• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

404. எல்லாமாக இருப்பவன் சிவனே!

ஒருவனுமே உலகு ஏழும் படைத்தான்

ஒருவனுமே உலகு ஏழும் அளித்தான்
ஒருவனுமே உலகு ஏழும் துடைத்தான்
ஒருவனுமே உலகோடு உயிர் தானே.

சிவன் என்னும் ஒரு தேவனே சதாசிவன் என்னும் தலைவன் ஆகின்றான். அவனே பிரமனுடன் பொருந்தி ஏழு உலகங்களைப் படைக்கின்றான்; அவனே திருமாலுடன் பொருந்தி ஏழு உலகங்களைக் காக்கின்றான்; அவனே ஏழு உலகங்களை உருத்திரனுடன் பொருந்தி அழிக்கின்றான். அவனே உலகமாகவும் அதில் உள்ள உயிர்களாகவும் இருக்கின்றான்.
 
திருமூலரின் திருமந்திரம்: இரண்டாம் தந்திரம்

#405. உலக உற்பத்தி

செந்தாமரை வண்ணன் தீவண்ணன் எம்மிறை
மஞ்சுஆர் முகில் வண்ணன் மாயம் செய்பாசத்தும்
கொந்துஆர் குழலியர் கூடிய கூட்டதும்
மைந்தார் பிறவி அமைத்து நின்றானே.

செந்தாமரை போன்று தீயின் செந்நிறம் உடையவன் உருத்திரன். மேகம் போன்ற கரிய நிறம் கொண்டவன் திருமால். அவனே உலகை மயக்கி, பந்தத்தை ஏற்படுத்தி, பூங் கொத்துக்களை அணிந்த மங்கையர் கூட்டத்தில் பொருந்தி, உலக உற்பத்தியை நிகழ்த்துகின்றான்.

 
#406. ஊடலும், நாடலும், கூடலும்

தேடும் திசை எட்டும் சீவன் உடல் உயிர்

கூடும் பிறவிக் குணம் செய்த மாநந்தி
ஓடும் அவர் தமது உள்ளத்துளே நின்று
நாடும் வழக்கமும் நான் அறிந்தேனே.

எண் திசைகளிலும் தேடித் திரிபவன் சீவன். அவனை உடலுடன் உயிர் கூடிப் பிறக்கும்படிச் செய்பவன் சிவன். அவனே ஊடுகின்ற மங்கையர், ஆடவர் உள்ளத்தில் இருந்து கொண்டு, அவர்களின் இன்பத்தை நாடலையும் பின் அவர்களின் கூடலையும் ஏற்படுத்துகின்றான்.
 
#407. சிவ சக்தியர் செயல்கள்

ஓர் ஆயமே உலகு எழும் படைப்பதும்
ஓர் ஆயமே உலகு எழும் அளிப்பதும்
ஓர் ஆயமே உலகு எழும் துடைப்பதும்
ஓர் ஆயமே உலகோடு உயிர்தானே.

சிவ சக்தியரே ஏழு உலகங்களையும் படைக்கின்றனர். சிவ சக்தியரே ஏழு உலகங்களையும் காக்கின்றனர். சிவ சக்தியரே ஏழு உலகங்களையும் அழிக்கின்றனர். சிவ சக்தியரே உலகோடு உயிரை இணைத்து வைக்கின்றனர்.
 
திருமூலரின் திருமந்திரம்: இரண்டாம் தந்திரம்

#408. ஆணையிடுபவன் சிவனே!

நாதன் ஒருவனும் நல்ல இருவரும்

கோது குலதொடும் கூட்டிக் குழைத்தனர்
ஏதுபணி என்று இசையும் இருவருக்கு
ஆதி இவனே அருளுகின்றானே.

தலைவன் ஆவான் சிவபெருமான். சதாசிவன், மகேசுரன் சீவன்களுக்கு நன்மை செய்யும் இருவர்.இவர்கள் சுத்த மாயை அசுத்த மாயை என்ற இரண்டையும் கூட்டிக் குழைத்து காரண நிலையை அமைப்பர். “காரியம் யாது செய்ய வேண்டும்?” என்று வினவும் திருமால் நான்முகன் இருவருக்கும் சிவனே ஆணை இடுகின்றான். அதைச் செய்யும் ஆற்றலையும் அவர்களுக்கு அளிக்கின்றான்.
 
#409. படைப்பு என்பது பொய்யா?

அப்பரிசு எண்பத்து நான்கு நூறாயிரம்
மெய்ப்பரிசு எய்தி விரிந்து உயிராய் நிற்கும்
பொய்ப்பரிசு எய்திப் புகலும் மனிதர்கட்கு
இப்பரிசே இருள் மூடி நின்றானே.

