• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

திருமூலரின் திருமந்திரம்: இரண்டாம் தந்திரம்

13. அனுக்கிரகம்

உயிர்களைப் பிறக்கச் செய்து
அவை மல நீக்கம் பெறுவதற்கு
சதாசிவன் அருள்வது அனுக்கிரகம்.

#441. உடலும், உயிரும்

எட்டுத் திசையும் எறிகின்ற காற்றோடு

வட்டத் திரை அனல், மாநிலம், ஆகாயம்,
ஒட்டி உயிர்நிலை என்னும் இக்காயப்பை
கட்டி அவிழ்ப்பான் கண்ணுதல் காணுமே.

எட்டுத் திசைகளிலும் வீசும் காற்று. வட்டமாக உலகைச் சூழ்ந்துள்ளது கடல். இவேற்றோடு தீ, பூமி, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களைக் கலப்பது சதாசிவன். உடலுடன் உயிரைச் சேர்ப்பதும் பின்னர் உடலிலிருந்து உயிரைப் பிரிப்பதும் அவனே ஆவான்
 
#442. உயிர்களை உய்விப்பான்

உச்சியில் ஓங்கி ஒளி திகழ் நாதத்தை
நச்சியே இன்பம் கொள்வார்க்கு நமன் இல்லை

விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத்
தச்சும் அவனே சமைக்க வல்லானே.

தலை உச்சியில் பிரமரந்திரத்தில் விளங்கும் நாதத்தை விரும்புபவர்கள் உயர்ந்த இன்பத்தை அனுபவிப்பார்கள். அவர்களுக்கு இறப்பு என்பதே இல்லை. சூரியன், சந்திரன் அக்கினி என்று விரியும் மூன்று சுடர்களையும் ஒரே சுடர் ஆக்குபவன் சதாசிவன். உயிர்களை உய்விப்பவனும் அவனே.
 
#443. அசையாதன அசையும்!

குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்
குசவன் மனத்து உற்றது எல்லாம் வனைவன்
குசவனைப் போல் எங்கள் கோன் நந்தி வேண்டில்
அசைவில் உலகம் அது இது ஆமே.

சக்கரத்தில் வைத்த மண்ணைக் குயவன் தன் விருப்பம் போல வடிப்பான். சதாசிவனும் அது போன்றே. அவன் விரும்பினால் அசையாத பொருளும் அசையும் பொருள் ஆகிய ஆத்மாவாக மாறிவிடும்.
 
#444. உள்ளக் கோவில்

விடையுடையான் விகிர்தன் மிகு பூதப்

படையுடையான் பரிசே உலகு ஆக்கும்
கொடையுடையான் குணம் எண் குணம் ஆகும்
சடையுடையான் சிந்தை சார்ந்து நின்றானே.

காளையை ஊர்தியாகக் கொண்டவன் சதாசிவன். அவன் பிறப்பற்றவன். பூதங்களின் படையை உடையவன். தன் விருப்பம் போல உலகினை உருவாக்குவான். தன்னைப் பணிவோர் வேண்டுகின்ற வற்றை அவர்கள் வேண்டியவாறே அளிக்கும் கொடை வள்ளல். எண் குணம் உடையவன் சதாசிவன். சிந்தையில் குடி கொண்ட அவன் ஒளி வீசுகின்ற சடையை உடையவன்.
 
திருமூலரின் திருமந்திரம்: இரண்டாம் தந்திரம்

13. அனுக்கிரகம்

#445. இறைவன் படைத்தவை

உகந்து நின்று படைத்தான் உலகு ஏழும்
உகந்து நின்றே படைத்தான் பல ஊழி
உகந்து நின்றே படைத்தான் ஐந்துபூதம்
உகந்து நின்றே உயிர் ஊன் படைத்தானே.

மனம் உவந்த சதாசிவன் உலகத்தோர் வாழ்வதற்கு இறைவன் ஏழு உலகங்களைப் படைத்தான். அது போன்றே பலவேறு கற்பங்களையும் படைத்தான். உகந்து பஞ்ச பூதங்களையும் படைத்தான். உடலிலும், உயிரிலும் பொருந்தி ஜீவர்களுக்கு உதவி செய்தான்.
 
