• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

I thank the reader of this thread for the increase in the trafic.

The number of views on 7th inst was ~ 400.

I had my own doubts when i started posting thirumanthiram

as to how many people don' care care for
1. Tamil poems,
2. Lord siva,
3. Dry philosoiphy

it has been proved that peopel still love tamil poems,
and lord siva and try to undertand dry philosophy.

Thank you very much! :pray2:
 
# 231. அந்தணன் அன்று

சத்திய மின்றித் தனிஞானந் தானின்றி
ஒத்தவிடயம் விட்டோரும் உணர்வின்றிப்
பக்தியும் இன்றிப் பரனுண்மை இன்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே.

மெய்ப் பொருளைப் பற்றிய அறிவு இல்லாதவர்கள்,
தன்னைப் பற்றிய அறிவும் சிறிதும் இல்லாதவர்கள்,
ஆசைகளைத் துறந்து அதன் மூலம் உண்மையை
உணரும் உணர்வு சிறிதும் இல்லாதவர்கள்;
உண்மையான பக்தி என்பது இல்லாதவர்கள்;
மேலான உண்மைப் பொருள் ஒன்று உண்டு
என்ற மனத் தெளிவும் இல்லாதவர்கள்;
அறியாமையிலே ஆழ்ந்திருப்பவர்கள் இவர்கள்
உண்மையான அந்தணர்கள் ஆக மாட்டார்கள்.
 
# 232. புறக் கிரியைகள்

திரநெறி ஆகிய சித்துஅசித்து இன்றிக்
குரநெறி யாலே குருபதம் சேர்ந்து
கரும நியமாதி கைவிட்டுக் காணும்
துரிய சமாதியாம் தூய மறை யோர்க்கே.


அறிவு, அறியாமை, இரண்டும் இல்லாதவர்கள்;
குருவின் உபதேசத்தால் திருவடி அடைந்தவர்கள்,
பிரணவ நெறியில் நின்று அருட்செல்வம் ஈட்டியவர்கள்,
புறக்கிரியைகளை விட்டு துரிய நிலையில் பொருந்தி நிற்பர்.
 
# 233. வேதம் மட்டுமே ஓத வேண்டும்

மறையோ ரவரே மறையவ ரானால்
மறையோர்தம் வேதாந்தம் வாய்மையில் தூய்மை
குறையோர் தன் மற்றுள்ள கோலாகலமென்று
அறிவோர் மறைய தெரிந்தணராமே.

வேதங்களின் பொருளை உணர்ந்து ஓதுகின்றவரே அந்தணர்.
தூய்மையானது மறைகளின் முடிவாகிய வேதாந்தமே ஆகும்.
வேதத்தைத் தவிர்த்து மற்ற நூல்கள் அனைத்தும் குறையுடையவை.
அவற்றைக் கற்பதனால் எந்த விதப் பயனும் இல்லை.
அந்தணர்கள் வேதத்தை மட்டுமே ஓத வேண்டும்.
ஆரவாரமான மற்றவற்றைத் தவிர்த்து விட வேண்டும்.
 
# 234. உண்மை அந்தணர்

அந்தண்மை பூண்ட அருமறையந்தத்துச்
சிந்தைசெய் அந்தணர் சேருஞ் செழும்புவி
நந்துத லில்லை நரபதி நன்றாகும்
அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே.


உண்மையான அந்தணர்கள் என்பவர் இவர்களே!
எல்லா உயிர்களிடத்தும் கருணை உள்ளம் கொண்டவர்கள்.
வேதங்களின் முடிவாகிய சிவனை இடையறாது சிந்தை செய்பவர்கள்.
இவர்கள் இருக்கும் பூமி வளமானது ஆகும்; வளம் குன்றவே குன்றாது!
இவர்கள் நாட்டை ஆளும் தலைவனும் நல்லவன் ஆவான்.
அந்தணர்கள் தினம் தவறாமல் இருமுறை ஆகுதி செய்வார்கள்.
 
# 235. முக்தியும், சித்தியும் எய்துவர்!

வேதாந்த ஞானம் விளங்க விதி இலோர்
நாதாந்த போதம் நணுகிய போக்கது
போதாந்த மாம்பரன் பால்புகப் புக்கதால்
நாதாந்த முத்தியும் சித்தியு நண்ணுமே.

