• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

319. தொடர்பு அறியார்!

ஆதிப்பிரான் அமரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெருந் தெய்வம்
ஓதி உணர வல்லோம் என்பர், உள்நின்ற
சோதி நடத்தும் தொடர்வு அறியாரே.

ஆதிப்பிரான் ஆகிய சிவபெருமான் எல்லோருக்கும் தலைவன். தேவர்களுக்கும் அவன் மங்காத ஒளியாகத் திகழ்கிறான். அடியார்கள் தேடி வரும் பெருந் தெய்வமாக இருக்கின்றான். அவனைக் கல்வி கற்பதன் மூலம் அறிந்து கொள்வேன் என்பவன் தனக்குள் இருந்து கொண்டு தன்னை நடத்தும் அந்த சோதிக்கும் தனக்கும் என்ன தொடர்பு என்ற உணமையை அறியாதவன்.
 
[h=1]23. நடுவுநிலைமை[/h]
#320. ஞானம் பெற்றவர்


நடுவு நின்றார்க்கன்றி ஞானமுமில்லை
நடுவு நின்றார்க்கு நரகமுமில்லை
நடுவு நின்றார் நல்ல தேவருமாவர்
நடுவு நின்றார் வழி நானும் நின்றேனே


சஹஸ்ர தளத்தின் நடுவில் நிற்காதவர்களுக்கு ஞானம் கிடைக்காது.
சஹஸ்ர தளத்தின் நடுவில் நிற்பவர்களுக்கு நரகமும் கிட்டாது.
இங்ஙனம் நடுவில் நின்றவர் நல்ல தேவர்களாக ஆகி விடுவர்.
நடுவே நிற்கும் அடியவர்களின் நடுவே நானும் நின்றேனே
 
#321. நடுவு நின்றான் சிவன்

நடுவு நின்றான் நல்ல கார்முகில் வண்ணன்,

நடுவு நின்றான் நல்ல நான் மறை ஓதி
நடுவு நின்றார் சிலர் ஞானியர் ஆவோர்.
நடுவு நின்றான் நல்ல நம்பனும் ஆமே.

காக்கும் தன்மையால் நடுவில் நின்றான் கரிய நிறம் கொண்ட திருமால். படைக்கும் தன்மையால் நடுவில் நின்றான் நான்முகன். நடுவில் நின்றவர்கள் சிலர் சிவஞானிகள் ஆவோர். நடுவு நின்றார் சிவபெருமான் ஆகித் திகழ்வார்.
 
#322.நானும் நடுவு நின்றேன்

நடுவு நின்றார் சிலர் ஞானிகளாவர்
நடுவு நின்றார் சிலர் தேவருமாவர்
நடுவு நின்றார் சிலர் நம்பனுமாவர்
நடுவு நின்றாரொடு நானும் நின்றேனே.

சிவ நினைவுடன் சஹஸ்ர தளத்தின் நடுவில் நின்றவர்
அதன் பயனாக சிவ ஞானிகளாக ஆகி விடுவார்கள்.
அதன் பிறகு தேவர்களாகவும் ஆகி விடுவார்கள்
அதன் பின்பு சிலர் சிவனாகவே மாறி விடுவர்.
அத்தகையவர்களோடு நானும் கூடி நின்றேனே.
 
#323. நடுவு நிற்பதன் பயன்

தோன்றிய எல்லாம் துடைப்பன் அவன்

ஏன்று நின்ற ரென்று மீசனிணை யடி
மூன்று நின்றார் முதல்வன் திரு நாமத்தை
தான்று நின்றார் நடுவாகி நின்றாரே.

தோன்றிய எல்லாவற்றையும் அழிப்பவன் சிவன். பொருட்களின் முடிவைத் தருபவன் அவனே. என்றும் அவன் இணையடிகளை ஏற்று நிற்கின்றவர்கள் நடுவில் நிற்பவர்கள் ஆவர். அந்தப் பெருமானின் திருநாமத்தைக் கூறுபவர்களும் நடுவில் நின்றவர்களே. அவர்கள் அரிய யோகநித்திரையில் இருக்கும் பயனை அடைவர்.
 
24. கள்ளுண்ணாமை

#324. சிவானந்தத் தேறல்
கழுநீர் பசுப்பெறில் கயம்தொறும் தேரா;
கழுநீர் விடாய்த்துத் தம் காயம் சுருக்கும்;
முழுநீர்க் கள் உண்போர் முறைமை அகன்றோர்,
செழுநீர்ச் சிவன் சிவானந்தத் தேறலே.