446. தலைவன் அவனே!

படைத்தது உடையான் பண்டு உலகங்கள் ஏழும்

படைத்து உடையான் பல தேவரை முன்னே
படைத்தது உடையான் பல சீவரை முன்னே
படைத்தது உடையான் பரம் ஆகி நின்றானே.

சிவபெருமான் ஏழு உலகங்களையும் படைத்தான். அவற்றைத் தன் உடமை ஆக்கிக் கொண்டான். பல தேவர்களைப் படைத்தான். அவர்களையும் அவனே ஆண்டான். பல ஜீவர்களைப் படைத்து அவர்களோடு தொடர்பு கொண்டு ஆட்கொண்டான். இங்ஙனம் அனைத்தைம் படைத்தும் ஆண்டும் அவனே தலைவனாக விளங்குகின்றான்.
 
447. ஆதாரம் ஆனவன் அவனே.

ஆதி படைத்தனன் ஐம் பெரும் பூதம்

ஆதி படைத்தனன் ஆசில் பல் ஊழி
ஆதி படைத்தனன் எண்இலி தேவரை
ஆதி படைத்தவை தங்கி நின்றானே.

ஆதி தேவனாகிய சிவன் ஐம் பெரும் பூதங்களைப் படைத்தான். குற்றமற்ற பல ஊழிகளைப் படைத்தான். எண்ணற்ற தேவர்களைப் படைத்தான். இவ்வாறு படைத்த அனைத்துக்கும் அவனே ஆதரமாக இருந்து அவற்றைத் தாங்குகின்றான்.
 
திருமூலரின் திருமந்திரம்: இரண்டாம் தந்திரம்

13. அனுக்கிரகம்

#448. உபதேசம்

அகன்றான் அகல் இடம் ஏழும் ஒன்றாகி

இவன் தான் எனநின்ற எளியனும் அல்ல
சிவன் தான் பலபல சீவனும் ஆகி
நவின்றான் உலகு உறு நம்பனும் ஆமே.

அகன்ற உலகங்கள் ஏழிலும் சதாசிவன் ஒன்றாகப் பொருந்தி உள்ளான். அவனே அவ்வேழு உலகங்களைக் கடந்தும் உள்ளான். இதனால் நம்மோடு அவன் பொருந்தி இருந்த போதிலும் அவன் காட்சிக்கு எளியவன் அல்லன். சிவனே பல உயிர்களில் கலந்து இருப்பான். அவனை விரும்பி வருபவர்களுக்கு அவன் உபதேசம் செய்து அருள்வான்.
 
#449. பேரொளி

உண்ணின்ற ஜோதி உற நின்ற ஓர் உடல்,
விண் நின்ற அமரர் விரும்பும் விழுப் பொருள்
மண் நின்ற வானோர் புகழ் திருமேனியன்
கண் நின்ற மாமணி மாபோதமாமே.

உயிர் பொருந்தி நிற்கும் உடலாக ஆனது உள்நின்ற ஜோதி. விண்ணோர் விரும்பும் விழுப் பொருள் ஆனது உள்நின்ற ஜோதி. ஞானம் அடைந்தோர் புகழும் திருமேனி ஆனது அதே ஜோதி. கண்ணின் மணியாகவும், உயர்ந்த ஞானமாகவும் விளங்குகின்றது அந்த ஜோதி.
 
#450. உயிருடன் கலந்து இருப்பான்

ஆரும் அறியாத அண்டத் திருவுருப்

பார் முதலாகப் பயிலும் கடத்திலே
நீரினில் பால் போல நிற்கின்ற நேர்மையைச்
சோராமல் காணும் சுகம் அறிந்தேனே.

யாரும் அறிய முடியாத அண்டத்தில், பால் நீரில் கலப்பது போல ஒன்றாகிக் கலந்துவிடும் சிவன் திருவடிகள். அந்தச் சீரிய தன்மையை நான் சோர்வடையாமல் காணும் இன்பத்தைப் பெற்றேன்.
 
திருமூலரின் திருமந்திரம்: இரண்டாம் தந்திரம்

14. கர்ப்பக் கிரியை (கர்ப்பத்தில் உருவாகும் உயிர்களை இறைவன் காக்கும் முறை).


