விரும்பியதும், கிடைத்ததும்!
"விரும்பியது நமக்குக் கிடைக்காவிட்டால்,
விரும்ப வேண்டும் நமக்குக் கிடைத்தவற்றை!"
எதை எல்லாம் கற்பதற்கு வாய்ப்புக் கிடைத்ததோ,
அதை எல்லாம் தவறாமல் கற்றேன், கற்கின்றேன்!
தலைப் பிரசவத்தின் போது கணவர் மாறினார்,
தலை நகரிலிருந்து விசாகப்பட்டணத்துக்கு!
எங்கிருந்தோ ராவுஜி மாமாவை வரவழைத்து,
எனக்குத் தெலுங்கு கற்பித்தார் என் அன்னை!
எழுதப் படிக்கத் தெரிந்து விட்டது என்றாலும்,
எளிதாகப் பேசப் கொஞ்சம் பயிற்சி வேண்டுமே!
அந்தப் பயிற்சியும் விரைவிலே கிடைத்தது,
சுந்தரத் தெலுங்கில் நன்கு 'மாடலாடு"வதற்கு.
இரண்டாவது பிரசவத்துக்கு நான் வந்தபோது,
இரண்டு applicationகள் கிடைத்தன எங்களுக்கு.
கொடுத்த மாமா நினைத்தது என் தங்கைகளை,
அடுத்து அதில் சேர்ந்தது நானும், ராஜி ராமும்.
Hindi Prachar sabha வின் இரண்டு கோர்ஸுகள்.
Hindi Pravesh and Hindi Parichai என்ற பெயரில்.
என் இளைய மகனுக்கு ஒன்றரை வயது
நான் Pravesh பரீட்சைகள் எழுதும் போது !
பிறகு Parichai பரீட்சைகள் எழுதினேன்,
வரவு வீட்டில் இரண்டு புது அகராதிகள்,
ஹிந்தி-ஆங்கிலம், ஆங்கிலம் - ஹிந்தி!
ஹிந்தி பரீட்சைகளிலும் எனக்கு Distinction!
சின்ன மகனைப் பள்ளியில் சேர்த்ததுமே,
துன்னல் பயிற்சியும், எம்பிராய்டரியும்!
எட்டு ரூபாய் மட்டுமே மாதச் சம்பளம்;
எட்டு வரை எண்ணத் தெரியாதவர்களும்,
எட்டிப் பிடிக்க வருவர், படித்துப் பணம்
கொட்டும் தையல் கலையைப் பயில!
வசந்தா என்ற நல்ல வயதான டீச்சர்!
வசமாக மாட்டிக் கொள்வார் வகுப்பில்!
கழுத்து ஓட்டையில் கையைத் தைத்தும்,
முன்னால் பின்னால் பக்கங்களைப் பற்றிச்
சற்றும் கவலை இன்றியும் தைத்தும், அவரை
முற்றிலுமாகக் கோபப்படுத்துவர் பெண்கள்!
எல்லோரும் அங்கு தான் தைக்க வேண்டும்;
எனக்கு மட்டும் ஸ்பெஷல் அனுமதி உண்டு.
வீட்டிலும் தைக்கலாம், அதை அவரிடம்
காட்டிவிட்டால் அதுவே போதுமானது!
மகன்கள் இருவரும் மதராஸ் I.I.T இல்,
மும்பையில் அவர் என்றானபோது முழுத்
தனிமை! தனிமையை நல்ல முறையில்
இனிமை ஆக்கச் சேர்ந்தேன் கலை பயில.
சந்தனுவின் கோர்ஸ் இரண்டு வருடங்கள்;
வரையவும், வர்ணம் தீட்டவும் பயிற்சி!
வீடு முழுவதும் கிருஷ்ணரின் படங்கள்!
வீடு விரைவிலேயே நிறைந்து போயிற்று!
(தொடரும்)