குடிப்பதற்குக் கழுநீர் கிடைத்துவிட்டால் அதன் பிறகு பசுக்கள் குடிநீரைத் தேடிக் குளங்களுக்குச் செல்லா. அவை கழுநீரை வேண்டித் தாகத்தால் காத்திருந்து உடலை வருத்திக் கொள்ளும். சிவானந்தத் தேறல் வாழ்க்கைக்கு வளமை இனிய தரும் மதுவாகும். அதை அருந்தாமல் மயக்கம் தரும் மதுவை உண்பவர் நல்லொழுக்கத்திலிருந்து பிறழ்ந்தவர்கள் ஆவர்.
 
#325. தாழ்ந்த செயல்கள்

சித்தம் உருக்கிச் சிவம் ஆம் சமாதியில்
ஒத்த சிவானந்தம் ஓவாத தேறலைச்
சுத்தமது உண்ணச் சிவானந்தம் விட்டிடா
நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ்க்காலே.

சித்தத்தை உருக்கவேண்டும் அதனைச் சிவத்தின் மீது அன்புடன் செலுத்துவதன் மூலம். சமாதி நிலையில் சிவானந்தம் என்னும் மாறாத சுத்தமானத் தேறலை அருந்த வேண்டும். அந்த நிலையில் அந்தப் பேரானந்தம் நம்மை விட்டு நீங்காது நிலைத்து நிற்கும். அதை ஒழித்துவிட்டு சிவனின் நினைவே இல்லாமல் நிற்பதும், நடப்பதும், கிடப்பதும் தாழ்ந்த செயல்கள் ஆகும்.
 
#326. ஆனந்தத் தேறல்


காமமும் கள்ளும் கலதிகட்கே ஆகும்;
மாமல மும்சமயத்துள் மயல் உறும்
போமதி ஆகும் புனிதன் இணையடி
ஓமய ஆனந்தத் தேறல் உணர்வு உண்டே.

கீழ் மக்களுக்கு உரியவை காமமும் கள்ளும். பெரிய மலமாகிய ஆணவ மலம் ஒருவன் சமயத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாதபடி மயக்கத்தை ஏற்படுத்தும். அறிவைக் கெடுத்து விடும். சிவபெருமானின் இணையடிகள் தொடர்பினால் அருந்தும் பிரணவ மயமான தேன் உணர்வைக் கொடுக்கும்; கெடுக்காது.
 
#327. சிவன் நாம மகிமை

வாமத்தோர் தாமும் மது உண்டு மாள்வர்
காமத்தோர் காமக்கள் உண்டே கலங்குவர்
ஓமத்தோர் உள்ளொளிக் குள்ளே உணர்வர்கள்
நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே.



வாமாசாரம் என்னும் முறைப்படி சக்தியை வழிபடுகின்றவர்கள் தாமும் மது அருந்தி அழிந்து போவர். காம லீலைகளில் ஈடுபடுவோர் அந்தக் காமத்தின் மயக்கத்திலே அழிந்து போவர். சிவன் நாமங்களைச் சொல்லி ஓமம் செய்கின்றவர்கள் தம் சிரசில் வெளிப்படும் சிவ ஒளியில் தம் உணர்வைக் கொண்டு நிறுத்தி மகிழ்ச்சி அடைவர். சிவன் நாம மகிமையை அறிந்து கொண்டவர் சிவனிடம் நெருங்கும் இன்பதைப் பெறுவார்கள்.
 
#328. கருத்து அறியார்

உள்உண்மை ஓரார் உணரார் பசுபாசம்

வல்லன்மை நாதன் அருளினின் வாழ்வுறார்
தெள்உண்மை ஞானச் சிவயோகம் சேர்வுறார்;
கள்உண்ணும் மாந்தர் கருத்து அறியாரே.

வேதங்கள் ஆகமங்கள் கூறும் மறைந்துள்ள உண்மைகளை அறியாதவர்களால் பசு பதி பாசம் இவற்றின் தொடர்பினைப் புரிந்து கொள்ள முடியாது. விரும்புகின்ற எல்லாவற்றையும் அள்ளித் தரும் வள்ளல் ஆவான் சிவபெருமான். அவன் அருளைத் துணையாகக் கொண்டு வாழ மாட்டார்கள் இவர்கள். தெளிந்த சிவ யோகத்தில் நிலைத்து நிற்கவும் அறியார். மனத்தை மயக்கிக் கெடுக்கும் கள்ளை அருந்துபவர்கள் இந்த கருத்துக்களை அறிய மாட்டார்கள்.
 