வேதாந்த ஞானம் பெறுகின்ற நல்வினைப் பயன் இல்லாதவர்கள்
நாதாந்தத்தில் உள்ள முக்தியாகிய பதத்தினை அடைவார்கள்.
அறிவின் எல்லையாகிய ஞானம் அடைந்தவர்கள் அதன் மூலம்
பரத்தை அடைந்தால் அடைவர் நாதாந்த முக்தியுடன் சித்தியும்.
 
#236. சிவனை நாடுவர்

ஒன்று மிரண்டு மொருங்கிய காலத்து
நன்றும் இருந்தும் நலம்பல பேசினும்
வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர்
சென்று வணங்கும் திருவுடையோரே.

பிராணன், உள்வாங்கும் மூச்சு, வெளிவிடும் மூச்சு
இவை அடங்கும் போது நன்றாக இருந்து கொண்டு
நல்லவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தாலும்
எல்லாவற்றுக்கும் மேலான முக்தியை விழைபவர்கள்
எல்லாவற்றையும் கடந்து விளங்கும் சிவனையே நாடுவார்கள்.
 
# 237. பற்று நீங்கும்

தானே விடும் பற்று இரண்டும் தரித்திட
'நானே' விடப்படும் ஏது ஒன்றை நாடாது;
பூமேவு நான்முகன் புண்ணியப் போகனாய்
'ஓம்' மேவும் ஓராகுதி அவி உண்ணவே.

இறைவனை நினைக்க நினைக்க அகன்று விடும்
'நான்' என்ற அகப் பற்றும், 'எனது' என்ற புறப் பற்றும்.
அஹங்காரம் முற்றிலும் அழிந்து போகும்.
பிறகு
பொருட்களில் உள்ள நாட்டம் போய்விடும்.
தாமரை மலரில அம்ர்ந்துள்ள பிரம்மனைப் போல
புண்ணியம் ஒன்றையே நாடி ஆகுதிகள் செய்து, வேள்வி
அவியை உண்டால் ஓம் ஆகிய சிவனே வந்து பொருந்துவான்.
 
13. ராச தோடம் (அரசனின் குற்றங்கள்)

# 238. காலன் நல்லவன்!

கல்லா அரசனும் காலனும் நேர் ஒப்பர்
கல்லா அரசனிற் காலன் மிக நல்லன்
கல்லா அரசன் அறம் ஓரான் கொல் என்பான்
நல்லாரைக் காலன் நணுக நில்லானே.

கற்க வேண்டியவற்றைக் கற்று அறியாத மன்னனும்
உயிர்களைப் பறிக்கும் காலனும் ஒப்பானவர்கள் ஆவர்.
கல்வி அறிவு பெறாத மன்னனைவிடக் காலன் நல்லவன்.
கல்வி கற்காத மன்னன் அறவழியில் நில்லான்.
"நல்லவர்களைக் கொல்!" என்று ஆணையிடுவான்.
காலன் நல் வழியில் நிற்பவர்களை அணுக மாட்டான்.
 
# 239. வளம் குறையும்

நாள்தோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாள்தோறும் நாடி அவநெறி நாடானேல்
நாள்தோறும் நாடு கெட மூடம் நண்ணுமால்
நாள்தோறும் செல்வம் நரபதி குன்றுமே.

மன்னன் நாள்தோறும் நன்நெறியை ஆராய வேண்டும்.
நாள்தோறும் அவன் நீதி நெறிப்படி ஆட்சி செய்ய வேண்டும்.
அப்படிச் செய்யத் தவறினால் அந்த நாட்டின் வளம்
நாள் தோறும் குன்றிக் குறைந்து போய்விடும்.
மக்களிடம் அறியாமை பெருகிவிடும்.
மன்னனின் செல்வம் குறைந்து விடும்
 
# 240. வேடமும் நெறியும்

வேடநெறி நில்லார் வேடம்பூண்டு என்பயன்
வேடநெறி நிற்போர் வேடம் மெய்வேடமே
வேடநெறி நில்லார் தம்மை விறல்வேந்தன்
வேடநெறி செய்தால் வீடுஅது ஆமே.

ஏற்றக் கொண்ட வேடத்துக்கு ஏற்ப ஒருவனின்
அகமும் புறமும் ஒத்து இருக்காவிட்டால் அவன்
புனைந்து கொண்ட வேடத்தால் என்ன பயன்?
ஏற்றுக் கொண்ட வேடத்துக்கு ஏற்ப நிற்பவர் வேடமே
உண்மையில் அதற்கேற்ற பயனைத் தருவது கண்கூடு.
வேடத்துக்கு ஏற்ப நடக்காதவரைக் கண்டித்தும் தண்டித்து, அவனை
நல்வழியில் நிற்கச் செய்யும் மன்னனுக்கு வீடு பேறு கிடைக்கும்.
 