#451. 25 தத்துவங்கள்

ஆக்குகின்றான் முன் பிரிந்த இருபத்தஞ்சு
ஆக்குகின்றான் அவன் ஆதி எம் ஆருயிர்
ஆக்குகின்றான் கர்ப்பக் கோளகையுள் இருந்து
ஆக்குகின்றான் அவன் ஆவது அறிந்தே.

இறைவன் ஒரு ஜீவன் இறக்கும் போது பிரிந்து சென்றுவிட்ட இருபத்து ஐந்து தத்துவங்களையும் மீண்டும் தோற்றுவிக்கின்றான் . அவற்றை மீண்டும் உயிருடன் பொருத்துகின்றான் . கர்பப்பையில் ஜீவன் வளர்வதற்குத் தேவையான எல்லா நன்மைகளையும் செய்கின்றான். அந்த உடல் நன்கு வளருவதற்கு வேண்டியவற்றை அருளுடன் செய்கின்றான்.
 
452. கருவைக் காப்பான்

அறிகின்ற மூலத்தின் மேல் அங்கி, அப்புச்

செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறை நின்ற இன்னுயிர் போந்துற நாடிப்
பறிக்கின்ற பத்து எனும் பரம் செய்தானே.

மூலாதாரத்தை யோகிகள் உணர வல்லவர்கள். அதற்கு மேல் தீயும் அதற்கும் மேல் நீரும் உள்ள இடத்தில் உடலில் கரு உருவாகும். தன் திருவடிகளைச் செறிந்துள்ள ஞான பூமியில் பதித்து கருவில் உயிர் புகும்படிச் செய்வான் இறைவன். அது பிறவி எடுக்கும் காலக் கெடுவைப் பத்து மாதங்கள் என்று நிர்ணயித்தான் அந்த ஈசன்.
 
453. காலத்தை நியமிக்கின்றான்

இன்புறு காலத்து இருவர் முன்பு ஊறிய

துன்புறு பாச துயர்மனை வான் உளன்
பண்பு உறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
அன்பு உறு காலத்து அமைந்தொழிந்தானே.

தலைவன் தலைவி இன்பம் அடையும் காலத்திலேயே இறைவன் ஜீவன் விட்டுச் சென்ற வினைகளை துய்ப்பதற்குத் தேவையான உடல், அது பக்குவம் அடையும் காலம், அது உயிர் வாழ வேண்டிய காலம் அனைத்தையும் நியமிக்கின்றான்.
 
திருமூலரின் திருமந்திரம்: இரண்டாம் தந்திரம்

14. கர்ப்பக் கிரியை

(கர்ப்பத்தில் உருவாகும் உயிர்களை இறைவன் காக்கும் முறை).


#454. கருவை நாடி ஓடும்

கருவை ஒழிந்தவர் கண்ட நால் மூவேழ்
புருடன் உடலில் பொருந்தும் மற்று ஓரார்;
திருவின் கருக்குழி தேடித் புகுந்த
உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே.

இருபத்து ஐந்து தத்துவங்களும் ஆண் உடலில் தங்கி உருவாகும். இந்த உண்மையை ஞானியர் மட்டுமே அறிவர். பிறர் அறிகிலர். அந்தக் கரு ஆண் உடலிலிருந்து பெண்ணின் கருவை நாடிப் பாயும்.
 
#455. கரு உருவாகும்

விழுந்தது லிங்கம்; விரிந்தது யோனி;
ஒழிந்த முதல் ஐந்தும் ஈரைந்தோடு ஏறிப்
பொழிந்த புனல் பூதம் போற்றும் கரணம்
ஒழிந்த நுதல் உச்சி உள்ளம் ஒளித்ததே.

ஆண் பெண் கூட்டுறவின் போது ஆண் குறியிலிருந்து சுக்கிலம் வெளிப்படும். விரிந்த பெண் குறியை அது சென்று சேரும். புருடன் என்ற தத்துவத்தில் ஐந்து தன்மாத்திரைகள், ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள் கூடும். தன்மாத்திரையிலிருந்து பஞ்ச பூதங்களும், நான்கு அந்தக் கரணங்கள் என்ற ஒன்பதும் தோன்றிப் புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் பொருந்தும்.
 
