேவையானதைத் தெரிஞ்சுண்டு குடுக்கக்கூடிய பெரியவா,
ஆத்மார்த்தமான பக்தி உள்ளவாளுக்கு தன்னையே
குடுத்துடக்கூடிய அந்த தெய்வம், குழந்தை அழற
தோரணையிலேயே அதுக்கு என்ன தேவைன்னு தெரிஞ்சுண்டு
குடுக்கற அம்மா மாதிரியான அந்த மஹா மஹா மாதா,
தனக்கு முன்னால இருந்த அத்தனை வெண்ணெயையும்
தூக்கி அந்தக் குழந்தைகிட்டே குடுத்துட்டார்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த சீடர்களுக்கு கொஞ்சம்
முகம் சுருங்கியது.'ரொம்ப நன்னா இருக்கு ஆசார்யா
பண்ணினது. ஏதோ கொழந்தை கேட்டா ஒரு எலுமிச்சங்காய்
சைஸுல உருட்டிக் குடுத்தா போறாதா? அப்படியே
டப்பாவோடாயா தூக்கிக் குடுக்கணும்? இப்போ ஒதட்டுல
தடவிக்க ஏது வெண்ணெய்?' அப்படின்னு மனசுக்குள்ளே
சிலர் நினைச்சுண்டா.சிலர் மகாபெரியவா காதுல
விழாதபடி முணுமுணுப்பா பேசிண்டா.
"என்ன எல்லாரோட முகமும் தொங்கிப் போயிடுத்து?
வெண்ணெயை மொத்தமா குடுத்துட்டேனேன்னா?
கொழந்தை சாப்ட்டாலே போதும்.என்னோட ஒதட்டுப்புண்
சரியாயிடும்!" தானே குழந்தையாக சிரித்தார்-பெரியவா.
அன்னிக்கு சாயங்காலமே பெரியவாளோட உதட்டுல
இருந்த எல்லா பாளம் பாளமான வெடிப்பும் இருந்த எடமே
தெரியாம சுத்தமாக போய்விட்டிருந்தது.
ஆச்சரியமா பார்த்தவாகிட்டே ஆசார்யா சொன்னார்;
"என்ன பார்க்கறேள்? வெண்ணெயை வாங்கிண்டுபோன
பால கிருஷ்ணன் அதை சாப்ட்டுட்டான் போல இருக்கு.
அதான் எனக்கு சரியாயிடுத்து!"
சரீரம் வேறவேறயா இருந்தாலும் உள்ளே இருக்கிற ஆத்மா
ஒண்ணுதான்கறது அத்வைதம்.அந்தக் கொள்கையைப்
பரப்பறதுக்காகவே ஆதிசங்கர மகான் ஏற்படுத்தின மடத்தை
அலங்கரிக்க வந்த ஆசார்யா, இந்த லீலை மூலமா அதை
நேரடியா உணர்த்தினதை நினைச்சு சிலிர்த்துப்போனார்கள்
எல்லாரும்.
Source: MAHA PERIYAVA Public Group/Face Book
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!