# 241. வேண்டாம் ஆடம்பரம்

மூடங் கொடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
பீடொன் றிலனாகு மாதலாற் பேர்த்துணர்ந்து
ஆடம் பரநூல் சிகையறுத் தானன்றே.

அறியாமை நீங்கப் பெறாதவர்கள் அந்தணருக்குரிய
சிகை, பூணூல் முதலியவற்றை கைக் கொண்டால்
அந்தச் செய்கையால் வருந்தும் இந்த மண்ணுலகு!
மன்னனின் பெருவாழ்வும், பெருமையும் அழிந்துவிடும்.
ஏற்கும் வேடத்தின் உண்மைத் தன்மையை நன்கு ஆராய்ந்து
அறிந்துகொண்டு, வெறும் ஆடம்பரத்துக்காக அணிந்து கொண்டுள்ள
பூணூலையும், சிகையையும் துறந்து விடுவது நாட்டுக்கு நன்மை தரும்.
 
#242. சோதிக்க வேண்டும்

ஞானமி லாதார் சாடி சிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடக்கின் றவர்தமை
ஞானிகளாலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டுக்கே.

ஞானம் அடையாதவர்கள் வெறுமனே வேடம் அணிந்து கொண்டு,
சடை, குடுமி, பூணூல் இவற்றுடன் ஞானிகள் போல நடமாடினால்,
அரசன் ஞானியரைக் கொண்டே அவர்களை நன்கு சோதிக்க வேண்டும்.
அவர்களை ஞானம் பெறுமாறு செய்வது நாட்டுக்கு நலம் பயக்கும்.
 
# 243. மீளா நரகம்

ஆவையும், பாவையும், மற்றுஅற வோரையும்,

தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன்; காவது ஒழிவானேல்
மேவும் மறுமைக்கும் மீளாநரகமே.

ஆவினம், பெண்கள், அறவழியில் நிற்பவர்கள்,
தேவர்களும் தொழும் திருவேடம் புனைந்தவர்கள்,
இவர்களை ஒரு மன்னன் காப்பாற்ற வேண்டும்.
அங்ஙனம் காக்கத் தவறி விட்ட மன்னன்
மீள முடியாத நரகத்தைச் சென்று அடைவான்.
 
# 244. ஆறில் ஒரு பங்கு

திறம்தரு முத்தியும் செல்வமும் வேண்டின்
மறந்தும் அறநெறியே ஆற்றல் வேண்டும்;
சிறந்தநீர் ஞாலம் செய்தொழில் யாவையும்
அறைந்திடில் வேந்தனுக்கு ஆறில் ஒன்று ஆமே.

மறுமையில் முக்தியையும், இம்மையில் செல்வமும்,
பெற விரும்புகின்ற ஒரு மன்னன் செய்ய வேண்டியது இது.
அவன் அறத்தையே எப்போதும் நிலை நாட்ட வேண்டும்.
கடல் சூழுலகில் மக்கள் செய்யும் நல்வினைகள் தீவினைகள்
அனைத்திலும் ஆறில் ஒரு பங்கு அரசனையே சாரும்.
 
#245. மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி!

வேந்தன் உலகைக் மிக நன்று காப்பது
வாய்ந்த மனிதர்கள் அவ்வழியா நிற்பர்;
பேர்ந்து இவ்உலகைப் பிறர் கொள்ளத் தாங்கொள்ளப்
பாய்ந்த புலி அன்ன பாவகத்தானே.

மன்னன் உலகைக் காக்கும் திறன் மிகவும் நன்றாக உள்ளது.
அவன் நாட்டு மக்களும் அவனைப் போலவே இருப்பார்கள்.
பகைமை பூண்ட அயல் நாட்டு மன்னன் இவன் நாட்டைக் கைப்பற்றுவான். அதே போன்று இவன் அயல் நாட்டைக் கைப் பற்றுவான். விளைவுகளை ஆராயாது பாய்கின்ற மன்னனுக்கும் பாய்கின்ற காட்டுப் புலிக்கும் என்ன வேறுபாடு உள்ளது?
 
cleardot.gif


#246. வேந்தர் கடன்

கால்கொண்டு கட்டிக் கனல் கொண்டு மேலேற்றிப்
பால் கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
மால்கொண்டு தேறலை யுண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ் செய்வேந்தன் கடனே.


