திருமூலரின் திருமந்திரம் ( இரண்டாம் தந்திரம் )
17. அபாத்திரம்
தகுதியற்றவர்கள் ஆவர் அபாத்திரம்.
நல்லார்க்கு ஈவது நற்பயன் தரும்.
அல்லார்க்கு ஈவது நற்பயன் தராது.
#505. வறண்ட பசு
கோல வறட்டைக் குனித்துக் குளகிட்டுப்
பாலைக் கறந்து பருகுவ தேயொக்குஞ்
சீலமு நோன்பு மிலாதவர்க் கீந்தது
காலங் கழிந்த பயிரது வாகுமே.
ஒழுக்கமும், நோன்பும் இல்லாதவர்க்கு ஈவது எதைப் போன்றது? அழகிய வறட்டுப் பசுவுக்கு குனிந்தும் நிமிர்ந்து பசுந் தழைகள் இட்டு அதன் பாலைக் கறந்து குடிப்பது போன்றது ஆகும். பருவம் தவறிச் செய்த பயிரைப் போன்றது ஆகும்.
--------------------------------------------------------------------------------------------------------
# 506. அன்பிலாதவர்க்கு ஈதல்
ஈவதி யோக மியம நியமங்கள்
சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி
ஆவ தறிந்தன்பு தங்காதவர்களுக்கு
ஈவா பெரும் பிழை யென்று கொள்ளீரே.
யோகம் செய்யும் போது செய்ய வேண்டியவை எவை தவிர்க்க வேண்டியவை எவை என்பதை நன்கு அறிந்த, அன்பு உடையவர்களுக்கே தானம் செய்ய வேண்டும். அங்ஙனம் உள்ளத்தில் அன்பு சிறிதும் இல்லாதவர்களுக்கும், சார்பு அறியாதவர்களுக்கும் தானம் செய்வது பெரிய தவறு ஆகும். உலகத்தோரே இதை நன்கு அறிந்து கொள்வீர்!!
---------------------------------------------------------------------------------------------------------
#507. நரகத்தில் அழுந்தான்
ஆமா றறியா னதி பஞ்ச பாதகன்
தோமாறும் ஈசற்குந் தூய குரவற்கும்
காமாதி விட்டோர்க்கும் தரல் தந்து கற்பிப்போன்
போமா நரகிற் புகான் போதங் கற்கவே.
பஞ்சமா பாதகன் நல்லவர்களுக்கு தானம் தருவதன் பயனை அறியாமல் வீணே கெடுவான். ஆனால் குற்றமற்ற குருவுக்கும், தூய பெரியவர்களுக்கும், காமம் முதலிய மன மலங்களை முற்றிலுமாக அழித்தவர்களுக்கும் தானம் தருபவன் ஒரு நாளும் நரகக் குழியில் விழவே மாட்டான்.
------------------------------------------------------------------------------------------------------------
#508. ஏழு வகை நரகங்கள்
மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் இவனென்றே யஞ்சலி யத்தனாய்
எண்ணி யிறைஞ்சாதார்க் கீந்த விருவரும்
நண்ணுவ ரேழா நரகக் குழியிலே.
மண் மலையளவு பெரிய பொருளைத் தானம் செய்தாலும், சிவனே முன் நின்று அதைத் தருகின்றான் என்று எண்ணி கூப்பிய கைகளுடன் சிவனை வணங்க வேண்டும். அவ்வாறு எண்ணாமல் தானம் கொடுக்கின்றவனும், அதை வாங்குகின்றவனும் ஏழு வகைப்பட்ட நரகங்களில் வீ ழ்ந்து வருந்துவர்.
------------------------------------------------------------------------------------------------------