• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

For the kind attention of those who are trying
to find out from where these posts come!

These are written by me, typed by me and posted by me here.

Kindly do not waste time in trying to find the origin.

That time can be better utilized in reading and understanding the philosophy conveyed by Sivayogi Thirumoolar!

I have read this work before but I am understanding it better when I try to explain it to others in simple words as is possible.


 
# 191. அகங்காரத்தை வென்றவர்

சென்று உணர்வான் திசை பத்தும் திவாகரன்
அன்று உணர்வால் அளக்கின்றது அறிகிலர்
நின்று உணரார் இந்நிலத்தில் மனிதர்கள்
பொன்று உணர்வாரின் புணர்க்கின்ற மாயமே.

சிவன் என்னும் சூரியன் பத்து திசைகளிலும் சென்று அங்குள்ள
அனைத்தையும் உணர்வான். உணர்வு மயமாக விளங்குவான்.
உடலில் பரவியும் விரவியும் அனைத்தையும் உணர்கின்றான்.
இந்த உண்மையை உலகத்தவர் சற்றும் அறிவதில்லை.

'நான்' என்னும் அஹங்காரத்தை வென்று விட்ட ஞானியரிடம்
சிவன் கலந்து விளங்கும் உண்மையையும் அவர்கள் அறியமாட்டார்கள்.
 
# 192. அழிந்துவிடும் தன்மை


மாறு திருத்தி வரம்பு இட்ட பட்டிகை
பீறும் அதனைப் பெரிது உணர்ந்தவார் இல்லை
கூறும் கருமயிர் வெண்மயிர் ஆவதும்
ஈறும் பிறப்பும் ஓர் ஆண்டு எனும் நீரே.

நன்கு நெய்து தயாரிக்கப் பட்ட பட்டாடையும் கிழிந்து போய்விடும்.
இந்த உண்மையைப்பற்றி உலகத்தவர் சிறிதும் சிந்திப்பதில்லை.
அழகிய கருங் கூந்தல் வெண் கூந்தலாக மாறிவிடுவதும் கண்கூடு.
பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே ஒரு சிறு பொழுதே உள்ளது.
இந்த உண்மைகளைச் சிந்தித்து நன்கு உணர்வீர் உலகத்தோரே.
 
# 193. வீணாள் ஆக்காதீர்கள்

துடுப்புஇடு பானைக்கும் ஒன்றே அரிசி
அடுப்புஇடு மூன்றிற்கும் அஞ்சு எரிகொள்ளி
அடுத்துஎரி யாமல் கொடுமின் அரிசி
விடுத்தன நாள்களும் மேல் சென்றனவே.


சுழுமுனை என்னும் அகப்பை உள்ளது நம் உடலில்.
உடலாகிய பானைக்கு தகுந்த அரிசி ஆகும் விந்து.
சூரியன், சந்திரன், அக்னி என்ற மூன்றும் சேர்ந்த அடுப்புக்குத்
தகுந்த விறகுகள் ஆகும் உடலின் பஞ்சப் பிராணன்கள்.
இவற்றை வீணாக்காதீர்கள். விந்து சக்தியைத் தந்து விட்டு
அமுதத்தைப் பெறுங்கள். நாட்களை வீணாக்காதீர்கள்!

துடுப்பு = அகப்பை => சுழுமுனை
பானை = > உடல்
அரிசி => விந்து
அடுப்பு => நாபி ஸ்த்தானம்
மூன்று => சூரியன் , சந்திரன், அக்னி
கொள்ளி => ஞானம் என்னும் தீ
அஞ்சு => பஞ்சப் பிராணன்கள்.



 
# 194. புறம் நின்ற கருத்து

இன்புஉறு வண்டு அங்கு இனமலர் மேல்போய்
உண்பது வாசம் அதுபோல் உயிர்நிலை
இன்புஉற நாடி நினைக்கிலும் மூன்று ஒளி
கண் புறம் நின்ற கருத்துள் நில்லானே.

இன்பத்தைத் தேடும் வண்டுகளின் கூட்டம்.
பூக்களில் உள்ள சுவை மிக்க தேனை உண்ணும்.
அது போன்ற உயிர்களும் இன்பத்தையே நாடும்.
சோம சூர்யாக்னிகளின் ஒளியில் விளங்கும் நம் ஈசன்
புறப் பொருட்களை நாடும் மனத்துள் விளங்க மாட்டான்.
 