#329. மாமாயை

மயக்கும் சமய மலம் மன்னும் மூடர்
மயக்கும் மது உண்ணும் மாமூடர் தேரார்
மயக்கு உறு மாமாயை மாயையின் வீடும்
மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே.

சமயக் கோட்பாடுகள் மனதை மயக்க வல்லவை. சமயக் குற்றங்கள் புரிகின்ற மகா மூடர்கள் சமயத்தின் பெயரில் அறிவை மயக்கும் மதுவை அருந்துகின்றார்கள். இவர்கள் நல்ல வழியை ஆராயும் திறன் அற்றவர்கள். மயக்கத்தைத் தரும் மகாமாயை தான் மாயையின் இருப்பிடம் என்பர். மயக்கத்தை ஒழித்து வெளியே வந்த போதிலும் வாமாசார வழிபாடு மீண்டும் மீண்டும் மயக்கத்தில் அவர்களைக் கொண்டு தள்ளி விடும். உயரிய சிவானந்தத்தை அருளாது.
 
330. இடையறா ஆனந்தம்

மயங்கும், தியங்கும், கள் வாய்மை அழிக்கும்,
இயங்கும் மடவார் தம் இன்பமே எய்தி
முயங்கும்; நயம் கொண்ட ஞானத்து முந்தார்
இயங்கும் இடை அறா ஆனந்தம் எய்துமே.

கள் அருந்தும் பழக்கம் மனிதனின் மனதை மயக்கும்; வீணாகக் கவலை அடையச் செய்யும்; பெண்கள் தரும் இன்பத்தை நாடச் செய்யும்; கள் அருந்துபவர்கள் நல்ல ஞானத்தை அடைய முயல மாட்டார்கள்; இடையறாத சிவானந்தப் பேரின்பம் அவர்களுக்கு கிடைக்குமோ? ஒரு நாளும் கிடைக்காது!
 
331. நீங்கா இன்பம்


இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்குஅற ஆனந்தத் தேறல் பருகார்
இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டு இடத்தேனே

இரவு பகல் என்ற பேதம் இல்லாத இடம் தன்னை மறந்த சாக்கிரத அதீத நிலை. அங்கே இருந்து கொண்டு வேறு எண்ணங்கள் எதுவும் இல்லாமல் சிவானந்தத் தேனை பருகும் வல்லமை இந்த உலகத்தவருக்கு இருக்காது. இரவும் பகலும் இல்லாத திருவடி இன்பத்தில் நான் திளைத்தேன். சுத்த மாயை, அசுத்த மாயை என்னும் இரவும் பகலும் உள்ளவற்றை நான் நீக்கி விட்டேன்.
 
332. ஞான ஆனந்தம்

சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்உண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறந்ததால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞான ஆனந்தத்தில் சார்தலே.

சக்தியை வழிபடுவோர் அவள் அருளை வேண்டிக் கள் உண்பர். அவர்கள் மது அருந்தித் தம்மை மறப்பதால் அறிவு தன் சக்தியை இழந்து விடுகிறது. உண்மையான சக்தியை அடைய விரும்பினால், சிவ ஞானத்தைப் பெற வேண்டும். அதில் நிலையாக இருந்து கொண்டு என்றும் நிலையானதாகிய, அறிவு மயமாகிய, ஆனந்த மயமாகிய ஒரே மெய்ப் பொருளை அடைய வேண்டும்.
 
#333. அஷ்ட மாசித்தி

சத்தன் அருள் தரின் சத்தி அருள் உண்டாம்;
சத்தி அருள்தரின் சாத்தான் அருள் உண்டாம்;
சத்தி சிவம் ஆம் இரண்டும்தன் உள்வைக்கச்
சத்தியும் எண் சித்தித் தன்மையும் ஆமே.

சக்திதேவியின் நாதன் சிவபெருமான் அருள் செய்தால் சக்திதேவியின் அருள் நமக்குக் கிடைக்கும். சக்திதேவி அருள் செய்தால் சிவன் அருள் கிடைக்கும். சக்தி சிவன் இவர்களின் இருப்பிடமான விந்து நாதத்தில் பொருந்தி இருந்தால், அவர்களுக்குச் சக்தியின் வடிவமும் கிடைக்கும். அஷ்ட மாசித்திகளும் தாமே வந்து பொருந்தும்.
 
334. சிவானந்தம்

தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தான்ஆகிப்
பொய்த்தவம் நீக்கி, மெய்ப் போகத்துள் போக்கியே
மெய்த்த சகம் உண்டுவிட்டுப் பரானந்தச்
சித்தி அது ஆக்கும் சிவானந்தத் தேறலே.