மூச்சுக் காற்றின் இயக்கத்தைத் தடுக்க வேண்டும்.
மூலாதாரத்தில் உள்ள கனலை மேலேற்ற வேண்டும்.
பால் போன்று நிலவும் வெண்ணிற ஒளியின் உதவியால்
மதி மண்டலத்தைக் கண்டு கொள்ள வேண்டும்.
அங்கு பொழியும் ஆனந்தத் தேனைப் பருக வேண்டும்.
இதை விட்டு விட்டு ஆனந்தம் தரும் என்று மயங்கி,
மயக்கம் தரும் கள்ளை அருந்தி மேலும் மயங்காமல்,
மக்களைக் காப்பது ஒரு நல்ல மன்னனின் கடமை ஆகும்.


 
cleardot.gif


#247. சமயவாதிகள்

தத்தம் சமயத் தகுதி நில் லாதாரை
அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண் டமும்செயும் அம்மையில் இம்மைக்கே
மெய்த்தண் டம்செய்வது அவ் வேந்தன் கடனே.

தங்களுக்கு உரிய சமய நெறியில் நிற்காதவர்களைச் சிவபெருமான்
ஆகம நெறிப்படி மறு பிறவியில் தண்டனை தந்து திருந்துவான்.
இந்தப் பிறவிலேயே தகுந்த தண்டனை தந்து அவர்களைத் திருத்துவது
ஒரு நல்ல மன்னனின் கடமைகளில் ஒன்று ஆகும்.
 
14. வானச் சிறப்பு.

#248. அமுதூறு மாமழை


அமுதூறு மாமழை நீரத னாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுதூறுங் காஞ்சிரை ஆங்கது வாமே.

அமுதம் போன்ற மழைப் பொழிவினால் உலகம்
எங்கும் வளமையும் பசுமையும் பெருகும்.
சுவையான கனிகள் கொண்ட மரங்கள் வளரும்.
பாக்கு, இளநீர் தரும் தெங்கு, கரும்பு, வாழை இவற்றோடு
சமாதி நிலைக்கான மூலிகை காஞ்சிரையும் தோன்றி வளரும்.
 
#249. நுரையும் கரையும் இல்லை

வரை இடைநின்றுஇழி வான்நீர் அருவி
உரை இல்லை, உள்ளத்து அகத்து நின்று ஊறும்;
நுரை இல்லை, மாசு இல்லை, நுண்ணிது தெள்நீர்;
கரை இல்லை எந்தை கழுமணி ஆறே.

சிவனின் தலை ஆகிய மலையில் இருந்து பெருகுவது ஒளிமயமான கங்கை.
அதன் பெருமையை உரைப்பதற்குப் பொருத்தமான வார்த்தைகள் இல்லை.
உள்ளத்தில் அன்பினால் ஊறுவதனால் அதில் நுரை இருக்காது; மாசு இருக்காது; தெளிந்த அந்த நீர் கரையில்லாதது; பரந்து அகன்று ஓடுவது; பாவங்களை அழிப்பது.


 
15. தானச் சிறப்பு

#250. ஒல்லை உண்ணன்மின்


ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன்மின்
பார்த்து இருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை உடையீர் விரைந்து ஒல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்து உண்ணும் காலம் அறிமினே.

எல்லோருக்கும் கொடுங்கள். "அவர் உயர்ந்தவர்!
இவர் தாழ்ந்தவர்" என்று வேறுபடுத்திப் பேசாதீர்கள்.
வரும் விருந்தாளியை எதிர் நோக்கி இருங்கள்.
அவருடன் சேர்ந்து உணவைப் பகிர்ந்து உண்ணுங்கள்.
பழைய உணவைப் போற்றிக் காவாதீர்கள்.
இம்மையிலும் மறுமையிலும் விருப்பம் கொண்டவர்களே!
விரைவாக உணவை உண்ண வேண்டாம் .
காகங்கள் கூட உண்ணும் பொழுது தன் இனத்தைக் கரைந்து
அழைத்து உணவைப் பகிர்ந்து உண்ணும் என்பதை அறிவீர்

 

Latest posts

Latest ads

Back
Top