#456. காற்று உதவிடும்

பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும்

தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல்
மேவிய சீவனில் மேல நீள் வாயுவும்
கூவி அவிழும் குறிக்கொண்ட போதே.

மலரின் மணத்தையும் மகரந்தத்தையும் சுமந்து செல்லும் வாயு, அதை உலகெங்கும் பரப்பும். அது போன்றே கருப்பையில் உள்ள தனஞ்சயன் என்ற வாயு ஆண் விந்துவுடன் எழுந்து அதைப் பெண் கருவில் கொண்டு சேர்க்கும்.
 
திருமூலரின் திருமந்திரம்: இரண்டாம் தந்திரம்

14. கர்ப்பக் கிரியை

(கர்ப்பத்தில் உருவாகும் உயிர்களை இறைவன் காக்கும் முறை).

#457. கருவில் அமைபவை

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்

மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விடானெனிற்ப் பன்றியும் ஆமே.

உருவம் இல்லாத புரியட்டக உடலும், அதில் உள்ளே புகும் பத்து வாயுக்களும்; காமம் முதலிய எட்டு மன விகாரங்களும், இவற்றுடன் கூடிய புருடனும், ஒன்பது துவாரங்களும், குண்டலினி சக்தியும், பன்னிரண்டு விரற்கடை செல்லும் பிராணன் என்னும் குதிரையும்; இறைவன் என்னும் பாகன் வழி நடத்தாவிட்டால் அந்தப் பிறவி பன்றியைப் போன்று இழிந்ததாகி விடும்.

கருவில் அமைய வேண்டியவை இவை:

1. போகின்ற எட்டு :
சுவை, நாற்றம், ஒளி, ஓசை, ஊறு, மனம், புத்தி, அகங்காரம்

2. புகுகின்ற பத்தெட்டு = பத்து வாயுக்கள் + எட்டு விகாரங்கள்

3. புகுகின்ற பத்து வாயுக்கள் :
பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன்,
நாகன், கூர்மன், கிருகரன்,தேவதத்தன், தனஞ்சயன் .

4. புகுகின்ற எட்டு மலங்கள்:
காமம், குரோதம், உலோபம், மோஹம், மதம், மாச்சரியம், துக்கம் அஹங்காரம்.

5. மூழ்கின்ற முத்தன்: இவற்றுடன் கூடிய புருடன்

6. ஒன்பது துளைகள்:
கண்கள், நாசித் துவாரங்கள், செவிகள், வாய், கருவாய், எருவாய்.

7. நாகம் = மண்டலமிட்ட குண்டலினி சக்தி

8. எட்டுடன் நாலு = பன்னிரண்டு விரற்கடை செல்லும் பிராணன்
 
#458. குழந்தையின் குணநலன்கள்

ஏற எதிர்க்கில் இறையவன் தானாகும்
மாற எதிர்க்கில் அரியவன் தானாகும்
நேர் ஒக்க வக்கின் நிகர் போதத்தான் ஆகும்
பேர் ஒத்த மைந்தனும் பேரரசு ஆளுமே.

ஆணும் பெண்ணும் கூடும்போது சுக்கில சுரோணிதக் கலப்பு ஏற்படும். ஆணின் சுக்கிலம் எதிர்த்துச் சென்றால் ருத்திரனைப் போன்ற குழந்தை பிறக்கும். பெண்ணின் சுரோணிதம் எதிர்த்துச் சென்றால் திருமாலைப் போன்ற குழந்தை பிறக்கும். சுக்கிலம், சுரோணிதம் இரண்டும் சமமாகப் பொருந்தினால் நான்முகனைப் போன்ற குழந்தை பிறக்கும். மூவர்களின் தன்மையையும் கொண்டவன் புவி ஆள்வான்.
 
459. பெற்றோர் போலக் குழந்தை

ஏயங்கலந்த இருவர் தம் சாயத்துப்

பாயும் கருவும் உருவாம் எனப்பல
காயம் கலந்தது காணப் பதிந்தபின்
மாயம் கலந்த மனோலயம் ஆனதே.