# 195. விதிகள் ஒன்றும் இல்லை


ஆம்விதி நாடி அறம் செய்மின் அந்நில
ம்
போம்விதி நாடிப் புனிதனைப் போற்றுமின்
நாம்விதி வேண்டும் அதுஎன் சொலின் மானிடர்
ஆம்விதி பெற்ற அருமை வல்லார்க்கே.

இந்தப் பிறவியில் அறவழியில் நில்லுங்கள்.
இன்பம் தரும் நெறியில் ஒழுக்கத்துடன் இருங்கள்.
ஒளி மண்டலத்தில் விளங்கும் இறைவனைப் போற்றுங்கள்.
மனிதப் பிறவியை பெற்ற நற்பேறு உடையவர்களுக்குக்
கூறுவதற்கு என்று வேறு என்ன விதிகள் உள்ளன?
 
# 196. பகிர்ந்து உண்ணுங்கள்

அவ்வியம் பேசி அறம்கெட நில்லன்மின்
வெவ்வியன் ஆகிப் பிறர் பொருள் வவ்வன்மின்
செவ்வியன் ஆகிச் சிறந்து உண்ணும்போது
தவ்விக் கொடு உண்ம்மின் தலைப்பட போதே.

வஞ்சனை, பொய், துன்பம் தரும் தீய சொற்களைப் பேசாதீர்.
அறநெறி கெடுமாறு தீய செயல்களைச் செய்யாதீர்.
பேராசை கொண்டு பிறர் பொருட்களைக் கவராதீர்.
சிறந்தவர்களாக நற்பண்புகளுடன் விளங்குங்கள்.
உண்ணும் பொழுது எவரேனும் வந்தால் அவர்களுக்கு
ஓர் அகப்பை உணவு கொடுத்துவிட்டுப் பிறகு உண்ணுங்கள்.


(உயிர் நிலையாமை முற்றியது. அடுத்து வருவது கொல்லாமை)
 
6. கொல்லாமை

# 197. சிவபூசை

பற்றுஆய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும்
உற்று ஆரும் ஆவி அமர்ந்த இடம் உச்சியே.

பற்றுக் கோடாக விளங்குபவன் நம் ஈசன்.
அவன் பூசைக்கு உகந்த மலர் ஆவது கொல்லாமை.
நல்ல மாலை ஆவது கண் மலர்களின் நல்ல ஒளியே.
சலனமற்ற மனமே பூசைக்கேற்ற நல்ல தீபம் ஆகும்.
பூசைக்கு உகந்த இடம் ஆகும் தலையின் உச்சி.
 
# 198. தீவாய் நரகம்

கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக்காரர் வலிக் கயிற்றாற் கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே.

"கொல்! குத்து!" என்ற கூறி வந்த மனித மிருகங்களை
வலிமை வாய்ந்த கயிற்றால் பிணிப்பர் யம தூதர்கள்.
"செல்! நில்!" என்று அவர்களை அதட்டியும், அச்சுறுத்தியும்,
தீ வாய் நரகத்தில் நெடுங்காலம் நிற்கும்படி ஆணையிடுவர்.
 
7. புலால் மறுத்தல்

#199. மறித்து வைப்பர்

பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன்தன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே.

பிற உயிர்களைக் கொன்று தின்னும் கயவர்களை,
யமதூதர்கள் எல்லோரும் காணும்படி எடுத்துச் செல்வர்.
கரையானைப் போல பறித்துச் சென்று அவர்களை
நரகத் தீயில் மல்லாக்கக் கிடத்தித் தண்டனை தருவர்.
 
# 200. பேரின்பம்

கொலையே களவுகள் காமம் பொய்கூறல்
மலையான பாதகமாம் அவை நீக்கித்
தலையாம் சிவனடி சார்ந்து இன்பம் சார்ந்தோர்க்கு
இலையாம் இவை ஞானானந்தத்து இருத்தலே.