சிவானந்தம் என்னும் தேன் முப்பத்தாறு தத்துவங்களையும் கடக்கச் செய்யும். தானே தத்துவங்கள் என்று மயங்கும் அறிவை நீக்கிவிடும். . உபாயத்தினால் சிவத்தை அடையலாம் என்று எண்ணிச் செய்யும் பொய்த் தவங்களில் இருந்து விலக்கி விடும். உண்மையான சிவ யோகத்தில் கொண்டு சேர்க்கும். மெய் போலத் தோற்றம் அளிக்கும் இந்த உலகம் உண்மை இல்லை என்று உணரச் செய்யும். எல்லாவற்றுக்கும் மேலான பரமானந்தம் கிடைக்கச் செய்யும்.
 
335. மதத்தால் அழிவர்

யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப்
போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி
யோகியர்கள் உண்டு மூடராய் மோகம் உற்று
ஆகும் மதத்தால் அறிவழிந்தாரே.

சிவயோகிகள் மூச்சுக் காற்றைத் தம் வசப்படுத்துவார்கள். சந்திர மண்டலத்தில் இருந்து கொண்டு அமிர்தம் போன்ற சிவானந்தத்தை அருந்துவார்கள். ஞான அமிர்தம் பருகியதால் மேலும் மேன்மை பெறுவார்கள். ஆனால் எண் சித்திகளை விரும்பும் பிறர், கள்ளை அருந்தும் பற்றுதலால், மூடர்கள் ஆவதுடன் உள்ள அறிவையும் இழந்து நிற்பார்கள்.
 
#336. சுவாசத்தின் பாதை

உண்ணீர் அமுதம் உறும் ஊறளைத் திறந்து
எண்ணீர் குரவன் இணையடித் தாமரை
நண்ணீர் சமாதியின் நாடி நீரால் நலம்
கண்ஆற்றொடே சென்று கால்வழி காணுமே.


இறப்பினை மாற்றவல்ல அமிர்தம் ஊறும் ஊறலைத் திறந்து உண்ண மாட்டீர்கள் நீங்கள். சிவபெருமானுடைய இணையடிகளைச் சிறிதும் உள்ளத்தில் எண்ண மாட்டீர்கள் நீங்கள். சமாதி நிலையில் சிவஒளியுடன் பொருந்தி நிற்க மாட்டீர்கள் நீங்கள். கண்ணின் காரியமாகிய, நன்மை அளிக்கும் ஒளி நெறியைப் பின் தொடர்ந்தால், தலையில் சுவாசம் புகும் வழியையும் போகும் வழியையும் கண்டறியலாம்.

இத்துடன் முதல் தந்திரம் முற்றுப் பெற்றது.
 
திருமந்திரம் இரண்டாம் தந்திரம்


1. அகத்தியம் (உடலில் உள்ள நாதமே கத்தியம் ஆகும் )

#337. "நீ போய் முன் இரு!"

"நடுவு நில்லாது இவ்வுலகம் சரிந்து
கெடுகின்றது எம்பெருமான்" என்ன ஈசன்
"நடுவுள அங்கி அகத்திய, நீ போய்,
முடுக்கிய வையத்து முன்இரு" என்றானே.


"எம்பெருமானே! இந்த உலகத்தோர் நடுவில் உள்ள சுழுமுனையில் பொருந்தி நிற்பதில்லை. உலக முகமாக இருந்து கீழ் நிலைப்பட்டு கெடுகின்றனர்" என்று கூறினேன். உடனே இறைவன் கூறியது இதுவே. "மூலாதாரத்தின் நடுவே உள்ள அக்னி ஸ்வரூபமே! நீ சென்று ஜீவனின் தலையின் முன் பக்கம் பொருந்துவாய். விரைந்து ஒடும் ஜீவனைக் காப்பற்றுவாய்" என்றான்.
 
#338. இலங்கும் ஒளி தானே!

அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயம் செய் மேல்பாலவனொடும்
அங்கி உதயம் செய் வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் இலங்கு ஒளிதானே.


அகத்தியன் என்னும் சாதகன் அக்னிக் கலையின் வடிவாகிய நாதத்தைத் தலையின் முன் பக்கம் விளங்கச் செய்வான் அது அதற்குப் பிறகு தலையின் பின் புறமாகப் பரவி விரவும். தலையின் இடப்புறம் விளங்கும். அப்போது தவ முனிவனின் சிரசு முழுவதுமே ஒளிமயமாகி விடும்.
 

Latest ads

Back
Top