சிவபெருமானின் ஆணைப்படி பிரமன் நான்கு வகைத் தோற்றத்தில், ஏழு வகைப் பிறப்பில் எண்பத்து நான்கு லக்ஷம் வேறுபாடுகளுடன் உடல்களைப் படைக்கின்றான். இதைப் பொய் என்று கூறுபர்களை அவனே ஆணவ இருளில் ஆழ்த்துகின்றான்.
 
410. மாயையின் விரிவு

ஆதித்தன், சந்திரன், அங்கி, எண்பாலர்கள்

போதித்த வான், ஒலி, பொங்கிய நீர் புவி
வாதித்த சத்து ஆதி, வாக்கு மன ஆதிகள்
ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே.

சூரியன்; சந்திரன்; எட்டுத் திக்குப் பாலகர்கள்; போதனை செய்யும் நாதம் நிரம்பியுள்ள வானம்; வாதனை தரும் சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம் கந்தம் என்னும் ஐந்து தன்மாத்திரைகள்; புத்தி, மனம், சித்தம், அஹங்காரம் என்னும் அந்தக்கரணங்கள்; அனைத்துமே மகேசுவரரின் விந்து மண்டலத்தில் நுட்பமாக அமைந்துள்ளன.
 
திருமூலரின் திருமந்திரம்: இரண்டாம் தந்திரம்

10. திதி
: உலகைக் காக்கும் இயல்பு

#411. அறிவுக்கு அறிவானவன் சிவன்

புகுந்து நின்றான் வெளியாய், இருள் ஆகிப்

புகுந்து நின்றான் புகழ் வாய், இகழ்வு ஆகிப்
புகுந்து நின்றான் உடலாய், உயிர் ஆகிப்
புகுந்து நின்றான் புந்தி மன்னி நின்றானே.

வெளியாகவும், இருளாகவும் எல்லாவற்றிலும் கலந்து நிற்பவன் சதாசிவன். ஞானியர்க்குப் புகழத் தக்க பொருளும் அவனே. அஞ்ஞானியருக்கு இகழத்தக்க பொருளும் அவனே. உடலும் அவனே. உயிரும் அவனே. அவ்வுயிர்களின் அறிவும் அவனே. அறிவுக்கு அறிவாகி அதனை விளக்குபவனும் அவனே.
 
412.சதாசிவன் இயல்பு.

தானே திசையோடு தேவருமாய் நிற்கும்
தானே உடல், உயிர், தத்துவமாய் நிற்கும்
தானே கடல், மலை ஆதியுமாய் நிற்கும்
தானே உலகின் தலைவனும் ஆமே.

சதாசிவமே எல்லா திக்குகளிலும் பரவித் தேவர்களாக இருப்பான். அவனே உடலாகவும், உயிராகவும், எல்லாத் தத்துவங்களாகவும் இருப்பான். அவனே கடலாகவும், மலையாகவும், அசைவில்லாத பிற அனைத்துமாகவும் இருப்பான். அவனே உலகின் தலைவனாகவும் இருப்பான்.
 
413. எங்கும் நிறைந்து இருப்பவன்

உடலாய் உயிராய் உலகம்அது ஆகி

கடலாய்க் கார்முகில் நீர் பொழிவான் ஆய்
இடையாய் , உலப்புஇலி, எங்கும் தான் ஆகி
அடையார் பெருவழி அண்ணல் நின்றானே.

தலையின் உச்சியில் இருக்கும் ஒளிமயமாகிய வானத்தில் (பிரமரந்திரத்தில்) இருப்பவன்
சதாசிவன். உடலாக, உயிராக, உலகமாக, கடலாக, கார் மேகமாக, மழை பொழிபவனாக,
இவற்றின் நடுவில் இருப்பவனாக, என்றும் அழியதவனாக, எங்கும் நிறைந்திருப்பவன்.
 
திருமூலரின் திருமந்திரம்: இரண்டாம் தந்திரம்

#414. ஊடல், தேடல், கூடல்

தேடும் திசை எட்டும் சீவன் உடல் உயிர்
கூடும் மரபிற் குணம் செய்த மாநந்தி
ஊடும் அவர் தம் உள்ளத்துளே நின்று
நாடும் வழக்கமும் நான் அறிந்தேனே.