கொலை, களவு, கள், காமம், பொய் பேசுதல்
இவை ஐம் பெரும் பாவங்கள் எனப்படும்.
இவற்றை விலக்கி விட்டுத் தம் தலையால் சிவன் திருவடியைச்
சார்ந்தவர்கள் எப்போதும் பேரின்பத்தில் திளைத்து இருக்கலாம்.
இப்பாவங்களும் அவற்றால் விளையும் துன்பங்களும் அவர்களைப் பற்றா
 
8. பிறர் மனை நயவாமை

# 201. பலாக்கனி

ஆத்த மனையாள் அகத்தே இருக்கவே
காத்த மனையாளைக் காமுறு காளையர்
காய்ச்ச பாலாவின் கனி உண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடர் உற்றவாறே.

அன்பு கொண்ட தன் மனைவி வீட்டில் இருக்கும் போது,
அவளை விடுத்து பிறன் ஒருவனால் காக்கப்படும்
அவன் மனைவியை ஒருவன் விரும்புவது
வீட்டில் உள்ள பழுத்த பலாக் கனியை உண்டு இன்புறாமல்
காட்டில் உள்ள ஈச்சம் பழத்திற்காக துன்பம் அடைவது போன்றது.
 
#202. தேமாங்கனி

திருத்தி வளர்த்தது ஓர் தேமாங்கனியை
அருத்தம் என்று எண்ணி அறையில் புதைத்துப்
பொருத்தம் இலாத புளிமாங்கொம்பு ஏறிக்
கருத்து அறியாதவர் கால்அற்ற வாறே.

நன்றாக வளர்க்கப் பட்ட தேமாங்கனி போன்றவள் தன் மனைவி.
அவளை ஒரு சேமிக்கும் பொருளாக கருதி, வீட்டில் புதைத்து விட்டு,
பொருத்தம் இல்லாத புளியம்பழத்தை உண்பதற்கு மரம் ஏறிவிட்டு,
கருத்து தெளிவு இன்றி மனிதர்கள் வருத்தம் அடைகின்றாகளே.
 
# 203. மாதர் ஆசை பொருள் கொண்ட கண்டனும் போதத்தை ஆளும்
இருள் கொண்ட மின்வெளி கொண்டு நின்றோரும்
மருள் கொண்ட மாதர் மயல் உறுவார்கள்
மருள் கொண்ட சிந்தையை மாற்றகில்லாரே.


பொருள் மீது பற்றுக் கொண்டவர்களும், அறிவை மறைக்கும்
அறியாமை என்ற இருளில் தோன்றிய சிறு ஒளியைப் போன்ற
அறிவினைப் பெரிதாக மதிப்பவர்களும், மருண்ட பார்வை உடைய
மங்கையரிடம் மயங்குவர். அவர்கள் அந்த மயக்கத்தை மாற்ற முடியாது.
 
9. (பொது) மகளிர் இழிவு

# 204. எட்டிப் பழம்

இலைநல ஆயினும் எட்டி பழுத்தால்
குலைநல ஆம் கனி கொண்டு உணல் ஆகா
முலைநலம் கொண்டு முறுவல் செய்வார் மேல்
விலகுறும் நெஞ்சினை வெய்து கொள்ளீரே.

எட்டியின் இலை அழகானதாக இருக்கலாம் .
எட்டி குலை குலையாகப் பழுக்கலாம்
ஆயினும் கவர்ச்சியில் மயங்கி அந்த எட்டிக் கனியை உண்ணல் ஆகாது.
அது போன்றே தம் அங்கங்களின் அழகைக் காட்டியும், புன்முறுவல் பூத்தும்,
வசீகரிக்கும் பொது மகளிரிடம் மயங்காமல் விலகிச் செல்ல வேண்டும்.
அந்தப் பெண்களை நாடுகின்ற மனத்தையும் முயன்று அடக்க வேண்டும்.
 
# 205. மங்கையர் அன்பு
மனைபுகுவார்கள் மனைவியை நாடில்
சுனைபுகு நீர்போல் சுழித்துடன் வாங்கும்
கனவதுபோலக் கசிந்தெழும் இன்பம்
நனவது போலவும் நாட வொண்ணாதே.

அயலார் மனையில் புகுந்து அவர் மனைவியை நாடுவது ஒருவனை
நீரில் மூழ்குபவனை மலைச்சுனையில் புகுந்த நீர் போலச் சிக்க வைக்கும்.
கனவு போன்ற தோற்றம் தந்து, அவர்கள் மீது தோன்றுகின்ற சிறு அன்பை,
நனவு போல உண்மையானதாக எண்ணி அவர்களை நாடக் கூடாது.
 