பல பிறவிகளில் பல உலகங்களில் பொருந்தி வருந்தும் சீவன். கூடும் ஆண் பெண் இருவரைப் போலவே அவர்களின் குழந்தை உருவாகும். பல பிறவிகளில் பல உடலில் பொருந்தி இருந்த அந்த சீவன், கருவில் பொருந்திய பின்னர் மயக்கம் அடைந்த இருவர் மனமும் ஒரே தன்மையை அடையும்.
 
#460. நினைவு, வாக்கு, குணம்.

கர்ப்பத்துக் கேவலம் மாயாள் கிளை கூட்ட

நிற்கும் துரியமும் பேதித்து நினைவு எழ
வற்புறு காமியம் எட்டு ஆதல் மாயேயம்
சொற்புஉறு தூய்மறை வாக்கின் ஆம் சொல்லே.

ஒன்றும் அறியாத நிலையில் கரு கர்ப்பத்தில் இருக்கும். மாயை அதனுடன் தத்துவங்களைச் சேர்ப்பாள். அதனால் அக்கருவின் பேருறக்கம் நீங்கும். நினைவு உண்டாகும். மாயையின் காரியமான எட்டு குணங்கள் தோன்றும். நான்கு வித வாக்கிலிருந்து சொற்கள் தோன்றும்.

எட்டுக் காம்யங்கள் : தர்மம், ஞானம், வைராக்கியம், ஐஸ்வர்யம்,
அதர்மம், அஞ்ஞானம் அவைராக்கியம், அனைஸ்வர்யம்.

நான்கு வித வாக்குகள்: சூக்ஷ்மை, பச்யந்தி, மத்யமா, வைகரி
 
நாதம், பிந்து, கலை, வைகரீ



நால்வகைப் பேறுகள் என நவிலப்படுவன
அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாம்.

நாதம், பிந்து, கலை, வைகரீ என நவிலப்படும்.
அந்தரங்க சாதனமான அகண்டாகார விருத்தி

நாதத்தின் தன்மை வடிவினளான சக்தி பரை
ஜோதி மயமாக உறைவாள் மூலாதாரத்தில்!

புலப்பட மாட்டாள் இவள் நம் புலன்களுக்கு!
புலப்பட மாட்டாள் ஞான விசாரங்களுக்கும்!

பிந்துவின் தன்மை வடிவினளான பச்யந்தி.
சொந்த இதய வானில் பிரணவ மயமாவாள்.

கலையின் தன்மை வடிவினளான மத்யமா
விளங்குவாள் விசுத்தியில் ஸ்வரங்களாக!

வைகரீயின் தன்மை வடிவினளான வைகரீ;
விளங்குவாள் வாக்கு ரூபத்தில் ஒளிமயமாக

நாத வடிவான பராசக்தி மூலாதாரத்தில்
நமக்குப் புலனாகாது சூக்ஷ்மமாக உள்ளாள்.

பச்யந்தியாக இதய வானில் உள்ள போது
பார்வைக்குத் தென்படுவாள் மின்னல்போல.

மத்யமா சக்தியாக விசுத்தியில் இருந்து கொண்டு
சுத்தமாகப் பிரகாசிப்பாள் அக்னிசுவாலை போல

வைகரீ சக்தி தோன்றுவாள் சப்த வடிவினளாக!
வையகம் முழுவதையும் விளங்கச் செய்வாள்.

“வாக்கினால் தேவியை விளக்க முடியும் – என் வாக்கை
வாக்கின் தேவதையே வந்திருந்து அலங்கரிக்கட்டும்!”

துதித்த பின் தொடங்குகின்றார் தேவியை வியாசர்!
துதித்த பின் தொடங்குவோம் நாம் வேத வியாசரை!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

https://devibhaagavatam.wordpress.com/

 
I was pleased to note that there had been traffic in
all the six blogs Devi Bhaagavatam yesterday.

People like me write against all the possible odds
ONLY for the spiritual advancement of Self and the others.

The least you can do is to read what has been so painstakingly prepared
and presented and also spread the message to your like minded friends.!

 

Latest ads

Back
Top