எண் திசைகளிலும் தேடித் திரிபவன் சீவன். அவனை உடலுடன் உயிர் கூடிப் பிறக்கும்படிச் செய்பவன் சிவன். அவனே ஊடுகின்ற மங்கையர், ஆடவர் உள்ளத்தில் இருந்து கொண்டு, அவர்களின் இன்பத்தை நாடலையும் பின் அவர்களின் கூடலையும் ஏற்படுத்துகின்றான்.
 
#415. முத்தொழில் வல்லுனன்

தான் ஒரு காலம் தனிச் சுடராய் நிற்கும்

தான் ஒருகால் சண்ட மாருதமாய் நிற்கும்
தான் ஒரு காலம் தண்மழையாய் நிற்கும்
தான் ஒருகாலம் தண் மாயனும் ஆமே.


உலகை அழிக்க வேண்டிய சமயத்தில் சதாசிவன் ஒப்பற்ற ஒரு சூரியன் ஆவான். மழையே இல்லாமல் செய்து பெரும் அழிவை ஏற்படுத்துவான். அப்பிரானே ஒரு சமயம் புயல் காற்றாக மாறி அழிவை ஏற்படுத்துவான். அப் பெருமானே ஒரு சமயம் பெரு மழையாகப் பெய்து பெரும் வெள்ளத்தைத் தோற்றுவிப்பான். அவனே ஒரு சமயம் திருமாலாகி உலகத்தைக் காப்பான்.
 
#416. சதாசிவத்தின் பெருமை

அன்பும் அறிவும் அடக்கமுமாய் நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியுமாய் நிற்கும்
முன்பு உறு காலமும் ஊழியுமாய் நிற்கும்
அன்பு உற ஐந்தில் அமர்ந்து நின்றானே.

உயிர் ஆற்றலில் விளங்கும் அன்பு, அறிவு, அடக்கம் ஆகிய நற் பண்புகள் சிவபெருமான் ஆவான். இன்பத்துக்கும் இன்பக் கூட்டுறவுக்கும் காரணம் அந்தப் பெருமானே ஆவான். காலத்தின் எல்லையை வகுத்தவன் அவனே. அதை முடிப்பவனும் அவனே. அவன் நன்மைகள் செய்வதற்காக சுத்த மாயா தத்துவங்கள் ஆகிய நாதம், விந்து, சாதாக்கியம், மகேசுரம், சுத்த வித்தை என்ற ஐந்தினில் பொருந்தி ஐந்து செயல்களைச் செய்வான்
 
திருமூலரின் திருமந்திரம்: இரண்டாம் தந்திரம்

#418. படைத்தும் காத்தும் அருள்வான்!

ள்உயிர்ப்பு ஆய், உடலாகி நின்றான் நந்தி
வெள்ளுயிர் ஆகும் வெளியான் இலங்கு ஒளி
உள் உயிர்க்கும் உணர்வே உடலுள் பரம்
தள் உயிரா வண்ணம் தாங்கி நின்றானே.

உடலின் மூச்சுக் காற்றாக இருப்பவன் நந்திப் பிரான். உடலில் உணர்வாகப் பரவி உயிர்களை வெளியேற விடாமல் காப்பவன் அவனே. தத்துவங்களுடன் கூடாததனால் பிறவிக்காக் காத்திருக்கும் உயிர்கள். அவற்றையும் காப்பவன் சிவனே. உடலைப் படைப்பதற்கு முன்பும் பின்பும் அவனே காலஎல்லை வரையில் காத்து அருள்வான்.
 
Last edited:
419. எப்போதும் காப்பவன் சிவன்

தாங்க அருந்தன்மையும் தான் அவை பல்உயிர்
வாங்கிய காலத்தும் மற்றோர் பிறிது இல்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்தம் அவ்வழி
தாங்கி நின்றானும் அத்தரணி தானே.

உயிர் உடலை விட்டு நீங்காத வண்ணம் தாங்குபவன் சிவன். கால எல்லையில் உடம்பிலிருந்து உயிர் பிரிந்த நிலையிலும் அதைக் காப்பவன் அவனே. ஏழு பிறவிகளிலும், அவற்றின் இடைப்பட்ட துரியாதீத நிலையிலும் உயிர்களைக் காத்து அருள்பவன் அவனே.
 
#420. ஞானமும் உடலும் தருவான்

அணுகினும் சேயவன் அங்கியின் கூடி

நணுகினும் ஞானக் கொழுந்து ஒன்று நல்கும்
பணிகினும் பார்மிசைப் பல்லுயிர் ஆகித்

தணிகினும் மண் உடல் அண்ணல் செய்வானே.