# 206. அகன்று ஒழிவர்

இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
புயல்உறும் புல்லின் புணர்ந்தவரேயினும்
மயல்உறும் வானவர் சார இரும் என்பர்
அயல்உறப் பேசி அகன்று ஒழிந்தாரே.

இளம் பெண் யானைய நிகர்த்த பொது மகளிர், ஒருவனால்
மழை நீர் கொண்ட புல்லைப் போலத் தழைத்திருந்தாலும்,
மையல் கொண்டு தேவன் போன்ற புதிய ஒருவன் வந்துவிட்டால்,
முன்பே தன்னைப் புணர்ந்தவனை வெளியே இருக்கச் சொல்வார்கள்.
 
# 207. கரும்புச் சாறா? வேம்பா?

வையகத்தே மடவாரொடும் கூடி ஏன்
மெய்யகத்தோரும் வைத்த விதி அது
கையகத்தே கரும்பாலையின் சாறு கொள்
மெய் அகத்தே பெரும் வேம்பது ஆமே.

உலகில் மங்கையரோடு உறவாடுவதால் என்ன பயன்?
மெய்ப்பொருளை உணர்ந்த ஞானியர் கூறுவது இதுவே.
மங்கையர் புணர்ச்சி வெளியே கரும்பின் சாறு போல இனித்தாலும்
உண்மையில் அது உடல் உள்ளே வேம்பைப் போல கசப்பது ஆகும்.
 
# 208. ஆசையால் அழிவர்

கோழை ஒழுக்கம் குளமூடு பாசியில்
ஆழ நடுவர் அளப்பு உறுவார்களைத்
தாழத் துடக்கித் தடுக்ககில்லாவிடில்
பூழைநுழைந்து அவர் போகின்றவாரே.

ஆடவர்கள் தம் சுக்கிலத்தைப் பெண்களின் அழுக்கான
பாசி மூடிய குளம் போன்ற கருக்குழியில் விடுவார்கள்.
அதனால் இன்பம் அடைவார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தாவிடில்
சிறு பாதைகளில் ஒளிந்து மறைந்து சென்றாவது அழிவை நாடுவார்கள்.




 
10. நல்குரவு ( வறுமை )

# 209. வாழ்க்கை போய்விடும்

புடவை கிழிந்தது; போயிற்று வாழ்க்கை;
அடையப் பட்டார்களும் அன்புஇலர் ஆனார்;
கொடை இல்லை; கோள் இல்லை; கொண்டாட்டம் இல்லை;
நடை இல்லை நாட்டில் இயங்குகின்றார்கட்கே.

உடுத்துக் கிழிந்து போன ஆடை பயனற்றது ஆகும்.
அதுபோன்றே வறியவர் வாழ்வும் பயனற்றதுஆகும்.
உறவினர்கள் அன்பு இல்லாமல் விலகிச் சென்று விடுவர்.
கொடுக்கல் வாங்கல் என்று எதுவும் அவர்களிடையே மிஞ்சாது.
கொண்டாட்டமோ, குதூகலமோ, மகிழ்ச்சியோ வாழ்வில் இராது..
நாட்டில் வாழ்பவர் ஆயினும் அவர் காட்டில் வாழ்பவரைப் போல்
தனிமைப் படுத்தப் படுவர் அவர் வறுமையின் காரணமாக.
 
#210. இறைவனை ஏத்துமின்

பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்று
அக்குழி தூர்க்கும் அரும் பண்டம் தேடுவீர்!
எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
அக்குழி தூரும் அழுக்கு அற்றபோதே.


பொழுது புலர்ந்ததும் வயிற்ரை நிரப்புவதற்கு
உணவைத் தேடி அலையும் மனிதர்களே!
எந்தக் குழியை நிரப்பியாவது இறைவனின் புகழைத் தேடுங்கள்.
பிறவிக்குக் காரணம் ஆன வினைகள் அகன்று போய்விட்டால்
அதன் பின்னர் வயிற்றுக் குழி தானே நிரம்பி விடும் அறிவீர்.
 

Latest ads

Back
Top