சிவன் உயிர்களுடன் கலந்து கூடி இருக்கும் போது அவனை வெளியில் தேடினால் அவன் மிகத் தொலைவாகவே இருப்பான். மூலதாரத்தில் உள்ள அக்கினியை ஏழுப்பி பிரமரந்திரத்தை அடைந்தால் அருள் புரிவான். பல உடல்களை எடுத்துப் பாரில் அவனைப் பணிந்தால் அவன் நமக்கு மேன்மையான உடல்களைத் தந்தருள்வான்.
 
"We need a variety of input and influence and voices. You cannot get all the answers to life and business from one person or from one source." -- Jim Rohn
 
திருமூலரின் திருமந்திரம்: இரண்டாம் தந்திரம்

11. சங்காரம்

11. சங்காரம் (சங்காரம் = அழித்தல்)
இதுவும் இறைவனின் அருட் செயல்களில் ஒன்று.
சிவனே உருத்திரனாகச் சங்காரம் செய்கின்றான்.

#421. அழிக்கும் அருட்செயல்

அங்கி செய்து ஈசன் அகல் இடம் சுட்டது

அங்கி செய்து ஈசன் அலைகடல் சுட்டது
அங்கி செய்து ஈசன் அசுரரைச் சுட்டது
அங்கி அவ்ஈசற்குக் கை அம்பு தானே.


இறைவன் தீயினால் பரந்த உலகத்தை அழித்தான். இறைவன் தீயினால் கடலை வற்றும்படிச் செய்தான் இறைவன் தீயினால் அசுரர்களை அழித்தான். அந்தத் தீயே இறைவன் கையில் இருக்கும் அம்பு ஆகும்.

 
422. மூன்று சங்காரம்

இலயங்கள் மூன்றிலும் ஒன்று கற்பாந்தம்;
நிலை அன்று இழிந்தமை நின்று உணர்ந்தேனால்
உலை தந்தமெல்அரி போலும் உலகம்
மலை தந்த மானிலம் தான் வெந்ததுவே.

மூன்று வகைப் பிரளயங்கள் உள்ளன. தினப்பிரளயம் தினந்தோறும் நாம் உறங்கும்போது நிகழ்வது. நடுப்பிரளயம் உயிர் உடம்பிலிருந்து நீங்கும் பொழுது நிகழ்வது. மகாபிரளயம் கற்பத்தின் முடிவில் நிகழ்வது. இந்த உலகங்கள் அழிவதை அன்று நான் ஞானக் கண்ணால் கண்டேன். கற்பத்தின் முடியில் நிகழும் பிரளயத்தின் போது இந்த உலகம் உலையில் இட்ட அரிசியைப் போலச் சுற்றிச் சுழலும். குறிஞ்சி போன்ற பிரதேசங்களும் எரிந்து அழிந்து விடும்.
 
#423. கற்ப முடிவு

பதம் செய்யும் பாரும் பனிவரை எட்டும்

உதம் செய்யும் ஏழ் கடல் ஓதம் முதலாம்
குதம் செய்யும் அங்கி கொழுவி ஆகாசம்
விதம் செய்யும்; நெஞ்சில் வியப்பு இல்லை தானே.

ஜீவர்களுக்குப் பக்குவம் தரும் பூமி, பனி மூடிய மலைகள், மகிழ்ச்சியைத் தரும் ஏழு கடல்கள் இவற்றைக் கொதிக்கச் செய்யும் தீயை மூட்டி, அதை வெட்ட வெளியில் கொண்டு சேர்ப்பவர்களுக்குக் கற்ப முடிவில் வியப்பதற்கு ஏதும் இராது.

மூலாதாரத்தில் உள்ள அக்கினியை ஏற்றிச் சிரசில் நிலை பெறச் செய்ய வேண்டும் என்பது பொருள்.
 
#424. மீண்டும் ஒடுக்குதல்

கொண்டல் வரை நின்று இழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி இருந்து எண் திசை ஆதி
ஒன்றிண் பதம் செய்த ஓம் என்ற அப்புறக்
குண்டத்தின் மேல் அங்கி கோலிக் கொண்டானே.

தலையின் மேல் இருக்கும் ஒளி மண்டலத்தில் இருந்து கீழே இறங்குவாள் ஆதி சக்தி. அவள் உடலைச் சுற்றியுள்ள ஒளி மாயமான அண்டகோசத்தில் சிவன் பொருந்துவான். திரோதன சக்தியுடன் கூடி ஜீவர்களுக்கு பக்குவம் தருவான். அதன் பின்னர் மூலாதாரத்தில் உள்ள தீயைத் தன்னுள் மீண்டும் ஓடுக்கிக் கொண்டு விளங்குவான்.
 

Latest ads

Back
Top